"கதை எழுத ஆரம்பிக்கும் போதே, ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைந்தது மூன்று திருப்பங்களையாவது வைத்துவிடுகிறார். கதையின் பிளாட் என்ன என்பதை நடுவிலேயே இந்தக் கதையில் மொத்தமாகவே சொல்லி விடுகிறார். வித்தியாசமான பாத்திரங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கதைக்களங்கள், என்று தேர்ந்த நெசவாளி சின்னச் சின்ன இழையாகப் பின்னிப் பின்னி ஒரு பட்டுப் புடவையை நெய்வதுபோல, கதையை கண்முன்னால் நிகழ்கிறமாதிரிக் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்...................திருப்பம், திருப்பத்திற்குத் திருப்பம், திடீர்த் திருப்பம், அதிரடித் திருப்பம் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அந்த ஒரு சுவாரசியத்தை, படிக்க வருகிறவர்களைக் கட்டிப்போடுகிற ஜாலத்தை எண்டமூரியின் அத்தனை கதைகளிலுமே பார்க்கலாம்.எண்டமூரி சுவாரசியத்திற்கு நான் காரண்டீ! போதுமா! "
எண்டமூரி வீரேந்திரநாத் என்ற அருமையான கதை சொல்லியின் திறமையை வியந்து எழுதிய வார்த்தைகள் அவை! கதை சொல்கிற நேர்த்தி, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு இப்போது மறுபடி படிக்க ஆரம்பித்தபோதும் மனதைக் கொள்ளை கொள்வதாக இருக்கிறது.
எண்டமூரி வீரேந்திரநாத் எழுதி, சுசீலா கனக துர்க்கா மொழிபெயர்ப்பில் வெளியான "நியாயத் தீர்ப்பு "என்று ஒரு புத்தகம். மூன்று குறுங்கதைகள். இதுவும் சென்னை, திருமகள் நிலையம் வெளியீடு தான்..1992 இல் வெளியானது வெறும் 191 பக்கங்கள் தான்.
முதல் கதை நாற்பத்தெட்டே பக்கங்கள் தான்! ஐந்து கதா பாத்திரங்கள். ஆறாவது கதாபாத்திரத்தைப் பற்றி பிரஸ்தாபம் மட்டுமே இருக்கிறது.
ஒருவன் தன்னுடைய மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்று அதற்காக இன்னொருவனிடம் இரண்டுலட்சம் ரேட் பேசி, ஒருலட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறான்.
அதை மூன்றாவதாக ஒருவன், அவன் தான் இந்தக் கதையின் நாயகன், கவனித்துக் கொண்டிருக்கிறான்! கொலைகாரனிடம் போய், அவனுடைய திட்டம் எல்லாம் தெரியும் என்று காட்டி, அட்வான்ஸ் தொகை ஒரு லட்சத்தையும் அடித்துக் கொண்டு வந்து விடுகிறான்.
அடுத்து, கொலை செய்ய ஏவியவனிடம் போகிறான். அங்கேயும் கதாநாயகன், தனக்குத் தெரிந்த ஆதாரங்களை எடுத்து வைக்கிறான். வேறு வழி இல்லாமல், ஏவியவன் நான்கு லட்சம் ரூபாயைக் கதாநாயகனுக்குக் கொடுக்கிறான்.
இரண்டு மனிதர்களையும் எப்படி எதிர்கொள்கிறான், அவர்களும் என்ன மாதிரியான நிர்பந்தத்திற்குப் பணிந்து போகிறார்கள் என்பது, அடுத்தடுத்த திருப்பங்களாக எண்டமூரி தனக்கே உரிய லாவகத்தோடு கதையைப் பின்னியிருக்கிறார்.
அதோடு கதை முடிவதில்லை அன்பர்களே! எண்டமூரியின் ஸ்பெஷாலிடியே, திருப்பத்துக்கு மேல் திருப்பம், கடைசியாக ஒரு பன்ச் வைத்து ஒரு அதிரடித் திருப்பம் தான்!
மனைவியைக் கொல்வதற்கு அலையும் அந்த மனிதனையே எப்படி அவளுக்கு செக்யூரிடி கார்டாக, கண்ணின் இமையாகக் காப்பாற்ற வைத்து விடுகிறான் என்பது அதிரடித் திருப்பம்! அதற்கும் மேல் ஒரு சூபர் பன்ச் இருக்கிறது-அது தான் இந்தப் புத்தகத்தின் முதல் கதை. குயிலின் குஞ்சு!
ராபின் ஹூட் கதைகளை அல்லது அந்த மாதிரி உல்டா அடித்து வந்திருக்கும் ஏராளமான கதைகளில் ஒன்றையாவது படித்திருப்போம். இந்தக் கதையிலுமே ஒரு ராபின் ஹூட் டைப் ஆசாமி தான் கதாநாயகன்! இருப்பவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்பவன்! அதிலும் கூடக் கொஞ்சம் நியாயம், தர்மம் என்று பார்ப்பதாக முடித்திருக்கும் கடைசி பதினைந்து-இருபது வரிகள் சூபர் பன்ச்!
3500 -4200 வார்த்தைகளுக்குள் இவ்வளவு டிவிஸ்டா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? படித்துப்பாருங்கள்!
வாசிப்பதில் தான் எத்தனை சுகம்! மலருக்கு மலர் தாவித் தேன் குடிக்கிற வண்டுகள் மாதிரி, ஒரு நல்ல வாசகனாக இருப்பதில் தான் எத்தனை ஆனந்தம்!
எனக்கு எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியதையும் படிக்கப் பிடிக்கிறது. வி.ச. காண்டேகர் முதல் இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் ஜெயமோகன் வரை, எல்லாத் தளங்களையும் தொட்டு விட ஆசைதான்! ஒரு நல்ல வாசகனாக இருப்பதில் தான் எத்தனை ஆனந்தம்!
வாசகனாக, இது தொட்டு விட முடிகிற வானம் தான் என்பது நன்றாகவே தெரிகிறது.
இங்கே இன்னொரு விஷயத்தையும் தொட்டுச் சொல்லியாக வேண்டும்.
இணையத்தில் புத்தக அட்டைப்படங்களைத் தேடிய போது, எண்டமூரியின் பல புத்தகங்கள் தெலுங்கில் இன்றைக்கும் கூட முப்பது ரூபாயில் இருந்து எண்பது ரூபாய்களுக்குள் கிடைக்கிறது.
தமிழில் வெளிவரும் சிறு புத்தகங்கள் கூட நூறு ரூபாய்களுக்கும் அதற்கு மேலும் இருப்பது வாசகர்கள் விலை கொடுத்து வாங்கிப்படிக்கத் தயாராக இருந்தாலும், பதிப்பாளர்கள் தயாராக இல்லாத நிலையைத் தான் காட்டுகிறது. இங்கே சரக்குக்குத் தகுந்த விலை என்று இருப்பதில்லை. அதுக்கும் கொஞ்சம் மேலே, ஓவராகத் தான் இருக்கிறது.
ஒரு கட்டத்தில், மலிவு விலைப் பதிப்புக்களாக, பிரேமா பிரசுரம் முதலில் மர்ம நாவல்களை ஆரம்பித்தது. பிரபல எழுத்தாளர்கள் எவருமே அதில் எழுத முனையவில்லை.நடுவில் ராணி முத்து என்று தினத்தந்தி குழுமத்தில் இருந்து சுருக்கப்பட்ட கதைகள் வெளிவந்தன. பின்னாட்களில், ஜி ஏ அசோகன் பாக்கெட் நாவல் என்று ஆரம்பித்தார். பாலகுமாரன் ஒருவர் தான் பாக்கெட் நாவலில் தொடர்ந்து தனது கதைகளை வெளியிட அனுமதித்திருந்தார் என்பதை வைத்தே அவர் சுருங்கிப்போனதாக ஒரு விமரிசனமும் உண்டு.
நேசமுடன் வெங்கடேஷ் எழுதிய இந்தப் பதிவு தமிழ்ப் பதிப்புத் துறையை வேறு கோணத்தில் இருந்து பார்க்கிறது
கேரளத்தில் எழுத்தாளர்கள் கூடி, ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் வழியாகத் தங்கள் புத்தகங்களை ஜனங்கள் காசுகொடுத்து வாங்கிப் படிக்கும் விலையில் வைத்திருந்தார்கள்.
இங்கே தமிழ்நாட்டிலும் புத்தகங்கள் அந்த மாதிரி, கைக்கெட்டுகிற விலையில் கிடைக்கும் நாள் என்னாளோ?
கேரளாவின் ஐடியா நல்லாருக்கே..!!!!
ReplyDeleteகேரளத்திலும், வங்காளத்திலும் இன்றைக்கும் வெற்றிகரமாகச் செயல்படுகிற முறை இது. கருத்து மிகவும் பழையது தான் ஆனாலும் வீரியத்தோடு செயல் படுத்தப் படுகிறது. இங்கே தமிழ்நாட்டில், புத்தகப்பதிப்பாளர்கள் பெரும்பாலும் தமிழ் நாடு அரசின் நூலகத் துறைக் கொள்முதலை நம்பியே ஆரம்பநாட்களில் இருந்தார்கள்.
ReplyDeleteசமீபத்தில் காலம் சென்ற திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி வாசகர் வட்டம் என்ற அமைப்பை துவங்கி, நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரம் செய்து வந்தார். இது தற்போது ஞானி துவங்கி இருக்கும் ஐநூறு ரூபாய் கட்டி முன்பதிவு செய்தால், குறும்படம் வீடு தேடி வரும் என்ற முறைக்கு மிகவும் முன்னோடி.
காசுகொடுத்துப் புத்தகங்கள் வாங்கிப்படிக்கும் பழக்கம் தற்சமயம் வளர்ந்து வருகிறது.அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லிக் கொண்டே, பதிப்பாளர்கள் இங்கே அதிக விலைக்குத் தான் புத்தகங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை.
முன் வெளியீட்டுத் திட்டம், புத்தகம் வெளி வந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மலிவுப்பதிப்பாகக் கொண்டு வருவது இப்படித் தமிழ்ப் பதிப்பாளர்கள் கடந்து போக வேண்டிய தூரம் இன்னமும் அதிகம் இருக்கிறது.
பதிப்புத் தொழிலில், விநியோகம் செய்யும், மார்க்கெட்டிங் செய்யும் முறையைப்பற்றிய மாறுபட்ட கண்ணோட்டத்தைத் தெரிந்து கொள்ள இந்த சுட்டி உதவலாம்:
ReplyDeletehttp://www.nesamudan.com/blog/2009/09/23/tamilbooksdistribution/
நல்ல விறுவிறுப்பு தான்!
ReplyDeleteதமிழில் புத்தகம் எடுத்து வையுங்கள் மதுரைக்கு வரும் போது வாங்கிகிறேன்!