வெள்ளிக்கிழமைக் கேள்விகள்..! பீர்பால் கதைகள் 9,10


பீர்பால் கதை ஒன்றைச் சொல்லி நாளாகி விட்டதே, என்ன கதையைச் சொல்லலாம்  என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தான், அக்பரும், பீர்பாலாக மாறுவதற்கு முன்னால் மகேஷ் தாஸ் என்ற சூடிகையான இளைஞனாக இருந்தவனுக்குமிடையிலான  அறிமுகம் எப்படி ஆரம்பித்தது என்பதைச் சொல்லாமலேயே இதுவரை எட்டுக் கதைகளைச் சொல்லியிருக்கிறோமே என்ற நினைப்பு வந்தது.

Flashback முறைதான் நமக்கு மிகவும் பழகிப்போன ஒன்றாயிற்றே!  அதனால் அக்பர் பீர்பால் முதல் சந்திப்பைக் கொஞ்சம் பின்னோக்கிச் சொல்லலாம் என்று நினைத்த போதுதான், இதே கதை பல்வேறு தருணங்களில் பல்வேறு வடிவங்களில் சொல்லப் பட்டிருப்பதையும் கவனித்தேன்!

ரு சமயம் அக்பர் தனது படைவீரர்களுடன் வேட்டையாடப் போனார். போன சமயத்தில், கூடவந்தவர்கள் பலர் வழியைத் தவற விட்டு விட்டார்கள். அக்பரும் ஒன்றிரண்டு வீரர்களும் கொஞ்ச தூரம் பயணம் செய்து பாதைகள் மூன்றாகப் பிரிவதைப் பார்த்தார்கள். அதில் எந்தப்பாதை தான் அரண்மனைக்குத் திரும்ப வேண்டிய பாதை என்பது புரியாமல், அங்கே வழியில் கண்ட ஒரு இளைஞனை நிறுத்தி எந்தப்பாதை தில்லிக்குப் போகிறது என்று விசாரித்தார் அக்பர்.

"பாதைகள் எதுவும் டில்லிக்குப் போகாது! அவை அங்கேயே தான் இருக்கும்!" என்றான் அந்த இளைஞன். அக்பருக்கு அவன் தன்னைக் கேலி செய்கிறானா என்ற சந்தேகம் வந்தது, ஆனால் அதை எப்படி வெளிப்படையாகக் கேட்பது? கண்களில் குறும்பு மின்ன, அந்த வாலிபன் மேலும் சொன்னான்."பாதைகள் தான் டில்லிக்குப் போகாது என்று சொன்னேன்! ஆனால் நீங்கள் அதில் பயணம் செய்தால் டில்லிக்குப் போய்ச் சேரலாம்!"

ப்படிச் சொன்னவுடன், அக்பருக்கு உச்சி குளிர்ந்து விட்டது! 

ந்த நாட்களில் கூந்தல் க
றுப்பு, குங்குமம் சிவப்பு என்று ஒரு எம்ஜியார் படப் பாடல் ஒன்று உண்டு அதைக் கேட்டுப் புளகாங்கிதமடைந்த ரசிகக் கண்மணிகள் தலைவர்  என்னமா உண்மையை  உடைச்சுச் சொல்கிறார் என்று வியந்த மாதிரி, அக்பரும் குளிர்ந்து போனாராம்! ஆமாம்! பாதை எப்படி டில்லிக்குப் போகும்? நாம் தான் அதில் பயணம் செய்ய வேண்டும் என்ற உண்மை பாதுஷாவுக்கும்  உறைத்துப் புளகாங்கிதம் அடைந்ததில், அந்த வாலிபனின் புத்தி சாதுர்யத்தை மெச்சி, அரண்மனைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தாராம்!

ப்புறம் என்ன! மகேஷ் தாஸ், அக்பரின் அரசவையில், பாதுஷாவுக்குப்  பிரியமான சேக்காளியாக பீர் பால் என்ற கௌரவப் பட்டத்தோடு மாறினார்  என்பது தெரிந்தது தானே!

ந்தக்கதையை ஏற்கெனெவே இந்தப்பக்கங்களில்  வேறு வடிவத்தில் பார்த்திருக்கிறோம்! இந்தக் கதையில் பீர்பால், அந்தக் கதையில் ஒரு துறவி! எப்படியானாலும்,. பீர்பாலோ அல்லது துறவியோ அரசனிடம் இந்த மாதிரிக் கேள்வி கேட்க முடியுமா, தலை தப்புமா என்றெல்லாம் கேட்கக் கூடாது.


ந்த ஒரு கேள்விக்கும், இரண்டு நேரெதிர் கோணங்களில் இருந்து பதிலைப் பெற முடியும் என்பதை மட்டுமே கதையில் இருந்து பெற வேண்டிய கருத்தே தவிர, ஆஹா! நல்ல கதை என்றோ, கதை சொல்லியே நம்மை பல நூற்றாண்டுகளாக முட்டாளாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கொதிக்கவோ வேண்டாம் என்பது தான் முதலும், முக்கியமானதுமான பாடம்!

தைகள், ஒரு உருவகம், ஒரு உதாரணம் அவ்வளவுதான்!

ண்மைக்குக் கொஞ்சம் இப்போதிருப்பதைவிட இன்னம் அருகாமையில் கொண்டு சேர்ப்பதற்கு உதவியே தவிர, கதையே முழுமையானதும், உண்மையானதும் அல்ல! அப்படி எடுத்துக் கொள்ளும் போது தான் கற்பிக்கப்படாத விபரீதமான அர்த்தங்கள், அனர்த்தங்கள் என்று தொடர்கின்றன.

ப்படி அதற்கு முந்தைய பதிவில் சொன்னதற்கு வந்த பின்னூட்டங்களைத் தொடர்ந்து அவைகளுக்குப் பதிலாக

/நாத்திகர்கள் கடவுளை வெறுப்பவர்கள் அல்ல, மறுப்பவர்கள்/ *

டைமுறை நாத்திகம் என்பது, எது உண்மை அல்லது பொய் எனத் தேட முற்படுவதே இல்லை. நம்புகிறவனுடைய நம்பிக்கையை கேள்விக்குரியதாக ஆக்கி விடை சொல்ல முற்படுவது அதன் வேலையாகவும் இருந்ததில்லை. வெறும் கேலி, ஏச்சு, விதண்டாவாதம், வெறுப்பை உமிழ்வது, பிணக்குகளை வளர்ப்பதுமே அதன் பணியாக இருக்கிறது.

ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி இறக்குமதி செய்யப் படும் நாத்திகர்களும், உள்ளூர் நாத்திகர்களும் இந்த ஒரு விஷயத்தில் ஒன்று படுகிறார்கள்.

சார்வாகம், சாங்கியம், என்று இறை மறுப்பை முன்னிலைப்படுத்தும் தத்துவ மரபுகளுமே இந்தியத் தத்துவ தரிசனத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது. சமணம் பேசும் அறநெறிகள் இந்த வகையில் வருபவையே. சடங்குகளையும், புரோகிதனையும் மறுத்து, அறிவொன்றே தெய்வம் எனக் காண்பித்தவை.

/இது தான் ஆத்திக நாத்திகத்திற்கு நான் கொடுக்கும் சிறிய விளக்கம்/

ரணியனின் கதையிலேயே அது இருக்கிறது. நாராயணன் இல்லை, அவன் பெயரை எவருமே சொல்லக் கூடாது என்கிறான். நாராயணனை மறுக்கிறான். ஆனால், அவனுக்கு, நாராயணன் இருப்பது தெரியும், தன்னுடைய உடன்பிறந்தவனைக் கொன்றான் என்ற ஒரே காரணம், பகையாக, வெறுப்பாக, மறுப்பாகவும் வெளிப்படுகிறது.

த்திக நாத்திகமே வேறு.உதாரணத்திற்கு, இங்கே வலைப்பக்கங்களில் ஒரு பெண்மணி,மிகவும் கற்றவராக, எல்லாம் தெரிந்தவராகப் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறார். கோபிகா கீதம் என்று ஒன்று உண்டு. பக்தியின் உச்ச நிலையை, பரம்பொருளிடம், நாங்கள் மிகச் சிறியவர்கள், எங்களிடம் உன்னுடைய பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டாம் என்று உருகுகிறார்கள். பிரேம பாவம் என்பதன் உச்சம் அது. ஆனால் இந்தப் பெண்மணியோ  சர்வ சாதாரணமாக, அதைப் படித்தால், காணாமல் போன பொருள் கிடைக்கும் என்று நம்பிக்கை என அதைப் பற்றி எழுதுகிறார். ராம நாமமே துதி செய் என்று எழுதி விட்டு, பெரியவா சொன்னதுனால நாங்க ஏத்துக்கறோம், என்ற ரீதியில் தொடர்ந்து எழுவதைப் பார்க்கும் போது, ஒரு பக்கம் சிரிப்பாக வருகிறது. இவர்களுக்குப் புரிந்தது அவ்வளவுதான்! கிளிப்பிள்ளைகள் போல இருப்பதே தத்துவத்தைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறார்கள் பாருங்கள், இது தான் ஆத்திக நாத்திகம். இவர்களை விட, நேரடியாகவே, கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்.

/கடவுள் இருக்கிறது என்று நம்ப வைப்பது தான் ஆத்திகரின் வேலையா ?/

நிச்சயமாக இல்லை.நம்பிக்கையைச் சிதைப்பது, மதம் மாற்றுவது, இதை உண்மையான ஆத்திகன் செய்வதில்லை. அவசியமும் இல்லை.

ங்கே ஒரு கருத்துப் பரிமாற்றம் மட்டுமே நிகழ்வதாக நான் கருதுகிறேன். என் நிலையை நீங்கள் ஏற்றுக் கொண்டு மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, நப்பாசை எதுவுமே இல்லை.உங்களுடைய கருத்தை நீங்கள் முன்வைக்கிற அதே விதத்தில், அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதும், அது சரிதானா, எனக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பரிமாறிக் கொள்வதைத் தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. "

ன்று சொல்லியிருந்த பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிற வாய்ப்பும் கிடைத்தது.(சிவப்பு எழுத்தில் அடைப்புக்குள் இருப்பதெல்லாம் ஒரு பதிவர் எழுப்பியிருந்த கேள்விகள்) பிழைப்புக்காக நடத்துகிற தொழில்முறை நாத்திகம் தவிர, பொழுது போக்கு நாத்திகமாக இங்கே பலர் பதிவுகளில் பேசிக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது.


oooOooo

பீர்பால் அக்பருக்கு அறிமுகமான கதை கொஞ்சம் சுமாராகத் தான் இருக்கிறதென்று வாசகர்கள் கோபப்படுவதற்கு முன்னாலேயே, சமாதானமும் சாந்தியும் நிலவுவதற்காக வழக்கம் போல இன்னொரு பீர்பால் கதை! போனசாக, ஒன்றுக்கு ஒன்று ஃப்ரீ என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

பாதுஷா, பீர்பாலுக்குத் தான் எப்போதும் ஆதரவு தருகிறார்! பாதுஷாவுடைய ஆதர
வு இல்லாவிட்டால், இந்த பீர் பாலை விட நாங்கள் பெரிய புத்திக் கொழுந்துகள் என்பதைக் காட்ட முடியுமாக்கும் என்று பாதுஷா காதில் விழுகிற மாதிரியே, அரசவையில் இருந்த நிறையப் பேர் பொருமிக் கொண்டிருந்தார்கள்.

க்பருக்கும் அப்படித்தான் தோன்றியது! இந்த பீர்பால் ரொம்பவும் தான் துள்ளுகிறான்! பாதுஷா என்று கூடப் பார்க்காமல், எப்போதும் தன்னை முட்டாளடித்துப் பார்க்கிறவனை, நாமும் பதிலுக்குப் போட்டுப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் பாதுஷாவுக்கு வந்தது. இந்த பாதுஷாக்களே நிலையில்லாத புத்திக்காரர்கள்! எப்போது கனிவாக இருப்பார்கள், எப்போது கடித்துக் குதறுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. பீர் பாலை சிக்க வைப்பது, மற்றவர்கள் முன்னால் முட்டாளாக்கிக் காட்டுவது  என்று பாதுஷா முடிவு செய்துவிட்டு, ஒரு சோதனை வைத்தார்.

ல்லாம் ஒரு செட் அப் தான்! இப்படி ஆளைக் கவிழ்க்கிற கலையில் பாதுஷாக்களுக்கு இருக்கிற தேர்ச்சி, வேறு உருப்படியான விஷயங்களில் இருந்ததில்லை என்பது சரித்திரம். சரித்திரம் என்ற உடனேயே கற்பனை,
புனைவு ,கனவு இவைகளும் வந்து விட வேண்டும் இல்லையா?

ரசவையில் பாதுஷா பம்பீரமாக சபையை இப்படியும் அப்படியுமாகப் பார்க்கிறார்.அல்லது கம்பீரமாகப் பார்ப்பது போல நினைத்துக் கொண்டார்.

"எனக்குப் பிரியமானவர்களே! இன்று அதிகாலை நான் ஒரு கனவு கண்டேன்! எனக்கு உண்மையானவர்கள், பிரியமானவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பதை அந்தக் கனவில் தெரிந்து கொண்டேன்!" என்று சொல்லி விட்டு சபையை அப்படியும் இப்படியும், இப்படியும் அப்படியுமாக மறுபடி பார்த்தார். 


சபையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! புரிந்து என்ன ஆகப் போகிறது! சபைக்குப் போவதே சம்பாதிப்பதற்குத்தானே!

"இன்று மாலை நீங்கள் வரிசையாக ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போக வேண்டும். அங்கே நீங்கள் என் மீது பிரியத்துடனும், உண்மையாகவும் இருந்தால்  உங்களுக்கு ஒரு கோழி முட்டை கிடைக்கும். அதை இங்கே கொண்டு வந்து காண்பிக்க வேண்டும். என் மீது விசுவாசமாக இருப்பவர்கள் யார் என்பது அப்போது தெரிந்து விடும்." என்று சொன்னார் அக்பர்.

கோழி முட்டைக்கும் விசுவாசத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள்! பாதுஷாக்கள் கேள்வி கேட்பவர்களை எப்போதுமே விரும்புவதில்லை.

பையில் இருந்த பிரமுகர்கள் ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போனார்கள். குதித்தார்கள். ஆளுக்கு ஒரு கோழி முட்டையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி வெளியே வந்தார்கள். கோழி முட்டை கிடைத்ததோடு, கொஞ்சம் காசும் கிடைக்கும் என்ற சந்தோஷத்தோடு அரண்மனைக்குப் போனார்கள்.

பீர்பாலும், தலைவிதியே என்று குளத்தில் குதித்தார். குளத்தில் குதித்தால், உண்மையாக இருப்பவருக்குக் கோழிமுட்டை கிடைக்கும் என்று அக்பர் சொன்னபோதே இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பதை அறிந்திருந்தார். அவருக்கு கோழி முட்டை கிடைக்கவில்லை. அதனால் என்ன, எப்போதும் கைகொடுக்கிற புத்தி சாமர்த்தியம் இருக்கிறதே, அது போதாதா! இரண்டு கைகளையும் உயர்த்திப் பிடித்தபடி, சேவல் கொக்கரிக்கிற மாதிரி சத்தம் எழுப்பிக் கொண்டேஅரசவைக்குப் போனார்!

க்பருக்குக் கொஞ்சம் ஆச்சரியம்! முட்டை கிடைக்கவில்லை என்றதும், பீர்பால் சோர்ந்த முகத்துடன், அப்போதாவது கொஞ்சம் பணிவோடு சபைக்கு வருவான் என்று நினைத்தால், சேவல் கொக்கரிக்கிற மாதிரிக் கொக்கரித்துக் கொண்டல்லவா வருகிறான்! என்ன ஆயிற்று இவனுக்கு?

"பீர்பால்! சேவல் மாதிரிக் குரல் எழுப்புவதை நிறுத்து!"

"அப்படியே ஆகட்டும் ஹூசூர்!" என்று பணிவுடன் சொன்னார் பீர்பால்!

"எங்கே உன் கைகளில் முட்டையை காணோம்?" பாதுஷா கொஞ்சம் எகத்தாளமாக பீர்பாலிடம் கேள்வி கேட்டார். ஏற்கெனெவே பேசி வைத்து மற்றவர்கள் எல்லோருக்கும் முட்டை கிடைக்கிற மாதிரிச் செய்து விட்டு, பீர்பாலை வெறும் கையுடன் வரவைக்கிற திட்டத்தைப் போட்டதே அவர்தானே! இன்னும் சிறிது நேரத்தில் பீர்பால் காலில் விழுந்து கெஞ்சப் போகிறான் என்ற நினைப்பே பாதுஷாவுக்கு பாரசீகத்து மதுவைக் குடித்த போதை மாதிரி சுகமாக இருந்தது.

"நான் சேவல் ஹூசூர்! என்னிடம் எப்படி முட்டை இருக்கும்?"

"முட்டையைப் பற்றிக் கேட்டால் நீ சேவலை பற்றி எதற்குச் சொல்கிறாய்?" பாதுஷாவிற்குக் கொஞ்சம் குழப்பம் வர ஆரம்பித்தது. பீர்பாலை ஜெயிக்கவே முடியாதோ?

"ஹூசூர்! இங்கே இருப்பவர்கள் அனைவருமே பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் தான்! ஆனால் குளத்தில் குதித்தவுடனேயே முட்டை வந்து விடுமா? அதற்கு சேவல் துணை வேண்டாமா? நான் சேவலாக இருந்து இவர்களுக்கு முட்டை கிடைக்கச் செய்தேன். சேவலிடம் எப்படி முட்டை இருக்கும்?" என்றார் பீர்பால்.

ங்களை பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் என்று பீர்பால் சொன்னதிலேயே குளிர்ந்து போன சபையோர்கள், தாங்கள் பெட்டைகளாக்கப் பட்டதைக் கூட மறந்து வாரே வா என்று கரகோஷம் எழுப்பினார்கள்.

பாதுஷாவுக்கு வேறு வழி இருக்கவில்லை!

கெஞ்சினால் மிஞ்சுவன், மிஞ்சினால் கெஞ்சுவன் என்று பிற்காலத்தில் குடிலன் என்ற கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு இரண்டும் கெட்ட தன்மையை மனோன்மணீயம் என்ற நாடகக் காப்பியத்தில் பெ. சுந்தரம் பிள்ளை என்பவர் எழுதி வைக்கப் போகிறார்   என்பது அன்றைக்கு அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்!

ன்னுடைய தோல்வியை மறைத்துக் கொண்டு பீர்பாலைப் புகழ்ந்து பரிசுகள் கொடுத்து அப்போதைக்கு சமாதானம் செய்து கொண்டார் டில்லிப் பாதுஷா!

வேறென்ன செய்ய முடியும்!

 


 

6 comments:

 1. //இரணியனின் கதையிலேயே அது இருக்கிறது. நாராயணன் இல்லை, அவன் பெயரை எவருமே சொல்லக் கூடாது என்கிறான். நாராயணனை மறுக்கிறான். ஆனால், அவனுக்கு, நாராயணன் இருப்பது தெரியும், தன்னுடைய உடன்பிறந்தவனைக் கொன்றான் என்ற ஒரே காரணம், பகையாக, வெறுப்பாக, மறுப்பாகவும் வெளிப்படுகிறது.//

  இந்தக் கதையில் சொல்லப்படும் இரணியன் நாத்திகன் இல்லை, அவன் ஒரு முழுமையான சிவ பக்தன், வைணவர்கள் கிருஷ்ணன் புகழ்பாட சிவ பக்தன் ஒருவனை வில்லனாகக் காட்டியது இரணியன் மட்டுமே இல்லை, இலங்கேஸ்வரன் இராவணனையும் அவ்வாறு தான் காட்டினார்கள். நீங்கள் நினைப்பது போல் இந்தக் கதைகளில் இறை மறுப்பு என்று எதுவும் சொல்லப்படவில்லை, விஷ்ணு மறுப்பு, வெறுப்பு இவைகள் தான் பேசப்படுகின்றன, காலத்திற்கு ஏற்றாற்ப் போல் நாத்திகக் கதையாக இவை அவ்வப்போது திரிக்கப்படுகின்றன

  ReplyDelete
 2. கோவி கண்ணன்!

  கொஞ்சம் பொறுமையாகப் பதிவைப் படித்திருந்தால், நீங்கள் சுட்டிக் காட்டிய பகுதி நாத்திக ஆத்திகத்திற்கு பதில் சொல்கிற மாதிரி இருப்பதுமே புரியும். இது ஒரு பழைய பதிவின் பின்னூட்டங்களில் எனது பதிலில் ஒரு பகுதி. அதில் கேள்வி எழுப்பியிருந்த பதிவரே நீங்கள் தான்!

  ராவணனுடைய சிவபக்தி, அவனது திறமை, ஆட்சிமுறை இவைகளைப் பற்றி ராமாயணம் நல்ல விதமாகத் தான் சொல்கிறது. ஒரு குடம் பாலில் கலந்த துளி விஷம் போல, அவன் செய்த ஒரு தவறு அவனையும் அவன் சுற்றத்தையும், அவன் ஆண்ட இலங்கையையுமே எரித்து விட்டது என்பது தான் ராமாயணம் சொல்ல வருகிற மையக் கருத்து.

  இதிஹாஸ, புராணங்களில் சைவ வைணவப் பிணக்கு என்பது எப்போதுமே இருந்ததில்லை. அதெல்லாம் சோழர்கள் காலத்தில் சைவம் வெள்ளாளர்களுடைய எழுச்சியாக, அரசியல் சார்ந்த மதமாக உருவான காலத்தில் உண்டாக்கப்பட்டது.

  அதைத் தான் உங்களுக்குத் தெரிந்த பெண்பதிவர், உங்களை நாத்திகர் என்று சொல்வதாக நீங்களே உங்கள் பதிவு ஒன்றில் குறிப்பிட்ட ஒரு பதிவரைத் தொட்டு ஆத்திக நாத்திகத்துக்கு இன்று எடுத்துக் காட்டாகவும் சொல்லியிருந்தேன். இவர்களை விட இறைவனை இல்லையென்று மறுப்பவர்களே மேல் என்று சொல்லியிருந்ததைப் பார்க்கவில்லையா?

  ReplyDelete
 3. //
  இரணியனின் கதையிலேயே அது இருக்கிறது. நாராயணன் இல்லை, அவன் பெயரை எவருமே சொல்லக் கூடாது என்கிறான். நாராயணனை மறுக்கிறான். ஆனால், அவனுக்கு, நாராயணன் இருப்பது தெரியும், தன்னுடைய உடன்பிறந்தவனைக் கொன்றான் என்ற ஒரே காரணம், பகையாக, வெறுப்பாக, மறுப்பாகவும் வெளிப்படுகிறது.//


  இவ்ளோ தானா இன்னும் ராமாயனம், மகாபாரதம் எல்லா கதையும் சொல்விங்களா!?

  ReplyDelete
 4. வால்ஸ்!

  உங்களுடைய தாக்குப் பிடிக்கும் சக்தி எவ்வளவு என்று சொல்லுங்கள்! அதற்குத் தகுந்த மாதிரி, ஆயிரத்தொரு ரேபிய இரவுக் கதைகள் முதல், இலியாட், ஒடிசி, இன்னமும் எல்லா ரகங்களில் இருந்தும் கதை சொல்ல முயற்சிக்கிறேன்!

  ReplyDelete
 5. கடவுள் என்கிற தத்துவமே, மக்கள் மனதில் ஒரு தன்னம்பிக்கை தோன்ற ஏற்படுத்தப் பட்ட விஷயம் என்று எனக்குத் தோன்றும். காலப் போக்கில் கடவுள் என்பதை வைத்து ஆத்திகர்களும், நாத்திகர்களும் காசு சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதுதான் வேதனையான உண்மை.

  ReplyDelete
 6. வாருங்கள் கௌதமன் சார்!
  கடவுள் என்பதை அதன் வேரை கட+உள் என்று பிரித்துப் பார்த்தால், தனக்குள்ளேயே நிகழும் மாற்றம் என்பது தான்.

  "அஹம் பிரம்மாஸ்மி " என்று சொல்லும்போது இப்போதிருக்கும் வடிவத்தில் அல்ல, தனக்குள்ளே தேடிக் கண்டடைகிற உண்மையான மாற்றம் என்பதாகத் தான் மனிதனுக்குக் கடவுள் அனுபவம் வாய்ககிறது. மச்னிதன் என்பவன் ஒரு இடைப்பட்ட நிலை, மிருகவுனர்வுகளில் இருந்து சற்றே மேம்பட்டதான ஒரு பரிணாம வளர்ச்சி. அவ்வளவுதான். ஆனால், இதுவே முழுமையானதும், இறுதியானதும் அல்ல.

  மிருகத்திலிருந்து உயர்ந்து மனிதனாக மாறியபோதிலும், மிடுக உணர்வுகளை இன்னம் கொஞ்சம் மீதம் வைத்திருக்கத் தான் செய்கிறோம் இல்லையா?அந்த மிருக உணர்வுகள் நம்மைக் கீழே பிடித்து இழுத்துக் கொண்டுதான் இருக்கின்றன இல்லையா? அதில் இருந்து விடுபட்டு உயர்வதற்கான விசை, ஆற்றல் வேண்டுமே!

  அது நம் ஒவ்வொருவருக்குள்ளுமே இருக்கிறது. அதைக் கண்டு கொள்வதற்கும், கண்டுகொண்டுமிருக்க உணர்வுகளை முழுதும் விடுத்து, மனம்போன போக்கில் எல்லாம் போகாமல் மனமற்ற நிலை ஒன்றை அடையும்போது, அடுத்த கட்டமான தெய்வநிலை வந்து எய்துகிறது.

  அதற்கான விதையாகத் தான் நம்பிக்கை என்பது மனிதனுக்குள் விதைக்கப்பட்டிருக்கிறது.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!