திங்கட் கிழமைச் சிந்தனைகள்! மாற்று மருத்துவம்...!


இந்தப் பக்கங்களில், போலி மருந்துகள், அலோபதி மருத்துவத்தில் உள்ள குறைபாடுகள், மருத்துவர்களின் முறையல்லாத பரிந்துரைகள், உதாரணமாக ஓவர்டோஸ்,  அரசின் மெத்தனம், மருந்துக் கம்பனிகளின் கொள்ளை லாபத்திற்காகக் கொள்ளை போகும் அல்லது துச்சமாக மதிக்கப்படும் மனித உயிர்கள் குறித்துக் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.  

ஒரு பரபரப்புச் செய்தியாக, அல்லது பதிவுகளில் சூடான பதிவாக வரவேண்டும் என்பதற்காக இல்லாமல், ஒரு மாற்றுச் சிந்தனையை, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பதிவுகளின் நோக்கமாக இருந்தது. 

அலோபதி மருத்துவம் எப்போதுமே மாற்றுமருத்துவத்தை சந்தேகக் கண்ணோடுதான் பார்த்து வந்திருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால், மாற்று மருத்துவத்தை ஏற்றுக் கொண்டதே இல்லை என்பதோடு, மாற்று மருத்துவத்தைப் பயன் படுத்த நினைக்கிற மக்கள் மத்தியில் தயக்கத்தையும் தடைகளையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது.

செய்திகளில் மாற்று
மருத்துவத்தைக் குறிவைத்து நிகழும் விவாதங்கள், செலக்டிவாகக் காட்டப் படும் ஆதாரங்களை சமீப காலமாக நிறைய வருவதைக் கவனிக்க நேர்ந்தது.

ஹோமியோபதி மருத்துவம் சுத்த ஹம்பக், பயனில்லாதது என்ற ரீதியில் நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இங்கே இந்தியாவில் மாற்று மருத்துவத்தை அனேகமாக மூட்டை கட்டி வைத்து விடுவதில், அலோபதி வைத்தியமும், மருந்துக் கம்பனிகளும் ஜெயித்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஹோமியோதியோ, அல்லது வேறு மாற்று மருத்துவ முறையையோ குறித்து இங்கே அவ்வளவு தம்பட்டம் எதிர் பிரச்சாரம் நேரடியாக வருவதில்லை.
 

homeopathy 19

 
இந்தப் படங்களைப் பாருங்கள்! ஹோமியோபதி மருத்துவத்தில் ஒன்றுமே இல்லை என்பதைப் படங்களாக! ஹோமியோபதி, பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், அது உயிரியல், ரசாயன, பௌதீக விதிகளை மீறியதாக இருக்க வேண்டும், அப்படி ஒன்று இருக்க வாய்ப்பே இல்லை என்று முத்தாய்ப்பு வைக்கிறது இந்தத் தொடர். 

முழுவதும் பார்க்க இங்கே.


பிரிட்டனில் இருந்து வெளி வரும் கார்டியன் இதழில் ஹோமியோபதி  என்பது உண்மையில்லாத, முட்டாள்தனமான பேச்சு என்று ஒரு செய்தி. ஹோமியோபதி வைத்தியமுறை ஒரு மோசடி, இங்கே, அங்கே ஆதாரங்கள் என்று கொஞ்சம் சொல்கிறார்கள்.
 
அதே கார்டியன் இதழில் நான்கு நாட்களுக்கு முன்னால் ரேச்சல் ராபர்ட்ஸ் என்ற நரம்பியல் துறையில் ஆராய்ச்சி செய்து வரும் இந்த விஞ்ஞானி வேறு விதமாகச் சொல்கிறார்.


ஹோமியோபதி பயனுள்ள மருத்துவம் தான் என்பதற்கு ஆதாரங்கள் நிறையக் கிடைத்துக் கொண்டிருந்தும், விஞ்ஞானிகள் ஏன் ஹோமியோபதி மருத்துவத்தை உண்மையில்லாதது, முட்டாள்தனமான பேச்சாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே மர்மமாக இருக்கிறது என்கிறார் இவர்.

அவருக்குத் தெரிந்த ஒரு பெண்மணி, வழமையான அலோபதி மருத்துவம் பயணிக்காமல் போன நிலையில், தன்னைக் குணப்படுத்தியது ஹோமியோபதி மருத்துவம் தான் என்று சொன்ன பொது, ஆர்வம் மேலிட அவரைத் துருவித் துருவி விசாரித்திருக்கிறார். அப்புறம் ஹோமியோபதி மருத்துவ முறையை பற்றி, அதைக் குறித்துத் தொடர்ந்து எழும் சர்ச்சைகளோடு தொடர்ந்து படித்து ஆராய்ந்திருக்கிறார். எப்படி என்று எனக்குப் புரியவில்லை, ஆனால் ஹோமியோபதி மருத்துவ முறை குணப்படுத்துகிறது என்பதை உறுதியாகச் சொல்வேன் என்றும் சொல்கிறார். ஆராய்ச்சி முடிவுகள் சொல்வதையும் மீறி, ஹோமியோபதி மருத்துவ முறை பயனளிப்பதில்லை, அதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் கிடையாது என்று ஏன் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்றும் ஆச்சரியப் படுகிறார்.

"
The facts, it seems, are being ignored. By the end of 2009, 142 randomised control trials (the gold standard in medical research) comparing homeopathy with placebo or conventional treatment had been published in peer-reviewed journals – 74 were able to draw firm conclusions: 63 were positive for homeopathy and 11 were negative


Five major systematic reviews have also been carried out to analyse the balance of evidence from RCTs of homeopathy – four were positive (Kleijnen, J, et al; Linde, K, et al; Linde, K, et al; Cucherat, M, et al) and one was negative (Shang, A et al). 


It's usual to get mixed results when you look at a wide range of research results on one subject, and if these results were from trials measuring the efficacy of "normal" conventional drugs, ratios of 63:11 and 4:1 in favour of a treatment working would be considered pretty persuasive."


"And yet the portrayal of homeopathy as charlatanism and witchcraft continues. There is growing evidence that homeopathy works, that it is cost-effective and that patients want it. As drugs bills spiral, and evidence emerges that certain drugs routinely prescribed on the NHS are no better than placebos, maybe it's time for "sceptics" to stop the witch hunt and look at putting their own house in order."

அலோபதி மருந்துகள் மட்டும் பயனுள்ளதாக எல்லாத் தருணங்களிலும் இருந்து விடுகிறதா? பன்றிக் காய்ச்சல் பரவிய போது, சரியான மருந்து, தடுப்பூசி கிடைக்கவில்லை. மருந்தின் பின்விளைவுகளால், இப்போது இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் தடுப்பூசிகளைப் பயன்படுத்த, சில மாநில அரசுகள் தயங்குகின்றன. இங்கே தமிழ்நாட்டில் சித்த மருத்துவத்தில், நிலவேம்பு இது மாதிரியான விஷக்காய்ச்சலுக்கு சரியான மருந்தாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் கூடக் கிடைக்கிறது என்று கேள்விப்படுகிறேன்.

இந்தியச் சூழ்நிலைகளில், இங்கே உள்ள ஊழல் அரசியலில் மனித உயிர்கள் துச்சமாகவே மதிக்கப் படுவதும், எத்தனை பேர் செத்தால் என்ன, எனக்கெவ்வளவு கிடைக்கும் என்ற ரீதியிலான பேரங்கள் நடந்து கொண்டிருப்பது ஒருபுறம்!

கானா காப்பீட்டில் ஒரு தனியார் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் அரசிடமிருந்து  கொடுக்கப் பட்டிருக்கிறது. இதற்குக் கமிஷனாக நானூறு கோடி ரூபாய் யாருக்குப் போயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

வருடாவருடம் ஆகும் இந்தத் தண்டச் செலவில், ஆண்டு தோறும் தாலுக்கள் எல்லாவற்றிலும் நவீன மருத்துவமனைகளைக் கட்டியிருக்கலாமே என்று கேட்க நினைக்கிறீர்களா? அப்படியே கட்டியிருந்தாலும், என்ன மாறிப் போயிருக்கும்? அரசுத்துறை என்றால் லட்சியம், சமந்தம், வலம்,லட்டல் என்று ஏகப்பட்ட அ'னாக்களும்  கூடவே வந்து விடுகிறதே!


அலோபதியோ, மாற்று மருத்துவ முறையோ எதுவானாலும், நோய் நாடி நோய் முதல் நாடி என்று நோய்க்கான சரியான காரணத்தைக் கண்டறிவதில் தான்(diagnosis) குணப்படுத்துகிற விதமும் அடங்கியிருக்கிறது. இன்றைக்கு நோய்க்கான காரணத்தைத் தன்னுடைய அனுபவத்தில் கண்டறிகிற அலோபதி மருத்துவரைக் காண்பதரிது. சாதாரணத் தலைவலிக்குக் கூட, ஸ்கேன் எடுத்துப் பார்க்கிறவர்களிடம், என்ன பெரிதாக எதிர்பார்த்து விட முடியும்?

திங்கட்கிழமைச் சிந்தனையாக, கட்டுபடியாகக் கூடிய மாற்று மருத்துவத்தைப் பற்றிக் கொஞ்சம் யோசிப்போமே!

ஒரு மாற்றம் வரவேண்டும் என்ற சிந்தனையில், உங்களுக்குத் தெரிந்த தகவலையும் இங்கே பின்னூட்டங்களில் பகிர்ந்து கொள்ளலாமே!

 



  

36 comments:

  1. Nice post!

    Homoeopathi medicine vida ,english medicine sales la profit athigam athan uyarvaga solli viyaparam seykirarkal drs and pharma companies.

    ReplyDelete
  2. ஹோமியோபதி மருந்தின் சக்தி வீரியப்படுத்தப்பட்டு, ஆற்றல் என்கிற நிலையில் உயிரில், மனதில் தன் வேலையைச் செய்யும். அறிவியலுக்கு, அலோபதிக்கு இதெல்லாம் ஹம்பக்காகத்தான் தெரியும் :)

    இதனால் பயன்பெற்ற பலரை எனக்குத் தெரியும், நானும் ஹோமியோபதி மட்டும்தான்.

    ReplyDelete
  3. வாருங்கள் வவ்வால்!

    அலோபதி மருத்துவத்தின் மிகப்பெரிய இடைஞ்சலே, மருந்தின் விலை, பக்க விளைவுகள், அதிகப்படியான டோஸில் உடல் அதன் இயற்கையான நோய் எதிர்ப்புத் திறனை இழந்துவிடுவது, எல்லாவற்றுக்கும் மேலாக குணப்படுத்தும் என்ற உத்தரவாதம் நம்பகத்தன்மை இல்லாதது இப்படிப் பட்டியல் எழுதிக் கொண்டே போக வேண்டும்.

    இந்தியா மாதிரி ஏழை, நடுத்தர வர்க்க மக்களுக்குக் கட்டுபடியாகாத அளவுக்கு அலோபதி வைத்தியமும், மருந்தின் விலையும், எட்டாத உயரத்துக்குப்போய் விட்டது.

    இந்த நிலையில், மாற்று மருத்துவ முறைகளைப்பற்றித் தெரிந்து கொள்வதும், ஆதரிப்பதும் அவசியம்.

    ReplyDelete
  4. வாருங்கள் சிவா!

    ஹோமியோபதி என்பது உண்மையில்லாத, முட்டாள்தனமான பேச்சு என்ற லின்கைத்திறந்தால், வீரியப்படுத்துதல் (atomisation) என்ற ஹோமியோபதி முறையே போலியானது என்ற மாதிரி ஒரு முடிவைச் சொல்லும் சேதியைப் படிக்கலாம்.

    அம்மை முதலான நோய்களுக்குப் போடப்படும் தடுப்பூசியே இது மாதிரி வீரியம் குறைந்த கிருமி/நோய்க் காரணத்தை உட்செலுத்துவது தான்!அதை ஒப்புக் கொள்பவர்கள், இந்த வீரியப்படுத்தப்படும் முறையை நிராகரிப்பது விந்தை தான்.

    ஆனால் எல்லாவறையும் விட முக்கியமானது, நோயின் தன்மையைக் கண்டறிகிற வைத்தியனின் திறமைதான்! Diagnose செய்யத் தெரியாத வைத்தியன் எந்த முறையைப் பின்பற்றினாலும் பயனில்லை. இங்கே ஹோமியோபதி, ஒரு நல்ல மாற்று மருத்துவமாக வளரத் தவறி விட்டது. என்னுடைய கல்லூரி நாட்களில்,மலர் மருத்துவம், ஹோமியோபதி மருத்துவத்தைப் பற்றிய புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.சில ஹோமியோபதிவைத்தியர்களையும் தெரியும்.

    இங்கே மதுரை அரசு மருத்துவமனையில் அலோபதி வைத்தியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றபின், ஹோமியோபதி மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டு, தன்னுடைய வீட்டிலேயே ஹோமியோபதி வைத்தியம் செய்து வந்த ஒருவரை எனக்குத் தெரியும், தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொண்டு அவர் செய்த ஹோமியோபதி மருத்துவத்தால் பயன்பெற்றவர்கள் ஏராளம். இப்போது இறந்து விட்டார்.வேதாத்திரி பிராண்ட் குண்டலினி யோகப் பயிற்சியிலும் ஈடுபாடு கொண்டு மதுரைக் கிளைத் தலைவராகவும் இருந்தவர் அவர்.

    ReplyDelete
  5. மாற்று மருத்துவம் என்று பேசும்போது,

    முதலில், நோயின் தன்மையைச் சரியாகக் கண்டறிகிற மருத்துவரின் தொழில் ஞானம். இது அலோபதி மட்டுமல்ல, எல்லா மருத்துவ முறைக்கும் பொருந்தும்.

    அடுத்து, பரிந்துரைக்கும் மருந்து என்னென்ன விரும்பத்தகாத பக்க விளைவுகளைக் கொண்டு வரும் என்பதிலும் தேர்ச்சி, அதற்குத் தகுந்த மாதிரி மருந்தின் அளவு உட்கொள்ளவேண்டிய காலம் இவைகளைப் பற்றியும் எத்தனை பேருக்குத் தேர்ச்சி இருக்கிறது?

    எல்லாவற்றுக்கும் மேலாக மருந்தின் விலை! கலப்படம், போலி, காலாவதியாகிப்போன மருந்த இல்லையா என்பது, இப்படி நிறையக், கேள்விகளுக்கு அலோபதி மருத்துவம் இந்தியச் சூழ்நிலைகளில் என்ன சொல்கிறது?

    இதே கேள்விகளுக்கு மாற்று மருத்துவம் என்ன சொல்கிறது?

    கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!

    ReplyDelete
  6. அலோபதியில் எம்.டி பட்டம் பெற்ற அவரை நானும் நன்கு அறிவேன். வேதாத்திரி மகானும் ஹோமியோவில் வல்லுநரே..

    ReplyDelete
  7. அலோபதியில் எம்.டி பட்டம் பெற்ற அவரை நானும் நன்கு அறிவேன்"//

    நானும் அவரிடம் சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளேன்.. அவர் மனைவியும் ஹோமியோபதி மருத்துவரே...

    ReplyDelete
  8. வாருங்கள் ஸ்ரீராம்!

    ட்ராக் மாறி விடும் என்பதற்காகத் தான் டாக்டர் சேதுராமனின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மாற்று மருத்துவத்தைப் பற்றி உங்கள் அனுபவம் என்னஎன்பதையும் (சொந்த விஷயங்களைத் தொடாமல்)சேர்த்துச் சொல்லியிருக்கலாமே!

    ReplyDelete
  9. அலோபதியில் உள்ள சவுகர்யம் உடனடி நிவாரணம் போல தரும் தோற்றங்கள். நான் ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் போன்ற அனைத்து முறைகளுமே முயற்சி செய்துள்ளேன். எனது பிரச்னை ஒற்றைத் தலைவலி. நான் சொல்ல வந்த மருத்துவர் நீங்கள் சொல்பவர் அல்ல. அவரும் எம் டி அலோபதியில் முடித்து ஹோமியோபதி ப்ராக்டீஸ் செய்து வந்தார். மதுரை டி என் சேஷகோபாலன் முதல் ராசாசி மருத்துவமனையில் பணி செய்தவர்கள், மருத்துவக் கல்லூரியுல் பணி செய்தவர்கள் என்று அவரது நோயாளிகள். டாக்டர் கே வி அனந்த நாராயணன். சொக்கிக் குளத்தில் வீடும் கிளினிக்கும். சில காலம் முன்பு ஒரு விபத்தில் மறைந்ததாகக் கேள்விப் பட்டேன். மாற்று முறைகளில் நோயின் முதல் நாடி சிகிச்சை செய்வதாகச் சொல்கிறார்கள். சில சமயம் சில பக்க விளைவுகள் ஏற்படும்போது இந்த மருந்து உள்ளே சென்று நோய்க் காரணங்களைக்' கிளறி விட்டு சரி செய்கிறது என்று சொன்னார்கள். என்ன, பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். மருந்து பாதி, நம்பிக்கை பாதி... ப்ளேசிபோ என்று சொல்வார்களே அது போல...!

    ReplyDelete
  10. அது டாக்டர் அனந்த நாராயணன் தான்! நான் தான் கவனக் குறைவாக சேதுராமன் என்று எழுதிவிட்டேன். குழந்தைகளுக்கான மருத்துவத்தில், ஹோமியோபதி போல பக்கவிளைவு இல்லாத நல்ல மருத்துவம் இல்லையென்று அவரிடம் சிகிச்சைக்குத் தங்கள் குழந்தைகளுடன் போன சில நண்பர்கள் சொல்லி, ஒரு தரம் அவருடைய அறிமுகம் கிடைத்தது.

    ReplyDelete
  11. மாற்று மருத்துவ முறைகளில் எளிதில் போலிகள் கலந்து விட வாய்ப்பு உண்டு. அவர்கள் தரும் மருந்துகளில் உள்ள கன உலோகங்களால் (heavy metals) கொடுமையான வியாதிகள் வரலாம். மருத்துவரை தேர்வு செய்வதில் எச்சரிக்கை தேவை நண்பர்களே!!!!

    ReplyDelete
  12. ப்ரொபைல் விவரம் எதுவுமில்லாமல் இருப்பதும் அனாமதேயங்களும் ஒன்றுதான்! அதுமாதிரித் தங்களைக் கொஞ்சமாவது அடையாளம் தெரிவித்துக் கொள்ளாதவர்களுடைய பின்னூட்டங்களை ஏற்பதில்லை என்பதில் இன்னமும் உறுதியாகத் தான் இருக்கிறேன்.

    செந்தில்பாலன் என்ற பெயரில் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல், மாற்று மருத்துவம் குறித்து எச்சரிக்கை மட்டும் செய்திருக்கும் இந்தப் பின்னூட்டத்தை, அதில் இருக்கும் நியாயமான சந்தேகத்தை எல்லோரும் தெரிந்து கொள்வதற்காக, பதில் சொல்வதற்காக அனுமத்தித்திருக்கிறேன்.

    சில உலோகங்களை உள்ளடக்கிய ரசாயனக் கலவைகளைப் பரிசோதனைகளுக்குப் பிறகு மருந்தாகப் பயன்படுத்துவது அலோபதி உள்ளிட்ட எல்லா மருத்துவ முறைகளிலும் உள்ளதுதான். திரு.செந்தில்பாலன் சொல்வதுபோல ஏதோ மாற்றுமருத்துவ முறைகளில் மட்டும்தான் கனரக உலோகங்களைப் பயன்படுத்துவதுபோல சித்தரிப்பது தவறு. முதலில் அப்படி மிகைப்படுத்திச் சொல்வதே ஒரு தவறான கருத்தை வலிந்து திணிக்க முற்படுகிற மாதிரி இருக்கிறது.

    இந்தப் பதிவில் மாற்று மருத்துவ முறைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்ததே, அலோபதி மருத்துவம் செலவு பிடிப்பதாக, ஏழை, எளிய மக்களுக்குக் கட்டுபடியாகாத உயரத்துக்குப் போய்க் கொண்டிருப்பதில், மருந்து தயாரிப்பு என்பது கொள்ளை லாபம் பார்க்கும் வர்த்தகச் சூதாட்டமாக, போலி மருந்துகள், நிரந்தரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் ஆகிக் கொண்டிருக்கிற நிலையில் என்ன செய்ய முடியும், ஜனங்களுக்கு தேர்ந்தெடுப்பதற்கு வேறு வழிகள் இருக்கிறதா இல்லையா என்பதைப் பேசுவதற்காகத் தான்.

    அனாமதேயமாக வந்தாலும், கொஞ்சம் பிறருக்கும் பயன்படுகிற விதத்தில் தகவல்களைப் பகிர்ந்துகொண்டால், மிகவும் நல்லது.

    இந்தப் பதிவில் எந்த ஒரு குறிப்பிட்ட மருத்துவ முறைக்கும் ஆதரவாக அல்லது எதிர்த்துப் பிரச்சாரம் நடத்தும் உள்நோக்கம் இல்லை.

    ReplyDelete
  13. எனக்கு தனியாக வலைப் பக்கம் இல்லாத காரணத்தினால் ப்ரொபைல் விவரம் பதிவு செய்யவில்லை. அனாமதேயமாக வர வேண்டிய அவசியம் இல்லை. மாற்று மருத்துவ முறைகளில் நீண்ட நாட்கள் மாத்திரைகள் கழிக்க வேண்டி இருப்பதால் அதில் கலக்கப்படும் கன உலோகத்தினால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என கூறப்படுறது. நீண்ட காலம் பயன்படுத்தும் ஆங்கில மருந்துகளில் கன உலோகம் கலப்பதில்லை என்றும் கூறப்படுறது.இதைப் பற்றி விளக்கமாக தனிப் பதிவு இட்டால் நன்றாக இருக்கும். பின்னூட்டதில் வந்தாலும் "பிறருக்கும் பயன்படுகிற" தகவல்களை எதிர்பார்க்கும் தாங்கள் பதிவுகளில் அதை செய்வீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  14. திரு.செந்தில்பாலன்!

    தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாத தன்மையைத் தான் அனாமதேயம் என்று சொல்வார்கள். அடுத்து கூகிள் ப்ரொபைலில் தன்னைப் பற்றிச் சொல்வதற்கு, (குறைந்தபட்ச விவரமாவது) வலைப்பக்கங்கள் இருந்து தான் தீர வேண்டிய கட்டாயமோ அவசியமோ கிடையாது.

    உங்களை அடையாளம் காட்டிக் கொள்வதும், மறுப்பதும் உங்களுடைய விருப்பம். அதே மாதிரி, அப்படி அடையாளம் காட்டிக் கொள்ள மறுப்பவர்களுக்கு, அவர்களுடைய மறுமொழியை ஏற்பது அல்லது மறுப்பது என்பது என்னுடைய விருப்பம். இதைப் புரிந்துகொள்ள முடியுமானால் நல்லது, இல்லையேல் விட்டு விடுங்கள்!

    அடுத்தது, உங்களுடைய இந்த இரண்டு பின்னூட்டங்களிலேயே இருக்கும் முரண்பாடுகள், முன்னதில் இருந்த அழுத்தம் கேள்விக்குள்ளானவுடன் சுருதி குறைந்து "கூறப்படுகிறது" என்று யாரோ சொன்னாங்க ரீதிக்கு இறங்கிவிட்டதை உங்களால் கவனிக்க முடிகிறதா?

    நான் மருத்துவனில்லை. மருந்துத் தயாரிப்பில், விற்பனையில் உள்ளவனில்லை. ஒரு பயனாளி மட்டுமே. என்னுடைய அனுபவம், என்னுடைய உறவு, நண்பர்கள், தெரிந்தவர்கள் அனுபவம் என்ற வகையில் கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டுதான் பொதுத்தளத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறேன்.

    பதிவை இன்னொரு தரம் வாசித்துவிட்டு, நீங்கள் உங்களுடைய கருத்தாக, அல்லது உங்களுக்கு உறுதியாகத் தெரிந்தது என்னவென்று பகிர்ந்து கொள்ள முடியுமானால் நலம்.

    ReplyDelete
  15. திரு செந்தில்பாலன்!
    தேவை! மாற்று மருத்துவம் மட்டும் இல்லை, மாற்றுச் சிந்தனையும் கூட....! என்று உங்கள் பின்னூட்டத்தைத் தொடர்ந்து சிலவிஷயங்களைத் தனிப்பதிவாகவே போட்டிருப்பதைக் கவனிக்கவில்லையோ?

    ReplyDelete
  16. ////கொஞ்சம் பிறருக்கும் பயன்படுகிற விதத்தில் தகவல்களைப் பகிர்ந்துகொண்டால், மிகவும் நல்லது.///
    //உங்கள் பின்னூட்டத்தைத் தொடர்ந்து சிலவிஷயங்களைத் தனிப்பதிவாகவே போட்டிருப்பதைக் கவனிக்கவில்லையோ?///
    பயன் இல்லாத பின்னூட்டமாக இருந்தால் தனி பதிவு இட்டிருக்க மாட்டிர்கள்.பண்பான விவாததிற்கு நன்றி.

    ReplyDelete
  17. ///செந்தில்பாலன் என்ற பெயரில் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல்///
    எனது பெயரே அது தான். நானும் மதுரை தான்.

    ReplyDelete
  18. //பிரிட்டனில் இருந்து வெளி வரும் கார்டியன் இதழில் ஹோமியோபதி என்பது உண்மையில்லாத, முட்டாள்தனமான பேச்சு என்று ஒரு செய்தி. ஹோமியோபதி வைத்தியமுறை ஒரு மோசடி, இங்கே, அங்கே ஆதாரங்கள் என்று கொஞ்சம் சொல்கிறார்கள்.

    அதே கார்டியன் இதழில் நான்கு நாட்களுக்கு முன்னால் ரேச்சல் ராபர்ட்ஸ் என்ற நரம்பியல் துறையில் ஆராய்ச்சி செய்து வரும் இந்த விஞ்ஞானி வேறு விதமாகச் சொல்கிறார்.//

    நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னது வேறு
    இப்பொழுது சொல்வது வேறு

    இதில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்வது என்ன :) :)

    ReplyDelete
  19. //அலோபதியோ, மாற்று மருத்துவ முறையோ எதுவானாலும், நோய் நாடி நோய் முதல் நாடி என்று நோய்க்கான சரியான காரணத்தைக் கண்டறிவதில் தான்(diagnosis) குணப்படுத்துகிற விதமும் அடங்கியிருக்கிறது.//

    நோய்க்கான காரணத்தை கண்டறிவதினால் தான் அலோபதி பிற மருத்துவமுறைகளை விட பல மடங்கு உயர்ந்துள்ளது

    உதாரணமாக

    மூளையில் புற்று நோய் என்றாலும் தலைவலி வரும்
    hydrocephalus என்றாலும் தலைவலி வரும்
    பார்வை குறைபாடு என்றாலும் தலைவலி வரும்

    பிற மருத்துவ முறைகளில் அனைத்து தலைவலிகளுக்கும் ஒரே மருந்து தான்

    அலோபதியில் தான் காரணத்தை கண்டறிந்து வெவ்வேறு வைத்தியம்

    // இன்றைக்கு நோய்க்கான காரணத்தைத் தன்னுடைய அனுபவத்தில் கண்டறிகிற அலோபதி மருத்துவரைக் காண்பதரிது.//

    நிறைய பேர் உள்ளனர்.


    // சாதாரணத் தலைவலிக்குக் கூட, ஸ்கேன் எடுத்துப் பார்க்கிறவர்களிடம், என்ன பெரிதாக எதிர்பார்த்து விட முடியும்? //

    சாதாரண தலைவலி என்றால் என்ன
    மூளை புற்று நோயால் வரும் தலைவலிக்கு நீங்கல் வைக்கும் பெயர் என்ன

    ReplyDelete
  20. //இதனால் பயன்பெற்ற பலரை எனக்குத் தெரியும், நானும் ஹோமியோபதி மட்டும்தான்.//

    ஹோமியோபதியில் காச நோயை சரி செய்ய முடியுமா
    ஹோமியோபதியில் குழந்தை நிலை மாறி இருந்தால் அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்ய முடியுமா

    ReplyDelete
  21. //சில உலோகங்களை உள்ளடக்கிய ரசாயனக் கலவைகளைப் பரிசோதனைகளுக்குப் பிறகு மருந்தாகப் பயன்படுத்துவது அலோபதி உள்ளிட்ட எல்லா மருத்துவ முறைகளிலும் உள்ளதுதான்.//

    பரிசோதனை செய்து பயன்படுத்துவது அலோபதி
    பரிசோதனை செய்யாமலேயே பயன்படுத்துவது அலோபதியில் கிடையாது !!

    ஆனால் ஆயூர்வேத மருத்துவரிடம் சென்று பரிசோதனை விபரங்களை கேளுங்கள் பார்ப்போம்


    // திரு.செந்தில்பாலன் சொல்வதுபோல ஏதோ மாற்றுமருத்துவ முறைகளில் மட்டும்தான் கனரக உலோகங்களைப் பயன்படுத்துவதுபோல சித்தரிப்பது தவறு.//
    பரிசோதனை செய்து பயன்படுத்துவது அலோபதி
    பரிசோதனை செய்யாமலேயே பயன்படுத்துவது அலோபதியில் கிடையாது !!

    // முதலில் அப்படி மிகைப்படுத்திச் சொல்வதே ஒரு தவறான கருத்தை வலிந்து திணிக்க முற்படுகிற மாதிரி இருக்கிறது. //

    ஆனால் ஆயூர்வேத மருத்துவரிடம் சென்று பரிசோதனை விபரங்களை கேளுங்கள் பார்ப்போம்

    ReplyDelete
  22. மருத்துவர் ப்ருனோ!

    பதிவர் வால்பையன் மாதிரிக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறீர்களே! கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போவதனால் மட்டும் நீங்கள் சார்ந்த அலோபதி மருத்துவம் மட்டுமே உண்மையான மருத்துவம் என்பதை நிறுவி விட முடியும் என்று பட்டிமன்றப் பேச்சாளர்கள் மாதிரி நம்புகிறீர்களோ?

    இன்றைக்கு மத்தியப் பிரதேசத்தில் இரண்டு பெரிய மருத்துவமனைகளில், அப்பாவி நோயாளிகளை மருந்துப் பரிசோதனைக்கு எலிகள் மாதிரி சட்டபூர்வமாக அனுமதி இல்லாமல் பயன்படுத்துகிற செய்தி தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அலோபதி மருத்துவ முறையில் ஆவணப்படுத்துவது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு அந்த ஆய்வு முடிவுகள் மருந்துக் கம்பனிகளுக்கு சௌகரியப்படுகிற வகையில் திரித்தும் சொல்லப் படுகின்றன, அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யப்படுகின்றன.

    உங்களை மாதிரியே ஒரு மருத்துவர், ராபின் குக் என்பவர் The Fever என்றொரு புதினத்தை எழுதி, அதைப் பற்றிய ஒரு பதிவும், இந்தப்பக்கங்களில் போலி மருந்துகளைப் பற்றி எழுதிய தருணங்களைத் தொடர்ந்து வந்தது. எல்லாம் அறிந்தவர்களாக, கண்டுபிடிக்கப்பட்டால் கடும் தண்டனை தரும் சட்டங்கள் இருக்கும் மேற்கத்திய நாடுகளிலேயே, மருந்து நிறுவனங்கள் செய்யும் பித்தலாட்டங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இங்கே அறியாமையும் வறுமையும் அதிகமாக இருக்கும் இந்தியச் சூழ்நிலைகளில் என்னென்ன நடக்கும் என்பதையும் கொஞ்சம் யோசித்து விட்டுச் சொல்லுங்கள்! தமிழ்நட்டில் கண்டுபிடித்த போலி மருந்து விவகாரம் என்ன ஆயிற்று?.

    அலோபதி மருத்துவத்தில் சில உடனடி நிவாரணங்கள் இருக்கின்றன என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு ஆபத்துக்களும் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

    ReplyDelete
  23. இங்கே பின்னூட்டங்களையுமே கொஞ்சம் சேர்த்துப் பார்த்திருந்தால், மதுரை மருத்துவ மனையில் பணியாற்றிய ஒரு அலோபதி மருத்துவர், எம் டி பட்டம் பெற்றவர், டாக்டர் கே வி அனந்த நாராயணன், ஒய்வு பெற்றபின் தன்னுடைய வீட்டில் ஹோமியோபதி மருத்துவத்தை ப்ராக்டிஸ் செய்து வந்ததும், இங்கே குழந்தைகளுக்கான சிக்கலற்ற மருத்துவமாக அவர் ஹோமியோபதி மருத்துவ முறையை பின்பற்றி வந்ததையும் தெரிந்து கொண்டிருக்க முடியும்.

    இந்தத் தகவல் கூட நீங்கள் சுயமாகவே விசாரித்துத் தெரிந்து கொள்ளக் கூடியது தான்.

    அலோபதி முறையில் இன்றைக்கு, மாற்று மருத்துவத்தில் சரியான மாற்று இல்லாமல் இருக்கும் ஒரே பகுதி, அறுவைச் சிகிச்சை முறை ஒன்று தான்.அதுவும் கூட, காலனி நாடுகளாக்கிய மேற்கத்திய நாட்டவர்கள் பாரம்பரிய மருத்துவத்தை அடியோடு நாசம் செய்த பிறகுதானே!

    ReplyDelete
  24. /ஆனால் ஆயூர்வேத மருத்துவரிடம் சென்று பரிசோதனை விபரங்களை கேளுங்கள் பார்ப்போம்//

    இதையே எத்தனை அலோபதி முறையில் வைத்தியம் பார்ப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் என்று உங்களால் சொல்ல முடியுமா?

    எனது நண்பர் ஒருவர் எம் பார்ம் படித்தவர்,, மருந்து நிறுவனம் ஒன்றில் பார்மகாலஜி துறையைச் சேர்ந்த faculty ஆக இருந்தார்.விற்பனைப் பிரதிநிதிகளுக்குப் பயிற்சி கொடுக்கும்போது அவர் சொல்லும் ஒரு விஷயத்தை நானே நேரடியாகக் கேட்டிருக்கிறேன்."மருந்தை டாக்டர்களிடம் அறிமுகப் படுத்தப் போகும் போது ஒன்றை தெளிவாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! பெரும்பாலானவர்களுக்கு, நீங்கள் மருந்தைப் பற்றி பேசும் எதுவும் புரியாது! எம் பி பி எஸ் படிக்கும்போது பயோமெடிசினை ஒரு பாடமாகப் படிப்பதோடு சரி! அதற்கு அப்புறம் அந்த சப்ஜெக்டை நினைவில் வைத்திருப்பதே இல்லை!"

    இங்கே டாக்டர்கள் எப்படி மருந்துகளைப் பரிந்துரை செய்கிறார்கள் என்பதை ஐ எம் ஏ தலைவர் டாக்டர்கள் மருந்து நிறுவனங்களிடமிருந்து அன்பளிப்புக்களைப் பெறுவது தடை செய்யப் பட வேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்கிற அளவுக்குப் போனது கூட இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே பேசப்பட்டிருக்கிறது.

    மாற்று மருத்துவத்தில் இல்லாத, அலோபதி முறையில் மட்டும் இருக்கும் நிறுவனப்படுத்தப் பட்ட அன்பளிப்பு, ஓவர்டோஸ் அதையும் கொஞ்சம் பேசலாமே!

    ReplyDelete
  25. //நோய்க்கான காரணத்தை கண்டறிவதினால் தான் அலோபதி பிற மருத்துவமுறைகளை விட பல மடங்கு உயர்ந்துள்ளது//

    You are really joking!
    நோய் நாடி நோய் முதல் நாடி என்று நோய்க்கான காரணத்தைக் கண்டறிகிற முறை எல்லா மருத்துவ முறைகளுக்கும் பொது.

    /பிற மருத்துவமுறைகளை விட பல மடங்கு உயர்ந்துள்ளது/

    எதில்? ஒரு சாதாரணமான தலைவலிக்குக் கூட, சி டி ஸ்கேன் எடுக்கச் சொல்லி, ஏகப்பட்ட பரிசோதனைகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவழிக்க வைத்து அப்புறம் ஒன்றுமே இல்லை என்று சொல்வதிலா? இந்த மாதிரி பரிசோதனை முடிவுகளை வைத்துச் சொல்லாமல் இப்போது எத்தனை மருத்துவர்கள், தங்களுடைய சுயமான அனுபவத்தைக் கொண்டு டயக்னோஸ் செய்யத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்?

    கேள்விகள் கேட்பது ஒருவழிப்பாதை இல்லை என்பதற்காகத் தான் இத்தனையும்! இப்போது, கேள்விகளுக்கு உண்மையான விடைகளைத் தேடுவதில் சேர்ந்தே இயங்கலாமா டாக்டர்!

    ReplyDelete
  26. மருத்துவர் ப்ருனோ!

    கார்டியன் பத்திரிகையில் இரு வேறு, எதிரெதிரான நிலையில் இருந்து ஸொல்லப்பத௫த விஷயங்களுக்குமே சுட்டி கொடுத்திருக்கிறேன். ஒருவர் ஹோமியோபதி முறையை ஒன்றுமில்லாத வெற்று மருத்துவம் என்பதாகச் சித்தரிக்கிறார். இன்னொரு நரம்பியல் துறை ஆராய்ச்சியாலரோ, ஹோமியோபதி மருந்து வேலை செய்கிறது, குணப்படுத்துகிறது என்ற மாதிரிச் சொல்கிறார்.
    "And yet the portrayal of homeopathy as charlatanism and witchcraft continues. There is growing evidence that homeopathy works, that it is cost-effective and that patients want it. As drugs bills spiral, and evidence emerges that certain drugs routinely prescribed on the NHS are no better than placebos, maybe it's time for "sceptics" to stop the witch hunt and look at putting their own house in order."

    அவர் சொல்வதில் இருந்தும் சில பகுதிகளைக் கொடுத்த பிறகும் கூட....?

    இறண்டு கருத்தையும் வாசகர் படித்துப்பார்க்கட்டும் என்பதற்காகத் தான் சுட்டி கொடுத்ததே.

    ReplyDelete
  27. //கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போவதனால் மட்டும் நீங்கள் சார்ந்த அலோபதி மருத்துவம் மட்டுமே உண்மையான மருத்துவம் என்பதை நிறுவி விட முடியும் என்று பட்டிமன்றப் பேச்சாளர்கள் மாதிரி நம்புகிறீர்களோ?//

    இல்லை
    ஆனால் நீங்கள் நிறுவ முயற்சிக்கும் தவறான கருத்துக்களை எதிர்க்க முடியும் என்பதால் கேள்விகளை கேட்கிறேன்

    //இன்றைக்கு மத்தியப் பிரதேசத்தில் இரண்டு பெரிய மருத்துவமனைகளில், அப்பாவி நோயாளிகளை மருந்துப் பரிசோதனைக்கு எலிகள் மாதிரி சட்டபூர்வமாக அனுமதி இல்லாமல் பயன்படுத்துகிற செய்தி தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அலோபதி மருத்துவ முறையில் ஆவணப்படுத்துவது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு அந்த ஆய்வு முடிவுகள் மருந்துக் கம்பனிகளுக்கு சௌகரியப்படுகிற வகையில் திரித்தும் சொல்லப் படுகின்றன, அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யப்படுகின்றன.//

    இதற்கும் இந்த பதிவிற்கும் என்ன சம்மந்தம்

    //உங்களை மாதிரியே ஒரு மருத்துவர், ராபின் குக் என்பவர் The Fever என்றொரு புதினத்தை எழுதி, அதைப் பற்றிய ஒரு பதிவும், இந்தப்பக்கங்களில் போலி மருந்துகளைப் பற்றி எழுதிய தருணங்களைத் தொடர்ந்து வந்தது. எல்லாம் அறிந்தவர்களாக, கண்டுபிடிக்கப்பட்டால் கடும் தண்டனை தரும் சட்டங்கள் இருக்கும் மேற்கத்திய நாடுகளிலேயே, மருந்து நிறுவனங்கள் செய்யும் பித்தலாட்டங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இங்கே அறியாமையும் வறுமையும் அதிகமாக இருக்கும் இந்தியச் சூழ்நிலைகளில் என்னென்ன நடக்கும் என்பதையும் கொஞ்சம் யோசித்து விட்டுச் சொல்லுங்கள்! தமிழ்நட்டில் கண்டுபிடித்த போலி மருந்து விவகாரம் என்ன ஆயிற்று?.//

    உண்மைதான்

    தமிழகத்தில் போலி மருத்துவர்கள் தண்டிக்க படுவதில்லை

    ஆனால் போலிகள் என்பது அலோபதியை விட பிற மருத்துவ முறைகளில் அதிகம் என்பதே என் கருத்து

    //அலோபதி மருத்துவத்தில் சில உடனடி நிவாரணங்கள் இருக்கின்றன என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு ஆபத்துக்களும் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?//
    இல்லை. மறுக்க முடியாது

    அதே ஆபத்துக்கள் ஆயுர்வேதத்திலும் மாற்று மருத்துவத்திலும் உள்ளன என்பது தான் உண்மை

    //இங்கே பின்னூட்டங்களையுமே கொஞ்சம் சேர்த்துப் பார்த்திருந்தால், மதுரை மருத்துவ மனையில் பணியாற்றிய ஒரு அலோபதி மருத்துவர், எம் டி பட்டம் பெற்றவர், டாக்டர் கே வி அனந்த நாராயணன், ஒய்வு பெற்றபின் தன்னுடைய வீட்டில் ஹோமியோபதி மருத்துவத்தை ப்ராக்டிஸ் செய்து வந்ததும், இங்கே குழந்தைகளுக்கான சிக்கலற்ற மருத்துவமாக அவர் ஹோமியோபதி மருத்துவ முறையை பின்பற்றி வந்ததையும் தெரிந்து கொண்டிருக்க முடியும்.//
    தெரிந்து கொண்டேன்

    //இந்தத் தகவல் கூட நீங்கள் சுயமாகவே விசாரித்துத் தெரிந்து கொள்ளக் கூடியது தான்.

    அலோபதி முறையில் இன்றைக்கு, மாற்று மருத்துவத்தில் சரியான மாற்று இல்லாமல் இருக்கும் ஒரே பகுதி, அறுவைச் சிகிச்சை முறை ஒன்று தான்.அதுவும் கூட, காலனி நாடுகளாக்கிய மேற்கத்திய நாட்டவர்கள் பாரம்பரிய மருத்துவத்தை அடியோடு நாசம் செய்த பிறகுதானே!//

    நேற்று உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்துள்ளது வாசித்து பாருங்கள்

    அலோபதியே சிறந்தது என்று தெளிவாக கூறியுள்ளார்கள்

    ReplyDelete
  28. //இதையே எத்தனை அலோபதி முறையில் வைத்தியம் பார்ப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் என்று உங்களால் சொல்ல முடியுமா?//

    அனைவரிடமும் கேட்கலாம். இல்லை என்றால் இணையத்தில் உள்ளன. நீங்களே பார்த்து கொள்ளலாம்

    அப்படி தெரிந்து கொண்ட தடுப்பூசி பின் விளைவுகளைத்தானே நீங்கள் எடுத்து போட்டீர்கள்

    //எனது நண்பர் ஒருவர் எம் பார்ம் படித்தவர்,, மருந்து நிறுவனம் ஒன்றில் பார்மகாலஜி துறையைச் சேர்ந்த faculty ஆக இருந்தார்.விற்பனைப் பிரதிநிதிகளுக்குப் பயிற்சி கொடுக்கும்போது அவர் சொல்லும் ஒரு விஷயத்தை நானே நேரடியாகக் கேட்டிருக்கிறேன்."மருந்தை டாக்டர்களிடம் அறிமுகப் படுத்தப் போகும் போது ஒன்றை தெளிவாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! பெரும்பாலானவர்களுக்கு, நீங்கள் மருந்தைப் பற்றி பேசும் எதுவும் புரியாது! எம் பி பி எஸ் படிக்கும்போது பயோமெடிசினை ஒரு பாடமாகப் படிப்பதோடு சரி! அதற்கு அப்புறம் அந்த சப்ஜெக்டை நினைவில் வைத்திருப்பதே இல்லை!"//
    அது அவர் கருத்து

    //இங்கே டாக்டர்கள் எப்படி மருந்துகளைப் பரிந்துரை செய்கிறார்கள் என்பதை ஐ எம் ஏ தலைவர் டாக்டர்கள் மருந்து நிறுவனங்களிடமிருந்து அன்பளிப்புக்களைப் பெறுவது தடை செய்யப் பட வேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்கிற அளவுக்குப் போனது கூட இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே பேசப்பட்டிருக்கிறது.//

    ஐ. எம். ஏ வா, எம். சி. ஏ வா

    //மாற்று மருத்துவத்தில் இல்லாத, அலோபதி முறையில் மட்டும் இருக்கும் நிறுவனப்படுத்தப் பட்ட அன்பளிப்பு, ஓவர்டோஸ் அதையும் கொஞ்சம் பேசலாமே!//
    மன்னிக்கவும்
    மாற்று மருத்துவத்திலும் நீங்கள் கூறிய அனைத்தும் உள்ளன. நீங்களே விசாரித்து பார்க்கவும்

    ////நோய்க்கான காரணத்தை கண்டறிவதினால் தான் அலோபதி பிற மருத்துவமுறைகளை விட பல மடங்கு உயர்ந்துள்ளது//

    You are really joking!
    நோய் நாடி நோய் முதல் நாடி என்று நோய்க்கான காரணத்தைக் கண்டறிகிற முறை எல்லா மருத்துவ முறைகளுக்கும் பொது.//

    தலைவலிக்கான காரணத்தை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்று விளக்குங்கள் பார்ப்போம். எது ஜோம் என்று தெரியும்

    /பிற மருத்துவமுறைகளை விட பல மடங்கு உயர்ந்துள்ளது/

    எதில்? ஒரு சாதாரணமான தலைவலிக்குக் கூட, சி டி ஸ்கேன் எடுக்கச் சொல்லி, ஏகப்பட்ட பரிசோதனைகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவழிக்க வைத்து அப்புறம் ஒன்றுமே இல்லை என்று சொல்வதிலா? இந்த மாதிரி பரிசோதனை முடிவுகளை வைத்துச் சொல்லாமல் இப்போது எத்தனை மருத்துவர்கள், தங்களுடைய சுயமான அனுபவத்தைக் கொண்டு டயக்னோஸ் செய்யத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்?//

    நிறைய பேர். நான் உட்பட. ஆனால் மூளை புற்று நோயை கண்டறியும் ஒரு மாற்று மருத்துவ நிபுணர காட்டுங்கள் பார்ப்போம்

    //கேள்விகள் கேட்பது ஒருவழிப்பாதை இல்லை என்பதற்காகத் தான் இத்தனையும்! இப்போது, கேள்விகளுக்கு உண்மையான விடைகளைத் தேடுவதில் சேர்ந்தே இயங்கலாமா டாக்டர்!//

    கண்டிப்பாக.

    ReplyDelete
  29. //கார்டியன் பத்திரிகையில் இரு வேறு, எதிரெதிரான நிலையில் இருந்து ஸொல்லப்பத௫த விஷயங்களுக்குமே சுட்டி கொடுத்திருக்கிறேன். ஒருவர் ஹோமியோபதி முறையை ஒன்றுமில்லாத வெற்று மருத்துவம் என்பதாகச் சித்தரிக்கிறார். இன்னொரு நரம்பியல் துறை ஆராய்ச்சியாலரோ, ஹோமியோபதி மருந்து வேலை செய்கிறது, குணப்படுத்துகிறது என்ற மாதிரிச் சொல்கிறார்.
    "And yet the portrayal of homeopathy as charlatanism and witchcraft continues. There is growing evidence that homeopathy works, that it is cost-effective and that patients want it. As drugs bills spiral, and evidence emerges that certain drugs routinely prescribed on the NHS are no better than placebos, maybe it's time for "sceptics" to stop the witch hunt and look at putting their own house in order."

    அவர் சொல்வதில் இருந்தும் சில பகுதிகளைக் கொடுத்த பிறகும் கூட....?

    இறண்டு கருத்தையும் வாசகர் படித்துப்பார்க்கட்டும் என்பதற்காகத் தான் சுட்டி கொடுத்ததே.

    //

    எது முதலில் கொடுத்தது
    எது பிறகு கொடுத்தது

    இந்து பத்திரிகையில் கூட இந்தியாவின் பிரதமர் வாஜ்பேயி என்று கூறினார்கள். அது சரியான தகவல் தான். ஆனால் இன்று அதை காட்டி இன்றைய பிரதமர் வாஜ்பேயி என்றால் எப்படி

    ReplyDelete
  30. எஸ். கிருஷ்ணமூர்த்தி சார்,

    நான் பாரம்பரிய மருத்துவத்திற்கு எதிரி கிடையாது

    ஆனால் பாரம்பரிய மருத்துவம் சிறந்து என்று நிறுவ நீங்கள் முயற்சி செய்யும் போது கூறும் பல கருத்துகளை எதிர்க்க வேண்டியுள்ளது

    --

    புண்களுக்கு போவிடோன் நெபாசல்ப் போன்ற அலோபதி மருந்துக்களை விட மஞ்சள், தேன் போன்றவை நல்ல பலனளிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா

    --

    வைரல் வார்ட்களுக்கு அலோபதி முறையை விட ஒசிடெண்டாலிஸ் என்ற செடியிலிருந்து பெறப்படும் மருந்து நல்ல பலனை அளிக்கக்கூடியது

    --

    இது போல் சொல்லிக்கொண்டே போகலாம்

    --

    ReplyDelete
  31. மருத்துவர் ப்ருனோ!

    உங்களுடைய தொழிலின் மீது நீங்கள் கொண்டிருக்கும் அக்கறையைப் புரிந்து கொள்கிறேன். என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் மருத்துவர்கள், அவர்களில் பலர் ஸ்பெஷலிஸ்டுகள், உண்டு. மருந்து விற்பனைத்துறையில் இருக்கும் நண்பர்கள் வழியாக, மதுரையில், அப்புறம் வேறு சில ஊர்களில் இருக்கும் மருத்துவர்களிடம் இருக்கும் விசேஷமான குணாம்சங்களை அறிந்தே இருக்கிறேன்.

    உதாரணமாக, ப்ரைவேட் ப்ராக்டிஸ் செய்யும் அத்தனை மருத்துவர்களும் காசில் கொழுப்பதில்லை. எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர், அந்த நாட்களில் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் கொடுக்கும் சாம்பிள் மருந்தை வைத்துத் தான் பிழைப்பை ஒட்டிக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு கம்பனிப் பிரதிநிதி, ஒரு குறிப்பிட்ட கால இடைவேளைக்குள் அவரிடம் விசிட் செய்து சாம்பிள் கொடுக்கவில்லைஎன்றால், அந்த மருந்து நிறுவனத்திற்கு உடனே புகார் ஒன்றை அனுப்புவார். மருந்து நிறுவனங்களுக்கு அவர் பேரைக் கேட்டாலே கொஞ்சம் அலெர்ஜியுடன் கூடிய ஏளனம்....! அவரிடம் விசிட் செய்த அனுபவங்களை சிரித்துக் கொண்டே நிறைய மருத்துவப் பிரதிநிதிகள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்..

    நீங்கள் சொல்கிற மாதிரி, மருந்து விற்பனைப் பிரதிநிதிகளிடமிருந்து, அந்தரங்கமாகத் தெரிந்துகொள்ள முடிகிற தகவல்களை, "அது அவர் கருத்து" என்று நீங்கள் ஒற்றை வரியில் சொல்கிற மாதிரி ஒதுக்கி வைத்துவிட முடியாது. அதே நேரம், அப்படியே அம்பலத்தில் பெயரைச் சொல்லிக் கொட்டி விடவும் முடியாது.

    எனக்குத் தெரிந்த இன்னொரு சர்ஜன்! அவர் அறுவைச் சிகிச்சையில் சம்பாதித்ததை விட மருத்துவச் சான்றிதழ் கொடுத்துச் சம்பாதித்தது, லட்சங்கள் அல்ல! அதையும் தாண்டி! திண்டுக்கல்லில் அம்பலமான மருத்துவச் சான்றிதழ் பூதாகரமாக வெடித்துக் கிளம்பிய தருணங்களை, அதில் எத்தனை பேர் எப்படியெல்லாம் சிக்கினார்கள், எப்படித் தப்பித்தார்கள் என்பதும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இது மாதிரி உதாரணங்களை அடுக்கிக் கொண்டு போனால், பதிவின் திசையே மாறிப்போய் விடும்.

    எனக்குத் தெரியாத அல்லது புரிந்து கொள்ள முடியாத விஷயங்களை அந்தத் துறையில் இருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள எனக்கு எப்போதுமே தயக்கம் இருந்ததில்லை. அதே நேரம், என்னுடைய நண்பர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடிகிற தகவல்கள், மீண்டும் உங்களை மறுத்துப் பேச வேண்டித் தான் இருக்கிறது.

    சரியாக நாடி பிடித்துப் பார்க்கத் தெரிந்த மருத்துவர்கள் நான் உட்பட நிறையப் பேர் இருக்கிறோம் என்று தன்னம்பிக்கையோடு சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் தன்னம்பிக்கையைப்பார்த்துத் தலை வணங்குகிறேன். ஒரு பதிவர் இருட்டுச் சந்தில் மூக்கில் குத்து வாங்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் பார்த்து உதவியதைப் படித்திருக்கிறேன். மூக்கில் வாங்கிய குத்தித் திட்டமிட்ட கொலைமுயற்சியாக அவர் ஓவர்பில்டப் செய்து எழுதிய பதிவையும் படித்துச் சிரித்திருக்கிறேன்.

    மதுரை அரசு மருத்துவ மனையில், புழுத்து நெளியும் நிறைய "மருத்துவர்களை" எனக்கு மட்டுமல்ல, ஊருக்கே தெரியும். குறிப்பிட்ட அறுவைச் சிகிச்சையை இத்தனை எண்ணிக்கையில் செய்து முடித்ததாக அரசியல்வாதிகளை விடக் கேவலமாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ள முயன்று தோற்றுப் போன "அந்த சாதனையையும்" அறிந்து வைத்திருக்கிறேன்.விஷயம் வெளியே கசிந்து கேவலப்பட்ட பிறகும் கூட, அந்த போலி சாதனையாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்பதுமே கூட!

    மோசமானவர்கள் எல்லாத்துறையிலும் உண்டு. நல்லவர்களும் உண்டு. இப்போது எடுத்துக் கொண்ட கேள்வி அதுவே அல்ல.

    ReplyDelete
  32. ஐயா

    அனைத்து துறைகளிலும் ஒரு சிலர் விதிகளை மீறி செயல்படுவார்கள். இது அலோபதிக்கும் பொருந்தும் ஆயுர்வேதத்திற்கும் பொருந்தும்.

    இதை வைத்து நீங்கள் எந்த முறை சிறந்தது என்று எப்படி கூற முயல்கிறீர்கள் :) :)

    --

    அது சரி

    ReplyDelete
  33. //ஹோமியோபதியில் குழந்தை நிலை மாறி இருந்தால் அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்ய முடியுமா?//

    முடியும்!
    உதாரணத்துக்கு
    Complementary Therapies in Nursing and Midwifery
    journal from Science Direct ல் வெளிவந்த இந்த ஆய்வறிக்கையை படிங்க.

    இந்த clinical trial result ம் பாருங்க. http://journals.lww.com/obgynsurvey/Abstract/1997/11000/Complementary_and_Alternative_Medicine__Part_I_.24.aspx

    மேலும் இந்த சுட்டியையும் பாருங்க
    http://www.midwiferytoday.com/articles/turnbaby.asp

    தொடர்புள்ள புத்தகங்கள்
    http://www.google.co.in/search?tbs=bks:1&tbo=1&q=homoeopathy+breech+presentation&btnG=Search+Books

    ReplyDelete
  34. என்னைக் கேட்டால், ஹோமியோபதி மருத்துவத்திலும் பல போலிகள் இருக்கின்றன. பல மருந்துகள் வேலை செய்வதில்லை.
    என் தலைமுடி உதிர்வதற்கு, ஹோமியோபதி மருத்துவரைச் சந்தித்தேன். மருந்து கொடுத்தார்.
    சாப்பிட்ட ஒரு வாரத்தில் இது எனக்கு அல்சரை ஏற்படுத்தி விட்டது.
    பிறகு அலோபதி மருத்துவரிடம் சென்று,சரியானது.

    நான் முதலில் ஓமியோபதியை சந்தேகப் படாததால், மீண்டும் முடி உதிராமல் தடுக்கும் ஓமியோபதி சர்க்கரை மாத்திரகளை எடுக்கத் தொடங்கினேன்,
    மீண்டும் அல்சர் வந்து விட்டது.
    திரும்பவும் அலோபதி மருத்துவரிடம் சென்று, உண்மையைச் சொல்லி சிகிச்சை பெற்றேன்.
    இப்போது சரியாகி விட்டது.
    இதுபோல், என் தம்பியும் அடிக்கடி வரும் வயிற்று வலிக்கு ஓமியோபதி மருந்து எடுத்தான்.
    அது அவனுக்கு நீங்காத தலைவலியை ஏற்படுத்தி விட்டது.
    பிறகு அலோபதி மருத்துவரிடம் சென்று, சிறு அறுவை சிகிச்சையுடன் வயிற்று வலி சரியானது. ஓமியோபதி மருந்தை நிறுத்திய பிறகு, அவனுக்கு தலைவலியே வருவதில்லை.
    இதுபோன்ற அனுபங்கள் என் நண்பர்கள் சிலருக்கும் உண்டு.
    எதையும் அனுபவித்துப் பார்த்தால்தான் உண்மை புரியும்.
    கண்ணை மூடிக் கொண்டு, ஓமியோபதி சிறந்த மருத்துவம் என்று சொல்லாதீர்கள்.
    நாட்டு மருத்துவத்தை வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்.

    ReplyDelete
  35. உயிர்நேயம்!

    பதிவெழுதி ஆறு மாதங்களுக்குப் பின்னால் இந்தப் பதிவு உங்கள் கண்ணில் பட்டிருப்பது குறித்து சந்தோஷம்.

    பதிவைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்திருந்தீர்கள் என்றால்,எந்த ஒரு குறிப்பிட்ட மருத்துவ முறையையும் ஆதரித்து அல்லது எதிர்த்து எழுதப்பட்டதில்லை என்பது புரிந்திருக்கும். அலோபதி மருத்துவம் கட்டுபடிஆகாத விலைக்குப் போய்விட்ட பிறகு, மாற்று மருத்துவத்தைப் பற்றியும் கொஞ்சம் சிந்திக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த உட்கிடக்கையும் இந்தப் பதிவுகளில் இல்லை. தவிர, நீங்கள் சொல்கிற வாதம் ஏற்கெனெவே இங்கே சொல்லப்பட்டதுதான்.

    குறைந்தபட்சமாக உங்களுடைய பின்னூட்டங்களுக்கு முன்னால் வந்தவற்றைப் படித்தீர்கள் என்றால் உங்களுடைய கேள்விக்கு அல்லது அவநம்பிக்கைக்கு பதில் இருப்பதையும் பார்க்க முடியும். மருந்தா எமனா என்ற குறியீட்டுச் சொல்லில், இன்னும் அதிக விவரங்கள் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

    குறைந்தபட்சமாக, நீங்கள் சொல்ல வந்ததை இன்னமும் தெளிவாக சொல்ல முயற்சித்திருக்கலாமே!

    ReplyDelete
  36. அய்யா ,பொதுவாக அலோபதி சைடு எபக்ட்ஸ் உள்ளது என பலர் கூறக்கேட்டுளேன் .எது எதில் எப்படி உள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் சொன்னால் நன்றி உள்ளவனாக இருப்பேன் .

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!