Showing posts with label சுய முன்னேற்றம். Show all posts
Showing posts with label சுய முன்னேற்றம். Show all posts

ஜெயிக்கலாம் வாங்க....!


Self what ?

இப்படி மார்க் சன்பார்ன்  ஒரு பகிர்வில் எழுப்பியிருந்த கேள்வி, கொஞ்சம் யோசிக்க வைத்தது.

தன்னை மையப்படுத்தித் தன்னிலேயே மூழ்கிக் கிடப்பதும் (Self absorption), தன்னைப் பற்றிய சிந்தனையும் (Self reflection) ஒன்றாகிவிடுமா என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

தன்னைப் பற்றிய யோசனைகளிலேயே மூழ்கிக் கிடப்பதென்பதென்ன? தன்னைத் தவிர அது வேறெதையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. எல்லாமே தான், தனது என்ற ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே முடிந்து போய் விடுகிறது! ஒரு பாயைச் சுருட்டி வைத்திருப்பது  போல சுருண்டு குறுகிக் கிடப்பது தான் என்கிறார். ஒரு உதாரணமாக,பயணம் செய்யும்போது, எவரும் அடுத்தவருக்கு இடைஞ்சலாக இருக்குமோ என்றெல்லாம் கவலைப்படாமல், அல்லது அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய சௌகரியங்களை மட்டும் நீட்டிக் கொள்ள முயற்சிப்பதுபோலத் தான்! இப்படிப்பட்ட  மனோபாவம், தன்னுடைய சுயநலத்தை மட்டும் எல்லா வகையிலும் முன்னிறுத்திக் கொள்வது தான்!

சுற்றிக் கவனித்துப் பார்த்தோமேயானால், நம்மில் பெரும் பாலானோரிடம் இப்படிக் குறுக்கிக் கொள்கிற குணம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். கொஞ்சம் தன்னையே கவனிக்கப் பழகினோம் என்றால், குறுக்குவதில் இருந்து விடுபடவும் முடியும்.

தன்னைக் கவனிப்பது, தன்னைப் பற்றிய சிந்தனை என்பது இந்த சுருண்டு விடுகிற அல்லது குறுக்கிக் கொள்கிற மனோ நிலைக்கு நேர் எதிரானது.தன்னை, மற்றவற்றோடு சம்பந்தப்படுத்திப் பார்க்க முடிகிற விசாலமான பார்வையாக, புரிந்துகொள்ள முயற்சிக்கிற விதமாகத் தன்னைக் கவனித்தல், தன்னைப் பற்றிச் சிந்தனை செய்தல் என்பது பரந்து விரிகிறது. 

தன்னை மையப்படுத்தித் தனக்குள்ளேயே சுருண்டு அல்லது குறுகிப்போய் விடுவதற்குச் சரியான மாற்றாக, தன்னை மற்றவற்றோடு சம்பந்தப்படுத்தி பார்க்கப் பழகிக் கொள்வது என்பது ஒரு விசாலமான பாதையை ஏற்படுத்துகிறது இல்லையா?

இப்படி மார்க் சன்பார்ன் முத்தாய்ப்பாக இன்னொரு கேள்வியை முன்வைக்கிறார்.

சுயநலம் என்பது உயிர் வாழ்வதற்கு அடிப்படையான தேவையாக இருந்ததென்னவோ வாஸ்தவம் தான்! ஆனால், தங்களுடைய சுயநலத்திலேயே ஒவ்வொருவரும் கண்ணாய் இருந்துவிட்டால் எவருமே ஜீவிக்க முடியாது. தனித்தீவுகளாகத் தங்களை மட்டுமே முழு உலகமாக நினைத்துக் கொண்டிருந்தோம் என்றால் தீவுகளிலேயே முழுகிப்போய் விட வேண்டியதுதான்! பிழைத்திருக்க வேண்டுமானால், கொஞ்சம் பொதுநலம் கலந்த சுயநலமாக உயர்ந்தால் தான் உண்டு.

மிருகங்களைப் போல தனியாக வாழ மனிதன் படைக்கப் படவில்லை. அதனால் தான், மனிதனை ஒரு சமூகப் பிராணி என்கிறோம். மண்ணில் பிறந்த தருணம் முதல், கடைசி வரை, ஒரு மனிதன் இன்னொரு மனிதனைச் சார்ந்தே, ஒரு சமுதாயமாக இயங்கும் வகையில் தான், மிருக நிலையில் இருந்து உயர்ந்து மனிதனாக மாறிய பரிணாமம் இருக்கிறது. ஒரு கூட்டமாக, கூட்டத்தின் நலன் தன்னுடைய நலனை விட முக்கியமானதாக உணரப்படும், செயல்படுத்தப்படும் தருணங்களில் எல்லாம், அந்தக் கூட்டமும் ஜெயித்திருக்கிறது, அதில் இருந்த தனி மனிதனுமே ஜெயித்திருக்கிறான்.

அலெக்சாண்டர் டூமா என்ற பிரெஞ்சுக் கதாசிரியர் எழுதிய The Three Musketeers கதையில் ஒரு முழக்கம்! All for one! One for all! என்று வரும்!

ஒவ்வொரு தனிமனிதனுக்காகவும் அனைவரும்! அனைவருக்குமாக ஒவ்வொரு தனிமனிதனும்!

இப்படி  இருவழிப் பாதையாக உயரும்போது  அது ராஜ பாட்டையாகிறது! மாறாக ஒருவழிப்பாதையாகக் குறுக்கிக் கொண்டே போனால், சுருங்கிச் சுருங்கிக் கடைசியில் முட்டுச் சந்தாகி முடங்கி விடுகிறது!

அப்புறம் என்ன! குறுகிய பார்வையைத் தவிர்த்து, ஜெயிக்கலாம் வாருங்கள்!




 

நாளை முதல் குடிக்க மாட்டேன்! சத்தியமடி தங்கம்!.



நாளை முதல் குடிக்க மாட்டேன்! சத்தியமடி தங்கம்!.
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும்,

ஊத்திக்கிறேன் கொஞ்சம்!

சாராயக் கடையில், குடிக்க வேண்டாமென்று கணவனிடம் கெஞ்சுவாள் ஒரு பெண். அவளுடைய கணவன், அவள் தலைமேல் கைவைத்து சத்தியம் செய்து "நாளையிலிருந்து குடிக்கவே மாட்டேன், ஆனால் இப்போதைக்கு மட்டும் கொஞ்சம்.........." என்று பேசுவதாக ஒருகாட்சி.
 

நீதி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சாராய போதையில் இன்னொரு குடிகாரனைப் பார்த்துப் பாடும் இந்தப் பாடல் அந்த நாட்களில் மிகவும் பிரபலம்!  அந்த நாட்களில் ஒரு பாடல் பிரபலமாகவேண்டுமேன்றால், பாடல் வரிகளில் சொல்லியிருப்பது தெளிவாகப் புரியும்படி இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாக இருந்தது.

கவிஞர் கண்ணதாசனுடைய இந்தப் பாடல் வரிகள் பிடித்துப் போனதற்குக் காரணம், நாம் எல்லோருமே சாராய போதை தேவைப் படாமலேயே, எதையும் நாளைக்கு, நாளைக்கு என்று தள்ளிப் போடுகிறவர்களாக இருப்பது தானோ என்று அவ்வப்போது தோன்றும்! 



குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு என்ற மாதிரி, இப்படித் தள்ளிப் போடுவதான சோம்பேறித்தனம் காரியத்தையே கெடுத்துவிடுவதாக, நம்முடைய வாழ்க்கையிலேயே பல தருணங்களில் பார்க்கமுடியும். 


Procrastination! எதையும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றே தள்ளிக் கொண்டே போய், கடைசியில் எதையும் பார்க்க முடியாமலேயே போன அனுபவங்கள் எனக்கு நிறைய உண்டு! சொல்லப் போனால், என்னை என்னுடைய எதிராளிகள் எப்போதுமே தோற்கடித்ததில்லை! தோற்கடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் என்னுடைய இந்த பலவீனமே பல தருணங்களில் காலை வாரிவிட்டுக் கொண்டிருந்தது என்பது தான் உண்மை!

அப்புறம் பார்த்துக்
கொள்ளலாம் என்றோ, நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றோ இப்போது செய்ய வேண்டிய காரியத்தைத் தள்ளிப் போடுவது, எவ்வளவு மோசமானது என்று தெரிந்துமே கூட நம்மால் அதிலிருந்து விடுபட முடியவில்லையே?!


என்ன செய்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதைப் பார்க்கலாமா? 


நர்சரிப் பள்ளிகளில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப் படும் பாடல்களில் ஒன்றான, "Work while you work, Play while you play" என்பது கூட வேலைசெய்யும்போது வேளையில் கவனம், விளையாடும்போது விளையாட்டில் கவனம் என்று நேரத்தின் அருமையைஉணர்த்துவதாகவே சொல்லிக் கொடுக்கப் படுவதுதான்!

நம்முடைய கல்விமுறையில் உள்ள கோளாறும், ஒருபகுதி ஆசிரியர்களின் திறமையின்மையும் சேர்ந்து நல்ல விஷயங்கள் எதுவுமே மனதில் தங்கிவிடாமல் செய்துகொண்டிருப்பதையும், விசனத்தோடு இங்கே பதிவு செய்தாகவேண்டியிருக்கிறது.

பழக்கம், வழக்கம் என்று சொல்வோமில்லையா! எந்த ஒரு செய்கையும் முதலில், அனுபவங்களாகவோ, பிறரிடமிருந்து கற்றுக்கொள்வதாகவோ ஒரு தனிநபரிடம் இருந்து ஆரம்பிக்கும்! அப்படிப்  பயிற்சியின் முதிர்ச்சி என்றே பழக்கத்தைச் சொல்லலாம். 

வழக்கம் என்பது ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்வது. இந்த அடிப்படையை நினைவில் வைத்துக் கொண்டு, தள்ளிப் போடுவது என்பதான வழக்கம், சோம்பேறித்தனம் என்ற பழக்கமாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதில் இருந்து, விடுவித்துக் கொள்வது தொடங்குகிறது.




உதாரணமாக, மாலை நேரமாகிவிட்டால், தொலைக் காட்சி முன்னால் அமர்ந்து, அதில் வரும் மெகா சீரியல்களில் கதாபாத்திரங்கள் மூசுமூசென்று அழுது வடிவதை, பார்த்துக் கொண்டிருப்பது நேரத்துக்குப் பிடித்த கேடு என்பது நன்றாகத் தெரிகிறது. ஒரே மாதிரியான செண்டிமெண்டை வைத்துப் பிழைப்பை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள், ஒரே சினிமாவைப் படங்களாகவும், க்ளிப்பிங்க்சாகவும், பாடல் காட்சிகளாகவும் தொடர்ந்து கீறல் விழுந்த ரெகார்ட் போல ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. 

எந்த சானலை மாற்றினாலும், சற்று முன்னே பின்னே, ஏற்கெனெவே பார்த்த அதே காட்சிகள் தான் வரும் என்பதும், தலைப்பு மட்டுமே மாறியிருக்கும் என்பதும் தெரிகிறது. தெரிந்த பிறகும், அதற்குப் பின்னாலும் அதையே பார்த்துக் கொண்டிருந்தோமானால், அது முதலில் வழக்கமாக ஆகிறது. 

கவனிக்காமல் அப்படியே தொடர்ந்துகொண்டே இருந்தால் பழக்கமாகவும் ஆகி, நம்மை அடிமைப் படுத்தி விடுகிறது பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதில் தான் மனிதனுடைய தேக்கம் தொடங்குகிறது.




ஆக, நாம் வழக்கப் படுத்திக் கொண்டிருப்பதில் எது தேவையற்றது என்பதைக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அவசரம், அவசியத்தை ஒட்டி எதை முதலில் செய்ய வேண்டும், அடுத்ததாக என்ன  என்பதை வரிசைப் படுத்தித் தீர்மானிப்பதுதான் அடுத்துச் செயல் படுவதற்கான முதல்படி. 

எந்த ஒரு காரியத்தையும் அப்புறம், அல்லது நாளைக்கு என்று தள்ளிப் போடாமல், அதனதன் முக்கியத்துவத்தை ஒட்டி உடனேயோ, அடுத்தோ செய்து முடித்து விட்டு, அதற்கு அப்புறம் மிஞ்சுகிற நேரத்தைப் பொழுது போக்குவதற்காக செலவிடுவோமேயானால் நம்முடைய வாழ்க்கையில் குறிப்பிட்டு உணரக்கூடிய நல்லதொரு மாற்றத்தைக் காண முடியும்.  


இது தான் நேர மேலாண்மை! கிடைத்திருக்கும் ஒவ்வொரு வினாடியையும்  பொன்னாக்குகிற வித்தையும் இது தான்! உண்மையான ரசவாதம்!

Time Management என்று இன்றைக்கு நிர்வாக இயலில் சொல்லப் படும் கோட்பாடு, மிக மிக எளிமையானது. எல்லோராலும் செலவே இல்லாமல் உடனடியாகக் கடைப் பிடிக்க முடிவதும்,வீணாகப் போய்க் கொண்டிருக்கிற நேரத்தைப் பயனுள்ளதாகவும், நிறைவானதாகவும் மாற்றக் கூடிய வல்லமை உடையது. 


இந்த ஒத்திப் போடுகிற அல்லது தள்ளிப் போடுகிற வழக்கம்எப்படி என்னென்ன விதங்களில் ஆரம்பிக்கிறது என்று பார்க்கும் போது சில காரணங்கள் இப்படித் தெரிகின்றன,

முதலில் நமக்கு நல்ல மூடு இருக்கும்போது, அப்புறம் சரியான நேரத்தில் செய்வது என்று காத்திருப்பதுபோல ஒரு பாவனையில் ஆரம்பிக்கிறது. உண்மையில், மூடு இல்லை என்பது நமக்கு இருக்கிற தயக்கம் அல்லது நாம் தயாராக இல்லை என்பது  மட்டுமே!


முடிவெடுப்பதில்  தயக்கம், எப்படி ஒரு சரியான தீர்மானம் அல்லது முடிவுக்கு வருவது என்பதில் தெளிவின்மை, போதிய அளவு திறமையை வளர்த்துக் கொள்ளாதது இப்படி.

அமைப்பு ரீதியிலான, தெளிவான திறமை, பார்வை, பயிற்சி இல்லாதது.

எதையும்  முழுமையாக, குறையே இல்லாமல் செய்யவேண்டும்-அது முடியாவிட்டால் செய்யாமலேயே இருந்துவிட வேண்டும் என்று தத்துவம் பேசிக் கொண்டு, என்னிடம் சரியான  பயிற்சியோ சாதனங்களோ எதுவுமில்லை, அதனால் இப்போதைக்கு நான் இதைச் செய்வதாக இல்லை என்கிற மனோபாவம்..தத்துவம் என்றால் முழுமையாகத் தெரிந்துகொள்வது. என்ன காரணமோ, தத்துவம் என்பது இங்கே  தூங்கி வழிகிற தன்மையைக் குறிப்பிடுவதாகவே ஆகிப்போனது!

இப்படி எதோ ஒன்று அல்லது அதற்கு  மேற்பட்ட வடிவங்களில், அப்புறம் பார்த்துக் கொள்ளலாமே என்பது வழக்கமாகி, முற்றிப் பின்பு பழக்கமாகவும் மாறிவிடுகிறது.

இந்த விஷயத்தைச் சரியாகப் புரிந்துகொண்டால், மூன்றே படிகளில், சோம்பேறித்தனத்துக்கு  இடம் கொடுக்கும் வழக்கங்கள் எவை எவை என்று பார்த்துக் களைவதில் ஆரம்பித்து, ஒத்திப்போடுகிற அல்லது அப்புறம் பார்த்துக் கொள்ளலாமே என்பது அறவே இல்லாமல் பண்ணிவிட முடியும்!

என்னவென்று பார்க்கலாமா?


முதலாவதாக, சோம்பேறித்தனம் தொற்றிக் கொள்ளாமல் இருக்கிறோமா என்பதை அவ்வப்போது, நம்முடைய நேரம் என்னென்ன விதத்தில் செலவாகிறது, என்ன வரிசையில் செலவாகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான், தள்ளிப் போடுவது என்ற வியாதி நம்மிடத்தில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கிறதா என்பதையே புரிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக, ஆராய்ந்து சோதித்துப் பார்த்ததில், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப்போடுகிற நினைப்பு எதனால் எழுகிறது என்பதைக் கவனமாகப் பார்க்கப் பழக வேண்டும்.

மூன்றாவதாக, முதலிரண்டு கேள்விகளுக்கும் விடை கிடைத்து விட்டால், நோய் நாடி நோய்முதல் நாடி என்று, நோய்க்கான அறிகுறிகளும், எதனால் நோய் வந்தது என்பதும் தெரிந்துவிடுகிறது! அப்புறம் என்ன, நோயைக் களைவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை
செய்வதற்கு ஆரம்பித்து விடவேண்டியதுதான்!

ஆக மூன்றே படிகளில், ஒத்திப் போடும் கெட்ட பழக்கத்தைக்
களைந்துவிடலாம்! என்ன சொல்கிறீர்கள்!
oooOooo

ஈரோட்டில், நாளை பிற்பகல் பதிவர்கள்-வாசகர்கள் சங்கமமாக கூடுகிறார்கள்! கொஞ்சம் விரிவாகவே நடத்திவிட விடவேண்டுமென்ற முனைப்போடு செயல்படுகிற அமைப்புக் குழுவினருக்கும், சங்கமத்தில் சங்கமிக்கும் பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

நிறைய விஷயங்களைத் தொட்டுப் பேசவேண்டும் என்ற ஆசையோடு நிகழ்ச்சி நிரலைத்  தயாரித்திருக்கிறார்கள். மூன்றரை மணி நேரத்திற்குள் அத்தனை விஷயங்களையும் தொட்டு விட முடியுமா என்பது ஆச்சரியத்துடனான கேள்விக் குறியாக இருந்தாலுமே, வித்தியாசமான நிகழ்ச்சியாக நடத்தவேண்டும் என்ற துடிப்போடு இருப்பது புரிகிறது.

நிகழ்ச்சி நடைபெறும் இடம், நிரல் மற்ற  விவரங்களுக்கு இங்கே!

நினைவூட்டல் - பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமம்




ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லை!



 "நான் அப்படியே சாப்பிடுவேன்" "ஐ யாம் எ காம்ப்ளான் பாய்"

இந்த மாதிரிக் குழந்தைகளை மையமாக வைத்து விளம்பரப்படங்கள் நிறைய வளர்ந்திருக்கின்றன.குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப் பட்டவை என்றாலும், டார்கெட் ஆடியன்ஸ் நாம் எல்லோருமே தான். அதுவும் தவிர மார்க்கெட்டிங் துறையில், ஒரு குறிப்பிடத் தகுந்த ஆராய்ச்சி முடிவு, குழந்தைகள் எதை வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் முக்கியமான பங்காற்றுவதாகத் தெரிவிக்கிறது. இந்த வலிமையான செக்மெண்டை கவர்வதற்காகவே இன்றைய விளம்பரங்களில் மிகப் பெரும்பாலானவை, வெற்றி பெற்றவைகளாகவுமே இருப்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

நம்முடைய முடிவுகளை, தீர்மானங்களை, எண்ணங்களை, வேறு யாரோ தான் எப்போதுமே தீர்மானிக்கிறார்கள்! கொஞ்சம் நாசூக்காகச் சொல்வதானால், influences, influences all the way! இவைகள் இல்லாமல் நம்மால் சுதந்திரமாக முடிவெடுக்கவே முடியாதா? அப்படி என்ன முடிவை நாம் சமீபத்தில் எடுத்திருக்கிறோம் என்று நமக்குள்ளேயே கேட்டுக் கொண்டு விடை தேடினோமேயானால், எப்போதுமே நாம் நமது முடிவுகளை அடுத்தவரைச் சார்ந்தே எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வரும்.

இந்த அடிப்படை உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க முனைந்து விட்டீர்கள் என்றால், முதலில் ஒரு சபாஷ்!

இந்தப் பதிவு உங்களுக்காகத் தான்! அடுத்தது என்ன என்பதைக் கொஞ்சம் பேசுவதற்காகத் தான்!



சரி! அப்படி எடுக்கப் படும் முடிவுகள் எல்லாமே, சிறந்தவை தானா? அல்லது, 'ஏதோ பத்துக்கு ஒண்ணு பழுதாகாம இருந்தாலே போதும்' ரகம் தானா?

இந்தக் கேள்விக்குச் சரியான விடையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், முதலில்,

யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?

அல்லது, இதையே வேறு விதமாகச் சொல்வதானால்,

யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?


இந்த இரண்டு கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டு பிடிப்பதில் கூட அவ்வளவு சிரமம் இல்லை! அதில் இருந்து சரியான பாடங்களைக் கற்றுக் கொண்டு, செயல்பட ஆரம்பித்து விட்டீர்களேயானால், உங்களை வெல்ல யாருமே இல்லை!

'கர்நாடக'மான ஒரு பொதுத்துறை வங்கியை எடுத்துக் கொள்வோம். அதனுடைய தலைமை நிர்வாகியாக இருந்தவர், house magazine என்று ஊழியர்களோடு தொடர்பில் இருப்பதற்காக ஒரு பத்திரிக்கை வருமல்லவா, அதில், வெளிப்படையாகவே புலம்பினார். 'நம்முடைய வங்கியில் கடனுக்கு வட்டி மற்றவர்களோடு ஒப்பிடுகையில் குறைவு, சேவைக் கட்டணங்கள் மிகக் குறைவு,இப்படி எல்லா வகையிலும் மிகக் குறைவான விகிதத்திலேயே கட்டணங்கள் இருந்த போதிலுமே கூட, வாடிக்கையாளர்களோ , வருமானமோ அதிகரிக்கவே இல்லை. ஏனென்று தெரியவில்லை என்று முதல் பக்கத்திலேயே, தலைமை நிர்வாகியின் செய்தி, உடன் பணியாற்றுகிறவர்களையும் சிந்திக்க வைப்பது, செயல்பட வைப்பது, என்பதற்குப் பதிலாகத் தோற்றுப்போனவன் புலம்பலாகவேஇருந்தது.

அவரால் புலம்ப மட்டுமே முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், புலம்பல்கள் கேள்விகளாகவும், விடைகள் கண்ணெதிரிலேயே நிதரிசனமாகவும் இருந்தன.மாற்றத்தைச் சாதிக்க அவரால் முடியவில்லை, அவரைச் சுற்றியிருந்தவர்கள் விடவில்லை.அவர்கயை சரி செய்வதற்குக் கூடத் தலைமை நிர்வாகிக்கு தெரியவுமில்லை, திறமையுமில்லை!


இதில் என்ன புதிதாக இருக்கிறது? பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் இப்படித் தானே இருக்கின்றன என்று ஒதுக்கிவிடாதீர்கள். ஒரு தலைமை நிர்வாகி எப்படி இருக்கக் கூடாது என்பதை இந்த வங்கியின் தலைமை நிர்வாகிகள் பலர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.  
இதே வங்கியின் இன்னொரு தலைமை நிர்வாகி! வழக்கம் போலவே அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப் பட்டு, ஸ்டேட் வங்கியில் இருந்து, இந்த கொங்கணி வங்கியின்  தலைவராக வந்தவர். ஸ்டேட் வங்கியின் பலம்  Professional Approach!. இவர் அங்கே வளர்ந்த சூழ்நிலையே வேறு. இங்கே இந்த கொங்கணி வங்கியில் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்சாக இருப்பது மட்டுமே பெரிய தகுதியாக இன்றைக்கும் கூட இருக்கிறது.. இங்கே இருந்த சூழ்நிலையே வேறு! தலைமை பொறுப்பேற்க வந்து, பொருந்தாமலேயே ஆகிப்போன சந்தர்ப்பங்கள் இந்த வங்கியில் சர்வசாதாரணம்! ஸ்டேட் வங்கியில் இருந்த, தொழில் தெரிந்த நிர்வாகத்தைப் பார்த்துப் பழகினவருக்கு, இந்த வங்கியில் இருந்த நடைமுறைகள்  பொருந்தாமல் போனது. தலைமைப் பொறுப்பு வெறும் பதவியில் மட்டும் தான்! உருப்படியான மாற்றம், அதற்கான வழி வகை என்ன என்பதைப் பற்றிய சிந்தனையோ, செயல் திட்டமோ இல்லாத தலைமை நிர்வாகிகளில், அவரும் ஒருவர். பெயரளவுக்கு மட்டுமே சேர்மன் அண்ட் மேனேஜிங் டைரக்டராக இருந்த இந்த மனிதர்  தென்தமிழ்நாட்டின் தலை என்று சொல்லக் கூடிய ஒரு நகரக் கிளைக்கு விஜயம் செய்தார். சுத்தம் செய்யப்படாமலேயே மேலும் மேலும் கழிவுகளைக் கூட்டிக் கொண்டிருக்கும் பொதுக் கழிப்பறை போல இருந்த அந்த வங்கிக் கிளையைப் பார்த்து அருவருப்பு அடைந்து கமென்ட் எழுதினதோடுசரி!. கிளையின் விருந்தினர் பதிவேட்டில் இப்படி எழுதி வைத்தார். "இந்தக் கிளையைப் பேசாமல் இழுத்து மூடி விடலாம்!" இந்த விமரிசனத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முக்கியமான செய்திகள் இருப்பது கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். அதைவிட, அந்தக் கிளையை சரி செய்யவோ, பரிந்துரைத்தபடி இழுத்து மூடிவிடவோ கூட அவரால் முடியவில்லை என்பது தான் மிகப் பெரிய நகைமுரண்!

இந்த நிகழ்ச்சி விவரணத்தில் நாம் உடனடியாகப் புரிந்துகொள்ளக் கூடியதில், முதலாவதாக, விமரிசனம் எழுதியவர் தலைமை நிர்வாகியாகவே இருக்க லாயக்கற்றவர்.

இரண்டாவதாக, அவர் விரும்பிய மாற்றம் என்ன என்பதைத் தானும் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல், உடன் பணியாற்றுபவர்களுக்கும் புரிய வைக்க உருப்படியான முயற்சி எதையுமே செய்யாமல், இப்படி மாற்றத்திற்காக உழைக்காமலேயே, 'மாற்றம் வேண்டும்' 'மாற்றம் வேண்டும்' என்று அரசியல் வாதிகள் மாதிரியே வெறும் உத்தரவுகள் மட்டுமே போடத் தெரிந்த வெத்துவேட்டு. இந்த மாதிரியான வெத்துவேட்டுக்கள், தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தையுமே பொட்டல் காடாக்க மட்டுமே தெரிந்தவர்கள்.

மூன்றாவதாக, இந்தப் பொதுத்துறை வங்கி, தலைமைப் பண்பு என்றால் என்னவென்றே அறியாத ஒரு முட்டாள்களின் சுவர்க்கம். தலைமை தாங்குவதில் வெற்றிடம் ஏற்படும்போது, அடுத்தடுத்துப் பொறுப்புக்களைச் சுமக்க முன்வரத் தயாராக இல்லாத தண்டங்களை மட்டுமே கொண்டது.

இன்னும் நிறைய அடுக்கிக் கொண்டே போக முடியும். அனால், இந்தப் பதிவு, புள்ளிராசா வங்கியைப் பற்றியது அல்ல என்பதால், இங்கேயே நிறுத்திக் கொள்வோம். நாம் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்களேவேறு!

யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
சந்தையில் பொருட்களை வாங்குவதில், பெரியவர்களை விட குழந்தைகள் எடுக்கும் முடிவே அதிகமாக இருக்கிறது என்பதை சர்வே எடுத்துத் தெரிந்து கொண்ட விளம்பர நிறுவனங்கள், தங்களுடைய பொருட்களை, குழந்தைகளை, இளம் வயதினரை மையமாகக் குறிவைத்தே விளம்பரம் செய்யப் பழகிக் கொண்டு விட்டன. இதை, உங்களுடைய வீட்டில், பல தருணங்களில், சொந்த அனுபவமாகவுமே பார்த்திருக்கலாம்!

இப்படியே, இந்தக் கேள்வியை இன்னமும் விரிவுபடுத்திப் பாருங்கள்! நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், யாராலேயோ தீர்மானிக்கப் படுகிறது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதை உணர்வதே இல்லை, ஆனாலும் பழக்கப் பட்டுப் போய்விட்டது! கொஞ்சம் வேடிக்கையாக இல்லை?

ஆனால் அது தான் உண்மை! பிறர் சொல்வதை கேட்க வேண்டாம் என்பதற்காக இல்லை, அதை ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறோம் பாருங்கள், அதைச் சொல்வதற்காகத் தான் இது! மந்தைத்  தனம் என்பது இது தான்! ஆறாவது அறிவு, பகுத்தறிவு என்பதெல்லாம் பெயருக்குத் தான்! வறுமையே வெளியேறு! சிங்காரச் சென்னை மாதிரிவெற்று வார்த்தைகள் தான்!

ஆறாவது அறிவு, பகுத்து அறிவது என்பதெல்லாம், கொஞ்சம் சுயசிந்தனை, சுய முயற்சியோடு, எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கி, கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றறியேன் என்ற அளவோடு நின்று விடாமல், விடைகளையும் தேட முயற்சிப்பவர்களுக்கு மட்டும்தான்!


அடுத்து, யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? இந்த கேள்வியோடு சேர்த்துப் பார்க்கும் போது தான் நம்முடைய உழைப்பு, முயற்சிகள் எந்த அளவுக்கு கடலில் கரைத்த பெருங்காயம் போல வீணாகிக்  கொண்டிருக்கிறது என்பதையே புரிந்து கொள்ள முடியும். மறுபடியும், புள்ளிராசா வங்கியையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்! அங்கே எல்லோரையும் திருப்திப் படுத்தக் கடுமையாக செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள். ரிசல்ட், வேலை செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று எவரையுமே திருப்திப் படுத்த முடியாமல், ஒரு தலைமை நிர்வாகி புலம்பினாரே, "எல்லாமே இங்கே கம்மி தான்! ஆனாலும் வாங்க யாருமே வர மாட்டேன் என்கிறார்களே" அந்தக் கதைதான்!

எல்லோருக்கும் எல்லாமும்! சோஷலிசம்! கேட்பதற்கும், பேசுவதற்கும் மிகவுமே நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் நடைமுறையில்....? கேட்பவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் நெய் ஒழுகுமாம்! இது அனுபவத்தில் கண்டு சொன்னவர்கள் சொலவடை! கேள்வி கேட்காமல், ஆராய்ந்து பார்க்காமல், எவரோ எதற்காகவோ சொன்னதை அப்படியே நம்பிவிடுவதும் அப்படித்தான்



ப்ரீத்திக்கு நான் காரண்டீ என்று அழகாகச் சிரித்துக் கொண்டு ஒரு பெண் சொல்வதை கேள்வி கேட்காமல் பார்ப்பவர் ஏற்றுக் கொண்டு விட வேண்டும் என்கிற மாதிரித் தான் இங்கே எல்லாமும் இருக்கும். விளம்பரம் என்ற அளவில் சரிதான்! பார்ப்பவர் அளவில்...?  
சொல்லப் பட்ட மாதிரியே இருந்துதானாக வேண்டும் என்பதில்லையே!
சொல்லோ, பொருளோ,அரசியலோ, பதிவுகளில் படிக்கும் விஷயங்களோ எதுவானாலும் சோதித்துப் பாருங்கள்!
யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
இந்தக் கேள்விகளோடு, இன்னொரு கேள்வியையும் சேர்த்துக் கேட்டுக் கொள்ளுங்கள்!
இவையெல்லாம் உண்மை தானா? நம்புகிறமாதிரிச் சொல்லப்படுபவை எல்லாமே நம்பத் தகுதியானவைதானா?
ஏன், எப்படி, எதற்கு, எதனால், எதற்காக இப்படிக் கேள்வி கேட்காதவர்களுக்கு வாழ்க்கை இல்லை! வாழ்க்கையில் வெற்றியும் இல்லை!

உங்களுக்குக் கிடைக்கிற யோசனைகள் கூட சமயங்களில்
யாரோ ஏதோ உள்நோக்கத்தோடு எதற்காகவோ போடுகிற 'இலவசங்கள்' தான்! இங்கே சிருஷ்டியில் எதுவுமே இலவசம் இல்லை! இலவசமாக வருவதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன்! வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா அல்லது இந்த இலவசங்களே போதுமா? 

உங்களுக்கு என்ன வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அல்லது என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?



மனமது செம்மையாக....ஐந்து வழிகள்!






மனமென்னும் கருவியைக் கூர்மையாக வைத்துக் கொள்ள.....சில குறிப்புக்கள்!

எண்ணங்கள், அதாவது எண்ணுவது அல்லது நினைப்பது மிகவும் எளிது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  


உண்மையில் அப்படித்தானா?


'நினைப்புத் தானே பிழைப்பைக் கெடுக்குது' என்று அனுபவசாலிகள் பட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். எதையோ காமாசோமா என்று குழப்பமாக நினைத்துக் கொண்டிருப்பது ஒரு ரகம். தெளிவாக, விவரமாக நினைக்கப் பழகுவது என்பது வேறு ரகம். நினைப்பில் ஓடுவதை ஆராய்ந்து, அதைத் தெளிவாகவும் சொல்லவேண்டும் என்றால், பரீட்சைக்குத் தயாராகிற ஒருவன் பென்சிலைக் கூர்மையாக வைத்திருப்பது போல, மனத்தையுமே கூர்மையாக வைத்திருக்கப் பழக்க வேண்டும். கொஞ்சம் கடினமானது மாதிரித் தெரிந்தாலுமே, பழகப் பழகச் சித்திரம் வரைவது கைவருவது போலவே, மனத்தைக் கூர்மையாக வைத்திருக்க உதவும் கருவி! பயிற்சி என்பது, யானையை அடக்கி வைக்க உதவுகிற அங்குசம் போலமிகவும் சிறிது! உபயோகமோ பெரிது. இப்படி மனத்தை ஆராய்கிற பயிற்சிகள், பழக்கங்கள் எல்லாம், மனத்தைப் போலவே  பரந்து விரிகிறதாகத் தான்  இருக்க வேண்டும் என்பதில்லை, சின்னச் சின்னப் பயிற்சிகள் தான்! தொடர்ந்து ஈடுபாட்டுடன் செய்வது என்பது  இந்த சின்ன அங்குசமே. அடங்க மறுக்கும் மனத்தை அடக்கியாளும் வலிமையான கருவி 


Consistency! Continuity! Concentration!

முதலில், ஒரு விஷயத்தை உண்மை என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?


முதலில், உண்மை என்பது ஆரம்ப நிலைகளில், உணர்ச்சிகளால் தேடப்படுவது. உணர்ச்சிபூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும்பொது, திரித்துச் சொல்வதும் ஆரம்பமாகிவிடுகிறது. திரித்துத் திரித்துக் கடைசியில் உண்மையை நேரெதிரான திசையில் பார்க்க முயல்கிறோம்.என்பதைவிட உண்மையைத் தவறவிட்டு விடுகிறோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில், அடிக்கடி நமக்கு "தெரிந்த" விஷயங்களைக் கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டு அதில் எந்த அளவு ஆதாரத்தோடு இருக்கிறது, உணர்ச்சிகள் எந்த அளவுக்கு புகை மூட்டம் போட்டிருக்கிறது என்பதைப் பார்க்கப் பழக வேண்டும்.



அடுத்ததாக, நாம் ஏன் சில விஷயங்களை உண்மையென்று அப்படியே நம்பிவிடுகிறோம்


முதல் பாராவில் சொன்னது போல, நம்முடைய அபிப்பிராயங்கள் பெரும்பாலும் அப்படியே ஸ்வீகரிக்கப்படுவது, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படாதது.மனத்தைக் கூர்மையானதாக்க, நம்முடைய அபிப்பிராயங்களையும், இது இப்படித்தான் என்று ஆராயாமலேயே முடிவு கட்டிவிடுகிறோமே, அதையும் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்குங்கள்!


மூன்றாவதாக, எந்த ஒரு விஷயத்தையுமே, எவ்வளவு சாமர்த்தியமான வாதத்திறமையினால் சொல்லப் பட்டிருந்தபோதிலுமே கூட,அப்படியே  உண்மை என்று எடுத்துக் கொண்டு நம்பி விட வேண்டாம்.வாதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கிற காரணங்கள், உள்நோக்கம்  என்ன என்று தேட முயலுங்கள்உன்னதமான வாதத் திறமையினால், மட்டமான கருத்துக்களைக் கூட உண்மையாக்கிவிட முயற்சி நடக்கிறதா என்பதைப் பாருங்கள்


நான்காவதாக, எங்கே வித்தியாசம் நூலிழை மாதிரி ஆரம்பித்துப் பெரிதாகிறது, எப்படி உண்மையல்லாததும், பொய்களும்  உண்மை போலச் சித்தரிக்கப்படுகிறது என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தவறானசெய்திகள், பிழையான செய்திகள், பொய்யான செய்திகள் என்பதில் இந்தப் பொய்யான செய்தி இருக்கிறதே, இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, திரித்துச் சொல்லப்படுபவை. ஆரம்பத்திலேயே இனம் கண்டு பிரித்து வைக்கத் தெரியாவிட்டால், தடம் பிறழ்ந்து உண்மையை விட்டு வெகுதூரம் விலகி விடுவோம்.இந்த தேசத்தின் வரலாறு, இப்படித் தான் கொஞ்ச கொஞ்சமாகத் திரிக்கப்பட்டு, உண்மையல்லாததெல்லாம் உண்மைகளாகச் சொல்லப் பட்டு வருகிற பரிதாபம் போல ஆகி விடும்.


ஐந்தாவதாக, எந்த ஒரு கருத்தின் தாக்கத்தைப் பற்றியும் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் நல்லது. சில விஷயங்கள் மேலோட்டமாக சுவாரசியமாக இருக்கும், ஆனால் சிறிதுகூடப் பயன்படாது. வேறு சில விஷயங்களோ, மிகச் சாதாரணமாக இருக்கும், ஆனால் மிகப் பெரிய உயரத்துக்கு நம்மை இட்டுச் செல்வதாகக் கூட அமைந்துவிடும்



தலைமைப் பண்பு, சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்களை, பதிவுகளைத் தேடித் படிக்கிற பழக்கம் எனக்குண்டு என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் நண்பர் ஒருவர் மார்க் சன்போர்ன் என்பவர் எழுதிய சுய முன்னேற்றக் குறிப்புக்கள், பதிவுகளில் இருந்து இந்தப் பகுதியை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். சுவாரசியமாக இருந்தது. உபயோகமாகவும் இருந்தது என்பதால் இங்கே, கொஞ்சம் விரிவான மொழிபெயர்ப்பாக, எல்லோருக்கும் பயன் படட்டும்என்பதற்காக!

மனமது செம்மையானால்
, மந்திரம் செபிக்க வேண்டா என்று மனம் தன்னுடைய முழு ஆற்றலையும் நல்லவிதம் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த நிலைக்குமுன்னோட்டமாக  இந்த ஐந்து வழிகளைக் கொஞ்சம் கடைப்பிடிக்க முடிகிறதா, உபயோகமாக இருக்கிறதா என்று சொல்லுங்களேன்