இது சோனியாவுக்கு வந்த சோதனை மட்டும் தானா?


 
இது சோனியாவுக்கு வந்த சோதனை மட்டும் தானா?

சென்றபதிவில் திரு அப்பாதுரை இந்த ஜனாதிபதி பதவியே அவசியம் தானா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்!இன்னும் கொஞ்சம் கேள்விகள் வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!

இன்னும் மூன்றே மாதங்களில் பிரதிபா பாடீல் ஜனாதிபதி மாளிகையை விட்டுக் காலி செய்து, வேறு ஒருவர் அங்கே தேர்ந்தெடுக்கப் பட்டவராக குடியேற இருக்கிறார் என்பது வெறும் செய்தி. ஆனால் அந்த வெறும் செய்திக்குப் பின்னால் என்னென்ன உள்ளடி வேலைகளைக் காங்கிரஸ் கட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.

ஐந்து வருடங்களுக்கு முன்னால்,தான் போடும் தாளத்துக்குத் தலையாட்டுகிற ஒரு பொம்மையை ஜனாதிபதியாக்கிக்  காங்கிரஸ் தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொண்ட மாதிரி இப்போதும் செய்ய முடியுமா என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது. தவிர, சென்ற தருணத்தில் இருந்தது போல  ஐமு கூட்டணிகுழப்பம் வெர்ஷன் இரண்டில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளுடனான உறவும் இப்போது சுமுகமாக இல்லை.
காங்கிரசின் பலவீனமான நிலையை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் கூட்டணிக்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் 2014 தேர்தல்களை மனதில் வைத்துக் கொண்டு பலகுரல் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்திருக்கின்றன. முதலில் பொது வேட்பாளர் என்ற ரீதியில் தான் பேச்சுக்கள் அதிகார பூர்வமற்ற முறையில் நடந்தன. துணை ஜனாதிபதி பதவிக்கு பிஜேபி வேட்பாளரை ஆதரிப்பது, பொது வேட்பாளரை பிஜேபியும் ஆதரிப்பது என்று ஆரம்பித்து இன்றைக்குக் காங்கிரஸ்  நிறுத்தும் எந்த வேட்பாளரையும் ஆதரிப்பது இல்லை என்று பிஜேபி உறுதியாக அறிவித்திருப்பதில் முடிந்திருக்கிறது.

சென்ற முறையை விட,பிஜேபி இப்போது உட்கட்சி விவகாரங்களில் பெருத்த சரிவை சந்தித்துக் கொண்டிருந்தாலும்,காங்கிரசை அதன் கொம்பைப் பிடித்து ஆட்டிப் பார்த்துவிடுவது என்ற உறுதியோடு களம் இறங்குகிறது.அதிமுக உட்பட சில மாநிலக்கட்சிகள் கொஞ்சம் வலிமையோடு காங்கிரசைப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. முலாயம் சிங் யாதவ், அப்துல் கலாமைப் பொது வேட்பாளராக அறிவிக்க விரும்புகிறார் என்ற செய்தி வந்தவுடனேயே, பிஜேபி சாமர்த்தியமாக, அப்படி அப்துல் கலாமை எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தினால் அதை ஆதரிப்போமென்று அறிவித்துவிட்டு, கூடவே துணை ஜனாதிபதி பதவிக்குத் தங்கள் கட்சி பரிந்துரைக்கும் ஒருவருக்கு அவர்களிடம் ஆதரவு கோருவோம் என்றும் அறிவித்திருப்பது இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டி இருக்கும் என்ற நிலையை மெல்ல மெல்ல உருவாக்கி வருகிறது.
 
முலாயம் சிங் யாதவ், காங்கிரசோடு வெளிப்படையாக மோதுவதைத் தவிர்த்து வந்தாலும், அவருடைய கவனமும் அடுத்து வரும் நாடாளுமன்றத்  தேர்தல்களின் மீதே இருக்கிறது.மாயாவதி தற்காப்புக்காகக் காங்கிரசை அண்டியே நிற்க வேண்டும் என்ற காங்கிரஸ் கணக்கு முந்திப்பலித்தது போல இப்போதும் பலிக்குமா என்பது சந்தேகம்! மம்தா பானெர்ஜி காங்கிரசுக்குத் தூக்கமில்லாத பலநாட்களைக் கொடுக்கும் தலைவலியாக இருந்தாலும், அவரைப் பல வகையிலும் குளிர வைத்து, ஆதரவைப்பெற்று விடமுடியும் என்ற நம்பிக்கையோடு காங்கிரஸ் இருக்கிறது.



கனிமொழி விவகாரத்தில் கொஞ்சம் இளக்கம் காட்டினாலே போதும், திமுக ஆதரவு தானாகக் கிடைத்து விடும் என்பது காங்கிரஸ் காரர்களுக்குத் தெரியாதா என்ன! கருணாநிதியும் துணைவி, கனிமொழி சகிதமாக துணைவி வீட்டில் வைத்து அந்தோணியை சந்தித்தது அவரை மாதிரி ஒரு சீனியர் அரசியல்வாதி எதை எதிர்பார்ப்பார் என்பது அவ்வளவு பெரிய ரகசியமா! டெசோ புசோ என்று குழிதோண்டிப்புதைத்த பினத்தைத் தோண்டி எடுத்து ஒப்பாரி வைப்பது போல ஈழத்தமிழர் பிரச்சினையைக் கையில் எடுத்தது பின்னால் தான் என்றாலும் பெங்களூருவில் மகள் செல்வி வீட்டில் வைத்து பிஜேபி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாதா என்ன! அந்தோணி வந்து சந்திப்பதற்கு முன்னாலேயே அமலாக்கத்துறை தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு கனிமொழிக்கு சம்மன் அனுப்பியது கூட இந்தத் தேர்தலில் திமுகவை வேறெந்தப் பக்கமும் சாயவிடாமல் இருப்பதற்காகத் தானே!

இடதுசாரிகளின் ஆதரவை எளிதாக பிஜேபி பூச்சாண்டி காட்டியே பெற்று விடலாம் என்று காங்கிரஸ் நம்புகிறது.இடதுசாரிகளைக் குளிர வைக்கிற மாதிரி, இப்போது துணை ஜனாதிபதியாக இருப்பவரையே நிறுத்தலாமென்ற யோசனையைக் கருணாநிதி கூட ஆதரித்திருக்கிறார். 

ஆனால், அவரை நிறுத்தினால் இடது சாரிகள் ஆதரவு கிடைக்கலாம், மம்தா ஆதரவு கிடைக்காது!இந்திய அரசியலில் இடதுசாரிகள் ஆக்க பூர்வமான பங்களிப்பு என்பது எமெர்ஜென்சி  தருணங்கள் தவிர  பிறகு அவ்வளவாக இல்லை என்ற கசப்பான உண்மையை வருத்தத்தோடு ஒப்புக்கொண்டாக வேண்டியிருக்கிறது. தோழர்களை வாரான் வாரான் பூச்சாண்டி பிஜேபி வடிவிலே என்று கேலியாக சொன்னால் கூடப் போதும், தடம் புரண்டு காங்கிரசைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து விடுகிற அளவுக்குத்தான்  அவர்களுடைய அரசியல் விவேகம் இருக்கிறது.

ஆனால், இப்போது நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை விட, யார் யார் போட்டியிடப் போகிறார்கள், யார் யார் எதற்காக அவர்களை ஆதரிக்கிறார்கள், அல்லது எதிர்க்கிறார்கள் என்பதே மிக சுவாரசியமான ஆட்டமாக, இந்திய அரசியல் எந்த அளவுக்குச் சீரழிந்து கிடக்கிறது என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.

தேசீயக்கட்சியான காங்கிரஸ், மாநிலங்களின் உணர்வை மதிக்கத் தவறியது என்பதாலேயே மாநிலக் கட்சிகள் கடந்த ஐம்பது வருடங்களில் காங்கிரசை மாநில அளவில் தோற்கடித்து முன்னுக்கு வந்தன. அப்படி முன்னுக்கு வந்த மாநிலக்கட்சிகள், தேசீயக் கண்ணோட்டத்தோடு வளர்ந்தனவா, ஒரு பொதுவான செயல்திட்டத்தோடு காங்கிரசுக்கு மாற்றாகத் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கிக் கொண்டனவா என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள்! மாநிலக்கட்சிகள் தேசீய அளவில் ஒரு பெரிய மாற்றாக வளரவே இல்லை என்பதும், கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப்போன காங்கிரஸ் அந்த ஒரு காரணத்தினாலேயே இன்னமும் தேசீய அளவில் பெரிய பிஸ்தா மாதிரித் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடிகிறது என்பதும் புரியும்.

கட்டெறும்பாகிப்போன காங்கிரசை எல்லாவகையிலும் தோற்கடிப்பது ஒரு ஆரம்பம் மட்டுமே!குறுகின கண்ணோட்டங்களோடு செயல்படும் மாநிலக் கட்சிகளை நிராகரிப்பதும்  இப்போது தேவைப்படுகிற நிவாரணம்.


ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசும், இதர அரசியல் கட்சிகளும் செய்கிற கூத்துக்கள், இது சோனியாவுக்கு வந்த சோதனை என்று மட்டும் ஒரே வரியில் முடித்து விட முடியாது! இந்த தேசத்தின் அரசியல் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது, இதை சரி செய்வதற்கு எவ்வளவு ஜெயப்பிரகாஷ் நாராயணன்கள், அண்ணா ஹசாரேக்கள் வந்து பிரயாசைப்பட வேண்டியிருக்கும் என்பதை யோசிக்கும் போதே தலை சுற்றுகிறது

15 comments:

  1. காங்கிரசை ஆதரிக்காத ஜனாதிபதி வந்தாலும் என்ன பெரிதாக சாதித்துவிட முடியும்?

    ReplyDelete
  2. வாருங்கள் அப்பாதுரை!

    //இவைகள் எல்லாம் எதற்காக என்று யாராவது கவலைப்படுகிறார்களா என்ன? அதுவும் சரிதான். தினசரி போராட்டங்களுக்கு நடுவில் பொதுப்பார்வை யாருக்கு வரப்போகிறது!.// இந்தப் பின்னூட்டத்தை பிரதான பக்கத்தில் கூகிள் காண்பிக்க மறுக்கிறது!

    பொதுப் பிரச்சினைகளில் அக்கறை வரவேணும் என்பதற்காகத்தானே இந்தப்பக்கங்களில் எழுதுவதே!

    இரண்டாவது கேள்விக்கு அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த தருணங்களில், சோனியா பிரதமராக விடாமல் தடுத்து விட்டதாக ஒரு செய்தி உண்டு. டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, அதை வைத்துக் கொண்டு தான் ராவுல் விஞ்சியும் கூட பிரதமரக வர முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    ReplyDelete
  3. மறுபடி அப்துல் கலாம் என்று இவர்கள் சொல்வது இருக்கட்டும், அவர் சரி என்று தலையாட்டுவாரா.... கூடாது என்பதே என்கட்சி! யார் வந்து என்னதான் செய்யப் போகிறார்கள்? வரும் தேர்தலில் என்ன பாடு பட்டாலும் காங்கிரஸ் ஜெயிக்கும் என்று தோன்றவில்லை. சினிமா வில்லன் போல அமலாக்கத் துறையையும் சி பி யையும் இந்த ஆட்சி உபயோகப் படுத்திக் கொண்டிருப்பது போல யாரும் உபயோகப் படுத்தியதில்லை. மற்ற கட்சிகளுக்கு அந்த அளவு நீண்ட வாய்ப்புகளையும் மக்கள் வழங்கியதுமில்லை. அந்த அளவு எதிர்க் கட்சிகள் தங்களை வளர்த்துக் கொள்ளவுமில்லை! அது இருக்கட்டும், ஓய்வுக்குப் பின் தங்கும் இடம் குறித்த சர்ச்சைகள் ஒரு புறம் வேடிக்கை என்றால் சுயசரிதை எழுதப் போகிறேன் என்று வேறு அறிவித்திருக்கிறார் தற்போதய ஜனாதிபதி. பயணக் கட்டுரை என்று சொல்வதற்கு பதில் சுயசரிதை என்று சொல்லி விட்டாரோ என்னமோ..!

    ஜெயப் பிரகாஷ் நாராயணனுடன் அன்னா ஹசாரேயைச் சேர்த்தது உடன்பாடில்லை.

    ReplyDelete
  4. வாருங்கள் ஸ்ரீராம்! உங்களுடைய இரண்டு பின்னூட்டங்களையும் பப்ளிஷ் செய்த பிறகு ஒன்று மட்டும் தான் எனக்குத் தெரிகிறது, இன்னொன்றைக் காணோம். நேற்று முன்தினமும் இதே வேடிக்கைதான்.

    காங்கிரசைப்போலவே கலாமைக் குறித்து பிஜேபிக்கும் கொஞ்சம்அல்ல, நிறையவே தயக்கம் இருக்கிறது.

    சிபிஐ என்று மட்டுமில்லை, ஐ சி எஸ், ஐ ஏ எஸ், வருமானவரித் துறை என்றுஅரசின் அத்தனை அங்கங்களும் நேரு, வாரிசுகளின் இமேஜைக் காப்பாற்ற, அவர்கள் செய்த தவறுகளுக்கு உடந்தையாக இருந்த மாதிரி வேறு எவருக்கும் உடந்தையாக இருந்ததில்லை.நேருவின் பெண்பித்து, கோழைத்தனத்தை மூடி மறைக்க இந்திய அரசு இயந்திரம் ஒருவிதமான இரும்புத்திரையையே உருவாக்கி வைத்திருந்தது. இந்திராகாந்தியின் அந்தரங்க வாழ்க்கை, அப்புறம் ராஜீவின் இமேஜைக் காப்பாற்றுவது என்பதில் காட்டிய முனைப்பில் ஒரு சிறு பகுதியைக் கூட இந்த தேசத்தின் கௌரவத்தை காப்பாற்றுவதற்கு எடுத்துக் கொண்டதில்லை.

    பிரதமர் வேறு யாருடைய கைப்பாவையாகவோ இருக்கிற, டம்மிப் பீசாக இருக்கும்சமயங்களில் அவசியமே இல்லைதான்!

    ReplyDelete
  5. ஜெயப் பிரகாஷ் நாராயணனுடன் அண்ணா ஹசாரேவை சேர்த்ததில்......

    இரண்டு பேருக்குமே பொதுவான பலவீனம் ஒன்று இருக்கிறது! ஜெயமோகன் கூட சமீபத்தில் வினோபா, ஜெயப்ரகாஷ் நாராயணன் இருவரைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தாரே!

    அதேபோல, அவர்கள் இருவரைத் தவிர இந்திய அரசியலில், ஊழலை ஒரு முக்கியமான பிரச்சினையாகத் தொட்டு, வேறு எவரும் இயக்கம் நடத்தியதில்லை என்பது இருவருக்கும் உள்ள பொதுவான ஒற்றுமை.

    ReplyDelete
  6. அன்னா ஹசாரே மகா அல்பம் என்று நினைக்கும்படி வைத்துவிட்டார். ஜெயபிரகாஷ் நாராயணின் சட்டைப் பைக்குள் நிறைய குப்பை உண்டு என்றே நினைக்கிறேன் ஸ்ரீராம்.

    ReplyDelete
  7. //கடைசிவரை கொந்தளித்துக்கொண்டே இருந்தார் ஜெ.பி. புரட்சிகரமனநிலையை இழக்கவே இல்லை. ஆன்மீகமான எதிலும் அவரால் அமர முடியவில்லை. கடைசிவரை அவர் அணையவில்லை. ஆகவேதான் தன் தந்தையிடம் பெருமதிப்புக் கொண்ட குடும்பநண்பராக இருந்தாலும் ஜெ.பி.யை இந்திரா சிறையிலடைத்தார். சிறுநீரகக் கோளாறு கொண்டிருந்த ஜெ.பி. சிறையில் சாகவேண்டும் என ஆசைப்பட்டார்.

    ஜெ.பி. அவரது கொந்தளிக்கும் புரட்சிகரத்தன்மையால் எப்போதும் கனவுகாண்பவராக இருந்தார். நிதானமற்றவராக, ஒட்டுமொத்தப்பார்வை அற்றவராக வாழ்ந்தார்//

    http://www.jeyamohan.in/?p=26707

    ஜெயப்ரகாஷ் நாராயணனின் சட்டைப்பைக்குள் நிறையக் குப்பைகள்? அப்பாதுரை சார்! இந்த வார்த்திகள் இன்றைய சூழலில் நிறைய தப்பான அபிப்பிராயங்களை உருவாக்கக் கூடும்! ஜேபியிடம், அப்படிக் குப்பைகள் எதுவும் இருந்ததில்லை என்று நிச்சயமாகச் சொல்லுவேன்! ஊழலுக்கு எதிராக அவர் ஆரம்பித்த சிறுபோராட்டம் தான் பெருநெருப்பாகப் பற்றிஎரிய ஆரம்பித்தது.

    ஜெபியின் இயக்கத்துக்கு உறுதுணையாக இருந்தது, இந்த இளைஞர்கள், நேரடியாகக் களத்தில் இறங்கி மக்களைத் திரட்டியது தான்!ஜெபியின் இயக்கத்தில், லட்சிய வேகம் கொண்ட மாணவர்கள் தான் முன்னோடிகள். இந்த முன்னோடிகளில் நிறையப்பேர் பின்னாட்களில் திரிந்து பெரிய ஊழல் அரசியல்வாதிகளாகவும் ஆனார்கள். உதாரணமாக ராம்விலாஸ் பாஸ்வான்!

    ஊழலைப் பிரதானமான பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அதற்குப் பின் இயக்கம் ஆரம்பித்தவர் அண்ணா ஹசாரே! மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனங்களைத்திரட்டி, அமைதியாக ஊழலுக்கெதிரான இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தவரை கிரண்பேடி, கேஜ்ரிவால் மாதிரியானவர்கள் ஹைடெக் பிரசார உத்திகளைக் கொண்டு நாடறிந்த போராட்டக்காரராக மாற்றினார்கள். படித்த நடுத்தர வர்க்கம் பரவலான ஆதரவைத் தந்ததும், அரசு அதைக்கண்டு பயந்ததும் கண்முன்னால் நடந்தவிஷயங்கள்!அப்புறம் எப்படி அதைக் களங்கப்படுத்துகிற, பிரித்தாளுகிற விதத்தில் காங்கிரஸ் கட்சியும், அரசு இயந்திரமும் செயல்பட்டன என்பதும் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிற விஷயங்கள்.

    ReplyDelete
  8. இந்தப் பதிவுக்கு ஒரு கமெண்ட் மற்றும் முந்தைய பதிவுக்கு ஒரு கமெண்ட் ஆக, இரண்டு பின்னூட்டங்கள்.... இரண்டு பதிவிலும் ஒவ்வொன்று என்று இரண்டுமே என் கண்ணுக்குத் தெரிகிறதே...! :))

    ReplyDelete
  9. தன்னைச் சுற்றிய நல்ல தீய சக்திகளை அறிந்து கொண்டால் தான் தலைவன் என்று நினைக்கிறேன். சாதாரண எளிய பாமர மக்களுக்கு நம்பிக்கை வரும் விதத்தில் நடந்துகொண்டு பிறகு மற்ற சக்திகள் உடன்படவில்லை பிரித்துவிட்டார்கள் என்று ஒதுங்குவது கோழைத்தனம், நம்பிக்கைதுரோகம் என்று நினைக்கிறேன். தனி மனிதனாக அக்கிரமங்களை எதிர்க்கத் துணிந்த காந்தியைப் பார்த்து இந்த so called தலைவர்கள் எதுவுமே கற்றுக்கொள்ளவில்லையே? காந்தியைச் சுற்றி இல்லாத "தீய" சக்திகளா? எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு தன் நிலையை விட்டுக் கொடுக்காமல் he kept pushing. அதனால் தான் சுதந்திரப் போராட்டம் வலுவடைந்து சுதந்திரம் கிடைக்க ஒரு முக்கிய காரணமானது. சின்ன குழந்தைக்குச் சாக்லெட் கொடுத்துப் பிடுங்கிக்கொண்டது போன்ற நடத்தையை வெளிப்படுத்திய ஹசாரேயை எப்படி மதிப்பது? கேவலம் ஒரு கட்சித்தலைமை தன் இலட்சியத்தின் குறுக்கே வந்ததும் விலகி ஓடும் இந்த மாதிரி தலைவர்களுக்குக் கருணாநிதியே பரவாயில்லை. ஜெபியும் அப்படித்தான். எத்தனை உன்னதமான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதை உணராமல் இந்திரா காந்தியை எதிர்ப்பதே தன் நோக்கமாகக் கொண்டு ஜனதா ஆட்சிக்கு வந்ததும் தன் குறிக்கோள் நிறைவடைந்ததாக அடங்கிய இவரை காலம் மறந்ததில் வியப்பில்லை. பொது நலம் என்ற போர்வையில் தன் சுய விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றிக் கொண்ட பொய்த்தலைவர்கள். அதனால் தான் தொண்டர்களும் பொய்யர்களாகவே வளர்ந்தார்கள்.

    ReplyDelete
  10. "ஒட்டுமொத்தப் பார்வையற்றவர்" அழகான அடைமொழி. தமிழில் எப்படிச் சொல்வது என்று தடுமாறிக் கொண்டிருந்தேன். ஜெபி தனக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பை, இந்திய அரசாங்கத்தை நிரந்தரமாகக் காங்கிரஸ் குடும்பப் பிடியிலிருந்து விடுவிக்கக் கிடைத்த உன்னதமான வாய்ப்பை, தனிமனித வெறுப்பு ஒரு சுவர் போல் வளர்த்துத் தடுக்கவிட்டார். காந்திக்குக் கூடத்தான் தனி விருப்பு விறுப்புகள் இருந்தன.

    ReplyDelete
  11. //அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை!
    இப்பத்தான் முழுக்கப் படிச்சேன் :)
    just curious, தன்னை அடையாளம் காட்டத் தயங்குவது தவறா? ஏன் அவர்கள் ஒதுங்க வேண்டும் என்கிறீர்கள்? சொல்லவந்ததை விட சொல்லவந்தவர் முக்கியமா?

    ReplyDelete
  12. ப்ளாக்கரில் நான் நுழைந்த தருணத்தில் இங்கே திராவிடவலைப்பதிவ்ர்கள், அல்லாதவர்கள் என்று பிரித்து வன்மம் கக்கும் பின்னூட்டங்கள், பதிவுகள் நிறைய வெளிவந்து கொண்டிருந்தது. ஒரு கருத்தை, நேர்பட கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற நிறைய அற்பமானவர்கள் அனானிகளாக வந்து குட்டையைக் குழப்பிக் கொண்டிருந்த நேரம்.

    முகத்தைக்காட்டக் கூட தைரியமில்லாத இந்த மாதிரி நபர்களிடமிருந்து வருகிற விஷயங்கள் பெரும்பாலும் குப்பைகளாகவே இருந்ததும் ஏற்பதற்குத் தகுதியானதில்லை என்று முடிவு செய்ய ஒரு காரணம், ஆனால், கருத்து நேர்மையாக இருந்த தருணங்களில் அப்படியே வெளியிடாமல் அடையாளம் காட்டிக் கொள்ளாத இன்னாரிடமிருந்து வந்திருக்கிற கருத்தை வெளியிடுகிறேன் என்று சொல்லியே வெளியிட்டுமிருக்கிறேன்.மிரட்டுகிற தொனியில், அவதூறாக எழுதுகிற பின்னூட்டங்களைக் கூட நான் நிராகரித்ததில்லை. இந்த நிபந்தனை, எனக்கு தேவையற்ற உரையாடல்களைக் குறைத்திருக்கிறது என்ற அளவில் நல்லதே.

    ReplyDelete
  13. ஒட்டுமொத்தப்பார்வையற்றவர்........! அப்படி ஒட்டுமொத்தப்பார்வை உள்ள எத்தனைபேரைக் காட்ட முடியும்? We always love to see things from an acute angle, because it is more convenient!

    ஜெமோ எழுதியதை படிக்கிறேன். ஆனால், சுயசிந்தனையில்லாமல் அப்படியே ஏற்பதில்லை. காந்தி, வினோபா,ஜெயப்ரகாஷ் நாராயணன், அண்ணா ஹசாரே இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் வித்தியாசமானவர்கள். ஒரே தராசு, ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது, அதற்கு அவசியமும் இல்லை.

    காந்திஜி ஜனங்களைத் திரட்டிய விதமே அலாதி!போராட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் தன்கையை மீறிப்போய் விடாமல், ஜனங்கள் கொந்தளிப்பில் தவறான பாதையில் சென்றுவிடாமல் பார்த்துக் கொண்டார். ஜெபிக்கு அது சாத்தியமில்லாமல் போனது. அண்ணாவுக்கு, சரத் பவாரை எதிர்த்த தருணங்களில் கிடைத்த ஆதரவு ஒரு ரகம், லோக்பாலுக்காக அவர் போராடியபோது, அவரை மிகப்பெரிய காந்தீயவாதியாக மிகைப்படுத்திய அவருடைய ஆதரவாளர்களே எதிர்பார்க்காமல் கிடைத்த ஊடக கவனங்கள் வேறு ரகம்.

    ஊடகங்கள் அவரை இப்போது காலாவதியாகிப்போன ஒரு ஆசாமியாகவே பார்க்கின்றன என்ற தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது.சமாளித்து மீண்டு வருவாரா என்பது இனிமேல் தான் தெரிய வேண்டும். ஆக இவர்கள் ஒவ்வொருவரையும், அவரவர் தனித்தன்மையிலேயே பார்ப்பது தான் சரியாக இருக்குமென்று எனக்குப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. i agree. ஒட்டுமொத்தப் பார்வை ரொம்ப ரொம்பக் கஷ்டம் தான். அப்படிப் பட்டக் கண்ணோட்டம் ஒருத்தருக்கு இருந்ததே காலப் போக்கில் தான் தெரியவருது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!