" ஆழ்வார்கள் உபதேசித்தது ஒரு பொருள்தான் என்பதில் எந்த ஐயமுமில்லை. இருப்பினும் அவர்களே இதற்கு தெளிவு வழங்காததால், அவர்களுக்குப் பல நூற்றாண்டுகளுப் பின் வாழ்ந்த ஆச்சார்யர்கள் இதை தெளிவு படுத்த முயன்றனர். இவை ஒரு வகையான interpretations தான். ஆழ்வார்கள் நேரடியாக விளக்காத காரணத்தால், அவர்களுடைய சொற்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் கொள்ளக் கூடிய நிலை இன்று உள்ளது. அதனால், அனைத்துப் பொருள்களையும் அலசி ஆராய்ந்து, எப்பொருள் துளியும் முரணின்றி ஒரே இழையாக நாலாயிரம் பாசுரங்களிலும் ஒலிக்கிறதோ, அதையே ஆழ்வார்கள் திருவுள்ளமாக கொள்வதில் ஏதும் தட்டில்லை. இது அடியேனுடைய கருத்து.”
இப்படி ஒரு வாதம், சமீபத்தில் மின்தமிழ் கூகிள் குழுமத்தில், ஒரு விவாதக் களத்தில் முன்வைக்கப்பட்டது.
ஆழ்வார்கள், தெளிவாகச் சொல்லவில்லை, அதனால் தான் அவர்கள் சொன்னவற்றுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்களைக் கொள்ள வேண்டியிருக்கிறது என்கிற மாதிரி இல்லை?!
நேரடியாகக் கேட்டால், ஐயோ, நான் அப்படி அர்த்தத்தில் சொல்ல வரவில்லை என்ற பதிலே வரும் அதனால், கேட்கவில்லை.
எல்லாம் நம் "மனம்"போன போக்கில் புரிந்து கொள்வதால் வரும் வேறுபாடுகளே தவிர, ஆழ்வார்கள் தெளிவாகச் சொல்லவில்லை என்பதெல்லாம், வெற்றுச் சமாதானங்கள்.
இந்த விசித்திரத்தைப் பார்த்த பிறகு, மனம், அதன் கூறுகள், இவை பற்றிக் கொஞ்சம் சிந்திக்க நேர்ந்ததில், முந்தைய இரண்டு பதிவுகளும் சேர்த்து, இது மூன்றாவது தொடுப்பு. இதில், அந்த விவாதக் களத்தையோ, அதில் பங்கு கொண்டவர்களைப் பற்றியோ சிந்திக்கப் போவதில்லை.
"மனம் ஒரு குரங்கு -மனித மனம் ஒரு குரங்கு" இப்படி சீர்காழி கோவிந்தராஜனின் கணீரென்ற குரலில் ஒரு திரைப் படப் பாடல் நினைவுக்கு வருகிறதா?
இந்த மனம் என்பதென்ன, இது எதற்காக நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது, இது உண்மையிலேயே நம்பத் தகுந்தது தானா இப்படியான கேள்விகள், நாம் யார் என்று தெரிந்து கொள்ள முனைகையில், அவ்வப்போது வந்து போகும். கொங்குதமிழில், "கொஞ்சம் மண்டை காஞ்சப்புறம்" மறந்தும் போகும். மனம் என்ற ஒன்று, வெளியிலேயே பார்க்கப் படைக்கப் பட்ட ஒன்று, அதையே நாம் பார்க்கும் பொருளாக ஆக்கிவிட்டோமென்றால், ஒன்று, சேட்டை எதுவும் செய்யாமல் நல்ல பிள்ளை மாதிரி அடக்கமாக இருந்துவிடும்; இல்லை, வெறி பிடித்த குரங்காக, எதுவெதிலோ தாவி, நம்முடைய கவனத்தை மாற்றி விடும்! அதுவும் சரிப்படவில்லை என்றால், இருக்கவே இருக்கிறது, selective ஆக மறந்து போய் விடுகிற ஒரு நல்ல பழக்கம்!
ஒரு மத்திய மந்திரி. காந்தீயவாதியாக இருந்து சாதீயத் தலைவராகப் பேசப்பட்டவர். வருமான வரிக் கணக்கை முறைப்படி சமர்ப்பிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியினர், சரமாரியாக எழுப்பிய கேள்விகளுக்குச் சொன்ன ஒரே பதில்: "மறந்து போய் விட்டது!" மந்திரி பெயர், இப்போது பல பேருக்கு மறந்து போயிருக்கும் என்பதனால், நினைவுபடுத்துவதற்காகச் சொல்கிறேன், பாபு ஜகஜீவன் ராம்! காங்கிரஸ் கட்சியின் அந்த நாளையப் பெரும் தலைவர்.
இந்த selective amnesia அரசியல் வாதிகளுக்கு மட்டும் என்றில்லை, ஒரு சமயக் குறுகலில் நின்று பேசுகிற பலருக்கும் ஏற்படுவது தான்! தெய்வ தரிசனம் பெறுவது இவர்களுக்குமுக்கியமே இல்லை, இன்னொரு சமய நம்பிக்கை சொல்வதை மறுப்பதே தலையாய சமயப் பணி!
மனிதன் என்று சொல்லும் போதே மனதினால் ஆளப் படுபவன் என்ற ஒரு பொருளும் வந்து நிற்கும். நம்மில் பெரும்பாலானோர், மனத்தினால் ஆளப் படுபவர்களாகவே இருக்கிறோம்; மனத்தை வெற்றி கொண்டவர்கள் எண்ணிக்கை ரொம்ப சொற்பம். மனம் என்பது என்ன என்பதை பலவிதமாகப் பெரியவர்கள் நமக்குச் சொல்லி வைத்துப் போயிருக்கிறார்கள். அத்தனையையும், இங்கே விவாதிக்கப் போவதில்லை.
அறிவியல் ரீதியாகவும், மனம் என்பது என்ன என்பதைப் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன, என்ன, இன்னமும் ஒரு தெளிவான, அல்லது முடிவான கருத்து கிடைத்திருக்கிற மாதிரித் தெரியவில்லை. முந்தியெல்லாம், இந்த மாதிரி ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தேடித் தேடித் படித்துக் கொண்டிருந்தேன், இப்போது இல்லை.
பரிணாமம், பரிணாம வளர்ச்சி, டார்வினிஸம், இப்படியெல்லாம் பல விஷயங்கள், சமீப காலமாகத் தமிழ்ப் பதிவுகளில் விவாதிக்கப் படுவதைப் பார்க்கும் போது, ஒரு ஆரோக்கியமான வளர்ச்சிக்கான அடித்தளம், இணையத் தமிழில் மின்தமிழாக வளர்ந்து கொண்டிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. குறிப்பாக, தமிழ்ப் பாசுரங்களில், திருவாய்மொழியில் இந்த விஷயங்களைத் தேடும் சில குறிப்பிட்ட பதிவுகள், மிக நன்றாகவே எழுதப் பட்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
ஆனால், திருவிழாக் கூட்டத்தில் பார்க்கிற அனைத்திலும் மனதைத் தொலைத்து விட்டு, ஆச்சர்யத்துடன் அண்ணாந்து பார்க்கிற வகையிலேயே இந்தப் பதிவுகள் இருப்பது கொஞ்சம் அலுப்பாக இருக்கிறது. ஆழ்ந்து அனுபவித்து ஆழ்வார்கள், தங்களது அனுபவங்களைப் பாசுரங்களில் சொல்லி வைத்தார்கள். ஓராண் வழி எனப்படும் குருமுக உபதேசத்தின் வழியாகவே, "செய்ய தமிழ் மாலைகள் தெளிய ஓதி, தெளியாத மறை நிலங்க்கள் தெளிகின்றோமே" என்று சுவாமி தேசிகன் அருளிச் செய்தபடியே, ஆழ்வார்களது அனுபவம் கேட்பவர்க்கும் கிடைக்கும் படி செய்து வந்தார்கள்.
"முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்"
என்று வள்ளல் பெருமான் சொல்கிறபடி, அறிந்து சொன்னவருடைய அனுபவம் என்பது, நமது சொந்த அனுபவமாகிற வரையில், வெறும் கனவாகவும், கதையாகவும் தான் இருக்கும். ஒரு எல்லை வரைக்கும், அடுத்தவருடைய அனுபவம் என்பது துணை வரலாமே தவிர, ஒரு ஆதர்சமாக இருக்க முடியுமே தவிர, ஒருவருடைய அனுபவம் இன்னொருவருக்குப் பொருந்தி வராது. முழுக்கப் புரிந்து கொள்ளவும் முடியாது.
தான் பெற்ற அநுபூதியைப் பெரும் கருணையுடன், எல்லோருக்கும் உரைக்க அருணகிரிநாதர் முயன்ற போதிலும், வார்த்தைகளில் பேரானந்த அனுபவத்தைச் சொல்ல முடியவில்லை என்பதைத் திருப்புகழிலும், கந்தர் அநுபூதியிலும் பல இடங்களில் உணர முடியும்.
என்ன காரணம் என்று கொஞ்சம் நிறுத்தி நிதானமாகப் பார்க்கும் போது தான், ஆஹா, ஓஹோ என்று எதையோ காணாததைக் கண்டுவிட்ட மாதிரிக் குதித்த மனமே ஒரு எல்லைக்கு மேல், நாம் சரியாகப் புரிந்து கொண்டதாக நினைத்த விஷயத்தை, இது நிஜம் தானா, இதை விட வேறொருத்தர் சொன்னது சரியாக இருக்கும் போல இருக்கிறதே என்று, குழப்ப ஆரம்பிக்கும் விநோதத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
மனித மனம் எத்தகையது என்பதைக் கொஞ்சம் ஆராய ஆரம்பித்திருக்கிறோம்; ஆரம்பத்தில் இந்த ஆராய்ச்சி மனத்தின் உதவியோடு தான் நடக்கும். ஸ்ரீ அரவிந்த அன்னை, மனத்தைப் பற்றிச் சொல்வதைக் கொஞ்சம் பார்ப்போமா?
“The human mind is a public place open on all sides, and in this public place, things come, go, cross from all directions; and some settle there and these are not always the best. And there, to obtain control over that multitude is the most difficult of all controls.
Try to control the thought coming into your mind, you will see. Simply, you will see to what a degree you have to be watchful, like a sentinel, with the eyes of the mind wide open, and then keep an extremely clear vision of the ideas which conform to your aspirations and those which do not.
And you must police at every minute that public place where roads from all sides meet, so that all passers-by do not rush in. It is a big job. Then, don't forget that even if you make sincere efforts, it is not in a day, not in a month, not in a year that you will reach the end of all these difficulties. When one begins, one must begin with an unshakable patience.
One must say, "Even if it takes fifty years, even if it takes a hundred years, even if it takes several lives, what I want to accomplish, I shall accomplish."
-The Mother,
Col.Works centenary edition, Vol.4, pp.335-336
மனம் ஒரு கருவி தான்! இந்தக் கருவியைக் கையாளுவதற்குத் தான், எத்தனை பாடு பட வேண்டியிருக்கிறது?!
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!