மகளிர் தினப் பரிசு! செய்தியும் சிந்தனையும்!

இன்று சர்வதேச மகளிர் தினம். உழைக்கும் மகளிர்  தினம் என்று நூறு வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் ஆரம்பித்தது, உழைக்கும் மகளிர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்று அமெரிக்கா பிடிவாதமாக இருந்ததால், பொத்தாம் பொதுவாக சர்வதேச மகளிர் தினமாக, ஐ.நா சபை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

மகளிர் தினத்தன்று பொதுவாகவே பெண்ணீயம், பெண்ணீயச் சிந்தனைகள், அப்புறம் கொஞ்சம் வாழ்த்துக்கள் என்று கொஞ்சம் சம்பிரதாயக் கூத்துக்கள்  அதிகம் இருக்கும்! இதில் தனியாக என்ன போய் எழுதுவது என்று  கொஞ்சம் தயங்கியே, அமைதியாக இருந்தேன்.

மாநிலங்கள் அவையில், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் மசோதாவை எதிர்த்து, முலாயம் சிங் யாதவ், லொள்ளு பிரசாத் யாதவ் இரண்டு பேருடைய கட்சிக் காரர்களும் சேர்ந்து துணை ஜனாதிபதி அன்சாரி மேஜையில் இருந்த காகிதங்களை எடுத்துக் கிழித்து, ஏக ரகளை செய்து, மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தியிருக்கிறார்கள்! தொலைக் காட்சிச் செய்தியாகப் பார்த்தபோது, பாராளுமன்ற ஜனநாயகம் என்பது இந்தியாவில் எவ்வளவு கேலிக் கூத்தாகப் போய்க் கொண்டிருக்கிறது  என்பதைக் குறித்து, நாட்டு நடப்பில் அக்கறை கொண்ட எவரும் கவலைப் படாமல் இருக்க முடியாது.

மகளிர் தினத்தன்று தான் நிறைவேற்ற வேண்டும் என்ற பப்ளிசிட்டி ஸ்டன்ட் இல்லாமல்,  உரிய முறையில் விவாதம் நடத்தி, அனைத்துத் தரப்பினருடைய ஆதரவையும் பெறுவதற்கு காங்கிரஸ் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.1996 இலிருந்தே இந்த சட்ட மசோதா, பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. இரண்டு யாதவ்களும், தேவே கவுடாவும்  எதிர்க்கும் கோஷ்டியில் இருப்பதும் ஏற்கெனெவே தெரிந்ததுதான்.காங்கிரஸ் கட்சி  அரசியல் முதிர்ச்சி மட்டுமல்ல, பிரச்சினைகளைச் சமாளிக்கவும் தெரியாத இரண்டும்  கெட்டான் என்பது மறுபடி ஒருமுறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்பதாகவே இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

oooOooo
நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் பெண்கள் முன்னேற்றத்திற்கான மூன்று உறுதியான வழிகளை ஒரு பதிவாக நிகோலஸ் கிறிஸ்டோஃப் என்பவர் எழுதியிருக்கிறார்! தெரியாத புதிய விஷயங்கள் ஒன்றுமில்லை என்றாலுமே கூட  எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்கிறோமா என்பதை நம்மை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ளும் உருப்படியான பதிவாக, அவசியம் தேவைப் படுகிற விஷயமாக இந்த மூன்று விஷயங்கள் இருக்கிறது!

முதலாவதாக, பெண்கள் கல்வியில் முக்கியத்துவம் கொடுப்பது! ஒரு ஆண் படித்தால், அது அவனுடனேயே நின்று விடுகிறது, ஆனால் ஒரு பெண்ணைப் படிக்க வைத்தால், ஒரு குடும்பமே படிப்பது போலாகி விடுகிறது. பெண்ணுரிமையின் முக்கியமான அம்சம் கல்விதான்!

இரண்டாவதாக, பெண்களுக்கான  உடல்நல சோதனைகளும், மருத்துவ உதவிகளும்! ஊட்டச் சத்து இல்லாமை, வயிற்றுப் பூச்சி போன்ற சாதாரணமான விஷயங்களில் கொஞ்சம் அதிக அக்கறை எடுத்துக் கொண்டாலேயே,   உடல்நலம், ரத்தச் சோகையில் இருந்து விடுபடுதல், பிரசவ கால சிக்கல்களில்  இருந்து விடுபடுதல் போன்ற நல்ல விஷயங்களை சாதிக்க முடியும்.  பெண்கள் என்று மட்டுமில்லை, சிருவர்களுக்குமே கூட இந்தப் பூச்சி, புழுத் தொல்லையில் இருந்து விடுபட விழிப்புணர்வும், மருத்துவ உதவியும் வேண்டும். மேலும் தகவல்களுக்கு!


மூன்றாவதாக, பெண்கள் தொழில் முனைவோராக வளரத் தேவையான உதவிகள்! இன்றைக்கு மைக்ரோ கிரெடிட், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்று இங்கேயே சில நல்ல விஷயங்கள் வளர்ந்து கொண்டிருந்தாலுமே கூட, இன்னம் அதிக கவனம் எடுத்து அவர்கள் சொந்தக் காலிலேயே நிற்கத் தயாராக்குகிற பொருளாதார விடுதலையை  ஊக்குவிக்க வேண்டும்!

ஒரு கூடுதல் சுவாரசியமான செய்தி! இந்தியாவில் கணிசமான சுயதொழில் செய்கிற பெண்கள், கார்பரேட் நிறுவனங்களிலும், இயக்குனர் குழுவிலும் பெண்களைப் பார்க்க முடியும். ஆனால், நமக்கு நாகரீகத்தையும், தொழிலையும் கற்றுக் கொடுத்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்தில், நிறுவன இயக்குநர்களாகப் பெண்கள் இது வரை இருந்ததில்லை! இது பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிக்கை தரும் செய்தி!

oooOooo

இது ஒரு பிரெஞ்சு பத்திரிகையில் வந்திருந்த கார்டூன்! 
மகளிர் தினத்தை முன்னிட்டுப் பெண்களைக் கல்லால் அடிப்பது, கழியால் அடிப்பது நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக.....! பெண்களைப் பத்திரப் படுத்துகிறோம், நற்குடிப் படுத்துகிறோம் என்று மிக இழிவான நிலையில் வைத்திருக்கும் ஒரு சமூகம் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பதற்கு உதவினால் சரி!

நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல வருகிற செய்தி தெரியாத செய்யதுகளுக்காக,  இங்கே சவூதி அரேபியாவில் பெண்களின் நிலை என்ன என்ற செய்தி ஒன்று! செய்தி இரண்டு! 



'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்ற பாரதி வாக்கின்படி, பெண்களை இழிவு செய்யும் கொடுமை எங்கு நடந்தாலும், ஒரு மகனாக, சகோதரனாக, சக மனிதனாக நிச்சயமாகத் தோள் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். சந்தேகமே இல்லை!

ஆனால், சமீப காலமாக பெண்ணுரிமை
இயக்கங்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுடைய நடவடிக்கைகளில், உள்ளூரில் சின்னஞ் சிறுமிகளைப் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கி , நீலப் படமாகவும் எடுத்து விற்பனை செய்த டேனிஷ் குடிமகனிடம் பாய்ந்ததாகத் தெரியவில்லை! பள்ளிமாணவிகளிடம்  சில்மிஷம் செய்யும் கிறித்துவ ஆசிரியர்களைப் பற்றி அவர்கள் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை!

இன்னும் இது மாதிரி செய்திகளை, இங்கே இந்தப் பக்கங்களில் வரிசையாகப் பார்க்கலாம்!

ஆனால் தோழர் வரதராஜன் மீது மட்டும் வஞ்சம் கலந்த பாய்ச்சலாக இருந்ததாக ஊடகச் செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது! தோழருடைய கடிதமே நிறையக் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது.



ஒரு நல்ல தோழனைக் காவு வாங்கியுமாயிற்று! சம்பந்தப் பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைத்து விட்டதா? பெண்ணுரிமை, பெண்விடுதலை என்பது இப்படித்தான் இருக்குமா?


 

6 comments:

  1. //மகளிர் தினத்தன்று தான் நிறைவேற்ற வேண்டும் என்ற பப்ளிசிட்டி ஸ்டன்ட் இல்லாமல், உரிய முறையில் விவாதம் நடத்தி, அனைத்துத் தரப்பினருடைய ஆதரவையும் பெறுவதற்கு காங்கிரஸ் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை//

    காங்கிரஸ் என்று அல்ல எந்த கட்சியுமே முன் வருவதில்லை.

    இந்தியாவில் பெண்மையைக் கொண்டாடுவதற்குக் குறைச்சலே இல்லை. தாய் மொழி, தாய்நிலம், நதிமகள், பூமித்தாய்,...

    "இப்படியெல்லாம் சொல்லிதான் வயிற்றை ரொப்பிடறீங்க".என்று சுஜாதாவின் 'எதையும் ஒரு முறை' நிரு மாதிரி சொல்பவர்களும் உண்டு.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்!

    இங்கே இந்திய மரபில், பெண்ணுக்கு மிக உயர்ந்த இடம், அவளைத் தாயாக வழிபடுவதில் கொடுக்கப் பட்டிருக்கிறது. பெண்மையின் பூர்ணத்துவமே, தாய்மையில் தான் இருக்கிறது என்று கொண்டாடுகிற தேசம் இது.

    பெண்ணீயம் என்பதாக வெற்றுக் கோஷமோ, அல்லது ஒருபக்கச் சார்பு நிலையோ சரியாக இருக்காது!

    ReplyDelete
  3. //நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல வருகிற செய்தி தெரியாத செய்யதுகளுக்காக,//

    மிக்க நன்றி !!! நீங்கள் சொல்லிக் கொடுங்கள்.நான் கற்றுக் கொள்கிறேன்.

    // பெண்களைப் பத்திரப் படுத்துகிறோம், நற்குடிப் படுத்துகிறோம் என்று மிக இழிவான நிலையில் வைத்திருக்கும் ஒரு சமூகம் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பதற்கு உதவினால் சரி!
    //

    நல்ல மனநிலையில் தான் இருக்கிறீர்கள் என்று நம்பி தான் படிக்க வந்தேன்.நல்ல மருத்துவரை அணுகவும்.

    ReplyDelete
  4. திரு செய்யது!

    முதல் முறையாக இந்தப் பக்கங்களுக்கு பின்னூட்ட அடையாளத்தோடு வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    கற்றுக் கொடுக்கவோ,அல்லது கற்றுக் கொள்ளவோ உண்டான தளம் இல்லை இது! ஆனால், நீண்ட நாட்களுக்கு முன்னால், நீங்கள் எழுப்பிய வினோதமான ஒரு வாதம் இன்னமும் நினைவில் நிற்கிறது.

    மன நல மருத்துவம் அல்லது மருத்துவர் தேவைப் படுகிற கட்டத்தில், உங்களுடைய ஆலோசனையை நினைவில் வைத்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  5. பெண்கள் அவர்கள் மேட்டுக்குடிகளாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளின் உச்சம் இம்மாதிரியான பெண்ணிய வாதிகளால் முன்னெடுக்கப்படும். இந்த அரசியல் மலிவானதாக பெண்ணியத்தில் மட்டும் இல்லை. ஆணிய வாதிகளுக்குள்ளும் உண்டு.. பொதுவாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பது சில பல ஊட்டமான பரிமாற்றங்களுக்குப்பிறகு மட்டுமே முன்னெடுக்கப்படும் என்பது அறிந்த விஷம். யாரும் யாருக்காகவும் ஓடோடி வந்து நான் நான் என்று நின்று போராடுவதில்லை என்பது நிஜத்திலும் நிஜம். மற்றபடி முன்னேற்றம், பாதுகாப்பு,பொருளாதார சுதந்திரம் என்பதில் பெண்கள் இன்னும் கொஞ்சம் சுயம் சார்த்த முடிவுகளையும், முயற்சிகளையும் செய்தல் நலம். "தங்க மதலைகளீன்று அமுதூட்டித்தழுவும் பேரின்பம் " பெறவே பெண் பிறந்துள்ளதாக பெண் விடுதலை பேசியதாக கொண்டாடப்படும் பாரதியும் பெண்ணின் அடிப்படை உடல் ரீதியிலான தேவையை மிகைப்படுத்தி உள்ளதாகத்தான் நான் உண்ர்வேன். தாய்மை என்று சிறையில் பெண்ணை நிறுத்தி வணங்குபவர்கள் அவளை மிகப்பெரிய சிறையில் தள்ளுகிறார்கள் என்பதும் என் கருத்து.பெண்களுக்கான தினத்தின் வாழ்த்துக்களுடன்.

    ReplyDelete
    Replies
    1. பாரதிக்குப் பெண்ணின் உயர்வை நன்கு புரிய வைத்தது சகோதரி நிவேதிதை என்றழைக்கப்படும் சுவாமி விவேகானந்தரின் சீடப்பெண் பாரதி சகோதரி நிவேதிதை இருவருக்கும் இடையிலான உரையாடலைப் படித்தால் கொஞ்சம் தெளிவு பிறக்கும்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!