சண்டேன்னா மூணு! பழசே புதுசுதான் கண்ணா! கேடி பிரதர்ஸ், கருணாநிதி, பானாசீனா!

 நாளைய செய்தி இன்றைக்கே எழுதிப்பார்த்தால் தலைப்பு இப்படித்தான் இருக்குமோ?

பழசு இன்றும் புதுசு!பழசே புதுசாகத்தொடர்வதால்...!


நேற்றும் நமதே - 23: 4.5.88 ஜூனியர் விகடன் இதழில் இருந்து.....!


ஓர் ஆண்டுக்கு முன், பூதாகாரமாகக் கிளம்பிய போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம், மத்திய அரசைக் கிடுகிடுக்க வைத்தது. பீரங்கி பேர ஊழல் குண்டுகள் 'மிஸ்டர் க்ளீன்’ என்று அது வரை வர்ணிக்கப்பட்ட பிரதமர் ராஜீவ் காந்தியின் இமேஜை உடைத்தது! 

போஃபர்ஸ், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆயுதத் தயாரிப்பு கம்பெனி. இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்க, நமது பாதுகாப்பு அமைச்சகம், 1986 மார்ச் 24-ம் தேதி இந்த கம்பெனியுடன் 1,700 கோடி மதிப்புள்ள ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது.

இந்த ஒப்பந்தம் பற்றி ஆரம்பத்தில் ஸ்வீடன் பிரதமர் பா(ல்)மே, நமது பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ''இந்த பேரத்தில் இடைத் தரகர்கள் யாருமே இருக்கக் கூடாது. இது இந்திய அரசின் கொள்கை!'' என்று திட்ட வட்டமாக அவரிடம் பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்தார். போஃபர்ஸும் இதை ஒப்புக்கொண்டது.

ஒப்பந்தம் 1986 மார்ச் மாதம்கையெழுத்தாவதற்கு முன்பு - பிப்ரவரி மாதம் ஸ்வீடன் பிரதமர் பா(ல்)மே நள்ளிரவில் கொலை செய்யப்பட்டார்! இந்தக் கொலையை விசாரித்த ஓர் அதிகாரியும் மர்மமான முறையில் இறந்தார். இந்தக் கொலைகளின் மர்மம் நீடிக்கிறது!

இந்திய ஒப்பந்தம் கிடைப்பதற்கு முன், போஃபர்ஸ் கம்பெனி நொடித்துப்போன நிலையில் இருந்தது. 1,000 பேரை வேலைநீக்கம் செய்யவிருந்த அந்த கம்பெனி, ஒப்பந்தம் கிடைத்த மாத்திரத்தில், 3,000 பேரைப் புதிதாக வேலைக்கு எடுத்தது!

எல்லாம் 'நல்லபடியாக’ நடந்துகொண்டு இருந்தபோது, 1987-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஸ்வீடன் ரேடியோ ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டது. இந்த (சுதந்திரமான!) ரேடியோ, ஏற்கெனவே போஃபர்ஸ் நிறுவனம் ஆயுத விற்பனை சம்பந்தமாகச் செய்து வந்த பல தில்லுமுல்லுகளை வெளியிட்டு வந்தது. இப்போது, 'இந்தியாவுடன் ஒப்பந்தம் நிறைவேற, போஃபர்ஸ் சில இடைத் தரர்களுக்குக் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தது. இந்தத் தரகர்கள், இந்திய அரசியல்வாதிகளாகக்கூட இருக்கலாம்’ என்றது.

அவ்வளவுதான்! இந்திய நாடாளுமன்றத்திலும், பத்திரிகைகளிலும், மக்கள் மத்தியிலும் கொதிப்பு ஏற்பட்டது!

''இந்திய அரசியல் ஸ்திரத்தன்மையையே குலைக்கும் முயற்சி இது. இடைத்தரகர்கள் என இதில் யாரும்கிடையாது!'' என்று இந்திய அரசு மறுத்துப் பார்த்தது. போஃபர்ஸ் நிறுவன அதிகாரிகளும், ''யாருக்கும் கமிஷன் தரவில்லை!'' என்றார்கள்.

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ராஜாங்க அமைச்சர் அருண்சிங், ''அப்படிப் பணம் தரப்பட்டு இருந்தால்... எதற்கு, எப்போது, எங்கு, யாருக்கு என்பதை நிச்சயம் கண்டுபிடித்தே தீருவோம்!'' என்று ராஜ்யசபையில் உறுதி அளித்தார். அமைச்சர் சூளுரைத்தது, ஏப்ரல் 21-ம் தேதி.  

என்ன நடந்ததோ - ஜூலை 18-ம் தேதி தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். ''சொந்தக் காரணங்களுக்காக விலகுகிறேன்!'' என்று சொன்னார் அமைச்சர்.

இதற்கிடையில், ஜூன் 1-ம் தேதி ஸ்வீடன் தேசியத் தணிக்கைக்குழுவின் (ஆடிட் பீரோ), 'கமிஷனாகக் கொடுக்கப்படவில்லை. சிலர் செய்த சேவைக்காக, 34 கோடியில் இருந்து 50 கோடி வரை Winding Up Charge தரப்பட்டது’ என்ற அறிவிப்பு குறிப்பிடத்தக்கது.

ஸ்வீடனிலும் உண்மை வெளிவர, கூக்குரல்கள் கிளம்பின. 'சேவைக்காகப் பணம் செலுத்தப்பட்டதை’ ஒப்புக்கொண்ட போஃபர்ஸ், வியாபார ரகசியம் என்று காரணம் காட்டி. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துப் பிடிவாதம் பிடித்தது. பின்னர் பலத்த எதிர்ப்பின் காரணமாக, மூன்று கம்பெனிகளின் பெயர்களை வெளியிட்டது போஃபர்ஸ்!

இந்த மூன்று கம்பெனிகளுக்கும் சேர்த்து, சர்வீஸ் சார்ஜாக 64 கோடி ஸ்விஸ் வங்கியில் 'லோட்டஸ்’ என்கிற சங்கேதப் பெயரில் போடப்பட்டதாக ஆதாரங்கள் வந்தன. 'லோட்டஸ்’ (தாமரை) என்பது, ராஜீவ் காந்தியைக் குறிக்கும் என்று இங்கே குற்றச்சாட்டு எழும்பியது. 'ராஜீவ் என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்குத் தாமரை என அர்த்தம்’ என்று விளக்கம் சொன்னார்கள்.


1987 ஆகஸ்ட் மாதத்தில், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆராய, நாடாளு மன்ற கமிட்டி ஒன்று அமைத்தது இந்திய அரசு. இதில் பங்கு பெற எதிர்க் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களோ, நிபந்தனை விதித்தனர். ''நாங்கள் சுதந்திரமாகச் செயல்பட தடை இருக்கக் கூடாது. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் சிலரை, தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைப்போம். அவசியம் ஏற்பட்டால், மத்திய அமைச்சர்கள்... ஏன் பிரதமரையேகூட விசாரணைக்கு அழைப்போம்!'' என்றன எதிர்க் கட்சிகள். 

இதை ஏற்க மறுத்தது இந்திய அரசு. ஆகவே, எதிர்க் கட்சிகள் கமிட்டியில் சேர மறுத்துவிட்டன.

ஆளும் கட்சியும், அதன் தோழமைக் கட்சிகளும்கொண்ட 30 லோக் சபா - ராஜ்ய சபா உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அன்று காங்கிரஸுக்குத் தோழமைக் கட்சியாக இருந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரும் இதில் இடம் பெற்றனர்.

ராஜீவ் காந்திக்கு மிகவும் விசுவாசமானவர், கர்நாடகத்தைச் சேர்ந்த சங்கரானந்த். இவர் அப்போது மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தார். தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்த கமிட்டிக்குத் தலைவரானார்.

இந்த கமிட்டிதான், ஏப்ரல் 26-ம் தேதி நாடாளுமன்றத்தில் தனது 400 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்தது. 'பீரங்கி பேரத்தில் இடைத் தரகர்களே கிடையாது. எந்த இந்தியருக்கும் - இந்திய நிறுவனத்துக்கும் பணம் கொடுக்கப் படவில்லை. இதில், ஊழல் என்பதே இல்லை. போஃபர்ஸ் கூறியதுபோல, வைண்டிங்-அப் சார்ஜ்தான் தரப்பட்டு இருக்கிறது’ என்று ஞான ஸ்நானம் செய்து, ஆளும் கட்சியின் பாவக் கறைகளைத் துடைத்தது இந்த கமிட்டி!
எதிர்க் கட்சிகள், 'இந்த கமிட்டி அறிக்கை வெறும் கண்துடைப்பு’ என்று கருத்துத் தெரிவித்தன.

எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்தது. இந்த கமிட்டியின் உறுப்பினரும் - அ.தி.மு.க-வின் ஜானகி அணியைச் சேர்ந்தவருமான ஆலடி அருணா பரபரப்பு ஏற்படுத்தினார். ''கமிட்டியின் கருத்துகளுடன் நான் உடன் படவில்லை. என் ஆட்சேபனைகளையும் கமிட்டி தன் அறிக்கையுடன் வெளியிட வேண்டும்!'' என்று கமிட்டியிலேயே போர்க் குரல் எழுப்பினார். ''அது முடியாது!'' என்று மறுத்தார் சங்கரானந்த்!

ஆனால், நாடாளுமன்றத் தலைவர் பல்ராம் ஜாக்கர், ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம் என்று அனுமதி கொடுத்தார்.''கமிட்டி நேர்மையான முறையில் செயல்படவில்லை!'' என்று ஆலடி அருணா 38 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த கமிட்டி விசாரணை செய்த விதங்கள் தமாஷானவை! உண்மைகளைத் தயவுதாட்சண்யம் இன்றிக் கண்டுபிடிக்கும் நோக்கம் அதற்கு இருந்ததா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.

கமிட்டி உறுப்பினர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுதந்திரமாகச் செயல்பட முடியாத அளவுக்குத் தடைகள்.

போஃபர்ஸ் கம்பெனியிடம் இருந்து வைண்டிங்-அப் சார்ஜாகப் பணம் பெற்ற மூன்று நிறுவனங்களை ஆராய சி.பி.ஐ., புலனாய்வுத் துறை அதிகாரிகள், 1987-ம் ஆண்டு இறுதியில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் சென்றபோது சுவாரஸ்யமான செய்திகள் கிடைத்தன.

மூன்று கம்பெனிகளில் ஒன்று முழுமையாகப் பெண்களால் நிர்வகிக்கப்படும் கம்பெனி. கடந்த இரண்டு வருடங்களாக அந்த நிறுவனத்துக்கும் போஃபர்ஸுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை.

மற்றொரு கம்பெனியான Moineau - வின் பின்னணிக் கதை இன்னும் சுவாரஸ்யமானது. அது உண்மையான கம்பெனியே அல்ல! Moresco என்ற கம்பெனிக்காக, தன் பெயரை இரவல் கொடுத்திருக்கும் ஒரு பொய் நிறுவனம். இந்த 'மொரெஸ்கோ’ நிறுவனத்துக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது Pitco. ஆனால், இதில் வேடிக்கை என்ன என்றால், அந்த கம்பெனிகள் எதுவுமே ஸ்விட்சர்லாந்தில் குறிப்பிட்ட அந்த விலாசத்தில் செயல்படவே இல்லை!

மூன்றாவதாக, A & E Services Ltd. 1985 ஆண்டு முதல்தான் போஃபர்ஸின் ஏஜென்டாகப் பணிபுரிய ஆரம்பித்தது. இது போஃபர்ஸுக்காக, இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் பேச்சுவார்த்தை நடத்தும். இந்திய அரசு 'இடைத் தரகர்கள் கூடாது’ என்றவுடன், இந்த கம்பெனியுடன் போஃபர்ஸ் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இதைத் தவிர, போஃபர்ஸ் குறிப்பிட்ட இன்னொரு நிறுவனம் அனட்ரானிக் ஜெனரல் கார்ப்பரேஷன். இதன் உரிமையாளர் வின்சத்தா. இவர் போஃபர்ஸின் இந்திய ஏஜென்ட். 

இந்த ஒப்பந்தத்துக்கு முன்பாகவே, இந்தியாவில் போஃபர்ஸுக்காக செய்த சில சின்ன வேலைகளுக்காக போஃபர்ஸ் இவருக்குப் பணம் கொடுத்திருக்கிறது. பிரச்னைகள் பூதாகார வடிவம் எடுத்தவுடன், இவர் அமெரிக்காவுக்கு ஓடி விட்டார். இவரைத் தேடிப் போனது புலனாய்வுத் துறை!

மற்ற மூன்று நிறுவனங்களைக் கண்டுபிடிக்கும் வேலையைவிட, வின் சத்தாவை இந்தியாவுக்குக் கொண்டுவரும் வேலைதான் அதிகாரிகளுக்குப் பெரும்பாடாக இருந்தது. ஏராளமான நிபந்தனைகளுடன் இந்தியாவுக்கு வர ஒப்புக்கொண்டார் வின்சத்தா. சந்தேகத்துக்குரிய இவரின் நிபந்தனைகளுக்கு எல்லாம் அடிபணிந்தது அரசு.

வின்சத்தாவும் கமிஷன் முன்பு சாட்சி சொன்னார். அதுவும் கண்துடைப்பாகவே போயிற்று. கமிட்டி தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு 'இந்து’ பத்திரிகை எரி ஈட்டியை வீசிற்று.

'இந்த விவகாரத்தில் அடிபட்ட கம்பெனிகளாக மொரெஸ்கோ - பிட்கோ எல்லாமே போலிப் பெயர்கள். இவற்றுக்குப் பின்னால் செயல்பட்டது - 'இந்துஜா’க்களின் 'சங்கம் லிமிடெட் கம்பெனி’தான். 64 கோடி கமிஷனில் ஒரு பகுதி, இவர்களுக்குத்தான் சென்றிருக்கிறது’ என்று ஆதாரத்துடன் வெளியிட்டது 'இந்து’ பத்திரிகை.

ஆரம்பத்திலேயே 'இந்துஜா’வின் பெயர் இதோடு சம்பந்தப்படுத்தப்பட்டு - பிறகு அவர்களால் மறுக்கப்பட்டது. 'இந்துஜா’க்கள். இந்தியாவிலேயே பணக்காரக் குடும்பத்தினர்.

பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக பிரதமரும், ஆளும் கட்சியினரும் கருதுகின்றனர். ஆனால், கமிட்டி விசாரணை போதுமானது என்று மக்கள் கருதவில்லை. கமிட்டி நடந்த விதத்தை அறிந்த பிறகு, 'ஊழலே இல்லை’ என்று மக்களால் கருத முடியவில்லை!

இந்த கமிட்டியின் துணைத் தலைவர் ஆண்டர்ஸ் ஜோர்க், ''எனக்குக் கிடைத்த ரகசிய தஸ்தாவேஜுகளை வைத்துப்பார்க்கும்போது, போஃபர்ஸ் கம்பெனிக்கும் ராஜீவ் காந்தி குடும்பத்துக்கும் நேரடியாகவோ, மறை முகமாகவோ தொடர்பு இருப்பதாகத்தான் தெரிகிறது!'' என்று கூறி இருக்கிறார். 

ஆனால், போஃபர்ஸும் இந்திய அரசும் இதற்கு மறுப்பு கூறுகிறது. ஊஹும்... பிரச்னை முடிந்துவிடவில்லை!

- நமது அரசியல் நிருபர்

******
இந்த இருபத்துமூன்றுவருடங்களில் நம்முடைய அரசியல்வியாதிகள் "கற்றுக் குட்டி" பயத்தையெல்லாம் உதிர்த்துவிட்டு எவ்வளவு தெனா வெட்டாக ஊழலை செய்கிறார்கள், ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது, ஜூவியில் வெளியான இந்தப் பழைய கட்டுரையைப் படித்தாலேயே புரிந்துகொள்ளக் கூடியதுதான்!

இன்னொன்றும் இருக்கிறது! எங்கேயோ மழை பெய்கிறது என்றிருக்கும் நம் ஜனங்களுடைய அலட்சிய மனோபாவம்! 

அதுதான், தட்டிக் கேட்க ஆளில்லாத தம்பிகள், அண்ணாத்தைகளுடன் கூட்டுச் சேர்ந்து, இன்றைக்கு லட்சக் கணக்கான கோடிகளில் ஊழலை செய்துவிட்டு, கனிமொழி பேட்டி கொடுத்த மாதிரி, நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என்று துணிச்சலாகச் சொல்ல முடிகிறது!




இந்த செய்திக் கட்டுரையைப் படிக்கும் இன்றைய இளைய தலைமுறைக்கு, வெறும் அறுபத்து நாலு கோடிக்கே இந்த ஆர்ப்பாட்டமா, ராஜீவ் காந்தி தன்னுடைய மிஸ்டர் பரிசுத்தம் இமேஜ் டாமேஜ் ஆவதைக் கண்டு இத்தனை பயந்தாரா என்று  தான் கேட்கத் தோன்றும்!(ஆனால், தன்னுடைய வீட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் ஊழலில் ஈடுபடாமல் தடுக்க ராஜீவ் என்ன செய்தார் என்று எவருமே கேள்வி கேட்டதில்லை!சோனியாவின் உறவினர்கள் ஆதாயம் அடைந்தார்கள், அதைத் தடுக்க ராஜீவ் காந்தி ஒருபோதும் முயற்சித்ததில்லை!) அந்த அளவுக்கு ஊழலும் இந்திய அரசியலும் (வாரிசு, குடும்ப அரசியலும் என்று பொருள் கொள்ளவும்) பின்னிப் பிணைந்து, ஒரு  வலுவான கூட்டணி தர்மத்தை உருவாக்கியிருக்கின்றன!

இளிச்சவாயர்களாக இந்தியத் திருநாட்டின் மாண்புமிகு பொதுஜனம் தானே தன் தலையில் மிளகாய், மசாலா இப்படி எதைவேண்டுமானாலும் அரைத்துக் கொள்ள அனுமதித்திருப்பது அவர்களுக்கே தெரியவில்லை!லேசுபாசாகத் தெரிந்தாலும்,அதைக் குறித்துத் தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற மாதிரியாக, ஒருவித செயலற்றதன்மை வளர்ந்து கொண்டிருப்பதோ, தங்களுடைய வாழ்வு, சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதோ ஜனங்களுக்கு இன்னமும் முழுமையாகப் புரியவில்லை.




புரிந்திருக்குமானால், கண்ணாடியைக் கழற்றிவிட்டு கருணாநிதி கண்ணீர் விட்டார், ஸ்டாலினைப்  பார்த்ததும் கனிமொழி கதறி அழுதார், கனிமொழி சிறையில் வாடுகிறார், மெழுகுவர்த்தி செய்யக் கற்றுக் கொள்கிறார் என்ற மாதிரியான ஊடகச் செய்திகளைப் பார்த்து உண்மையிலேயே கொதித்திருக்க வேண்டும். ஊடகங்களின் பசப்புத் தன்மையை இனம் கண்டுகொண்டிருக்க வேண்டும். சிறைகளிலும் ஊழலுக்குத் தனி மரியாதை உண்டு!  

தெஹெல்கா செய்தி ஒன்று இங்கே 

ஆனால், ஊடகங்களின் உள்நோக்கங்களை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா?


******
நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி,சில விஷயங்களுக்கு ஒரு ராசி உண்டு!
2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரமும் அப்படித்தான்! தொட்டவர்கள் எவரையும், அது ஒரு வழி பண்ணாமல் விடாது போல இருக்கிறது! இப்போது மட்டுமல்ல, இதற்கும் முந்தைய கால கட்டங்களில் சுக்ராம் என்ற காங்கிஸ் அமைச்சர்! டெலிகாம் ஊழல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்! காங்கிரஸ் அவரைக் கை கழுவி விட்டு, தாங்கள் பரிசுத்தவான்கள் என்ற ரீதியில் ஒதுங்கிக் கொண்ட அந்தக் கதை தயாநிதிகளுக்கும், ஆ.ராசாக்களுக்கும், ராசாவோடு கூட்டுச் சேர்ந்து பேராசையில் தானே சிக்கிக் கொண்ட கனிமொழிகளுக்கும்  தெரியாது என்றா நினைக்கிறீர்கள்?
நேற்று முன்தினம், தயாநிதி மாறன் பிரதமரை சந்தித்து விட்டு வந்தது குறித்துப் பல விதமான வதந்திகள்..நான் ராஜினாமா செய்ய மாட்டேன், நீங்களாக நீக்கியது போல செய்து கொள்ளுங்கள் என்று சொன்னதாக!  இந்த விவகாரம் முடிவதற்குள் இன்னும் எத்தனை அம்பாரம் பூக்களைக் காதில் சுற்று சுற்றென்று சுற்றுவார்களோ தெரியாது!


ஊழ்வினை வந்து உறுத்தூட்டும் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் சொல்வது இதைத்தான்! 


அவன் விதி அப்படி நடந்தது, எனக்கு அப்படி எல்லாம் ஆகாது என்றுதான் தப்பு செய்கிற ஒவ்வொருத்தனும் நினைக்கிறான். அவனுக்கும்தானே பெட்டி கொடுத்தேன், அவன் என்னைக் காட்டிக் கொடுக்க நினைத்தால், அவன் வண்டவாளத்தை அம்பலப்படுத்தி விடமாட்டேனா என்று தன்னுடைய சாமர்த்தியத்தை அளவுக்கு மீறியே நம்புகிறான். இப்போது கூட அவர் அப்ரூவர் ஆவாரா இவர் அப்ரூவர் ஆவாராஎன்ற ரீதியில் ஊடகங்கள் கனிமொழியைக் குறித்து, தயாநிதி உதவியாளர் கௌதம் குறித்து சில ஊகங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றன!  ஊகங்களுக்குப் பின்னால் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிட முடியாது, குட்டியை விட்டு ஆழம் பார்க்கிற கதை மாதிரி, சம்பந்தப்பட்டவர்களே இந்த மாதிரி ஊகங்களை அள்ளித் தெளிப்பது, விவகாரத்தை திசைதிருப்புகிற, கூட்டாளியின் கூட்டணி தர்மத்தைத் தெரிந்து கொள்ளச் செய்யப் படுகிற  உத்தியாகக் கூட இருக்கலாம்!

ஓட்டைவாய் திக்விஜய்சிங் ராகுல் காண்டி பிரதமர் பொறுப்பை ஏற்கத் தகுதியானவர், நேரம் வந்து விட்டது என்றெல்லாம் உளறிக் கொண்டிருந்த அதே சமயம் டம்மிப்பீஸ் மன்மோகன் சிங்குக்குக் கூடக் கோபம் வந்ததாக ஊகங்கள் கசிந்தன. டம்மிப் பீஸ் மன்மோகன் சிங்குடைய உபயோகம் முடிந்துவிட்டது, சர்ச்சைகளில் தேய்ந்து போன அவர் முகமூடி இனிமேல் உபயோகப்படாது, அவருக்குப் பதிலாகப் புதிய முகமூடியாக பிரணாப் குமார் முகர்ஜி அல்லது சால்வை அழகர் பானா சீனா இருவரில் எவரோ பிரதமராக அமர்த்தப்படலாம் என்று செய்திகள் கசிந்தன. மூப்பனார் பிரதமராக ஆக இருந்த தருணத்தில் கருணாநிதிதான் அதற்குத்  தடையாக இருந்தார் என்று சொல்லப்பட்டதுண்டு. சிதம்பரத்துக்கும் அதே கதைதான் போல!! 



கருணாநிதியின் கையைப் பிடித்தபோதே அவருக்கும் கெட்டநேரம் ஆரம்பித்து விட்டது என்பதை சொல்லாமல் சொல்லி நிரூபித்துக் கொண்டிருக்கிறதோ?



ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிதம்பரத்தின் பங்கை விசாரணைக்குட்படுத்த வேண்டும்!

திஹார் சிறை மோசடிக் குற்றத்தில் ஈடுபடுகிற விவிஐபிக்களின் கேளிக்கைக் கூடமா?

பிரதமராவது கிடக்கட்டும்! அமைச்சர் பதவியாவது தப்புமா என்ற கவலை சிதம்பரத்துக்கு வந்துவிட்டது. தன்னை உட்பட அறுபது வயதுக்கு மேற்பட்ட எவருமே அமைச்சராக இருப்பது தவறுதான்  என்றும் சொன்னதோடு, ஒரு எழுத்தாளராக ஆகும் எண்ணம் இருக்கிறது என்றும் ஒரு கோடி காட்டியிருக்கிறார்!

அடுத்தவாரம் அமைச்சரவை மாற்றம் என்ன சொல்கிறது என்பதை, அத்தைக்கு மீசை முளைத்தபிறகு பேசலாம்!


பதிவு பிடித்திருக்கிறதா? கீழே இருக்கும் +1 பட்டனை அழுத்தித்தெரிவியுங்களேன்!









2 comments:

  1. பதிவு பல நிக்ழ்வுகளைத் தொட்டுச் செல்கிறது.

    புதிய அமைச்சரவைப் பட்டியலுக்கு காத்திருக்கிறேன்:)

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி! பல நிகழ்வுகளைத் தொட்டுச் சொல்வது போல இருந்தாலும் மைய நீரோட்டம் ஒன்றே ஒன்று தான்! ஊழலுக்கெதிராக ஜனங்கள் திரளவேண்டும் என்பது ஒன்று தான் இந்தப்பதிவுகளின் அடிநாதம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!