பொழுதுபோக்க சில நல்ல விஷயங்கள்!


சுற்றுச் சூழலை நாசப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வதிலாகட்டும், அமெரிக்க சண்டியர்களை தேக்கி நிறுத்துவதிலாகட்டும், சீனாவிடமிருந்து நாம் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது! 

பொழுது போகவேண்டுமென்றால் நாத்திகம் பேசி, பார்ப்பனீயத்தைத் திட்டுவது ஒன்று தான் வழி என்று நினைக்கிறீர்களா? பொழுதுபோக்க நாத்திகம் பேசாமல், பார்ப்பனீயத்தைப் பேசியே வீணாய்ப் போகாமல், பயனுள்ள வழிகளும் நிறைய இருக்கிறதே, கொஞ்சம் பார்க்கலாமா?

சீனப் பூச்சாண்டி,சீனப் பெருமிதம், சீனா அறுபது, என்ற தலைப்புக்களிலும், தலைமைப் பண்பைப் பற்றிப் பேசும்போது, நேருவிடம் இல்லாத, அதே நேரம்  லால்பஹதூர் சாஸ்திரியிடம் இருந்த நிர்வாகத் திறனைப் பற்றியும் இங்கே பல பதிவுகளாகப் பார்த்திருக்கிறோம். சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதையும் கொஞ்சம் பேசியிருக்கிறோம். அப்படி என்ன சீனாவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதை யாராவது கேட்க மாட்டார்களா என்று காத்திருந்து பார்த்தது தான் மிச்சம்!

சீனப் பூச்சாண்டி எப்படிப் பட்டது என்பதை இந்த ஒரு நிமிட வீடியோவில் இருந்து கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்! சும்மா வேடிக்கைக்கு!
கொஞ்சம் சீரியசாய் விஷயங்களைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இங்கே ஒரு செய்தி.



இந்த வீடியோ கொஞ்சம் தமாஷாகச் சொன்னாலும், சீனர்கள் விடும் வெட்டி உதார், அவர்களுடைய நிஜமான வலிமையைப் போல பல்லாயிரம் மடங்கு அதிகமானது! வீடியோவின் கடைசியில் ஒருவர் செய்கிறார் பாருங்கள், நாமும் அதைச் செய்யத் தயாரானால், உதார் விடும் சண்டியர் என்ன ஆவார் என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதே!

இங்கேயானால், சப்பைப் படங்களை விழுந்து விழுந்து பார்க்கிறார்கள்! நித்தி-ரஞ்சி லீலைகளை, சீடி கிடைக்குமானால் ஐநூறு முதல் எண்ணூறு ரூபாய் வரை கொடுத்துத் தெரிந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்! இப்படி விவகாரம் சிக்காத தருணங்களில் பகுத்தறிவைப் பற்றி, பார்ப்பனீயத்தை எழுத்துக்களிலேயே குத்திக் குதறிஎடுத்து எழுதப்படும் பதிவுகளைப் படிக்கிறார்கள். பிடித்ததா, ஆதரவு ஓட்டுக் குத்துகிறார்கள்! பதில் சொல்லப் பிடிக்காத பதிவுகளுக்கு நெகடிவ் ஓட்டுக் குத்தி, அந்த மட்டிலாவது குத்த முடிந்ததே என்று திருப்திப் படுவதுடன் பதிவுலகக் கடமை, யோசனை, சிந்தனையின் விரிவு, பகுத்தறிவு எல்லாமே முடிந்தும் போய் விடுகிறது!

பக்திமான்களுக்கோ வேறு கவலை! நம்பிக்கையை நித்தி மாதிரி ஆசாமிகள்தான் தாங்கிப் பிடிக்கிற மாதிரிப் பின்னாலேயே திரிவார்கள்! மாட்டிக் கொண்டு  ரஞ்சிதாவோடு அல்லது வேறு கோடம்பாக்கம் எக்ஸ்ட்ராவோடு வீடியோ  வெளியே வந்து விட்டால், நம்பிக்கையைக் கெடுத்தவனைக் கைது செய், சொத்துக்களைப் பறிமுதல் செய் என்று கூச்சல், கோஷம், வேலை வெட்டி இல்லாத நேரங்களில், கேசும் போடுவார்கள்!

இப்படி அக்கப்போர்களில் கவனம் செலுத்துகிற அளவுக்கு, நம்முடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிற விஷயங்களையும்
கொஞ்சமாவது கவனிக்கிறோமா?

அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால்,  வெளிநாட்டு நிறுவனங்கள் நஷ்டஈடு தருவதைச் சுருக்க இந்திய அரசு வலிய வந்து ஒரு சட்ட முன்வரைவை மசோதாவாகத் தாக்கல் செய்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இழப்பீடு தருவதற்கு உச்சவரம்பு வைத்து, மிச்சத்தை இந்திய மக்களின் மீதே, அவர்களின் வரிப்பணத்தில் இருந்தே, தலையில் கட்டுகிற அயோக்கியத்தனத்தைப் பற்றிப் பதிவர்களோ, பதிவைப் படிக்க வருபவர்களோ கவலை கொள்ளக் காணோம்!
இந்த அசமந்தப் போக்கு நல்லது தானா?

இது  விஷயமாக, இங்கே ஒரு சின்னக்  கணக்கை, ஒரு வழக்கறிஞருடைய பார்வையில்  பார்க்க.

அமெரிக்க பகாசுர நிறுவனங்களிடம் இங்கே இந்திய அரசியல்வாதிகளும், இந்திய அரசும் மண்டியிட்டு, ஐயா நீங்கள் நீட்டிய இடத்தில் கச் சாத்துப் போட்டுவிட்டுக் கையையும் வாயையும் பொத்திக் கொண்டு நிற்கிறேன் ஐயா என்று நிற்கிற போது, சீனா எப்படி அமெரிக்க மிரட்டல்களை, அமெரிக்காவின் சண்டியர்த்தனத்தை வெற்றிகரமாக இதுவரை சமாளித்து வந்திருக்கிறது, சமாளித்து நிற்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதிலிருந்து கொஞ்சம் பாடம் கற்றுக் கொள்ளவும் வேண்டாமா? சீனா அறுபது, சீனப் பெருமிதம் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்து, சில பதிவுகளில் டெங் சியாவோ பிங் மாதிரி சீன அரசியல் தலைவர்களால் எப்படி நவீன சீனத்தை நிறுவ முடிந்தது என்பதை அங்கே உள்ள சுட்டிகளில் இருந்து கொஞ்சம் தெரிந்து கொள்ள முடியும்!


ஜெயிப்பதற்கு முதலில் அரசியல் நிலை எடுப்பதில் உறுதி வேண்டும்! அதற்கு முதுகெலும்பு வேண்டும்! காங்கிரஸ் கட்சியிடம், காங்கிரஸ் தலைவர்களிடம் எப்போதுமே இவை இருந்ததில்லை!

சுருக்கமாகவோ, அல்லது நீளமாகவோ எப்படி இருந்தாலும், நம்முடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் விஷயங்களைத் தொட்டு எழுதுவது என்பது இந்தப் பக்கங்களின் உள்ளடக்கமாக இருந்து வருகிறது. கொஞ்சம் துணுக்குச் செய்தி மாதிரியோ, அல்லது அந்தந்த நேரத்துத் தலைப்புச் செய்திகளைத் தொட்டு, நம்முடைய தலைவிதியை நிர்ணயிக்கும், அல்லது நிர்ணயிக்கப் போகும் நிகழ்வுகளையும் தொட்டு எழுதுவது மட்டுமே எனக்குப் பிடித்தமான பணியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், உங்களுடைய கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும் தயாராகவே இருக்கிறேன்.

பொழுதுபோக்கு நாத்திகம், பொழுது போக்கப் பதிவுகள் என்று இருப்பவர்கள் அவர்கள் இயல்பிலேயே இருந்துவிட்டுப் போகட்டும்! 

அரசியல், பொருளாதாரம், தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம், புத்தகங்கள், விமரிசனம், நாட்டு நடப்பு என்று கொஞ்சம் உருப்படியான விஷயங்களை இங்கே விவாதிக்கலாம், என்ன  சொல்கிறீர்கள்?



 

20 comments:

  1. ஹிந்து-பார்ப்பான்! ஹிந்துவுக்குள் பார்ப்பான் ஒரு பகுதி, ஆனால் எல்லா ஹிந்துக்களும் பார்ப்பான் அல்ல!

    இதற்கான வியாக்கியானம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. அவரவர்கள் சௌகரியத்திற்குப் புகுந்து விளையாடும் ஒன்றாக ஆகிவிட்ட பல வார்த்தைகளில், இதுவும் ஒன்று!

    இன்னொரு வார்த்தை, மதச் சார்பின்மை!

    ReplyDelete
  2. Good thought. Let us discuss about some useful topics!

    ReplyDelete
  3. அன்பு தோழரே,
    வணக்கம்.நலமா.உண்மையிலேயே வலைப்பூவை மிகவும் ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் மிகச்சிலரில் நீங்களும் ஒருத்தராக எனக்கு படுகிறீர்கள்.
    சீனா மீது அவ்வளவு நல்ல அபிப்ராயம் கிடையாது எனக்கு(அமெரிக்கானாலே உடம்பு அரிக்கும்!!) ஆனால் உங்கள் கட்டுரை படித்தபின் எனது முடிவை மறுபரிசீலனை செய்ய வைத்துவிட்டீர்கள்.நன்றி.

    ReplyDelete
  4. ப்ரகாஷ் காரத் கொஞ்சம் முயற்சி எடுத்து ஏதாவது செய்து இருக்கலாமே என்ற ஆதங்கம் தான்....இருந்த ஒரு நல்ல மனிதரும் இறைவனடி சேர்ர்ந்து விட்டாரல்லவா! அந்த வலிதேன்!நன்றி சார்.

    ReplyDelete
  5. \\அரசியல், பொருளாதாரம், தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம், புத்தகங்கள், விமரிசனம், நாட்டு நடப்பு என்று கொஞ்சம் உருப்படியான விஷயங்களை இங்கே விவாதிக்கலாம், என்ன சொல்கிறீர்கள்?\\

    மிக நிச்சயமாய் நண்பரே..

    தங்கள் நோக்கத்தை மனமார வரவேற்கிறேன், தொடருங்கள்..

    தோன்றியதை பகிர்ந்து கொள்ளுங்கள்..

    ReplyDelete
  6. The biggest card China holds against America is in the US treasury bonds it holds. It holds 60% of the US treasury issued which is quite substantial. We do not hold that advantage. However, we hold the advantage of a huge middle class which craves for American way of life which is So needed for the US companies.
    I think slavery is running deep in our blood. We have to overcome this to have a spine!

    ReplyDelete
  7. வாருங்கள் ரவி!

    இந்தக் கடன் பத்திரங்கள் விவகாரத்தை,
    http://consenttobenothing.blogspot.com/2010/02/blog-post_18.html
    இந்தப் பதிவிலேயே தொட்டு எழுதியிருக்கிறேன்.

    இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு! ஒன்று, சத்தமே இல்லாமல் அமெரிக்கா டாலர் மதிப்பைச் சரிய விட்டு, தன்னுடைய கடன் சுமையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளும் முயற்சி! இன்னொன்று சீனா, தன்னுடைய கரன்சி மதிப்பை அது மிகவும் வலுவாக இருந்தபோதிலும்கூட, பழைய குறைந்த பரிவர்த்தனை விகிதத்திலேயே வைத்திருப்பது.

    இந்த விஷயம் தான் சீனப் பூச்சாண்டி கொஞ்சம் அதிகமாக வெளி வருவதற்குக் காரணம். உண்மையில் தன்னுடைய முதலீடுகளை, அமெரிக்கக் கடன் பத்திரங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி வேறு ஆதாயமான விதங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறது, அவ்வளவுதான்!

    சீனப் பூச்சாண்டியில், வேறு விஷயங்களும் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாகவும், நட்பு நாடாகவும் இருக்கும் ஜப்பானை, அமெரிக்கா தன்னுடைய சுய லாபங்களுக்காக, சீனச் சந்தைக்காகக் கைகழுவிவிட ஆரம்பித்திருக்கிறது. டொயோடா விவகாரத்தில் அமெரிக்கா கையாளும் விதமும், கூகிள் சீனாவை விட்டு வெளியேறுமா, வெளியேறாதா என்ற விவகாரத்தைக் கையாள்வதிலுமே பெரிய வித்தியாசம் இருக்கிறது.

    Dumping the products very cheap, product quality is also very cheap என்பது தான் சீனர்களுடைய உத்தியாக இருந்துவருகிறது! இது ரொம்ப நாள் நீடிக்காது என்பது அவர்களுக்கே தெரியும்.

    பொருளாதாரம், உற்பத்திமுறை, சந்தைப் படுத்துதல் எல்லாவற்றிலுமே, சீனர்களுடைய அதிரடி பாதித்துக் கொண்டிருக்கிறது! இந்தியத் தொழிற் துறையும் சரி, அரசும் சரி இந்த அபாயத்தைப் பற்றி, சரியான விதத்திலான அணுகுமுறையை இதுவரை மேற்கொள்ளவில்லை.

    ReplyDelete
  8. வாருங்கள் சிவா!

    உருப்படியான விஷயங்களைத் தொட்டு எழுதிக் கொண்டிருந்தது தான்! இடையில் நித்தி-ரஞ்சி விவகாரம் வந்து,சர்வதேசப் பிரச்சினையாகி போய்விட்டதல்லவா!

    தடம் புரண்ட சிந்தனைகளை, மறுபடி சரியான தடத்திற்குக் கொண்டுவர வேண்டுமே! அதுதான்!

    ReplyDelete
  9. மயில்ராவணன்!

    எந்த ஒரு விஷயத்திற்குமே இரண்டு பக்கங்கள் உண்டு! சீனா மட்டும் விதிவிலக்கா என்ன? சீனாவிற்கும் இந்தியாவுக்கும் நிறைய பொதுவான பிரச்சினைகள் இருக்கின்றன என்கிறபோது அதையும் தெரிந்துகொண்டுதானே ஆக வேண்டும்?

    சீனாவின் இன்றைய நிலைமையை மதிப்பிட வேண்டுமானால், கொஞ்சம் வரலாற்றைப் படிக்க வேண்டும். வரலாறு, அது எப்படி இருந்தாலுமே, கற்றுக் கொள்ள உதவுகிற மிகப் பெரிய சாதனம்.

    ஜப்பானிய மேட்டிமைக் குடிகளாலும், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற காலனியாதிக்க வெறி பிடித்து அலைந்த நாடுகளிடமும் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடந்த நாடு சீனா!

    முந்தைய பதிவில் ஒரு சிறு குறிப்பாக சொல்லியிருக்கும் ஒரு விவரம்,பிரிடிஷ்காரர்கள், காண்டனீஸ் தேயிலைக்காகக் காசு பணம் செலவழிக்கவில்லை. தங்களுடைய மற்ற காலனிகளில் கஞ்சா பயிரிட்டு, அபின் தயாரித்துச் சீனர்களை வஞ்சித்த கதையை, opium wars என்ற வார்த்தையை வைத்து கூகுளில் தேடிப் பாருங்கள், நிறைய விவரம் கிடைக்கும்.

    சிதறிக் கிடந்த சீனர்களை, மாவோ ஒன்று திரட்டினார். 1949 இல் மக்கள் சீனம் மலர்ந்தது. வழக்கம் போலவே, கம்யூனிஸ்ட் தலைவர்களின் விஷப் பரீட்சைக்கு கோடிக் கணக்கான மக்கள் பலி கொடுக்கப் பட்டதும் நடந்தது. கம்யூனிஸ்ட் கூட்டாளியான ரஷ்யா, சீனாவைத் தன்னுடைய தோழமை நாடாகப் பார்க்கவில்லை, ஒரு அடிமைப் பிரதேசமாக, கீழ்ப்பட்ட ஜனங்களாகவே பார்த்தது, ஒரு கட்டத்தில், சீனத் தொழில் துறையை உருவாக்குவதற்கு வந்த ரஷ்யர்கள் பாதியிலேயே விட்டு விட்டு வெளியேறினார்கள். சீனா, எவரையும் நம்பாமல் இருப்பதற்கு, ரஷ்யர்களிடமிருந்து கிடைத்த மோசமான அனுபவமும் காரணமாக இருக்கலாம்.

    அத்தனை கொடுமையிலும், சீனர்கள் ஒரே தேசமாக நின்றார்கள்.

    டெங் சியாவோ பிங் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அர்த்தமில்லாத கொள்கைகள், கோட்பாடுகள் கழற்றிவிடப்பட்டன. அவர்களுக்கு மேற்கத்தியத் தொழில் நுட்பம் வேண்டியிருந்தது. ஜனங்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது முன்னுரிமையாக இருந்தது.

    அமெரிக்கர்களுக்குப் புதிய சந்தை வேண்டியிருந்தது, ஜப்பானியர்களோடு தரத்திலும், உற்பத்தி முறையிலும் போட்டி போட முடியவில்லை. சீனாவின் கதவுகள் திறக்கப் பட்டது, அமெரிக்கர்களுக்கு மிகப் பெரிய வரமாக இருந்தது.

    சீனாவின் இந்த அறுபது ஆண்டு கால வரலாற்றிலேயே, நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும்.

    தொடர்ந்து பேசுவோம்!

    ReplyDelete
  10. //பொழுது போகவேண்டுமென்றால் நாத்திகம் பேசி, பார்ப்பனீயத்தைத் திட்டுவது ஒன்று தான் வழி என்று நினைக்கிறீர்களா? பொழுதுபோக்க நாத்திகம் பேசாமல், பார்ப்பனீயத்தைப் பேசியே வீணாய்ப் போகாமல், பயனுள்ள வழிகளும் நிறைய இருக்கிறதே, கொஞ்சம் பார்க்கலாமா?//

    அதுக்கு தான் நீங்க இருக்கிங்களே சார்!

    ReplyDelete
  11. //ஹிந்து-பார்ப்பான்! ஹிந்துவுக்குள் பார்ப்பான் ஒரு பகுதி, ஆனால் எல்லா ஹிந்துக்களும் பார்ப்பான் அல்ல!//

    ஹிந்தியிஸம்=பார்பனீஸம்

    எல்லாம் ஒரே குட்டையில் ஊறிவந்த மட்டைகள் தான்!

    http://allinall2010.blogspot.com/2010/03/blog-post_23.html

    இங்கே இருக்கு விளக்கம்!

    ReplyDelete
  12. //அரசியல், பொருளாதாரம், தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம், புத்தகங்கள், விமரிசனம், நாட்டு நடப்பு என்று கொஞ்சம் உருப்படியான விஷயங்களை இங்கே விவாதிக்கலாம், என்ன சொல்கிறீர்கள்?//


    எப்படியாவது உலகத்தை புரட்டி போட்டுடிங்கன்னா சந்தோசம் தான்!

    ReplyDelete
  13. now see - the america plans to promote n-deal to pak.

    eventhough america shown to original face - the useless congress partymans never change.

    regarding this - yr comments

    ReplyDelete
  14. வால்ஸ்!

    வாளோடும், சமீபகாலமாக ஆலோடும் {ஆல் இன் ஆல்)வருவதை வழக்கமாக வைத்திருக்கிறீர்கள்.

    உலகத்தைப் போட்டிப் போடும் நெம்புகோல் என்னிடம் தான் இருக்கிறது என்று ஏகபோகமாக உரிமைப் பிரச்சினை எழுப்பினால் அல்லவா,நீங்கள் சந்தோஷப் படும்படி உலகத்தை ஒரு நெம்பு நெம்பிப் புரட்டிப் போட முடியும்!

    தவிர, தவறு என்று நிரூபிக்கப் பட்டவற்றை வைத்துக் கொண்டே நீங்கள் ஊதிக் கொண்டிருக்கும்போது, வீரமணி, தமிழோவியா ஐயா வரிசையில் இன்னும் ஒருத்தர் செர்ந்துகொண்டிருக்கிறார் என்று பரிதாபப் படுவதைத் தவிர வேறு சொல்ல என்ன இருக்கிறது?

    ReplyDelete
  15. திரு.பாலு!

    தமிழிலேயே எழுதிப் பாருங்கள் என்றால் கேட்க மாட்டேன் என்கிறீர்களே!

    அமெரிக்காவைக் குற்றம் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்!

    அவர்கள், அரசியல், பொருளாதார, ராணுவ ரீதியாக, தங்கள் நாட்டு நலனுக்காக மட்டுமே யோசிக்கிறார்கள்.சீனர்கள், அமெரிக்காவுடன் டீல் செய்யும்போது, தங்களுடைய நலன்களுக்குக் குந்தகம் வருகிற எதையும் ஒப்புக் கொள்வதில்லை. இப்படி ஒவ்வொரு நாடும், தங்களுடைய நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதில் குறியாக இருக்கும்போது நம்மூர்க் காங்கிரஸ் மட்டும்,அசல் தேசத்து ராஜாவுக்குப் பல்லக்குத் தூக்குவது ஏன், சொம்புதூக்குவது ஏன் என்று கேட்க வேண்டாமா?

    ReplyDelete
  16. //அரசியல், பொருளாதாரம், தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம், புத்தகங்கள், விமரிசனம், நாட்டு நடப்பு என்று கொஞ்சம் உருப்படியான விஷயங்களை இங்கே விவாதிக்கலாம், என்ன சொல்கிறீர்கள்?//



    மிகவும் நல்ல முயற்சிதன் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  17. //தவறு என்று நிரூபிக்கப் பட்டவற்றை வைத்துக் கொண்டே நீங்கள் ஊதிக் கொண்டிருக்கும்போது, வீரமணி, தமிழோவியா ஐயா வரிசையில் இன்னும் ஒருத்தர் செர்ந்துகொண்டிருக்கிறார் என்று பரிதாபப் படுவதைத் தவிர வேறு சொல்ல என்ன இருக்கிறது?//

    தவறுன்னு நிரூபிக்கப்பட்ட பிறகும் மக்கள் மக்கள் மட்டும் ஆசிரமம், ஆசிரமமா சுத்தலாம் நாங்க மட்டும் பார்பணியத்தின் தில்லாலங்கடிகளை அம்பலபடுத்தக்கூடாதாக்கும்!

    ReplyDelete
  18. அன்புடன் நண்பரே வணக்கம்
    மிக சரியா சொல்கீர்கள் இதோடு நிற்காமல் ஏதாவது செயமுடிஉமா என்றும் சிந்தியுங்களேன் எத்தனயோ விவரமானவர்கள் படிப்பார்கள்// உங்கள் போன்ற இளைஞர்கள் சாதிக்கலாம்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. வால்ஸ்!

    நீங்களும் கிண்டிக் கிழங்கு எடுக்கலாம் வாங்கன்னு கூப்பிட்டுக் கூப்பிட்டுத் தான் பாக்கறீங்க! தில்லாலங்கடியும் ரசிச்சுப் பாக்கறீங்க!

    உங்க அளவு ரசனை, கிழங்கு எனக்கு இல்லை!

    திரு.கணபதி நடராஜன் ஐயா,

    நான் சிறுவயதுப் பையன் இல்லை! உங்களை விட இரண்டு வயது மூத்தவன். தவிர, இதை வெறும் அறிவிப்பாக மட்டுமே எழுதவில்லை!

    ஏற்கெனெவே, பல பதிவுகளை இந்த சப்ஜெக்டுகளில் எழுதியிருக்கிறேன். பக்கத்தில் இருக்கும் குறியீட்டுச் சொற்களைப் பார்த்தாலே, பழைய பதிவுகளைப் படிக்க முடியும்.

    அல்லது பச்சைக் கலரில் ஹைபர் லிங்க் தெரிகிறதல்லவா, அதைச் சொடுக்கிக் கூடப் பழைய பதிவுகளில் சிலவற்றைப் பார்க்க முடியும்.

    பார்த்துவிட்டு, உங்களுடைய கருத்தைச் சொல்லுங்கள்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!