பட்டம் சூடிக் கொள்ள ஆசை! காலம் கடந்து போச்சோ?


 
2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில், சிபிஐ தனது வாதங்களை இன்றைக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் முடித்துக் கொண்டது. வரும் திங்கட் கிழமை(ஜூலை 25) ஆண்டிமுத்து ராசா உட்பட, குற்றம் சாட்டப் பட்டவர்கள், தம் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஏற்கெனெவே இந்தப்பக்கங்களில் சொன்ன மாதிரி, சிபிஐ குற்றப் பத்திரிகையைத் தயாரித்திருக்கும் விதம், குற்றம் செய்தவர்கள் தப்பித்துக் கொள்கிற அளவுக்கு ஓட்டைகளுடன் மிகக் கவனமாகத் தயாரிக்கப் பட்டிருக்கிறதா அல்லது அகப்பட்டுக் கொண்டவர்களை மட்டுமே தண்டித்து விட்டு, மிச்சமிருப்பவர்களைத் தப்புவிக்கிறமாதிரி இருக்கிறதா என்பது எதிர் வரும் நாட்களில் அம்பலத்துக்கு வந்துவிடும்.காங்கிரஸ் கட்சியின் கூடா நட்பு திமுகவுக்குக் கேடாய் முடியுமா என்பதும் இன்னும் சில மாதங்களுக்குள் ஒருவாறாக அம்பலத்துக்கு வந்துவிடும்.

இன்று,கோவையில் திமுக பொதுக்குழு கூட்டத்தின் முதல்நாளிலேயே, எதிர் பார்க்கப்பட்டபடி, ஸ்டாலின்-அழகிரி இருவருக்கும் மோதல் பொறி பறந்ததாக செய்திகள் சொல்கின்றன. உள்ளே இருக்கும் மோதல்களை வெளியே தெரிந்து விடாமல் இருக்க அடக்கி வாசித்த மாதிரியே இன்றைய நிகழ்வுகள் இருந்தனவாம்!


தேர்தல் தோல்விக்கு நாம் அனைவரும்தான் சமமாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று உணர்ச்சி பொங்க கருணாநிதி பேசியதாகவும் செய்திகள் சொல்கின்றன. எமெர்ஜென்சி காலத்தை விட இப்போதிருக்கும் சூழ்நிலை மோசமானதல்ல என்று பழைய நினைப்பிலேயே கருணாநிதி பேசியிருக்கிறார். நகைச்சுவை அம்சம் குறைந்து விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, அடுத்து வரும் தேர்தலில் திமுக நிச்சயமாக ஜெயிக்கும் என்று சொல்லி இருக்கிறார்!


அழகிரியிடம் நிருபர்கள் இன்றைக்கு நிகழ்வுகளைக் குறித்துக் கேட்டபோது, ஒரே வார்த்தையில்  "நாளை" என்று மட்டும் சொல்லிவிட்டுப் போனதாகவும் செய்திகள் மேலும் சொல்கின்றன. கருணாநிதியும், ஸ்டாலினும் ஊடகங்களிடம் செய்திகளைப் பகிர்ந்துகொள்வதை, இன்றைக்குத் தவிர்த்திருக்கிறார்கள். டி ஆர் பாலு ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையில் மோதல் என்பதை, ஊடகங்களாக உருவாக்கிய ஒன்று என மறுத்திருக்கிறார்!


காங்கிரசுடனான உறவு குறித்து இன்றைக்குப் பேசப்படவில்லை. நாளை அது பேசப்படலாம் என்று சொல்கிறார்கள்!அதில் பெரிதாகப் பேச ஒன்றுமில்லை என்பது ஏற்கெனெவே வெளியே தெரிந்தது தான்! காங்கிரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் வரைதான் பாதுகாப்பு என்பது அழகிரிக்கே நன்றாகத்  தெரிந்திருக்கிறது. கூட்டணி தர்மத்தில், காங்கிரஸ் திமுகவுக்காக ரிசர்வ் செய்து வைத்திருக்கும் இரண்டு அமைச்சர் நாற்காலிகளில், யாரை உட்கார்த்தி வைப்பது என்பது அனேகமாக அல்லது எப்போதும்போல  கலைஞருக்கே அதிகாரம் வழங்குகிற பல்லவியோடு முடிந்து விடலாம்.  ஆக, நாளைக்கும் கூடப் பெரிதாக எதுவும் நடக்கப்போவதில்லை.

பொதுக்குழு கூடி என்ன முடிவெடுத்தாலும், சோர்ந்துபோன கட்சியைத் தூக்கி நிறுத்த முடியுமா என்பது ஆகஸ்ட் முதல் வாரம் முதல் திமுக உத்தேசித்திருக்கும் போராட்டங்கள் எந்த அளவுக்கு எடுபடும் என்பதில் தலைமைக்கே இன்னும் நம்பிக்கை இருப்பதாகத்  தெரியவில்லை. இப்போதைக்குத் திரைமறைவில் காங்கிரசிடம் கையேந்தி நிற்பதைத் தவிரத் திமுகவுக்கு வேறு வழி எதுவும் இருப்பதாகத்  தெரியவில்லை.

ஸ்டாலினுக்குப் பட்டம் சூட்டுவதிலும் சரி, கட்சிக்குப் புத்துயிர் கொடுப்பதிலும் சரி, காலம் கடந்துவிட்டது என்று தான் சொல்ல முடிகிறது.








 
பதிவு பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால், பக்கத்தில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித் தெரிவியுங்களேன்



 


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!