இதயத்தில் இடம் கொடுக்க... இன்னும் ஒரு மூணு!

கொஞ்சம் நீட்டி முழக்கி, விஷயமே இல்லாமல் வசனம் பேசி, அதுக்கும் கைதட்டல், விசில், அப்புறம் நமக்கு நாமே திட்டத்தில் நமக்கு நாமே விருது கொடுத்துக் கொள்வதற்குக் கூடத்  தமிழ் நாட்டில், எல்லோருக்குமே வாய்ப்புக் கிடைத்து விடுவதில்லை! அட, அது தான் இல்லையென்றாலும், இதயத்திலும் கூட இடம் பிடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான் போல!

சண்டேன்னா  மூணு! மூணுமே ஒவ்வொண்ணும் ஒரு விதமா! இதைப் படித்துக் களைத்துப் போன, அல்லது பார்த்தே களைத்துப் போன என் செல்லக் குட்டி வாசகர்களுக்காக இன்னும் ஒரு மூணு! பெரிசெல்லாம் இல்லை! ரெண்டு படம், ரெண்டே நிமிஷம் ஓடுகிற ஒரு வீடியோ! அவ்வளவுதான்! போன பதிவைப் படிக்கச் சொல்லி, இது  "இலவசம்"! பதிவுகளில் கூட இலவசம் அறிவிக்கிற நிலைமையில் தான் தமிழ் வலைப் பதிவுலகம் இருக்கிறது, வயசுக்கு அல்லது பக்குவத்துக்கு வர இன்னும் கொஞ்ச நாளாகும் என்பதைப் புரிந்து கொண்டு கொடுக்கும் சுவாரசியமான இலவசங்கள் இது!


படங்கள் மேலே க்ளிக் செய்து  பெரிதாக, தெளிவாகப் பார்க்கலாம்!

இந்தப் படத்தில் இரண்டு ஆச்சரியங்கள்! எப்படிப் படம் எடுத்தார்கள் என்பது போல சிக்கலான அறிவுப்பூர்வமான கேள்விகளோடு எல்லாமில்லை!

அந்த அணில் காமெரா டெலி லென்சுக்குள் முகத்தை உள்ளே நுழைத்து அப்படி என்னத்தைத் தான்  தேடுகிறது? லென்ஸ் வழியாகப் பார்த்தால் எடுக்கும் மனிதருடைய  மனசுக்குள் என்ன இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்றா? அல்லது, லென்ஸ் முகப்பில் திங்கறதுக்கு ஏதோ கெடைச்சது  என்றா?

இது இங்கே இருந்து சுட்டது! நன்றியுடன்!

பிரேயர் எல்லாம்  சொல்லணுமாமே! அப்படியா?!



சரி! பிரேயர் சொன்னதுனால என்ன ஆச்சு? ரெண்டும் ஏன் இப்படி மல்லாக்க விழுந்து......ப்ரேயரோட எ ஃபக்ட்  என்று மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்!

இது  இங்கே பார்த்தது! அவங்க  இங்கேயிருந்து சுட்டாங்களாம்! ரெண்டு பேருக்கும் நன்றி! மல்லாக்க விழுந்து கிடந்து இல்லை! சாதாரணமாக, நேரே நிமிர்ந்து நின்று தான்!

ஒ அமெரிக்கா! அமெரிக்கான்னதுமே ஆச்சரியங்கள் தான்! அணுகுண்டு விஷயம் ஆனாலும் சரி, கிளிண்டன்- மோனிகா லெவன்ஸ்கி  விவகாரம் மாதிரி நமட்டுச் சிரிப்போடு பார்க்கிரதானாலும் சரி! இடதுசாரி ஆதரவாளனாக இருந்த காலத்தில் இருந்தே அமெரிக்காஎன்றால் அப்படி ஒரு ஆர்வம்!Obsession!


இந்த வீடியோவைப் பார்த்து நீங்களும் அதையே தான் சொல்லுவீங்க!

சண்டேன்னா மூணு! ஒவ்வொண்ணும் ஒரு விதமா...!



சண்டேன்னா மூணு பதிவு கூட போடுங்க!
ஒரே பதிவா போடாதிங்க!


இப்படி இரண்டு வாரங்களுக்கு முன்னால் எழுதிய   சண்டேன்னா மூணு! தினமலர், இட்லி வடைக்குப் போட்டியாக இல்லை! இந்தப் பதிவில் நம்ம வால்பையன் வந்து ஒரு பின்னூட்ட வேண்டுகோள் அல்லது மிரட்டல், இல்லையென்றால் கெஞ்சல், (இளவட்டமாக இருந்தால், கொஞ்சல் என்று இன்னொன்றையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம் தான்!) இதில் ஏதோ ஒரு ரகத்தில் சொல்லிவிட்டுப் போனதற்காகவேஒரு முப்பது பக்கம் வருகிறமாதிரி பதிவெழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்! அப்புறம், அனாவசியமாக பதிவர்  உண்மைத் தமிழனோடு போட்டி போடுகிற மாதிரி ஆகி விடும் என்பதால் அந்த ஐடியாவைக் கைவிட்டேன். உண்மைத் தமிழனோ என்னடாவென்றால், நம்பவே முடியாத அளவுக்குக் குட்டிப் பதிவுகளாக இரண்டு பதிவுகள் எழுத ஆரம்பித்த ஆச்சரியத்தில், கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை! அந்த ஆச்சரியத்தில், போன சண்டேக்கு மூணு எழுதணும்னு நினைப்பே வரலை!யோகி பட விமரிசனத்தில் இருந்துஉண்மைத் தமிழன்  பழையபடி நீளமாகவே ஆரம்பித்து விட்டார் என்பது தனி விஷயம்!

இது முன்னோட்டம் தான்!இனிமேல் தான் மூணு விஷயமே வருது!
ooo1ooo


பதிவர்கள் எல்லோருமே கீபோர்டைத் "தட்டுகிறவர்கள்" தான்! பிரபலப் பதிவராகும் போது திட்டுகிறவர்களாகவும் மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது. திட்டு வாங்கியே பிரபலமாகும் யோகமும் சிலருக்கு அமைந்து விடுவது உண்டு! இப்படிப் பதிவுகளில் தட்டிக் கொண்டே பொட்டியையும் தட்டுகிற மென்பொருள் வல்லுனர்களுக்கு என்னென்ன வரலாம் என்று ஒரு சர்வே! இணையத்தில் படிச்சது தான்!
கொஞ்சம் நம்மூர்ச் சூழலுக்கேற்றபடி உல்டா என்பது உண்மை ஆனால் குரூரம், காப்பியடிப்பது என்பது தமிழ் சினிமாவின் ஏகபோகத் தலையெழுத்து, அதனால், மாற்றி எழுதப்பட்டது என்று வைத்துக் கொள்வோமா?

பொட்டியை நெசமாகவே தட்டுகிறவர்களில்...........
பத்து சதவீதப் பேருக்கு,கார்பல் டன்னல் சின்ட்ரோம் CTS என்கிற விரல் நரம்புகளில் ஏற்படுகிற வலி, இதய சம்பந்தமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்..


இதைப் பற்றிய மருத்துவக் குறிப்புக்களுக்கான சுட்டி மேலேயேஇருக்கிறது.


இருபது சதவீதப்பேர், தங்களோடு வேலை செய்பவர்களையே திருமணம் செய்து கொள்கிறார்களாம்.

பாலும் பழமும் திரைப் படத்தில் எம் ஆர் ராதா பேசினதாலேயே உயிர் பெற்ற வசனம் இது."அப்படித்தான் இருக்கோணும்! டாக்டருங்கல்லாம் நர்சைத்தான் கட்டிக்கணும்! கொத்தனாருங்க சித்தாளைத் தான் கட்டிக்கணும்" இந்த வசன க்ளிப்பிங்க்ஸ் கைவசம் இல்லை, கிடைத்தாலுமே எப்படிப் பதிவில் இணைப்பது என்கிற பொட்டியை சரியாத் தட்டுகிற ஞானம் எனக்கில்லை. யாராவது கற்றுக் கொடுக்க முன்வந்தால், தயாராயிருக்கிறேன்!

முப்பது சதவீதம் பேர், சௌகரியப்படும் வரை சேர்ந்து வாழ்வது இல்லாவிட்டால் கழன்று கொள்வது என்ற மாதிரியான வாழ்க்கை முறையையே விரும்புகிறார்களாம்! இதற்கு முக்கிய காரணமாக சொல்லப் படுவது, அலுவலகம், வீடு என்று இரண்டு இடங்களிலுமே அதிகமான பொறுப்பைச் சுமக்கத் தயாராக இல்லாததுதான்!

கணவன் மனைவி இருவருமே மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் என்றால், அதில்  விவாகரத்து கோரும் சதவீதமும் சராசரியை விட அதிகமாக இருக்கிறதுவேலையில் ஏற்படும் மன உளைச்சலும், வேலை முடிந்தவுடன் எந்தவிதமான கவலையோ, பொறுப்போ இல்லாமல்இருக்கவேண்டும் என்ற தவிப்பும் தான் காரணமாக இருக்கிறது.

நாற்பதுசதவீதம், ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று இரண்டும் கெட்டானாகத் தவிப்பதை சொல்வோமில்லையா, அந்த மாதிரிவெளிநாட்டுக்குப் போய் அங்கேயே குடும்பத்தோடு செட்டில் ஆகி விடலாமா அல்லது நம்முடைய ஊரே போதும் என்று தங்கி விடுவோமா என்ற இரண்டு தவிப்புக்களுக்கும் இடையில்  மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள்ஊசலாடிக் கொண்டே இருப்பது தான் பிரச்சினையின் தீவீரத்தை அதிகப் படுத்திக் கொண்டிருக்கிறது  என்பது தெரிந்துமே கூட, ஊசலாடிக் கொண்டிருப்பவர்கள்.

ஐம்பது சதவீதம், கையிருப்பு, சேமிப்பு என்று சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவுமே இல்லாதவர்கள்!

வருமானம் அதிகம் தான்! வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற கதையாக, வருகிற வருமானத்தில், நவீன வாழ்க்கை முறையே  பெரும்பகுதி அதிகச் செலவினமாகவே கரைத்து  விடுகிறது. சொந்த வீடு என்ற கனவை வளர்த்து ரியல் எஸ்டேட்காரர்கள், மிகக் குறைந்த வட்டியில் வீடு வாங்கக் கடன் என்று வங்கிகள் மிச்சம் மீதி இருப்பதையும் பிடுங்கிக் கொண்டு விடுகிறார்கள்சேமிப்பு எங்கே இருக்கும்?

அறுபது சதவீத்ப்பேருக்கு, தாங்கள் வாங்கிக் கொண்டிருக்கும் ஊதியத்தைப் பற்றி பெருத்த அதிருப்தி இருக்கிறது.

இல்லையா பின்னே? 'கையிலே வாங்கினேன் பையிலே  போடலே-காசு போன இடம் தெரியலேஎன்று பாட்டுப் பாடிக் கொண்டிருப்பவர்களிடம் திருப்தி எப்படி இருக்க முடியும்?

எழுபது சதவீதம் பேர் எட்டு மணிநேரம் என்று இல்லை, அதற்கு மேலேயே அதிகமாக, தினந்தினம் உழைக்க வேண்டியிருக்கிறது! உலகம் முழுக்கப் பொதுவாக இருக்கும் விஷயம், இது ஒன்று தான்!

எண்பது சதவீதப் பேர், தங்களுடைய பெற்றோர், நெருங்கின சொந்தங்களிடம் இருந்து வெகுதூரத்திலேயே வாழ்கிறார்கள்.
  
தொண்ணூறு சதவீதப் பேர், தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி, வேலையில் அடிக்கடி குறிப்பிட்ட காலக்  கெடுவிற்குள் வேலையை முடித்தாக வேண்டும் என்று வரும் நிர்பந்தத்தைப் பற்றி, வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்துவது குறித்து, கிடைக்கும் ஊக்கத் தொகைகள், ஊதிய உயர்வு, வேலை நிமித்தமாக மேற்கொள்கிற பயணங்கள், பெண்டாட்டி, பிள்ளைகள், விசா கிடைப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், செய்து முடித்தே ஆக வேண்டிய பொறுப்புக்கள் என்று இப்படி எதிலுமே மகிழ்ச்சியாக இருப்பது இல்லை.

நூறு சதவீதமும் இந்த ஒன்றில் ஒன்று படுகிறது! வாழ்நாளில் ஒரு தடவையாவது, கம்ப்யூட்டர் முன்னால் வேலை செய்வதைத் தவிர வேறெந்த வேலையாவது அமைந்திருக்கக் கூடாதா என்று  பொட்டி தட்டுகிற தொழிலில் பரபரப்பாக இயங்கும் அத்தனை பேருமே ஏங்குகிறார்களாம்!


இதற்குமேல் விவரிக்க ஆரம்பித்தால், பிடுங்கிக் கொண்டிருக்கிற அத்தனை ஆணிகளையும் இங்கே எனக்கு அடிக்க வந்துவிடுவார்கள் என்று ..ச்சே ச்சே! பயமெல்லாம் ஒன்றுமில்லை!


ooo2ooo

பொட்டி தட்டுகிறவர்களைப் பற்றிப் பேசினதாலோ என்னவோ, இந்த மாட்டர் கூட, அவர்கள் மன நிலை, கவலைகளுக்குப் பொருந்தி வருகிற மாதிரித் தற்செயலாக அமைந்து போனது தான். இதில் சொல்லப்பட்ட அணுகுமுறை நம் எல்லோருக்குமே பொருந்துகிறது, பயன்படுவதாக இருக்கிறது என்பதால், என்றோ இணையத்தில் படித்ததை நினைவில் வைத்து மீண்டும் உங்களுக்காக:

தங்களுடைய ஆசிரியரைத் தேடி, அவருடைய பழைய மாணவர்கள் போனார்கள். ஆசிரியரிடம், ஒவ்வொருவரும், தங்களுடைய வேலைச் சுமை, குடும்பப் பிரச்சினைகள், மன அழுத்தம், இப்படி ஒவ்வொன்றிலும் தாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை மனம் திறந்து விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆசிரியர் எழுந்தார். "பேசிக் கொண்டிருங்கள்! உங்கள் எல்லோருக்கும் காபி கலந்து எடுத்து வருகிறேன்" என்று சமையல் அறைக்குப் போனார். காபி தயாரித்துப் பெரிய குவளையில் நிரப்பி எடுத்துக் கொண்டார். பலவிதமான வண்ணப் பீங்கான் கோப்பைகள், வெண்கலக் கோப்பைகள், எவர்சில்வர் கோப்பைகள், வெள்ளிக் கோப்பைகள், பேப்பர் கோப்பைகள் என்று பலவிதமான கோப்பைகளை எடுத்து வந்து ட்ரேயில் வைத்தார்.

"
வேண்டுமான அளவு காபியை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று உபசரித்தார். முன்னாள் மாணவர்களும், ஆளுக்கொரு கோப்பையைத் தேர்ந்தெடுத்து, குவளையில் இருந்து காபியை ஊற்றிக் கொண்டு குடிக்க ஆரம்பித்தார்கள். "எங்கே நிறுத்தினேன்?" என்று கேட்டுக் கொண்டு ஒரு மாணவன் பேச ஆரம்பித்தான். ஆசிரியர் புன்னகையுடன், "அதற்கு முன்னால் நான் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது." என்றார்.

"
கொஞ்சம்  உங்கள் கோப்பையைக் கவனித்துப் பாருங்கள்! நீங்கள் செய்ய வேண்டி இருந்தது காபி குடிப்பது தான்! ஆனால் என்ன செய்திருக்கிறீர்கள் பாருங்கள்! காபியை விட, பளபளப்பாகத் தெரிந்த, உயர்த்தியாகப் பட்ட கோப்பைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தான் முக்கியமாக இருந்தது இல்லையா? சரி, நீங்கள் ஒரு கோப்பையைத் தேர்ந்தெடுத்து எடுத்துக் கொண்டீர்கள், ஆனால் பார்வையும் கவனமும் அடுத்தவர் எடுத்துக் கொண்ட கோப்பை நான் எடுத்துக் கொண்டதைவிட உயர்த்தியா அல்லது கொஞ்சம் மட்டமா இப்படியே உங்களுடைய மனம் சஞ்சலிக்க ஆரம்பித்தது. நான் சொல்வது சரி தானா? இல்லையென்றால், சொல்லுங்கள்!"

அப்போது தான், மாணவர்கள், கோப்பையை எடுக்கும்போது, இருப்பதிலேயே உயர்த்தியாகத்  தென்பட்டதையே எடுத்துக் கொள்ள விரும்பியதையும், மற்றவர்கள் தன்னை விட உயர்த்தியான கோப்பையை எடுத்துக் கொண்டு விட்டார்களா என்பதைக் கொஞ்சம் ஆவலோடு பார்த்ததையும்இன்னொருத்தன் தன்னை விட உயர்த்தியான கோப்பை வைத்திருந்ததைப் பார்த்தபோது பொறாமைஏற்பட்டதையும்  வெட்கத்தோடு புரிந்து கொண்டார்கள்.

ஆசிரியர் மறுபடியும் பேச ஆரம்பித்தார்: "நண்பர்களே! கோப்பை என்பது ஒரு சாதனம் தான்! காபியைச் சிந்தாமல், சூடு கைகளில் உறைக்காமல் கையாளுவதற்கான கருவி மட்டும் தான். இங்கே காபி தான் பிரதானம்! கோப்பைகள் அல்லவிலை உயர்ந்த கோப்பியோ, அல்லது சாதாரணமான கோப்பை என்பது இங்கே காபியின் தரத்துக்கு சம்பந்தம் இல்லாதது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை! இது புரிகிறதா?"

"
அதே மாதிரி, காபி என்கிற இடத்தில் வாழ்க்கை என்றும், கோப்பை என்ற இடத்தில், வேலை, சம்பாத்தியம், சமூகத்தில் அந்தஸ்து என்றும் வைத்துப் பாருங்கள்.   வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க விடாமல், இங்கே கோப்பைகளின் மீது கவனம் போகும் போது, காபியை மறந்த மாதிரி வாழ்க்கையையும் மறந்து விடுகிறோம்! தன்னுடைய கோப்பை அடுத்தவனுடையதைப் போல, அல்லது இன்னும் வெகு உயர்த்தியாக இல்லை என்பதில் கவனம் சிதறும் போதே, அங்கே ஏமாற்றம், அழுகை, ஆத்திரம், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, என்று வரிசையாகச் சறுக்கிக் கொண்டே போவதில், கைக்குக் கிடைத்த காபி மாதிரி, ஆறி அவலாகிப் போய்க் கடைசியில் கிடைத்ததும் பயனில்லாமல் போய் விடுகிறது. இது புரிகிறதா?"

"
அது மாதிரித் தான், கிடைத்ததில் என்ன நிறைவைக் காண முடியும் என்பதைப் பார்ப்பதற்குப் பதிலாக, என்னென்ன கிடைக்கவில்லை என்பதில் கவனம் போனால், வாழ்க்கையும் அங்கே கசந்து, ஆறிப் போய்விடுகிறது. வாழ்க்கையை, நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த நேரத்தில், சூடாக காபி குடிப்பது என்பது சுறுசுறுப்பாக இருப்பதற்கு எப்படி அவசியமோ, அதே மாதிரி, வாழ்க்கை முக்கியம்! நாம் எதிர் கொள்கிற சூழ்நிலைகள் கோப்பைகள் மாதிரி இரண்டாம் பட்சம் தான்."


"அது சரியில்லை இது சரி இல்லை என்று பேசிக் கொண்டிருப்பதே நீங்கள் சந்தோஷமாக இல்லை என்பது தான்!. சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் இங்கே நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரியே குறைகளே இல்லாமல் இருப்பதும் அல்ல! உண்மையில் சந்தோஷமாக இருப்பதற்கு, குறை அல்லது நிறைவு என்ற படிக்கட்டுக்கள் அவசியமே இல்லை! சந்தோஷமாக இருப்பதன் ரகசியம், குறை, நிறை என்ற அளவீடுகளைத் தாண்டிப் போவதில் தான் இருக்கிறது. அவைகளைப் பெரிதுபடுத்துவதிலோ, பொருட் படுத்துவதிலேயோ அல்ல!"


ஆசிரியரைத் தேடி வந்த மாணவர்கள் இப்போது காபி குடிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டார்கள்!


ooo3ooo


படித்ததும் பிடித்ததும்! இந்தத் தலைப்பில், என்னைக் கவர்ந்த தமிழ் வலைப்பதிவர்களைப் பற்றிக் கொஞ்சம் எழுதி வருகிறேன். இவர்களில் எவரையும் நேரடியாக அறிந்தவனில்லை. இவர்களது பதிவுகளை, எழுத எடுத்துக் கொள்ளும் விஷயங்கள், எழுதுகிற விதம் இவைகளை வைத்து மட்டுமே என்னுடைய பிடித்தமான வலைப்பதிவுகளாகவும், பதிவர்களுமாக படித்து வருகிறேன். கருத்து ஒற்றுமை, வேற்றுமை, ஆத்திகம், நாத்திகம் இந்தமாதிரி அளவீடுகளை வைத்து வாசிப்பு அனுபவத்தைக் குறுக்கி விடக் கூடாது, குறுக்கி விட முடியாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு, என்னுடைய ரசனையை பற்றிய கணிப்பை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்  என்ற வேண்டுகோளுடன்............., ஏனென்றால் அது மாறிக் கொண்டே, வளர்ந்து கொண்டே இருக்கும் என்ற தைரியம் தான்!

திரட்டிகளின் தயவை எதிர்பார்த்துத் தொங்கிக் கொண்டிருக்கும் பதிவர்களிடமிருந்து எல்லா வகையிலுமே வித்தியாசமான இரு பதிவர்களை இன்றைக்குப் பார்ப்போம்.  

இந்த இருவருமே தங்கள் பதிவுகளை எந்தத் திரட்டியிலும் இணைத்துக் கொள்ளவில்லை. பதிவுகளைப் படிக்க வரும் நண்பர்கள், அவர்களுக்குப் பிடித்திருந்தால் தங்களுடைய நண்பர்களுக்கு அறிமுகம் செய்யட்டும்  என்ற அளவில், தங்களுடைய பதிவுகளில் மிக அருமையாக ஆன்மீகத்தைப் பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். எனக்கு இத்தனை ஹிட்ஸ், இத்தனை followers, இன்னும்  இத்தனை பேர் ரீடரில் படிக்கிறார்கள், ஆக ஒண்ணும் ஒண்ணும் கூட்டி வருகிற  மொத்தம் எண்பது என்று கணக்குப் போடும் தமிழ் வலைபதிவுலகத்தில், இப்படியும் அபூர்வமான பதிவர்கள் இருக்கிறார்கள்  என்பதே மிக ஆச்சரியமான செய்தி! அதை விட ஆச்சரியம், அவர்கள் எடுத்துக் கொண்டு எழுதும் விஷயங்கள்! சென்றிடுவீர் எட்டுத் திக்கும்! கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்று பாடினானே பாரதி அவன் வார்த்தைகளைக் கொண்டே  இவர்கள் இருவரையும் வாழ்த்தி வணங்கி இங்கே சிறு அறிமுகமாக.............

ஆன்மீகம்4டம்ப்மீஸ்

பெயரே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதல்லவா? கணினி தொடர்பான புத்தகங்களில் for dummies என்ற அடைமொழியோடு, ஒன்றும் தெரியாதவர்களுக்காக நிறையப் புத்தகங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அதே மாதிரி ஆன்மீகத்துக்குமா, என்று ஆச்சரியப் படுபவர்கள் மேலே கொடுத்திருக்கும் தலைப்பிலேயே லிங்க் இருக்கிறது, போய் ஒரு முறை படித்துப் பாருங்கள்! அத்வைதம் கொஞ்சம் சிக்கலானது. புரிந்துகொள்வதற்கு, நடைமுறையில் கடைப்பிடிப்பதற்கு மிகவும் கடினம். மேலோட்டமாகப் பார்க்கும் போது, ஆதி சங்கரர் சொல்கிற பிரம்ம சத்யா:ஜகன் மித்யா என்று பரம்பொருளைத் தவிர  இரண்டாவதாக வேறொன்றுமே இல்லை என்பது கேட்கும் போது மட்டும் புரிந்து விட்டதாக ஒரு மயக்கம் வரும்! அவ்வளவு தான்!

சங்கரர் சொல்லும் மாயாவாதத்தை, நான் ஏற்றுக் கொள்பவன் இல்லை. என்றாலுமே கூட, ஒரு கடினமான தத்துவத்தை, தாண்டவராய சுவாமிகள்  தமிழில் சொல்லிவைத்த  பாடல்களில் இருந்து, மிக எளிமையாகமிக ஆரம்ப நிலையில் இருந்து கேட்பவருக்குமே புரிகிற மாதிரி டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் தொடர்ந்து எழுதி வந்து முதல் சுற்றை முடித்து விட்டார்கடலூரில் மயக்க மருந்து நிபுணராகப் பணியாற்றிக் கொண்டே, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில், பழைய, அரிதான, இன்றைக்குக் கிடைக்காத புத்தகங்களை மின்னாக்கம் செய்து வரும்  தொண்டையும் சலிக்காமல் செய்துகொண்டிருக்கிறார். லினக்ஸ் நிரல்களைத் தமிழாக்கம் செய்து வரும் பணியிலும் தன்னை ஈடு படுத்திக் கொண்டிருக்கும் ஒரு அருமையான, நகைச்சுவை உணர்வு மிகுந்த, சாஸ்திரம், பண்பாடுகளில் ஆழ்ந்த நம்பிக்கையோடு உள்ள மிகச் சிறந்த மனிதர்  என்பதை அவரது எழுத்துக்களிலேயே  அடையாளம் தெரிந்து வைத்திருக்கிறேன்.

டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் இதுவரை எழுதிய பதிவுகள், தலைப்பு வாரியாக மேலே கொடுத்திருக்கும் சுட்டியிலேயே PDF கோப்புக்களாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழ் வலைப் பதிவுகளில் மிக ஆரோக்கியமான ஒரு போக்கை ஆரம்பித்து வைத்திருக்கும் மிகச் சில நல்ல வலைப் பதிவர்களில், டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் அவர்களை வாழ்த்தி வணங்கி, இந்தப்பக்கங்களில் அவரைப் பற்றி எழுதக் கிடைத்த இந்தத் தருணமே மிக நல்ல தருணமாக, உங்களுக்கும் அந்த அனுபவம் கிடைப்பதற்கான ஒரு அறிமுகமாக இங்கே!
பக்தி என்றவுடனேயே இங்கே சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் முன்னே வந்து நிற்கிறாள்! அப்புறம் உடையவர் என்றும் எதிராசன் என்றும்  போற்றப்பட்ட  ராமானுஜர் தொடங்கி எண்ணற்ற வைணவப் பெரியவர்கள் பக்தியை வளர்த்ததோடு தமிழையும் வளர்த்தார்கள்! அதேபோல, வடக்கில் வாழ்ந்த பக்திச் சுடர்களைப் பற்றித் தமிழில் எழுத முனைந்தவர்கள் வெகு சிலரே! அதிலும் கபீர் தாசர் என்ற அடியவருடைய எளிமையான பாடல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்த போதிலும், ஹிந்தி தெரியாததால்,அல்லது தமிழில் முழுமையான மொழிபெயர்ப்பு நூல் ஏதாவது வெளியாகியிருக்கிறதா, தற்சமயம் கிடைக்கிறதா என்பதே தெரியாமல் இருக்கும் சூழலில், கபீரன்பன் என்ற பெயரில் கபீர் தாசருடைய தோஹே என்ற ஈரடிக் கவிதைகளை ஹிந்தியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து, எளிமையான விளக்கங்களோடு எழுதி வரும் திரு. உமேஷ்!

இவருமே தான் எழுதிய பதிவுகளை, PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியைச் செய்து கொடுத்திருக்கிறார். பயனுள்ள பதிவுகள்! இப்படி இணையத்தில் இல்லாத நேரத்திலும் கூட, படித்துப் பயன் பெரும் வகையில் கபீர் தாசருடைய பக்தி வெள்ளம் நமக்குள்ளும் பெருக்கெடுத்து ஓடுகிற  மாதிரிதரவிறக்கம் இங்கே




ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லை!



 "நான் அப்படியே சாப்பிடுவேன்" "ஐ யாம் எ காம்ப்ளான் பாய்"

இந்த மாதிரிக் குழந்தைகளை மையமாக வைத்து விளம்பரப்படங்கள் நிறைய வளர்ந்திருக்கின்றன.குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப் பட்டவை என்றாலும், டார்கெட் ஆடியன்ஸ் நாம் எல்லோருமே தான். அதுவும் தவிர மார்க்கெட்டிங் துறையில், ஒரு குறிப்பிடத் தகுந்த ஆராய்ச்சி முடிவு, குழந்தைகள் எதை வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் முக்கியமான பங்காற்றுவதாகத் தெரிவிக்கிறது. இந்த வலிமையான செக்மெண்டை கவர்வதற்காகவே இன்றைய விளம்பரங்களில் மிகப் பெரும்பாலானவை, வெற்றி பெற்றவைகளாகவுமே இருப்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

நம்முடைய முடிவுகளை, தீர்மானங்களை, எண்ணங்களை, வேறு யாரோ தான் எப்போதுமே தீர்மானிக்கிறார்கள்! கொஞ்சம் நாசூக்காகச் சொல்வதானால், influences, influences all the way! இவைகள் இல்லாமல் நம்மால் சுதந்திரமாக முடிவெடுக்கவே முடியாதா? அப்படி என்ன முடிவை நாம் சமீபத்தில் எடுத்திருக்கிறோம் என்று நமக்குள்ளேயே கேட்டுக் கொண்டு விடை தேடினோமேயானால், எப்போதுமே நாம் நமது முடிவுகளை அடுத்தவரைச் சார்ந்தே எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வரும்.

இந்த அடிப்படை உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க முனைந்து விட்டீர்கள் என்றால், முதலில் ஒரு சபாஷ்!

இந்தப் பதிவு உங்களுக்காகத் தான்! அடுத்தது என்ன என்பதைக் கொஞ்சம் பேசுவதற்காகத் தான்!



சரி! அப்படி எடுக்கப் படும் முடிவுகள் எல்லாமே, சிறந்தவை தானா? அல்லது, 'ஏதோ பத்துக்கு ஒண்ணு பழுதாகாம இருந்தாலே போதும்' ரகம் தானா?

இந்தக் கேள்விக்குச் சரியான விடையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், முதலில்,

யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?

அல்லது, இதையே வேறு விதமாகச் சொல்வதானால்,

யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?


இந்த இரண்டு கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டு பிடிப்பதில் கூட அவ்வளவு சிரமம் இல்லை! அதில் இருந்து சரியான பாடங்களைக் கற்றுக் கொண்டு, செயல்பட ஆரம்பித்து விட்டீர்களேயானால், உங்களை வெல்ல யாருமே இல்லை!

'கர்நாடக'மான ஒரு பொதுத்துறை வங்கியை எடுத்துக் கொள்வோம். அதனுடைய தலைமை நிர்வாகியாக இருந்தவர், house magazine என்று ஊழியர்களோடு தொடர்பில் இருப்பதற்காக ஒரு பத்திரிக்கை வருமல்லவா, அதில், வெளிப்படையாகவே புலம்பினார். 'நம்முடைய வங்கியில் கடனுக்கு வட்டி மற்றவர்களோடு ஒப்பிடுகையில் குறைவு, சேவைக் கட்டணங்கள் மிகக் குறைவு,இப்படி எல்லா வகையிலும் மிகக் குறைவான விகிதத்திலேயே கட்டணங்கள் இருந்த போதிலுமே கூட, வாடிக்கையாளர்களோ , வருமானமோ அதிகரிக்கவே இல்லை. ஏனென்று தெரியவில்லை என்று முதல் பக்கத்திலேயே, தலைமை நிர்வாகியின் செய்தி, உடன் பணியாற்றுகிறவர்களையும் சிந்திக்க வைப்பது, செயல்பட வைப்பது, என்பதற்குப் பதிலாகத் தோற்றுப்போனவன் புலம்பலாகவேஇருந்தது.

அவரால் புலம்ப மட்டுமே முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், புலம்பல்கள் கேள்விகளாகவும், விடைகள் கண்ணெதிரிலேயே நிதரிசனமாகவும் இருந்தன.மாற்றத்தைச் சாதிக்க அவரால் முடியவில்லை, அவரைச் சுற்றியிருந்தவர்கள் விடவில்லை.அவர்கயை சரி செய்வதற்குக் கூடத் தலைமை நிர்வாகிக்கு தெரியவுமில்லை, திறமையுமில்லை!


இதில் என்ன புதிதாக இருக்கிறது? பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் இப்படித் தானே இருக்கின்றன என்று ஒதுக்கிவிடாதீர்கள். ஒரு தலைமை நிர்வாகி எப்படி இருக்கக் கூடாது என்பதை இந்த வங்கியின் தலைமை நிர்வாகிகள் பலர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.  
இதே வங்கியின் இன்னொரு தலைமை நிர்வாகி! வழக்கம் போலவே அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப் பட்டு, ஸ்டேட் வங்கியில் இருந்து, இந்த கொங்கணி வங்கியின்  தலைவராக வந்தவர். ஸ்டேட் வங்கியின் பலம்  Professional Approach!. இவர் அங்கே வளர்ந்த சூழ்நிலையே வேறு. இங்கே இந்த கொங்கணி வங்கியில் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்சாக இருப்பது மட்டுமே பெரிய தகுதியாக இன்றைக்கும் கூட இருக்கிறது.. இங்கே இருந்த சூழ்நிலையே வேறு! தலைமை பொறுப்பேற்க வந்து, பொருந்தாமலேயே ஆகிப்போன சந்தர்ப்பங்கள் இந்த வங்கியில் சர்வசாதாரணம்! ஸ்டேட் வங்கியில் இருந்த, தொழில் தெரிந்த நிர்வாகத்தைப் பார்த்துப் பழகினவருக்கு, இந்த வங்கியில் இருந்த நடைமுறைகள்  பொருந்தாமல் போனது. தலைமைப் பொறுப்பு வெறும் பதவியில் மட்டும் தான்! உருப்படியான மாற்றம், அதற்கான வழி வகை என்ன என்பதைப் பற்றிய சிந்தனையோ, செயல் திட்டமோ இல்லாத தலைமை நிர்வாகிகளில், அவரும் ஒருவர். பெயரளவுக்கு மட்டுமே சேர்மன் அண்ட் மேனேஜிங் டைரக்டராக இருந்த இந்த மனிதர்  தென்தமிழ்நாட்டின் தலை என்று சொல்லக் கூடிய ஒரு நகரக் கிளைக்கு விஜயம் செய்தார். சுத்தம் செய்யப்படாமலேயே மேலும் மேலும் கழிவுகளைக் கூட்டிக் கொண்டிருக்கும் பொதுக் கழிப்பறை போல இருந்த அந்த வங்கிக் கிளையைப் பார்த்து அருவருப்பு அடைந்து கமென்ட் எழுதினதோடுசரி!. கிளையின் விருந்தினர் பதிவேட்டில் இப்படி எழுதி வைத்தார். "இந்தக் கிளையைப் பேசாமல் இழுத்து மூடி விடலாம்!" இந்த விமரிசனத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முக்கியமான செய்திகள் இருப்பது கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். அதைவிட, அந்தக் கிளையை சரி செய்யவோ, பரிந்துரைத்தபடி இழுத்து மூடிவிடவோ கூட அவரால் முடியவில்லை என்பது தான் மிகப் பெரிய நகைமுரண்!

இந்த நிகழ்ச்சி விவரணத்தில் நாம் உடனடியாகப் புரிந்துகொள்ளக் கூடியதில், முதலாவதாக, விமரிசனம் எழுதியவர் தலைமை நிர்வாகியாகவே இருக்க லாயக்கற்றவர்.

இரண்டாவதாக, அவர் விரும்பிய மாற்றம் என்ன என்பதைத் தானும் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல், உடன் பணியாற்றுபவர்களுக்கும் புரிய வைக்க உருப்படியான முயற்சி எதையுமே செய்யாமல், இப்படி மாற்றத்திற்காக உழைக்காமலேயே, 'மாற்றம் வேண்டும்' 'மாற்றம் வேண்டும்' என்று அரசியல் வாதிகள் மாதிரியே வெறும் உத்தரவுகள் மட்டுமே போடத் தெரிந்த வெத்துவேட்டு. இந்த மாதிரியான வெத்துவேட்டுக்கள், தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தையுமே பொட்டல் காடாக்க மட்டுமே தெரிந்தவர்கள்.

மூன்றாவதாக, இந்தப் பொதுத்துறை வங்கி, தலைமைப் பண்பு என்றால் என்னவென்றே அறியாத ஒரு முட்டாள்களின் சுவர்க்கம். தலைமை தாங்குவதில் வெற்றிடம் ஏற்படும்போது, அடுத்தடுத்துப் பொறுப்புக்களைச் சுமக்க முன்வரத் தயாராக இல்லாத தண்டங்களை மட்டுமே கொண்டது.

இன்னும் நிறைய அடுக்கிக் கொண்டே போக முடியும். அனால், இந்தப் பதிவு, புள்ளிராசா வங்கியைப் பற்றியது அல்ல என்பதால், இங்கேயே நிறுத்திக் கொள்வோம். நாம் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்களேவேறு!

யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
சந்தையில் பொருட்களை வாங்குவதில், பெரியவர்களை விட குழந்தைகள் எடுக்கும் முடிவே அதிகமாக இருக்கிறது என்பதை சர்வே எடுத்துத் தெரிந்து கொண்ட விளம்பர நிறுவனங்கள், தங்களுடைய பொருட்களை, குழந்தைகளை, இளம் வயதினரை மையமாகக் குறிவைத்தே விளம்பரம் செய்யப் பழகிக் கொண்டு விட்டன. இதை, உங்களுடைய வீட்டில், பல தருணங்களில், சொந்த அனுபவமாகவுமே பார்த்திருக்கலாம்!

இப்படியே, இந்தக் கேள்வியை இன்னமும் விரிவுபடுத்திப் பாருங்கள்! நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், யாராலேயோ தீர்மானிக்கப் படுகிறது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதை உணர்வதே இல்லை, ஆனாலும் பழக்கப் பட்டுப் போய்விட்டது! கொஞ்சம் வேடிக்கையாக இல்லை?

ஆனால் அது தான் உண்மை! பிறர் சொல்வதை கேட்க வேண்டாம் என்பதற்காக இல்லை, அதை ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறோம் பாருங்கள், அதைச் சொல்வதற்காகத் தான் இது! மந்தைத்  தனம் என்பது இது தான்! ஆறாவது அறிவு, பகுத்தறிவு என்பதெல்லாம் பெயருக்குத் தான்! வறுமையே வெளியேறு! சிங்காரச் சென்னை மாதிரிவெற்று வார்த்தைகள் தான்!

ஆறாவது அறிவு, பகுத்து அறிவது என்பதெல்லாம், கொஞ்சம் சுயசிந்தனை, சுய முயற்சியோடு, எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கி, கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றறியேன் என்ற அளவோடு நின்று விடாமல், விடைகளையும் தேட முயற்சிப்பவர்களுக்கு மட்டும்தான்!


அடுத்து, யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? இந்த கேள்வியோடு சேர்த்துப் பார்க்கும் போது தான் நம்முடைய உழைப்பு, முயற்சிகள் எந்த அளவுக்கு கடலில் கரைத்த பெருங்காயம் போல வீணாகிக்  கொண்டிருக்கிறது என்பதையே புரிந்து கொள்ள முடியும். மறுபடியும், புள்ளிராசா வங்கியையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்! அங்கே எல்லோரையும் திருப்திப் படுத்தக் கடுமையாக செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள். ரிசல்ட், வேலை செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று எவரையுமே திருப்திப் படுத்த முடியாமல், ஒரு தலைமை நிர்வாகி புலம்பினாரே, "எல்லாமே இங்கே கம்மி தான்! ஆனாலும் வாங்க யாருமே வர மாட்டேன் என்கிறார்களே" அந்தக் கதைதான்!

எல்லோருக்கும் எல்லாமும்! சோஷலிசம்! கேட்பதற்கும், பேசுவதற்கும் மிகவுமே நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் நடைமுறையில்....? கேட்பவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் நெய் ஒழுகுமாம்! இது அனுபவத்தில் கண்டு சொன்னவர்கள் சொலவடை! கேள்வி கேட்காமல், ஆராய்ந்து பார்க்காமல், எவரோ எதற்காகவோ சொன்னதை அப்படியே நம்பிவிடுவதும் அப்படித்தான்



ப்ரீத்திக்கு நான் காரண்டீ என்று அழகாகச் சிரித்துக் கொண்டு ஒரு பெண் சொல்வதை கேள்வி கேட்காமல் பார்ப்பவர் ஏற்றுக் கொண்டு விட வேண்டும் என்கிற மாதிரித் தான் இங்கே எல்லாமும் இருக்கும். விளம்பரம் என்ற அளவில் சரிதான்! பார்ப்பவர் அளவில்...?  
சொல்லப் பட்ட மாதிரியே இருந்துதானாக வேண்டும் என்பதில்லையே!
சொல்லோ, பொருளோ,அரசியலோ, பதிவுகளில் படிக்கும் விஷயங்களோ எதுவானாலும் சோதித்துப் பாருங்கள்!
யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
இந்தக் கேள்விகளோடு, இன்னொரு கேள்வியையும் சேர்த்துக் கேட்டுக் கொள்ளுங்கள்!
இவையெல்லாம் உண்மை தானா? நம்புகிறமாதிரிச் சொல்லப்படுபவை எல்லாமே நம்பத் தகுதியானவைதானா?
ஏன், எப்படி, எதற்கு, எதனால், எதற்காக இப்படிக் கேள்வி கேட்காதவர்களுக்கு வாழ்க்கை இல்லை! வாழ்க்கையில் வெற்றியும் இல்லை!

உங்களுக்குக் கிடைக்கிற யோசனைகள் கூட சமயங்களில்
யாரோ ஏதோ உள்நோக்கத்தோடு எதற்காகவோ போடுகிற 'இலவசங்கள்' தான்! இங்கே சிருஷ்டியில் எதுவுமே இலவசம் இல்லை! இலவசமாக வருவதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன்! வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா அல்லது இந்த இலவசங்களே போதுமா? 

உங்களுக்கு என்ன வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அல்லது என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?



மனமது செம்மையாக....ஐந்து வழிகள்!






மனமென்னும் கருவியைக் கூர்மையாக வைத்துக் கொள்ள.....சில குறிப்புக்கள்!

எண்ணங்கள், அதாவது எண்ணுவது அல்லது நினைப்பது மிகவும் எளிது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  


உண்மையில் அப்படித்தானா?


'நினைப்புத் தானே பிழைப்பைக் கெடுக்குது' என்று அனுபவசாலிகள் பட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். எதையோ காமாசோமா என்று குழப்பமாக நினைத்துக் கொண்டிருப்பது ஒரு ரகம். தெளிவாக, விவரமாக நினைக்கப் பழகுவது என்பது வேறு ரகம். நினைப்பில் ஓடுவதை ஆராய்ந்து, அதைத் தெளிவாகவும் சொல்லவேண்டும் என்றால், பரீட்சைக்குத் தயாராகிற ஒருவன் பென்சிலைக் கூர்மையாக வைத்திருப்பது போல, மனத்தையுமே கூர்மையாக வைத்திருக்கப் பழக்க வேண்டும். கொஞ்சம் கடினமானது மாதிரித் தெரிந்தாலுமே, பழகப் பழகச் சித்திரம் வரைவது கைவருவது போலவே, மனத்தைக் கூர்மையாக வைத்திருக்க உதவும் கருவி! பயிற்சி என்பது, யானையை அடக்கி வைக்க உதவுகிற அங்குசம் போலமிகவும் சிறிது! உபயோகமோ பெரிது. இப்படி மனத்தை ஆராய்கிற பயிற்சிகள், பழக்கங்கள் எல்லாம், மனத்தைப் போலவே  பரந்து விரிகிறதாகத் தான்  இருக்க வேண்டும் என்பதில்லை, சின்னச் சின்னப் பயிற்சிகள் தான்! தொடர்ந்து ஈடுபாட்டுடன் செய்வது என்பது  இந்த சின்ன அங்குசமே. அடங்க மறுக்கும் மனத்தை அடக்கியாளும் வலிமையான கருவி 


Consistency! Continuity! Concentration!

முதலில், ஒரு விஷயத்தை உண்மை என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?


முதலில், உண்மை என்பது ஆரம்ப நிலைகளில், உணர்ச்சிகளால் தேடப்படுவது. உணர்ச்சிபூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும்பொது, திரித்துச் சொல்வதும் ஆரம்பமாகிவிடுகிறது. திரித்துத் திரித்துக் கடைசியில் உண்மையை நேரெதிரான திசையில் பார்க்க முயல்கிறோம்.என்பதைவிட உண்மையைத் தவறவிட்டு விடுகிறோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில், அடிக்கடி நமக்கு "தெரிந்த" விஷயங்களைக் கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டு அதில் எந்த அளவு ஆதாரத்தோடு இருக்கிறது, உணர்ச்சிகள் எந்த அளவுக்கு புகை மூட்டம் போட்டிருக்கிறது என்பதைப் பார்க்கப் பழக வேண்டும்.



அடுத்ததாக, நாம் ஏன் சில விஷயங்களை உண்மையென்று அப்படியே நம்பிவிடுகிறோம்


முதல் பாராவில் சொன்னது போல, நம்முடைய அபிப்பிராயங்கள் பெரும்பாலும் அப்படியே ஸ்வீகரிக்கப்படுவது, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படாதது.மனத்தைக் கூர்மையானதாக்க, நம்முடைய அபிப்பிராயங்களையும், இது இப்படித்தான் என்று ஆராயாமலேயே முடிவு கட்டிவிடுகிறோமே, அதையும் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்குங்கள்!


மூன்றாவதாக, எந்த ஒரு விஷயத்தையுமே, எவ்வளவு சாமர்த்தியமான வாதத்திறமையினால் சொல்லப் பட்டிருந்தபோதிலுமே கூட,அப்படியே  உண்மை என்று எடுத்துக் கொண்டு நம்பி விட வேண்டாம்.வாதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கிற காரணங்கள், உள்நோக்கம்  என்ன என்று தேட முயலுங்கள்உன்னதமான வாதத் திறமையினால், மட்டமான கருத்துக்களைக் கூட உண்மையாக்கிவிட முயற்சி நடக்கிறதா என்பதைப் பாருங்கள்


நான்காவதாக, எங்கே வித்தியாசம் நூலிழை மாதிரி ஆரம்பித்துப் பெரிதாகிறது, எப்படி உண்மையல்லாததும், பொய்களும்  உண்மை போலச் சித்தரிக்கப்படுகிறது என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தவறானசெய்திகள், பிழையான செய்திகள், பொய்யான செய்திகள் என்பதில் இந்தப் பொய்யான செய்தி இருக்கிறதே, இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, திரித்துச் சொல்லப்படுபவை. ஆரம்பத்திலேயே இனம் கண்டு பிரித்து வைக்கத் தெரியாவிட்டால், தடம் பிறழ்ந்து உண்மையை விட்டு வெகுதூரம் விலகி விடுவோம்.இந்த தேசத்தின் வரலாறு, இப்படித் தான் கொஞ்ச கொஞ்சமாகத் திரிக்கப்பட்டு, உண்மையல்லாததெல்லாம் உண்மைகளாகச் சொல்லப் பட்டு வருகிற பரிதாபம் போல ஆகி விடும்.


ஐந்தாவதாக, எந்த ஒரு கருத்தின் தாக்கத்தைப் பற்றியும் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் நல்லது. சில விஷயங்கள் மேலோட்டமாக சுவாரசியமாக இருக்கும், ஆனால் சிறிதுகூடப் பயன்படாது. வேறு சில விஷயங்களோ, மிகச் சாதாரணமாக இருக்கும், ஆனால் மிகப் பெரிய உயரத்துக்கு நம்மை இட்டுச் செல்வதாகக் கூட அமைந்துவிடும்



தலைமைப் பண்பு, சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்களை, பதிவுகளைத் தேடித் படிக்கிற பழக்கம் எனக்குண்டு என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் நண்பர் ஒருவர் மார்க் சன்போர்ன் என்பவர் எழுதிய சுய முன்னேற்றக் குறிப்புக்கள், பதிவுகளில் இருந்து இந்தப் பகுதியை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். சுவாரசியமாக இருந்தது. உபயோகமாகவும் இருந்தது என்பதால் இங்கே, கொஞ்சம் விரிவான மொழிபெயர்ப்பாக, எல்லோருக்கும் பயன் படட்டும்என்பதற்காக!

மனமது செம்மையானால்
, மந்திரம் செபிக்க வேண்டா என்று மனம் தன்னுடைய முழு ஆற்றலையும் நல்லவிதம் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த நிலைக்குமுன்னோட்டமாக  இந்த ஐந்து வழிகளைக் கொஞ்சம் கடைப்பிடிக்க முடிகிறதா, உபயோகமாக இருக்கிறதா என்று சொல்லுங்களேன்


போகும் திசை மறந்து போச்சு! இங்கே பொய்யே வேதமுன்னு ஆச்சு!



மும்பை நகரத்தில் பாகிஸ்தானியத் தீவீரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் நடந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.

இதைத் தீவீரவாதிகளின் வெற்றி என்று சொல்வதை விட, பலவீனமான அரசியல் தலைவர்கள், எதற்கெடுத்தாலும் அடித்துக் கொள்வது என்பதைத் தவிர வேறு அஜெண்டா இல்லாத அரசியல் கட்சிகள், ஊழல்மயமான அரசு இயந்திரம், செயல் திறனற்றுப்போன உளவுத்துறை, செயல் பட முடியாத காவல்துறை, இப்படி, நம்மிடம் இருக்கும் பலவீனத்தையே மறுபடி மறுபடி வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிற மாதிரி இருப்பதை எவரும் இங்கு உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏற்கெனெவே, இந்தப் பக்கங்களில், தலைமைப் பண்பு, சீனப் பெருமிதம், விமரிசனம் என்ற தலைப்புக்களில், நேரு, சாஸ்திரி இருவரது முடிவெடுக்கும் திறனைப் பற்றிக் கொஞ்சம் பேசியிருக்கிறோம்.


வெளியே எல்லாத் திசைகளிலும், இந்தியாவுடன் பகைமை பாராட்டும் நாடுகள், ஒவ்வொரு நாட்டிடமிருந்தும் தொடர்ந்து வரும் பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள் என்று ஒருபக்கம், உறுதியான அரசியல் முடிவுகளை எடுக்கத் தைரியமில்லாத, ஆண்மையற்ற அரசியல் தலைவர்கள், ஊழல் மயமாக இருப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும், முன்னெச்சரிக்கை என்றால் என்ன என்று கேட்கும் அரசு நிர்வாகம், காவல்துறை இத்தியாதிகள் இதெல்லாம் ஒருபுறம் என்றால், ஜனங்களுடைய அலட்சிய மனோபாவம், கையறுநிலை, அல்லது தட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கேட்பதும், குட்ட வேண்டிய நேரத்தில் குட்டுவதும் நம் கைகளிலேயே இருக்கிறது என்பதை உணராத பொறுப்பற்ற தன்மையும் சேர்ந்து, இந்த மாபெரும் தேசத்தைத் தலை குனிய வைத்துக் கொண்டிருக்கிறது.


நம்முடைய முன்னுரிமைகள், அல்லது பிரதானமான கவனமெல்லாம் எங்கே இருக்கிறது?


இந்த ஒரு கேள்விக்கு, சரியான பதிலைக் கண்டு கொள்ள முடிந்தாலே, பிரச்சினை என்ன என்பதையும், அதற்குத் தீர்வு என்ன என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?


ஆங்கில ஊடகங்களில் 26/11-மும்பை மீதான போர்! ஓராண்டு நிறைவு என்று கூவிக் கூவிப் பழைய செய்திகளை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூத்துக்களைப் பார்த்துத் தொலைய வேண்டியிருக்குமே என்பதற்காக, வழக்கமாகப் பார்க்கும் செய்தி சானல்களைக் கூட இன்றைக்குப் பார்க்க வேண்டாம் என்றே இருந்தேன்.

வெட்கம் கெட்ட மும்பை அரசும், அரசியல்வாதிகளும், மும்பை மீதான தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செய்வதாக, வீதிகளில் அணிவகுப்பை நடத்தி, தங்களைப் புனிதர்களாக ஆக்கிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் ஆதாயம் ரொம்ப என்றால் ரத யாத்திரையும், கம்மி என்றால் அறிக்கைப் போரும், கேள்விகள் எழுப்புவது மட்டுமே என்று வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கும் அத்வானி பாராளுமன்றத்தில் மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடும், நிவாரணமும் வழங்குவதில் அரசு மெத்தனமாக இருப்பதாகக் கவலை தெரிவித்திருக்கிறார்.

பழைய ஞாபகத்தில் ரத யாத்திரை என்றெல்லாம் கிளம்பிவிடாமல் ஏதோ கேள்வியோடு கவலையை முடித்துக் கொண்டாரே என்பதைப் பாராட்டக் கூட நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மனசு வரவில்லை. பதிலுக்குக் கோபத்தில் கடித்துக் குதறியிருக்கிறார்!

மும்பைத் தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் மரணம் என்றால் மூன்றுலட்சம், வெறும் காயமென்றால் ஐம்பதாயிரம் தான்! இந்த அற்பத் தொகையுமே கூடப் பெரும்பாலானவர்களுக்கு, தாக்குதல்கள் நடந்து ஓராண்டாகியுமே கூட  வழங்கப் படவில்லை என்பது எப்போதும் போல் நடக்கிற கூத்துத் தான்! அதே நேரம், தாஜ் ஹோட்டலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக, இன்ஷ்யூரன்ஸ் தொகை ரூ.167 கோடி வழங்கப்பட்டு விட்டது என்ற செய்தியோடு சேர்த்துப் பார்த்தால் தான், பிரச்சினையைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும்.இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகையில் வந்திருக்கும் செய்தியில் உள்ள நிவாரணம் வேண்டி வந்த மனுக்கள் எண்ணிக்கைக்கும், எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் அதே செய்தியை வெளியிட்டதில் வந்திருக்கும் எண்ணிக்கைக்குமே நிறைய வித்தியாசம் இருக்கிறது.

பாராளுமன்றத்திற்கு வெளியே பிஜேபி கட்சியைச் சேர்ந்த அலுவாலியா, ஐந்து நட்சத்திர ஹோட்டல் தாக்கப் பட்டதினாலேயே, இந்தத் தீவீர வாதிகளுடைய தாக்குதல் பற்றிய செய்தி, மீடியாக்களினால் பரபரப்புச் செய்தியாக்கப் பட்டதாக வருத்தப் பட்டிருக்கிறார்.

பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "காஷ்மீர், சாட்டிஸ்கார், ஆந்திரா, ஒரிசா என்று நிறைய இடங்களில் இந்த மாதிரித் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.ஆனால், மும்பையில் நடந்ததை மட்டும் நீங்கள் பெரிதுபடுத்திப் போடுகிறீர்கள்! காரணம் அது ஐந்துநட்சத்திர ஹோட்டல் தாஜ் மீது நடந்தது என்பதால் தானே?"

அலுவாலியா உண்மையைத் தான் பேசியிருக்கிறார்! தாஜ் ஹோட்டல் மீது அல்லாமல், அன்றைக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினலில் (ரயில் நிலையம்) மட்டுமே தாக்குதல் நடந்திருந்தால், பத்திரிகையாளர்களும், தொலைக் காட்சி ஊடகங்களும் இவ்வளவு பெரிதாக, கோரசாக, ஊது ஊதென்று ஊதியிருப்பார்களா என்பது சந்தேகம் தான்! மும்பையில், ஐபிஎன் அலுவலகம் தாக்கப் பட்டதற்கு ஹிந்து என் ராம் கொதித்தெழுந்தார்!  உள்ளூரில், வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் தாக்கப்பட்ட போதோ அல்லது வேறு அராஜகங்கள் நடந்தபோதோ இதே  கனவான் எல்லாவற்றையும் பொத்திக் கொண்டு  வேறு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்!

என் ராமைக் குறை சொல்லிக் கொண்டு, ஹிந்துவை வாங்காதே, தினமலரை வாங்காதே என்று பானர் தயாரித்துப் போட்டுக்  கொண்டு பதிவுகளில் கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருக்கும் தமிழ் வலைப் பதிவர்களாவது .......ம்ம்ஹூம்!

தாஜ் ஹோட்டல் மாதிரி ஐந்து நட்சத்திரம் கூட வேண்டாம்! நட்சத்திரம் என்று வெறுமே சொன்னால் போதும்! அவர் ரேட் என்ன என்று புவனேஸ்வரி- பெயர் சொல்லி ரேட் நிலவரம் சொல்கிறார்  என்று தலைப்பும்,சும்மா  ஒரு படமும் போட்டால் போதுமே, மொய்த்துவிட மாட்டார்களா!

அவர்கள் வரிசையாக வருவார்கள்! தாக்குதல் நடத்துவார்கள், நாம் இங்கே ஆண்டு விழா மட்டும் கொண்டாடிக் கொண்டிருப்போம். அப்படித்தானே!
சிவசேனாக்காரர்கள் சீரியஸாக ஜோக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்! மும்பைத் தாக்குதலின் ஓராண்டு நிறைவை ஒட்டி, அஜ்மல் அமீர் கசாபைத் தூக்கில் போட வேண்டுமென்று  ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கிறார்கள்! ஏற்கெனவே கசாப் என்ற அந்த பிடிபட்ட தீவீரவாதி, நம்முடைய நீதித் துறையில் உள்ள ஓட்டைகளை வைத்து செம காமெடி பண்ணிக் கொண்டிருந்தது போதாதென்று,இப்போது இந்தக் கோமாளிகளும்....!

சாமீ! புண்ணியவான்களே! எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்! உங்களுக்காவது ஏதாவது திக்கு திசை புரிகிறதா?

சிறிசும் பெரிசும்! ஒரு விமரிசனப் பார்வை!



"கொஞ்சம் சிறுசா பதிவு போட்டதுக்காக ஒரு தடவை படிச்சேன்!" ன்னுட்டு வந்தாரு வால் பையன்! பெருசாப் போட்டப்பல்லாம் ஸ்பீட் ப்ரேகர் மாதிரி இத்தை அஞ்சு பதிவாப் போட்டிருக்கலாம்,  அத்தை ஆறு பதிவாப் போட்டிருக்கலாம்னே சொல்லிட்டிருந்தவரு மொதத் தடவையா ஒரு தபா படிச்சேன்னு சொல்லியிருக்கார் பாருங்க, ரொம்பவே  ஃபீலிங்க்ஸ்  ஆகிப் போச்சு!

படிச்சேன்னு சொன்னதுக்காகவான்னு மட்டும் கேட்டுராதீங்க ப்ளீஸ்!

"வலைப்பதிவு எழுதறவங்க எல்லாம் ஏதோ தெரிஞ்சுக்கணும்னு தேடி வர்றவங்க இல்ல. ச்சும்மா, டைம் பாஸ் பண்றதுக்காக வர்றவங்க, அப்படியே நல்ல மூடுல இருந்தால், விஷயத்தைத் தெரிஞ்சுக்கவும் கொஞ்சம் படிப்பாங்க. அவ்வளவு தான்! இது தெரியாம, நீ என்னமோ, பெரிசா கருத்துக் களம், விவாதக் களம்னு சொன்னாக்க, யார் படிப்பாங்க?"

இப்படி இங்கே இப்போதைக்கு இது போதும்னு முன்னாலேயே எழுதிப் பாத்தது தான்!

"அடிக்கடி வாசிப்பு அனுபவத்தைத் தொட்டு எழுதியிருக்கே இல்லியா? லிடரேச்சர் கிளாசா நடக்குது இங்க?

இணையத்துல வர்றவங்க பெரும்பாலும் வாசிக்கறதுக்காக்ன்னு வரல, பொழுது போக்கத் தான் வர்றாங்க! உண்மையான வாசிப்பு அனுபவம், இன்னும் கூடப் புத்தகங்களில் தான் கிடைக்கிறது. பொழுதுபோக்க இணையத்துக்கு வர்றவங்க, சுவாரசியமா இருந்தா அங்கே இங்கேன்னு கொஞ்சம் வாசிக்கவும் செய்யறாங்கங்கறது உண்மைதான், ஆனாலும் இன்னும் பரவலாகவில்லை."

இதுவும் அங்கேயே சொன்னது தான்! சிறுசா எழுதினப்பக் கண்டுக்காதவங்க, பெருசா உண்மைத் தமிழன் ரேஞ்சுக்கு எழுத ஆரம்பிச்சப்பத் தான் கவனிக்கவே ஆரம்பிச்சாங்க! நம்ம சந்ரு இருக்கார் பாருங்க, இவரு  விவாதம் பண்ணலாம்  வாங்கன்னு ஒரு பதிவுல கூப்பிட்டதுமே "இதோ வந்துட்டன்"ன்னு வந்து குதிச்சாருங்க! கமென்ட் மாடரேஷன் இருக்குன்னதும், அப்புறம் இந்தப் பக்கம் வந்து கருத்து எதுவும் சொல்றது இல்லை!

அப்புறம் வேறொரு பதிவுல, வால் பையன் வந்து ஒரு பின்னூட்டமிட்டார்.அதற்கும் அங்கே பதில் சொன்னேன்

னக்கு பள்ளி நாட்களில் ஒரு தமிழ் வாத்தியார் இருந்தார்.

கஷ்டப்பட்டு, நெட்டுருப் போட்டுப் படித்ததைத் தேர்வில் யோசித்து யோசித்து விடையாக எழுதினால், பாவி வாத்தியான் என்ன எழுதியிருந்தது, சரியா தவறா என்று கூடப் பார்க்காமல், விரற்கடையால் அளந்து குத்து மதிப்பாக மார்க் போடுவார் என்ற ரகசியம் பின்னாட்களில் தெரிந்தது. ஒருக்கால் அந்த தமிழ் வாத்தியாருடைய பாதிப்பாகக் கூட இருக்கலாம்!

பதிவுலகிலும் அந்த மாதிரி பதிவைப் படிப்பதற்கு முன்னால், அது எத்தனை மீட்டர் நீளம் என்று பார்த்து, அதற்குப் பின்னால் படிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்கிற வாத்தியார்கள் நிறைய இருக்கிறார்கள் போல!

மேலே வால்பையனுடைய பின்னூட்டத்திற்கும், இங்கே சொல்லப்பட்ட பாவி வாத்தியான் கதைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை! சம்பந்தம் இல்லை!! சம்பந்தம் இல்லை!!!


இப்போதும் கூட போன பதிவுக்கு வால்பையன் வந்து போட்ட சுருக்கப் பின்னூட்டத்திற்கும் இந்தப் பதிவுக்குமே கூட உண்மையிலேயே சம்பந்தம் இல்லை! இப்படியெல்லாம் பழைய கதையைக் கிளறுவதற்கு என்ன காரணம்? என்ன அவசியம் என்கிறீர்களா?

சேத் கோடின் எனக்குப் பிடித்த பதிவர் என்பதை முன்னமேயே  ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன்! இன்றைக்கு ஒரு பதிவில் "நறுக்'கென்று நாலே நாலு வரியில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.

இப்போதெல்லாம் பதிவுகளையும், புத்தகங்களையும்  நிறையப் பேர் வந்து படிக்கிறார்கள். அறிவுபூர்வமாக சிந்திக்கும் ஆவலோடு இருக்கிறார்கள். அறிந்துகொள்ளும் தாகத்தோடு இருக்கிறார்கள். புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள், முக்கியமானவேலையைச் செய்யவும் முற்படுகிறார்கள்.

எது முந்தி வருகிறது? ஆவல்? அல்லது வெற்றி?

சேத் கோடினுக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள்  கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாதிரிப் புத்தகங்களை, பதிவுகளைப் படிக்க வரும், சிந்திக்கத் தயாராகவும், புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடனும் இருக்கும் வாசகர்களைத் தமிழ்  வலைப் பதிவுலகம் 
எப்போது சந்திக்கும்?

அப்படிப் பட்ட வாசகர்களை உருவாக்கும் பதிவுகளும் புத்தகங்களும் எப்போது வரும்?

இந்த சிந்தனை இப்போது மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது!

உங்களுக்கு ஏற்கெனெவே இதுபற்றி இன்னும் அதிகமான, பயனுள்ள விவரங்கள் தெரிந்திருந்தால், பகிர்ந்துகொள்ளலாமே!

அப்புறம் சேத் கோடின் எழுப்பியிருந்த கேள்வி எது  முந்தி வரும் -ஆவல்? வெற்றி?  இதற்கு இங்கே இன்னும் ஒரு அழகான பதில் இருக்கிறது.


ஆவல் கொள்வது மட்டுமே வெற்றியாகி விடுவதில்லை! ஆவலுக்கும் வெற்றிக்கும் நடுவில் நடைமுறைக்குக் கொண்டு  வருவது என்ற முக்கியமான விஷயம் இருக்கிறது! பின்னூட்டங்களில், யோசிக்கும், கருத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் ஆரோக்கியமான விவாதமும் இருக்கிறது. இந்தப் பக்கங்களிலும் அந்த நாள் எப்போவரும் ?


oooOooo



மும்பை மீது தீவீரவாதிகள் நடத்திய தாக்குதல் நடந்து ஓராண்டாகிறது!

அரசு, அரசியல்வாதிகள் ஏன் ஜனங்களுமே கூட இன்னமும் விழித்துக் கொள்ளவில்லை. ஓட்டுக்காக, எதைவேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் சிறுமதி கொண்டவர்கள் நாட்டின் தலைவர்களாம்!தாஜ்  ஹோட்டலுக்கு 167 கோடி ரூபாய்கள் நஷ்ட ஈடாக இன்ஷ்யூரன்ஸ் கிடைத்து விட்டது. சத்ரபதி சிவாஜி டெர்மினலில் கொல்லப் பட்ட  சாதாரண ஜனங்களுடைய உயிர்களுக்கு எந்த மதிப்புமே இல்லாமல் போய் விட்டது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்ட போது, அந்த வெடி விபத்தில் பலியான காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இன்னமும் உரிய கௌரவமோ, நஷ்ட ஈடோ கொடுக்கப் படவில்லை. கல்லடி பட்ட பஸ் டிரைவருக்குக் கூடப் பத்து லட்சம் நிவாரணம் வேண்டும் என்று கூவும் சங்கங்கள் உண்டு. ஆனால், கடமையில் உயிர் துறந்த வீரர்களுக்கும், தீவீர வாதத்தில் பலியாகிக் கொண்டே இருக்கும் சாதாரண ஜனங்களுக்கும் எந்த மரியாதையும்கிடையாது!




என்ன தேசம் இது?



இருளில் இருந்து இந்த தேசத்தை விடுவிப்பாய்!