2G ஸ்பெக்ட்ரம்! ஒரு தவறு செய்தால், அதைத்தெரிந்து செய்தால்...........!

சி.பி.ஐ. தவறு செய்தால், நான் விட மாட்டேன்!

சுவாமி 2 ஜி ஆவேசம்!

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை செப்டம்பர் 15-ம் தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்யப் போகிறது. 

இந்த நிலையில், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முதல் கட்டமாக, கலைஞர் டி.வி-க்கு 214 கோடி கொடுத்த டிபி ரியாலிட்டி நிறுவனங்களின் சொத்துகளை முடக்கிக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி விட்டார்கள். இதில் தொடர்புடைய மற்ற நிறுவனங்கள் மீதும் அடுத்தக் கட்ட நடவடிக்கை பாயும் என்கிறார்கள். கடந்த ஜூலை 6-ம் தேதி தொடங்கி இதுவரை 2ஜி விவகாரத்தில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை செப்டம்பர் 1-ம் தேதி சி.பி.ஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள்.


இந்த நிலையில், தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இந்தியா திரும்பிவிட்டார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்!

''உண்மையைச் சொல்லுங்கள்! ஸ்பெக்ட்ரம் வழக்கை கிடப்பில்போட உங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதா? தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உங்களை சந்தித்துப் பேசியதாக பரபரப்பு கிளம்பியுள்ளதே?''

''சென்னையில் டாக்டர் மோகன் காமேஷ்வரன் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கே ஸ்டாலின் வந்தார். சம்பிரதாயத்துக்கு நான், 'ஹெள ஆர் யூ?' என்று கேட்க, அவரும், 'ஃபைன்' என்றார். இவ்வளவு தான் நடந்தது. வேறு எந்தப் பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை. 

வழக்கு விசாரணை நீண்ட தூரம் போய்விட்டது. அதனால், இந்த நேரத்தில் என்னை யாரும் அணுக மாட்டார்கள். ஊழல் விவகாரத்தைத் தடுக்கவோ, கிடப்பில் போடவோ இனி யாராலும் முடியாது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாட்டியவர்களுக்கு கடைசியாக ஒரே ஒரு சான்ஸ் உண்டு. அவர்கள் அப்ரூவர் ஆகலாம். குற்றத்தில் உடந்தையாக இருந்தவர்கள், அப்ரூவர் ஆகி... பணம் எப்படி பெறப்பட்டது? யார் யாருக்கு கைமாறியது? என்று அனைத்து விவரங்களையும் தானாக முன்வந்து கோர்ட்டில் சொன்னால், தண்டனை குறையலாம்''  

''டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் சொத்துகளை முடக்க அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளார்களே?''

''ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முதன்முதலாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கிற வகையில் எனக்கு மகிழ்ச்சி. 2002-ல் கொண்டுவரப்பட்ட சட்டம் அது. சட்டவிரோதமாகப் பணம் கை மாறினால், அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளைக் கைப்பற்ற, மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அந்த வகையில், கலைஞர் டி.வி-க்கு டிபி ரியாலிட்டி மூலம் 214 கோடி கைமாறி இருக்கிறது கலைஞர் டி.வி-யின் முதலீட்டுப் பணமே சில கோடிகள்தான். அப்படி இருக்கும்போது, இத்தனை கோடிகள் எதற்காகக் கை மாறியது?  

அந்தப் பணத்தை ஏதோ கடனாகப் பெற்றதாகச் சொல்லி, அவசரம் அவசரமாகத் திருப்பித் தந்து இருக்கிறார்கள் கலைஞர் டி.வி. தரப்பினர். செய்த குற்றத்தை மறைக்க நாடகம் போட்டு, மொத்தமாக மாட்டிக் கொண்டார்கள்.

மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என வாதம் நடத்தப்போகிறேன். உச்ச நீதிமன்றம் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஸ்பெக்ட்ரம் வழக்கை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இரண்டு வழக்குகள் நடக்கப்போகின்றன. சி.பி.ஐ. வழக்கு தனி. என்னுடைய வழக்கு தனி. நான், சி.பி.ஐ-யிடம் உள்ள ஆவணங்களைப் பெறலாம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உள்ளவர்களிடம் நானும் குறுக்கு விசாரணை நடத்துவேன். ஊழல் விவகாரத்தில் ஆரம்பம் முதல் ஒவ்வொரு முறையும் சி.பி.ஐ. தானாகவே எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. அவர்களுக்கு எஜமானர் மத்திய அரசுதானே... அதனால், கொஞ்சம் மந்தமாகத்தான் செயல்பட்டார்கள். நான்தான் கோர்ட் மூலம் உத்தரவுகளைப் பெற்று சி.பி.ஐ-யை விரைவாகச் செயல்படவைத்தேன். 

வழக்கு விசாரணையில் எங்காவது சி.பி.ஐ. தவறு செய்தால், நான் விட மாட்டேன்.''

''சோனியா காந்தி பற்றி பேச்சே இல்லையே?''

''அதுதான் புதிராக இருக்கிறது. அவருக்கு வெளிநாட்டில் ஆபரேஷன் என்று மட்டும் தகவல் சொல்லப் பட்டது. வேறு எந்த விவரமும் வெளியிடப் படவில்லை. பிரதமருக்கு ஹார்ட் ஆபரேஷன் நடந்தபோது, தினமும் அவரது உடல்நிலை பற்றி ஆஸ்பத்திரி தகவல் வெளியிட்டது. வாஜ்பாய் அவரது முழங் காலில் ஆபரேஷன் செய்துகொண்டபோதும், தகவல்கள் வெளிவந்தன. ஆனால், சோனியா விஷயத்தில் இதுவரை எதுவுமே வெளியிடப்படவில்லை. போனில்கூட அவர் பேசவில்லை. வீடியோ கான்ஃபெரன்ஸ் வசதி எல்லாம் உள்ள இந்தக் காலத்தில் சோனியா ஏன் இதைப் பயன்படுத்தவில்லை என்பது தான் புரியவில்லை.''

''ஊழலை எதிர்த்து நீங்கள் நடத்தும் சட்டப் போராட்டத்துக்கு அண்ணா ஹஜாரே ஆதரவு தருவாரா?''  

''ஊழலை ஒழிக்க மூன்று வகையான நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒன்று, இரும்புப் பிடி சட்டம் இயற்ற வேண்டும். இதைத்தான் அண்ணா வலியுறுத்துகிறார். இரண்டாவது, ஊழலை ஒழிக்க ஏற்கெனவே உள்ள சட்டத்தை முடுக்கி வெற்றிகரமாக செயல்படுத்தவைக்க வேண்டும். இதைத் தான் நான் செய்கிறேன். மூன்றாவது, ஊழல் விஷயத்தில் மக்களின் அணுகு முறை முற்றிலும் மாற வேண்டும். காசுக்காக ஆசைப்பட்டு குறுக்கு வழியில் போகிற மனோபாவம் மாறுவதற்கு ஆன்மிக மறுமலர்ச்சி வர வேண்டும். அப்போதுதான், ஊழல்கள், தவறுகள் செய்ய யாருக்கும் மனம் இடம் கொடுக்காது. இதை செய்ய நம் நாட்டில் உள்ள சாமியார்களும், சாதுக்களும் முன்வர வேண்டும்!''

நன்றி: இன்றைய ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரை.

---------------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் விரும்பினாலும் சரி,விரும்பாவிட்டாலும் சரி, டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியை அவ்வளவு எளிதாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது!அரசியல் பெருந் தலைகளே, இவரைப் பாம்பென்று தள்ள முடியாமலும், பழுதை என்று தாண்ட முடியாமலும் தவிக்கின்றன.

இத்தனை தைரியமாக சிபிஐயை எதிர்த்துக் குரல் கொடுக்க இங்கே எந்த அரசியல்வாதிக்குத் தில் உண்டு? தவிர, ஸ்பெக்ட்ரம் வழக்கானாலும், சோனியா குடும்ப பூர்வோத்தரங்களைக் கிளறுவதானாலும் சுப்பிரமணியன் சுவாமிக்கு நிகர் அவரே! 

போபார்ஸ் மாதிரியே ஸ்பெக்ட்ரம் வழக்கையும் ஊற்றி மூட சிபிஐ முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், சுவாமி மாதிரி ஒருத்தர் தான் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறார். உச்ச நீதிமன்றம் என்னதான் கண்கொத்திப் பாம்பாக, இந்த விவகாரங்களைக் கண்காணித்தாலும், அரசு இயந்திரங்கள் ஒத்துழைக்காமல் போனால் குற்றவாளிகள் கண்ணெதிரே தப்பிச் செல்வதைத் தடுக்க முடியாது இல்லையா!

2 comments:

  1. சுப்புசாமி செய்வ்து நாரதர் கலகம்! பாதிக்கப்படுவோர் கொதிக்கவே செய்வர்!
    அவரைக் கோமாளி என்போரும், அவரைப் பார்த்து அலறுவது, வேடிக்கை!

    ReplyDelete
  2. சுப்புசாமியை நாரதர் ரேஞ்சுக்கு உசத்தி விட்டீர்கள்! நாரதரையே காமெடிப்பீசாகப் பயன்படுத்திய பாரம்பரியம் தமிழ்நாட்டில் ஆத்திகம் பேசின, அதை மறுத்து நாத்திகம் பேசின இரண்டு தரப்புக்குமே உண்டு!

    அப்புறம்,சுப்ரமணிய சுவாமி மீது கோழி முட்டையடித் தாக்குதல் நடத்தி,கோமாளி என்று கூவின கூட்டம் தான் அவரைக் கண்டு அதிகமாக நடுங்குகிறது!!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!