தேர்தல் படுத்தும் பாடு! கழகமா, கலக்கமா?


பிப்ரவரி இறுதியில் தேர்தல் களம் கொஞ்சம் சூடாக ஆரம்பித்த தருணங்களில் கை கொடுக்குமா "கை"? அல்லது கழுத்தறுக்குமா என்று ஒரு பதிவு எழுதியது  நினைவிருக்கிறதா?  

காங்கிரசின் கை எப்போதுமே கை கொடுக்கிற கை அல்ல, கழுத்தை அறுப்பது தான் என்பது தெரிந்திருந்துமே கூட திமுக, காங்கிரசோடு வலிந்து உறவை ஏற்படுத்திக் கொண்டது. 

தன்னுடைய அசாத்தியமான அரசியல் அனுபவத்தை வைத்துக் கொண்டு ஆட்சியில் பங்கு கேட்ட (பங்கு கேட்ட என்றாலே போதாதா?) உள்ளூர் காங்கிரஸ்காரர்களை ஓரம் கட்டிவைத்திருந்த சாமர்த்தியம் கொஞ்சம் ஓவராகி விட்டதோ?

டில்லித் தலைமையும் அதற்கு ஆமாம் ஆமாம் என்று ஒத்துப் பாடியதும் கூட, "சந்தர்ப்பம் வரும் வரை தோழமை, சந்தர்ப்பம் கிடைக்கும்போது சங்கறுப்பது" என்ற அரசியல் அரிச்சுவடியை கலைஞரிடமிருந்தே காங்கிரஸ் பாடம் கற்றுக் கொண்டதாகிப் போனதுவோ?

பலிகடாக்கள்! ஊழல் அரசியலில் இன்றைக்கு சர்வ சாதாரணமாகிப் போன ஒன்றுதானே,இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா?
ஊழல் அம்பலப்பட்டுப் போகிற தருணங்களில் எவரோ பலி கடாக்களாக்கப் படுவது இங்கே சகஜம் தான்!பெருந்தலைகள் எப்போதுமே சிக்காமல், கீழ்மட்டத்தில் எவரையோ கைகாட்டி விட்டுத் தப்பித்துக் கொள்வது இங்கே தொடர்ந்து நடைமுறையில் இருப்பதுதான்!ஆனால், தமிழக அரசியலில் இப்போது நடந்து கொண்டிருப்பது, பராசக்தி வசனத்தைக் கொஞ்சம் அப்படியே உல்டா செய்து போட்டால், இந்த நாடு எத்தனையோ ஊழல்களைச்  சந்தித்திருக்கிறது, எத்தனையோ சிறுபூச்சிகள் ஐம்பதுக்கும் ஐநூறுக்கும் இளித்துக் கொண்டு மாட்டி இருக்கின்றன, ஆனால் பெருச்சாளி சைசில் கூட  எதுவும் மாட்டியதில்லை!ஆனால் இப்போதோ கொழுத்த கடாக்களே சிக்குகிற நிலைமை!

பாவம், கொஞ்சம் சிக்கலான நிலைமைதான் இல்லையா!இனி இன்றைய  தினமணி தலையங்கம்!

“2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சிபிஐ. அதில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றச் சாட்டில் அடுக்கப்படும் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகளை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால்.கனிமொழியின் மீதான குற்றச்சாட்டு அரசுப் பதவியைப் பயன்படுத்தி ஆதாயம் பெற்றது என்பதுதான். இதனை அவர் எவ்வாறு செய்தார் என்பதை சிபிஐ தனக்கே உரித்தான வகையில் விவரிக்கிறது. இந்த வழக்கில், தனக்கான ஆதாயத் தொகை ரூ.214 கோடியை ஸ்வான் டெலிகாம் நிறுவனம் எவ்வாறு வேறு துணை நிறுவனங்கள் மூலம் வழி மாற்றி, கலைஞர் டிவிக்கு வழங்கியது என்பதுதான் வழக்கு.

இந்த வழக்கில் தலா 20 விழுக்காடு பங்கு வைத்துள்ள கனி மொழியையும் கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் சரத் குமாரையும் எதிரிகளாக வழக்கில் சேர்த்துள்ள சிபிஐ, 60 விழுக்காடு பங்கு வைத்துள்ள கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை ஏன் சேர்க்கவில்லை என்பதை ஒரு குறையாகக் காணவும் முடியாது.

ஏனென்றால், அந்த அம்மையார் பெயரை வைத்து, அவருடன் இருந்தவர்கள் ஊழல் செய்தார்களே தவிர, அந்த அம்மையார் ராடியாவிடம் பேசவில்லை. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் பேசவில்லை. அவர் எந்த அரசுப் பதவியையும் வகிக்கவும் இல்லை. ஆகவே, அவரைப் பங்குதாரராகச் சேர்த்துப் பணத்தை அவர் பெயரில் கொட்டினார்கள் என்பதைத் தவிர, அவர் செய்த குற்றம் ஏதுமில்லை என்று சி.பி.ஐ. முடிவு செய்திருக்கலாம்.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருப்பதைப்போல, தனக்கு ஆங்கில அறிவோ, சட்ட நுணுக்கங்கள் பற்றிய தெளிவோ, நிர்வாக அனுபவமோ இல்லாததால், விவரஸ்தரான மேலாண் இயக்குநர் சரத்குமாருக்கு தயாளு அம்மாள் ஏற்கெனவே பிரதிநிதித்துவ அதிகாரம் (பவர் ஆஃப் அட்டார்னி) வழங்கி இருப்பதால், அவரது பெயரைக் குற்றப் பத்திரிகையில் மத்தியப் புலனாய்வுத் துறை சேர்க்கவில்லை என்று தெரிகிறது. சிபிஐயின் இந்த முடிவில் தவறு காண முடியாது என்பது தான் நமது கருத்து.

தயாளு அம்மாள் எதிரியாகச் சேர்க்கப் படாவிட்டாலும், அவர் முதல்வரின் மனைவி என்கிற உரிமை, அந்தஸ்து காரணமாகத்தான் அவர் பெயருக்கு 60 விழுக்காடு முதலீடு சேர்ந்துள்ளது என்பதால், இந்த வழக்கில் நியாயமாகக் குற்றவாளிப் பட்டியலில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சேர்க்கப் பட்டிருக்க வேண்டாமா? கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் தயாளு அம்மாளுக்குக் கலைஞர் டிவியில் 60 விழுக்காடு பங்குக்கான நிதியை அளித்திருப்பார்களா?

தொகுதி உடன்பாடுப் பிரச்னையில், திமுகவின் பதவி விலகல் அச்சுறுத்தலே கூட சிபிஐ அதிகாரிகள் முதல்வரின் வீட்டுக்குள் நுழையக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் என்று அப்போது பேசப் பட்டது. அதைப்போலத் தான் சம்பவங்களும் நடந்தன. பதவி விலகல் கடிதத்தை இங்கிருந்தே ஒளிநகலில் அனுப்பி வைக்காமல் அனைவரும் தில்லி சென்று பிரதமரை நேரில் சந்திக்கக் காத்திருந்தனர். அந்த இடைவெளியில் சமரசங்கள் எட்டப் பட்டன. சமரசம் ஏற்பட்டதும், பதவி விலகல் கடிதங்கள் கிழித்தெறியப்பட்டன.

தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்தால், கருணாநிதி குடும்பத்தார் மீது வழக்குப் பதிவு செய்வது உறுதி என்ற பேச்சு திமுக தரப்பிலேயே பேசப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளி வருவதற்கு முன்பாகவே இந்த வழக்குப் பதிவு நடைபெற்றுவிட்டது. இது மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கும் தேர்தல் முடிவுகள் பற்றிய உளவுத்துறை அறிக்கையால் ஏற்பட்ட தைரியமோ என்னவோ தெரியவில்லை.

தேர்தல் முடிவுகள் வெளிவராத இன்றைய சூழலில் மீண்டும் அடுத்த பதவி விலகல் கடிதம் எழுதும் நாடகத்தைத் திமுக தொடங்குமா என்பது சந்தேகமே. திமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்டால், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா தயாராக இருக்கிறார். வெறும் 119 இடங்களில் மட்டுமே போட்டியிடும் திமுக, கூட்டணி வெற்றி பெற்றாலும் கூட தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என்பதால் தர்ம சங்கடத்தில் சிக்கி இருக்கிறது என்பது யாருக்குத் தெரியுமோ இல்லையோ காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும்.

திமுக தலைவரின் குடும்பத்திலும் சரி, கட்சியிலும் சரி ஆ. ராசாவை பலிகடா ஆக்கியதைப் போல, கனிமொழியையும் பலிகடா ஆக்க முதல்வர் கருணாநிதிக்கு நெருக்குதல்கள் கொடுக்கப்படலாம் என்றும் நம்ப இடமிருக்கிறது.

கூட்டணியிலிருந்து திமுக விலகுவதைக் காட்டிலும் இந்த வழக்கில் எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி தார்மிகப் பொறுப்பேற்று தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதுதான் நடைபெறக் கூடும்.

கனிமொழியை எதிரியாகச் சேர்த்ததால் கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்வியை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ஒரு பெண் நிருபர் கேட்டதற்கு, "பெண்ணாக இருந்துகொண்டு இப்படி இதயத்தைத் தூக்கி றிந்துவிட்டுப் பேசக்கூடாது' என்று கூறி இருக்கிறார் முதல்வர். ஆனால், தனது குடும்பப் பெண்களை முன்னிறுத்தித் தவறான செயல்பாடுகளுக்கு அவர்களை உடந்தை ஆக்கிய முதல்வரிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா இது?

தனது அரசியல் சூதாட்டத்துக்காகத் தனது குடும்பப் பெண்களைப் பகடைக் காய்களாக உருட்டிய குற்றத்துக்கு, முதல்வருக்கு அளிக்கப் பட்டிருக்கும் தண்டனைதான் இந்தத் துணைக் குற்றப் பத்திரிகை.

"நிலைமை எங்கள் கையைவிட்டுப் போய்விட்டது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் மத்தியப் புலனாய்வுத் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிட முடியாது. அதனால், எங்களைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை'' என்கிற காங்கிரஸின் வாதம், எந்த நேரத்திலும் திமுகவைத் கைகழுவக் காங்கிரஸ் காரணம் கண்டு பிடித்துவிட்டது என்கிற தோற்றத்தை அல்லவா ஏற்படுத்துகிறது? இதைக்கூட அனுபவசாலியான முதல்வர் கருணாநிதி புரிந்துகொள்ள முடியாதவரா என்ன?

 உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள் கனிமொழியும், தயாளு அம்மாளும்! இந்த முறைகேடுகளுக்கு அவர்கள் விரும்பி ஆட் பட்டவர்கள் அல்லர்! 

முதல்வரின் மகளாக அல்லாமல், கவிஞராக.........  

கனிமொழி எழுதிய ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

"அப்பா சொன்னாரென...

இந்தத்  தலையங்கத்துக்கு இணையதளத்தில் சிவா என்பவர் போட்டிருக்கும் பின்னூட்டம், வாசகர்களுடைய உணர்வு என்னவாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் நகைச்சுவையோடு இருக்கிறது! கனிமொழி சொல்வது போல அந்த பஞ்ச் டயலாக் இது:

"அப்பா சொன்னாரென கவிதை எழுதினேன், கட்சியில் சேர்ந்தேன், எம்பி ஆனேன், ராசாவுடன் பேசி தொலைத் தொடர்புத் துறை உரிமம் சம்பந்தமாக நிரா ராடியாவுடன் பேசினேன், கலைஞர் டிவியில் பங்குதாரராகி நிர்வாகியாகவும் பொறுப்பு ஏற்றேன், இப்போது வழக்கிலும் உள்ளே போகிறேன், அவர் சொன்னவுடன் வெளியே வந்து விடுவேன், பாருங்கள்!

எனக்கு வேறு ஒன்றும் தெரியாது, என் பெரியம்மா மாதிரி!!"
1 comment:

  1. என்னாத்தை சொல்ல, இனி சொல்லி ஒண்ணும் இல்லை, இவர்களை எல்லாம் ___ல்ல வழி இல்லையா?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!