இன்றைய ஜூனியர் விகடனில், வைகோவை ஒரு மாற்று அரசியல் சக்தியாக அடையாளம்காட்டி, தமிழருவி மணியன் நடத்திய ஒரு கூட்டத்தைப் பற்றிய செய்திக்கட்டுரை வெளியாகி இருக்கிறது.மாற்று அரசியல் தீர்வாக வைகோ தமிழக முதல்வராவது ஒன்று தான் வழி என்று தமிழருவி மணியன் முழங்கியிருக்கிறார். கூட்டத்தில், மதிமுக தவிர இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்
ஜெயலலிதாவிடம் கெஞ்சிப் பார்த்து கேட்ட சீட் கிடைக்கவில்லை என்றதும் விசயகாந்திடம் ஓடிப்போய் மூன்றாவது அணி அமைக்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பி தமிழருவி மணியன் எந்த தைரியத்தில் இந்தக் கூட்டத்தை நடத்தினார், கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கு ஒப்புக் கொண்டனவா என்பது கூட கட்டுரையாளருக்குத் தெரியவில்லை. ஏற்கெனெவே மதிமுகவிடம் கூட்டணி வைத்திருந்த கட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்பதும் மார்க்சிஸ்டுகளின் அரசியல் கணக்கே வேறு என்பதும் கட்டுரையாளருக்குக் கொஞ்சமும் தெரியவில்லை. போகட்டும்!
வைகோ மீது ஒரு தனிமனிதராக, ஒருதிறமையான நாடாளுமன்றவாதியாக, எனக்கு மட்டுமல்ல, இங்கே நிறையப்பேருக்கு மரியாதையும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால், ஒரு இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்துவதில் வைகோவுக்கு சாமர்த்தியமில்லை! குறிப்பாக தனக்கு அடுத்த படியாக ஒரு நம்பிக்கையான ஆதரவாளர்களை இரண்டாவது மட்டத் தலைவர்களாக உருவாக்குவதில் கூட வெற்றி பெற முடியாதவர் அவர்.. அதுவும் கருணாநிதி விரிக்கும் வலைக்குள் சிக்குகிறவர்களாகவே அவரைச் சுற்றி உள்ளவர்கள் இருப்பது வைகோவின் தலைமை எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு அடையாளம்.
ஆளை மாற்றினால் அரசியல் சூழலும் மாறிவிடுமா? தனி ஒரு நபரால் இத்தனை சீரழிவையும் மாற்றி விட முடியுமா?தமிழருவி மணியன் சொல்கிற தீர்வு உண்மையிலேயே, சரியான தீர்வு தானா? நடைமுறை சாத்தியம் தானா? முதலில் அந்த செய்திக் கட்டுரையைப் படித்து விடுவோம்.

-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு நபரைக் குற்றம் சொல்லி அகற்றி விட்டு, வேறொரு நபரை மாற்றுவதால் மட்டுமே இங்கே கோளாறுகளுக்குத் தீர்வாகி விடாது.
மூன்றாவது அணி, மாற்று அணி என்பதெல்லாம் இன்றைய நிலையில் வெறும் கற்பனை தான். தானே உச்சாணிக் கொம்பில் தலைமை ஏற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மட்டுமே நிறைந்த சூழலில் இவர்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.
அப்படியானால் தீர்வே இல்லையா? வேறு வழியே இல்லையா?
நிச்சயமாக இருக்கிறது. கொஞ்சம் பொறுமை வேண்டும். விழிப்புடன், ஒருங்கிணைந்து செயல்படும் சக்தியாக மக்களுடைய குரலை எதிரொலிக்கும் இயக்கமாக உருமாற்றம் காண்பதற்கு---
ஆபீஸ் பையன் உத்தியோகத்துக்குக் கூட குறைந்தபட்சக் கல்வித்தகுதி கேட்கிற தேசம் அரசியல் வாதிக்குத் தகுதி கேட்கக் கூடாதா? அரசியலில் இறங்குவதற்குக் குறைந்தபட்ச வயது இருக்கிற மாதிரியே, குறைந்தபட்சக் கல்வித் தகுதி தீர்மானிக்கப்பட வேண்டும். சட்டங்கள் இயற்றுகிற அதிகாரம் படைத்த சட்ட மன்றம், நாடாளுமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களுக்கு, நம்முடைய அரசியல் சாசன, சட்டம் இயற்றும் முறைகளைப் பற்றிய அடிப்படை ஞானம் இருக்க வேண்டும். அதில் ஒரு பட்டயப்படிப்பாவது பெற்றிருக்க வேண்டும்!
குறைந்த பட்ச வயது இருப்பது போலவே போட்டியிட அதிகபட்ச வயது வரம்பும் வேண்டும். அறுபது வயது என்று வைத்துக் கொள்ளலாம். சரியான உடல் நலம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அறுபத்தைந்து வயது வரை வேண்டுமானால் தளர்த்திக் கொள்ளலாம்.
கேபினெட் அமைச்சர், முதல்வர், பிரதமர் ஜனாதிபதி பதவிகளுக்கு,ஒரே நபர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்கத் தடை வேண்டும்.
மாநில அரசுகளைக் கலைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பது போலவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படாத மாநில அரசுகளைக் கலைப்பதற்குப் பரிந்துரை செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.அரசியல் சாசனத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பை, மக்களுடைய பிரதிநிதிகள் பொறுப்பேற்கத் தயாராகவும் தகுதியுள்ளவர்களாகவும் ஆகிற வரை உச்சநீதி மன்றமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்னும் கொம்ஞ்சம் விரிவாகவே பேசலாம்! இதெல்லாம் நடைமுறைக்கு வருகிற சாத்தியம் உண்டா என்று சந்தேகம் எழுகிறதா? தூக்கத்தில் கனவு காண்பது மட்டுமே பிழைப்பு என்றிருப்பவர்களுக்கு எதுவுமே சாத்தியமில்லை.
மாற்றங்களை வேண்டும் மக்கள் குரல் உரத்து ஒலிக்கும் நாளில், எல்லாம் நிறைவேறும்.



இந்த கூட்டத்தை தவற விட்டு விட்டேன். சென்னையில் இருந்த காரணத்தால்.
ReplyDelete//காந்தி ,சே , பிடல் ,...இன்னும் சொல்லிகொண்டே போகலாம் வரலாறு நெடுக்க ...தனிமனிதர்களால் நடந்த மாற்றங்களை இந்த தனிமனிதர்களை விமர்சிக்கவும் ஆட்கள் இருந்தார்கள்...என்ன செய்ய ...முடிந்தால் கை கொடுப்போம் இல்லை எனில்.....//
ReplyDeleteஇப்படி ஒரு பின்னூட்டம் தாமிரபரணி என்பவரிடம் இருந்து, தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல், (என்வரையில் இப்படி வருவதே அனானிதான்) வந்திருக்கிறது. கமென்ட் பெட்டி மீது தெளிவாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளத் தயங்குபவர்கள் பார்த்துவிட்டு ஒதுங்கிக் கொள்வது நலம, இத்தகைய பின்னூட்டங்களை ஏற்பதில்லை என்றுசொன்ன பிறகும் கூட!
இந்தப்பக்கங்களில் எங்கேயுமே தனிமனிதர்களுடைய பங்கைக் குறைத்து மதிப்பிடவில்லை! தனிமனிதர்கள் தான் ஒரு தெளிவான குறிக்கோள், அதை அடையும் வழி யில் தெளிவு கொண்டு தலைவர்களாகிறார்கள் என்பதை இந்தப்பக்கங்களில் பலபதிவுகளில் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். தமிழருவி மணியன் சொன்னதை மறுத்திருப்பதும், வைகோவிடம் தலைமைக்கான பண்பு சிறிதும் இல்லை! மிகப் பலவீனமான தலைவர், ஆனால் நல்ல மனிதர் என்று இங்கே சொல்லியிருப்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லையா?
அரசியலில் ஒருவரை ஒருவர் தூற்றிக்கொள்வதும் பிறகு சமாதானம் ஆவதும் சாகசம். ஏதோ பேசவேண்டும் என்பதற்காக மேடையில் இருபபவரை புகழ்ந்து பேசி கைதட்டல்கள் பெறுகிறார்கள். இது ஒன்றும் முக்கியமான ஓன்று அல்ல. மக்களை திசைதிருப்பும் தந்திரம் இது.
ReplyDeleteதிரு நாட்ராயன்! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDeleteதமிழருவி மணியன் வெறும் முகஸ்துதிக்காக இந்தக் கூட்டத்தை நடத்தவில்லை என்பதை அறிவேன்.இப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னாடி இருந்தே அவர் வைகோ தான் தமிழகத்தைக் வழிநடத்தத் தகுதியானவர் என்று சொல்லி வருகிறார். அவர் மட்டும் ஆசைப் பட்டால் போதுமா? அவருடைய ஆசை நிறைவேறக் கூடியது தானா என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு தான் இந்தப்பதிவில், ஒரு மாற்றுச் சிந்தனை, இயக்கத்துக்கான அடிப்படைக் கேள்விகள் தேர்தல் சீர்திருத்தங்களை வேண்டி நடத்தப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.
இந்தப்பக்கங்களில் அரசியல் பேசுவது ஒரு தற்காலிகமான தீர்வுக்காக ஏங்கி, எதையோ ஆதரிப்பதற்கு இல்லை.ஒரு நல்ல ஆரம்பமாக, இப்போதிருக்கும் தேர்தல் முறையை மாற்றுவது, பிரிடிஷ்காரன் காலத்திய நிர்வாக இயந்திரத்துக்கு ஒரு சரியான மாற்றி உருவாக்குவது,என்று சிந்தனை விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன். அதைக் குறித்து எழுதுங்கள்!