ஒன்றிக் கரைவதும், முளைத்தெழுவதும்......!



மீபகாலமாக, சில வலைக் குழுமங்களில் என்னுடைய நேரத்தை கொஞ்சம் அதிகமாகவே வீணடித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது, திரும்பிப் பார்க்கும்போது சுளீரென்று உறைக்கிறது. இது முதல் தடவை அல்ல! ஏற்கெனெவே இப்படி சில குழுமங்களில் வெட்டிப் பொழுது போக்கிக் கொண்டிருந்து, பிறகு அதிலிருந்து விடுபட்டு வந்ததும் நடந்திருக்கிறது.இப்போது மறுபடியும்....!

ந்த முறை கொஞ்சம் அதிகமான, அழுத்தமான பாடத்தைக் கற்றுக் கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும்.இந்த அனுபவத்தைக் கொஞ்சம் கசப்பாக இருந்தாலும், எனக்குக் கற்றுக் கொடுத்த ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனுக்கு, தனிப்பட என்னுடைய நன்றியை சொல்லியாக வேண்டும்! தவிர இதுமாதிரியான கசப்பு எனக்குப் புதியதும் அல்ல!

னிதன் சமூகப் பிராணிதான்! ஒரு குழுமத்தில் என்னை அவர் விமரிசித்த மாதிரி சாதுப் பிராணி அல்ல!ஒருவருக்கொருவர் பழகி கருத்தோடு கருத்து என்று முட்டி மோதி அல்லது தோளில் கை போட்டுக் கொண்டு கதை சொல்லி எப்படியோ, ஒரு குழுவாக, சிறு சமூகங்களாக, விரிந்த சமுதாயமாக பரிணமிப்பதாக சமுதாய வரலாறு சொல்கிறது.அப்படிச் சொல்லப்பட்டாலும் கூட, கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால் அன்றும் சரி, இன்றும் சரி, இரண்டு விதமான போக்குகள் எதிர்மறையாக இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். தனிநபரின் கருத்து வெர்சஸ் பொதுக் கருத்து அல்லது பொதுவெளியில் ஒன்றித் தனிநபர் (காணாமலேயே) கரைந்து போவதாக இன்றைக்கும் பார்க்க முடியும்.

சேத் கோடின் தன்னுடைய பதிவில் இப்படி சுருக்கமாக சொல்கிறார்! வெளிப்படுதல் (emerging), ஒன்றுதல் அல்லது கரைந்து போதல் (merging) என்று இரண்டு விதமான தன்மைகளைத் தொட்டு,அதன் முடிவாகத் தன்னுடைய கருத்தைக் கடைசி வரியில் வைக்கிறார்.

ன்னுடைய இன்றைய அனுபவங்களோடு, ஒத்துப் போகிற இந்தப் பதிவைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்ததில், சில அடிப் படை உண்மைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. சேத் கோடின் சொல்வது இது:

Emerging is when you use a platform to come into your own. Merging is when you sacrifice who you are to become part of something else.

Merging is what the system wants from you. To give up your dreams  and your identity to further the goals of the system. Managers push for employees to merge into the organization.

Emerging is what a platform and support and leadership allow you to do. Emerging is what we need from you.

விவாதங்கள், குழுமங்கள்,கருத்துப் பரிமாற்றம் இவைகளில் எல்லாம் தன்னுடைய சிந்தனைப்போக்கை வளர்த்துக் கொண்டு வெளிப்படுவது ஒருவிதம்! இதில் தன்னை சமரசம் செய்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. வீணான போலித்தனங்கள் இல்லை.தன்னுடைய அடையாளத்தை இழக்க வேண்டிய அவசியம் ஒருபோதும் இருப்பதில்லை.

ருமித்தல் என்று சொல்லப்படுவது நேர் எதிர் ரகம்! இதில் நீங்கள் யார் என்ற சுயத்தை, எதிலோ ஒருமிப்பதற்காக, நீங்கள் இழக்க வேண்டி வரும்! அப்படி உங்கள் சுயத்தை இழந்தால் மட்டுமே நீங்கள் ஒருமிப்பீர்கள், ஏற்றுக் கொள்ளப்படுவீர்கள்!

நிறுவனங்களாகட்டும், உங்களைச் சுற்றியுள்ள சமூகமாகட்டும், நீங்கள் அதனுடன் ஒருமிப்பதையே எதிர்பார்க்கின்றன.

ங்களுடைய கனவுகள்,தனித்த அடையாளம், சிந்தனை,இப்படி எல்லாவற்றையும் உதறிவிட்டு, அந்த நிறுவனம், சமூகம் அல்லது ஒரு குழுவின் எதிர்பார்ப்புக்களோடு ஒன்றுவதையே நிர்பந்தம் செய்கின்றன. ஒரு நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், யாரோ ஒரு கண்காணி அல்லது மேலாளர் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

முதாயம் அல்லது குழுமங்களை எடுத்துக் கொண்டால், அங்கேயும் யாரோ ஒரு தலைவர் அல்லது தல இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். இதன் விளைவு, ஒருவித ஜடத் தன்மைக்கு இட்டுச் செல்வதாகவே, சுயசிந்தனை அற்றதாகவே ஆகிவிடுவது தான் மிகப்பெரிய பரிதாபம்!

வெளிப்படுதல் என்பது, களங்களில் கிடைக்கும் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்று  ஒரு நல்ல தலைமை உங்களிடமிருந்து விரும்புவது! எதிர்பார்ப்பதும் அதையே!

ரு விதை பூமிக்குள் விழுந்து, கிடைக்கும் ஈரம், வெப்பம் இதைப் பயன்படுத்திக் கொண்டு, பூமியைக் கீறி முளைத்து எழுவதையே இயற்கை ஆதரிக்கிறது!

தற்காகவும் சுயத்தை இழந்து ஏதோ ஒரு கும்பல், குழுமத்துடன் ஒன்றிக்கரைந்து ஜடமாக ஆவதற்காக நாம் படைக்கப்படவில்லை!!

சொன்னது சரிதானா? கொஞ்சம் சொல்லுங்களேன்!


8 comments:

  1. நிச்சயம்...இந்த உலகில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம்.சுயம் ஒன்றை தவிர...சுயத்தை இழப்பதும் உயிரை இழப்பதும் ஒன்றுதான்.இந்த உலகில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த அத்தனை ஞானிகளும் சுயத்தை இழக்காதவர்களே...அதேசமயம் இங்கே சுயத்தை சமுகத்தை சார்ந்து வாழும் சராசரி மனிதர்கள் இழக்காமல் வாழ்வதும் முடியாத காரியமே,இந்த வாழ்க்கை நமக்கு விடுக்கும் சவாலே சுயத்தை இழக்காமல் வாழமுடியுமா?என்பதே அப்படி வாழ்ந்தவர் எல்லாரும் இறவா புகழுடயவர்களே.நன்றி.

    ReplyDelete
  2. தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என்று பார்த்தேன். ஒன்றிக் கரைவது அவ்வப்போது நடந்தாலும் அது கூட நம் மன இசைவுக்குட்பட்டது. முளைத்தெழுவது சரி. புதிய கருத்துகளும் ஆரோக்கியமான விவாதங்களும் அக்காபூர்வமானதாக இருக்கும். ஆனால் இது இன்றைய உலகில் நடைமுறைச் சாத்தியமில்லை. நீங்கள் சொன்ன குழுமப் பகிர்வுகளில் உங்கள் அனுபவம் என்ன என்பது தெரியாமலேயே உங்கள் இந்தப் பதிவை மட்டும் படித்து விட்டுச் சொல்கிறேன்.

    //சமீபகாலமாக, சில வலைக் குழுமங்களில் என்னுடைய நேரத்தை கொஞ்சம் அதிகமாகவே வீணடித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது, திரும்பிப் பார்க்கும்போது சுளீரென்று உறைக்கிறது. இது முதல் தடவை அல்ல! ஏற்கெனெவே இப்படி சில குழுமங்களில் வெட்டிப் பொழுது போக்கிக் கொண்டிருந்து, பிறகு அதிலிருந்து விடுபட்டு வந்ததும் நடந்திருக்கிறது.இப்போது மறுபடியும்....//

    வலைப் பக்கங்களை நாம் படிக்காமலேயே இருக்க முடியாது. இங்கு எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.சில பல ஒவ்வாத கருத்துடைய தளங்களைப் படிக்க நேரிட்டாலும் பதில் சொல்லி விவாதம் செய்ய வேண்டியதில்லை என்று எனக்குத் தோன்றும். நிறைய பேர் தங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்துகளை விரும்புவதில்லை. அப்போதும் இப்போதும் வெகுஜனப் பத்திரிகைகளில் கூட அவர்கள் வெளியிடும் வாசகர் கடிதங்கள் அவர்கள் சொல்லவரும், வெளியிட விரும்பும் கருத்தை மட்டுமே அனுமதிப்பது வழக்கம்தானே...

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி, திரு ஞான சித்தன்!

    தன்னுடைய சுயம் எது என்பதிலேயே நிறையத் தருணங்களில் குழப்பம் ஏற்படுவதுண்டே!

    எதுவானாலும் ஒரிஜினலாக இருப்பது மட்டுமே சுயம் என்று வைத்துக் கொள்ளலாமா?மனிதன் வளர வளர, அனுபவங்களோடு சேர்ந்து அறிவு வளர்வது போல, இந்த சுயமும் வளரக்கூடியது என்று தான் தோன்றுகிறது.வளர்ந்து விரிகிற வரைக்கும், இதைக் காப்பாற்றிக் கொண்டுதான் போக வேண்டும் போல!

    வாருங்கள் ஸ்ரீராம்!

    வலைக் குழுமங்களில் இது அவ்வப்போது நடப்பதுதான்!ஒரு கருத்தின் அடிப்படையில் செய்யப்படும் விமரிசனங்களை, தன் மேல் தொடுக்கப்படும் தனிநபர் தாக்குதல்களாக மயங்குவது ஒன்று! தனக்குப் பிடிக்காதவர்களை, அதே மாதிரி பிடிக்காதவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு ஒருவிதமான தாக்குதல், விமரிசனங்களை ஒரு சிறு கும்பலாக செய்வது இன்னொன்று!திராவிட இயக்கங்கள் எது எதன் மேலோ காழ்ப்பை வளர்த்துத் தான் வளர்ந்த மாதிரித் தான்! தமிழ்க் குழுமங்களில் மட்டும் இது பரவலாக இருப்பது இன்னொரு விசித்திரம்!

    ReplyDelete
  4. நிறைவான பதிவு ஒன்றைப் படித்த திருப்தி மனத்தில் தித்தித்ததது.

    //ஒருமித்தல் என்று சொல்லப்படுவது நேர் எதிர் ரகம்! இதில் நீங்கள் யார் என்ற சுயத்தை, எதிலோ ஒருமிப்பதற்காக, நீங்கள் இழக்க வேண்டி வரும்! அப்படி உங்கள் சுயத்தை இழந்தால் மட்டுமே நீங்கள் ஒருமிப்பீர்கள், ஏற்றுக் கொள்ளப்படுவீர்கள்!//

    சத்தியமான வார்த்தைகள். ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்காக ஒருமிப்பதில் ஒருமித்து விடுபட வேண்டியதில் விடுபட்டு தன் பக்க நியாயங்களை இறுகிப் போனவரிடையே நிருவ முடியாமலும் போய்விடுவதுண்டு. ஏனெனில் ஏற்றுக்கொள்ளபடு வதற்கான ஒருமிப்புகள், ஒருமிப்பளவிலேயே நின்று போய், இன்னொரு பக்க நியாயத்தைக் காண முடியாமல் அப்ரப்ட்டாக அறுந்து விடுகின்றன; அல்லது தேங்கி விடுகின்றன.

    ReplyDelete
  5. வணக்கம் ஜீவி சார்!

    சேத் கோடின் சொல்கிற ஒருமித்தல் (merge) என்பது செயற்கையாகத் திணிக்கப்படுகிற போதுதான் இங்கே குழப்பங்கள் உருவாகின்றன.

    தவிர, சுயம் என்பதும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இப்படித் தன்னை வளர்த்துக் கொள்வது, செயற்கையாகத் திணிப்பது என்ற இரண்டு அம்சங்களை ஒருவழிப் பாதையாக ஆக்கிக் கொள்வதில் தான் சிக்கலின் ஆணிவேர் இருக்கிறது. இந்த இரண்டு அம்சங்களும் இருவழிப்பாதையாக, அதாவது ஒருவழிப்பாதையில் எதிரெதிரே முட்டித் தேங்கிப் போய் விடாமல், போய்வர முடியுமானால், ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி இயல்பாகவே வரும்.

    ReplyDelete
  6. வணக்கம் எஸ்.கே.சார்!

    இப்படிப் பார்க்க முடியுமானால் ரொம்ப சரியாக நாம் அதைக் கணிக்க முடியும் என்று நினைக்கிறேன். சுயத்தின் இயல்பான வளர்ச்சி பெறும் அனுபவங்களினாலேயே வளர்க்கப்பட்டு, அந்த அனுபவங்களே சுயத்தின் இன்ன மாதிரியான வளர்ச்சி என்பதற்கு காரணியாக அமைகிறது. அனுபவங்களில் இயல்பாக அடைவது, செயற்கையாக அனுபவிக்க நேர்வது (அல்லது திணிக்கப்படுவது) என்று இரண்டு வகைகளுமே உண்டு. இந்த இரண்டையும் இனம் கண்டு பிரித்துப் பார்க்கக் கூடிய திறமை கைவரப்பெறின், சுயத்தின் ஆரோக்கியமான வளர்ச்சி இயல்பாகவே வரும் என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    ஆம் ஐ கரெக்ட்?..

    ReplyDelete
  7. உண்மைதான்.இங்கே சுயம் எது சமுகம் தந்த பாதிப்புக்கள் எது என்று பிரித்துப்பார்பது கடினமே..பல சமயங்களில் சுயத்தை சமுகம் அழித்துவிடுவதும் உண்டு.சில சமயங்களில் மனதில் பட்டதை வெளிபடையாக கூறுவதையே சுயம் என்றும் என்ன தோன்றுகிறது..பலருக்கு நம் சுயம் ஆணவமாகவும்,முட்டாள் தனமாகவும் கூட காட்சியளிக்கும்.மொத்தத்தில் சமூகத்தால் நம்முள் திணிக்கப்பட்ட விசயங்களை கழித்தது போக மீதமிருப்பதே சுயம் என்று கொள்ள வேண்டி இருக்கிறது.

    ReplyDelete
  8. நான் சொல்ல நினைத்ததை, என்னை விடத் தெளிவாகவே சொல்லியிருக்கிறீர்கள் சார்! மிகவும் நன்றி!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!