உலகம் போகிற போக்கும் ஒரு பதிவர் சந்திப்பும்!

.....


பொதுவாக, பதிவர்கள் சந்திப்பு, கூட்டம் என்று எதிலும் அவ்வளவாக நாட்டமில்லாத என்னிடம் சென்ற திங்களன்று (19/11/2012) கோவி கண்ணன் அலைபேசியில் பேசினார்.கோவாவில் இருந்து அப்போது தான் சென்னை திரும்பியிருந்தார். அன்றிரவு பாண்டியன் எக்ஸ்ப்ரெசில் புறப்பட்டு மறுநாள் காலை மதுரை வந்து சேர்வதாகவும், மறுநாள் காலை எங்கே எப்போது சந்திக்கலாம் என்று கேட்டார் சொன்னேன்.

ஆக மறுநாள் 20/11/2012 செவ்வாய்க்கிழமை ஒரு  அறிவிக்கப்படாத அல்லது தம்பட்டமெதுவும் இல்லாத பதிவர்கள் சந்திப்பு, அதிகப்பேர் இல்லை ஜென்டில்மென், நாலே நாலு பேர் மட்டும் தான், காலை பதினோரு மணிக்கு ஆரம்பித்து மாலை நாலரை மணி வரைக்கும். கோவியார் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் மிக அமைதியாக நடந்தது.மதுரை  அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றி  ஒய்வு பெற்ற பேராசிரியர் தருமி ஐயா, எனக்கு முன்பாகவே ஆஜராகிவிட்டார். பதிவர்கள் சந்திப்பு, அதுவும் மதுரையில் என்றால் தருமி ஐயா இல்லாமல் நினைத்துப் பார்க்கவே முடியாது. வேலைநாளாக இல்லாமல் இருந்திருந்தால் கார்த்திகைப்பாண்டியனும் ஆஜராகி இருப்பார். அவரில்லாமல் மதுரையில் பதிவர்கள் சந்திப்பது அனேகமாக இருக்காது! அப்புறம் நான், சிறிது நேரம் கழித்து, மதுரைப் பதிவர் ஸ்ரீதர் ரெங்கராஜ் என்று நாலே நாலுபேர் கூடி விவாதித்துத் தீர்த்தோம்!பதிவுகள், பதிவர்கள் என்று தொடங்கி சமீபத்திய நிலவரம் வரை ஒரு அலசல் கொஞ்சம் வேகமாகவே நடந்தது



நான்கு பேருமே எதிரெதிரான கருத்துக்களில் ஊன்றி நிற்பவர்கள் என்றாலும், வேறுபட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் அதுபோலவே சேர்ந்திருக்கவும் ஆயிரம் காரணங்களுண்டு என்பதில் எனக்கிருக்கும் நம்பிக்கை இந்த மாதிரியான சந்திப்புக்களில், தனிப்பட்ட உரையாடல்களில், எப்போதுமே பொய்த்ததில்லை. இந்த சந்திப்பைப் பற்றி, கோவி.கண்ணனே தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளட்டும் என்று காத்திருக்கிறேன்.

தருமி ஐயாவின் லேட்டஸ்ட் பதிவில் இர்விங் வாலஸ் எழுதிய தி மேன்  நாவலைப் பற்றி ஒரு பாரா எழுதிக் கொண்டிருப்பதை அவர்  சொன்ன போது, அந்த நாவலை பற்றிய என்னுடைய விமரிசனத்தை இந்தப் பக்கங்களில் பதிவு செய்திருந்தது நினைவுக்கு வந்தது அதில் சொல்லி ருந்த ஒரு பகுதி இங்கே

கதைக்களம், டக்லஸ் டில்மன், கறுப்பு நிறம் ஒன்றினாலேயே இளப்பமாக, இரண்டாந்தரமாக நடத்தப் படுகிற நிலையை எதிர்த்து  எப்படி ஒரு மனிதனாக, ஆண்மையுடன் எதிர் கொள்கிறார் என்பது மிக சுவாரசியமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. மேன் என்று சொல்லும் போது ஆண் என்று மட்டுமல்ல ஆண்மையுள்ளவன் என்றும் ஒரு பொருள் இருக்கிறதல்லவா? Tne Man! ஆண்மையுள்ளவன் மட்டுமே ஆணாக இருக்க முடியும்!அந்த ஆண்மை இங்கே மிக அழகாக ஒரு கதையாக விரிகிறது.

கதையின் மொத்த சாராம்சமே கடைசியில் டக்லஸ் டில்மான் -அவரது வழக்கறிஞர் நேத்  ஆப்ரஹாம்ஸ் இருவருக்குமிடையிலான உரையாடல் – இந்தப் பத்தியில் அடங்கி விடுகிறது.

 



வழக்கறிஞர் நண்பர் சொல்கிறார்: ஒரு  கறுப்பனை அதிபராகப் பார்த்தபோது தேசமே அதிர்ச்சியோடு, பயத்துடன், ஒரு அவமானமாகப் பார்த்தது.இந்த ஒரு வருடத்தில் பார்த்துப் பழகிப் போய்விட்டதால் அதிர்ச்சி பயம், அவமான உணர்ச்சி குறைந்திருக்கிறது.ஒரு மனிதனாக, உங்களுடைய செயல்திறனை வைத்து மட்டுமே தீர்மானிப்பதென்பது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கும்.

இதே அளவுகோலின்படி, இன்றைக்கு நரேந்திர மோடி குறித்து ஆத்திரப் படுகிறவர்கள் ஆவேசப்படுகிறவர்கள், பயப்படுகிறவர்களுமே  கூடப் பழகிக் கொள்வார்கள், மோடியை அவரது செயல்களின் அடிப்படையில் மட்டுமே விமரிசனம் செய்வார்கள், புரிந்து கொள்வார்கள் வெறும் கற்பனையான பயம் பரப்புரைகளின் மீதல்ல என்று செய்திகள் கருத்துக் கணிப்புக்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது என்று ஒரு எண்ணம் எழுந்தது.
                                     oooOooo


நேற்று முன்தினம் பதிவர் நண்பர் மாணிக்கம் சட்டநாதனை ஆன்லைனில் பார்த்ததும் ஹேங்கவுட்டில் அழைத்துக் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்தேன். இவனுக்கு வேறு வேலையே இல்லை, எப்போது பார்த்தாலும் காங்கிரசையும் திமுகவையும் கடுமையாக விமரிசித்துக் கொண்டே இருக்கிறான் என்று ஒரு எண்ணம் நண்பர்களிடம் பரவலாக இருப்பதை அறிவேன்.அதைத் தொட்டுப் பேசிக் கொண்டிருந்தபோது, அப்படி ஒரு விமரிசன நிலைபாட்டை எடுப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன என்று கொஞ்சம் விரிவாக எடுத்துச் சொன்னேன்.

காங்கிரசும் திமுகவும் தங்கள் சுயநலத்துக்காக ஜனநாயக நடைமுறைகள், அரசு நிர்வாக இயந்திரங்கள் அத்தனையையும் சீர்திருத்த முடியாதபடி  அளவுக்கும் மீறியே சீரழித்து விட்டன. இந்தச் சீரழிவில் இருந்து மீள இன்னும் எத்தனை தலைமுறைகள் தேவைப்படுமோ தெரியாது என்பதை சொன்னபோது மனிதர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.அவருக்கு வேறொரு வேலையும் எனக்கு ஒரு திருமண வரவேற்புக்குப் போக வேண்டிய அவசரமும் சேர்ந்து வந்ததால், உரையாடல் முற்றுப்பெறாமல் நிற்கிறது.  
 
இப்போதைக்கு முற்றுப்புள்ளி இல்லை! கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் சந்திப்போமா? :-))))