Showing posts with label ஸ்ரீ அரவிந்த ஆசிரமம். Show all posts
Showing posts with label ஸ்ரீ அரவிந்த ஆசிரமம். Show all posts

ஜனவரி 1 பாண்டிச்சேரி ஸ்ரீஅரவிந்தாசிரமத்தின் தரிசன நாள்!

நம்மூரில் ஜனவரி முதல்நாளை ஆங்கிலப்புத்தாண்டாகக் கொண்டாடுவது ஒரு சாங்கியம், fashion, கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்துகொள்கிற மந்தைத்தனம் இப்படி என்ன வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும்! என்னைப் பொறுத்தவரை இந்தநாள் ஸ்ரீஅரவிந்தாசிரமத்தின் தரிசன நாளாகவும், ஸ்ரீ அரவிந்த அன்னையின் தரிசனநாள் செய்தியைப் பெறுகிற ஒரு திருநாளாகவும் தான் இருக்கிறது அன்னையின் ஆசி, செய்தி இவைதான் தரிசன நாளின் சிறப்பாக இருப்பது அடியவர்களுடடைய அனுபவம்!


         

ஆன்மீக உணர்வின் அடிப்படைக் காரணமாக இருப்பது உள்ளே இருக்கும் இறைவனைக் கண்டு கொள்வதற்கே!

நேற்றும் இன்றும் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இருக்கும் ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டி கட்டடத்தில், ஸ்ரீஅரவிந்தரின் சாவித்ரி மஹாகாவியத்தை அகண்ட பாராயணமாக, ஸ்ரீஅரவிந்தயக்ஞமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்துபோன வருடம்  உலகத்துக்கே பெரும் சோதனையாக, கொரோனா தாக்கம், பொருளாதார முடக்கம், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இன்னமும் அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பது என்றிருந்தாலும் எல்லா சோதனைகளைத் தாண்டி மனித இனம் மீண்டு வரவேண்டுமென்றால், தெய்வத்தின் துணையைத் தேடுவதைத்தவிர, வேறு வழியேது?

ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீஅரவிந்த அன்னை இருவரது திருவடிகளையும் சிந்தையில் வைத்துச் சரண் அடைகிறேன்/ அடைகிறோம்!  

மா மிரா சரணம் மம  ஸ்ரீஅரவிந்த சரணம் மம 

நண்பர்களுக்கு இனிய ஆங்கிலப்புத்தாண்டு தின வாழ்த்துகள்!                   

ஸ்ரீ அரவிந்தர் திருவடிகளைச் சிந்திக்க வேண்டிய தருணம் இது!

அருட்பெரும் ஜோதியாம் பொன்னொளியை பூமிக்குக்  கொண்டு வருவதற்காக பகவான் ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய உடலையே அர்ப்பணித்து மகாசமாதிக்கு எழுந்தருளிய நாள் இன்று! டிசம்பர் 5. புதுச்சேரி ஸ்ரீஅரவிந்தாசிரமத்தில் அடியவர்கள் கூடி சமாதி அருகே கூட்டுத் தியானம் செய்கிற, தரிசன நாளாகவும்  இன்று டிசம்பர் 5 இருக்கிறது. இன்றைய தரிசன நாள் செய்தியாக!


ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய யோகம் பூர்த்தியாவதற்கு தன்னுடைய உடலையே த்யாகம் செய்த நாள் இன்று. டிசம்பர் 5.


அருட்பெருஞ்சோதி என்று ராமலிங்க வள்ளலார் பெருமானாலும்,அதிமானச ஒளி என்று ஸ்ரீ அரவிந்தராலும் அழைக்கப்பட்ட அருட்பேரொளி ஸ்ரீ அரவிந்தர் உடலில் ஐந்து நாட்கள் பொன்னொளியாக இறங்கிய நாள் இன்று.

மரணம் என்பது பொய்மையின் தற்காலிக வெற்றி தானே அன்றி நிரந்தரமானது அல்ல. மரணம் என்பது வெற்றி கொள்ளக் கூடியதே. தென் தமிழ்க் கோடியில் சித்தர்களாலும், ஞானிகளாலும் மிக ரகசியமாக வளர்க்கப் பட்ட வித்யை இது. ராமலிங்க அடிகள் என்று அழைக்கப்பட்ட வள்ளல் பெருமானும், ஸ்ரீ அரவிந்தரும் சற்றேறத்தாழ சம காலத்தில் அறிவித்த உண்மை இது.

இருபத்து நான்காயிரம் வரிகளில் சாவித்திரி என்கிற தன்னுடைய பெருங்கவிதையில் ஸ்ரீ அரவிந்தர் இந்த பூரண யோகத்தின் அனைத்து அம்சங்களையும் மிக நுட்பமாகச் செதுக்கியிருக்கிறார். "கண்டவர் விண்டிலர்;விண்டவர் கண்டிலர்" என்று வழக்கில் இருந்தாலும் உரை, மனம் கடந்த ஒரு சத்தியப் பெருக்கை, தன்னுடைய யோக சாதனையில் கண்டதை சாவித்திரி எனும் மகா காவியமாக ஸ்ரீ அரவிந்தர் படைத்திருக்கிறார். 'உரை மனம் கடந்த ஒரு பெருவளி அதன் மேல் அரைசு செய்தோங்கும் அருட்பெருஞ்சோதி' என்று வள்ளல் பெருமான் கூறாமல் கூறியதை சாவித்திரி ஒரு பெரும் மந்திரமாக தன்னைப் படிப்பவர்களுக்கு பேரானந்த நிலையை அருளும் தாயின் தயவாக, நமக்கெல்லாம் வழங்கியிருக்கிறார்.

இந்தப் பெருங்கருணைக்கு எப்படி கைம்மாறு செய்ய முடியும்? எப்படி நன்றி செலுத்த முடியும்?


Om Sri Aurobindo Mirra!

Open my mind, my heart, my life

to

your Light, your Love, your Power.

In all things may I see the Divine!

கை கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதை அன்றிக்கு வேறென்ன செய்ய முடியும்?

ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவருடைய திருவடிகளிலும் எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் சமர்ப்பணம் செய்கிறேன்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

கவலைகள் தீரக் கடைக்கணருள் செய்வாய்! வடதிருமுல்லைவாயில் வைஷ்ணவியே!

கடந்து வந்த காலத்தை நினைத்துப் பார்க்க ஆயிரம் நல்ல விஷயங்கள் இருப்பதை,இந்தத் தருணத்தில் என்னையும் ஒரு பொருட்டாக ஆட்கொண்ட மகான்களை நன்றியோடு நினைத்து வணங்குகிறேன். அந்த வகையில் என்னுடைய வாழ்க்கையில் லட்சம் தீபங்களை ஏற்றிவைத்தது போல அருளொளி வழங்கிய சத்குரு அருட்கவி ஸ்ரீ சாதுராம் ஸ்வாமிகளுடைய கடைக்கணருளுக்குப் பாத்திரமான நாள் இன்று! நவம்பர் 30.


1970 களில் ஆனந்தவிகடனில் பரணீதரன் எழுதிக் கொண்டிருந்த அருணாசல மஹிமை தொடரைப் படித்துக் கொண்டிருந்ததில் ஸ்ரீ ரமணருடைய, சேஷாத்ரி ஸ்வாமிகளுடைய சரித்திரங்களோடு, சென்னையில் வடதிருமுல்லைவாயிலில் கோவில் கொண்டுள்ள வைஷ்ணவி தேவியைப் பற்றியும், சாது பார்த்தசாரதி என்றும் துறவு பூண்டபின் ஸ்வாமி அண்வானந்தா என்றும் அறியப்பட்ட மகானையும், அவருக்கு மிகவும் அணுக்கமாக இருந்த சேதுராமனாக இருந்து அருட்கவி சாதுராம் ஸ்வாமிகளான மகானைப் பற்றியும் அறிந்ததுண்டு.


சாதுராம் ஸ்வாமிகளுக்கு அருகில் இடதுபக்கம் நீலச்சட்டை அணிந்திருப்பவர் அவருடைய பூர்வாசிரமத் தமையனார் திரு எஸ் வி சுப்ரமண்யம் அவர்கள். காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதியால் திருப்புகழ் சகோதரர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டு, சிறப்பிக்கப் பட்டவர்கள். அருட்கவி சாதுராம் ஸ்வாமி, திருப்புகழைப் பாடிப் பரப்புவதிலேயே நாட்டம் கொண்டிருந்ததால்  திருப்புகழ் ஸ்வாமிகள் என்றே அழைக்கப்பட்ட     வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகளால் ஆட்கொள்ளப் பட்டு ஆசுகவியாக ஆனவர். சாது பார்த்தசாரதியால் சந்யாசதீட்சை பெற்று வைஷ்ணவி தேவியின் அணுக்கத்தொண்டராகவும் ஆனவர்.


பொறுப்பற்ற விடலையாய்க் கிடைத்த அரசு வேலை வேண்டாமெனத்  தூக்கி எறிந்துவிட்டு வீடு திரும்பியவனுக்கு என்ன மரியாதை கிடைத்திருக்கும்?  எதிர்காலத்தைப் பற்றி ஒரு தெளிவுமில்லாமல் குழப்பத்தோடு இருந்த என்னை மதுரைக்கு வருகை தந்திருந்த சாது ராம் சவாமிகளைப் போய்ப்பார்க்கத் தூண்டியது எது? வைஷ்ணவியைத் துதிக்க ஒரு வெண்பாவை அருளிச்செய்ய வேண்டுமென அவரிடம் வேண்டிக்கொள்ளச் செய்ததெது? இன்று வரை அது என்னுடைய முயற்சியால் கிடைத்ததல்ல என்பது மட்டும் உறுதியாகச்சொல்ல முடியும்! வங்கி வேலை கிடைத்தது , தந்தையின் மறைவுக்குப் பின்னால் வேதாளம் முருங்கை மரமேறிய கதையாக நாத்திகனானது,கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து ஊரைத் திருத்தப்போனது எல்லாம் பின்னால் நடந்தது. இந்தக்கதைகளை 2009, 2010 ஆண்டுப் பதிவுகளில் இந்தப்பக்கங்களிலேயே எழுதி இருக்கிறேன்.

என்செயலால் ஆனதொன்றுமில்லை என்பதையறிந்தே இறையருள் குருவருளாக இறங்கி என்னைத் தேடிவந்தது என்பதை இப்போது உணர்ந்து மெய்சிலிர்க்கிறேன்.

அருட்கவி சாதுராம் சுவாமிக்குடைய தொடர்பு, எனக்கு ஸ்ரீ ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள், சாது பார்த்தசாரதி, என்று ஒரு கிளையாகவும், நாயனா என்று ரமணராலேயே அழைக்கப்பட்ட காவ்யகண்ட கணபதி முனி, சின்ன நாயனா கபாலி சாஸ்திரிகள் எனவிரிந்து இன்னொரு கிளை பரந்து  ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் வரை எனக்களித்து இருப்பது  தற்செயலானதுதானா? 

சித்தர் மரபில் ஸ்ரீ சித்தராஜ ஸ்வாமிகள், அவதூத சன்யாசியான சேந்தமங்கலம் தத்தாஸ்ரமம் ஸ்ரீ க்ருஷ்ணானந்தர் என்று வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் பலப்பல மகான்கள் தோன்றும் துணையாக எனக்கு அருள்பாலித்திருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் முன்னோடியாக சதகுரு சாதுராம் ஸ்வாமிகள் என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில், விளக்கேற்றி வைத்திருக்கிறார்.

கார்த்திகை தீபத்திருநாளான இன்று சாதுராம் ஸ்வாமிகளை தீப மங்கள ஜ்யோதி நமோ நம:  என்கிற அருணகிரி நாதருடைய திருப்புகழ் வரியொன்றைச் சொல்லியே வாழ்த்தி, வணங்கிச் சரணடைகிறேன்.     

குருவருள் பரிபூர்ணமாக நம் எல்லோருடைய மனம், ஜீவன், கரணங்களிலும் நிறைந்து வழிநடத்தட்டும்.          

ஸ்ரீ அரவிந்த அன்னையின் தரிசன நாள் செய்தி!

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு எனக்கு எந்தவிதமான தேவையோ காரணங்களோ இருந்ததே இல்லை. ஆனாலும் சமூகத்திலும் பணிச் சூழலிலும் சம்பந்தமே இல்லாத ஒன்றை, வாயளவில் வாழ்த்தைப் பரிமாறிக் கொள்கிற அர்த்தமற்ற சாங்கியத்தைக் கூட, ஒரு ஆன்மீக அனுபவமாக, உள்ளார்ந்து அனுபவிக்கிற ஒன்றாக ஸ்ரீ அரவிந்த அன்னை ஏற்படுத்தித் தந்திருக்கிறாள். புதுச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசனநாளாக ஜனவரி 1 இருக்கிறது.

  இன்றைய தரிசனநாள் செய்தியின் முகப்பு 

ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் முழுப்பொறுப்பையும் கொடுத்து விட்டு ஸ்ரீ அரவிந்தர் தனிமையில் மோனத் தவம் செய்ய ஆரம்பித்தது, 1950 டிசம்பரில்  அவர் தன்னுடைய உடலை அதிமானச ஒளி இந்தப்பூமியில் நிலையாகத் தங்குவதன்பொருட்டு தியாகம் செய்தது வரை தொடர்ந்தது. ஆசிரமத்தில் சாதகர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கேயே தங்கியிருந்தவர்களாக ஆனாலும், நாட்டின் பலபகுதிகளிலிருந்தும் ஸ்ரீ அரவிந்தரை சேவிக்க வந்த அன்பர்களானாலும், குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே ஸ்ரீ அரவிந்தரை தரிசிக்க முடிந்தது. ஆரம்பத்தில் மூன்று நாட்களாக இருந்த தரிசன நாட்கள் (Feb 21 ஸ்ரீ அன்னையின் பிறந்த தினம், Aug 15 ஸ்ரீ அரவிந்தர் பிறந்த தினம், Nov 24 சித்தி தினம்)     பின்னால் நான்கு நாட்களாக, ஸ்ரீ அரவிந்த அன்னை பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்க வந்த நாளும் சேர்க்கப்பட்டது. இந்தப்பட்டியலில் ஜனவரி 1 காணோமே என்று தேடவேண்டாம். ஜனவரி 1 ஆசிரமத்தின் தரிசன நாளாகவும் ஆனது பிற்பாடு.
    

இது இன்றைய தரிசன நாள் செய்தி. ஆரம்ப நாட்களில்  ஸ்ரீ அரவிந்தர் அன்னையைத் தேடி வருகிற சாதகர்கள் ஒவ்வொருவருக்கும், அவரவர் பக்குவத்துக்கு ஏற்றபடி  சாதனையில் முன்னேறுவதற்கு உதவியாக சில வாக்கியங்களை ஸ்ரீ அரவிந்த அன்னை தன் கைப்பட எழுதிய கார்டுடன், மலர்களையும் பிரசாதமாக அளித்து வந்தார். பின்னால் அது அச்சிடப்பட்ட செய்தியாக எல்லோருக்கும் மலர் ப்ரசாதங்களோடு வழங்கப்பட்டது. இன்றும், முன்னாட்களில்  அப்படி சாதகர்களுக்கு வழங்கப்பட்ட செய்தியே தரிசன நாள் செய்தியாக random ஆகத்தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.



OM Sri Aurobindo Mira

Open my mind, my heart, my life

to your Light, your Love, your Power. In all

things may I see the Divine.

1938 இல் தியானிப்பதற்கு ஒரு மந்திரம் வேண்டும் என்று வேண்டிய அன்பர் ஒருவருக்கு ஸ்ரீ அரவிந்தர் தன் கைப்பட எழுதி அருளிய மந்திரம் இது!

மா மிரா சரணம் மம   ஸ்ரீ அரவிந்த சரணம் மம 

இவையே இன்றைய நாள் முழுதும் பிரார்த்தனைக்கான மந்திரங்கள்! வாழி நலம் சூழ!   

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் இன்று தரிசனநாள்! செய்தி

புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ஜனவரி 1, தரிசன நாள் செய்தி! இறையருள் நம்முடன் இரவு பகல் என எல்லாநேரத்திலும் கூடவே இருப்பதை . அமைதியாக, உள்முகமாகப் பார்க்கப் பழகினால் கண்டு கொள்ள முடியும். இந்த வருடம் முழுவதும் இதுவே நம்முடைய அனுபவமாகவும் இருக்கட்டும் என அன்போடு ஆசி வழங்குகிறார் ஸ்ரீஅரவிந்த அன்னை   
     






இதைவிட அற்புதமான துவக்கம் வேறு உண்டா என்ன?! நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளுடன்!


அன்னை என்னும் அற்புதப் பேரொளி

அன்னை என்னும் அற்புதப் பேரொளி, பூமிக்கு வந்த நாள் பிப்ரவரி 21, 1878.
பிப்ரவரி பிறந்தாலே, அன்னையின் அன்பர்களுக்கு ஒரு இனம் புரியாத பரவசம், எதிர்பார்ப்பு மிகுந்து காணப்படும்.அன்னை சரீரத்தில் இருந்த நாட்களில், அவளது பாதங்களில் விழுந்து வணங்கி, அவள் தரும் தரிசன நாள் செய்தியுடன், மலர்களைப் பிரசாதமாக பெறுவதற்காக ஒருவிதத் தவம் ஆரம்பித்து விடும்! அன்னை இன்றைக்கு ஸ்தூல சரீரத்தில் இல்லை என்ற போதிலும், அவளுடைய சாந்நித்தியத்தை உணருகிற பேறு அவளது குழந்தைகளுக்கு இன்றைக்கும் கிடைக்கிறது. 
 
 
நாளைக் காலையில், புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான அன்பர்கள் வரிசையில் காத்திருந்து பெறுகிற தரிசன நாள் செய்தியின் முகப்புப் பக்கம் இது!
 தரிசன நாள் செய்தியின் உள்பக்கம் இது!
அன்னை-ஸ்ரீ அரவிந்தர் சமாதி மீது வைக்கப்பட்ட மலர்களுடன் அன்பர்களுக்குப் ப்ரசாதமாகக் கிடைக்கு
ம். அன்னையின் ஆசியைக் கோரிக் கடிதம் எழுதுகிறவர்களுக்கும் சில வாரங்களுக்குக் கிடைக்கும்!நேரில் செல்கிற அன்பர்கள், ஸ்ரீ அன்னையின் அறைக்கும் சென்று வர நாளை அனுமதிக்கப்படுவார்கள்.காத்திருந்து, ஸ்ரீ அன்னையின் தரிசனத்தை அனுபவிக்கக் கொடுப்பினை உள்ளவர்களுக்குக் கிடைக்கும் அனுபவமே அலாதி!

எங்கிருந்து அழைத்தபோதிலும்,அங்கே நானிருப்பேன், பிரார்த்தனைகளைச் செவிமடுப்பேன் என்று ஸ்ரீ அன்னை சொல்லியிருக்கிறார்.  அதை அனுபவபூர்வமாக உணர்ந்த அன்பர்கள் ஏராளம்!அன்னையை  புதுச்சேரி சென்று சேவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஒருபக்கம் இருந்தாலும், அந்தக் குறை தெரியாத வண்ணம் அவளது அருள் எப்போது அடியவர்களைக் காத்து நிற்கிறது.

மா மிரா சரணம் மம! ஸ்ரீ அரவிந்த சரணம் மம!

ஓம் ஆனந்தமயி, சைதன்ய
மயி, சத்யமயி பரமே!