பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! காங்கிரஸ் அரசும் அப்படித்தான்....!



புதுதில்லி, ஆக.16: இன்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த அண்ணா ஹசாரேவுக்கு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸார் அவரை இன்று காலை கைது செய்தனர்.அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. 

அவர் இன்று காலை அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.அண்ணா ஹசாரேவுடன் அவரது குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது.. இவர்களைக் கைது செய்து எங்கு கொண்டு செல்கின்றனர் என்ற தகவல் எதுவும் போலீஸாரால் தெரிவிக்கப்படவில்லை.என்னைக் கைது செய்தாலும், சிறையில் என்னுடைய உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருந்தார் அண்ணா ஹசாரே. அண்ணா ஹசாரேவின் திடீர் கைது, புதுதில்லியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊழலுக்கேதிரான இந்தியா என்ற முழக்கத்துடன், இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கவிருந்த அண்ணா ஹசாரேவை டில்லிப் போலீசார் கைது செய்தனர். அரசு விதித்த தடையை மீறத் துணிந்ததாலேயே கைது நடவடிக்கை என்று உள்துறை செயலர் 'விளக்கம்; தெரிவித்திருக்கிறார்.

அண்ணா ஹசாரேவைக் கைது செய்ததிலும், போராட்டத்தை நசுக்கவதிலும் காட்டும் அரசின் செயல்பாடு, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை விடக் கொடுமையான அடக்குமுறை என்றார் அண்ணா ஹசாரே ஆதரவாளர் சாந்தி பூஷன்.அரசின் இந்தச் செயல், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; எந்த விதத்திலும் இது போன்ற நெருக்கடி நிலையைத் தொடருவதற்கு அரசுக்கு தார்மீக உரிமை இல்லை. தற்கால நிகழ்வுகளில் அரசு நடந்து கொள்ளும் விதம், ஆங்கிலேய ஆட்சியை விடக் கொடூரமானதாக உள்ளது என்றார் சாந்தி பூஷன்.

கோழைகள், ஆட்சி பீடத்தில் அமரும்போது கொடுங்கோன்மை, அடக்குமுறை இவையெல்லாம் இயல்பாகவே சேர்ந்து கொள்கிறது. இந்திரா காலத்திலும் அப்படித்தான்! தன்னுடைய பதவிக்கு ஆபத்து என்றவுடன், நெருக்கடி நிலை பிறந்தது. இப்போது ஒரே வித்தியாசம், அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையைக் காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணிக் குழப்பம் அறிவித்திருக்கிறது.

பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாடினான் பாரதி!

காங்கிரஸ் அரசு செய்யும்போதும் அப்படித்தான்!

1 comment:

  1. இதிலும் ஒரு நல்லது உண்டு! பெரிய அழிவுக்கு முன் தான் இப்படி பெரிய அளவில் ஆட்டம் போடுவார்கள் எல்லா கொடியவர்களும். அந்த அளவில், இது காங்கிரஸ் ஆட்சியின் அழிவிற்கான அறிகுறியாகவே இதை நான் காண்கிறேன்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!