இப்படி ஜென் ஞானமாகவும், வேதாந்த உண்மையாகவும் நமக்குக் காலம் காலமாகச் சொல்லப் பட்டதெல்லாம் தமிழனிடம், தமிழ் வலைப் பதிவுகள், வாசகர்களிடம், கொஞ்சம் மெதுவாகவே தான் வேலை செய்யும் போல இருக்கிறது. எவ்வளவு மெதுவாக என்பதைப் பார்க்கும் போது தான் கொஞ்சம் பகீரென்கிறது!
ரிப்பீட்டே, ரிபீட்டுக்கு மறுக்கா ரிப்பீட்டேய்யய்ய்ய்.....என்று தலைமுறைகளையும் தாண்டி அவ்வளவு மெதுவாக!
இதற்கே இப்படி என்றால் கண்டு கொள்வோம் கழகங்களை என்று பெரியவர் நெல்லை ஜெபமணி போன்றவர்கள் என்னதான் முழுக்க விவரங்களை அடுக்கினாலும், நாற்பத்தைந்து ஆண்டு காலமாகக் கழகங்கள் என்ற மாயையைக் கடந்துபோக இன்னும் எத்தனை காலமாகும் என்பதைக் கணக்குப் போடவே பயமாக இருக்கிறது!
வலைப் பதிவுகளை, முகம் பார்க்கும் கண்ணாடியாக உருவகப் படுத்துவார் முனைவர் நா.கண்ணன்! நம்முடைய அகத்தில் என்ன இருக்கிறதோ அதைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் தான் இணையத்திலும் பார்க்க முடியும் என்று அவர் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்!
போன வியாழக் கிழமை காதல்! காமம்! சார்க்கோசி! சபாஷ் சரியான போட்டி! என்று ஒரு பதிவை இந்தப் பக்கங்களில் எழுதினேன்.
சப்பை மாட்டர்! கொஞ்சம் சப்பைப் படம்! அதுக்கே இப்படியா என்று ஆச்சரியப் பட்டுக் குழம்பாமல் வேறென்ன செய்வது? அதற்கப்புறம் ஏழு பதிவுகள் எழுதியாயிற்று! அவைகளுக்கு எண்பது- நூறு வரை வாசகர் வருகை இருந்தது அவ்வளவுதான், மிச்சமெல்லாம் ப்ருனி படம் பார்ப்பதற்குத்தான்! நல்லாப் பாத்துக்கோங்க சாமி!
ப்ரூனி -சார்க்கோசியைப் பத்தி முன்னால வந்த செய்தி, இன்னமும் ஊர்ஜிதமாகலை! யாரோ ஒருத்தர், இப்படி ஒரு செய்தியை கிளப்பி விட்டா என்ன ஆகும்னு டிவிட்டர்ல ட்விட்டை ஆரம்பிச்சு வச்சதா சொல்றாங்க! அதுவும் ஊகம் தான்!இப்போ பரபரப்பான செய்தி என்னவா இருக்குன்னா, அம்மணியோட முகத்தில சமீபத்துல அதிக சுருக்கம் விழுந்து வயசாளியாக் காமிக்குதாம்! பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணது சரியில்லேங்கற மாதிரி!
அதை விடக் கொடுமை நேற்று எழுதிய பதிவர் குணாதிசயங்கள்! அப்புறம் உலக மகா டாக்டர் பட்டம்! தமிலிஷ் திரட்டி இந்தப் பதிவை இன்னும் நாலைந்து பதிவுகளோடு டாக்டர்,பிரகாஷ் தொடர்பான தமிழ் செய்திகள், வீடியோ, படங்கள் என்ற தனிப்பக்கமாக வகைப் படுத்தி வைத்திருக்கிறது. டாக்டர், பிரகாஷ் இரண்டு வார்த்தைகளுக்கு நடுவிலும் ஒரு கமா இருக்கிறதே என்கிறீர்களா?
அந்தக் கமாவுடனோ, அல்லது இல்லாமலோ கூகுளில் தேடித் பார்த்தால் என்ன ரிசல்ட் சேர்த்து வரும் என்பது தெரியும் தானே!
குதிரைக்குக் கண்ணைக் கட்டி வைத்திருப்பது போல, இப்படி நமது சிந்தனைகளை, செயல்களைக் குறுக்கி வைத்திருப்பது எது?
எதற்கு எந்த அளவு முக்கியத்துவம் என்பது தெரியாத வரை, எந்த ஓட்டை வழியாக, எந்த பலவீனத்தை வைத்து நம்மிடமிருப்பது எல்லாம் கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
பதிவர்கள், இணையத்தில் புழங்குவோர் ஒன்றும் தனியே எங்கிருந்தோ குதித்து வந்தவர்கள் அல்ல! அவர்களும் சமூகத்தின் ஒரு பகுதியே! என்ன, இணையத்தில் மின் வெளிப் பரப்பில் சுதந்திரமாக உலவுகிறோம் என்ற நினைப்பில், கொஞ்சம் கூத்தடிப்பது, மொட்டைக் கடிதாசி எழுதுகிற மாதிரியே, அனானியாக வந்து தனிமனித வெறுப்பைக் கொட்டுவது, கொஞ்சம் ஆபாசமாக வார்த்தைகளைப் பயன்படுத்துவது எல்லாமே கொஞ்சம் மிகைப் படுத்தப் பட்ட விகிதத்தில் இருக்கும், அவ்வளவு தான்!
எல்லாமே வேண்டியது தான்! எதையும் ஒதுக்கி வைக்க வேண்டியதில்லைஎன்பதும் உண்மைதான்! ஆனால், களைகளை வேரறுக்காமல் விட்டு விட்டால், நல்ல பயிர் தழைக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் இல்லையா?
மலம், மூத்திரம் இவைகளை நம்முடலில் சுமந்து கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை! அதற்காக அவற்றை எடுத்து உணவு உண்ணும் இடத்தில், சேர்த்து வைத்துக் கொள்வோமா?
சின்னச் சின்ன விஷயங்களில் கவனத்தைச் சிதற விட்டால், அப்புறம் திருடர்கள் ஏன் கழகங்கள் அமைத்துத் திருட மாட்டார்கள்?
அப்புறம், மாயாவதிகள் மாதிரிக் கோடிரூபாய் மாலைகளில் தெனாவட்டாகத் ஏன் திரிய மாட்டார்கள்?
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், ஏழை அழுத கண்ணீர் எரிக்கும் என்பதெல்லாம் வீரியமில்லாத வார்த்தைகளாகிப் போனது ஏன் என்பது புரிகிறதா?
இதுவும் கடந்து போக வேண்டியதே! இதுவும் கடந்து போகும்!








