Showing posts with label புவனேஸ்வரி. Show all posts
Showing posts with label புவனேஸ்வரி. Show all posts

கால் மாறாத கமகமக் கதைகள்! தேடல்! மாக்சிம் ரெட்டி!

தேடல் என்பது என்ன? எதைத் தேடுகிறோம்? தேடுவது எதற்காக? தேடியதை என்ன செய்யப்போகிறோம்?

"என் வலைப்பதிவுக்கு 'பாலியல்' 'காமக் கதை' ஆகிய குறிச் சொற்களைத் தேடி நிறைய பேர் வருவதாக feedjit காட்டுகிறது,  தினமலரில் 'தேவநாதனையும்',  புவனேஸ்வரியை'யும் நிறைய பேர் தேடி இருக்கிறார்கள். தேடல் என்பது இது தானோ !"



பதிவர் கோவி கண்ணன் தன்னுடைய பதிவில் கொஞ்சம் அலுப்போடு  எழுதியிருப்பது இது இரண்டாம் தடவை! அவர் அலுத்துக் கொள்வதிலுமே கொஞ்சம் நியாயம் இருக்கிறது! ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு விஷயத்தைத் தொட்டுச் சொல்லிவிட்டு, நாம் அந்த நினைவே இல்லாமல் அடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டிருப்போம்! ஆனால், நம்முடைய பதிவுகளுக்கு வந்து படிப்பவர்கள், அங்கேயே தேங்கி நின்று விடுவதைப் பார்க்கும் அனுபவம், கோவி கண்ணன் பதிவுகளைப் படிக்கும் வாசகப் பரப்பில் பதினாறில் ஒரு பங்கு கூட இல்லாத எனக்குமே, புவனேஸ்வரியைத் தேடி இங்கே  தினசரி வருகிற வாசகர்களைப் பார்க்கக் கிடைக்கிறது.

இன்றைக்குக் கூட  மதுரை ஐ பி முகவரியில் இருந்து ஒருவர் வேலை மெனக்கெட்டு, தமிலிஷில்  புவனேஸ்வரி குறித்த குறியீட்டுச் சொல்லில் இருக்கும் அத்தனை பதிவுகளையும் தேடி படித்திருக்கிறார், இத்தனைக்கும் அந்தப்பதிவில் புவனேஸ்வரி பெயர் தலைப்பில் மட்டும் தான் இருந்ததே தவிர, வேறு படமோ செய்தியோ இல்லை!
* வெள்ளிக்கிழமை பொழுது விடிந்த நேரத்திலுமே ஆறுமணிக்கே வந்து மறுபடி பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்!

அதில் ஒன்று என்னுடையது அக்டோபர் இருபத்தெட்டாம் தேதி, முன்னாள் அமைச்சர் நட்வர்சிங் எழுதிய புத்தகத்தைப் பற்றி எழுதியது.


இவ்வளவு மெனக்கெட்டுப் படம் பார்க்க வருபவர்கள், இணையத்திலேயே இன்னும் அதிகமாகப் பார்க்கலாமே, ஏன் இப்படிப் பதிவுகளில் குறியீட்டுச் சொற்களைத் தேடி வருகிறார்கள் என்று பார்த்தால், தேடல் என்பது இது தானோ என்று கோவி கண்ணன் அலுத்துக் கொண்டிருப்பது எவ்வளவு தவறானதோ, அதே மாதிரி அவர்களுக்கும் என்ன தேடுகிறோம், எதைத் தேடுகிறோம், எங்கே தேடுகிறோம்  என்ற தெளிவில்லாமலேயே தேடிக் கொண்டிருப்பது புரியும்!

அரசியல், கழிசடைகள், அயோக்கியர்களுடைய கடைசிப் புகலிடம் என்று யார் சொன்னது? 

இப்போதெல்லாம், அது தான் முதல் சாய்சாகவே  இருப்பது அம்மிணிக்கு இப்போது தான், காலம் கடந்து தெரிய வந்திருக்கிறது! கழகங்கள் காப்பு!

புவனேஸ்வரியைத் தேடி இந்தப் பக்கங்களுக்கு வரும் புண்ணியவான்களே! உங்களையும் ஏமாற்றக் கூடாது இல்லையா? புவனேஸ்வரி பாவம், விட்டு விடுங்கள்! அவர் ஒரு வழியாக ஜாமீனில் வெளியே வந்து, மூ. மு. கழகத்தில் சேர்ந்து, அரசியல் பணியாற்றத் தொடங்கியிருக்கிறார்!



பதிலுக்கு மாக்சிம் ரெட்டி படம்  உங்களுக்காக!

வாரணம் ஆயிரம் படத்தில் அழகாகச் சிரித்து சூரியாவோடு பாட்டுப் பாடி ஆடினாரே அதே சமீரா ரெட்டி தான்! வாரணம் ஆயிரம் பட விமரிசனம் ஒன்றில் படித்த ஒரு வரி நினைவுக்கு வருகிறது-சமீரா ரெட்டியை காமெரா மிக அழகாகக் காட்டிய ஒரே படம்! அம்மிணி தெலுங்கில் என் டி ராமா ராவ் மகன் பால கிருஷ்ணாவோடு பல படங்களில் குத்தாட்டம் போட்டவர் தான்! இங்கே மாக்சிம் என்று ஒரு பத்திரிகையில், வந்த படம் உங்களுக்காக. அட்டைபடம் சொல்வது -Gentlemen, the class is in session!


oooOooo




ஜான் மாக்ஸ்வெல் என்பவர் எழுதிய , The 360° Leader என்ற புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை ஒரு வலைப்பதிவில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு தலைவனுக்குரிய குணங்களை, தலைமைப் பண்பைப் பற்றிய புத்தகம், அதில்  இருந்து சுவாரசியமான ஒரு பகுதியைப் படிக்க நேர்ந்தது. சென்ற பதிவில், ஆயிரம் உண்மையான நண்பர்களை, பின்தொடர்ந்துவருபவர்களைப் பற்றி, அப்படிப்பட்ட நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்வது வெற்றிக்கான உத்தரவாதமாக எப்படி இருக்கும் என்பதை சேத் கோடின் பதிவைத் தொடர்ந்து எழுந்த சிந்தனையாகச் சொல்லியிருந்தேன் இல்லையா!


வெற்றிக்குப் பல படிகள், ஒன்று மட்டுமே போதுமானது அல்ல என்பதை இன்னொரு கோணத்தில் இந்த நூலில் ஜான் மாக்ஸ்வெல் சொல்கிறார். அவர் சொல்லும் ஒரு கதை இது.




ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன.

எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை."

எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!"

வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச்  சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே  அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது.

உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்! காட்டில் வேட்டையாட வந்த ஒருவன்  கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்..

வான் கோழி பணால்! உசரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழேவந்தாயிற்று!

வான்கோழி படத்தைத் தேடும்போது கிடைத்த ஹோலிஸ்டிக் ஹீலிங் என்ற தலைப்பில் வான்கோழியை பற்றிய இன்னொரு சுவாரசியமான தகவலைப் பார்க்க 


உச்சிக்குப்போவது அவ்வளவு பெரிதான விஷயமில்லை! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். 

கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முடிவது தான்!

இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் ஜான் மாக்ஸ்வெல் சொல்லியிருப்பதாகப் படித்த போது, தலைமைப் பண்பு பற்றிய ஒரு சித்திரம் முழுமையடைந்து வருவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இங்கே இதை எழுதுவது  தலைவர்களாக எல்லோருமே ஆகிவிட முடியும் என்ற கற்பனையை விதைப்பதற்காக இல்லை.தலைவனாக இருப்பதற்கு, இன்னொரு அடிப்படையான தேவை, ஒரு குறிக்கோளுடன் கூடிய குழுவை உருவாக்குவது தான்! குழுவாகச் செயல்படும் கூட்டுறவுமே மிகவும் அவசியம். 

ஒரு குழுவில், ஒரு தலைவனுக்குக் கீழே இருக்கும் நிலையிலும் தலைவனாவதற்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்வதே கூட, ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்துக்குச் செய்கிற மிகப்பெரிய உதவிதான்!

எம்ஜியார் பாட்டில் வருவது போல தனக்கொரு பாதையை வகுக்காமல் தன தலைவன் வழியிலே நடப்பான் என்பது கண்மூடித்தனமாகக் கேள்வியே கேட்காமல் பின்பற்றுவது, கொடி பிடிப்பதும், தீக்குளிப்பதும் அல்ல!

ஒரு சாதாரணமான மனிதனாக இருந்து கொண்டே, நம்மால் நம்பிக்கையை விதைக்க முடியும்! நம்மைச் சுற்றி உள்ளவர்களுடைய வாழ்க்கையில் தேவைப் படுகிற உந்து சக்தியாகவும், மகிழ்ச்சியைத் தருபவர்களாகவும் இருக்க முடியும்!

ஒரு நல்ல தலைவனுடைய தலைமைப் பண்பு அவன் எத்தனை ஆயிரம், லட்சம், கோடி நபர்களுக்குத் தலைமை தாங்குகிறான் என்ற எண்ணிக்கையில் இல்லை. ஜனங்களிடமிருந்து சுரண்டிக் கொழுப்பவன் ஒருபோதும் அவர்களுடைய தலைவனாக முடியாது.

ஒரு நல்ல தலைவன் என்பவன், தன்னிடமிருந்து நம்பிக்கை, எதிர் காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான கனவு, செயல் திட்டம், செயல்படுத்துவதில் உற்சாகம் என்று நல்ல விஷயங்களைக் கொடுக்கிறான். சமூகம் அவனிடமிருந்து ஒரு கனவை, ஆதர்சத்தை, நாளைய பொழுது நம்முடையதே என்ற தெளிவைப் பெறும்போது, அங்கே ஒரு நல்ல தலைவன் மட்டுமல்ல, ஒரு நல்ல சமுதாயமும் கூடவே உருவாகிறது!

புவனேஸ்வரி ஏற்படுத்திய அதிர்வலைகள்....!!



புவனேஸ்வரி ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. எப்போது, என்ன வடிவத்தில் மீண்டும் ஒரு அசிங்கம் வெடிக்கும் என்பது யாருக்குமே தெரியாத நிலையில், அழுகி நாறும் புண்ணுக்குப் புனுகு பூசி மறைப்பது போல, தற்காலிகமான அமைதி மட்டுமே இப்போதைக்கு வெளியே தெரிகிறது.


தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 'சிடி' ஆதாரங்களுடன் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.


ந்த புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, 'புகார் மனு, சட்ட நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்ட நிபுணர்களின் கருத்து கிடைத்தவுடன் நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.”


ப்படி முந்தைய பதிவொன்றில் அப்போதைய நிலவரத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன். சட்ட நிபுணர்கள் கருத்து இன்னமும் காவல் துறைக்குக் கிடைக்கவில்லை போல!


ரம்பு மீறிய நடிகர்கள் நடிகைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையுமே எடுக்கப் படவில்லை. இருக்காது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் கூட, பத்திரிகையாளர்கள் தரப்பு இதை இன்னமும் விடுவதாக இல்லை. நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடக் கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், போலீஸ் கமிஷனருக்கு நோடீஸ் அனுப்பும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது மூன்று நாட்களுக்கு முந்தைய செய்தி என்றாலுமே கூட, பிரச்சினை இன்னமும் கனன்று கொண்டுதான் இருக்கிறது என்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது.


ட்ஸ்தமிழ் செய்தியில் வெளியாகியிருக்கும் செய்தியில் இந்தப் பகுதியைப் பாருங்கள்:


"வீடியோ ஆதாரங்களைப் பெற்ற பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள், நடிகர்களை கைது செய்யக் கோரி மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் செய்தனர். ஆனால் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடு்க்கப்படவில்லை. மேலும் புகாரில் சிக்கிய நடிகர் நடிகைகள் தங்களை ஆட்சி மேலிடத்துக்கு நெருக்கமாகக் காட்டிக் கொண்டு வந்தனர்."





சாதாரணமாக விபச்சார வழக்குகளில் சிக்கும் நபர்களுக்கு, பெரிய அளவில் விசாரணை, வாய்தா எல்லாம் இருப்பதில்லை.மற்ற வழக்குகள் போல அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை- அபராதம் அல்லது சிறைத் தண்டனை.


ந்த வழக்கில் மட்டும், ஜாமீன் மனு அரசுத் தரப்பில் இருந்து எதிர்க்கப்படுகிறது. நிரந்தரமான முகவரி இல்லாதவர் அதனால் ஜாமீனில் விடக்கூடாது என்று வாதம். ஜாமீனும் மறுக்கப்படுகிறது. அதே தினம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைதுசெய்யப்பட்டதாகச் சொல்லப்படும் தினமலர் செய்தி ஆசிரியர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது, அரசு தரப்பு அதை எதிர்க்காததால், ஜாமீனில் அவரை நீதிமன்றம் விடுவிக்கிறது. வெளியே வந்தவருக்கு, ஏதோ இமாலய சாதனையைச் செய்தவர் மாதிரி மாலைகள் அணிவித்து வரவேற்பு!

ன்ன ஒரு வினோதம்! எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?
மக்கு விடுதலை கிடைத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னால் தான், சீனா தனது அரசியல் சுதந்திரத்தைப் பெற்றது. நம்மை விட, மிக மோசமான சூழ்நிலை. கம்யூனிசக் கூட்டாளியான ரஷ்யா, ஆக்கபூர்வமான திட்டங்களில் சீனாவுக்கு உடனிருந்து உதவாமல் பாதியிலேயே கழுத்தறுத்துவிட்டு வெளியேறிய கசப்பான அனுபவத்தையும் சந்தித்தது. மாசேதுங் தலைமை அவ்வளவு சுறுசுறுப்பாகவும் இல்லை, ஸ்டாலினைப் போலவே, கலாச்சாரப் புரட்சி, களையெடுப்பு என்று சொந்த ஜனங்களையே கொன்று குவித்த அவலமும் உண்டு. கம்யூனிசத்திலும் ஊழல் நிறைய உண்டு.


ப்படி எல்லா வகையிலும் சோதனைகளைச் சந்தித்துக் கொண்டிருந்த ஒரு நாடு, இன்றைக்கு எவ்வளவு வலிமையான பொருளாதார சக்தியாகவும், ராணுவ ரீதியிலும் வல்லரசாக மாறியிருக்கிறது என்றால், நம்மால் என் அப்படி மாற முடியவில்லை என்ற கேள்வியை நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது!



சீனப்பெருமிதத்திற்கு வயது அறுபது என்ற தலைப்பில், இந்த மாதத்தின் முதல் பதிவு இருந்தது. தன்னுடைய அறுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைச் சீனா எப்படித் திட்டமிட்டு, தன்னுடைய இமேஜை உயர்த்திக் கொண்டிருக்கிறது, தன்னுடைய ஆயுத பலத்தைத் தம்பட்டமடித்துக் காட்டி, பல நாடுகளுக்கு, குறிப்பாக ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளுக்கு மறைமுகமாகச் சவால் விட்டுக் காண்பித்திருக்கிறது என்பதை சுருக்கமாக சொல்ல ஆரம்பித்த வேளையில் தான், தமிழகச் செய்திகளில் புவனேஸ்வரி, சொல்லாமல் வந்த ஒரு சூறாவளியாக வந்தபோது, நானுமே கூட, கொஞ்சம் எரிச்சலோடு அந்த விவகாரத்தைப்பற்றியும் மூன்று பதிவுகளாக எழுதினேன்.


தில்.என்னை மிகவும் அதிர்ச்சி அடையச் செய்த ஒரு விஷயம் என்னவென்றால், நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்வதை விட, தன்னுடைய குடும்பம், தன்னுடைய பொருளாதாரச் சூழல் இவை எல்லாவற்றையும் விட நடிகைகளின் அந்தரங்கம் தான் தமிழக வாசகர்களுக்கு மிகவும் முக்கியமாக இருந்ததென்று, இரண்டாவது பதிவுக்கு ஒரே நாளில் சராசரி வருகையை விட பத்துப் பனிரண்டு மடங்கு வாசகர்களுடைய வருகை சொல்லாமல் சொன்னது. ரொம்ப சைவமாகவே தேர்ந்தெடுத்து, ஒன்றிரண்டு படங்களைப் போட்டபோதிலுமே கூட, அதையும் டவுன்லோட் செய்த மக்களைப் பார்த்தபோது "விதியே!விதியே! தமிழச் சாதியை என்செய நினைத்தாய்?" என்று பாரதி மறுகின மாதிரி,

மறுகி நிற்கவைத்த தருணங்கள்!




காந்தியைப் பற்றிய கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், நேருவைப் பற்றிய அரசியல் விமரிசனங்கள், குறுகிய காலமே பதவியில் இருந்தபோதிலும் கூட, தலைமைப்பண்பை நிலைநாட்டிய லால் பஹதூர் சாஸ்திரியைப் பற்றி இன்னமும் விரிவாகப் பேச வேண்டும் என்ற ஆசை, இந்திய-சீன யுத்தம், இந்திய-பாகிஸ்தான் யுத்தங்கள் அவற்றைத் தொடர்ந்து வந்த பிரச்சினைகள், இன்றைய நிலைமை இவற்றோடு சேர்த்து எழுதவேண்டும் என்ற ஆசையோடு குறிப்புக்களைத் தேடித் தேடிச் சேகரித்துக் கொண்டிருந்த எனக்கு, நிஜமாகவே புவனேஸ்வரி விவகாரத்தில் ஜனங்கள் காட்டிய அதீதமான அக்கறை, என்னை நிறையவே யோசிக்க வைத்திருக்கிறது.


ரு கட்டத்தில்,வெறும் ஆன்மீகக் குறிப்புக்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்ததில் இருந்து விலகி எல்லா விஷயங்களையும் தொட்டு எழுத வேண்டும் என்று வெளியே வந்தேன். காரணம், ஆன்மிகம் பற்றிப் பேசுகிறவன் எல்லோருமே எல்லாம் தெரிந்தவனாக இருப்பான் என்கிற மாதிரி ஒரு மயக்கம், தவறோ சரியோ இங்கே நிறையப்பேரிடத்தில் இருக்கிறது.


இல்லை, நான் முழுக்கத் தெரிந்தவன் இல்லை, இன்னமும் சத்தியத்தைத் தரிசனம் செய்ய முயற்சி செய்துகொண்டிருப்பவன் மட்டுமே, உண்மையைச் சொல்லப்போனால், ஒரு சராசரிக்கும் கீழே என்பதை ஒரு கேள்விக்குப் பதிலாகச் சொல்லிவிட்டு, வெவ்வேறு விஷயங்களைத் தொட்டுப் பதிவுகள் எழுத ஆரம்பித்ததில், புதிய வாசகர்கள் நிறையப்பேர் கிடைத்தார்கள், ஆனால் தொடர்ந்து படிக்க வருகிறவர்கள் என்று பார்த்தால் ஒரு கைவிரல் எண்ணிக்கைக்கு உள்ளேயே அடங்கிவிடும்.


திலும் ஒருவர் பத்துப்பதினைந்து பதிவுகளைப் படித்திருப்பார் என்று வைத்துக் கொண்டால், இன்னொருவர் ஒன்றோ அல்லது இரண்டு பதிவுகளைக் கூடுதலாகவோ குறைவாகவோ படித்திருப்பார். கருத்துப்பரிமாற்றங்களைத்தொடர்ந்து வேண்டி வந்த போதிலுமே கூட, அதிலும் ஏமாற்றம் தான். என்னுடைய டயரிக் குறிப்புக்களாக மட்டுமே இது இருந்துவிட வேண்டுமென்றால், அதை ப்ளாக்கரில் வேலை மெனக்கெட்டு வலையேற்றம் செய்ய வேண்டியதில்லையே!


ந்தப்பதிவுகளுக்கு வருகிற புதிய வாசகராக இருந்தாலும் சரி, ஏற்கெனெவே கொஞ்சம் பதிவுகளைப் படித்துவிட்டு ஒதுங்கியவராக இருந்தாலும் சரி, என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு, சொல்ல முடிந்தால் மகிழ்வேன்!


சொல்வீர்களா?


புவனேஸ்வரி புராணம்! முதலாவது சுற்று!





"சென்னை: வீட்டில் ஆள் வைத்து விபச்சாரம் செய்ததாக கைதான நடிகை புவனேஸ்வரி தாக்கல் செய்த ஜாமீன் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

அடையாறு பகுதியில் ஆள் வைத்து வீட்டில் விபச்சாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். புவனேஸ்வரி விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டபோது அவரது மகன், தாயார் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி சைதாப்பேட்டை 17வது பெருநகர கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் பூபாலன், நேற்று ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.”



2. தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 'சிடி' ஆதாரங்களுடன் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.


இந்த புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, 'புகார் மனு, சட்ட நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்ட நிபுணர்களின் கருத்து கிடைத்தவுடன் நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.”


இணையத்தில் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தபோது, "என்ன! நாட்டு நடப்பு எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது போல இருக்கிறதே!" என்ற குரல் கேட்டதும் திரும்பிப்பார்த்தேன்.


புள்ளிராஜா வங்கி தந்த புள்ளி விவரச் சிங்கம், உள்ளே வரும்போதே நமட்டுச் சிரிப்புடன் கேட்டுக் கொண்டே தான் வந்தார். சரி, இன்னைக்கு நம்ம கதை கந்தலாகுமா, நொந்து நூடுல்சாகுமா என்று டாஸ் போட்டுப் பார்த்து விட வேண்டியது தான் என்று மனதிற்குள்ளேயே முனகிக் கொண்டே, வாய் நிறைய "வாங்க அண்ணாச்சி!" என்று வரவேற்றேன்.


"மனசுக்குள்ளாரையே டாஸ் போட்டுப் பாத்தியே, என்ன வந்தது? பூவா? தலையா?" 

கொஞ்சம் கூட நமட்டுச் சிரிப்பு மாறாமல் அண்ணாச்சி கேட்ட போது என்ன பதில் சொல்வது?


"இதுக்குத் தான் இந்தப் புள்ளி விவர ஆசாமிகளோடு சகவாசம் வேணாம் என்கிறது!"


நான் மனதிற்குள் சொல்லிக் கொண்டதை அண்ணாச்சியும் சேர்ந்து சத்தம்போட்டுச் சொன்ன போது அழுவாச்சி அழுவாச்சியா வந்தது! வேணாம்! நேரம் கேட்ட நேரத்துல அழுவாச்சி வந்தா, நடிகர் சங்கக் கண்டனக் கூட்டத்தில் பிரபல பதிவரும் நடிகர்களுடன் சேர்ந்து கண்ணீர் என்று செய்தி வந்து அசிங்கமாகிப் போய்விடுமே என்று கட்டுப் படுத்திக் கொண்டேன். ஊழ்வினை வந்து உறுத்தூட்டும் என்று சிலப்பதிகாரத்தில் தெரியாமலேயா இளங்கோ அடிகள் சொல்லி விட்டுப் போனார்!


"புவனேஸ்வரி புராணம் படிக்க உன்னுடைய பதிவுக்கு நிறையப் பேர் வந்தார்களாமே! நீயும் பிரபலப் பதிவர் ஆகி விட்டாய் என்று சொல்லு!"


"பிரபலப் பதிவர்னு சொல்லிக்கறது, இங்கே தனக்குத் தானே ஆப்பு வச்சுக்கற கதை அண்ணே! அது ரொம்பக் கெட்ட வார்த்தை!"


இதை மட்டும் முனகிவிட்டு அண்ணாச்சிஎழுப்பிய நியாயமான கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசனை பண்ணுகிற பாவனையில் மௌனமாக இருந்தேன். உண்மையிலேயே இந்த இரண்டு பதிவுகளுக்கு வந்த பார்வையாளர் எண்ணிக்கையைப் பார்த்தபோது, திரைப்படங்களும், அவற்றை வைத்தே பிழைப்பை ஒட்டிக் கொண்டிருக்கும் ஊடகங்களும், எந்த அளவுக்கு சமுதாயச் சீரழிவை வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதைக் குறித்து ஒரு அச்சம் எழுந்தது.


எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?


கடந்த இரு பதிவுகளின் இறுதியிலும் புவனேஸ்வரி விவகாரம், ஒரு பேச்சுக் காலாக, தொடக்கப் புள்ளியாக மட்டுமே இருந்ததே தவிர, சொல்ல வந்த அடிப்படைக் கருத்தே வேறு! முதல் பகுதியின் கடைசி இருபத்தைந்து வரிகளிலேயே பதிவு சொல்ல வந்த கருத்து, எதை எதை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று, திரைப்பட மோகத்தைக் கண்டிப்பதாக மட்டுமே இருந்தது.


ஆனால், மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விஷயத்தை தொட்டதால் மட்டுமே பார்த்தவர் எண்ணிக்கை சராசரியை விட ஒன்பது மடங்குக்கு மேல் அதிகம் என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். பார்க்க வந்தார்கள், படித்தார்களா என்பது தெரியாது. மக்களுடைய மன ஓட்டத்தைத் தெரிந்து கொள்ள முடியவில்லை, நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்பதை அண்ணாச்சிக்கு எப்படிச் சொல்வது?

இங்கே நடிகர் சங்கம் நடத்திய கண்டனக் கூட்டம் உண்மையில் கேலிக் கூத்தே. வினவு தளத்தில் பழைய பதிவு -நடிகை ஷகிலா பர்தா அணிந்து நாகர்கோவில் நீதி மன்றத்தில் ஆஜரான தருணங்களில் வெளியானது. கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

காலச் சுவடு இதழில், இதே மாதிரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கன்னட பிரசாத் என்ற பெயர் பரபரப்பாக ஊடகங்களில் அடிபடத் தொடங்கிய போது, அதைக் குறித்துப் பேராசிரியர் அ. ராமசாமி சொல்கிறார்::


"மரபான நம்பிக்கைகளின்படியும் நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் படியும் குற்றவாளிகள் எனக் கருதத்தக்க சில தனிநபர்களின் வாழ்க்கைக் கதையை இந்தப் பத்திரிகைகளின் பக்கங்களில் எழுதிக் காட்டுவதன் நோக்கம் என்னவாக இருக்கும்?


பின்பற்ற வேண்டிய முன்மாதிரிகளாக இவர்கள் முன்னிறுத்தப்படவில்லை என்பது உறுதி. அதே நேரத்தில் ஒதுக்கப்பட வேண்டிய முன்மாதிரிகள் என்று வலியுறுத்துவதும் இல்லை என்பதும் உண்மை.


அவர்கள் அறியாமல் குற்றம்செய்துவிட்டார்கள் என்று வாதிடுவதும் அவர்கள் செய்த குற்றங்களுக்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல என வலியுறுத்துவதையும்கூட அந்தக் கட்டுரைகளோ தொடர்களோ தெளிவாக வெளிப்படுத்துவதில்லை. அதற்குமாறாக வேறொரு நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. மனித உயிரின் அந்தரங்க வெளிக்குள் தற்காலிகப் பிம்பங்களை அலையவிட்டு, அடக்கி வைக்கப்படும் பாலியல் தூண்டல்களைக் கிளறிவிடும் வேலையைச் செவ்வனே செய்வதுதான் அந்த நோக்கம்."


ஒரு நல்ல விஷயம், காலச்சுவடு இதழின் இந்த சுட்டியை நிறையப்பேர் போய்ப் படித்திருக்கிறார்கள் என்பது கொஞ்சம் நிறைவாக இருந்ததைச் சொல்லியே ஆக வேண்டும்.


தொடர்ந்து மௌனமாகவே இருந்த என் மன நிலையை அண்ணாச்சி புரிந்து கொண்டிருக்க வேண்டும். புள்ளிவிவரம்னா சும்மாவா!


"ஹிட்ஸ் கணக்கை விடு. அது சும்மாக் கிண்டலுக்காகச் சொன்னேன்! எந்த ஒரு வலைப்பதிவையும் வாசகர்கள், மேம்போக்காகவே படிக்கிறார்கள். கொஞ்சம் கவனமாகப் படிக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதிலுமே கூட அறுபது சதவிகிதத்திற்கு மேல் விஷயங்களை உள்வாங்கிக் கொள்வதில்லை. அதனால், உன்னுடைய பக்கங்களில் அவர்களுடைய ஆர்வத்திற்குத் தீனி போடுகிற மாதிரி விஷயம் இருக்கிறதா என்று மட்டுமே வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போயிருப்பார்கள்."


"சரவணபவன் ஹோட்டல் அதிபர் கைதானபோது, அவரோடு தொடர்புடைய பெண்களின் கதைகளை ஒட்டுமொத்தத் தமிழ் வாசகப் பரப்பிற்கும் விருந்தாக்கியவை நமது அச்சிதழ்கள் என்பது மறந்துவிடக்கூடியதல்ல."அப்படீன்னு காலச்சுவடு கட்டுரையில இருந்ததைப் படிச்சப்புறம் எனக்கு வேற ஒண்ணு ஞாபகம் வந்தது. தேடிப் படிச்ச கையோட, உனக்கும் சொல்லணும்னுதான் இப்ப நான் வந்ததே!”


"ஒரு ஏழரை வருஷத்துக்கு முன்னாடி, கமல்-சரிகா பிரிஞ்ச விவகாரம் ரொம்பப் பரபரப்பா இருந்துச்சு. நம்ம பத்திரிகைகளுக்கு எப்பவுமே எதையாவது மென்னுகிட்டே இருக்கணுமே! இந்த மாதிரி வாசனை கிடைச்சா விடுவாங்களா? ஏகப்பட்ட ஆராய்ச்சிகள்! அதைப் பாத்து நொந்து போன ஒருத்தர் திண்ணையில் எழுதினதைப் படிக்கறேன் கேளு!”



பொன் முத்துக்குமார்


திரையுலகில் தற்போது பரபரபாகப் பேசப்படும் கமல்-சரிகா மணமுறிவு விஷயம் பற்றி யாவரும் அறிந்திருப்பீர்கள். அது தொடர்பான பத்திரிகை மனப்போக்கு பற்றின ஒரு எண்ணப்பரிமாறல்.


தேசத்தையே சமீபத்தில் உலுக்கி எடுத்த குஜராத் கலவரம் பற்றி இரண்டு பக்கத்திலும் மேற்படி விஷயத்தை எட்டு பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறது குமுதம் இதழ். அதுகுறித்து கேள்வி கேட்ட வாசகருக்கு அம்பலம் இணைய இதழில் 'நான் ஆசிரியராக இருந்தால் அந்த டைவர்ஸ் விஷயத்தை நீக்கியிருப்பேன். நடிகர்களின் நடிப்புத்தான் முக்கியமே தவிர அவர்கள் சொந்த வாழ்க்கை அல்ல. Invasion of Privacy என்பது மூன்றாந்தர ஜர்னலிஸம். இதை தமிழ்நாட்டில் எல்லா பத்திரிகைகளும் பயன்படுத்துவது சோகமே (விகடன் தவிர) ' என்று சுஜாதா பதிலளிக்க, அதுகுறித்து கேள்வி கேட்ட வாசகருக்கு 'சுஜாதா-வுக்கு எப்போதுமே நகைச்சுவை உணர்ச்சி அதிகம் ' என்று அரசு பதில்களில் நக்கலடித்திருக்கிறது குமுதம்.


தெரிந்தோ தெரியாமலோ குமுதம் வெளியிட்டுவிட்ட இரண்டு செய்திகளை மட்டும் குமுதத்திற்கு நினைவூட்டிவிட்டு குமுதத்தை விட்டு வெளியே போகலாம். முதல் வாரத்தில் கமல்-சரிகா உறவு முறிகிறது ' என்று முரசறிவித்து, அடுத்த இதழில் கமலின் முதல் மனைவி வாணி கணபதி அவர்களின் பேட்டி என்று தொடர்ந்த குமுதம் இந்த இதழில் சிம்ரனின் தங்கை மோனலின் பேட்டி வெளியிட்டிருக்கிறது. அதில் வெகு அருமையாய் குமுதத்திற்காகவே சொல்லப்பட்ட பதிலாய் நச்சென்று ஒரு பதில் சொல்லியிருக்கிறார் மோனல்.


கே : 'சிம்ரனுடன் சண்டையா ? ' (என்னவோ இது இஸ்ரேல்-பாலஸ்தீன் ப்ரச்சினை போலவும், அவர் ஆமென்று சொல்லியிருந்தால் சவுதி இளவரசர் போல மத்தியஸ்தம் செய்ய கிளம்பிவிட தயாராயிருப்பது போலவும்)


: '......இது எங்களுடைய பர்சனல் லைஃப். இதில் யாரும் நுழையவும் முடியாது. நுழையவும் கூடாது '


நகைச்சுவை உணர்ச்சி என்று நக்கலடிக்கும் குமுதம் தனது 10-03-2002 தேதியிட்ட 'குமுதம் ரிப்போர்ட்டர் ' இதழை சற்றே புரட்டி நடிகை மும்தாஜின் பேட்டிக் குமுறலை படிக்க வேண்டுகிறேன்.


இப்படிப்பட்ட மூன்றாந்தர ஜர்னலிசம் தன் எல்லை மீறும்போது என்ன ஆகிறது என்பதற்கும் மேற்படி மும்தாஜின் பேட்டி பக்கத்தில் உள்ள 'ஒழியுமா கவர் ? ' என்ற பகுதியில் இருக்கிறது.


இப்படிப்பட்ட கவர் வாங்குவதற்கு காரணம் கூறிய ஒரு நிருபர் 'நான் வாங்கும் இரண்டாயிரம் சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும் ? பத்திரிகைகாரங்க நியாயமா சம்பளம் குடுத்தா நா ஏன் கவர் வாங்க போறேன் ? ' என்கிறார்.


ஆக, நடிக நடிகைகளை அணுகும்போது சுய மரியாதையோடும், நிருபர் பணியில் கம்பீரமோடும் இயங்க வாய்ப்பளிக்காத பத்திரிகைகள்தான், (குமுதம் இதழின் சினிமா நிருபரின் சம்பள விபரம் தெரியாததால் அதை ஒரேயடியாக இந்த பட்டியலில் சேர்க்க விரும்பவில்லை) தாம் வெளியிடும் செய்திகளால் சம்பந்தப்பட்ட நடிகையை தற்கொலைக்குக்கூட துரத்தும் இது போன்ற குரூரங்களுக்கு காரணமாகிவிடுகின்றன. (மூன்றாந்தர ஜர்னலிஸம் என்று கண்டனம் தெரிவிக்கும்போது மட்டும் நக்கலடிக்க முன்வருவது எப்படி ?)


கிசுகிசு என்பதே திரை கலைஞர்களின் அந்தரத்தை அம்பலமாக்கும் அசிங்கம்தான். 'எப்போது நடிக நடிகையர் பொது வாழ்க்கைக்கு வந்து விட்டார்களோ அப்போதே நடிக-நடிகையரின் அந்தரங்கத்தைக்கூட அறிந்துகொள்வதற்கு ரசிகனுக்கு முழு உரிமை உண்டு ' என்று ரசிகன் தலைக்கு கிரீடமும், 'அவர்களைப்பற்றி என்னவும் எழுத எங்களுக்கு முழு உரிமை உண்டு ' என்று தமக்குத்தாமே உரிமமும் வழங்கிக்கொண்ட பத்திரிகைகளின் அகம்பாவமே இந்த கிசுகிசு மனப்பான்மை.


இந்த லட்சணத்தில், 'தம்மைப்பற்றி கிசுகிசு எழுதக்கேட்டு சிலர் தூண்டிவிடுவது உண்டு ', 'வெளியான கிசுகிசு பற்றி எங்களிடமே யார் என்றெல்லாம் நடிக நடிகையர் விசாரித்ததுண்டு ' என்றெல்லாம் சில பத்திரிகைகள் சப்பை கட்டு கட்டுவது நல்ல வேடிக்கை. ஒரு பத்திரிகை கேள்வி-பதிலில், 'இப்படிப்பட்ட கிசுகிசு எழுதும் எங்கள் நிருபரின் 'புத்திசாலித்தனத்தை சம்பந்தப்பட்ட நடிக நடிகையர் ஆச்சர்யப்பட்டுப்போய் மெச்சி மகிழ்வர் ' என்று சொன்னதுதான் உச்சகட்ட தமாஷ் (நல்ல வேளை, 'உச்சி முகர்ந்து ஆசீர்வதிப்பர் ' என்றெல்லாம் சொல்லவில்லை!)


ஒரு வாதத்திற்காக, அப்படியே வைத்துக்கொள்வோம். அவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்திருப்பது ஒரு கலைஞனாக அங்கீகாரம் தேடி. அதை வழங்குவது அல்லது மறுப்பது என்ற அளவில் மட்டும் நமது பொறுப்பு நின்றிருக்க வேண்டும். அதை விட்டு அவர்களது அந்தரங்கத்தை முகர்ந்து பார்ப்பது வக்கிர மனப்பான்மையல்லவா ? நடிக நடிகையரின் நடிப்புத்திறமையை விமர்சித்து சாட்டை சொடுக்கலாம்; அதை விட்டு அவர்கள் படுக்கை அறையிலா நுழைவது ?


'வாசகர்கள் விரும்புகிறார்கள் ' என்ற விவாதம் வரலாம். மஞ்சள் பத்திரிகையில் பச்சை பச்சையாய் வரும் நீல விஷயங்களை விரும்பும் கணக்கற்ற வாசகர்களும் இருக்கிறார்களே ! அந்த விஷயங்களையும் இவர்கள் தங்கள் பத்திரிகையில் அச்சேற்றலாமே ? 'வாசகர்கள் விருப்பத்தை ' நிறைவேற்றி ஜென்ம சாபல்யம் அடையலாமே ?


எந்த பத்திரிகையும் நடிக நடிகையரின் அந்தரங்கத்தை இனி எழுதப்போவதில்லை என்று உறுதி செய்துகொள்வதாக வைத்துக்கொள்வோம். (இந்த உடோபிய மனோபாவம் சற்று அதிகம்தான். மன்னிக்கவும்) அப்போது வாசகன் என்ன செய்வான் ? பத்திரிகை அலுவலகம் முன்பு தீக்குளிப்பானா ? அல்லது தாமே அப்படி ஒரு செய்தியை அச்சிட்டு படித்து மகிழ்வானா ?


வியாபாரப்பத்திரிகைகளிடம் இதுபோன்ற நளினத்தை எதிர்பார்த்தல் தவறுதான். ஆனாலும் ஒரு எல்லை உண்டல்லவா ? இப்படித்தான் நடிகை ரோஜாவிற்கு எய்ட்ஸ் என்று ஏதோ ஒரு பத்திரிகை உலக புண்ணியவான் கிளப்பிவிட்டான். சில வருடங்களுக்குமுன் பற்ற வைக்கப்பட்ட இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் இன்றைய நிலையில் உருக்குலைந்தல்லவா போயிருக்க வேண்டும் ?


'எப்போது பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார்களோ அப்போதே இதெல்லாம் சகஜம் என்று தயாராக இருக்க வேண்டும். சகித்துக்கொள்ளத்தான் வேண்டும் ' என்பது 'கக்கத்தில் இடுக்கின துண்டும், நெஞ்சோடு கட்டின கைகளும், தாழ்த்தின தலையுமாய் தம் முன் நிற்கவேண்டும் ' என்று எதிர்பார்க்கும் அருவருக்கத்தக்க ஆண்டை மனப்பான்மை.


சரி, அங்ஙனமாயின் பத்திரிகைகாரர்களும் பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள்தானே ? அவர்களது அந்தரங்கத்தை கடை விரித்து விலை பேசினால் இளித்துக்கொண்டே 'அப்படியே ஐயா ! ' என்றா ஒப்புதல் தருவார்கள் ? 'வார இறுதி மலரில் புளுகு மூட்டையை அவிழ்த்துவிடும் திரை கன்னையா, 'தன் பத்திரிகையில் தாறுமாறாக எழுதிவிடுவேன் ' என்று மிரட்டியே பல்வேறு துணை நடிகைகளையும், புதுமுக நடிகைகளையும் பணிய வைத்து தன் ஆசைக்கு இணங்க வைத்துவிடுகிறாராம். தற்போது கொடிகட்டிப் பறக்கும் ஓரெழுத்து நடிகையும் ஆரம்ப காலத்தில் இவர் வலைக்கு தப்பவில்லை ' என்று கிசு கிசு எழுத தாங்குவார்களா ?


பாலகுமாரன் எழுதின சிறுகதைவரிகள்தான் நினைவுக்கு வருகிறது.


'தன் அந்தரங்கத்தின் மென்மையும் மேன்மையும் தெரியாதவனே அடுத்தவன் அந்தரங்கத்தைப்பற்றி பேசுகிறான் ' (அந்தரங்கம்)


"என்ன கேட்டுக்கிட்டியா?" என்றார் அண்ணாச்சி!


"அது சரிண்ணே! ஜாமீன்ல வெளிவர முடியாத பிரிவுகளில் கைதான தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை ஜாமீன் மனு தாக்கல் செய்ய வச்சு, அரசு தரப்பு அதை எதிர்க்காததால், அவரு ஜாமீன்ல வெளியே வந்தாச்சு! மாலையெல்லாம் போட்டுப் படம் புடிச்சு அதையும் பெரிய சாதனையா ஆக்கியாச்சு. புவனேஸ்வரிக்கு மட்டும், அவருக்கு நிரந்தர முகவரி கிடையாது, அதனால ஜாமீன் கொடுக்கக் கூடாதுன்னு அரசு தரப்புல எதுத்திருக்காங்களே அது ஏண்ணே?"


அண்ணாச்சி என்னை ஒருமுறை நன்றாக முறைத்துப்பார்த்து விட்டு வெளியே போய் விட்டார்!! 

யாருக்கும் வெட்கமில்லை! புவனேஸ்வரி புராணம் தொடர்கதையா..!



சினிமா நடிகர்கள், எதையோ கொடுத்து எதையோ புண்ணாக்கிக் கொள்கிற கதையாக, ஹீரோ வேஷம், ஒரே குத்தில் நாற்பது பேரைப் பந்தாடுவது, சுழன்று சுழன்று சண்டைபோடுவது எல்லாம் சும்மா நடிப்புத் தான், மற்றப்படி நிஜ வாழ்க்கையில் இந்தப் பந்தாப்பேர்வழிகள்  வெறும் ஜீரோக்கள் தான் என்பதை, புவனேஸ்வரி புராணம் மறுபடி நிரூபித்திருக்கிறது.



பெண்கள் மீதான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளின் படி கைது செய்யப்பட்ட தினமலர் செய்தி ஆசிரியர் பி. லெனின் இன்று மாலை, ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் ஹீரோ ஆக்கப்பட்டது, உண்மையிலேயே லெனின் தான்! கையைச் சுட்டுக் கொண்டவர்கள், காவல்துறையினர் தான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை!


சினிமாவில் நாட்டாமை வேஷம் கட்டினவன் எல்லாம்,  நிஜமாகவே நாட்டாமை ஆகிவிட்ட மாதிரி, காவல்துறைக் கமிஷனர் திரு ராஜேந்திரன் முன்பு வசனம் பேசிக் குதித்ததாகவும், கமிஷனர் அங்கேயே எச்சரித்ததாகவும் செய்திகளைப் படித்தபோது, தமிழ் நாட்டில் அத்தனை காமெடி சானல்களையும்  பார்த்தால் கூட வராத சிரிப்பு, அப்படிப் பொங்கி வந்தது:-))

சிறையை விட்டு ஜாமீனில் வெளியே வந்த திரு லெனினை மாலைகள் சூட்டி, பத்திரிகையாளர்கள் வரவேற்ற காட்சியைப் புகைப்படத்தில் பார்த்தபோதும் சரி, நடிகர் சங்கக் கண்டனக்கூட்டத்தில் வாய்க்கு  வந்தபடி பேசி .............தைப் புண்ணாக்கிக் கொண்ட கோமாளி விவேக் தமிழக முதல்வரை இன்று சந்தித்துப் பேசியதாகச் செய்தியைப் படித்தபோதும் சரி, இந்தக் காமெடி இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ஓயாது என்றே தோன்றியது.

“விரிக்கப்பட்டுள்ள வலைப் பின்னல்களின் வழியே தகவல்கள் வந்து குவிந்துகொண்டே இருக்கின்றன. வாய் மொழியாகவும் அச்சு வடிவிலும் காட்சிப் படிமங்களாகவும் அலையும் பிம்ப அடுக்குகளாகவும் வாசகனின் புலன்களைத் தாக்கும் தகவல்களை அர்த்தப்படுத்திக் கொள்ள அவனுக்கு உள்ள ஒரு மூளை போதாது"

இப்படி அலுத்துக்கொள்கிறார் பேராசிரியர் அ. ராமசாமி! காலச்சுவடு இதழில், இரண்டு வருடங்களுக்கு முன்னால், இதே மாதிரி அச்சு ஊடகங்களில், நடிகைகளைப் பற்றி வித விதமான செய்திகள், கதைகள் புற்றீசல்  மாதிரிக் கிளம்பிக் கொண்டிருந்த தருணத்தில் எழுதப்பட்ட, மிக அற்புதமான கட்டுரை. படித்துப்பாருங்கள்! அந்த நேரத்தில் எங்குபார்த்தாலும் ஒரே நடிகைகளின் கதையாகத் தான் இருந்தது. கன்னட பிரசாத் என்ற பெயர் மிகவும் அறியப்பட்ட பெயராக இருந்தது. காரணம் என்ன என்பதைத் தான் பேராசிரியர் ராமசாமி மிக அழகாக எழுதியிருந்தார்!

ஏன் எதற்கு என்று வெள்ளந்தியாகக் கேட்க நினைப்பவர்களுக்கு கூகிள் தேடலில் 'கன்னட பிரசாத்' என்று மட்டும் கொடுத்த தேடிப்பாருங்கள். முதல் ரிசல்டாக, குமுதம் ரிபோர்டரில் இருந்து ஒரு கட்டுரையை அப்படியே வோர்ட்ப்ரெஸ் தளத்தில் படிக்கக் கிடைக்கும்.





கண்ணதாசனுடைய இந்தப்பாடலை மேலே படியுங்கள்! கவிஞர் எப்படி வாழ்வியல் யதார்த்தத்தை, கவிதை வரிகளில் சொல்லியிருக்கிறார், இப்போதைய சூழ்நிலைக்கும் அது எப்படிப் பொருந்துகிறது என்பதையும் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்!

பாடலை இங்கே கேட்கலாம்! கீழே உள்ள படம், இணையத்தில் கிடைத்தது

ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன..!
ஏ சமுதாயமே....

மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா..!
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதான் தொல்லையடா..!

அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே..!
அத்திப்பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெக்கமில்லை..!
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்..!
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்..!

சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்..!
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினை காட்டுதடா..!
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்..!
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்..!

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை..!
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..!
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை..!
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை..!

வெட்கமில்லை வெட்கமில்லை என்று சொல்லிக் கொண்டே இத்தனை கதையையும் சொல்கிறார்களே, அதையும் நாம் படிக்கிறோமே ஏன் என்று ஒருவருக்கு அன்றைக்கே சந்தேகம் வந்துவிட்டது. கேள்வியும் கேட்டு விட்டார்!

கன்னட பிரசாத்திற்கு தமிழ் இதழ்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனவே?

கேட்டவர்:  சிவகுமார், திருப்பூர்.

பதில் சொன்னவர் :

"ஒரு வேளை “தொழில்’ ஒற்றுமை காரணமோ என்னவோ? ஏன்னா இரண்டு பேருமே நடிகைகளைதான் முதலீடா வைச்சி தொழில் நடத்துகிறார்கள். தமிழக காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கன்னட பிரசாத்தின் ‘தீரமிக்க’ வாழ்க்கை வரலாற்றை பத்திரிகைகள் போட்டி போட்டு வெளியிடுகின்றன. அவைகளை அவர் படிக்க நேர்ந்தால், திடுக்கிட்டிருப்பார். “இவர்கள் நம்ம “தொழிலுக்கு’ வந்தால் நம்மநெலமை அதோ கதியாகியிருக்கும். நல்லவேளை ஜெயில் தண்டனையோடு தப்பிச்சோம்’ என்று!. கன்னட பிரசாத் நடிகைகளுக்கு, தொழில் அதிபர்களுக்கு, பணக்காரர்களுக்கு “மாமா வேலை’ பார்த்தார். இந்தப் பத்திரிகைகள் வாசகர்களுக்கு ‘மாமா வேலை’ பார்க்கிறது!"

உண்மைத் தமிழன் சரவணன் தன்னுடைய பதிவில் சொன்னது போல, இரண்டு தரப்பிலேயும் வண்டி வண்டியாகத் தவறு இருக்கிறது. இதில் நீ சொத்தை! இல்லை இல்லை நீதான் சொத்தை என்று உதார் விட்டுக் கொண்டிருந்தது, நிஜமாகவே கை மீறி விட்டதோ?

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இந்தப் புண்ணியவாளர்களிடமிருந்து அவ்வளவு சீக்கிரமாக விடுதலை கிடைத்து விடுமா என்ன?!

பகுத்தறிவு பேசும் நண்பர்களாக இருக்கட்டும், என்றைக்கோ மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்று ஆன்மிகம் பேசிக் கொண்டிருக்கும் நண்பர்களாகட்டும், உடனடியாகச் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது!

எதை எங்கு வைக்க வேண்டுமோ, அதை அங்கே வைக்கப் பழகிக் கொள்ளுங்கள்!

மலமும் மூத்திரமும் நம் ஒவ்வொருவர் உடலுக்குள்ளேயும் தான் இருக்கிறது, சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காக, தனியாக எடுத்து வைத்து, சாப்பிடும் தட்டிலும் வைத்துக் கொள்வோமா என்ன?



சினிமா மயக்கங்களில் இருந்து, பரபரப்புச் செய்தியாகக் குப்பைகளையே விற்பனை செய்து வரும் ஊடகங்களில் இருந்து, அது அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி, தொலைக் காட்சியாக இருந்தாலும் சரி, குப்பைகளைப் புறக்கணித்து ஒதுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.


வெங்கடராமன் ராமகிருஷ்ணன் இந்த வருட ரசாயனத்துறை ஆராய்ச்சியில், நோபெல் பரிசை வென்றிருப்பதற்காக, அனேகமாக எல்லோருமே வாழ்த்துத் தெரிவித்தாயிற்று! தமிழர் என்று பெருமிதப்பட்டாயிற்று! இதற்கு முன்பு நோபெல் பரிசை வென்ற சி வீ  ராமனுக்கும் இவருக்கும் உள்ள பெயர்ப்பொருத்தம் பற்றிக் கதைத்தாயிற்று.

சூடு சுரணை உள்ள இந்தியர்கள் அனைவரும்  அவமானத்தில் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கொதித்திருக்கிறது இன்றைய எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை! நோபெல் பரிசை வென்றதற்காக அல்ல. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்தியாவை விட்டு ஓட வேண்டியிருக்கிறது, முன்னேறிய நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்து, அங்கே உள்ள ஆராய்ச்சி வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு, நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் படும் பட்டியலில் இடம் பிடித்தாக வேண்டியிருக்கிறது.

கிட்டத் தட்ட எழுபது வருடங்களுக்கு முன்னால் சி வி ராமன், முதலும் கடைசியுமாக ஒரு இந்திய விஞ்ஞானியாக நோபெல் பரிசை வென்றார். அதற்குப் பின்னால், கங்கையில் ஏகப்பட்ட சாக்கடைகளும் சேர்ந்து ஓட ஆரம்பித்தது, இந்தியா ஒரு அடிமை நாடாக இருந்ததில் இருந்து விடுபட்டது.

அதன் பிறகு ஒவ்வொரு புதிய அரசு அமையும் போதும், விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் வளர்க்கப்போவதாகத் தம்பட்டம் பெரிதாக இருக்கும். செயலளவில் ஒன்றுமே இருக்காது.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், அங்கே வாய்ப்பைப் பயன்படுத்தி நோபெல் பரிசை வெல்வது இருக்கட்டும்! இந்தியாவிலேயே, இந்திய ஆராய்ச்சிக் கூடங்களிலேயே பணியாற்றும் இந்தியர்கள் நோபெல் பரிசை வெல்லும் அளவுக்கு வாய்ப்பையும், வேண்டிய வசதிகளையும் செய்து தர முடியுமா, முடியாதா?

மனித வள மேம்பாட்டுத்துறையைக் கவனிக்கும் மத்திய அமைச்சர் திரு.கபில் சிபலுக்கு ஒரு கேள்வி என்ற தலைப்பிட்டு எகனாமிக் டைம்ஸ் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறது.

அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கு எங்கே அதற்கெல்லாம் நேரம் கிடைக்கப் போகிறது?


மாநில அளவில் ஒரு பூனைக்கண் புவனேஸ்வரி என்றால், தேசிய அளவில் என்ன முக்கியமான பிரச்சினை அவர்களுக்குக் காத்திருக்கிறதோ?

வளர்ச்சியில், உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்த அரசியல் வாதிகளுக்கு எப்போது நேரம் கிடைக்கப் போகிறதோ?

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?

யோசித்து, விடுபட வேண்டிய நேரம் இது!