Showing posts with label சரத் பவார். Show all posts
Showing posts with label சரத் பவார். Show all posts

சண்டேன்னா மூணு! #அரசியல் #தேர்தல்வானிலை #என்னமோநடக்குது

அரசியல் ஏன் எனக்கு எப்போதுமே பிடித்தமானதாக இருக்கிறதென்றால், எதிர்பாராதது எதுவோ அதையே எதிர்பார்ப்பது அரசியலில் மட்டுமே சாத்தியம்! இதனால் தானோ என்னவோ நம்மூர் அரசியலில் சின்னச்சின்ன மாற்றங்கள் தெரிந்தால் கூட குய்யோமுய்யோவென சோனியா காங்கிரஸ் கூவுவதும், என்னமோ நடக்கப் போகிறதென்று மற்றவர்கள் திகிலுடன் காத்திருப்பதும் தொடர் கதையாகிக் கொண்டு வருகிறது. வெள்ளியன்று அன்றுஉத்தராகண்ட் மாநிலமுதல்வர் தீரத் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜியைக் குறிவைக்கத் தான் என சோனியா காங்கிரஸ் அலற ஆரம்பித்துவிட்டது. கொரோனா காலம் என்பதால் இடைத்தேர்தல் சாத்தியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்வதற்கு முன்பாகவே தீரத் ராவத் காரணம் சொல்லி ராஜினாமா செய்திருப்பதுதான்! தீரத் ராவத் கடந்த மார்ச்சில்தான் உத்தராகண்ட் முதல்வராகப் பொறுப்பேற்றார். சட்ட சபை உறுப்பினராக இல்லாத அவர் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடந்து அதில் ஜெயித்தாக வேண்டும். தற்சமயம் MLA வாக இல்லாத மம்தா பானெர்ஜியும் கூட அதே மாதிரி  6 மாதங்களுக்குள் தேர்தல் நடந்து வெற்றி பெற்றாகவேண்டும் என்கிற ஒப்பீடு சரிதான்! காங்கிரஸ் கட்சி இதில் அலறுவதுதான் வேடிக்கை! விநோதமும் கூட!

   


சோனியா காங்கிரஸ் அதிகம் கவலைப்படவேண்டிய பஞ்சாப் மாநில கட்சி விவகாரத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை என்பது இன்னொரு அரசியல் வினோதம். சோனியா & கோ தயவில்லாமல் 2017 இல் பஞ்சாப் தேர்தலில் ஜெயித்துக் காட்டியவர் அமரீந்தர் சிங் என்பது ராகுல் காண்டி வகையறாவுக்கு உறுத்தலாக இருப்பதில், உட்கட்சிப்பூசல் காரணமாக வருகிற 2022 தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை என்று சோனியாவும் மக்களும் நினைக்கிற மாதிரித் தெரிகிறது, இந்த லட்சணத்தில் 44 ஆண்டுகளாகக் கைவிட்டுப் போன மேற்குவங்கம் குறித்து கூக்குரல் எழுப்புவது, காங்கிரசால் மட்டுமே நடத்திக்காட்ட முடிகிற அரசியல் தமாஷா!


இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் கூமி கபூர் எழுதி வரும் அரசியல் கிசுகிசு பத்தியில் ஷரத் பவார் பற்றி ஒரு சுவாரசியமான ஊகத்தைச் சொல்கிறார். பிரசாந்த் கிஷோருடன் பவார் தனியாகச் சந்தித்தது 2022 இல் சட்டசபைத்தேர்தல்களை அடுத்து வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக ஷரத் பவார் நிற்பது பற்றித்தான் என்கிறார். 80வயதான ஷரத் பவாருக்கு அதில் ஆசை இருந்தாலும் நடக்குமா என்பது உத்தரப்பிரதேசத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தது என்று சொல்வதே, பகல்கனவு என்பதையும் சேர்த்துச் சொல்வதாக இருக்கிறதோ? (சமீபத்தைய உள்ளாட்சித் தேர்தல்களில் பிஜேபி மொத்தமுள்ள 75 இடங்களில் பிஜேபி 67 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது)  கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நிர்வாகத்தில் ஷரத் பவாருக்கு இதுவரை இருந்த ஆதிக்கம், சமீபத்தில் நடந்த தேர்தலில் பிஜேபியால்  உடைக்கப்பட்டிருப்பதும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறவெல்லாம் வேண்டாம், சில திருத்தங்கள் செய்தால் போதும் என்று பவார் பல்டி அடித்திருப்பதும் தேசிய அளவில் மாற்றம் வருகிறதோ இல்லையோ, மகாராஷ்டிரா அரசியலில் ஏதோ மாற்றம் வருவதற்கான அறிகுறி என்றுதான் தோன்றுகிறது.


இளவரசருக்குத் துதிபாடுவது திமுகவினருக்கு சரியாகத் தோன்றலாம்! ஆனால் இப்படி அதீதமான ஆர்வக் கோளாறுகள் பெரும் சேதத்தைத்தான் ஏற்படுத்தும் என்பது அனுபவம். என்னுடைய வருத்தமெல்லாம் இப்படி மதுரையின் பெயரைக் கெடுக்கிறமாதிரியே புற்றீசல் மாதிரிக் கிளம்பி வருகிறார்களே என்பது மட்டும்தான்! போஸ்டர் அடித்தே போஸ்டைப்பிடிப்பது ஒச்சுபாலு காலத்திலிருந்தே மதுரை திமுகவைப்பிடித்திருக்கும் பெருவியாதி.


   கவனித்துப்பார்த்த ஒரு விவாதம்

மீண்டும் சந்திப்போம்.        

ஒருநாள் கூத்துக்கு மீசை ::: சரத் பவார்! (ஃபரூக்) அப்துல்லாக்கள்!

மேற்கு வங்கம், தமிழ்நாடு இரு மாநில சட்டசபைத் தேர்தல்களில் வாடிக்கையாளரை ஜெயிக்க வைத்த மிதப்போ என்னவோ, பிரசாந்த் கிஷோர் அகில இந்திய அளவில் தன்புகழைப் பரப்ப முனைந்திருக்கிறார் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப்போய்விடலாம் தான்!ஆனால் அவருடைய திட்டத்தில் காங்கிரசை ஓரம்கட்டி விட்டு சரத்பவாரை வைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒன்றை நேற்றுமுன்தினம் ஏற்பாடு நடந்திருக்கிறது.  காங்கிரசை விட்டுவிட்டு கலந்துகொள்ள விரும்பாமல் திமுக மற்றும் ஒன்றிரண்டு கட்சிகள் தவிர்த்துவிட்டன என்பதிலேயே பிரசாந்த் கிஷோர் முயற்சி தொடங்கும்  முன்னமே தோற்றுவிட்டது.

இந்திய அரசியலில் முன்றாவது, 4வது அணி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என ஆரம்பிக்கிற சேகர் குப்தா மெதுவாக 20% ஓட்டை வைத்திருக்கும் காங்கிரசை ஒதுக்கிவிட்டு மூன்றாவது அணியை நினைத்துக் கூடப்பார்க்க முடியாது என்று தன்னுடைய காங்கிரஸ் விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்ட மாதிரியே இந்த 23 நிமிட வீடியோ இருக்கிறது. செவ்வாய்க் கிழமையன்று டில்லியில் உள்ள சரத் பவார் வீட்டில் நடந்த கூட்டத்தில் பவார் வந்ததே தெரியாத அளவுக்குக் கொஞ்ச நேரம் இருந்தமாதிரி போட்டோ செஷனில் தலை காட்டிவிட்டு தன்னுடைய கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழுக்கூட்டத்தில்  ஆலோசனை செய்யப் போய்விட்டார் என்கிறது செய்தி. TOI நையாண்டி இங்கே.


ஜூன் 11,21,23 என்று இரண்டுவாரங்களுக்குள் சரத் பவாரைத் தேடிவந்து பிரசாந்த் கிஷோர் மூன்றுமுறை சந்தித்தார் என்பதில் என்ன உள்குத்து இருக்கும் என்று ஊடகங்கள் தலையைப்பிய்த்துக் கொண்டிருக்கின்றன. அதற்காகவே சந்தித்தார்களோ என்னவோ?

சரத் பவாருக்கு 80 வயதாகிவிட்டது. மகாராஷ்டிராவில் ஒரு சில ஏரியாக்களில் மட்டுமே செல்வாக்குள்ளவர் என்றாலும் கட்சிபேதமில்லாமால் சர்வ கட்சிகளுடனும்  சுமுகமான உறவை மெயின்டைன் பண்ணுகிறார் என்பதாலேயே பவாரை பிரதமர் முகமாக 2024 இல் காட்ட முடியுமா? அல்லது பவார் கைகாட்டுகிற ஒருவர், மம்தா பானெர்ஜி என்றேகூட வைத்துக் கொள்வோம், பிரதமராகி விட முடியுமா? சரத் பவாருக்குத் தன்மகள் சுப்ரியா சுலேவை மகாராஷ்டிர முதல்வராக்கிப் பார்க்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கும் இது சரியான தருணமல்ல. அப்புறம் எதற்காக பவாரை  முன்னிறுத்தி இப்படி ஒரு களேபரம்? !!   


இருவருடங்களுக்கு  முன் ஆர்டிகிள் 370 நீக்கப் பட்ட பிறகு  ஜம்மு காஷ்மீர் அரசியல்கட்சித்  தலைவர்கள் பிரதமருடைய அழைப்பையேற்று டில்லியில் இன்று சந்தித்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் முதல்வர்களாக இருந்த நான்குபேர் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, (NC) மெஹபூபா முஃப்தி (PDP), குலாம் நபி ஆசாத் (Cong) உடன் ஜம்முகாஷ்மீரிலுள்ள உதிரிக்கட்சித்தலைகள் சிலரும் கலந்துகொண்ட கூட்டத்தில் என்ன பேசப் பட்டதாம்? NDTV செய்திகளின் படி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை உரியநேரத்தில் தர உறுதியளித்தார் பிரதமர் என்று சொன்ன கையோடு இந்த சந்திப்பின் முக்கிய அஜெண்டாவாக தொகுதி மறுவரையறை செய்வதற்காக ஒத்துழைப்பைக் கோரியதுதான் இருந்தது என்றும் சொல்கிறார்கள். தேர்தல்கள் நடத்தும் முன் தொகுதிகளின் எல்லை, எண்ணிக்கையை  மறுவரையறை செய்ய அரசின் உத்தேசத்தை விவாதிக்கத்தான் இந்தக்கூட்டமே. பெரும்பாலானோர் ஆதரவு இருந்ததாகச் சொன்ன கையோடு,ஒமர் அப்துல்லா அநேகமாக எல்லாத்தலைவர்களுமே இந்த மறுவரையறை விஷயத்தில் அதிருப்தியோடு இருந்ததாக சொன்னாரென்று ஒரு பிட்டையும் சேர்த்துப் போடுவது NDTV இஷ்டைல். 

Omar Abdullah told reporters that "almost all leaders" were unhappy with delimitation only in Jammu and Kashmir. "In other states, delimitation will be taken up in 2026, why has been Jammu and Kashmir been singled out? We told the PM delimitation is not needed," he said, adding that "trust has broken between the Centre and Kashmir".  என்பதன் பின்னால் இருக்கிற அப்துல்லாக்களின் வஞ்சகம்  என்ன என்று நினைவுபடுத்திக்கொள்ள முடிகிறதா? நினைவு படுத்திக் கொள்ளவில்லை என்றால் அப்துல்லாக்கள் கேட்பது நியாயமாகத்தானே இருக்கிறது என்றுதான் தோன்றும். 

1980களின் மத்தியில் ஃபரூக் அப்துல்லா முதல்வராக இருந்த சமயத்தில் கொண்டுவந்த சட்டத்திருத்தங்களின் படி ஜம்மு காஷ்மீரில் வாக்களிக்கும் உரிமை அங்கே நீண்ட காலமாக வசித்துவந்த பஞ்சாபிகளுக்கும், லடாக் பகுதி மக்களுக்கும் மறுக்கப்பட்ட வஞ்சகம் delimitation இப்போது கொண்டுவரப்பட்டால் வெட்டவெளிச்சமாகி விடும் என்பதில் அப்துல்லாக்கள்  கவலை, அச்சம், புரிந்து கொள்ளக்கூடியதே! காஷ்மீரின் ஆதிக்குடிகளான பண்டிட்டுகளை அச்சுறுத்தி மாநிலத்தைவிட்டே ஒழித்த கதை என்று இன்னமும் பலவிஷயங்கள் இருக்கின்றன  

அப்துல்லாக்கள்.  முஃப்திக்கள் சூறையாடுகிற இடமாக பாகிஸ்தானிகளுக்கு இடம்கொடுக்கிற மாநிலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு இதுநாள்வரை இருந்தது போதாதா?  

மீண்டும் சந்திப்போம்.    

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் மஹாராஷ்ட்ரா! சரத் பவாருக்கும் அடி சறுக்கும்!

இந்தமாதத்துவக்கத்தில் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடி மருந்துகளுடன் ஒரு கார் பிடிப்பட்டதைத் தொடர்ந்து வரிசையாக பூதங்கள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன. மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங்கை ஒரு டம்மி இடத்துக்குப் பணிமாற்றம் செய்து பிரச்சினையை முடிக்க உத்தவ் தாக்ரே முயன்றது இன்னும் விபரீதமாகப் பயணிக்கத் தொடங்கி இருப்பது இப்போதைய அரசியல் பரிதாபம். இடமாற்றம் செய்யப்பட்ட போலீஸ் கமிஷனர் முதல்வர் உத்தவ் தாக்ரேவுக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதில், இப்போது NIA விசாரணை வளையத்துக்குள் இருக்கும் சப் இன்ஸ்பெக்டர்/ என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சச்சின் வாசே மாதாமாதம் 100 கோடி ரூபாய் வசூலித்துத் தரவேண்டுமென உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நிர்பந்தம் செய்ததாக சொல்லியிருக்கிறார். போதாக்  குறைக்கு இந்தவிவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பரம் பீர் சிங் மனு தாக்கல் செய்திருக்கிறார். சரத் பவார் தனது கட்சி ஆசாமி அனில் தேஷ்முக்குக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  


முகநூலில் பிரகாஷ் ராமசுவாமி இந்தவிவகாரத்தின் பின்னணியை கடந்த மூன்று நாட்களாகப் பதிவிட்டு வருகிறார். வெறும் காசுபறிக்கும் வேலை, மஹா ஊழல் என்பதையும் தாண்டி இதன்பின்னால் ஒரு சதிவேலை இருப்பதாக ஒரு சந்தேகம் வலுவாக எழுந்திருக்கிறது.  

பாகம்-1

முதலில் சச்சின் வாஸே என்கிற சப்-இன்ஸ்பெக்டர் யார் என்று பார்ப்போம். சச்சின் வாஸே 70இல் கோலாபூரில் பிறந்தவர். மஹாராஷ்ட்ரா போலீஸில் அஸிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர். ஆனால் மற்ற போலீஸ் மாதிரி தொப்பை, லத்தி மாதிரி இல்லாமல்.. ஒரு கை தேர்ந்த என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். 63 பேரை இதுவரை போட்டுத்தள்ளியவர்.

இந்த ஆள்.. ஒரு என்கவுன்டர் கேஸில் வசமாய் சிக்கிக் கொள்ள.. கோர்ட் இந்த ஆளை போலீஸ் ட்யூட்டியை விட்டே தூக்கியது. அது என்ன..? இது ஒரு 17 வருட முந்தைய கேஸ்.

நான் மும்பையில் வசித்து, பையை தூக்கிக்கொண்டு, தினமும் 7.52, 8.04, 8.32 என்று விநோதமான நேர ரயில் பிடித்து ஓடிய காலமது. அதாவது டிசம்பர் 2002 இரண்டாம் தேதி காட்கோபர் ஸ்டேஷனில் ஒரு பாம் வெடித்தது. வழக்கம்போல் இதற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று மய்யனார்கள், அமைதி காக்க சொன்னார்கள். ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்பார்கள். இந்த தர்க்கம்லாம் அப்போது புரியவே புரியாது. இப்போது.. ஹீரோ சச்சின் வேஸேவிடம் இந்த பாம் ப்ளாஸ்ட் கேஸ் வருகிறது. நான்கு பேரை போலீஸ் போடாவில் (POTA) வில் கைது செய்ய..அதில் ஒருவர்தான் 27 வயதான யூனுஸ். இவர் துபாய் சாப்ட்வேர் என்ஜினீயர். தங்களின் வாப்பா அம்மியை பார்க்க மும்பை வந்தவரை, 25 Dec 2002 இல்..போலீஸ் கைது செய்தது. இப்போது இந்த வழக்கு கோர்ட்டுக்கு வருகிறது. கடைசியாக யூனுஸை ஜனவரி 6 2003 இல் பார்த்ததாக சாட்சிகள் கிடைத்தது.

வாஸேவின் டீம் அடித்த அடியில் ரத்தம் கக்கி யூனுஸ் லாக்அப்பிலேயே இறந்து விட்டதாக தெரிகிறது.ஆனால், போலீஸ் தரப்பு, யூனுஸ் தப்பி விட்டார். அவரை துரத்தி சென்ற போலீஸ் வேன், ஏரி ஒன்றில் விழுந்து விட்டது என்று வாஸே, கோர்ட்டில் சத்தியம் அடித்து.. நஹி மாலும் பாய் சாப் என்று சொல்ல, கோர்ட் இதை நம்ப முடியாத சமயத்தில்.. யூனுஸின் தந்தை, ஹேபியஸ் கார்பஸ் ஒன்றை கோர்ட்டில் போட்டு யூனுஸை தேட...

கோர்ட் உத்தரவு பிறப்பித்து.. யூனுஸை தேட சொன்னதுல்.. மும்பை சிஐடி ப்ராஞ்ச்.. மொத்த கேஸ் கட்டையும் பிரித்து மேய்ந்ததில்.. அண்ணல் ச்ச்சின் வாஸேயின் கதை, கற்பனை, டைரக்‌ஷன் எல்லாம் வெளியில் வந்தது. வாஸேவை உடனடியாக வேலையிலிருந்து தூக்க கோர்ட் உத்தரவிட, என்கவுன்டர் போலீஸ்கார்.. உடனடியாக சாதாரண மனுஷன் ஆனார். அதோடு உடனடியாக, அவரை போலீஸ் கைது செய்தது.

மனுஷன் 2004 இல்.. பெயிலில் வந்தவர் பெயிலிலேயே இருந்தார். இப்போது சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பீடு கோர்ட்டில் 17 வருஷமாய் படு ஸ்பீடாய் இந்த கேஸ் நகர்ந்து கொண்டிருக்கிறது.இந்த கேப்பில், சச்சின் வாஸே சிவசேனா பார்ட்டியில் சேர்ந்து விட்டார்.. பார்ட்டிக்கு பணம் வசூல் பண்ணுவது, மிரட்டல் போன்ற குண்டாகர்தியில் மும்முரமாய் இருந்த போது.. சிவசேனா, ஒரு ஜனநாயக விபத்தொன்றில் ஆட்சியை பிடித்தது.#vase gate பாகம்1/5.   தொடரும்.

பாகம்-2

மார்ச் 2004 இல் சச்சின் வஸே கைதாகி, சஸ்பென்ட் ஆனவுடன், இவரை ஏறக்குறைய போலீஸ்துறை மறந்தேவிட்டது. 63 பேரை என்கவுன்டர் செய்த போலீஸ்.. கைதிலிருந்து தப்பிக்க, ஷிவசேனாவில் சேர்ந்து.. எங்கெல்லாம் அயோக்கியர்கள் இருக்கின்றார்களோ.. அவர்களிடம் பணம் பறித்து.. மும்பை அரசியல் வாதிகளான ஷிவசேனாவிற்கு.. வசூல் மன்னனாக இருந்தார். நடுவில் ஃபத்னாவிஸ் ஆட்சியை பிடிக்க.. உத்தவ் தாக்கரே.. ஃபத்னாவிஸிடம் சச்சின் வஸேவை போலீஸ் ஃபோர்ஸில் எடுத்துக்கொள்ள நிர்பந்திக்கப் பட்டது. 

நன்றாக கவனித்தீர்களேயானால்.. பத்னாவிஸ், ஒரு முடிவு எடுக்கு முன், அதன் back up papers மற்றும்.. அது அரசியல்ரீதியாக சரியானதா..? என்று ஆராய்ந்துதான் எடுப்பார். இல்லையென்றால்.. இந்த ஷிவசேனை சிறுத்தைகள், என்றோ ஃபத்னாவிஸின் ரத்தத்தை, குடித்திருக்கும். சமீபத்திய உதாரணம்.. மெட்ரோ ரயில், மற்றும் புல்லட் ரயில் பணத்தை பத்திரப்படுத்தியது. பத்னாவிஸிடம், கேட்டவுடன், மனுஷன், இப்போது அட்வேட் ஜெனரலிடம் பேசியதில், வழக்கு கோர்ட்டில் இருக்கும் போது, இது தேவையில்லாத தலைவலி, இந்த ஆள் ஒண்ணும் யோக்கிய சிகாமணி இல்லை என்கிற போலீஸ் சர்டிபிகேட்டுடன் உத்தவ் தாக்கரேயின் விருப்பத்தை அரபிக்கடலில் தூக்கி எறிந்து விட்டார் பத்னாவிஸ். இப்படி 2018 இல் ரிஜக்ட் ஆன வஸேவின் அப்பாயின்மென்ட் ஆர்டர்.. உத்தவின் அகாடி அவதாரத்தில் உயிர் பெற்றது.

பரம்பீர் சிங்தான் மும்பை போலீஸ் கமிஷனர். உதவாக்கரை சீஃப் மினிஸ்டர் பரம்பீரிடம்.. வழக்கமாய் சஸ்பென்ட் ஆன அதிகாரிகளை, ரிவ்யூ பண்ணுவீர்கள் தானே..? அப்படி, செய்யும்போது.. சச்சின் வஸே, மஹாராஷ்ட்ரா போலீஸுக்குள் சேர்ந்து இருக்க வேண்டும், என்கிற வாய்மொழி உத்தரவின் பேரில், ஜூன்5 2020 அன்று இரவு 10 மணிக்கு, ஒரு மீட்டிங் கூட்டப்பட்டது.

இரவு 11 மணிக்கு, ஒரு கமிட்டியை கூப்பிட்டு, வஸேவை போலீஸ் துறைக்குள் உள்ளே எடுக்க என்ன வழி..? என்று கேட்ட பத்தாவது நிமிடத்தில்.. எந்தெந்த போலீஸ் காரர்கள் வேண்டும் என்கிற லிஸ்ட் ரெடியாகி, கோவிட்-19 காரணம், போலீஸ் ஆசாமிகள் கிடைக்காத காரணத்தால் இவர்களை மீண்டும் வேலைக்கு எடுக்கிறோம் என்கிற மஹாராஷ்ட்ர அரசு கஜெட் அறிவிப்பு இரவு 2 மணி, அதாவது ஜூன் 6 அதிகாலை கையெழுத்தாகி, 3 மணிக்கு ப்ரின்ட் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஜூன் 6 அதிகாலை 4 மணிக்கு சச்சின் வஸே போலீஸில் மீண்டும் ஆர்ம்ஸ் டிவிஷனுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டார். பத்து மணிக்கு மும்பை போலீஸ் கமிஷனர் ஆபீஸில் ஆர்டர் வாங்கிகொள்ள அழைத்து.. க்ரைம்ப்ராஞ்சில், மீண்டும் பழைய பதவியில் வைத்து அதாவது க்ரைம் ப்ராஞ்சில் வைத்து அழகு பார்த்தனர் தாக்கரேக்கள்.

அவரிடம், உடனே, ஹ்ரிதிக்-கங்கணா ஃபேக் இமெயில் கேஸ், அர்னபின் டிஆர்பி கேஸ், அப்புறம் அன்வே நாயக் என்கிற கான்ட்ராக்டரின் தற்கொலை கேஸ் எல்லாவற்றையும் தரப்பட்டது.

அன்வே நாயக்கின் மனைவியை ஷரத் பவார் கொஞ்ச நாள் முன்னர் சந்தித்த பின்புலம் அதிகார மட்டத்தில் பேசப்பட்டது. அந்த நேரத்தில்தான், அர்னப் கோஸ்வாமி, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கேஸை, தோண்டி துருவி ஆராய்ந்து.. அது மும்பையின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதியின் வீட்டிற்கு வழிகாட்டியது என்றவுடன், வெகுண்டெழுந்த சஞ்சய் ராவத்தும், தாக்கரேக்களும்.. தனிப்பட்ட வன்மத்தை காட்ட முடிவெடுத்தனர். ஏற்கெனவே, ஷரத் பவாருக்கு, அர்னாப் மீது மரண காண்டு. அப்போதுதான், ஒரு ஸ்வாமிஜியை, ஒரு கும்பல் அடித்தே கொன்றது. அதற்கு பின்னணியில் அன்னை மைனோ இருப்பதாய் அறிவித்த அர்னாபின் கார் மீது தாக்குதல் நடந்தது.

அகாடிகள் சேர்ந்தனர்.. அர்னப்பை நவம்பர் 4 2020 கைது பண்ண, பரம்பீர் சிங்கிற்கு உ தாக்கரே அரசு அனுமதி அளித்தது.. நான் சச்சின் வஸே.. மும்பை க்ரைம் ப்ராஞ்ச் சப்இன்ஸ்பெக்டர். உன்னை.. அர்னப் கோஸ்வாமியை கைது பண்ண வந்திருக்கிறேன்.. You have a right to remain silent...and that too to Arnab..

இங்கிருந்து சச்சின் வஸேவின் லீலைகள் படு வேகமடைந்தது..அடுத்த பாகங்களில்.. இன்னும் சில சஸ்பென்ஸுடன் பார்ப்போம். முடிந்தால் ஷேர் பண்ணுங்கள்.#vazegate பார்ட் 2/5.    தொடரும்

பாகம்-3

நீண்ட பதிவு.. முடிஞ்சளவு இன்டரெஸ்டிங்காக தந்திருக்கிறேன்.. முடிந்தால் ஷேர் பண்ணுங்க..

முகேஷ் அம்பானியின் வீடு, மும்பையின் மையப் பகுதியான கார்மைக்கேல் ரோடில் இருக்கிறது. அந்த வீட்டின் பெயர் ஆன்டில்லா.. அதைப்பற்றிய விவரம் தேவையில்லை. 24/7 செக்யூரிடி கார்டுகள் சுற்றி வரும் இந்த வீட்டு காம்பௌன்டின் அருகில், ஒரு சுபயோக சுபதினத்தில் அதாவது February 25 அன்று..தவறான திசையில், ஒரு ஸ்கார்ப்பியோ வெகுநேரமாய் நின்று கொண்டிருந்ததை கவனித்த செக்யூரிடி மேனேஜர்கள்.. போலீஸூக்கு ஃபோன் பண்ண.. போலீஸ் அந்த காரை துழாவியதில்..  20 ஜெலடின் குச்சிகள், மும்பை இந்தியன் கொடி, ஒரு கடிதம்.. இதில்.. இது ட்ரையிலர்தான்...முழுபடம் விரைவில் என்று.. ஜயிஷ் உல் ஹிந்த் என்கிற தீவிரவாத இயக்கம் பெயர் இருந்தது.. அதில் மொத்த அம்பானி குடும்பத்தை அழித்து விடுவோம் என்று எழுதப்பட்டு இருந்தது. முகேஷ் மற்றும் நீடா அம்பானிக்கு இந்த கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இதையெல்லாம் காமெராவில் பார்த்போது.. ஸ்கார்ப்பியோவின் பின்னால் ஒரு வெள்ளை இன்னோவாவும் ஒட்டிக்கொண்டே வந்தது. PPE சூட் போட்ட ஆசாமி ஸ்கார்ப்பியோவில் இருந்து போனதும் தெரிய வந்தது...

போலீஸ்.. இதையெல்லாம் கைப்பற்றி, இது யாராக இருக்கும் என்று விசாரிக்க ஆரம்பித்த போது, ஜெயிஷ் உல் ஹிந்த்.. ஆனால்.. அதே சாயந்திரம்.. அய்யா சாமி.. எங்களுக்கும் இந்த குண்டு வைத்த விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமில்லை என்று இந்த ஜெயிஷ் உல் ஹிந்த் அலறியபோது.. மத்திய அரசின் NIA களத்தில் இறங்க ஆரம்பித்தது..

இந்த ஸ்கார்ப்பியோ முதலில் யாருடையது என்று விசாரிக்க ஆரம்பித்தபோது.. இதன் சேஸிஸ் அழிக்கப்பட்டு இருந்தாலும் இதை ஃபாரென்ஸிக்கில் எளிதாய் கண்டுபிடித்துவிடலாம்.. இந்த ஸ்கார்பியோ தானேவில் வசிக்கும் சாம் என்கிற ஒரு இன்டீரியர் டிஸைனருடையது என்று கண்டுபிடித்தார்கள். தானே நவ்பாடாவில் வசிக்கும் இவரது வீட்டை போலீஸ் தட்டியபோது.. கதவைத்திறந்த சாம்..இந்த காரை இன்டீரியர் பண்ண மான்ஸுக் ஹிரேனிடம் தந்தேன்.. பில் 2.6 லட்சம். என்னிடம் பணம் இல்லாத காரணத்தால்.. கொஞ்ச நாள் நீ இந்த வண்டியை ஓட்டு, பின்னர் காசு தந்து திருப்பி வாங்கிக்கொள்கிறேன் என்றார். அதாவது மாப்பிள்ளை நானில்லை, ஆனால் அவர் சட்டை என்னோடது என்றார். இந்த ஸ்கார்ப்பியோவை இப்போ அவர் தான் வைத்திருக்கிறார் என்றார்.. இனி தேதி வாரியாக இந்த விஷயத்தை அலசுவோம்..

February 26 : இந்த ஸ்கார்ப்பியோ மன்ஸூக் ஹிரனுக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டு, மன்சூக்கை மும்பை ATS விசாரிக்க அழைத்துச்சென்றது.

இந்த மன்ஸூக்கிடம் விசாரித்ததில்.. ஆமாம் இந்த கார் சாம்மின் கார்தான்.. இந்த கார் காணாமல்போனது.. காணாமல் போன அன்று நான் ஒரு வேலையாக மும்பை க்ராஃபோர்ட் மார்கெட்டுக்கு போனேன்.. இது விக்டோரியா டெர்மினஸ் அருகில் இருக்கறது. கார் மக்கர் பண்ணியதால்..ரோடின் நடுவில் அதாவது Mulund-Airoli லிங்க் ரோடில் நிறுத்திவிட்டு ஓலாவில் போய் விட்டேன். பிஸினஸ் முடித்துவிட்டு வந்து பார்த்தால் இரவில் கார் காணவில்லை.. அதான் கார் காணவில்லை என்று ஒரு எப்ஐஆர் கூட பதிவு பண்ணினேன் என்றார். என்ஐஏ எப்ஐ ஆர் பற்றி விசாரிக்க ஆரம்பித்தது .. 🙂 இந்த எப்ஐஆரை பதிவு பண்ண வஸே தானே போலீஸை ப்ரஷர் பண்ணி உடனடியாய் வாங்கியதும் தெரிய வந்தது.

February 27:டெலிக்ராம் அக்கவுன்ட் ஒன்று.. ஜெயிஷ் உல் ஹிந்த்..என்று கூறிக்கொண்டு, மிகப்பெரிய தொகையை, மொனிரோ என்கிற க்ரிப்டோ கரன்ஸி மூலம் பணத்தை மாற்றச்சொல்லி.. மிரட்டல் விட்டது... அதே தினத்தில் மன்சுக், சச்சின் வஸேயுடன் டொயேடோ ப்ராடோ காரில் மும்பை ATS ஆபீஸில் நுழைவதை க்ரைம் ப்ராஞ்ச்சின் சிசிடிவி பதிவு செய்திருந்தது..

மார்ச்2: மன்ஸூக் ஹிரேன்...மஹா முதல்வர் உத்தவ்வுக்கும், அனில் தேஷ்முக்- மஹா உள்துறை மினிஸ்டருக்கு, மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்குக்கும், தானே போலீஸ் சீப் விவேக் பான்ஸல்கருக்கும் கடிதம் எழுதினார்.. NIA என்னை டார்ச்சர் பண்ணுகிறது.. நான் ப்ராது கொடுத்தவன்.. என்னை குற்றவாளியாக NIA பார்க்கிறது என்றார்.மார்ச்4: டாவ்டே என்கிற காந்திவிலி க்ரைம் போலீஸ் ஒருவரிடம் இருந்து போன் வந்தது மன்சூக்குக்கு.. தானே கோட்பந்தர் ரோட்டில் வந்து மீட் பண்ணு என்று.. அதன் பின்னர் ஐந்து மணி நேரத்தில் மன்ஸூக் மாயமானார்.

மன்ஸூக்கின் உடல் கல்வா creek எனப்படும் அரபிக்கடல் பேக்வாட்டர் பகுதியில் கிடைத்தது. மனஸூக் தற்கொலை செய்துகொள்ள கல்வா க்ரீக்கில் குதித்திருக்கலாம் என்று மும்பை போலீஸ் உடனடி ஜோஸியம் சொல்லியது. ஆனால் தற்கொலை செய்து கொள்பவர், வாய் நிறைய துணி அடைக்கப்பட்டு, கோவிடுக்காக மாஸ்க் அணிந்தும், மண்டையில் அடிபட்டும் ஏன் தற்கொலை செய்து கொள்ளவேண்டும்..? என்ற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. NIA எழுப்பியது..

மார்ச்5: மஹாவின் முந்தைய முதல் மந்திரி பத்னாவிஸ் சட்டசபையிலேயே..வஸேயும் மன்ஸூக்கும் இந்த குண்டு வைத்ததில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றார்.இருவரும் தொடர்பில் இருந்தார்கள் என்றார். 

மார்ச்6: மன்ஸூக்கின் குடும்பம், இந்த சாவை ஏற்க மறுத்து.. உடலை வாங்க மறுத்தது. மன்ஸூக் சொன்னது போல்.. அவரை டார்ச்சர் பண்ணி இருக்கிறார்கள் போலீஸ் என்றார்கள்.. அவர் தற்கொலை பண்ண சான்ஸே இல்லை என்றார்கள். மன்ஸூக்கின் போனின் கடைசி லொகேஷன், தனஞ்செய் காவ்டே என்கிற ஷிவசேனை நேதாவின் வீட்டருகில் இருந்ததாய் காட்டியது. தனஞ்செய்யும் மன்சூக்கும் 2017 கேஸ் ஒன்றில்.. மிரட்டி பணம் பறித்த  கூட்டாளிகள். NIA வஸேவை ரிமான்டிலெடுக்க கோரியது.

மஹா அரசு, ஆன்டிலா கேஸ், மன்சூக்கேஸ், திருடப்பட்ட ஸ்கார்ப்பியோ கேஸை மும்பை ATSக்கு மாற்றியது. இதெல்லாம் NIA க்கு வரும்.. வடிவேல் பீச் குதிரை மாதிரி..மார்ச்8: ஆன்டிலா கேஸை NIA கையிலெடுத்தது. இதைவிட சூப்பர் விஷயம் இதோ..

மார்ச்11: தில்லி போலீஸ், இந்தியன் முஜாஹிதீன் ஆசாமியின் திஹார் செல்லில் இருந்து, அம்பானி குடும்பத்துக்கு விட்ட மிரட்டல் மொபைலை பறிமுதல் செய்தது. இந்த செல்லில் இருந்துதான் ஜெய்ஷ் உல் ஹிந்த் டெலிக்ராம் அக்கவுன்டே உருவாக்கப்பட்டது. இந்த செல்லின் ஐபியை மாஸ்க் பண்ண தோர் எனும் ப்ரௌசரை உபயோகித்தனர் குற்றவாளிகள்.. TOR ப்ரௌசர் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஹாக்கர்ஸ், தீவிரவாதிகள் உபயோகிக்கும் ப்ரோசர்.. உங்கள் ஐபி.. காரியர் எல்லாம் மாஸ்க் பண்ணலாம்..

செமல்ல..?  இன்னும் பல திருப்பங்களுடன் அடுத்த பாகம் விரைவில்.#vazegate பார்ட்-3/5.  தொடரும்....                  

பாகம்-4

மார்ச்14:  இந்த ஸ்கார்பியோ பின்னால்  ஒட்டிக்கொண்டே வந்த இன்னோவாவை, NIA பிடித்தனர். அது கிடைத்தது, மஹா க்ரைம் பிராஞ்ச்சில். அது போலீஸ் காராம்.. நம்ம வஸே உபயோகித்ததாம். சுத்தம். பாம் வைக்க போலீஸ் கார். என்ன நாடு இது..? என்று தோன்றுகிறது அல்லவா..? இப்போது சஞ்சய் ராவத் சொல்கிறார்.. வஸே ரொம்பவைம் திறமையான ஹானஸ்ட் ஆபீஸர்ன்னு. ஒத்தை செருப்பை கழட்டி கையில் எடுத்த பொதுஜனம்.. இப்படியான போலீஸை அடிப்பதா.? இல்லை இப்படியான அரசியல்வாதியை அடிப்பதா..? என்று கன்ஃபியூஷனில் அலைவதாக கேள்வி.

சிசிடிவி கேமரா படம் பிடித்ததில்.. மன்ஸூக்கை, வஸே பார்த்து பேசியதும்.. பிபிஈ கிட் போட்ட வஸே ஆன்டில்லியாவில் பாம் வைத்ததுமே தெள்ள தெளிவாக பதிவாகி இருக்கிறது. அடுத்த நாள் NIA வஸே பிபிஈ கிட்டின் உள்ளே அணிந்த ஷர்ட்டையும் கண்டுபிடித்து கைப்பற்றியது.ஐபிஎல் சூதாட்டத்திலும் வஸேக்கு பங்கு உண்டு என்கிறார் பிஜேபியின் ரானே. இதைத்தவிர வஸே வசிக்கும் சொஸைடியின் சிசிடிவி ரிகார்டிங்குகளும் காணாமல் போயிருக்கிறது. மார்ச்15: வஸேவின் க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸிலிருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவில்.. இருந்த சிசிடீவிகளின் புட்டேஜையும் NIA கைப்பற்றியிருக்கிறது.

மார்ச்16: வஸேவின் இடதுகையான போலீஸ்கார் ரியாஸ் காஸியை வைத்து.. சொசைட்டியின் விடியோ ரிகார்டரையே்தூக்கி.. பிப் 17 முதல் பிப் 24 வரையிலான அத்தனை ஃபுட்டேஜையும் ஒரு கடையில் கொடுத்து அழித்தனர். இதைவிட சூப்பர்.. அந்த இன்னோவா, அப்புறம் அந்த ஸ்கார்ப்பியோ கார்களுக்கான போலிநம்பர் ப்ளேட்டை தயாரித்து கொடுத்தது ஒரு கடை. அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதையும் டெலீட் பண்ணிவிட்டுத்தான் அந்த இடத்தையும் விட்டு இவர்கள் நகர்ந்தனர். 

NIA வின் புலனாய்வில்.. முக்கியமாய் ஒரு விஷயம் சிக்கியது. இந்த ஸ்கார்ப்பியோ காணாமல் போகவே இல்லை. இதை வஸே உபயோகித்துக்கொண்டேதான் இருந்திருக்கிறார். ஆனால் கார் ஒணர்.. தொலைந்து போனதாய் எப்ஐஆர் ரெஜிஸ்தர் பண்ண அழுத்தம் தரப்பட்டார் என்கிறது NIA டீம். அந்த அழுத்தமுமே வஸேவின் அழுத்தமே.மார்ச்17: மிகவும் எக்ஸ்பென்ஸிவான மெர்ஸிடஸ் பென்ஸ் கார் ஒன்றை வஸே என்ற சாதாரண அஸிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உபயோகித்ததை போலீஸிலோ, அரசிலோ ஒற்றை கேள்வி கூட கேட்கவில்லை. அந்த காரை இந்த தினத்தில்.. க்ராஃபோர்ட் மார்கெட் ஏரியாவில் பிடித்தனர். அதில் ஸ்கார்ப்பியோ நம்பர் ப்ளேட், மற்ற நம்பர் ப்ளேட்டுகள், 5 லட்சம் கேஷ், மற்றும் ஒரு நோட் எண்ணும் மெஷினையும் NIA கைப்பற்றினர். 

March 18: NIA இதுவரை 5 லக்ஸூரி கார்களை பறிமுதல் செய்திருக்கிறது. ஒரு ப்ராடோ லான்ட் க்ரூஸர்..கண்பத் போஸ்லே என்கிற ஷிவசேனை எம்எல்ஏவின் கார். இதையும் பிடித்து விட.. மொத்தம் 5 கார்கள் மாட்டி இருக்கிறது. இன்னும் இரண்டு கார்களை NIA தேடுகிறது. ஒரு ப்ளூ மெர்ஸிடஸ் மற்றும் ஒரு ஸ்கோடாவும் தேடப்படுகிறது...March 19: மன்ஸூக்கின் பிரேத பரிசோதனையில், மன்ஸூக்கு பின் தலை மற்றும் கழுத்தில்.. ஊமை மொக்கை அடி விழுந்திருக்கிறது. வெளியில் தெரியாத அடியை பிரேத பரிசோதனை சொல்லிவிடும். அதனால், அந்த ப்ரேத பரிசோதனை நடக்கும் போது.. வஸே அந்த ஆஸ்பத்திரியில் வலம் வந்ததை.. சிசிடிவி படம் பிடித்துவிட்டது. அப்போது வஸே இந்த கேஸில் தலையிடாமல் ஒதுங்கி இருக்க அறிவுறுத்தப்படபோதே இத்தனை பிந்தாஸாக மனுஷன் ஆஸ்பத்திரியில் அலைந்ததை.. டீவிக்கள் வச்சு செய்தன..செய்கின்றன..

மார்ச் 20: மிக மிக முக்கியமான திருப்பமாக, மும்பை கமிஷனராக இருந்த பரம்பிர் சிங்கை, ஹோம்கார்டுக்கு மாற்றியது உதவ் தாக்கரே அரசு.. இது சாதாரண ட்ரான்ஸ்பர் இல்லை. இன்னும் உள்ளது உனக்கு என்று பரம்பிர்சிங்தான் இதெற்கெல்லாம் காரணம் என்று.. அவர் தலையை மிஷினில் கொடுக்கும்போது.. பரம்பிர் சிங் உத்தவ் தாக்கரேக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார்... அவர் சொன்னது.. மாசம் நூறு கோடி வசூல் பண்ண சொல்லி டார்ச்சர் தருவது. NCP யின் அனில் தேஷ்முக் என்கிற ஷரத் பவார் ஆசி பெற்ற உள்துறை அமைச்சர். இவர் தான் சச்சின் நேரடியாக எனக்கே ரிப்போர்ட் பண்ண வேண்டும்.. 100 கோடிகள் ஹோட்டல்கள், பார்கள், பப்புகளில் இருந்து மாசா மாசம் எனக்கு பைசா வரவேண்டும் என்று வஸேக்கு உத்தரவிட்டதாக பரம்பிர் சிங்  உத்தவ்க்கு நேற்று எழுதிய கடிதத்தில் சொல்லி இருப்பது மஹாவில் பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டது. 

வழக்கம்போல்.. இதற்கு ஆதாரம் என்ன..? பரம்பீர் மேல் வழக்கு பாயும், அரெஸ்ட் ஆகலாம், வேலை போகும், ஜெயில் என்றவுடன், பரம்பீர் இதை வேண்டுமென்றே ஹோம் மினிஸ்டர் மீது போடுகிறார் என்று NCP களமாடுகிறது. ஷரத் பவார் எத்தனை யோக்கியன் என்று பலருக்குமே தெரிந்ததால்.. இந்திய மக்கள் புன்னகைக்கிறார்கள்... இந்த மந்திரி மீது மட்டும் ஏன் பரம்பீர் சிங் குற்றம் சொல்ல வேண்டும்..? உத்தவ் மீதோ அல்லது வேறு யார் மீதோ ஏன் சொல்லவில்லை என்கிற கேள்விக்கு இவர்களிடம் விடை இல்லை.. அனில் தேஷ்முக் இந்த கேஸில் சிக்கி முக்குகிறார். தாராளமாய் ஷேர் பண்ணவும் 💕#vazegate பாகம்4/5.  தொடரும்.. 

பாகம்-5

இந்த வாஸே விவகாரத்தை முழுமூச்சாய், இணையத்தில் தேடி எழுத காரணம், நம்முடைய ஜனநாயக தூண்களுக்கு, பணத்தின் மீதான பற்றும், சமூக மதிப்புகள் மீதான நம்பிக்கை குறைந்து போனதிலும், இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பாக வணீகரீதியாகிப்போனதும், தேசப்பற்று என்கிற ஒன்று தடாலடியாக உலர்ந்து போனதாலுமே, இதை எழுத முனைந்தேன். இதற்கான காரணங்களை ஆராய்ந்தால், உள்நாட்டில் சதிசெய்ய காத்திருக்கும் சக்திகளும், அதற்கு ஆதரவான வெளிநாட்டு சக்திகளும், அரசுகளும், மதவெறியும், உலக வர்த்தகத்தை மையமாக வைத்து, இந்த தேசத்தை அழிக்க நினைக்கும் மற்ற தேசங்களும் சக்திகளுமே...என்னை எழுத வைத்தது ஒவ்வொன்றாய் பார்ப்போம்...

இந்தியா இந்த கோவிட்-19 ஐ தீவிரமாக போராடி, வர்த்தக போட்டி தேசங்கள், இந்தியா சேதமாகும் என்பதில் மண்ணைத்தூவியதிலும், வாக்ஸினை மற்ற தேசங்களுக்கு இலவசமாய் தந்து, உலகரங்கில் நன்மதிப்பை பெற்றதிலும், எல்லைகளில் உதை வாங்கியதிலும், அடைந்த எரிச்சலை, விஸ்ட்ரான் கம்பெனியை எரித்ததிலும், விசாகப்பட்டினத்தில் உள்ள LG கம்பெனியில் நடந்த சேதங்களாலும், பூனே சீரம் இன்ஸ்டிட்யூடில் தீ பரவியதிலும், மும்பை மற்றும் தேசத்தின் பல இடங்களில், மின்சாரத்தை துண்டித்தும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு செய்தியனுப்ப முனைந்தது. இதை தாண்டி, பல இணையங்களை தாக்கியழிக்கவும், விவசாய ப்ரோக்கர்களை, இல்லாத சிஏஏ பயங்களை.. உருவாக்கிவிட்டு, தேசத்தில் அமைதியின்மையையும், ட்ரம்ப் இந்தியாவில் இருந்த தினத்தில், வரலாறு காணாத தீவிரவாதத்தை கட்டவிழ்த்து தில்லியை எரிய வைத்த சக்திகள், உள்ளூர் கவுன்ஸிலர் வரை பரவி இருப்பது கவலைக்குரிய ஒரு விஷயம். இதற்கும் இந்த ஆன்டில்லா விஷயத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை கீழே விளக்குகிறேன்.

இந்தியா உலக ஃபார்மஸியானதில் பல தேசங்கள் கடுப்பானது.கார்மைக்கேல் ரோடு, மும்பை என்பது மும்பையின் இருதய பகுதி. அங்கு ஆன்டில்லா டவரில் அம்பானி இருப்பதால் அங்கு மிரட்டல் விட ஒரு போலீஸ் அதிகாரி குண்டு வைத்தது தெளிவாகிவிட்டது. அந்த அதிகாரி, PPE சூட் மாதிரி ஒன்றை போட்டிருப்பது வீடியோவில் தெரிந்தாலும்.. அது PPE சூட் இல்லை, வெடிகளை அல்லது மிக வலுவான இரசாயனங்களிடம் இருந்து பாதுகாப்பவை மாதிரியும் இருப்பதால்.. இதில் பல கேள்விகள் எழுகின்றது. என்ன..? அம்பானிகளிடம் கட்சி தலைமை பேசினாலே, 20-50 கோடிகளை நன்கொடையாக தரும் ஒரு பிஸினஸ்மேன். காரணம், அடிப்படையாகவே அம்பானிகள் பிஸினஸ்மேன்கள். இந்த மாதிரியான லைம்லைட்டில் இருக்காது நகர்ந்து போகவே விரும்புபவர்கள். சரி... அப்படியென்றால் இந்த குண்டுகள் யாரை குறிவைத்தன..? யார் கட்டளைகளால் ?  எந்த நாட்டிலிருந்து..? 

இப்படியான முடிச்சுகள், ஒவ்வொன்றாய் அவிழ்கிறது. ஆன்டில்லா மாளிகைக்கு அருகில், இந்தியாவின் டாப் அணு விஞ்ஞானிகள் கெனீல்வொர்த் எனும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருமே.. மிக மிக மிக முக்கியமானவர்கள். இவர்களை அரசு தன் நிழலில் எப்படி வைத்துக் கொண்டிருக்கிறதோ அப்படித்தான்.. எதிரி நாடுகளும் முழுநேரம் இவர்களை கண்காணிக்கிறார்கள். இவர்கள் கூட இலக்காய் இருக்கலாம் என்கிறது ஆய்வு.இதை பாகிஸ்தான் அல்லது சீனா தாராளமாய் செய்யும் தயங்கவே தயங்காது. எங்கேயோ வாங்கிய அடியை இங்கு திருப்பி தரவும் இருக்கலாம்..

Maroon barrette: இந்தியாவின் மீதான பல்முனை போரை பாகிஸ்தான் தொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. பாகிஸ்தானில் மரூன் பெரே எனும் யூனிட் இருக்கிறது. இந்த யூனிட்டில், ஒரு ப்யூன் கூட DGISI கையெழுத்து போட்டால்தான் பணிநியமனமே வழங்க முடியும். மிகவும், மோடிவேட் செய்யப்பட்ட ராணுவ நிழல் பிரிவு இது. இவர்கள் பேச்சு வார்த்தை என்கிற பெயரில் இந்தியாவோடு நடக்கும்போது.. குண்டு வைப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார்கள். 2006 RSS அலுவலகம் மீதான தாக்குதல், இந்தியா பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது. அதே இந்தியாவில் தில்லியில் பேச்சுவார்த்தை நடக்கும்போது.. லால் மஸஜித் தாக்குதல்கள் 2007இல்.. அதேபோல்.. 26/11 பேச்சுவார்த்தை சமயத்தில் மும்பை தாக்குதல்கள்.. ஏன் லாகூர் பஸ் விடும்போது கார்கில் தாக்குதல் என்று லிஸ்ட் நீண்டுகொண்டேதான் போகும்... சரி.. இவர்களின் கட்டளைகளுக்கு, இந்திய அரசியல் மற்றும் போலீஸ் துறைகள் அடிபணிந்து.. இந்த தேசத்தின் மீதே தாக்குதல் நடத்த முனைவது.. நம் அரசியல் மற்றும் போலீஸ் அமைப்புகளை இப்படியான கரையான்கள் எப்படி அரித்துவிட்டது என்பதை புலப்படுத்திவிட்டது.

 இதைத்தாண்டி வாஸேக்கு தாவூத்திடம் நெருக்கம் என்று வேறு செய்திகள். அவரின் பாதி என்கவுன்டர்கள், தாவூத் போடச்சொன்ன எதிரிகளோ.. அல்லது போடச் சொல்லாத எதிரிகளையோதான்.. இப்படியான ஆசாமியை சிபாரிசு செய்த ஷிவசேனாவின் பாகிஸ்தான் கூச்சல் வெறும் உதட்டளவுதான் என்பது சத்தமில்லாமல் நிருபணமாகிறது. இறுதி பாகம் சற்று நேரத்தில்...#vazegate பாகம்5/5.                       தொடரும்.....            

 இறுதி பாகம்...

கீழே சொல்லப்பட்டவை, கோவா க்ரானிகிள் என்கிற பத்திரிக்கை, தன்னுடைய தெற்காசிய தீவிரவாதம், மற்றும் தீவிரவாத தடுப்பு இன்டெல்லிஜன்ஸ் விங் மூலமாக, பாகிஸ்தானிலிருந்து, மும்பை போலீஸ் ஒருவருக்கு 2020 இல் போன் வந்தது என்று அலறியது. அதோடு மீடியாவில் பலருக்கும், இந்த நம்பரில் இருந்து கால் வந்ததாகவும் எழுதியது. அதற்கான காரணம் அர்னபை அமைதியாக்கவும், வேறு சில நிழல் நடவடிக்கைகளுக்காவும் என்று எழுதியது. இது எத்தனை தூரம் உண்மை என்பது தெரியவில்லையென்றாலும்.. அந்த ஃபோன் நம்பர் இதுதான் 0092306####310 என்றும் எழுதியது.

இதை மேலும் ஆராய ஆரம்பித்தது கோவா க்ரானிகிள். இந்த நம்பர், ஸ்பெஷல் ஸ்குவாட் மெரூன் பெரட்டின் இஷ்க் என்கிற அதிகாரியின் காதோடு போய் நின்றது. அங்கிருந்து இங்கு எந்த போலீஸ் அதிகாரிக்கு கால் வந்தது என்பதை கண்டறியமுடியவில்லை என்றது. இது வாஸேவா என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது, என்றும் சொன்னது. ஆனால், நடந்தவைகளை பார்க்கும்போது.. வாஸேவின் அர்னப் கைது, ஹ்ரிதிக்-கங்கணா.. போன்ற ஹை ப்ரொஃபைல் கேஸ்களால்.. இது வாஸேவாக இருக்கலாம் என்கிறது. இது போலீஸ் கமிஷனர் பரம்பீரின் மூக்குக்கு கீழே நடந்ததால்.. இவர்களைத்தவிர பல வேறு அதிகாரிகளுமே சம்பந்தப்பட்டிருக்கலாமோ.? என்றும் ஹேஷ்யம் சொல்கிறது. இந்த ஆன்டில்லா கூட, பணம் பிடுங்குவது, அழிப்பது.. அல்லது கெனில்வொர்த் அதிகாரிகளை அழிப்பது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் பதறுகிறது.

இது கான்ஸ்பிரஸி தியரி போல இருந்தாலும் NIA வாஸே, பரம்பீரின் தொடர்புகளை தூண்டி துருவி விசாரிக்கிறது. இதைத்தாண்டி அரசியல்வாதிகளை அதுவும் வாயும், புத்தியும் கோணலுமான சிலரை எப்படி தண்டிக்கிறது என்று பார்ப்போம்.#vazegate முடிந்தது.  ஜெய் ஹிந்த்            .

கொஞ்சம் நீளமான பதிவுதான்! ஆனால் விஷயத்தைப் புரிந்துகொள்ள, மொத்தமாக ஒரே இடத்தில் தொகுத்துப் படிக்க, ஒரு reference ஆக பிரகாஷ் ராமஸ்வாமிக்கு நன்றி தெரிவித்து முடிக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.             .... 

ஒரு புதன்கிழமை! சரத் பவார்! தகர உண்டியல்! கிரேட்டா தன்பெர்க்!

சரத் பவார்! மஹாராஷ்ட்ரா அரசியலில், பலமுறை  ஊழல் குற்றச்சாட்டுக்களில் பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தாலும் இதுவரை அவர்மீது கிரிமினல் வழக்கு எதுவும் பதிவு செய்யப் பட்டது இல்லை. 2015 இல் சுனில் அரோரா என்பவர் தாக்கல் செய்த ஒரு பொதுநல வழக்கில், கடந்த மாதம் மும்பை உய்ரநீதிமன்றம் பிறப்பித்திருக்கிற ஒரு உத்தரவால்  சரத் பவார்,அவருடைய அண்ணன் மகன் அஜித் பவார் உட்பட பலர்மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 



கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், சர்க்கரை வணிகத்தில் சரத் பவாருக்கு இருந்த மிகப்பெரிய ஆதிக்கத்தில், நஷ்டத்தில் இயங்கிய சர்க்கரை ஆலைகளை அடிமட்ட விலைக்கு விற்க வைத்ததில் கூட்டுறவு வங்கிகள் சுமார் 25000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்தித்தன என்கிறார்கள். கிரிக்கெட் சூதாட்டங்களில் இருந்து தாவூத் இப்ராஹிமுடனான நிழல் உலகத் தொடர்புகள் என்று சரத் பவாருடைய ஊழல் சாம்ராஜ்யம் 2Gஸ்பெக்ட்ரம் விவகாரம் வருகிறவரை          கருணாநிதியைவிட மிகப் பெரியதாக இருந்தது என்று சொல்வார்கள். அமலாக்கத்துறை இப்போது இந்தவழக்கைக் கையால் எடுத்திருக்கிறது. 


2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் தான் போட்டியிடப் போவதில்லை என்று சரத் பவார் அறிவித்தது கூட, பிரதமர் பதவி மீது அதுவரை கண்வைத்திருந்தவர், சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்று ஒதுங்கிப்போன நரி கதைதான்! 

ஒரு இத்தாலியப் பெண்மணி நாடாளக்கூடாதென்று சிலவருடங்களுக்கு முன்னால் Ex சபாநாயகர்    PA சங்மாவுடன் சேர்ந்து காங்கிரசிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP)  ஆரம்பித்ததும், அதே இத்தாலியப்பெண்மணியின் குடும்பக் கம்பெனியாகிப் போன காங்கிரசோடு இன்று  கூட்டுச் சேர்ந்து அரசியல் நடத்திவருவதும் ஜனங்கள்  மறந்து போன பழைய கதைதான்!  பழம்தின்று கொட்டைபோட்ட இந்திய ஊழல் அரசியல்வாதிகளுக்கே உரிய தெனாவட்டில் மகாராஷ்டிரா டில்லிக்குத் தலைவணங்காது என்றும்  தன்னை யாராவது சிறைக்கு அனுப்ப திட்டமிட்டால் அதை தான் வரவேற்பதாகவும்  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்திருக்கிறார். பண மோசடி வழக்கில் தன் பெயரையும் தனது உறவினர் பெயரையும் அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் சிறைக்கு செல்லவும் தயார் என சரத் பவார் சொன்னதாக தற்போதைய செய்திகள் சொல்கின்றன. 


இங்கே கழகங்களுடன் சேர்ந்து xxx திங்கப்போவதற்கு முன்னால். கம்யூனிஸ்ட் என்று  சொல்லிக்கொண்டவர்களுக்கு நிறைய மரியாதை இருந்தது! தேர்தல் அரசியலே போதும் என்று ரெண்டு சீட்டுக்காக கழகங்களோடு ஒட்டி உறவாடினால் கிடைப்பது வேறே!



ஐ நாவில் மனிதர்கள் வாழ முடியாத அளவிற்கு சுற்றுசூழல் சீரழிந்து கொண்டிருக்கும் போது..அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க உலக நாடுகளின் தலைவர்களுக்கு என்ன ஒரு தைரியம் ?! என்று உணர்ச்சி கரமாக கேள்வி எழுப்பிய Greta Thurnberg ஸ்வீடனை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி .
மேலும்.. இவரோடு சேர்த்து 15 பள்ளி மாணவ மாணவிகள் .. பிரேசில், பிரான்ஸ், அர்ஜென்டினா, துருக்கி , ஜெர்மனி ஆகிய ஐந்து நாடுகள் மீது ஐ.நா.வில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இதில் மேலோட்டமாக தெரியும் உணர்ச்சிகளையும், பரபரப்புகளையும் தாண்டி பார்த்தால்.. உலக நாடுகளின் Convention on the Rights of the Child [ CRC ] ஒப்பந்தத்தில்.. சுற்றுசூழலுக்கு பெரும் கேடுகளை விளைவிக்கும் சீனா கையெழுத்திடவில்லை. அமெரிக்காவும் கையெழுத்திடவில்லை.
அதனால்...உலக மக்களின் கவனம் பெற்றதை தாண்டி .. உடனடி பலனோ..பெரிதான பலனோ ஒன்றும் இருக்காது.
அமைதிக்கு மலாலா ஒரு brand ஆக உருவாக்கப் பட்டது போல...இன்னும் இரண்டு வருடங்களுக்குள் Greta-வும் சுற்றுசூழலுக்கான brand-ஆக உருவாக்கப் பட்டு, நோபெலை கொடுத்து ivory tower-க்குள் அடைக்கப் பட்டிருப்பார்.
சுற்றுசூழல் பழைய வழியிலேயே நகரும்.
இப் பிரச்சினையில்..இன்னொரு கோணமாக...சுற்றுசூழல் குறித்த பெரும் பீதி திட்டமிட்டு பரப்பப் படுகிறது என்று ஆய்வுக்கட்டுரைகளாகவும், அறிவியல் கட்டுரைகளாகவும் ஏராளம் காணக் கிடைக்கின்றன. துறை பேராசிரியர்கள் , ஆய்வாளர்கள் பலரும் எதிரெதிர் அணியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு வழக்கம் போல குழப்பமும், அதனால் ஏற்படும் எரிச்சலும் மட்டுமே மிச்சம். 

Swedish teenage climate activist Greta Thunberg was named on Wednesday as one of four winners of the 2019 Right Livelihood Award, known as Sweden's alternative Nobel Prize. Ms. Thunberg shares the award with Brazilian indigenous leader Davi Kopenawa of the Yanomami people, Chinese women's rights lawyer Guo Jianmei and Western Sahara human rights defender Aminatou Haidar.

இந்தச்சிறுமிக்கு இப்போதே விருது கொடுத்துவிட்டார்கள் என்பது இப்போதைய செய்தி  வாயை மூட ஒரு விருது, அப்படித்தானா?  

புதன்கிழமைச் செய்திகளாக உலகம் போகிற போக்கைக் கொஞ்சம் பார்த்தோம்! மீண்டும் சந்திப்போம்.  

மண்ணுமோகனுக்கு வந்த கவலை! கரிசனம்!




நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உலகில்உள்ள மூன்று  குழந்தைகளில் ஒரு குழந்தை இந்திய குழந்தையாக உள்ளது என்றும், இது இந்திய தேசத்திற்கு அவமானமாக இருக்கிறது என்றும் பிரதமர் இன்று கவலையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ள்ளாராம்! ஆச்சரியம் தான்! தன்னுடைய அமைச்சரவை சகா ஒவ்வொருவருக்கும் உத்தமர் சர்டிபிகேட் கொடுத்தது போக நேரமிருந்தால்,கொஞ்சம் அரசு வேலைகளையும் பார்க்கும் ஒருவருக்கு நாட்டைப்பற்றிக் கூட கவலைப்பட நேரம் இருந்திருக்கிறது என்றால் அது அதிசயத்திலும் பெரிய அதிசயம் தான்! 
                                                                        
தேர்தல் சமயமாயிற்றே, கவலைப்படாமல் இருக்க முடியுமா என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்! ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் விவசாய அமைச்சராக ஒருவர் இருக்கிறார்! சரத் பவார்! விவசாயிகள், மற்ற எது எப்படி எக்கேடு கேட்டுப் போனாலும் பரவாயில்லை, கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பை மட்டும் விட மாட்டார்! ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாக்கள் வந்து உலக சாதனை செய்கிற வரை ஊழல் பெருச்சாளிகளில் அவர் தான் நம்பர் ஒன்! இந்தாலிய மம்மிகளை விடவுமே என்றால் நம்பித்தான் ஆகவேண்டும்!

இப்படி ஒரு விவசாய அமைச்சரபை வைத்துக் கொண்டு, பெட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிற மந்திரிகளை வைத்துக் கொண்டு மண்ணு மோஹன்சிங் தேசத்தைப் பற்றியும் கவலைப் படுகிறாராம்! 


எத்தனையோ பொய்களை நம்பிய நாம், இதை மட்டும் நம்ப மறுப்போமா என்ன!  

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் இந்திய விவசாயிகளின் நிலைமை , கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளில், அதாவது அரசு ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்ற நாளில் இருந்தே, மிகவும் பரிதாபத்துக்கு ஆளாகி வருகிறது.

இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் இந்த செய்தி கட்டுரையைப் படித்துப் பாருங்கள்! அதில் சொல்லப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களின் பின்னே லட்சக்கணக்கான தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் கண்ணீர் இருக்கிறது. அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒரு அரசியல் கொடுமை இருக்கிறது!


மானியங்கள், கடன்கள் எல்லாமே இருப்பவர்களுக்குத் தான்! தேவைப்படுகிறவர்களுக்கு அல்ல! அரசு அறிவிக்கும் திட்டங்களில் உண்மையிலேயே பயன் அடைபவர்கள் யார்?  கேள்வியை உரக்கக் கேட்கவேண்டிய தருணம் இது!

தடம் மாறும் கிராமிய வங்கிகள்!

பி.எஸ்.எம். ராவ்,இன்றைய தினமணியில் எழுதி வெளியாகி இருக்கும் கட்டுரை

ஒரு குழாய் மூலமாக பத்து மணி நேரத்தில் ஒரு தொட்டியை நீரால் நிரப்ப முடியும் என்று வைத்துக் கொள்வோம். மற்றொரு குழாயைத் திறந்துவிட்டால் ஒரு மணி நேரத்தில் தொட்டி காலியாகிவிடும் என்றால்,  இரு குழாய்களும் திறந்திருக்கும்போது எவ்வளவு நேரத்தில் தொட்டி முழுமையாக நிரம்பும்?

 பள்ளிக்கூடத்தில் நாம் படித்த இந்தக் கணக்குக்கு விடை ஒரு காலத்திலும் முடியாது என்பதுதான்.

ஆனால், கிராமியக் கடன்கள் விஷயத்தில் அரசு இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதுதான் நமது அரசின் கவர்ச்சிகரமான கோஷம். இதைக் கூறித்தான் இப்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. பொருளாதார வளர்ச்சியின் பலன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இதன் பொருள். அரசியல் பொதுக் கூட்டமானாலும் சரி, தேர்தல் பிரசாரமானாலும் சரி, நாடாளுமன்ற அவைகளில் நடக்கும் விவாதங்களானாலும் சரி எல்லாவற்றிலும் இந்த மயக்கும் வாக்கியத்தைக் கூறுவதற்கு நமது ஆட்சியாளர்கள் தயங்குவதேயில்லை!.

ஆனால், இதெல்லாம் வெற்றுப் பேச்சுதானே தவிர, நிஜத்தில் அவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் அதற்கு நேரெதிர்தான். எந்த அளவுக்கு அனைவரையும் வளர்ச்சியில் உள்ளடக்குவதற்கான முயற்சி நடக்கிறதோ, அதைவிடப் பல மடங்கு வேகமாக வெளியேற்றும் பணி நடப்பது தெளிவாகத் தெரிகிறது. எல்லாவிதமான திட்டங்களிலும், நடவடிக்கைகளிலும் இதே கொள்கையைத்தான் நமது அரசு கடைப் பிடித்து வருகிறது. சொல்லில் ஒன்றும் செயலில் ஒன்றுமாக அரசின் பணி இதே ரீதியில் தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது சாத்தியமாகப் போவதில்லை.

 இது அரசியல்வாதிகளுக்கும் தெரியும். ஆனாலும், தங்களது கோஷங்களை அவர்கள் நிறுத்துவதாக இல்லை. மக்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள் என்பதை எண்ணிக்கூட வெட்கப்படாமல், ஏழைகளை முன்னேற்றுவதற்காக அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று புள்ளிவிவரங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் கொல்கத்தாவில் நமது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாத காலத்துக்கான விவசாய வங்கிக்கடன் இலக்கு எட்டப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். அதாவது நிதியாண்டுக்கு ரூ. 4.75 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. அதில், மார்ச் முதல் செப்டம்பர் 2011 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்பது பிரணாப் தரும் புள்ளி விவரம். இதன்படி இந்த நிதியாண்டின் முழுமையான இலக்கும் எட்டப்பட்டுவிடும்.

இதற்குச் சில நாள்களுக்கு முன்பு பிரணாப் இன்னும் உற்சாகமாக இருந்தார். நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாகக் கடன்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். நபார்டு வங்கியின் தலைவரும் பிரணாபை ஆமோதித்தார். அவர் சொன்ன தொகை ரூ.5.2 லட்சம் கோடி!

இவர்களது கணிப்பு சரிதான். கடந்த சில ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தக் கணிப்பு பொய்த்துப் போவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. வங்கிகள் மூலம் வழங்கப்படும் விவசாயக் கடன்களை 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க வேண்டும் என்று 2004-ம் ஆண்டில் அரசு முடிவு செய்தது. ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில் இரண்டே ஆண்டில் இந்த இலக்கு எட்டப்பட்டது. அதன்பிறகு ஒவ்வோர் ஆண்டும் இலக்கு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. சொல்லிவைத்தாற்போல ஒவ்வொரு ஆண்டிலும் இலக்கைத் தாண்டி கடன்கள் வழங்கப் பட்டதுதான் சுவாரசியமான விஷயம்.

2008-09 முதல் 2010-11 வரை ஒவ்வொரு நிதியாண்டிலும் முறையே ரூ.2.8 லட்சம் கோடி, ரூ.3.25 லட்சம் கோடி, ரூ.3.75 லட்சம் கோடி என இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், முறையே ரூ.2.87 லட்சம் கோடி, ரூ.3.85 லட்சம் கோடி, ரூ.4.47 லட்சம் கோடி இலக்குகளைக் கடந்து கடன்கள் வழங்கப்பட்டன.

 வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமான இலக்குகள் நிர்ணயிக்கப் படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயத்துறைக்கு ரூ. 40 லட்சம் கோடி தேவை என்று நபார்டு வங்கியின் செயல் இயக்குநர் எஸ்.கே.மித்ரா கூறியிருக்கிறார்.

இந்தப் புள்ளிவிவரங்களைப் படிப்பவர்களுக்கு சில நியாயமான சந்தேகங்கள் எழக்கூடும். அரசுதான் இவ்வளவு கடன்களை வழங்குகிறதே, பிறகும் ஏன் விவசாயிகள் தனியார் நிறுவனங்களை நாடுகிறார்கள், கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ஏன் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள் என்று கேட்கலாம்.

தேசிய குற்றப் பதிவு அமைப்பின் ஆவணங்களின்படி 1995 முதல் 2010 வரை 2,56,913 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது சர்ச்சைக்குரிய எண்ணிக்கைதான். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தற்கொலைகள் குறைந்திருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள்.

2011-ம் ஆண்டில் வெறும் 800 பேர்தான் தற்கொலை செய்து கொண்டதாக வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் பிரத்யேகமாக ஒரு புள்ளி விவரத்தைத் தருகிறார்.

எது எப்படியிருந்தாலும், கடன்தொல்லை காரணமாக அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அரசு என்னதான் விவசாயிகளுக்கு கடன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்று கூறிக் கொண்டிருந்தாலும், இலக்குகளைத் தாண்டியும் கடன்கள் வழங்கப்படுவதாகப் புள்ளிவிவரங்களை அடுக்கினாலும், தேவைப் படுவோருக்கு அந்தக் கடன்கள் சென்றடையவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அரசு கூறுவது வெறும் வாய்ஜாலம் என்பதை தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை உணர்த்திக் கொண்டிருக்கிறது. கடன் வழங்கும் முறையில் குறைபாடு இருப்பதற்கு இதுவே ஆதாரம்.

விவசாயம் செய்வோரில் 80 சதவிகிதம் பேர் சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள். இவர்களுக்குக் கடன் வழங்குவதே விவசாயத்தை பாதுகாப்பதற்கும், வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்குமான வழி முறை. ஆனால், இவர்களுக்குக் கடன்கள் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை நிலை. இது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சாரங்கி குழு, விளிம்பு நிலை விவசாயிகளில் வெறும் 14 சதவிகிதம் பேருக்கு மட்டும் வங்கிக் கடன் போன்ற அமைப்பு சார்ந்த கடன்கள் கிடைப்பதாகக் கூறியிருக்கிறது.

 இந்தியாவில் 87 சதவிகித விளிம்புநிலை விவசாயிகளுக்கும் 70 சதவிகித சிறு விவசாயிகளுக்கும் வங்கிக்கடன் கிடைப்பதில்லை என்று உலக வங்கியே தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களை

இன்னும் உன்னிப்பாகக் கவனித்தால் விவசாயிகளில் 51 சதவிகிதம் பேருக்கு எந்தவிதமான கடனோ, பிற வங்கிச் சேவைகளோ கிடைப்பதில்லை என்கிற உண்மை புலனாகும்.

ரங்கராஜன் கமிட்டியின் அறிக்கையின்படி வெறும் 27 சதவிகித விவசாயிகளுக்கே அமைப்பு சார்ந்த கடன்கள் கிடைக்கின்றன. இதிலும் மூன்றில் ஒரு பகுதியினர் தனியார் அமைப்புகளின் மூலம் கடன் பெறுபவர்கள். அதாவது 18 சதவிகித விவசாயிகளுக்கு மட்டுமே வங்கிக் கடன்கள் கிடைக்கின்றன. அந்த 18 சதவிகித அதிருஷ்டக்காரர்களில் பெரும்பகுதியினர் பணக்கார, பெரு விவசாயிகள் அல்லது அதிகாரம் படைத்தவர்கள்.
இது ஒன்றும் அறியாமலோ தெரியாமலோ நேர்ந்துவிட்டது கிடையாது. 1990-களில் அரசு கொண்டு வந்த புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுதான் இது. அரசு வங்கிகள் அனைத்தும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்க வேண்டும், கிராமப்புற ஏழைகளிடம் இருந்து கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும் என்பவையெல்லாம் அந்தக் கொள்கை மூலமாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

ஒருபுறம் கிராமப்புற ஏழைகளுக்கு எளிதாகக் கடன்கள் கிடைக்க வேண்டும் என்பதே லட்சியம் என்று வெளிப்படையாகக் கூறிக் கொண்டிருக்கும் வங்கிகள், இன்னொருபுறம் கிராமங்களில் தங்களது கிளைகளைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன.

ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்களின்படி 1991-ம் ஆண்டில் கிராமங்களில் 35,206 வங்கிக் கிளைகள் இருந்தன. 2011-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 33,602-ஆகக் குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் நகரங்களில் தெருவுக்குத் தெரு வங்கிகள் திறக்கப் பட்டிருக்கின்றன.
 1991-ல் வங்கிகளின் 58.46 சதவிகித கிளைகள் கிராமப்புறங்களில் இருந்தன. இப்போது அது 36.10 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.

அதேபோல், கிராமப்புறக் கடன்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகள் போன்றவையும் தங்களது நோக்கத்தை மறந்து வேறு வகைக் கடன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கிவிட்டன. 1993-94-ம் நிதியாண்டில் 62 சதவிகிதம் அளவுக்கு விவசாயக் கடன்கள் வழங்கிக் கொண்டிருந்த கூட்டுறவு வங்கிகள் 2009-ம் ஆண்டில் வழங்கிய விவசாயக் கடன்களின் அளவு வெறும் 12 சதவிகிதம் மட்டுமே!

பிராந்தியக் கிராமிய வங்கிகளுக்கும் இதே நிலைதான். கிராமப் புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கிகள், இப்போது வழக்கமான வர்த்தக வங்கிகளைப் போலச் செயல்பட்டு வருகின்றன. கிராமங்களையும் ஏழ்மையையும் மறந்து, பண ஆதாயம் தேடும் வழிகளை மட்டுமே அந்த வங்கிகள் கடைப்பிடித்து வருகின்றன. கிராமங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன. அரசு இதைப்பற்றி வாய்திறப்பதேயில்லை.

இப்படி எல்லா வங்கிகளும் கிராமங்களையும், விவசாயத்தையும் கைவிட்டுவிட்டதால்தான் மக்கள் தனியார்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறுங்கடன் அமைப்புகள் என்கிற பெயரில் கந்து வட்டிக்காரர்கள் பெருகி, மக்களிடமிருந்து வியர்வையையும் ரத்தத்தையும் வட்டியாக உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அரசு, இன்னமும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றிப் வாய்கிழியப் பேசிக் கொண்டிருக்கிறது.

பருவமழை பொய்த்துப் போவது, பிற இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, விதைத்த பணத்தைக் கூட அறுவடை செய்ய முடியாமல் தவித்து வரும் விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டுமானால், முதலில் கிராமிய வங்கிகளை வர்த்தக மயமாக்குவதைக் கைவிட வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் கிராமப்புற மக்களின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்பவையாக மீண்டும் மாற வேண்டும். இவைபற்றி அரசு அக்கறை எடுத்துக்கொள்ளாதவரை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது வெற்று வாக்குறுதியாகத்தான் இருக்கும்.
 களவாணி காங்கிரசைத் தூக்கி எறிவதே தேசத்தின் விடிவுகாலம்!