தலைவர்கள் வெறும் கனவு காணுகிறவர்கள் மட்டுமில்லை! வழி நடத்துபவர்கள்!
சில வாரங்களுக்கு முன்னால், ஜின்னாவுக்கு வந்த வாழ்வு என்ற தலைப்பில், ஜஸ்வந்த் சிங் ஜின்னாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதப்போக, அதை வைத்தே பிஜேபி கட்சி பற்றி எரிந்ததை காங்கிரஸ் கட்சி ஈ என்று இளித்துக் கொண்டு தங்கள் கட்சி என்னவோ பெரிய ஓவியம் மாதிரி நினைத்துக் கொண்டிருந்ததை இந்தப் பக்கங்களில் எழுதியிருந்தேன்.


ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்று ஒரு வழக்குச் சொல்லைக் கேட்டிருக்கிறீர்களா?


இப்போது ஆந்திராவிலும் மகாராஷ்ட்ராவிலும் காங்கிரஸ் கட்சியில் நடக்கும் கூத்துக்கள், கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாவுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைப் பார்த்துக் கெக்கலி கொட்ட முடியாதபடி, ரொம்பவுமே கேவலமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
"எந்த ஒரு கட்சிக்கோ, கூட்டணிக்கோ தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் யார் ஆட்சியமைப்பது, எப்படி ஆட்சி அமைப்பது என்கிற குழப்பம் ஏற்படுவதும், ஓர் ஆட்சி பதவி ஏற்பதில் தாமதம் ஏற்படுவதும் ஏற்புடையது. ஆனால், தேர்தலுக்கு முன்பு அமைந்த கூட்டணியாகக்கூட அல்ல, கடந்த பத்து ஆண்டுகள் தொடர்ந்து கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி மக்களின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிறகும், மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசு இன்னும் பதவி ஏற்காமல் இருப்பதை நினைத்து ஆச்சரியப்படுவதா இல்லை இது என்ன கூட்டணி என்று எள்ளி நகையாடுவதா என்று தெரியவில்லை."


தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஆட்சி அமைக்க அழைப்பும் அனுப்பப்பட்டுப் பத்து நாட்கள் ஆன நிலையிலும் யார் யார் எந்த இலாகாக்களைக் கைப்பற்றுவது என்ற பிரச்சினையில் முடிவு ஏற்படாத நிலையில், கவர்னர் விடுத்த அழைப்பு காலாவதியாகிப்போய் விடுகிற சூழ்நிலையில், மகாராஷ்ட்ர கவர்னர் ஒரு சமரசத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். . தினமணி தலையங்கம் மேலும் சொல்கிறது:


"எந்தவித சமரசமும் ஏற்படாத நிலையில், இனியும் பதவி ஏற்றுக்கொள்ளாமல் போனால் நகைப்புக்கு இடமாகிவிடும் என்பதால் முதல்வரும், துணை முதல்வரும் மட்டும் இன்று பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார்கள். அமைச்சரவை பற்றிய முடிவுகள் இன்னும் எத்தனை நாள்கள் இழுத்தடிக்குமோ யாருக்குத் தெரியும்?"


காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் தருணங்களில், கவர்னராக இருப்பவர்கள் இன்னும் என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது!


அங்கே ஆந்திராவில், ராஜசேகர ரெட்டி விபத்தில் செத்துப்போனார். ஜல யக்னம் என்ற பெயரில், வரண்டு கிடக்கும் பகுதிக்கெல்லாம் கிருஷ்ணா நதித் தண்ணீரைத் திருப்பிவிடும் மிகப்பெரிய திட்டம் ரெட்டிகாருவின் சாதனையாகப் பீற்றிக் கொள்ளப்பட்டது.. சென்ற மே மாதம் நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மக்கள் மறுபடியும் காங்கிரசுக்கே ஓட்டுப்போட்டார்கள். இப்போது சமீபத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளமும் பொருட்சேதமும் ரெட்டிகாருவின் ஊழல், சாதனைத் தம்பட்டத்தை விடப் பெரியது என்பதைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.


என்றென்றும் அன்புடன் பாலாவின் வலைப் பக்கங்களில் இந்தக் கொடுமையைப் பற்றி விரிவாகச் சொல்லியிருப்பதையும் முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். ராஜசேகர ரெட்டியின் மகனை முதலமைச்சராக்க வேண்டும் என்று ஆந்திர சட்டசபை உறுப்பினர்கள் ஒரு புதுமையான காங்கிரஸ் டைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆதரவாளர்கள் பட்டியல், பேரணி இதையெல்லாம் கட்சி மேலிடம் பொருட்படுத்தவே இல்லை. அதனால், அமைச்சரவையில் உள்ள ராஜ சேகர ரெட்டியின் ஆதரவாளர்கள், முதலமைச்சரோடு "ஒத்துழையாமை" போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்!


அரசியல் சாசனமும், அரசியல் நெறிகளும் காங்கிரஸ் கட்சி ஆளும் தருணங்களில் எப்படிக் காற்றோடு பறந்து போய்விடும் என்பதைப் பாருங்கள்!


ஆந்திர முதலமைச்சர் ரோசையா பாவமோ இல்லையோ, இந்த மாதிரி உத்தமமானவர்களை" தேர்ந்தெடுத்த ஆந்திர தேசத்து ஜனங்கள் பாவம் தான்! நாலாவது தூண் திரைப்படத்தில் கதாநாயகன் சிரஞ்சீவி வில்லனை எப்படி மதியூகத்தால் வெற்றிகொள்கிறார் என்பதை வெள்ளித்திரையில் பார்த்து மகிழ்ந்து கைதட்டி விசில் அடித்து, கட் அவுட்டுக்குப் பாலபிஷேகமேல்லாம் செய்துவிட்டு, உள்ளதையும் இழந்துவிட்டு நிற்பவர்களை என்னவென்று சொல்வது?


ஏற்கெனெவே நொந்து நூலாகிக் கிடக்கும் ஜனங்களை வெறுப்பேற்றுகிற மாதிரி ஆந்திராவிலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் பத்திரிகைகள் தேர்தல் சமயத்தில் கணிசமான விலையை வாங்கிக் கொண்டு, வஞ்சகமே இல்லாமல் இந்த மாதிரி உத்தமர்களுக்குச் சாதகமாக செய்திகளை வெளியிட்டிருப்பதாக, ஹிந்து பத்திரிகைக்கு திடீர் ஞானோதயம் வந்து செய்தி வெளியிட்டிருக்கிறது!


இந்தச் செய்தியையுமே நாலாவது தூண் பதிவில் சுட்டிகளோடு சொன்னது தான்! ஒரு விழிப்பு வருகிறவரை, தொடர்ந்து சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும். விழிப்பு வந்த பிறகு, அதற்கு அவசியம் இல்லாமல் போய்விடும் என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை.


இந்த விமரிசனத் தொடரில் தொடர்ந்து முன்வைக்கிற கருத்தோட்டம் ஒன்றே ஒன்றுதான்!


ஒரு சில நேரங்களில் தவறான முடிவுகளை எடுக்க நேரிடுவது இயற்கைதான்! ஆனால் தொடர்ந்து தவறான முடிவுகளையே எடுத்துக் கொண்டிருப்போம் எனக் கங்கணம் கட்டிக் கொண்டது போல, இருக்க வேண்டாமே என்பது தான். இதை இப்போது புதிதாகச் சொல்லவில்லை. ஏற்கெனெவே இந்தப் பக்கங்களிலேயே இப்படி சொன்னது தான்:


"காங்கிரஸ் கலாசாரம், இந்த நாட்டை மட்டுமல்ல, பதவியைக் கொஞ்சமாவது அனுபவித்துப் பார்த்திருக்கிற அத்தனை பேரையுமே சீரழித்திருக்கிறது. ஒரு தனி நபரின் ஆளுமையை மட்டுமே நம்பிச் செயல் படுகிற அரசியல் கட்சிகள், தாங்கள் சீரழிந்ததுடன், இந்த நாட்டையுமே சீரழித்துக் கொண்டிருக்கின்றன.
காங்கிரசுக்கு, நேரு குடும்பத்தை விட்டால், வேறு தனியான முகம், அடையாளம், பலம் என்பது கிடையாது. நேரு என்ற தனிநபரை மட்டுமே நம்பினதால், கட்சி மட்டுமல்ல, இந்த தேசமும் அனுபவித்து வருகிற பிரச்சினைகள் எப்போதுமே அவர்களுக்குப் புரியாது. முதுகெலும்பு, சுய சிந்தனை, எதுவுமே இல்லாமல், நேரு குடும்பம் பதவி வாங்கிக் கொடுக்கும் வரை மட்டுமே, ஒட்டிக் கொண்டிருக்கும் நபர்களால் ஆனது காங்கிரஸ்.
மாற்றாக ஒன்று வளரவில்லை என்பதாலேயே, இன்னமும் உயிரோடிருக்கும் கட்சி அது!".காந்தி முதலான தன்னலம் இல்லாத தலைவர்களால் வழிநடத்தப்பட்ட ஒரு கட்சி, குறுகிய காலத்திலேயே கோணல்புத்திக் காரர்களிடம் சிக்கிக் கொண்டது எப்படி? இந்தக் கோமாளிகளிடம் நாம் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருப்பதும் எப்படி-புரிந்து கொள்கிற வரை, பழைய சம்பவங்களைத் திரும்பத் திரும்ப ரீவைண்ட் செய்து பார்ப்பது தவிர்க்க முடியாது தான்!


அக்டோபர் 31, இந்திரா காந்தி தன்னுடைய காவலர்களாலே படுகொலை செய்யப்பட்ட நாளை, பயங்கரவாத எதிர்ப்பு நாளாகக் காங்கிரஸ் அரசு ஒவ்வொரு வருடமும் அனுசரித்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக, எழுதி வைக்கப்பட்ட வாசகங்களைத் திருப்பிச் சொல்வதுடன் அந்த சாங்கியமும் முடிந்து விடும்! காங்கிரஸ் கட்சியும் அரசும், பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளும் உறுதியின் லட்சணம் அவ்வளவு தான்!


பயங்கரவாதத்தை உறுதியோடு எதிர்த்து நின்ற இன்னொரு காங்கிரஸ் தலைவரின் பிறந்தநாளும் கூட அக்டோபர் முப்பத்தொன்று தான்! சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை காங்கிரஸ் கட்சி நினைவு வைத்திருக்கிறதா என்பது கூட சந்தேகமே! குஜராத்தில் பிறந்த படேலின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கிற மாதிரி இருக்கிறது என்று ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்தைத் தடை செய்ததே, நரேந்திர மோடியின் அரசு, அவர்களாவது மண்ணின் மைந்தருக்கு சிறப்பான நினைவு நாளாகக் கொண்டாடினார்களா என்று செய்திகளில் தேடிப்பார்த்தால், அங்கேயும் காணோம்!


எழுத்தாளர் ஜெயமோகனின் பக்கங்களில், சர்தார் வல்லபாய் படேலைப் பற்றிய ஒரு சொற் சித்திரம் இப்படி வந்திருக்கிறது. படித்துப்பார்க்கவேண்டிய, மிக அருமையான கட்டுரை!"இந்தியா இந்துக்களாகவும் முஸ்லீம்களாகவும் பிரிந்து பெரும் கலவரங்கள் நடந்துகொண்டிருந்தன. இந்திய மாகாண அரசுகள் கலைக்கப்பட்டிருந்தமையால் மாகாண காவல்துறை ஒருங்கிணைக்கப்பட்டிருக்கவில்லை. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் இந்திய ராணுவம் மதவாரியாக கன்னாபின்னாவென்று பிரிக்கப்பட்டு அதை நடத்திய வெள்ளையத் தளபதிகள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி  முற்றிலும் கட்டுக்கோப்பில்லாமல் இருந்தது.மேலும் சம்ஸ்தான மன்னர்களுக்கு அவர்கள் கையில்  சுதந்திரம் கொடுத்துவிட்டுப்போகும் பிரிட்டிஷாரின் முடிவால் நாட்டில் உள்ள பல மன்னர்கள் பிரிந்துபோகும் முடிவில் இருந்தார்கள். கஜானா கிட்டத்தட்ட காலியாக இருந்தது. நிர்வாகத்தில் உதவ  அரசியல் பின்னணி உடைய எவரும் இருக்கவில்லை. ஒட்டுமொத்தமாக நாடே ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத, மையமில்லாத, துண்டுகளாக சிதறிக்கிடந்தது


அந்நிலையில் ஆறு மாதத்தில் அனைத்தையும் கட்டுக்க்குள் கொண்டு வந்து, மாபெரும் மக்கள்தொகையும் ஏராளமான பேதங்களும் கொண்ட இந்த பிரம்மாண்டமான தேசத்தை ஒரு வலுவான அமைப்பாக ஆக்கிய வல்லபாய் பட்டேல் இன்றுவரை உலகம் கண்ட மகத்தான நிர்வாகிகளில் ஒருவர் என்பதை கொஞ்சம் வரலாறு அறிந்த எவரும் உணரமுடியும். மிகமிகக் குறைவான வன்முறையுடன், அனேகமாக மக்கள் மீது சிறிய தாக்குதல்கூட இல்லாமல், அதை நிகழ்த்தினார் பட்டேல்.”.


எப்படிப்பட்டவர்கள் தலைவர் அக வேண்டும்? தலைவர் என்று அழைக்கப்பட உண்மையிலேயே தகுதி உள்ளவர்கள் எவர் என்பதைக் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? எப்படிப்பட்டவர்கள் இன்றைக்குத் "தலைவர்களாகி" நாட்டை நலியச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் யோசிக்க வேண்டாமா?


வெளிப்பகையைச் சமாளிப்பது எளிது! நேருவால் எடுக்க முடியாத தெளிவான முடிவை சாஸ்திரியால் எடுக்க முடிந்தது! வெளியில் இருந்து வந்த அச்சுறுத்தலைச் சமாளித்து வெல்லவும் முடிந்தது.


உள்ளேயே இருக்கும் பகையைக் கண்டறிவதும், களையெடுப்பதும் கொஞ்சம் கடினமான வேலை. ஆனாலும் செய்துதானே ஆக வேண்டும்!

3 comments:

 1. உங்கள் பதிவுகள் அத்தனையும் நூறு சதவீதம் சத்தியமான உண்மை.

  யார் கொடுத்த சாபமோ? தெரியவில்லை, இந்தியாவில் ஆளுகிறவர்கள் எல்லோரும் வெட்கங்கெட்ட வியாபாரங்களில் தான் ஈடுபட்டு வருகிறார்கள். ஈயத்தை பார்த்து பித்தளை இளித்த கதை போல ஒருவரை ஒருவர் தாழ்த்தி பேசிக் கொண்டு இந்த அரசியல் கட்சிகள் இந்தியாவின் பொது வாழ்க்கைத் தரத்தை நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

  அஷ்வின் ஜி
  www.vedantavaibhavam.blogspot.com
  பிரபஞ்சத் துகளில் ''நான்'' யார்?

  ReplyDelete
 2. அஷ்வின் ஜி,
  இது யார் கொடுத்த சாபமும் இல்லை. இந்த இழிநிலை நாமே தேடிக் கொண்டது தான்!
  கடந்ததைப் பேசுவது, சரிசெயதுகொள்ளவேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது என்பதை வலியுறுத்துவதற்காகவே!

  எந்த இடத்தில் சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டுமோ, அங்கே அப்படி நடந்துகொள்வதில்லை. எந்த இடத்தில் உறுதியோடு எதிர்த்து நிற்க வேண்டுமோ அங்கே உறுதியோடு இருப்பதும் இல்லை. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!