அந்தப் பத்து இல்லை! இது வேறு பத்து!



"நமக்கு பத்து போடுவது பிடிக்கும் என்பதால் ஏழைப் பத்தாக்குகிறேன்.”
என்று  ஒரு சங்கிலித் தொடராக ஆரம்பித்தார் பதிவர்  ஆதிமூல கிருஷ்ணன்
உடனே மகேஷிடமிருந்து இப்படிப் பின்னூட்டம் வந்தது.


"ஆரம்பிச்சாச்சா அடுத்தது? நீங்க பத்து போடுங்க.. .நாங்க தலவலிக்கு பத்து போட்டுக்கறோம் :)))) "


இந்தப் பத்து அல்லது பித்து தமிழ் வலைப்பதிவர்களை ஒரு ஆட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.இதில் எல்லாம் அவ்வளவு நாட்டம் இல்லாத நானுமே கூட வால்பையன் அருண் அழைப்பைத் தட்ட முடியாமல் என் பங்குக்கு பத்து இல்லைன்னா பத்தாதாமே   என்று  ஒரு பதிவு போடுகிற அளவுக்கு, பத்து வரிசை இன்னமும் வலம் வந்து கொண்டிருக்கிறது.


பித்துப் பிடிக்க வைக்கிற பிடித்த பத்து பிடிக்காத பத்து சுரத்தில் இருந்து விடுபட்டு இன்னொரு உபயோகமான பத்து வரிசையைப் பார்ப்போமா? தோல்விகள்!  
தோற்றுப்போவது என்பதை  நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் சந்தித்துக் கொண்டுதானே இருக்கிறோம்?



எல்லோருக்குமே ஜெயிக்க வேண்டும், ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், ஆசைகள் எல்லாம் குதிரைகளானால் ஆண்டி கூட அரசன் தான் என்று சொல்கிறபடி, ஆசைப்படுவதால் மட்டுமே இங்கே யாரும் ஜெயித்து விட முடிவதில்லை.


ஏன் தோற்கிறோம்? எதனால் தோற்கிறோம்? எப்படித் தோற்கிறோம்?


தோல்வியைக் கண்டு துவண்டு விடுகிற அளவுக்கு, அதைக்கண்டு பயப்படுகிற அளவுக்கு, தோல்விக்கான காரணங்களைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்திருக்கிறோமா என்று பார்த்தால்,பெரும்பாலான தருணங்களில் நாம் அப்படிச் செய்வதே இல்லை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா?


தோல்வியோ, வெற்றியோ எதுவானாலும் அவை நம்முடைய செயல்களின், அதன் மீது கொள்ளப்படும் அணுகுமுறையின் விளைவுகள் தானே தவிர எதுவுமே முன்கூட்டியே முடிவெடுக்கப்பட்டு நம் மீது திணிக்கப்படுபவை அல்ல.



வலைப்பக்கங்களில் தேடிப் படிக்கிற சில விஷயங்கள், நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாகவும், வழிகாட்டுவதாகவுமே ஆகிவிடுவதுண்டு. மொக்கை போடுவதற்கும், பின்னூட்டங்களில் கும்மியடிப்பதாகவுமே வெறும் பொழுதுபோக்குக் கருவியாக நாம் பயன்படுத்தும் இணையம், கற்றுக் கொள்வதற்கான எளிமையான சாதனமாகவும் இருக்கிறது! தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கிறித்தவ வேதாகமம் சொல்வது இணையத்தில் மட்டுமே நூறு சதவிகிதம் சாத்தியம்! ஆம்! நீங்கள், எதைத் தேடுகிறீர்களோ, எதைத் தட்டுகிறீர்களோ அது நிச்சயமாகக் கிடைக்கும் இடம் இந்த இணையம் தான்!


தலைமைப்பண்புகள், நிர்வாகவியல், மார்கெடிங் துறைகளில் சில வலைப்பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதுண்டு. அப்படி ஒரு வலைப்பதிவு வழியாக,டோனி மார்கனுடைய இந்த வலைப் பக்கங்களைப் படிக்கும் வாய்ப்பு சென்ற வாரம் கிடைத்தது. தோல்வி எதனால் ஏற்படுகிறது, என்பதைக் கொஞ்சம் நன்றாகவே ஒரு பத்து அம்சமாக யோசித்திருக்கிறார். தான் யோசித்ததை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அதன் மீது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்த்து ஒரு பத்து விஷயங்களாகச் சொல்கிறார்.


என்னவென்று பார்ப்போமா?


முதலாவதாக, செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் உண்மையானதாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில், சச்சின் டெண்டுல்கருடைய பேட்டி ஒன்று, அவர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருபது ஆண்டுகள் நிறைவு ஆனதை ஒட்டி ஒளிபரப்பானது. வெறும் விளையாட்டு, கொஞ்சம் அதிகமான ஆர்வம் என்பதையும் மீறி, அதுவே அவரது தவமுமாகிப் போனதை அந்தப் பேட்டி மிகவும் அழகாகச் சொன்னது. அதன் ஒருபகுதியைக் கீழே பார்க்கலாம்.

இரண்டாவதாக, ஒரு தெளிவான திட்டம் உங்களுக்கு இருக்க வேண்டும். என்னவாக வேண்டும் என்பதைக் குறித்து ஒரு கனவு, அந்தக் கனவு மெய்ப்பட என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்த தெளிவான பார்வை. நிதியாதாரங்கள் திரட்டுவதும் அதன் ஒரு முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.


மூன்றாவதாக, எல்லாவகையிலும் அது முழுமையானதாக இருக்கவேண்டும் என்று காத்திருக்காமல்,சோதனை ஓட்டத்திற்குத் தயாராக வேண்டும். சோதனை முயற்சிகளில் கிடைக்கும் படிப்பினைகளில் இருந்தே உங்களுடைய ஒரிஜினல் ஐடியாவைச் சரி செய்து கொள்ள முடியும். முதல் நாளில் இருந்தே அது முழுமையானதாக, சரியானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது கடைசியில் ஒன்றுமே செய்யாமல் நின்று விடுவதான செயலாற்ற தன்மைக்குக் கொண்டு விட்டு விடும்.



நான்காவதாக, கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். கட்டுப்பாடுடனும், பொறுமையுடனும் செயல்படுவது நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது நல்லது.


ஐந்தாவதாக, வளர வேண்டும் என்ற விருப்பமிருந்தால் கற்றுக்கொள்வதை நிறுத்தி விடாதீர்கள். கற்றுக்கொள்வது நிற்கும்போது, வளர்ச்சியும் தேக்கமடைந்து போய் விடுகிறது. முக்கியமாக, தலைமைப் பண்புடன் கூடியவர்களைக் கொண்ட ஒரு குழுவை நிறுவ முயற்சி செய்யுங்கள். குழுவாக செயல்படும்போது, உங்களிடமில்லாத திறமைகளும் சேர்ந்து வெளிப்படும்.


ஆறாவதாக, நேற்றைய வெற்றிகளில், சாதனைகளில் தேக்கமடைந்து நின்று விடாதீர்கள்.

அப்படித் தேக்கமடைந்துவிடுவதில், காலம் செல்லச் செல்ல, வேகமும் குறைந்து விடும். அப்படி ஒரு நிலை வருமானால், பழையதை விட முடியாமலும், புதியதற்குத் தயாராக முடியாமலும் அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு ஆளாக நேரிடலாம்.


ஏழாவதாக, ஏதோ ஒன்றைச் செய்யாமல் இருப்பது உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கிறதென்றால் அதைக் கவனியுங்கள். உதாரணத்துக்கு, சிகரெட், மது, பெண்பித்து, பேராசை, நாணயக் குறைவு, எதிலும் காலதாமதம் இது போன்ற பலவீனங்கள், கவனத்தைத் திசை திருப்புபவைகளாக, இப்படி எது உங்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது? அப்படித் தடையாக இருப்பதை மாற்றிக்  கொள்வதில் என்ன தயக்கம் என்பதைக் கவனியுங்கள். படுமுடிச்சுக்கு மேல் படுமுடிச்சாகப் போட்டுக் கொண்டிருப்பது எளிது. முடிச்சுக்களே இல்லாமல், எளிமையாக இருப்பதற்கு, ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் அவசியம். எளிமையாக, ஒழுங்கோடு இருப்பவைகளே வெற்றிக்கு அஸ்திவாரம்.


எட்டாவதாக, நீங்கள் உருவாக்கும் குழுவில் இருப்பவர்கள், உங்களுடைய நண்பர்களாக ஏற்கெனெவே இருப்பவர்களாகவோ, அல்லது நண்பர்களாக ஆகப் போகிறவர்களாகவோ இருக்கட்டும்! வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பது எளிது. ஆனால், உங்களுடைய வாழ்க்கையை உங்களோடு பகிர்ந்து கொள்பவர்களாகவும், காலப்போக்கில், மிகச் சிறந்த உறவுகளாகவும் நண்பர்கள் தான் இருக்க முடியும்! வேலைக்காரர்கள் அல்ல.


சுருக்கமாக, குழுவை உருவாக்குங்கள், ! குழுவில் இருப்பவர்களை உங்களுடைய நல்ல நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்!


ஒன்பதாக, உற்றார் உறைக்கச் சொல்வார்கள் ஊரார் சிரிக்கச் சொல்வார்கள் என்ற சொலவடையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சோதனையான தருணங்களில், கடுமையாகப் பேசினாலும், சோதனைகளில் இருந்து மீள்வதற்கு உதவும் வகையில் இருக்கும் ஒருவர் அல்லது பலருடைய துணையைக் கைக்கொள்ளுங்கள்.


பத்தாவதாக, "அச்சமே கீழ்களது ஆச்சாரம்" என்று சமுதாய வீதி நாவலில் எழுத்தாளர் நா.பார்த்த சாரதி சொல்வது போல, தோல்வியைக் குறித்த பயமே, அடுத்தடுத்த முட்டாள்தனங்களுக்கு அடிகோலுவதாக இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான எண்ணங்கள் எதிர்மறையான விளைவுகளைத் தான் தரும்.நமக்குத் தெரிந்த அளவோடு நிறுத்திக் கொண்டாலோ, சராசரியாக அல்லது அதற்கும் கீழே இருந்து விடுவதில் ஒரு சௌகரியத்தைக் கற்பித்துக் கொள்வதிலோ நின்றுவிடாமல் எவ்வளவுக்கு எவ்வளவு தோல்விகளை எதிர்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு வெற்றியையும் நம்மால் பெற முடியும்!


உண்மையாக!!


இப்படி, கொஞ்சம் குறிப்பிட்டும், பொதுமைப் படுத்தியும் சில கருத்துக்களை டோனி மார்கன் முன்வைத்திருக்கிறார்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களுடைய அனுபவங்களில் இருந்து நீங்கள் இவற்றில் எவை எவை பொருத்தமாக இருக்கும், அல்லது பொருந்தாது என்றோ, மாற்றுக் கருத்தாக எதை முன்வைக்கிறீர்கள் என்பது தான்!


உங்களுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே!


4 comments:

  1. முக்கியமாக சுயதொழில் செய்வோர் இந்தக் கருத்துகளை கவனத்தில் எடுத்துக்கொண்டால் நிச்சயம் முன்னேற்றம் உண்டு,

    பயன்படத்தக்க கருத்துகளை தந்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. தோல்வி வெற்றியின் முதல்படி என்றெல்லாம் படித்தால் கூட பெரும்பாலும் தோல்வியைக் கண்டு துவண்டுவிடுபவர்களே நிறைய பேர். தோல்வியை ஆராய்வதற்கு பதில் அதை அப்படியே விட்டு விட்டு அடுத்த விஷயத்துக்குப் போய்விடுவோம். எல்லாம் அரைகுறையாய்ப் போய்விடும். வெற்றிக்கு சச்சின் நல்ல உதாரணம். விளையாட்டாக இருந்தாலும் விளாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அர்ப்பணிப்பு, ஈடுபாடு...

    சமுதாய வீதி....எப்பவோ விருப்பமாகப் படித்த நூல். எனக்கு அந்த வரிகள் பிடிக்கும். முத்துகுமரன் அடிக்கடி மாதவியிடம் சொல்லும் வார்த்தை.

    ReplyDelete
  3. @சிவா,
    இந்த பதிவில் மேற்கோள் காட்டியிருக்கும் பதிவர் டோனி மோர்கன் கிறித்தவ சர்ச்சுகள் நிறுவனப்படுத்தப் படுவதன் ஒரு நீட்சியாகவே தன்னுடைய வலைப்பக்கங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார். என்றாலும், குறிப்பிட்ட இந்தப் பதிவு, எல்லாத் தரப்புக்குமே பொருந்தி வருகிற மாதிரி இருக்கிறது. பத்துக்குப் பத்துமே தேறாவிட்டாலும் கூட, எத்தனை உங்களுக்கு உபயோகமாக அல்லது பொருந்தி வரும் என்று நினைக்கிறீர்கள்?

    @ஸ்ரீராம்
    டெண்டுல்கரை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டதற்கு முக்கியமான காரணமே, விளையாட்டைக் கூட விளையாட்டு தானே என்று எடுத்துக் கொள்ளாமல், அதுவே தன்னுடைய எல்லாமும் என்ற ஆர்வத் தீயை வளர்த்துக் கொண்டார் அல்லவா, அதற்காகத் தான்! மா துஜே சலாம் டாட் நெட் தளத்தில், அவருடைய பேட்டி ஏழு பகுதிகளாக யூட்யூபில் வலையேற்றப்பட்டிருக்கிறது. நேரமிருந்தால் பாருங்கள்!

    @சபரிநாதன்,
    ஒன்றுமே சொல்லாமல் இருப்பதை விட, ஒற்றைச்சொல் அல்லது ஒரு வரி என்பது முன்னேற்றம் தான்! ஆனால் அது போதுமா?

    பதிவுகள் வெறும் பொழுதுபோக்குக்காக என்ற அடிப்படையில் எழுதுவதற்கு இங்கே ஏராளமான பேர்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் பயனுள்ள கலந்துரையாடலுக்காக மட்டுமே இந்தப் பக்கங்கள் பயன்பட வேண்டும் என்பது என் ஆசை.

    பதிவில் சொல்லப் பட்டிருக்கும் எந்த விஷயங்களோடு ஒத்துப் போக முடிகிறது, அல்லது மறுக்க வேண்டியதிருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொன்னால், இன்னமும் உபயோகமாக இருக்கும் அல்லவா!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!