Showing posts with label ஸ்ரீ அன்னை. Show all posts
Showing posts with label ஸ்ரீ அன்னை. Show all posts

தேடாமலேயே தேடி வரும் தெய்வ அருள்! கருணை!

இன்று நவம்பர் 17. ஸ்ரீ அரவிந்த அன்னை மானுட வடிவில் 95 ஆண்டுகள் இருந்து, மஹாசமாதிக்கு ஏகிய நாள். இன்று ஸ்ரீஅரவிந்தாசிரமத்தில் தரிசன நாளாகவும், அடியவர்கள் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை இருவரும் சூட்சும வடிவில் அருள் பாலிக்கும் சமாதி அருகே அமர்ந்து கூட்டுத் தியானம் செய்யவும், ஸ்ரீ அரவிந்த அன்னையின் அறைக்குச் சென்று வணங்கவும் அனுமதிக்கப் படுகிற நாளாகவும் இருக்கிறது.


    இன்றைய தரிசன நாள் செய்தியாக    


முன்பே இந்தப்பக்கங்களில் பலமுறை எழுதியதைப் போல தெய்வத்தின் கடைக்கணருள் நான்தேடாமலேயே பலமுறை என்னைத் தேடி வந்து அருள்பாலித்திருக்கிறது அன்னை படத்தை முதன்முதலாய்ப்பார்த்த தருணத்தில் இவள் என்னுடைய அம்மா மாதிரியே இருக்கிறாளே என்றுதான் நினைத்தேன். அசடன்! என்னைப் பெற்றவள் வடிவில் ஸ்ரீ அரவிந்த அன்னையே காட்சி அளித்தாள் என்பதை உணராத அசட்டுத்தனம் அது. நான் அவளை நினைக்க மறந்தாலும், அவள் எனக்குத் தோன்றும் துணையாகவும் தோன்றாத துணையாகவும் கூடவே இருந்து அருள்பாலித்து வருகிறாள் என்பதை ஒருவாறு புரிந்து கொண்டபின் எனக்கென்ன மனக்கவலை என் தாய்க்கன்றோ தினம்தினம் என்கவலை என்கிற பழைய பாடலின் பொருளை  அனுபவத்தில் உணர்ந்த்தும் அதுவாகவே நிகழ்ந்தது. அவளே எல்லாம் என்று இருந்தநாட்களும் உண்டு. சமீப காலங்களில் அன்னையை நினைக்காமலேயே இருந்ததுமுண்டு. ஆனாலும் அவள் எனக்கும் தாயல்லவா!  




 ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளை சரண் அடைகிறேன்! எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பணம் செய்கிறேன்.

ஒரு பெண்குழந்தையை எங்கள் குடும்பத்திற்கு உனது அருட்கொடையாக அளித்திருக்கிறாய். அந்தக்குழந்தை என்றென்றும் உனது கடைக்கண் அருளிலேயே, உனது பாதுகாப்பிலேயே வளரட்டும்.

பழம்பெரும் பாரத தேசத்தை, அகப்பகை, புறப்பகை இரண்டிலிருந்தும் காப்பாய்! உலகத்தில் பாரததேசம் நீ அறிவித்தபடி அதன் ஆன்மீக குருபீடத்தை அடைய உனதருள் விரைந்துசெயல்பட திருவுள்ளம் இசைவாய்!

மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன். திருவடிகளைச்  சரணடைகிறேன்.

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே!                

ஸ்ரீ அரவிந்த அன்னையை அறிந்த விதம்!

 

முந்தைய பதிவில், திரு பாலு, அன்னையுடன் ஐக்கியமான  அனுபவத்தைப் பற்றிக் கேட்டிருந்தார். அவர் கேட்டிருந்த மாதிரியான உன்னத நிலை இன்னமும் கைவரப் பெறவில்லை என்பது கண்கூடு. ஆனாலும், ஸ்ரீ அரவிந்த அன்னையை நான் அறிந்து கொண்டேன் என்பதை விட, அவளே தன்னை எனக்கறிவித்துக் கொண்டாள் என்பது தான் உண்மை! என்ன விட்ட குறை, தொட்ட குறையோ தெரியாது, என்னைப் பெற்ற தாயின் வடிவில் ஸ்ரீ அரவிந்த அன்னையைக் காண முடிந்த ஒரு அனுபவம்  இங்கே, மீள்பதிவாக!

"There is only one thing of which I am absolutely sure, and that is who I am. Sri Aurobindo also knew it and declared it. Even the doubts of the whole of humanity would change nothing to this fact.

But another fact is not so certain - it is the usefulness of my being here in a body, doing the work I am doing. It is not out of any personal urge that I am doing it. Sri Aurobindo told me to do it and that is why I do it as a sacred duty in obedience to the dictates of the Supreme.

Time will reveal how far earth has benefited through it."


THE MOTHER

 
(24.5.1951)
(On Herself, Volume 13, Page 47)



அறியாமல் இருந்த பொழுதிலும், புரிந்து கொள்ள முடியாத நிலையிலும் கூட ஸ்ரீ அரவிந்த அன்னையே! நீ இவனிடத்தில் காட்டிய பேரருளை என்னவென்று சொல்வது அம்மா!

பத்து அல்லது பதினோரு வயதுச் சிறுவனாக இருந்த போது, இவனது உடன்பிறந்தவன் ஒரு கல்லூரிகளுக்கிடையிலேயான போட்டியில் கலந்து கொள்வதற்காக பாண்டிச்சேரி ஜிப்மெர் கல்லூரிக்குப் போய் விட்டு, அப்படியே ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கும் போய் விட்டு வருகிறான். வரும்போது, சில புத்தகங்களையும் வாங்கி வருகிறான். அதிலே ஒரு புத்தகம். ஸ்ரீ அன்னையின் உரையாடல்கள்-கரடு முரடான மொழிபெயர்ப்பு, தவிர இவனுக்கோ கையில் கிடைக்கிற எல்லாவற்றிலும் தூய தமிழில் தன் பெயரை எழுதிப் பார்ப்பது தவிர புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய சிந்தனை இல்லை.அந்தப் புத்தகத்திலும், இன்றைய அரசியல்வாதிகள் மாதிரி  தன் பெயரை முகப்பு, மற்றும் உள்ளே இரண்டு பக்கங்களில் பொறித்து அழகு பார்த்தாயிற்று!



அந்தப் புத்தகத்திலே உள்பக்கத்தில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் கருப்பு வெள்ளைப் புகைப்படம், அதைப் பார்க்கும் போதெல்லாம், "அட,.இவள் எங்க அம்மா போல இருக்கிறாளே" என்று தோன்றும். அடிக்கடி அந்தப் புத்தகத்தை எடுப்பதும், படத்தைப் பார்த்து, "இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே" என்று நினைப்பதும், ஒன்றிரண்டு பக்கங்களை சும்மா அப்படிப் புரட்டிப் பார்ப்பதும், இப்படியாக சில காலம்.

உண்மையில், இவனைப் பெற்ற அன்னையின் முக சாயலுக்கும், அந்தப் புகைப்படத்தில் இருந்த உருவத்திற்கும் முக ஒற்றுமையே இல்லை, தாய்மையைத் தவிர!

ஸ்ரீ அரவிந்த அன்னையே இவனது அன்னையின் சாயலில் அடிக்கடி தோன்றி இருக்கிறார் என்பது இவனுக்குப் புரிய நீண்ட நாட்கள் ஆயிற்று. நான் உன்னுடைய அன்னைதான் என்று சொல்லாமல் சொன்ன அந்த நிகழ்வைப் புரிந்து கொள்கிற விவேகமோ பக்குவமோ அப்போது இல்லை. அதற்கு அப்புறமும் கூட நீண்ட நாட்களுக்கு வரவில்லை.

இடையில், ஏகப்பட்ட சோதனைகள்.வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்து கொள்ளமுடியாமல், ஒரு சவலைப் பிள்ளையைப் போலத் தடுமாறி தடம் புரள இருந்த நேரத்தில் சத்குரு ஸ்ரீ சாதுராம் சுவாமிகளுடைய கருணைப்பார்வை இவன் மேல் விழ, அறுந்த பட்டம் போல இலக்கில்லாமல் காற்றடிக்கிற பக்கமெல்லாம் போய்க்கொண்டிருந்த நிலைமாறியது.

அதுவும் கொஞ்ச காலம் தான். மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிக் கொண்டு ஆட்டிப் படைக்க, ஊரைத்திருத்தப் புறப்பட்ட வெட்டிக்கூட்டத்தில் இணைந்து கொண்டு நாத்திகமும் பேச ஆரம்பித்தவனிடம் தொழிற்சங்கம், இடது சாரிச் சிந்தனைகள், நாத்திக வாதம், இப்படி ஏகப்பட்ட அடைசல்கள் குவிந்துபோயின.

சாதிக்க முடிந்தவன் சாதிக்கிறான்; முடியாதவன் போதிக்கிறான் என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள்.

உண்மைதான்!.

ஊரைத் திருத்தப் புறப்படுகிறவன், தன்னைத் திருத்திக் கொள்வதில்லையே!தன்னையே ஒரு ஒழுங்கு, கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கத் தெரியாதவன், ஊரைத் திருத்தப் போகிறேன், சீர் திருத்தம் கொண்டு வரப் போகிறேன், புரட்சி செய்யப் போகிறேன் என்று சொல்லித் திரிவதை விட ஒரு அயோக்கியத்தனம் இருக்க முடியாது.  இப்படி அயோக்கியர்களோடு, அயோக்கியனாக கொஞ்ச காலம் இருந்த பிறகு, மறுபடி ஸ்ரீ அன்னையை அறிந்து கொள்ளத் தவிக்கும் ஒரு நேரமும் வந்தது.

மாற்றத்திற்கான விதை உள்ளே விதைக்கப் பட்டிருப்பது ஒருவாறாக புரிய ஆரம்பித்தது.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்னைச் சரண் அடைகிறேன்.

எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளிலேயே சமர்ப்பிக்கிறேன். இவை அனைத்தும் இறைவனது சித்தத்தின்படி இயங்க வேண்டிய கருவிகள். அறியாமையினால் இவை என்னுடையது என்று மயங்கி இருந்தேன்.

மயக்கம் தெளிவித்து என்னை வழி நடத்துவாய் தாயே!

மறுபடி மறுபடி உன்னைச் சரண் அடைகிறேன்.

உன்னைச் சரணாக ஏற்க மறுக்கும் இருண்ட பகுதிகள் மாற்றத்திற்குள்ளாகும் வரை இவனது சிறு முயற்சி வேண்டியிருப்பதும், கவலை கொள்ளாதே உன்னுடைய சிறு முயற்சியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அபயமளிப்பதும் இப்படி எதுவானாலும் உன்னுடைய சித்தத்தின் படியே நடந்தேறட்டும்.

என் அன்னை என்னோடு இருக்கிறாள்! என்னுடைய செயலென்று தனித்து எதுவும் இல்லாத, அனைத்தும் அவள் அருளே என்றிருக்கும் நிலைக்கு உயர வரம் அருள்வாய்!



சுற்றி நில்லாதே பகையே! துள்ளி வருகுது வேல்!

"O India, land of Light and spiritual knowledge, wake up to your true mission in the world. Show the way to union and harmony."
-ஸ்ரீ அரவிந்த அன்னை.



புது வருடம் பிறக்கப் போவதற்கு முன்னாலேயே, வேண்டுதல்களும், அபிலாஷைகளும்  இறக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பித்து விடுகின்றன! கடவுளிடம், இந்தப் புத்தாண்டில் என்னென்ன வேண்டலாம், கேட்கலாம் என்ற பட்டியல் தயாராக ஆரம்பித்து விடுகிறது.


எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதியே  ! எங்கும் நிறைந்தருளும் கடவுளே!


இந்தப் புத்தாண்டில் எல்லாக் காரியங்களும் வெற்றி பெற  வேண்டும், எண்ணியபடி எல்லாம் நடந்தேற வேண்டும்! எல்லா வளங்களும் பெருக வேண்டும்! 


உடல் நலம் நன்றாக இருக்க அருள் புரிய வேண்டும்!  சுவற்றை வைத்துச் சித்திரம் என்பது போல, உடல் நலம் நன்றாக இருந்தால் தானே, மற்ற வேலைகளைச் செய்ய முடியும்!


ஆர்வத்தோடு விழையும் அனைத்தும் மெய்ப்பட வேண்டும்! எங்களது இல்லத்திலும், வாழ்க்கையிலும், உலகத்திலும் அமைதி நிலவ வேண்டும்!

இதையே உன்னிடம் வேண்டுகிறோம்!


கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், பட்டியலில் இன்னும் எது எதையோ சேர்த்துக் கொள்ள மறந்து விட்டோமே என்று, இன்னும் கொஞ்சம் வேண்டுதல்கள் சேர்ந்து கொண்டே போகும்! பட்டியல்கள் அவ்வளவு சீக்கிரமாக முடிந்து விடுவதுமில்லை!


ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருக்கிறது. ஆறறிவு இல்லாத தாவரங்கள் கூட ஒளியை நோக்கி உயர்கிற தன்மையோடு இருக்கின்றனவே! ஆறறிவு படைத்த நாமும் அப்படி தெய்வீக ஒளியை வேண்டி உயர வேண்டாமா? 


ஒளியை நோக்கி உயரும் தன்மையைக் கொஞ்சம் மறந்துவிடுகிறபோது, இது வரை சாதித்தவை எல்லாமே ஒன்றுமில்லாமல் போய்விடுகிறதே! இதற்கு நம்மைத் தவிர வேறு எவரைக் குற்றம் சொல்ல முடியும்?


மற்ற எல்லா வேண்டுதல்களையும்  விட, மிக முக்கியமான ஒன்று, ஒரு பிரார்த்தனையாக --

ஸ்ரீ அரவிந்த அன்னையே!
உன்னைச் சரண் அடைகிறேன்.
அறியாமை, முயலாமை, இல்லாமை, இப்படி எல்லா ஆமைகளையும் என் தோள்களில் இருந்து இறக்கி வைக்க தயவு செய்வாய்.

இந்த ஆமைகளோடே இனியும் கூடியிராமல், ஒரு புதிய அனுபவத்திற்கு என்னைத் தயார் செய்வாய். தகுதியும், தைரியமும் அருள்வாய்! ஒவ்வொரு அசைவிலும் செயலிலும், உனது திருவுள்ளப் படியே நடந்துகொள்கிற பக்குவ நிலையை அருள்வாய்.

பிறக்கும் புத்தாண்டு, உணமையிலேயே புத்துணர்வை அளிக்கும் ஆண்டாக வரம் அருள்வாய். வீணாய்க் கழிந்த பொழுதையும் ஈடு கட்டும் முயற்சியை, மன வலிமையை,எல்லா நேரங்களிலும் நீ என்னோடு  கூடவே  இருக்கிறாய், துணை செய்கிறாய், என்னுள் நிறைந்து எல்லாவற்றையும் நீயே நடத்துகிறாய் என்கிற உறுதியான நம்பிக்கையை, அனுபவித்து உணர்கிற வரமாக அருள்வாய்.

பாரத  தேசம் புண்ணிய பூமி! உலகுக்கு, அமைதியையும், ஆன்மீக வெளிச்சத்தையும் தரவேண்டிய கடமை இருக்கிறது! தன்னுடைய கடமையை சரிவரச் செய்வதற்குத் தடையாக இருக்கும், உட்பகை வெளிப்பகை அனைத்தையும் அகற்றி, நல்லதொரு தலைமையை  இந்த தேசத்திற்கு அருள வேண்டும்!

சுற்றி நில்லாதே பகையே! துள்ளி வருகுது வேல்!

ஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி, சத்ய மயி, பரமே!


ஜனவரி முதல் தேதி!  புத்தாண்டின் முதல் நாள் மட்டுமில்லை. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில், ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் அடியவர்களுக்கு தரிசனம் தரும் நாளாகவும் தொடர்கிறது. தரிசன நாள் செய்தியாக, புத்தாண்டுப் பிறப்பன்று ஆசிரமம் செல்லும் அன்பர்களுக்கு, தரிசன நாள் செய்தி கிடைக்கும். கீழே அதைக் காணலாம்! நேரில் செல்பவர்களுக்கு, கடிதம் எழுதி வேண்டிக் கொள்பவர்களுக்கு  சமாதி மேல் வைக்கப் பட்ட மலர்களும் அருளாசியோடு கிடைக்கும்.  புத்தாண்டு, ஸ்ரீ அன்னையின் அருளாசியோடுதுவங்கட்டும்!


புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அறியாமையும், இருளும் கூடிய தொடக்கத்தில் நம்பிக்கை ஒன்றே துணையாக!



ஃபிளெமிங், ஒரு ஏழை விவசாயி! ஸ்காட்லாந்து பகுதியில் டார்வேல் என்ற கிராமப் பகுதி, அன்றாட ஜீவனத்திற்கே மிகவும் கஷ்டம்!

ஒரு நாள்  யாரோ, அபாயத்தில் சிக்கி உதவி கேட்டுக் கூச்சலிடுவது கேட்டது.

போய்ப் பார்த்தபோது, ஒரு இளைஞன், புதைசகதியில் இடுப்பளவு சிக்கி, வெளியே வர முடியாமல் பயத்தோடு கத்தித்  தவித்துக் கொண்டிருந்ததை  அந்த  விவசாயி பார்த்தார். புதை சகதியில் இருந்து அந்த இளைஞனை மெல்ல விடுவித்து, தேற்றினார். அந்த விவசாயி, சரியான நேரத்தில் உதவிக்கு வராமல் இருந்திருந்தால், அந்த இளைஞன் கத்தி கத்தியே, பயம் பாதி சகதிக்குள் முழுகுவது மீதி என்று கதை முடிந்திருக்கும்.

மறுநாள், அந்த விவசாயியைத் தேடி, வண்ணச் சாரட் வண்டியில், ஒரு பெருந்தனக்காரர் வந்திறங்கினார். " என் பெயர் ரண்டால் ஃப் ! நேற்று நீங்கள் காப்பாற்றிய இளைஞன், என் மகன்!  அவனுடைய உயிரைக் காப்பாற்றியதற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துப் போக வந்தேன், உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்! என்னிடம் இருப்பதைத் தருகிறேன்." என்று தழுதழுத்தார்.

ஸ்காட்லாந்து மக்களே கொஞ்சம் பெருமிதமும், சுயகௌரவமும் பார்க்கிற  மக்கள். ஒரு உயிரைக் காப்பாற்றுவது மனிதனுடைய கடமை!  ஆபத்தில் இருப்பவன் எதிரியே ஆனாலும் காப்பாற்ற வேண்டும், அப்படியிருக்க செய்த உதவிக்குக் கைம்மாறு எதிர்பார்ப்பதா? அந்த விவசாயி, பணிவோடு பெருந்தனக்காரருடைய  உதவியை மறுத்தார். அந்த நேரம் ஒரு சின்னப்பையன்,   ஃபிளெமிங்குடைய மகன், அங்கே வந்தான்.  விவசாயி, அவனைத் தன்னுடைய மகன் என்று அறிமுகம் செய்து வைத்தார்.பிரபு அவனைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.

"இதையாவது கேளுங்கள்! இவனை நான் அழைத்துப் போகிறேன், நன்றாகப் படிக்க வைக்கிறேன்!  உங்களுடைய நல்ல குணம் இவனிடம் இருக்குமானால், நீங்களே பார்த்துப் பெருமிதப்படுகிற மாபெரும் மனிதனாக இவன் வருவான்!"


அதே மாதிரி, அந்தச் சிறுவன், லண்டனில் இருந்த பிரபுவோடு அனுப்பப் பட்டான். லண்டனில், செயிட் மேரி மருத்துவப் பள்ளியில் படித்துப் பெரிய மருத்துவராகவும், கண்டுபிடிப்பாளராகவும் உயர்ந்தான். பின்னால் சர் அலெக்சாண்டர்  ஃபிளெமிங் என்று உலகம் முழுக்க அறியப்பட்ட மருத்துவர். பெனிசிலின் தடுப்பு  மருந்தைக் கண்டுபிடித்தவர்.

ரண்டால் ஃப் பிரபுவின் மகன்,  முன்னால் ஸ்காட்லாந்து விவசாயியால் புதை சகதியில் இருந்து காப்பற்றப் பட்டவன், நிமோனியா காய்ச்சல் வந்து அவதிப்பட்டபோது, காப்பாற்றியது பெனிசிலின் தடுப்பு மருந்தால் தான்!

அப்படி, தகப்பன், மகன் இருவராலும் இரு வேறு தருணங்களில் காப்பாற்றப்பட்ட அந்த இளைஞனின் பெயர் வின்ஸ்டன் சர்ச்சில்! பின்னாட்களில் இங்கிலாந்துப் பிரதமராகவும் பதவி வகித்த, அதே வின்ஸ்டன் சர்ச்சில்!

சர் அலெக்சாண்டர்  ஃபிளெமிங் நோய்த் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கத் தீவீரமாகப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோதிலும், பெனிசிலின் கண்டுபிடிக்கப் பட்ட விதம்,  ஒரு தற்செயலான தருணத்தில் தான்! கிருமிகளால் ஏற்படும் நோய்கள், மரணத்திற்கு எதிராக மருந்தே இல்லை என்ற நிலையை மாற்றப் பிறந்த முதல் ஆண்டிபயாடிக் மருந்து  பெனிசிலின்! நடந்தது 1928 ஆம் ஆண்டு! அடுத்த ஆண்டில்,   ஃபிளெமிங் முழுமையான ஆராய்ச்சிக் குறிப்புக்களை வெளியிட்டார்,

ஒரு சிக்கலான தருணத்தில் தான் அதற்குத் தீர்வும் பிறந்தது!.

அதற்கும் பதினான்கு  ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சியாளனுடைய அத்தனை உபகரணங்களும், குறிப்புக்களும் தீயில் கருகிச் சாம்பலாயின. மறுநாள், அந்த அழிவைப் பார்த்து விட்டு, அந்த மனிதர் சொன்னார்,

"இந்த அழிவிலும் பெரிய வரம் இருக்கிறது. நம்முடைய எல்லா முட்டாள்தனங்களும் அழிக்கப் பட்டு விட்டன! ஆண்டவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, இனிமேல் நாம் புதிதாகத் தொடங்கலாம்!"

அதற்கடுத்த மூன்றாவது வாரம், அந்த கண்டுபிடிப்பாளர்,  தனது புதிய கண்டுபிடிப்பான  போனோக்ரா ஃப் (கிராமபோன்)-ஐ அறிமுகம் செய்தார்! அந்த விந்தை மனிதரின் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்!


வெற்றி, சாதனை என்பதெல்லாம், பேரிடர், சோதனை, சிக்கல்கள்   என்பதில் இருந்து தான் பிறக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

இளம் பருவ சர்ச்சில், இன்னும் சிறிது நேரம் கவனிக்கப் படாமல் இருந்தால், முக்கிப் போயிருக்க வேண்டியது. பயம் ஆட்டிப் படைத்த நேரத்திலுமே கூட உதவி கோரிக் கூச்சல் எழுப்புவது ஒன்று தான் அந்த நேரத்தில் செய்ய முடிந்தது. அதைச் செய்தபோது, யாரோ ஒருவரது கவனத்தை ஈர்க்கவே வந்து காப்பாற்றுகிறார்.

அதே மாதிரி, பாக்டீரியாக்களால், நோயாளிகள் மரணமடைந்து கொண்டிருந்த நேரம், காரணம் என்ன என்பது புரிகிறது, ஆனால், மருந்து என்ன என்பது தெரியவில்லை! அதே சிந்தனையாக இருந்த  ஃபிளெமிங் கண்ணில், கிருமிகள்  இருந்த தகட்டில் ற்செயலாக, பூசனம் பிடித்த  ஒரு தகட்டில் இருந்த ஒரு விஷயம், கிருமிகளை அறவே காலி செய்து விட்டது படுகிறது. ஆக, இந்த நுண்ணுயிர்க் கொல்லியாக ஒன்று இருக்க முடியும், மருந்தாகப் பயன்பட முடியும் என்பது தெரிய வருகிறது. அடுத்தடுத்த சோதனைகளில் உறுதிப் படுகிறது.

விபத்து எதிர்பாராமல் நடப்பது! அது விளைவிக்கும் சேதமும் கூட அப்படித்தான்!

ஆனால் ஒரு மனிதர், தான் அது வரை மேற்கொண்ட ஆராய்ச்சியில் உருவாக்கிய விஷயங்கள், குறிப்புக்கள் எல்லாமே எதிர்பாராத தீ விபத்தில் மொத்தமாகப் பறி கொடுத்த தருணத்திலும் கூடக் கலங்கவில்லை.
எல்லா முட்டாள்தனங்களும் தடையமே இல்லாமல் ஒழிந்தன என்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். இனிமேல் புதிதாகத் தொடங்கலாம் என்று சந்தோஷப் பட்டுக் கொள்கிறார்! அவர் சந்தோஷப் பட்டுக் கொண்ட மாதிரியே, நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்துவருகின்றன.  


இதே மாதிரித் தான், மின்சாரத்தினால் எரியும் (ஒளிர்விடும்) பல்ப் ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், தாமஸ் ஆல்வா எடிசன் தொடர்ச்சியாகத் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருந்தார். தோல்வி மாதிரியே முயற்சியும் தொடர்ந்தது. வெவ்வேறு விதமான இழைகள், அதில் கடைசியாக ஜப்பானிய மூங்கிலில் இருந்து தயார் செய்யப்பட இழைகளும் அடங்கும்! கடைசியாக டங்க்ஸ்டன் உலோக இழை பொருத்தமாக இருப்பது கண்டறியப்பட்டது. இன்றைக்கும் உலகம் முழுவதும் டங்க்ஸ்டன் இழை கொண்ட குண்டு பல்ப் புழக்கத்தில் இருக்கிறது. இப்போது கூட, உங்களால் ஒரு சிறந்த பல்பை உருவாக்க முடியுமானால், உங்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் பரிசாகக் காத்திருக்கிறது! ரீல் அல்ல! நிஜம் தான்!

சோதனை முடிவுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான தோல்விகளை, எடிசன் எடுத்துக் கொண்ட விதமே அலாதி! " ஒரு விஷயத்தை எப்படியெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் பத்தாயிரம் முறைகளில் இருந்து கற்றுக் கொண்டேன்!"


இங்கே துணுக்குகளாகப் பேசப்பட்டசம்பவங்கள் சொல்வது என்ன?

தோல்வியே வெற்றிக்கு அடிப்படை! அடுத்த படிக்கட்டு!

அதான் எனக்குத் தெரியுமே என்று "அறிவாளி" திரைப்படத்தில் முத்துலட்சுமி திரும்பத் திரும்பச் சொல்லி, டணால் தங்கவேலுவை வெறுப்பேற்றுகிற காமெடியாக மட்டும் பார்த்துவிட்டுப் போய்விடுவதால் எதையும் தெரிந்துகொள்ள முடிவது இல்லை.

வாழ்க்கையில் எதிர் கொள்ளும் ஒவ்வொரு சம்பவத்தையும் நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் மட்டுமே அதன் வெற்றியோ, தோல்வியோ தீர்மானிக்கப் படுகிறது.

இன்றைக்குப் பொருளாதார மந்தம், ஒரு பக்கம் வளர்ச்சி என்பது, மற்ற விஷயங்களை வெகு பள்ளத்தில் தள்ளிவிடுவதாக ஆக்கிக் கொண்டிருக்கும் ஒழுங்கு முறை எதுவுமில்லாத போக்கு, வேலைவாய்ப்புக்கள் சுருங்கிக் கொண்டே போவது, எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் இப்படி ஏராளமானவற்றை ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் சந்தித்தாக வேண்டியிருக்கிறது. பார்க்கும் விஷயங்கள், அத்தனையுமே மன நிறைவைத் தருவதாக இல்லை. பல விஷயங்கள் மன நிம்மதியைக் குலைப்பது போலத் தான் இருக்கின்றன.

அதனால் என்ன? நமக்குப் பிடித்தமான விளையாட்டில், ஆர்வத்தோடு பங்குபெறும் பொது, இப்படி எதிர்மறையான விஷயங்களைப் பற்றி யோசிக்கிறோமா? அங்கே நம்முடைய  அடுத்த மூவ் என்னவாக இருக்க வேண்டும் என்பதிலும், அதைச் செயல்படுத்துவதில் மட்டுமே கவனத்தை வைத்திருக்கிறோம் அல்லவா!

அதே மாதிரித் தான், எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையும், சோதனையும், தன்னுள் ஏராளமான வாய்ப்புக்களைச் சுமந்து கொண்டு தான் வருகிறது என்பதைப் புரிந்து கொண்டாலே, வருகிற வாய்ப்புக்களைத் தவறவிடக் கூடாது என்பதில் மட்டுமே நம்முடைய கவனம் இருக்கும்.

இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால், மிகப் பெரிய அழிவை ஜப்பான் சந்தித்தது. அணுகுண்டு வீசப்பட்டது மட்டுமல்ல, அவர்களுடைய தேசீயப் பெருமிதமே பெரும் சரிவைச் சந்தித்தது. தன்னை விடப் பெரிய வஸ்தாத் எவனுமில்லை என்று இறுமாப்போடு அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த ஒருவன், அவனுடைய  ஆணவத்தின் மீது, பெருமிதத்தின் மீது விழுகிற அடி மாதிரிக் கொடுமையான அனுபவம், பிரச்சினை வேறு ஒன்று இருக்க முடியுமா?

ஜப்பானிய மக்கள் துவண்டு விடவில்லை. தங்களுக்கு விழுந்த அடியை, வலியை ஏற்றுக் கொண்டார்கள். அழிவில் இருந்து மீண்டு வருவதற்கு உறுதி கொண்டார்கள்


அடித்துத் துவம்சம் செய்து விட்டு அப்புறம் தடவிக் கொடுப்பது போலப் பொருளாதார உதவிகளை, அமெரிக்கா செய்தது. உற்பத்தி செய்யப் படும் பொருட்களை வாங்கிக் கொள்ளக் கதவைத் திறந்தது.

ஆனால், ஆரம்ப காலங்களில் மேற்கத்திய மக்களுடைய விருப்பங்கள், தேவைகள் என்ன என்பது, அவர்களுடைய ஆங்கில மொழி போலவே, ஜப்பானியர்களுக்குப் புரியவில்லை. தயாரித்து விற்பனை செய்த பொருட்கள் எல்லாம், தரக் குறைவாக, கேலிக்குரியவைகளாக இருந்தன.  

ஜப்பானிய மக்கள், அந்த ஏளனத்தையும் சகித்துக் கொண்டார்கள். சகித்துக் கொண்ட விதம், வேறு வழியில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடாக இல்லை! தம்முடைய குறைகள் என்ன என்பதை, பதறாமல் சிந்தித்தார்கள். தயாரிப்பதில் ஏற்டும் குறைகள் என்ன என்பதை, தயாரிக்கப் படும் கட்டத்திலேயே கண்டுபிடித்து அங்கேயே சரி செய்தது மட்டுமல்ல, முன்னை விட இன்னும் அதிகம் பயனுள்ளதாக, ஒரு வளர் நிலை மாற்றத்தை, இயல்பான பண்பாடாகவே வளர்த்துக் கொண்டார்கள். ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே தரம் மிகுந்தது என்ற உத்தரவாதத்தை, மிகக் குறைந்த காலத்திலேயே சாதித்துக் காட்டினார்கள்.


இங்கே நாம் பார்க்க வேண்டிய முக்கியமான அம்சம், என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமல் நம்மைத் திகைக்க வைக்கிற, முடக்கிப் போட்டுவிடுகிற சூழ்நிலைகள் அவ்வப்போது வந்துகொண்டே தான் இருக்கும்! 2012  இல் உலகம் அழிந்து விடப் போகிறது  என்று ஒரு கற்பனை உலவிக் கொண்டிருக்கிறது அல்லவா, அதே மாதிரி! கொஞ்சம் நிதானித்துப் பார்த்தீர்களேயானால், இதற்கு முன்னாலும் கூட இதே மாதிரி அச்சம், பீதி ஏதோ வடிவத்தில் கிளப்பி விடப்பட்டுக் கடைசியில்  ஒன்றுமே இல்லாமல் போயிருப்பதைப் பார்க்க முடியும்! 


இத்தனைக்கும் ஆதார சுருதியாக இருப்பது நம்பிக்கை! நம்மால் முடியும் என்கிற தன்னம்பிக்கை! கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது என்றோ எவனோ வேலையில்லாமல் எழுதி வைத்துப் போனதல்ல, கூடி வாழும்போது மட்டுமே மனிதர்களால் உன்னதமான தருணங்களை எட்டிப் பிடிக்க முடிகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிவது தான்!



நானும் நீங்களும் வேறுபட்டுத் தனித்தனியாக நிற்பதற்கு தனித்தனியாக ஆயிரம் ஆயிரம் காரணங்களைச் சொல்ல முடிகிற போது, நாம் ஏன் ஒன்றாக இருக்கமுடியாது என்பதற்கு ஒரே ஒரு காரணத்தையாவது கண்டுபிடிக்க முடியாதா என்ன! வேறுபாடுகளை வளர்த்துக் கொண்டு, பகைமையை, வெறுப்பை வளர்த்துக் கொண்டு போவது மிருகங்களுக்கு வேண்டுமானால்  இயல்பானதாக இருக்கலாம்.

மனிதர்களுக்கு......!

"In the ignorance and darkness of the beginning, faith is the most direct expression of the Divine Power which comes to fight and conquer. "



அறியாமையும்
, இருளும் கூடிய தொடக்கத்தில், நம்பிக்கைஒன்றே மனிதனுக்குத் துணையாக வழங்கப்பட்ட சாதனமாக இருக்கிறது, என்று ஒரு உரையாடலில்  ஸ்ரீ அரவிந்த அன்னை தெளிவுபடச்சொல்கிறார். இன்னொரு இடத்தில், இன்னும் கொஞ்சம் விரிவாக,

“Faith is the movement of the soul whose knowledge is spontaneous and direct.

Even if the whole world denies and brings forward a thousand proofs to the contrary, still it knows by an inner knowledge, a direct perception that can stand against everything, a perception by identity.

The knowledge of the psychic is something which is concrete and tangible, a solid mass. You can also bring it into your mental, your vital and your physical; and then you have an integral faith - a faith which can really move mountains.”


 -ஸ்ரீ அன்னை