தேர்தல் களம் 2011-முடிவல்ல!ஆரம்பம்!



27 வயது இளைஞனுக்கு ஏற்பட வேண்டிய கோபம், 72 வயது காந்திய வாதிக்கு ஏற்பட்டிருக்கிறது. லஞ்ச ஊழலில் ஈடுபடுவோரைத் தண்டிக்க வகை செய்ய லோக்பால் திருத்த மசோதாவை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியிருக்கிறார் சமூக சேவகரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே. 

உண்ணாவிரதம் என்றால் வீட்டிலேயே டிபன் முடித்துவிட்டு பந்தலுக்கு வந்து காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்து போகிற உண்ணாவிரதம் அல்ல இது. காந்திய உண்ணாவிரதம். தனது அறப் போராட்டத்தைத் தொடங்கு முன்பாக, எனிமா உள்ளிட்ட முன்னேற்பாடுகளை முடித்துக்கொண்டு முறையாகத் தொடங்கப்பட்ட உண்ணாவிரதம். 

அவரது கோரிக்கை மிக எளிமையானது. லோக்பால் சட்டத்தின் திருத்த வடிவை உண்டாக்க ஒரு கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்; அதில் மக்களின் பிரதிநிதிகள் சரிபாதி பேர் இருக்க வேண்டும் என்பதுதான். அதாவது சட்டத்தை ஓட்டைகள் இல்லாதபடி கடுமையானதாக உருவாக்கினால் மட்டுமே, இதனால் மக்கள் பயன்பெறுவார்கள் என்பது ஹசாரே முன்வைக்கும் நியாயமான வாதம். 

அமைச்சர்கள் மட்டுமே ஒன்றுகூடி அதிகாரிகளின் துணையோடு உருவாக்கும் சட்டம், அவர்கள் தவறு செய்தால் தண்டனை பெறாமல் தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் வசதியாக ஏற்படுத்திக் கொண்டு விடுகிறது. இவர்கள் மட்டுமே ஒன்றுகூடி, அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நீதிபதிகளையும் தண்டிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை அதில் ஓட்டைகள் இல்லாமல் உருவாக்க மாட்டார்கள், உருவாக்கப் போவதில்லை. அதனால்தான் இந்தக் கோரிக்கை. 

இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழலுக்காகத் தண்டனை பெற்ற அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் ஒருசிலர் மட்டுமே. அத்தனை அமைச்சர்களும் அடிப்படையில் ஏழ்மையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். ஆனால், இன்று அவர்கள் பல கோடி ரூபாய் சொத்துக்கு அதிபர்கள். எப்படி இத்தனை சொத்துக் குவிந்தது என்று கேட்க ஆளில்லை. அதைத் தடுக்க முறையான சட்டமும் இல்லை.

நீதிபதிகள் தங்கள் சொத்து விவரத்தைத் தர வேண்டியதில்லை என்று சொல்லும் நியாயம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். அரசு ஊழியர்கள் சொத்து வாங்கினால் அதுகுறித்த விவரத்தை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று விதிகள் இருந்தும், மதிக்கப்படாத ஒரு சட்டமாகவே அது இருந்து வருகிறது. ஊழலில் ஈடுபடுபவர்களைத் தட்டிக் கேட்கவும் வழியில்லை, தண்டிக்கவும் முடியவில்லை என்றால் மக்களாட்சி என்பதற்கு என்னதான் அர்த்தம்

சட்டத்துக்குப் புறம்பான காரியங்களை மட்டுமே லஞ்சம் கொடுத்துச் செய்யலாம் என்ற நிலைமை மாறி, சட்டப்படி ஒரு குடிமகனுக்கு உரிமையுள்ள வருமானச் சான்றிதழ் பெறவும் லஞ்சம், சாதிச் சான்றிதழ் பெறவும் லஞ்சம், அரசு தரும் இலவச டி.வி.க்கும் லஞ்சம், குடும்ப அட்டை பெற லஞ்சம், குடும்ப அட்டையை வேறு முகவரிக்கு மாற்றினால் அதற்கும் லஞ்சம் என்கிற நிலைமை. ஒரு ஏழையின் குமுறலை, சராசரி இந்தியக் குடிமகன் அன்றாடம் படும் அவஸ்தையை யார் அறிவார்?

அரசியல்வாதிகளுக்கும், அதிகாரவர்க்கத்தினருக்கும் இந்த வலி தெரிய நியாயமில்லை. ஆனால் அண்ணா ஹசாரே போன்றோருக்குத் தெரிகிறது.

உண்ணாவிரதம் மூன்று நாள்களை எட்டிய பிறகு, குறிப்பாக அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகும்போதுதான் மத்திய அரசுக்கு இதன் தீவிரம் புரிகிறது. மத்திய அமைச்சர் கபில் சிபல் வந்து பேச்சு நடத்துகிறார். கூட்டுக்குழுவில் பங்கு பெறலாம். ஆனால், அந்த விவரம் அரசாணையில் இடம்பெறாது; அரசியல் சட்டநிர்ணயத்தின்படி சில சிக்கல் இருப்பதால்தான் இந்த ஏற்பாடு என்கிறார்.  இது ஏதோ நல்ல யோசனை என்பதாகத் தோன்றக்கூடும். ஆனால், இது பசிக்காக அழுகிற குழந்தைக்குப் பஞ்சு மிட்டாயைக் காட்டி கவனத்தைத் திருப்பும் உத்திதான். இதற்கு உடன்பட்டால் என்ன ஆகும்?

இக்கூட்டுக் குழுவில் இடம்பெறும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை வலியுறுத்துவார்கள். அமைச்சர்கள் தலையாட்டுவார்கள். ஆனால், இறுதி வடிவத்தில் அந்த கருத்துகள் நீர்த்துப்போய், சட்டத்தின் ஓட்டைகள் மீண்டும் கண்திறக்கும். அந்த நேரத்தில் அதைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் பெறாதவர்களாக, வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இந்த மக்கள் பிரதிநிதிகள் இருக்கக்கூடும். ஆகவேதான், இதைச் சட்டப்படியாக, மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பையும் அரசாணையில் வெளியிட வேண்டும் என்கின்றனர் ஹசாரே தரப்பினர். 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலையும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலையும், கார்கில் வீரர்கள் பெயரில் வீடுகட்டும் ஊழலையும் பெரிதாகப் பேசும் எதிர்க்கட்சியினர், இப்படி ஒரு சட்டத்தை முதலிலேயே சரியானபடி நடைமுறைப்படுத்திட வலியுறுத்தி இருந்தால், இந்தச் சட்டம் முறையாக அமலாக்கம் செய்யப் பட்டிருந்தால், இத்தனை ஊழலும் நடந்திருக்குமா?  ஹசாரே என்ற தனிமனிதரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு பெருகுகிறது.

தில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய அவரது உண்ணாவிரதத்தின் தாக்கம் பெருநகரங்களைத் தாக்கி, இப்போது இந்தியாவின் நகர்ப் புறங்களைக் கடந்து கிராமப்புறங்களைத் தாக்க ஆரம்பித்திருக்கிறது. சராசரி இந்தியக் குடிமகனின் மனக்குமுறலை அண்ணா ஹஸôரே பிரதிபலிக்கிறார். அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதம் முடிவுக்கு வர வேண்டுமானால் பிரதமரின் மௌனம் கலைய வேண்டும். அரசின் பிடிவாதம் தளர வேண்டும். 

மக்கள் குரலே மகேசன் குரல். அண்ணா ஹசாரேயின் குரல் மக்கள் குரல்!

இது இன்று காலை,தினமணியில் வெளியான தலையங்கம். திரு அன்னா ஹாசாரே, இன்று முற்பகல், அதிகாரபூர்வமாகத் தன்னுடைய உண்ணா விரதத்தை முடித்துக் கொள்வதற்கு முன்னால் எழுதப்பட்டது. சென்னையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசுகையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தன்காலில் நிற்கக்கூட வலுவில்லாத பிரதமர் என்று எதிர்க்கட்சியினர் எழுப்பிய குற்றச் சாட்டை,மறுத்துப் பேசியிருந்தாலும், திரு அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராகத் தொடங்கிய இந்தப்போராட்டத்தின் வீச்சைத் தாங்கமுடியாமல், ஒவ்வொருநாளும் ஜனங்களுடைய ஆதரவு பெருகிக் கொண்டேபோவதைப் பார்த்தபிறகு, முதலில் எது எதெல்லாம் முடியாது என்று சொன்னார்களோ, அத்தனைக்கும் ஒத்துக் கொண்டு, அதிகாரப் பூர்வமாக அறிவிக்கமாட்டேன் என்று முதலில் பிடிவாதம் பிடித்துப் பிறகு அதற்கும் இறங்கி வரவேண்டிய நிலை மன்மோகன் சிங்குக்கு! தங்களுடைய தோல்வியை ஒவ்வொரு விஷயமாக ஒத்துக் கொண்டே ஆக வேண்டிய பரிதாபமான நிலைக்கு சோனியாவின் தலைமையை மட்டுமே நம்பியிருக்கும் காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது.

மதுரை, மதுரை சுற்றுவட்டாரங்களில் வழக்குச் சொல்லாடலாகச் சொல்வதென்றால், சூடு சொரணை உள்ள ஜன்மங்களாக இருந்திருந்தால் "நாண்டுகிட்டு" தொங்கியிருக்க வேண்டும்!காங்கிரஸ் கட்சி பதவி சுகத்திற்காக அடிப்படை நேர்மை, சூடு சொரணை எல்லாவற்றையும் துறந்த தியாகிகளால் நிரப்பப்பட்ட கட்சி என்பதால் அவர்களிடம் அதையெல்லாம் எதிர்பார்ப்பது நியாயமில்லைதான்! டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில், நேர்மையானவராக இருந்தால் மன்மோகன் சிங் செய்ய வேண்டியது ல்லாம், உண்ணாவிரதப்பந்தலுக்கே நேரே போய், அன்னா ஹசாரேவை சந்தித்து, வெளிப்படையாகவே பேசுவதுதான் என்று கூட ஒரு செய்திக் கட்டுரையில் இருந்தது. 

யாருடைய முகமூடியாக, அது எத்தனை கேவலமானதாக இருந்தால் கூடப் பரவாயில்லை பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தாலே போதும் என்ற அளவுக்கு அம்பலப்பட்டுப் போன மன்மோகன் சிங்கிடம் அந்த நேர்மையை எதிர்பார்க்கத் தான் முடியுமா?

காங்கிரஸ் கட்சியின் யோக்கியதைதான் இப்படி என்றில்லை! அனேகமாக எல்லாக் கட்சிகளுமே, இந்த காந்தீயப்போராட்டத்துக்கு இந்த அளவு எழுச்சியை உண்டுபண்ண முடியுமா என்பதைப்பார்த்துத்திகைக்க வேண்டிய நிலைமை! பிஜேபி ஆதரிக்க முன்வந்தபோது, ஹசாரே மறுத்து விட்டார்! மேடைக்கு ஆதரவு தெரிவிக்க வந்த உமாபாரதி திருப்பப் பட்டார்! இந்த தேசத்தை சீரழித்ததில், ஊழலில் எந்தக்கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை  என்பதை போராட்டத்தில் ஈடு பட்டிருந்தவர்கள் தெளிவாகவே சொன்னார்கள்.


1968 ஆம் ஆண்டு முதலே,ஊழல் தொடர்பான புகார்களை விசாரிக்கும் இத்தகைய அமைப்பை உருவாக்க, பெயரளவுக்குத் தான் அரசியல் கட்சிகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திருடனிடமே, திருட்டுக்குக்  கடுமையான தண்டனை விதிக்கவேண்டும் என்று எதிர் பார்க்கிற மாதிரியாகிப் போன கதையாக,நாற்பத்திரண்டு வருடங்களாக இந்த மசோதா, ஏதோ ஒரு சாக்குப்போக்கு சொல்லி ஒத்தி வைக்கப் பட்டே வந்திருக்கிறது. இப்போதும் கூட காங்கிரஸ் அரசு ஏதோ ஒரு சாக்கை வைத்து, இதைத் தள்ளிப்போடவும் நீர்த்துப் போகச் செய்யவுமே முயன்றது, அம்பலமாகி, முறியடிக்கப் பட்டிருக்கிறது. அம்பலத்துக்கு வந்தபிறகும் கூட, பார் எனக்கு மீசையே இல்லை, மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் அமைச்சர் பெருமக்கள் பேசுவதைப் பார்க்கையில் சிரிப்புடன், எரிச்சலும் வருகிறது!


"Few could have anticipated that Anna Hazare's movement for a stronger Lokpal bill would generate such an extraordinary groundswell of public support, particularly among the urban middle class. By the fourth day of his indefinite fast, the nationwide protests led by 71-year-old social activist have forced the Centre to drop the anti-corruption bill it had drafted, to agree to prepare a new and stronger draft in consultation with civil society activists, and to desperately seek an agreement to end the crisis." என்கிறது ஹிந்து நாளிதழின் இன்றைய தலையங்கம்.

அடுத்து இன்னொரு தரப்பு, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை ஹைஜாக் செய்வதா, இதென்ன அராஜகம் என்ற ரீதியிலான கேள்விகள் எழுப்பிக் காரசாரமாக விவாதிக்க முற்படுகிறது. அபிஷேக் மனு சிங்வி மாதிரிக் காங்கிரஸ் பேச்சாளர்கள், நீங்கள் விரும்புகிற மாதிரி சட்டம் இயற்ற வேண்டுமானால், தேர்தலில் நின்று ஜெயித்து வாருங்கள், பிறகு சட்டமியற்றுங்கள்' என்று தங்களுடைய அசட்டு முகத்தைக் காட்டிக் கொண்டார்கள்.கபில் சிபல் மாதிரி வக்கீல்கள், ஒரு சிவில் சொசைடியில், அரசு என்ன செய்யவேண்டும் என்று எவரும் உத்தரவு போட முடியாது என்று கொஞ்சம் நாசூக்காக, சிங்வி சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது காங்கிரஸ் தமாஷா நன்றாக வெளிப்பட்டது. காங்கிரஸ் சார்பாகப் பேசிய ஒவ்வொருவருக்கும் இது எங்கே போய்முடியுமோ என்ற பயம் இருந்ததை மறுக்க முடியவில்லை.

மறுபுறம் சந்தியா ஜெயின் மாதிரி ஆர் எஸ் எஸ் பிடிமானமுள்ள எழுத்தாளர்களும் கூட, ஹசாரே தொடங்கிய இந்த இயக்கத்தைப் பற்றிய ஒருவிதமான காழ்ப்புணர்வுடன் எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கட்டுரையின் பின்னூட்டத்தில் ஒருவர் ஹசாரே கிறித்துவரா அல்லது ஹிந்துவா என்பதை சந்தேகமாகக் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது, கொஞ்சம் அருவருப்பாகத்தான் இருந்தது.

திரு அன்னா ஹசாரே தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டிருக்கிறார்.லோக்பால் மசோதா விவகாரத்தில் வேறு வழி இல்லாமல் அரசு கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறது.ஆனால் இது ஒரு ஆரம்பம் மட்டுமே!

இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம்!செய்ய வேண்டியவைகளும் நிறைய இருக்கின்றன!

முதலாவதாககாங்கிரஸ்கட்சி மற்றும் அதன் கூட்டாளிகளைத் தேர்தலில் தோற்கடிப்பது!

அடுத்து வருபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்கிறமாதிரி, ஊழலை எந்த மட்டத்திலும் சகித்துக் கொள்ள மாட்டோம், செயல்திறனற்ற அரசு இயந்திரத்தையும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்று விழிப்போடு இருப்பதும் நம்முடைய கடமை தொடர்கிறது. 

என்ன சொல்கிறீர்கள்? என்ன செய்யப்போகிறீர்கள்?
கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!





No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!