படித்ததும், படித்ததில் பிடித்ததும், பதிவர்களும்!


இது ஒரு மீள்பதிவுதான்!

தமிழ்ப் பதிவுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோது, கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தவர்கள் திரு.டோண்டு ராகவனும்,கிழக்கு பத்ரியும். இரண்டுபேருமே, கொஞ்சம் வித்தியாசமான பாதையில் பதிவுகளை எழுதிக் கொண்டிருப்பவர்கள். தனக்கு ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தைப் பற்றி டோண்டு ராகவன் சார் எழுதி வந்ததில் போலி டோண்டு விவகாரம் குறித்தும் யோம் கிப்பூர் என்ற யூதப் பண்டிகையை, அவர் தன் சொந்த மனநிலைக்குத் தகுந்த மாதிரியும் எழுதிய அத்தனை பதிவுகளையும் படித்து வந்த நேரம்.

தனக்குச் சரி என்று படுவதை நேருக்கு நேர் சொல்கிற விதமும், யாராவது வசை பாடினால், போடா ஜாட்டான் என்று அலட்சியப்படுத்திவிட்டுத் தன்னுடைய வேலைகளைக் கவனிக்கப் போய்விடுகிற தன்மையும், போலித்தனம் இல்லாத ஒரு முகத்தைக் காட்டியது.

அதே மாதிரி எண்ணங்கள் என்ற தலைப்பில் கிழக்கு பத்ரி எழுதிவரும் பதிவுகளுமே கவனத்தை ஈர்த்தன.பத்ரியிடம்  அவருடைய தொழில்நுட்ப அறிவு, எல்லாவிஷயங்களையும் தொட்டு எழுதுவதில் இருக்கும் வல்லமை, அத்தனையையும் மீறின ஒரு செயற்கைத்தனத்தைக் காட்டிக் கொண்டிருப்பதாகவே எனக்குப் பட்டது. இந்த இருவருமே ஆரம்ப காலங்களில் இருந்தே தமிழில் எழுதிக் கொண்டிருப்பவர்கள், தங்களுடைய ஜாதியினால் தமிழில்  இணையதள வன்முறைக்கு, வெறுப்பு உமிழும் ஆபாசக் கண்டனங்களுக்கு  ஆளானவர்கள் என்பது ஒருபக்கம். எதிர்கொண்டவிதம் இன்னொருபக்கம்.இப்படி இரண்டுவிதமான நேரெதிர் திசையில் பயணிக்கும் பதிவர்களைக் கொஞ்சம் ஆச்சரியத்தோடு படித்த்துக் கொண்டிருந்த தருணங்களில், எழுதிய பதிவு இது.

இப்போது நம்ம வால்பையன் மொக்கைப் பதிவுகளில் இருந்து அறிவியல்தனமாகவும் பதிவிட ஆரம்பித்து, கடவுள் இல்லை என்று நிரூபிக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் அல்லவா? அதற்குமே கூட, பதில் இங்கே இந்தப் பதிவில் ஒரு கோடி காட்டுவதாக இருக்கிறது.

பதிவர் வட்டத்தில் படித்ததும், பிடித்ததுமாக முந்தைய பதிவில் ஆரம்பித்து வைத்ததன் தொடர்ச்சியாக இதையும் எடுத்துக் கொள்ள முடியும்.

“All problems of existence are essentially problems of harmony”

-Sri Aurobindo


திரு டோண்டு ராகவன் அவர்களது வலைப் பதிவு- யோம் கிப்பூர் என்ற தலைப்பில்  எழுதிய பதிவுகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்த போது, திரு பத்ரி சேஷாத்ரி எழுதிய இந்தப் பதிவு குறுக்கே புகுந்து சிந்தனையோட்டத்தில் ஒரு புது வரவாக இருந்தது.

இங்கே அதைப் படிக்கலாம்

இவனுடைய மூத்த சகோதரர்களில் இரண்டாமவர், பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். இரவு தூங்கப் போவதற்கு முன்னால், அண்ணன் தம்பிகள் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டுத் தான் தூங்கப் போவோம். ஒரு அண்ணன் என்று மட்டும் இல்லாமல், ஒரு ஆசானாகவும் இவனுக்கு நிறையக் கற்றுக் கொடுத்த நாட்கள் அவை. அப்படி ஒரு நாளில், ஒரு பிரெஞ்சு உயிரியல் பேராசிரியர் எழுதிய ஒரு ஆய்வுப் புத்தகம் ஒன்றைப் பற்றிப் பேச்சு வந்தது phénomène of man என்பது புத்தகத்தின் பெயர் என்பது நினைவுக்கு வருகிறது. இந்த நூலில், எப்படி உயிர் தோன்றியது என்பதை மிக ஆழமாகச் சொல்லியிருப்பார். ஒரு செல் என்பதாகத் தொடங்கி அது தன்னைத் தானே இரண்டாகப் பகுத்துக் கொள்வதில் இருந்து பரிணாம வளர்ச்சி எப்படி விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதை ஒரு விஞ்ஞானப் பார்வையில் சொல்லியிருந்தாலும், புத்தகத்தைப் படிக்கும் போது ஒரு ஆன்மீகச் சிந்தனையோட்டமே வெளிப்படுவதாக இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.

ஒரு விஞ்ஞானப் பார்வையில், உயிர் என்பது உருவானதே ஒரு விபத்து தான், எப்படி, நத்தைச்சிப்பிக்குள், ஏதோ ஒரு தூசு புகுந்துகொள்ள அதைச் சுற்றி அந்த நத்தை உருவாக்குவதே முத்து என்பது போல, இந்த பூமியில், ஏதோ ஒரு விபத்தாக அல்லது திட்டமிடாத, காரணமில்லாத, தற்செயலான ஒன்றாக உருவானதுதான் உயிர். இதைப் படைத்தவன் என்று ஒருவனும் இல்லை, இதற்கு மேல் ஒன்றுமில்லை என்று ஒரு வெற்றிடத்தைமுன்வைக்கிறது.

சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்தே மனிதன் இந்த கேள்விகளைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான். எத்தனையோ விடைகளைப் பார்த்தாயிற்று, ஆனாலும் இந்தக் கேள்விக்கு உண்மையான விடை இன்னமும் கிடைக்கவில்லை. கேள்விகள் கேள்விகளாகவே இருந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்த உலகமும், உயிரும் படைக்கப் பட்டது ஒரு தற்செயலான விபத்து இல்லை. இவைகளைப் படைத்தவன் ஒருவன் இருக்கிறான். இந்தப் படைப்புகளுக்குள்ளும், வெளியிலுமாக பரந்து விரிந்திருக்கிறான். படைக்கப் பட்ட அனைத்திலும் அவனிருக்கிறான்; அது போலவே படைக்கப் பட்ட எல்லாமும் அவனது சரீரமாகவும் இருக்கின்றன. இதை உள்ளே உணர்ந்து ஆன்மீக நெறியாக, கால காலமாக மனிதனுக்கு உணர்த்தப் பட்டிருக்கிறது.

அறிவியல் ஒரு எல்லைக்குட்பட்ட அளவீடுகளை பயன் படுத்துகிறது,வெளிப்படையாக தெரிபவை மட்டுமே உண்மை என்று சொல்கிறது, நேற்று சரியாக இருந்த அளவீடுகள் இன்று ஏற்புடையதாக இல்லாமல் போய், மறுபடி வேறு ஒரு அளவீடுகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு புதிய முடிவைச் சொல்கிறது.

இந்த நேரத்தில் ஸ்ரீ அரவிந்த அன்னை, அனுபவங்களைப் பெறுவது தொடர்பாகச் சொன்ன ஒன்று இந்த விஷயத்தில் மிகப் பொருத்தமாக இருக்கும்.

"So it is a vast programme. The first steps are these: to collect oneself, try to be very quiet and see what is happening within, the relations between things, and what is happening inside, not just live only on the surface.

There. That's all?"


-The Mother, 

Collected Works of the Mother, Vol. 7, pp.77-80.

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

வேதம் தமிழ் செய்த மாறன் அருளிச் செய்த இந்த பாசுரங்களைப் பாருங்களேன்.


இந்த வலைத்தளத்தில்  முனைவர் திரு நா.கண்ணன் இந்த பிரபஞ்சம் படைக்கப் பட்டது எப்படி, பரிணாம வளர்ச்சி இவற்றைப் பற்றி, ஆழ்வார்களுடைய அருளிசெயல்களில் இருந்து மிக அழ்காக விவரித்திருக்கிறார்.

ஆத்திகனோ, நாத்திகனோ, இரு தரப்புமே ரொம்பவும் அலட்டிக் கொள்வதில்லை. எதையும் ஏற்றுக் கொள்வதற்கும் நிராகரிப்பதற்கும் கூடத் தங்களுடைய முயற்சி கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.

யாராவது எதையாவது சொல்லி விட்டுப் போனதை, அப்படியே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது தான் மிக சுலபமான வழியாக இருதரப்பினருக்குமே இருப்பது தான் விந்தையிலும் பெரிய விந்தை.

திரு M.P பண்டிட்அவர்கள் ஒரு இடத்தில், சிலர் பக்தி என்கிற பெயரில் சோம்பேறிகளாக இருப்பதைப் பற்றியும், ஸ்ரீ அரவிந்த அன்னை வேலை எதுவானாலும், அதுவே இந்த சரீரம் இறைவனுக்குச் செய்கிற மிகப் பெரிய வழிபாடு என்று சொல்லியிருப்பதையும் இன்றைய தியானத்திற்கு எடுத்துக்கொள்வோமா?

“As both Sri Aurobindo and Mother point out, repeatedly, most of us are an idle lot. Under the cover of devotional surrender, we want God to do everything for us. But God would appreciate at least a minimum enabling effort on our part. In the measure in which we apply ourselves in this direction, the real meaning of life becomes evident."

-Shri M.P.Pandit

“Let us work as we pray, for indeed work is the body's best prayer to the Divine”

-The Mother


****** 
தமிழ் வளர்த்த சுத்தானந்த பாரதிக்கு மரியாதை இல்லை! ஜெமினி கணேசனுக்குத் தபால் தலை!

இப்படி ஒரு நியாயமான மனக்குமுறலை நீண்ட நாட்களுக்கு முன்னால், என்னுடைய ஆதங்கத்தோடு சேர்த்தும் இந்தப் பக்கங்களில் பதிவு செய்திருந்தேன். காந்தியையே மறந்த தேசம்! ஏதோ ரூபாய் நோட்டில் படம் போட்டிருக்கிறார்கள் என்பதால் மட்டுமே முகமும் பெயரும் தெரிந்து வைத்திருக்கிற காலமாகிப் போனதே என்ற குமுறல் இருக்கத் தான் செய்கிறது.

கவியோகி சுத்தானந்த பாரதியாரைப் பற்றிய செய்திக் குறிப்புக்களை, அவரது பெண் வயிற்றுப் பெயரன் ஜெய.சந்திரசேகரன் மின்தமிழ் வலைக் குழுமத்தில் சிறிது சிறிதாகப் பகிர்ந்து கொண்டு வருகிறார். தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப் பக்கங்களில் இன்று, சுத்தானந்த பாரதியாரைப் பற்றிய மூன்று ஒலிக் கோப்புக்கள் வலையேற்றம் கண்டுள்ளன.
கவியோகி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாடல்கள்:


-பகுதி 1: கவியோகியின் குரலில் விளக்கம்; கவியோகியின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்திலும் தமிழிலும். இதனைக் கேட்க

-பகுதி 2: கவியோகி பாடல்கள்

-பகுதி 3: கவியோகி பாடல்கள்


இவற்றை த.ம.அறக்கட்டளை வெளியீட்டுக்காக வழங்கியவர் கவியோகி அவர்களின் பேரன் திரு.சந்திரசேகர் அவர்கள்.

நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது! சுத்தானந்தம் பெருகுது!
நல்ல தமிழ்ப் பாடல் தந்த கவியோகியின் வாழ்க்கையைக் கேட்கலாம்!
நல்லதமிழ் பாடல்களைப் பாடவும் கேட்கலாம்! சுத்தானந்தம் பெருகுது!


தமிழ் மரபு அறக்கட்டளைப் பக்கங்களில் இருந்து நன்றியுடன் எடுத்தாளப் பட்டது.4 comments:

 1. நல்ல பதிவு , நன்றி அய்யா.

  ReplyDelete
 2. மீள் பதிவு என்பதையே நம்ப முடியவில்லை என்னால்:))

  என் இடுகைக்கு, அதில் இடைவெளிகளை நிரப்ப வந்த இடுகையாகவே தெரிகிறது.

  நன்றியும் வாழ்த்துகளும்..

  ReplyDelete
 3. இது மீள் பதிவா!?


  கடைசியா எழுதிய பதிவோட லிங்க் இருக்கே!

  நா.கண்னன் வலைப்பூவிற்கு நன்றி!

  ReplyDelete
 4. வால்ஸ்!
  மீள்பதிவுதான் என்று ஆரம்பித்து எழுதின பின்னாலும்,, அதன் சுட்டியைக் கொடுத்தபின்னாலும், மீள்பதிவா என்று கேட்கிற கொடுமை இருக்கிறதே.....!
  ஆனால், நீங்கள் படித்திருக்க முடியாது! ஜனவரியில் எழுதினது, அன்றைக்கு எனக்கு இருந்த வாசகப்பரப்பு, இப்போதிருப்பதை விடக் குறைவு. இன்றைய சூழலுக்கும், உங்களுடைய கோள்களும் மோதலும் பதிவுக்குக் கொஞ்சம் விடை சொல்வதாக இருந்ததாலேயே, மீள்பதிவானது!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!