Showing posts with label காங்கிரஸ் காமெடி. Show all posts
Showing posts with label காங்கிரஸ் காமெடி. Show all posts

சிதம்பர நாடகம்! செம காமெடி!

வாய்க்கொழுப்பு சீனாதானா நேற்றிரவு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வீரவஜனம் பேசிவிட்டு ஓடிப்போய் தன்னுடைய வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டதையும் சிபிஐ அதிகாரிகள் சுவரேறிக் குதித்து உள்ளேபுகுந்து அவரைக் கைது செய்து கொண்டு போனதையும் நான் மட்டுமல்ல இங்கே திமுக உடன்பிறப்புகளுமே கூட ஒருவித கொண்டாட்ட மனநிலையுடன் பார்த்ததை இணையச் செய்திகளில் இன்று பார்க்க முடிகிறது.


Srinivasan J
சிதம்பரம் வீட்டில் CBI officers சுவர் ஏறி குதித்ததை புதுமையாக பார்க்கிறார்கள். இதற்கு முன் தயாநிதிமாறன் வீட்டில் இதே போல CBI officers சுவர் ஏறி குதித்தர்கள்
அப்போது CBIயின் தலைவராக அந்த துறையின் அமைச்சராக இருந்தவர் இதே ப.சிதம்பரம் அவர்கள்.
ஆக அப்பச்சிக்கும் இதேமாதிரி நடத்திக் காட்ட நேற்றைக்கு ஆசை வந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் குறிப்பிட்ட சில தலைகளைத் தாண்டி சிதம்பரம் கைதைக்குறித்து கவலைப்படுகிறர்வர்கள் எவரையும் காணோம். இன்றைக்கு  டில்லி ஜந்தர்மந்தரில் காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று திமுக ஏற்பாடுசெய்திருந்த ஆர்ப்பாட்ட கண்டனக் கூட்டத்தில் காங்கிரசின் குலாம் நபி ஆசாத் கலந்துகொண்டார். 15 கட்சி பங்கேற்பு என்று கலீஞர் செய்திகளில் மட்டும் பார்க்க முடிந்தது. KD சகோதரர்களுடைய சன்செய்திகளில் கூடப் பெரிதாக எந்த கவரேஜையும் காணோம். சால்வை அழகர் பானாசீனா எந்தக்காலத்திலும் மக்களால் விரும்பப்பட்ட தலைவராக இருந்ததில்லை.  தலைவிதியே என்று சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் மட்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்ததாகத் தகவல். 

  
சதீஷ் ஆசார்யா இந்தக் கார்டூனில் என்னமோ சொல்ல வந்து ஆனால் சொல்லாமல் விட்டமாதிரித் தெரிகிறதோ?  அமித் ஷா பானாசீனா மாதிரி வாய்க்கொழுப்புடன் அலைந்ததாகவோ, விசாரணையை எதிர்கொள்ளாமல் சீப் டிராமா நடத்தியதாகவோ எந்தவொரு தகவலுமே இல்லையே!
   
  
குப்பைகளை எங்கே தூக்கிப்போடவேண்டும் என்று தெரிந்த உள்துறை அமைச்சராக அமித் ஷா என்கிறார்களா என்ன!? 


ஹிந்து நாளிதழுக்கு வேறு கவலை! சுரேந்திரா கார்டூன் இன்று.

மீண்டும் சந்திப்போம். 
  

இன்னொரு மூணு! சிரிக்க, கொறிக்க, சிந்திக்க!

மல்லுதேசம் கொஞ்சம் விசித்திரமான கிறுக்குத் தனம் கொண்டது என்பதை #KissofLove நடுரோட்டில் முத்தப்போராட்டம், ஜிமிக்கிகம்மல், கண்ணடிக்கிற ப்ரியா வாரியர், இப்படி ஏராளமான விஷயங்களில் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் இது இப்போது!

       
இப்படி திடுதிப்பென்று சம்மன் அனுப்பினால் யாருக்குத்தான் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்காது?   கோட்டயத்தில் நடைபெறும் தங்கள் திருமணத்திற்கு வரும்படி இப்படி சம்மன்ஸ் அனுப்பிக் களேபரப்படுத்தி இருப்பது வழக்கறிஞர்கள் அல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்? இது இன்று பார்த்துச் சிரித்தது!

*******

புதன்கிழமை! வானம்! பூமி! அரசியல்!  

இதை நேற்று எழுதிய பிறகு இதேநாளில் நான்கு வருடங்களுக்கு முன் இங்கே எழுதியதைத் திரும்பப்பார்த்தேன்  இப்போது மட்டும் நிலைமை மாறிவிட்டதா? ஜான் பாண்டியன் சொல்கிற மாதிரி திராவிட அரசியலே ஜாதிக்கணக்குகள் தானே!

 

சாதி ஒழிப்பு சாதிமறுப்பு என்பதெல்லாம் பகுத்தறிவு #திராவிடங்கள் செய்கிற கண்துடைப்பு வேலைதான் என்பதை திமுக தலைவர் கருணாநிதி  மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில்  எத்தனைபேர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை சாதி வாரியாக பட்டியலிட்டு அறிவித்திருக்கிற செய்தி இங்கே  அரசியல்வாதிகளுக்கு  செலக்டிவாக அம்னீஷியா -ஞாபகமறதி வந்து விடுவதை  ஞாபகப் படுத்திக் கொள்வதற்காக தினமணி நாளிதழில் அடடே!மதி வரைந்த பழைய கேலிச்சித்திரம் இங்கே!


கருணாநிதி அறிவித்திருக்கிற 60 மாவட்டச்செயலாளர்களில் முக்குலத்தோர் 14, கொங்குவேளாளர், வன்னியருக்குத் தலா8, நாயுடு முஸ்லிம் முதலியார் 3,உடையார்,
பிள்ளைமார், ரெட்டியார், மீனவர், எஸ்சி  சாதியினருக்குத் தலா2 அப்புறம் செட்டியார்,   யாதவர், நாடார், கிறித்துவ நாடார், கவுடு,,மருத்துவர் , முத்தரையர் சாதிகளுக்குத் தலா 1 ஆக மொத்தம் அறுபதில் ஒரே ஒரு பெண் அப்புறம் முதல் முறையாக  2 ஆதிதிராவிடர்கள் மாவட்டச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்களாம். #திராவிடங்கள் #சாதிஒழிப்பு பற்றி வாய் கிழியப் பேசுவார்களே தவிர சாதிபார்த்துத்தான் எல்லாக் கணக்குகளும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு மேல் வேறென்னவாம்?  

அய்யம்பேட்டை வேலை என்று சொல்வார்களே! அது இதுதானோ என்பதை இன்றைய செய்திகளிலும் பார்த்து அலுத்துக்கொள்ளத்தான் முடிகிறது என்பது சுள்ளென்று உறைக்கும் கொறிப்பு 

*******
இந்த காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களைப்பற்றி  என்னவென்று கணிப்பீர்கள்?


வரும் மக்களவை தேர்தலில் ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் தனித்தே போட்டியிடக் காங்கிரஸ் முடிவு செய்ததாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘வரும் தேர்தல் அனைத்திலும் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. ஆனால், இதற்கான ஒத்துழைப்பு கிடைக்கும் மாநிலங்களில் மட்டும் பயன்படுத்திக் கொள்வோம். பாஜகவின் செயல்பாடுகள் காரணமாக கூட்டணி வைப்பதன் மூலம் கிடைக்கும் தொகுதிகளை விட, தனித்து போட்டியிட்டாலே காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளதால் இந்த முடிவை ராகுல் எடுத்துள்ளார்’’ எ!னத் தெரிவித்தனர்.

அடடடே! அப்படியா?!!  
சிந்திக்கறீங்களா? சிரிக்கறீங்களா? என்னன்னு சொன்னாத் தானே தெரியும்!!   
   

இது சோனியாவுக்கு வந்த சோதனை மட்டும் தானா?


 
இது சோனியாவுக்கு வந்த சோதனை மட்டும் தானா?

சென்றபதிவில் திரு அப்பாதுரை இந்த ஜனாதிபதி பதவியே அவசியம் தானா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்!இன்னும் கொஞ்சம் கேள்விகள் வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!

இன்னும் மூன்றே மாதங்களில் பிரதிபா பாடீல் ஜனாதிபதி மாளிகையை விட்டுக் காலி செய்து, வேறு ஒருவர் அங்கே தேர்ந்தெடுக்கப் பட்டவராக குடியேற இருக்கிறார் என்பது வெறும் செய்தி. ஆனால் அந்த வெறும் செய்திக்குப் பின்னால் என்னென்ன உள்ளடி வேலைகளைக் காங்கிரஸ் கட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.

ஐந்து வருடங்களுக்கு முன்னால்,தான் போடும் தாளத்துக்குத் தலையாட்டுகிற ஒரு பொம்மையை ஜனாதிபதியாக்கிக்  காங்கிரஸ் தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொண்ட மாதிரி இப்போதும் செய்ய முடியுமா என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது. தவிர, சென்ற தருணத்தில் இருந்தது போல  ஐமு கூட்டணிகுழப்பம் வெர்ஷன் இரண்டில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளுடனான உறவும் இப்போது சுமுகமாக இல்லை.
காங்கிரசின் பலவீனமான நிலையை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் கூட்டணிக்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் 2014 தேர்தல்களை மனதில் வைத்துக் கொண்டு பலகுரல் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்திருக்கின்றன. முதலில் பொது வேட்பாளர் என்ற ரீதியில் தான் பேச்சுக்கள் அதிகார பூர்வமற்ற முறையில் நடந்தன. துணை ஜனாதிபதி பதவிக்கு பிஜேபி வேட்பாளரை ஆதரிப்பது, பொது வேட்பாளரை பிஜேபியும் ஆதரிப்பது என்று ஆரம்பித்து இன்றைக்குக் காங்கிரஸ்  நிறுத்தும் எந்த வேட்பாளரையும் ஆதரிப்பது இல்லை என்று பிஜேபி உறுதியாக அறிவித்திருப்பதில் முடிந்திருக்கிறது.

சென்ற முறையை விட,பிஜேபி இப்போது உட்கட்சி விவகாரங்களில் பெருத்த சரிவை சந்தித்துக் கொண்டிருந்தாலும்,காங்கிரசை அதன் கொம்பைப் பிடித்து ஆட்டிப் பார்த்துவிடுவது என்ற உறுதியோடு களம் இறங்குகிறது.அதிமுக உட்பட சில மாநிலக்கட்சிகள் கொஞ்சம் வலிமையோடு காங்கிரசைப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. முலாயம் சிங் யாதவ், அப்துல் கலாமைப் பொது வேட்பாளராக அறிவிக்க விரும்புகிறார் என்ற செய்தி வந்தவுடனேயே, பிஜேபி சாமர்த்தியமாக, அப்படி அப்துல் கலாமை எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தினால் அதை ஆதரிப்போமென்று அறிவித்துவிட்டு, கூடவே துணை ஜனாதிபதி பதவிக்குத் தங்கள் கட்சி பரிந்துரைக்கும் ஒருவருக்கு அவர்களிடம் ஆதரவு கோருவோம் என்றும் அறிவித்திருப்பது இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டி இருக்கும் என்ற நிலையை மெல்ல மெல்ல உருவாக்கி வருகிறது.
 
முலாயம் சிங் யாதவ், காங்கிரசோடு வெளிப்படையாக மோதுவதைத் தவிர்த்து வந்தாலும், அவருடைய கவனமும் அடுத்து வரும் நாடாளுமன்றத்  தேர்தல்களின் மீதே இருக்கிறது.மாயாவதி தற்காப்புக்காகக் காங்கிரசை அண்டியே நிற்க வேண்டும் என்ற காங்கிரஸ் கணக்கு முந்திப்பலித்தது போல இப்போதும் பலிக்குமா என்பது சந்தேகம்! மம்தா பானெர்ஜி காங்கிரசுக்குத் தூக்கமில்லாத பலநாட்களைக் கொடுக்கும் தலைவலியாக இருந்தாலும், அவரைப் பல வகையிலும் குளிர வைத்து, ஆதரவைப்பெற்று விடமுடியும் என்ற நம்பிக்கையோடு காங்கிரஸ் இருக்கிறது.



கனிமொழி விவகாரத்தில் கொஞ்சம் இளக்கம் காட்டினாலே போதும், திமுக ஆதரவு தானாகக் கிடைத்து விடும் என்பது காங்கிரஸ் காரர்களுக்குத் தெரியாதா என்ன! கருணாநிதியும் துணைவி, கனிமொழி சகிதமாக துணைவி வீட்டில் வைத்து அந்தோணியை சந்தித்தது அவரை மாதிரி ஒரு சீனியர் அரசியல்வாதி எதை எதிர்பார்ப்பார் என்பது அவ்வளவு பெரிய ரகசியமா! டெசோ புசோ என்று குழிதோண்டிப்புதைத்த பினத்தைத் தோண்டி எடுத்து ஒப்பாரி வைப்பது போல ஈழத்தமிழர் பிரச்சினையைக் கையில் எடுத்தது பின்னால் தான் என்றாலும் பெங்களூருவில் மகள் செல்வி வீட்டில் வைத்து பிஜேபி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாதா என்ன! அந்தோணி வந்து சந்திப்பதற்கு முன்னாலேயே அமலாக்கத்துறை தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு கனிமொழிக்கு சம்மன் அனுப்பியது கூட இந்தத் தேர்தலில் திமுகவை வேறெந்தப் பக்கமும் சாயவிடாமல் இருப்பதற்காகத் தானே!

இடதுசாரிகளின் ஆதரவை எளிதாக பிஜேபி பூச்சாண்டி காட்டியே பெற்று விடலாம் என்று காங்கிரஸ் நம்புகிறது.இடதுசாரிகளைக் குளிர வைக்கிற மாதிரி, இப்போது துணை ஜனாதிபதியாக இருப்பவரையே நிறுத்தலாமென்ற யோசனையைக் கருணாநிதி கூட ஆதரித்திருக்கிறார். 

ஆனால், அவரை நிறுத்தினால் இடது சாரிகள் ஆதரவு கிடைக்கலாம், மம்தா ஆதரவு கிடைக்காது!இந்திய அரசியலில் இடதுசாரிகள் ஆக்க பூர்வமான பங்களிப்பு என்பது எமெர்ஜென்சி  தருணங்கள் தவிர  பிறகு அவ்வளவாக இல்லை என்ற கசப்பான உண்மையை வருத்தத்தோடு ஒப்புக்கொண்டாக வேண்டியிருக்கிறது. தோழர்களை வாரான் வாரான் பூச்சாண்டி பிஜேபி வடிவிலே என்று கேலியாக சொன்னால் கூடப் போதும், தடம் புரண்டு காங்கிரசைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து விடுகிற அளவுக்குத்தான்  அவர்களுடைய அரசியல் விவேகம் இருக்கிறது.

ஆனால், இப்போது நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை விட, யார் யார் போட்டியிடப் போகிறார்கள், யார் யார் எதற்காக அவர்களை ஆதரிக்கிறார்கள், அல்லது எதிர்க்கிறார்கள் என்பதே மிக சுவாரசியமான ஆட்டமாக, இந்திய அரசியல் எந்த அளவுக்குச் சீரழிந்து கிடக்கிறது என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.

தேசீயக்கட்சியான காங்கிரஸ், மாநிலங்களின் உணர்வை மதிக்கத் தவறியது என்பதாலேயே மாநிலக் கட்சிகள் கடந்த ஐம்பது வருடங்களில் காங்கிரசை மாநில அளவில் தோற்கடித்து முன்னுக்கு வந்தன. அப்படி முன்னுக்கு வந்த மாநிலக்கட்சிகள், தேசீயக் கண்ணோட்டத்தோடு வளர்ந்தனவா, ஒரு பொதுவான செயல்திட்டத்தோடு காங்கிரசுக்கு மாற்றாகத் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கிக் கொண்டனவா என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள்! மாநிலக்கட்சிகள் தேசீய அளவில் ஒரு பெரிய மாற்றாக வளரவே இல்லை என்பதும், கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப்போன காங்கிரஸ் அந்த ஒரு காரணத்தினாலேயே இன்னமும் தேசீய அளவில் பெரிய பிஸ்தா மாதிரித் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடிகிறது என்பதும் புரியும்.

கட்டெறும்பாகிப்போன காங்கிரசை எல்லாவகையிலும் தோற்கடிப்பது ஒரு ஆரம்பம் மட்டுமே!குறுகின கண்ணோட்டங்களோடு செயல்படும் மாநிலக் கட்சிகளை நிராகரிப்பதும்  இப்போது தேவைப்படுகிற நிவாரணம்.


ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசும், இதர அரசியல் கட்சிகளும் செய்கிற கூத்துக்கள், இது சோனியாவுக்கு வந்த சோதனை என்று மட்டும் ஒரே வரியில் முடித்து விட முடியாது! இந்த தேசத்தின் அரசியல் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது, இதை சரி செய்வதற்கு எவ்வளவு ஜெயப்பிரகாஷ் நாராயணன்கள், அண்ணா ஹசாரேக்கள் வந்து பிரயாசைப்பட வேண்டியிருக்கும் என்பதை யோசிக்கும் போதே தலை சுற்றுகிறது

சோனியாவுக்கு வந்த சோதனை.....!



நாற்பத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், காங்கிரஸ் கட்சியின் மீதான தன்னுடைய பிடியை இறுக்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி தேர்தலை இந்திரா காண்டி பயன்படுத்திக் கொண்ட அதே மாதிரியான சூழ்நிலை இத்தாலிய மருமகள் சோனியாவுக்கும் இப்போது கொஞ்சம் வித்தியாசமான வகையில் ஏற்பட்டிருக்கிறது. இந்திரா, தன்னை டம்மியாக வைத்து சில மூத்த தலைவர்கள் பேக் சீட் ட்ரைவிங் செய்ய முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகத்தில் கட்சியை இரண்டாக உடைக்கக் கூடத்தயங்கவில்லை. கட்சியின் அதிகாரபூர்வமான வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியைத் தனது கருப்பு ஆடு வி வி கிரியை வைத்து தோற்கடித்தார். கட்சியும் இண்டிகேட், சிண்டிகேட் என்று உடைந்தது.ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்பட்டுக் கொண்டே இந்திரா காண்டி செய்த அரசியல், அதனுடைய விளைவுகள் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.



காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பதினான்கு ஆண்டுகளில், இத்தாலிய மம்மிக்குத் தான் இன்னும் செல்லுபடியாகக் கூடிய காசுதான் என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம். ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றில், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்கிற உன்னதமான தலைமை என்று தியாக சிகரமான இத்தாலிய மம்மிக்குப் பேர் இருந்தது!(!!) ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டில், அந்த பிம்பம் உடைபட்டுப் போய், எத்தைத் தின்றாலாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் நபர்களால் ஆனதுதான் காங்கிரஸ் என்ற உண்மையும், தியாகசிகரத்தின் தலைமைக்கான சோதனையும் பல்லை இளித்துக் கொண்டு இப்போது முன்வந்து நிற்கிறது.

தாங்கள் சொல்வதற்குத் தலையாட்டுகிறவர்கள் தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது இந்திரா காலத்தில் இருந்தே தொட்டுத் தொடரும் காங்கிரஸ் கலாசாரக் கருமாந்திரம்!ஆனால் இப்போது  அந்த கலாசாரக்  கருமாந்திரத்தை தொட்டு தொடர்வதற்குத் தேவையான எண்ணிக்கை அவர்களிடம் இல்லை. காரியம் ஆக வேண்டுமென்றால் கழுதை காலைக் கூடப் பிடிப்பதற்குக் காங்கிரஸ்காரர்கள் எப்போதுமே தயங்கியதில்லை. கருணாநிதியை சந்திக்க அந்தோணி வந்திருப்பது அந்த மாதிரித்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!


                                                                      
மம்தா மாதிரி வெளிப்படையாக எதிர்க்குரல் கொடுக்கும் நிலையில் திமுக இப்போது இல்லை. என்றாலும் கருணாநிதி திடீரென்று டெசோ புசோ என்று தமிழ் ஈழப் பிரச்சினையைக்கையில் எடுத்திருப்பதற்கும், ஜனாதிபதி தேர்தலில் திமுக எம்பிக்கள் ஆதரவைக் காங்கிரஸ் கொஞ்சம் விலை கொடுத்தாவது வாங்க வேண்டியிருப்பதற்கும் சம்பந்தம் இருக்கிறதோ? அந்தோணி வந்தார், பேசினார், போனார் என்று ஒரு வரியில் முடிந்து விடுகிற விஷயமில்லையே இது!

இத்தாலிய மம்மிக்கு வந்திருக்கிற சோதனை, இந்திரா காண்டிக்கு வந்ததை விடக் கொஞ்சம் வித்தியாசமானது! 2014 பொதுத்தேர்தல்கள் வரை பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை, வெடித்துக் கிளம்பிய ஒவ்வொரு ஊழலும்  கட்டாயமாக்கி இருக்கிறது. அம்மணியின் தலைமை, அதன் மீது கூட்டாளிகளுக்கு இருக்கும் நம்பிக்கை எல்லாம் சிதறுகாயாக உடைந்து போய்க் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எப்படியாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்றால், என்ன ஜகஜாலம் செய்தாவது, எத்தை விட்டுக் கொடுத்தாலும் சரி, காங்கிரசுக்குக் கொஞ்சம் ஒத்துப் போகிற ஒரு நபரை ஜனாதிபதியாக்கியே ஆக வேண்டும். அப்படி ஒன்று மட்டும் நிறைவேறி விட்டால், திடீர்த் தேர்தல், அதன் பின்விளைவுகள், ஊழல் குற்றத்தில் நிறையப்பேர் (அம்மணியும் உள்ளிட்டுத்தான்)  உள்ளே போக வேண்டிய அபாயம் எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளிப் போட்டுவிடலாம்! 

ஆசைகள் எல்லாம் குதிரைகளானால், இத்தாலிய மம்மி நினைப்பது கூட நடக்கலாம்!
                                                                          

இந்திய அரசியல் களத்தில் அதிக அதிகாரங்கள் இல்லாத வெறும் பெயருக்கு மட்டுமே அரசின் தலைவராக இருக்கும் ஜனாதிபதியை வருகிற ஜூலை மாதம் தேர்ந்தடுப்பதில் இத்தனை சிக்கல்களை, இத்தாலிய மம்மி சந்தித்தாக வேண்டியிருக்கிறது.கூட்டணி  தர்மங்கள் முடிந்து, கூட்டாளிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பங்கு சதையை, ஷைலக் மாதிரி டிமாண்ட் செய்கிற அளவுக்கு ஐமு கூட்டணி குழப்பம் பிளவு பட்டிருக்கிறது. கூட்டாளிகளைத்திருப்தி செய்வது ஒரு பக்கமிருக்க, வெளியே இருந்து வேறு நிர்பந்தங்களால் ஆதரவளிக்கிற முலாயம் சிங் யாதவ், மாயாவதி இவர்களைத் தவிர பிஜேபிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவே எதை வேண்டுமானாலும் செய்யத்தயாராக இருக்கும் இடதுசாரிகள், இவர்களையும் கட்டி மேய்க்க முடியுமானால் இத்தாலிய மம்மி தான் நினைப்பதை சாதித்துக் கொள்ள முடியும்.

பிரகாஷ் காரத்தினால் கைகாட்டப்பட்டு, இப்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் முகமது ஹமித் அன்சாரியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால், முலாயம் சிங் யாதவ் ஆதரவளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், இடது சாரிகள் ஆதரவும் மம்தாவின் ஆதரவும் வெவ்வேறு திசைகளில் பயணிப்பவை. இடது சாரிகளின் ஆதரவிருக்கும் வேட்பாளரை மம்தா ஆதரிக்க மாட்டார்.தவிர பிஜேபி, அன்சாரி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது என்பது இன்னும் கொஞ்சம் சிக்கல்.

முலாயம் சிங் யாதவ் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமைப் பொது வேட்பாளராக அறிவிக்க இருப்பதாக செய்திகள் கசிகின்றன. கலாமை மறுபடி ஜனாதிபதியாக்குவதில் காங்கிரசுக்கு இருக்கும் தர்மசங்கடம் புரிந்துகொள்ளக் கூடியதே! சோனியாவைப் பிரதமராக விடாமல் தடுத்ததில் கலாமின் பங்கு, அவ்வளவாக அறியப்படாத ஒன்று தான் என்றாலும்,தாங்கள் சொல்வதற்குத்  தலையாட்டுகிறவராக கலாம் இருக்க மாட்டார் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. கலாமை ஏற்பதில் இடதுசாரிகளுடைய தயக்கம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்!

இவர்கள் இருவரை விட்டால், அப்புறம் எல்லோருக்கும் நல்லவராக இருக்கும் பிரணாப் முகர்ஜி! இவர் ஒருத்தர் விஷயத்தில் மட்டும் பிஜேபி, இடதுசாரிகள் ஆதரவு இருக்குமாம் என்பது இந்திய அரசியலின் நகைமுரண்! 

இவரை ஏற்றுக் கொள்வதில் யார் தயக்கம் காட்டுகிறார்களோ இல்லையோ, காங்கிரஸ் கட்சியே அவரை முன்னிறுத்துவதில் அக்கறை எடுத்துக் கொள்ளாது! அவரது சேவை வேறு திசைகளில் தேவையாம்!!

“Ansari seems to be the potential consensus candidate, given that Pranab Mukherjee seems to have the backing of all parties except the Congress,” a senior NCP leader told The Indian Express on Wednesday.

அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய், அகாலிதளத்தின் பிரகாஷ் சிங் பாதல், கரன் சிங், பாரூக் அப்துல்லா என்று வேறு பெயர்களும் அடிபடுகின்றன.

ஆனால், இத்தனை குழப்பங்களுக்கு இடையிலும் காங்கிரஸ் கட்சி, தான் நினைக்கும் வேட்பாளரையே தன்னிச்சையாக அறிவிக்கும் என்றும் தகவல்கள் சொல்கின்றன.அது மட்டும் உறுதியானால், சோனியா ஒரு பலப்பரீட்சைக்குத் தயாராக இருப்பது போல ஒரு சித்திரம் எழுகிறது

இத்தனைக்குப் பின்னாலும் கிழிந்து பரிதாபமாகத் தொங்கும் சோனியாவின் தலைமை, எதிர்காலம் இருக்கிறது.