Showing posts with label பீர்பால் கதைகள். Show all posts
Showing posts with label பீர்பால் கதைகள். Show all posts

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்..! பீர்பால் கதைகள் 9,10


பீர்பால் கதை ஒன்றைச் சொல்லி நாளாகி விட்டதே, என்ன கதையைச் சொல்லலாம்  என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தான், அக்பரும், பீர்பாலாக மாறுவதற்கு முன்னால் மகேஷ் தாஸ் என்ற சூடிகையான இளைஞனாக இருந்தவனுக்குமிடையிலான  அறிமுகம் எப்படி ஆரம்பித்தது என்பதைச் சொல்லாமலேயே இதுவரை எட்டுக் கதைகளைச் சொல்லியிருக்கிறோமே என்ற நினைப்பு வந்தது.

Flashback முறைதான் நமக்கு மிகவும் பழகிப்போன ஒன்றாயிற்றே!  அதனால் அக்பர் பீர்பால் முதல் சந்திப்பைக் கொஞ்சம் பின்னோக்கிச் சொல்லலாம் என்று நினைத்த போதுதான், இதே கதை பல்வேறு தருணங்களில் பல்வேறு வடிவங்களில் சொல்லப் பட்டிருப்பதையும் கவனித்தேன்!

ரு சமயம் அக்பர் தனது படைவீரர்களுடன் வேட்டையாடப் போனார். போன சமயத்தில், கூடவந்தவர்கள் பலர் வழியைத் தவற விட்டு விட்டார்கள். அக்பரும் ஒன்றிரண்டு வீரர்களும் கொஞ்ச தூரம் பயணம் செய்து பாதைகள் மூன்றாகப் பிரிவதைப் பார்த்தார்கள். அதில் எந்தப்பாதை தான் அரண்மனைக்குத் திரும்ப வேண்டிய பாதை என்பது புரியாமல், அங்கே வழியில் கண்ட ஒரு இளைஞனை நிறுத்தி எந்தப்பாதை தில்லிக்குப் போகிறது என்று விசாரித்தார் அக்பர்.

"பாதைகள் எதுவும் டில்லிக்குப் போகாது! அவை அங்கேயே தான் இருக்கும்!" என்றான் அந்த இளைஞன். அக்பருக்கு அவன் தன்னைக் கேலி செய்கிறானா என்ற சந்தேகம் வந்தது, ஆனால் அதை எப்படி வெளிப்படையாகக் கேட்பது? கண்களில் குறும்பு மின்ன, அந்த வாலிபன் மேலும் சொன்னான்."பாதைகள் தான் டில்லிக்குப் போகாது என்று சொன்னேன்! ஆனால் நீங்கள் அதில் பயணம் செய்தால் டில்லிக்குப் போய்ச் சேரலாம்!"

ப்படிச் சொன்னவுடன், அக்பருக்கு உச்சி குளிர்ந்து விட்டது! 

ந்த நாட்களில் கூந்தல் க
றுப்பு, குங்குமம் சிவப்பு என்று ஒரு எம்ஜியார் படப் பாடல் ஒன்று உண்டு அதைக் கேட்டுப் புளகாங்கிதமடைந்த ரசிகக் கண்மணிகள் தலைவர்  என்னமா உண்மையை  உடைச்சுச் சொல்கிறார் என்று வியந்த மாதிரி, அக்பரும் குளிர்ந்து போனாராம்! ஆமாம்! பாதை எப்படி டில்லிக்குப் போகும்? நாம் தான் அதில் பயணம் செய்ய வேண்டும் என்ற உண்மை பாதுஷாவுக்கும்  உறைத்துப் புளகாங்கிதம் அடைந்ததில், அந்த வாலிபனின் புத்தி சாதுர்யத்தை மெச்சி, அரண்மனைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தாராம்!

ப்புறம் என்ன! மகேஷ் தாஸ், அக்பரின் அரசவையில், பாதுஷாவுக்குப்  பிரியமான சேக்காளியாக பீர் பால் என்ற கௌரவப் பட்டத்தோடு மாறினார்  என்பது தெரிந்தது தானே!

ந்தக்கதையை ஏற்கெனெவே இந்தப்பக்கங்களில்  வேறு வடிவத்தில் பார்த்திருக்கிறோம்! இந்தக் கதையில் பீர்பால், அந்தக் கதையில் ஒரு துறவி! எப்படியானாலும்,. பீர்பாலோ அல்லது துறவியோ அரசனிடம் இந்த மாதிரிக் கேள்வி கேட்க முடியுமா, தலை தப்புமா என்றெல்லாம் கேட்கக் கூடாது.


ந்த ஒரு கேள்விக்கும், இரண்டு நேரெதிர் கோணங்களில் இருந்து பதிலைப் பெற முடியும் என்பதை மட்டுமே கதையில் இருந்து பெற வேண்டிய கருத்தே தவிர, ஆஹா! நல்ல கதை என்றோ, கதை சொல்லியே நம்மை பல நூற்றாண்டுகளாக முட்டாளாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கொதிக்கவோ வேண்டாம் என்பது தான் முதலும், முக்கியமானதுமான பாடம்!

தைகள், ஒரு உருவகம், ஒரு உதாரணம் அவ்வளவுதான்!

ண்மைக்குக் கொஞ்சம் இப்போதிருப்பதைவிட இன்னம் அருகாமையில் கொண்டு சேர்ப்பதற்கு உதவியே தவிர, கதையே முழுமையானதும், உண்மையானதும் அல்ல! அப்படி எடுத்துக் கொள்ளும் போது தான் கற்பிக்கப்படாத விபரீதமான அர்த்தங்கள், அனர்த்தங்கள் என்று தொடர்கின்றன.

ப்படி அதற்கு முந்தைய பதிவில் சொன்னதற்கு வந்த பின்னூட்டங்களைத் தொடர்ந்து அவைகளுக்குப் பதிலாக

/நாத்திகர்கள் கடவுளை வெறுப்பவர்கள் அல்ல, மறுப்பவர்கள்/ *

டைமுறை நாத்திகம் என்பது, எது உண்மை அல்லது பொய் எனத் தேட முற்படுவதே இல்லை. நம்புகிறவனுடைய நம்பிக்கையை கேள்விக்குரியதாக ஆக்கி விடை சொல்ல முற்படுவது அதன் வேலையாகவும் இருந்ததில்லை. வெறும் கேலி, ஏச்சு, விதண்டாவாதம், வெறுப்பை உமிழ்வது, பிணக்குகளை வளர்ப்பதுமே அதன் பணியாக இருக்கிறது.

ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி இறக்குமதி செய்யப் படும் நாத்திகர்களும், உள்ளூர் நாத்திகர்களும் இந்த ஒரு விஷயத்தில் ஒன்று படுகிறார்கள்.

சார்வாகம், சாங்கியம், என்று இறை மறுப்பை முன்னிலைப்படுத்தும் தத்துவ மரபுகளுமே இந்தியத் தத்துவ தரிசனத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது. சமணம் பேசும் அறநெறிகள் இந்த வகையில் வருபவையே. சடங்குகளையும், புரோகிதனையும் மறுத்து, அறிவொன்றே தெய்வம் எனக் காண்பித்தவை.

/இது தான் ஆத்திக நாத்திகத்திற்கு நான் கொடுக்கும் சிறிய விளக்கம்/

ரணியனின் கதையிலேயே அது இருக்கிறது. நாராயணன் இல்லை, அவன் பெயரை எவருமே சொல்லக் கூடாது என்கிறான். நாராயணனை மறுக்கிறான். ஆனால், அவனுக்கு, நாராயணன் இருப்பது தெரியும், தன்னுடைய உடன்பிறந்தவனைக் கொன்றான் என்ற ஒரே காரணம், பகையாக, வெறுப்பாக, மறுப்பாகவும் வெளிப்படுகிறது.

த்திக நாத்திகமே வேறு.உதாரணத்திற்கு, இங்கே வலைப்பக்கங்களில் ஒரு பெண்மணி,மிகவும் கற்றவராக, எல்லாம் தெரிந்தவராகப் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறார். கோபிகா கீதம் என்று ஒன்று உண்டு. பக்தியின் உச்ச நிலையை, பரம்பொருளிடம், நாங்கள் மிகச் சிறியவர்கள், எங்களிடம் உன்னுடைய பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டாம் என்று உருகுகிறார்கள். பிரேம பாவம் என்பதன் உச்சம் அது. ஆனால் இந்தப் பெண்மணியோ  சர்வ சாதாரணமாக, அதைப் படித்தால், காணாமல் போன பொருள் கிடைக்கும் என்று நம்பிக்கை என அதைப் பற்றி எழுதுகிறார். ராம நாமமே துதி செய் என்று எழுதி விட்டு, பெரியவா சொன்னதுனால நாங்க ஏத்துக்கறோம், என்ற ரீதியில் தொடர்ந்து எழுவதைப் பார்க்கும் போது, ஒரு பக்கம் சிரிப்பாக வருகிறது. இவர்களுக்குப் புரிந்தது அவ்வளவுதான்! கிளிப்பிள்ளைகள் போல இருப்பதே தத்துவத்தைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறார்கள் பாருங்கள், இது தான் ஆத்திக நாத்திகம். இவர்களை விட, நேரடியாகவே, கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்.

/கடவுள் இருக்கிறது என்று நம்ப வைப்பது தான் ஆத்திகரின் வேலையா ?/

நிச்சயமாக இல்லை.நம்பிக்கையைச் சிதைப்பது, மதம் மாற்றுவது, இதை உண்மையான ஆத்திகன் செய்வதில்லை. அவசியமும் இல்லை.

ங்கே ஒரு கருத்துப் பரிமாற்றம் மட்டுமே நிகழ்வதாக நான் கருதுகிறேன். என் நிலையை நீங்கள் ஏற்றுக் கொண்டு மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, நப்பாசை எதுவுமே இல்லை.உங்களுடைய கருத்தை நீங்கள் முன்வைக்கிற அதே விதத்தில், அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதும், அது சரிதானா, எனக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பரிமாறிக் கொள்வதைத் தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. "

ன்று சொல்லியிருந்த பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிற வாய்ப்பும் கிடைத்தது.(சிவப்பு எழுத்தில் அடைப்புக்குள் இருப்பதெல்லாம் ஒரு பதிவர் எழுப்பியிருந்த கேள்விகள்) பிழைப்புக்காக நடத்துகிற தொழில்முறை நாத்திகம் தவிர, பொழுது போக்கு நாத்திகமாக இங்கே பலர் பதிவுகளில் பேசிக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது.


oooOooo

பீர்பால் அக்பருக்கு அறிமுகமான கதை கொஞ்சம் சுமாராகத் தான் இருக்கிறதென்று வாசகர்கள் கோபப்படுவதற்கு முன்னாலேயே, சமாதானமும் சாந்தியும் நிலவுவதற்காக வழக்கம் போல இன்னொரு பீர்பால் கதை! போனசாக, ஒன்றுக்கு ஒன்று ஃப்ரீ என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

பாதுஷா, பீர்பாலுக்குத் தான் எப்போதும் ஆதரவு தருகிறார்! பாதுஷாவுடைய ஆதர
வு இல்லாவிட்டால், இந்த பீர் பாலை விட நாங்கள் பெரிய புத்திக் கொழுந்துகள் என்பதைக் காட்ட முடியுமாக்கும் என்று பாதுஷா காதில் விழுகிற மாதிரியே, அரசவையில் இருந்த நிறையப் பேர் பொருமிக் கொண்டிருந்தார்கள்.

க்பருக்கும் அப்படித்தான் தோன்றியது! இந்த பீர்பால் ரொம்பவும் தான் துள்ளுகிறான்! பாதுஷா என்று கூடப் பார்க்காமல், எப்போதும் தன்னை முட்டாளடித்துப் பார்க்கிறவனை, நாமும் பதிலுக்குப் போட்டுப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் பாதுஷாவுக்கு வந்தது. இந்த பாதுஷாக்களே நிலையில்லாத புத்திக்காரர்கள்! எப்போது கனிவாக இருப்பார்கள், எப்போது கடித்துக் குதறுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. பீர் பாலை சிக்க வைப்பது, மற்றவர்கள் முன்னால் முட்டாளாக்கிக் காட்டுவது  என்று பாதுஷா முடிவு செய்துவிட்டு, ஒரு சோதனை வைத்தார்.

ல்லாம் ஒரு செட் அப் தான்! இப்படி ஆளைக் கவிழ்க்கிற கலையில் பாதுஷாக்களுக்கு இருக்கிற தேர்ச்சி, வேறு உருப்படியான விஷயங்களில் இருந்ததில்லை என்பது சரித்திரம். சரித்திரம் என்ற உடனேயே கற்பனை,
புனைவு ,கனவு இவைகளும் வந்து விட வேண்டும் இல்லையா?

ரசவையில் பாதுஷா பம்பீரமாக சபையை இப்படியும் அப்படியுமாகப் பார்க்கிறார்.அல்லது கம்பீரமாகப் பார்ப்பது போல நினைத்துக் கொண்டார்.

"எனக்குப் பிரியமானவர்களே! இன்று அதிகாலை நான் ஒரு கனவு கண்டேன்! எனக்கு உண்மையானவர்கள், பிரியமானவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பதை அந்தக் கனவில் தெரிந்து கொண்டேன்!" என்று சொல்லி விட்டு சபையை அப்படியும் இப்படியும், இப்படியும் அப்படியுமாக மறுபடி பார்த்தார். 


சபையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! புரிந்து என்ன ஆகப் போகிறது! சபைக்குப் போவதே சம்பாதிப்பதற்குத்தானே!

"இன்று மாலை நீங்கள் வரிசையாக ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போக வேண்டும். அங்கே நீங்கள் என் மீது பிரியத்துடனும், உண்மையாகவும் இருந்தால்  உங்களுக்கு ஒரு கோழி முட்டை கிடைக்கும். அதை இங்கே கொண்டு வந்து காண்பிக்க வேண்டும். என் மீது விசுவாசமாக இருப்பவர்கள் யார் என்பது அப்போது தெரிந்து விடும்." என்று சொன்னார் அக்பர்.

கோழி முட்டைக்கும் விசுவாசத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள்! பாதுஷாக்கள் கேள்வி கேட்பவர்களை எப்போதுமே விரும்புவதில்லை.

பையில் இருந்த பிரமுகர்கள் ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போனார்கள். குதித்தார்கள். ஆளுக்கு ஒரு கோழி முட்டையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி வெளியே வந்தார்கள். கோழி முட்டை கிடைத்ததோடு, கொஞ்சம் காசும் கிடைக்கும் என்ற சந்தோஷத்தோடு அரண்மனைக்குப் போனார்கள்.

பீர்பாலும், தலைவிதியே என்று குளத்தில் குதித்தார். குளத்தில் குதித்தால், உண்மையாக இருப்பவருக்குக் கோழிமுட்டை கிடைக்கும் என்று அக்பர் சொன்னபோதே இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பதை அறிந்திருந்தார். அவருக்கு கோழி முட்டை கிடைக்கவில்லை. அதனால் என்ன, எப்போதும் கைகொடுக்கிற புத்தி சாமர்த்தியம் இருக்கிறதே, அது போதாதா! இரண்டு கைகளையும் உயர்த்திப் பிடித்தபடி, சேவல் கொக்கரிக்கிற மாதிரி சத்தம் எழுப்பிக் கொண்டேஅரசவைக்குப் போனார்!

க்பருக்குக் கொஞ்சம் ஆச்சரியம்! முட்டை கிடைக்கவில்லை என்றதும், பீர்பால் சோர்ந்த முகத்துடன், அப்போதாவது கொஞ்சம் பணிவோடு சபைக்கு வருவான் என்று நினைத்தால், சேவல் கொக்கரிக்கிற மாதிரிக் கொக்கரித்துக் கொண்டல்லவா வருகிறான்! என்ன ஆயிற்று இவனுக்கு?

"பீர்பால்! சேவல் மாதிரிக் குரல் எழுப்புவதை நிறுத்து!"

"அப்படியே ஆகட்டும் ஹூசூர்!" என்று பணிவுடன் சொன்னார் பீர்பால்!

"எங்கே உன் கைகளில் முட்டையை காணோம்?" பாதுஷா கொஞ்சம் எகத்தாளமாக பீர்பாலிடம் கேள்வி கேட்டார். ஏற்கெனெவே பேசி வைத்து மற்றவர்கள் எல்லோருக்கும் முட்டை கிடைக்கிற மாதிரிச் செய்து விட்டு, பீர்பாலை வெறும் கையுடன் வரவைக்கிற திட்டத்தைப் போட்டதே அவர்தானே! இன்னும் சிறிது நேரத்தில் பீர்பால் காலில் விழுந்து கெஞ்சப் போகிறான் என்ற நினைப்பே பாதுஷாவுக்கு பாரசீகத்து மதுவைக் குடித்த போதை மாதிரி சுகமாக இருந்தது.

"நான் சேவல் ஹூசூர்! என்னிடம் எப்படி முட்டை இருக்கும்?"

"முட்டையைப் பற்றிக் கேட்டால் நீ சேவலை பற்றி எதற்குச் சொல்கிறாய்?" பாதுஷாவிற்குக் கொஞ்சம் குழப்பம் வர ஆரம்பித்தது. பீர்பாலை ஜெயிக்கவே முடியாதோ?

"ஹூசூர்! இங்கே இருப்பவர்கள் அனைவருமே பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் தான்! ஆனால் குளத்தில் குதித்தவுடனேயே முட்டை வந்து விடுமா? அதற்கு சேவல் துணை வேண்டாமா? நான் சேவலாக இருந்து இவர்களுக்கு முட்டை கிடைக்கச் செய்தேன். சேவலிடம் எப்படி முட்டை இருக்கும்?" என்றார் பீர்பால்.

ங்களை பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் என்று பீர்பால் சொன்னதிலேயே குளிர்ந்து போன சபையோர்கள், தாங்கள் பெட்டைகளாக்கப் பட்டதைக் கூட மறந்து வாரே வா என்று கரகோஷம் எழுப்பினார்கள்.

பாதுஷாவுக்கு வேறு வழி இருக்கவில்லை!

கெஞ்சினால் மிஞ்சுவன், மிஞ்சினால் கெஞ்சுவன் என்று பிற்காலத்தில் குடிலன் என்ற கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு இரண்டும் கெட்ட தன்மையை மனோன்மணீயம் என்ற நாடகக் காப்பியத்தில் பெ. சுந்தரம் பிள்ளை என்பவர் எழுதி வைக்கப் போகிறார்   என்பது அன்றைக்கு அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்!

ன்னுடைய தோல்வியை மறைத்துக் கொண்டு பீர்பாலைப் புகழ்ந்து பரிசுகள் கொடுத்து அப்போதைக்கு சமாதானம் செய்து கொண்டார் டில்லிப் பாதுஷா!

வேறென்ன செய்ய முடியும்!

 


 

பீர்பால் கதைகள் ! பாதுஷாக்களுக்கு என்றே வரும் சந்தேகம்..!


டில்லிப் பாதுஷாக்கள்  என்றாலே கொஞ்சம் கேணத்தனமான, விபரீதமான, வித்தியாசமான சந்தேகங்கள் தினசரி வருவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பதை இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாதுஷாக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள், ஏதோ ஒரு காரணத்தை வைத்துப் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறவர்கள்   என்று ஒரு பெரிய துதி பாடிக் கும்பலே இருக்கிறதே!  இப்படிக் கேணத்தனமான கூத்தை வேடிக்கை பார்க்க மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு வரத் தயாராக இருக்கிற  மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி கலைச் சேவை "காட்டுகிற"  தர்பாரும் உண்டு! இது போதாதா?

ப்படி அறிமுகத்துடன் இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாக கொஞ்சம் பார்த்து வந்திருக்கிறோம்.நடுவில் கொஞ்சம் இடைவெளி விழுந்ததைச் சுட்டிக் காட்டி டில்லிப் பாதுஷாக்களின் பாதம் தாங்கி ஒருவர் மிகவும் வருத்தத்துடன் கேட்டார்.""ஏன் இப்போதெல்லாம் டில்லி பாதுஷா அக்பர் பீர்பால் கதைகள் வருவதே இல்லை? பாதுஷாவையும்  பிரதமர் மாதிரி டம்மிப் பீஸ் பட்டியலில் சேர்த்து விட்டீர்களோ?"


ப்படியெல்லாம் ஒன்றுமில்லை! பீர்பாலையும், அக்பரையும் மறந்து விட்டால் டில்லி எப்படி நினைவுக்கு வரும்? நடுவில் வேறு கவனங்கள், வாசிப்பு என்று இருந்துவிட்டதால் மே மாதக் கடைசி வாரத்துக்குப் பிறகு பீர்பால் கதைகளைத் தொட நேரம் கிடைக்கவில்லை. அதற்குப் பரிகாரமாக, இந்த வாரம், ஒரே பதிவில் இரண்டு குட்டிக் கதைகள்! குட்டி என்றால் சின்னது என்று மட்டுமே அர்த்தம்!

குட்டி  என்று சொன்னேன் அல்லவா! இதோ, பீர்பாலுடைய குட்டிப் பெண் அக்பரைத் திணற அடித்த கதை!

ரு தரம் பீர்பால், தன்னுடைய ஐந்து வயது மகளை அக்பருடைய தர்பாரைக் காட்டுவதற்காகத் தன்னுடன் அழைத்துச் சென்றார். டில்லிப் பாதுஷாக்களுடைய மண்டையில் எப்போதுமே விசித்திரமான சந்தேகங்கள் தான் இருக்கும் என்பதை ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம் அல்லவா! அக்பருக்கும் ஒரு சந்தேகம் வந்தது! பீர்பாலுடைய சிறுவயது மகள் பீர்பாலைப் போல அறிவுக்கூர்மை உள்ளவளா, அல்லது சாதாரண சிறுமியைப் போலத் தானா என்ற சந்தேகம் வந்தது.

"குட்டிப் பெண்ணே! உனக்குப் பாரசீக மொழி தெரியுமா?" என்று சிறுமியிடம் கேட்டார் அக்பர்.

சிறுமியிடமிருந்து தயங்காமல் வந்தது பதில், " ஒ! தெரியுமே! கொஞ்சம் கூட,
கொஞ்சம் கம்மி!"

ப்போதும்போல பாதுஷாவுக்கு இதுவும் புரியவில்லை. பீர்பாலைப் பார்த்து அந்த சிறுமி என்ன சொல்கிறாள் என்று வினவினார்.

"ஹூசூர்! பாரசீக மொழி தெரியாதவர்களைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாகத் தெரியும்! பாரசீக மொழி தெரிந்தவர்களைக் காட்டிலும் கொஞ்சம் கம்மியாகத் தான் தெரியும் என்று தான் சொல்கிறாள்!" என்று பீர்பால் வியாக்கியானம் செய்தார்.

பாதுஷாவுக்குக் கொஞ்சம் சுயமாக யோசித்துத் தான் பார்ப்போமே என்று கொஞ்சம் சபலம் தட்டிற்று! 
சுயமாகச் சிந்திப்பது பாதுஷாக்களின் கௌரவத்திற்கு இழுக்கு என்ற நினைப்பு வந்தவுடன் அதைக் கை விட்டு விட்டார்! பணம் போனால் வரிவிதித்து ஈடு செய்து கொள்ளலாம்! கௌரவம் குறைந்து போனால்....!

ப்புறம் என்ன, வழக்கம் போல பரிசு கொடுத்து கௌரவப் படுத்தி, பரிசு கொடுத்த தானும் பெரிய ஆள் தான் என்று காட்டிக் கொள்கிற கூத்தும் அரங்கேறியது.


*******
ப்போதுமே தர்பாரிலேயே சந்தேகம் கேட்கிற சீனை நடத்தி நடத்தி அக்பருக்கே கொஞ்சம் அலுத்துப் போய் விட்டது!

தனால் வித்தியாசமாக அரண்மனைத் தோட்டத்தில், பீர்பால், எப்போதும் முதுகு வளைந்து துதிபாடும் கவிஞர்கள், முக்கியமான கைத்தடிகளுடன் அக்பர் உலாத்திக் கொண்டிருந்தார்.  அங்கே ஏராளமான பூச்செடிகள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அந்தப் பூக்களைப் பார்த்ததும் துதிபாடிக் கவிஞர் ஒருவருக்கு ஆவேசம் வந்து விட்டது. துதிபாடிகளுக்கு ஆவேசம் வந்தால் அங்கே  உளறலைத் தவிர வேறென்ன வரும்?

" !ஹூசூர்! உலகத்திலேயே இந்த அரண்மனைத் தோட்டத்தில் பூக்கிற மலர்கள் மாதிரி எங்கேயும் பார்க்க முடியாது! அக்பர் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே மலர்கிற பூக்களை வேறெங்கு தான் பார்க்க முடியும்?"

க்பருக்குப் பெருமை தாங்க முடியவில்லை! என்னதான் பொய் என்று தெரிந்தாலும், வலுக்கட்டாயமாகப் பாராட்டுவிழாக்களை ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு அங்கே காரியமாக வேண்டி வந்த துதிபாடிகள் நீதான் சூரியன்! நீதான் இந்த உலகத்துக்கே ஆதாரம்! உனக்கோ பல தாரம் அதனால் நீயுமொரு அவதாரம் என்று பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்பதில் ஒரு தனி சுகம் இருக்கத் தான் செய்கிறது அல்லவா!

பீர்பால் இந்தப் பாட்டை அங்கீகரிக்கிறாரா என்று தெரிந்து கொள்ளும் ஆசை வந்தது.நேரடியாக பீர்பாலை எப்படி இந்தத் துதிபாடியைப் போலவே சொறிந்து விடச் சொல்வது?   பீர்பால் ஏதாவது இடக்கு மடக்காகச் சொல்லி விட்டால்...? அதனால் சுற்றி வளைத்துக் கேட்டார்.

"பீர்பால்! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இந்தப் பூவை விட அழகானதொன்றும் இருக்க முடியுமா?"

"நாளை காலை, இந்தப் பூவை விட அழகானதாக ஒன்று  இருக்க முடியுமா இல்லையா என்பதை நிரூபிக்கிறேன் ஹூசூர்!" என்று பணிவாகச் சொன்னார் பீர்பால்.

றுநாள் தர்பாரில் பீர்பாலை, அவர் என்ன சொல்லப் போகிறார் என்ப
தைத் தெரிந்து கொள்ளும் ஆவலோடு அக்பர் எதிர் கொண்டார். ஆக்ராவில் இருந்து வந்த கைவினைக் கலைஞர் ஒருவரை பீர்பால் அக்பருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கலைஞர் அக்பருக்குப் பரிசாக பளிங்கில் செதுக்கிய மலர் ஒன்றைப் பரிசாக அளித்தார். உண்மையான பூவைப் போல, மிக நேர்த்தியாக, இயல்பான வண்ணங்களை எப்படித்தான் அதற்குள் கொடுத்தாரோ தெரியாது, அப்படி ஒரு அழகான படைப்பைப் பார்த்த அக்பர் மெய்மறந்துபோனார். ஆயிரம் தங்க முஹராக்களை அந்தக் கலைஞனுக்குப் பரிசாக அளித்தார்.

சிறிது நேரம் கழித்து வேறொருவர் அரண்மனைத் தோட்டத்தில் முந்தைய தினம் பார்த்த நிஜப் பூக்களைக் கொத்தாக அக்பருக்கு வணங்கி கையில் அளித்தார், எப்போதும் பார்க்கிற பூ தானே என்று அக்பர் இரண்டொரு வெள்ளி நாணயங்களை அவருக்கு அளிக்க உத்தரவிட்டார்.

"க, செயற்கையாகச் செதுக்கிய பூ, இயற்கையான பூவை விட நிஜமாகவே அழகு அதிகம் தான் போலிருக்கிறது!" என்றார் பீர்பால்.

பாதுஷாவுக்கு அவர் முந்தைய தினம் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்து விட்டது! 
புரிவதற்குத் தான் அதிக நேரமாயிற்று!


 

பீர்பால் கதைகள் -7 ஒரு புதன்கிழமைக் கலாய்த்தல்கள்!


டில்லிப் பாதுஷாக்கள்  என்றாலே கொஞ்சம் கேணத்தனமான, விபரீதமான, வித்தியாசமான சந்தேகங்கள் தினசரி வருவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பதை இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாதுஷாக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள், ஏதோ ஒரு காரணத்தை வைத்துப் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறவர்கள்   என்று ஒரு பெரிய துதிபாடிக் கும்பலே இருக்கிறதே!  இப்படிக் கேணத்தனமான கூத்தை வேடிக்கை பார்க்க மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு வரத்தயாராக இருக்கிற  மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி கலைச் சேவை "காட்டுகிற"  தர்பாரும் உண்டு! இது போதாதா?

ந்தேகப் பட்டு சந்தேகப்பட்டு மூளைக்கு வேலை  கொடுக்கிற மாதிரிக் காட்டிக் கொண்டதிலேயே அலுப்பு வந்து விட்டதோ என்னவோ! ஒரு நாளைக்கு, பாதுஷா அக்பருக்கு, அது கனவில் வந்தது! கனவில் வந்த சந்தேகம் கொஞ்சம் பயமுறுத்துகிற மாதிரியும் இருந்தது! புரியாத விஷயங்கள் எல்லாமே பயமுறுத்துபவைதானே!  பாதுஷா மட்டும் விதி விலக்கா?

னவில், தனக்கு ஒரே ஒரு பல்லைத் தவிர மற்ற எல்லாப் பல்லும் விழுந்து விடுகிற மாதிரிக் கனவு வந்தால், குழப்பம் வருமா வராதா? இங்கே ஏதடா சாக்கு என்று எது கிடைத்தாலும், அடிவருடிகளை வைத்துப் பாராட்டு விழா நடத்தி, தானே நம்ப முடியாதபடிக்கு  இந்திரனே சந்திரனே மனு நீதி சமூகநீதி சமத்துவம் கண்ட நாயகனே என்னைப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப் போடுவேன் என்ற அளவுக்குப் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருப்பதைப் போல, பாதுஷாவுக்குக் குழப்பம் வந்தால் என்ன செய்வார்கள்?

கூப்பிடு தர்பாரை! உத்தரவு பறந்தது! டில்லி குரல் கொடுத்தால் தர்பார் கிடு கிடுக்காதோ!?

னவுக்குப் பொருள் தெரிந்து கொண்டாக வேண்டுமே! நாடி, கைரேகை, ஜாதகம், கிளி, எலி ஜோசியம், முகத்தைப் பார்த்தே ஆரூடம் சொல்லும் ஆரூடக்காரர்கள், சோழியை உருட்டிப் போட்டுப் ப்ரச்னம் பார்த்து பலன் சொல்லிப் பல்லை இளிப்பவர்கள், இப்படி எல்லோரிடத்திலும்  பாதுஷாவுக்கு வந்த கனவுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டாயிற்று!

னேகமாக எல்லோருமே ஒன்று சேர்ந்தார்போல, ஒரே  விஷயத்தைத் தான் சொன்னார்கள். பாதுஷாவின் உறவினர்கள் அத்தனை பேரும், பாதுஷாவுக்கு முன்னாலேயே பரலோகம் போய்விடுவார்கள்!

ப்படிப் பலனைக் கேட்டதும் பாதுஷாவுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பதிலேயே சற்றுக் குழப்பம் வந்து விட்டது! தனக்கு முன்னாலேயே, நெருங்கிய உறவினர்கள் அத்தனைபேரும் பரலோகம் போய்விடுவார்கள் என்ற செய்தியைக் கேள்விப் பட்டதற்காக வருத்தப் படுவதா, இல்லை அது எப்படி இவர்கள் எல்லோரும் தன்னுடைய உத்தரவு இல்லாமலேயே முந்திப் போய்விடுவார்கள் என்பதற்காகக் கோபப் படுவதா? நவரசத்தில் எந்தரசம் இந்த சீனுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லையே!

பாதுஷாவுக்குக் கோபம் கோபமாக வந்தது! பின்னே, இவ்வளவு யோசிக்க விட்டால்....! குழப்பம் அதிகமாகுமா இல்லையா?

வராவது இதற்குப் பரிகாரம், மாற்று என்று எதையாவது சொல்லிக் குழப்பத்தைப் தனிவிக்கிரார்களா என்று அக்பர் சபையின் இரு மருங்கும் ஏற இறங்கி  இப்படி அப்படியும், அப்படி இப்படியுமாகத் தலையைத் திருப்பிப் பார்த்தார்! ஒருத்தரும் பதில் சொல்வதாகக் காணோம்!

ன்ன தர்பார் இது! மொத்தமும் தண்டங்கள்! ஒரு குழப்பத்தைத் தீர்ப்பதற்கு யோசனை கேட்டால், இன்னொரு குழப்பத்தைக் கொண்டு வருகிறவனைஎல்லாம்தர்பாரில் நிரப்பி....அம்ம்ம்மா!  இப்போதே கண்ணைக் கட்டுகிறதே!

ந்த பீர்பால் இருந்தாலாவது ஏதாவது சொல்லியிருப்பானே! பீர்பாலையும் காணோம்! பாதுஷா இப்படிக் குழம்பிக் கொண்டிருக்கும்போதே  பீர்பால் சபைக்குள் நுழைந்தார்! அக்பருக்கு, தன்னுடைய சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது! தான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா என்று பீர்பாலிடமும் அந்தக் கேள்வியை அக்பர் கேட்டார்.

கொஞ்சம் யோசித்து விட்டு பீர்பால் சொன்னார்: "அந்த ஒரு பல் மட்டும் விழாமல் இருந்ததாகக் கனவு கண்டது,  மற்ற எல்லோரையும் விட நீங்கள் அதிக ஆயுளோடிருப்பீர்கள் என்பது தான் ஹூசூர்! "

பாதுஷாவுக்கு மிகவும் சந்தோஷம்! ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை இந்த பீர்பால் எவ்வளவு சரியாகச் சொல்லி விடுகிறான்! வழக்கம்போல பீர்பாலைப் பாராட்டி விட்டுப் பரிசுகளும் அளித்துவிட்டு, தண்டத்துக்குக் கூடிய தர்பார் கலையலாம் என்று பாதுஷா உத்தரவு போட்டார்! இப்படி உத்தரவு போடுவது மட்டும் எவ்வளவு சுகமாக இருக்கிறது!

ரண்மனைக்குத் திரும்புகிற சமயத்தில் பாதுஷாவுக்குத் திடீரென்று ஏதோ பொறி தட்டியது மாதிரித் தோன்றியது! இப்படிப் பொறி தட்டுகிற சமயத்தில் எல்லாம், அடுத்த குழப்பம் தயாராக ஆரம்பித்துவிட்டது என்பது பாதுஷாவின் அனுபவம்!

ற்றவர்கள் சொன்னதைத் தானே, பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னான்! அதெப்படி, மற்றவர்கள் சொன்னபோது வருத்தமாக, கோபமாக வந்தது, அதையே பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது?

மாற்றி யோசிப்பதா, யோசித்து மாற்றுவதா ன்று பாதுஷாவுக்கு டுத்த ந்தேகம்  ழக்கம் போயாராகி விட்டது!

oooOooo

வால் பையன்கள் காட்டும் பரிணாமம்!


எழுத வேறெதுவும் செமை மொக்கையாகக் கிடைக்காத தருணங்களில் எல்லாம், பரிணாமத்தைப் பிராண்டுவது என்ற நல்ல வழக்கத்தை நம்ம வால்ஸ் வைத்துக் கொண்டிருக்கிறார்! சேக்காளி ராஜன் வந்து அடக்கினால் தான் உண்டு போல!

பரிணாமத்துக்கு முதலில் கொஞ்சம் முன்னுரை, அப்புறம்
அந்த
முன்னுரைக்கே விளக்கவுரை, அப்புறம் கொஞ்சம் படங்களோடு என்று பரிணாமப் பிராண்டல்கள் ஆரம்பித்துவிட்ட பிறகு நான் மட்டும் சும்மா இருந்துவிட முடியுமா என்ன?


அதனால் ஒரே ஒரு படம் மட்டும்! இந்தப் படத்துக்கும் கோனார் நோட்ஸ் போட வேண்டும் என்று கேட்காமல் இருக்கும் வரை சந்தோஷம்!

oooOooo 


வங்கிகள், நிதித்துறை,பொருளாதாரம் பற்றிப் பதிவில் எழுதி நாட்களாகி விட்டதே என்று செய்திகளைக் கொஞ்சம் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன்.  

அப்படிப் படித்துக் கொண்டிருந்தபோது சென்ற வருடம், அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, 'உலகப் பொருளாதார நெருக்கடியை நாம் நிறுத்த முடியும்-அதைப் பற்றிப் பேசாமல் இருந்தால்!"  என்ற வாசகத்தைப் பார்த்தேன்!  சென்ற வருட ஏப்ரல் மாதத்தில் வெளியான பக்கம் இது! இந்த விவகாரமான படத்தை ஒரு டி ஷர்ட்டில் போட்டு இந்த வலைத் தளத்தில் சொல்லப்பட்ட காரணம்  இது!

"
GFCSUCKS.COM aims to stop incessant talking about the Global Financial Crisis and believes it is only making matters worse."

சரிதானா என்று கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்!


 

சண்டேன்னா மூணு!கதை ஒண்ணு !அரங்கேற்றம் ஒண்ணு ! படம் ஒண்ணு !

பீர்பால் கதைகள் - 6


டில்லிப் பாதுஷாக்கள் என்றாலே கொஞ்சம் வித்தியாசமான, கேணத்தனமான, விபரீதமான சந்தேகங்கள், அறிவிப்புக்கள் இருந்து கொண்டுதான் இருக்கும்.பாதுஷா அக்பருக்கும் அப்படி ஒரு கேணத்தனமான சந்தேகம் எப்போதும் போல ஒரு நாளைக்கு வந்தது. இந்த மாதிரி  சந்தேகம் வரும்போதெல்லாம், சாமர்த்தியமான விடையைக் கண்டு பிடிப்பதற்கு பீர் பாலை விட்டால் வேறு எவர் இருக்கிறார்கள்!

"பீர்பால்! எனக்கு ஒரு சந்தேகம்!" என்று மெதுவாக ஆரம்பித்தார் அக்பர்.

"ஹூசூர்! சொல்லுங்கள்! எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன்" என்றார் பீர்பால்.

"உமக்க்குக் கல்யாணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆகின்றன?"

"இருபது வருடங்களுக்கும் மேலாக ஆகி விட்டன ஹூசூர்!"

"அப்படியானால், உம்முடைய மனைவியைப் பற்றி உமக்கு எல்லா விவரங்களும் தெரிந்திருக்க வேண்டும் இல்லையா?"

"அனேகமாக அப்படித்தான் ஹூசூர்!"

"அப்படியானால், உம்முடைய மனைவி இன்றைக்குக் கைகளில் எத்தனை வளையல்கள் அணிந்திருப்பார் என்று உமக்குத் தெரியுமா?"

கேணத்தனமான இந்தக் கேள்விக்கு இன்னொரு கேள்வி மூலமாகவே பதில் சொல்ல வேண்டும் என்று பீர்பால் தீர்மானித்துக் கொண்டார்.
"பாதுஷா! அரண்மனையில் இருந்து தர்பாருக்கு தினசரி படிக்கட்டுக்களில் ஏறி இறங்கித் தான் வந்து கொண்டிருக்கிறீர்கள், இல்லையா?"

அக்பருக்கு பீர்பால் எதற்காக இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்பது புரியவில்லை. ஆனாலும், உப்பரிகையில் இருந்து தினசரி தர்பாருக்கு வருவதற்குப் படிகளில் தினசரி ஏறி இறங்குவது வாடிக்கைதானே! "ஆமாம் பீர்பால்! என்ன புதிதாகக் கேட்கிறாய்?"

"நீங்கள் சிறுவராக இளவரசுப் பட்டத்தில் இருந்த காலத்தில் இருந்தே இந்தப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருப்பவர்  தான். தினசரி எத்தனை படிகளில் ஏறி இறங்குகிறீர்கள்  என்று சொல்ல முடியுமா?" என்று மிகப் பணிவுடன் கேட்டார் பீர்பால்.

கணக்கு என்றாலே பாதுஷாக்களுக்கு வயிற்றைக் கலக்க ஆரம்பித்து விடும்! இந்த லட்சணத்தில் கணக்கைக் கேட்டு அதற்கு பதில் சொல்வதென்றால்...!

கழகங்களாக இருந்தால் பிளந்து விடும்! அக்பர் வெறும் பாதுஷா தானே!பாதுஷாவுக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது!

"பீர்பால்! கணக்கு என்றால் எனக்கு நிறையவே உதைக்கும் என்று தெரிந்து வைத்துக் கொண்டு விளையாடாதே. எனக்கு இப்போதே கண்கள் பனித்து, மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்குகிறது! நுரையீரலையும் கனக்கச்செய்து விடாதே!என் கேள்விக்கென்ன பதில்? அப்படியே உன் கேள்விக்கும் என்ன பதில் என்று சொல்லி விடு! உனக்குப் புண்ணியமாகப் போகும்!"

"இரண்டுக்கும் பதில் பிரமாதமில்லை ஹூசூர்! தினசரி எத்தனை தரம் ஏறி இறங்கினாலும்  படிகளின் எண்ணிக்கை மாறுவதே இல்லை.ஆனால் அதைக் கூட நாம் கவனிப்பதில்லை. எண்ணுவதுமில்லை.அப்படியிருக்க, நினைத்து நினைத்து  அலங்காரங்களை மாற்றிக் கொண்டு, அணிகலன்களைக் கூட்டியோ குறைத்தோ அணிந்துகொள்கிற பெண்கள் என்ன செய்வார்கள், எத்தனை வளையலை அணிவார்கள், கழற்றுவார்கள் என்பதை மட்டும் சொல்லி விட முடியுமா என்ன! அது தான்! இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா ஹூசூர்!"

சந்தேகம் தீர்ந்தது என்ற மாதிரித் தலையை ஆட்டினார் அக்பர் பாதுஷா!


வேறு வழி? தீரவில்லை என்று சொல்லி, மறுபடியும் ஏடாகூடமாக ஒரு கணக்குக்கு பதில்  சொல்ல வேண்டிய சோதனை வந்து விட்டால்.....!

oooOooo
இன்றைய அரங்கேற்றம் !

பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

பாரதியின் கோபாவேசமான இந்தக் கவிதை வரிதான் இந்திய அரசியல்வாதிகள் ஒவ்வொருநாளும் அரங்கேற்றி வரும் கேணத்தனமான கொடுமைகளைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.அரசியலில் திமிர்பிடித்து  ஆடும் இந்தப் பேய்களை விரட்ட வழியிருந்தும், எங்கோ என்னவோ நடக்கிறது என்று கைகளைக் கட்டிக் கொண்டு வேறுபக்கம் திரும்பிக் கொண்டோ, அல்லது இலவசங்களில் மதியிழந்து மானாட, மயிலாட மங்கையர்கள் மார்பாடக் குதித்துக் குதித்து  ஆடும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் இளித்த வாயர்களான  இந்த ஜனங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!

ஜனங்களுக்கு அடி முட்டாள் பட்டம் கட்டுவதில் இன்றைய அரங்கேற்றம் மம்தா பானெர்ஜியின் உபயம்!

டில்லி ரயில்வே ஸ்டேஷனில், இன்று மதியம் பிளாட்பாரம் எண் பன்னிரண்டு, பதின்மூன்றில் கடைசி நேரத்தில் ரயில்கள் புறப்படுகிற விதத்தில் செய்த மாற்றம், அவசரப்பட்டு ஓடிய ஜனங்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண்ணும், ஒருசிறுவனும்
உயிர் ழந்திருக்கிறார்கள். ஒன்பது பேர் பலத்த காயம் அடைந்திருக்கிறார்கள்.



இதைஒன்றும் நடக்காத மாதிரியே நிர்வாகம் மூடி மறைக்கப் பார்த்தும், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில்  செய்தி வெளியே வந்து விட்டது.அதை விடக் கொடுமை, போதிய அவகாசம், முன்னறிவிப்பு இல்லாமல் ரயில்கள் புறப்படும் பிளாட்பாரத்த்தைக் கடைசி நேரத்தில் மாற்றி இந்த விபத்துக்குக் காரணமாக இருந்த நிர்வாக அலட்சியத்தைக் கண்டிப்பதற்குப் பதிலாக ரயில்வே அமைச்சர் மம்தா பானெர்ஜி ஜனங்களின் மீது தான் குற்றம் என்று தீர்ப்பு வழங்கிப் பேசியிருக்கிறார். இப்படிக் கூட்டமாக எந்தவிதமான கட்டுப்பாடுமில்லாமல் ஜனங்கள் ஓடியதில் தான் தவறு இருந்ததாம். அவர்களை அப்படி அதறப் பதற ஓட வைத்த பொறுப்பில்லாத கடைசி நேர மாற்ற அறிவிப்பு காரணமில்லையாம்! 

பாரதீய ஜனதாக் கட்சி, இப்படித் தன்னுடைய அமைச்சரவைப் பொறுப்பிலிருந்து எப்போதும் ஆப்செண்டீயாகவே இருந்து கொண்டு லோகல் பாலிடிக்ஸில் மட்டும் கவனம் செலுத்தும் மம்தா பானெர்ஜி  குறித்து பிரதம மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது. இங்கே மதுரைக்கார அமைச்சர் கூட அப்படித்தானே!  பாவம் மன்மோகன் சிங்! டம்மிப் பீசாக இருந்து கொண்டு எத்தனை கோளாறுகளுக்கு விளக்கம் கொடுத்தே ஓய்ந்து போக வேண்டியிருக்கிறது!!



பிரதமர் மன்மோகன் சிங் ஒரு டம்மிப் பீஸ்! அமைச்சர்கள் எல்லாம் வெறும் காமெடிப் பீஸ் என்று ஒதுக்கித்தள்ளிவிட்டுப் போய்விட முடியாதபடி, இவர்கள் அடிக்கும் கூத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய துயரத்தை ஜனங்களின் தலைமேல் சுமையாக ஏற்றிக் கொண்டிருக்கிறது.

இறந்தவர்களுக்கு இரண்டு லட்சம், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம்,  அப்புறம் கண்துடைப்புக்காக ஒரு விசாரணை அறிவித்து விட்டால் போதும்! அதற்குமேல் ஒரு மக்கள் நல அரசு என்ன செய்துவிட முடியும்?

இவர்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை! எங்கே எதன் மேலோ மழை பெய்கிறது என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம் பாருங்கள், உண்மையில் நம் மீது தான் குற்றம் இருக்கிறது!


அரியலூர் அளகேசா! ஆண்டது போதாதா?
மக்கள் மாண்டது போதாதா?

மெய்யாலுமே ஒரு விபத்து நடந்தபோது, சம்பந்தமே இல்லாத ரயில்வே அமைச்சரைப் பார்த்து அன்றைக்கு இப்படிப் பாட்டுப் பாடியவர்கள் இப்போது ஆளும் கூட்டணியில் தான் இருக்கிறார்கள். இப்போது அந்தப் பாட்டைப் பாடுவார்களா? ஆ! ராசா! ஆ! ராசா!


oooOooo
அடிக்கிற வெய்யிலுக்கு, இப்படியெல்லாம் ஐஸ்ப்ரூட் சாப்பிட ஆசைதான்!ஒத்துக் கொள்ளாதே, படம் பார்த்து  சந்தோஷப் படவேண்டியது தான்!

இங்கே அரசியல் வாதிகள் அடிக்கிற கூத்துக்கள், செய்கிற ஊழல்கள், எல்லாவறையும் பார்த்துக் கொண்டு உங்களால் சந்தோஷப் பட முடியுமா? முடிகிறதா?
 

பீர்பால் கதைகள்-5! ஏமாந்த சோணகிரியாகவே எப்போதும்!


டில்லி பாதுஷா அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் குளிக்க வேண்டும் என்ற விபரீத ஆசை வந்து விட்டது.

வாரிசுகளையும் கூட்டிக் கொண்டு, பீர்பாலுடன் யமுனை ஆற்றங்கரைக்குப் போனார். எல்லாத் துணிகளையும் அவிழ்த்துப் போட்டு விட்டு, பாதுஷா வாரிசுகளோடு ஆற்றில் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருந்தார். கரையில், பீர் பால், பாதுஷா, வாரிசு நம்பர் ஒன் வாரிசு நம்பர் டூ மூன்று பேருடைய துணிகளையும் தோளில் சுமந்து கொண்டு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், பாதுஷாவுக்கு பீர்பாலை நக்கல் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

"
பீர்பால்! உன்னைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது தெரியுமா?" என்று மெதுவாக ஆரம்பித்தார் அக்பர்.

"
ஹூசூர்! உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை நீங்கள் சொன்னால் தானே தெரியும்? சொல்லுங்கள்!" என்று அமைதியாகப் பதில் சொன்னார் பீர்பால். அக்பருக்கு நாக்கு வரை வந்து விட்ட நக்கலை அடக்கிக் கொள்ளத் தெரியவில்லை! இப்படியெல்லாம் அறிவுஜீவித் தனமாக எல்லாம் யோசிக்கத் தெரிந்து அதற்கு அப்புறம் பேசினால் எப்படிப் பாதுஷாவாக இருக்க முடியும்?

"
வண்ணான் கழுதை பொதி சுமந்து கொண்டிருக்கிற மாதிரி, நீங்கள் துணியை சுமந்து கொண்டிருப்பது தெரிகிறது! என்ன பீர்பால், நான் சொன்னது சரிதானே!" அக்பருக்கு பீர்பாலை நக்கலாகப் பேசி விட்ட சந்தோஷம், ஹோவென்று இரைந்து சிரித்தார்! வாரிசுகளுக்கும் ஏக சந்தோஷம்! பாதுஷா எப்படியெல்லாம் பேசுகிறார்! இதற்காகவே எவரை விட்டாவது ஒரு பாராட்டு விழா எடுத்து விடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

பீர்பால் பொறுமையாகப் பதில் சொன்னார்: "ஹூசூர்! முழு உண்மை! ஆனால் ஒரு சின்னத் திருத்தம்!நீங்கள் சொன்னது போல நான் சுமந்து கொண்டிருப்பது ஒரு கழுதைப் பொதி சுமை அல்ல! மூன்று கழுதைகளின் சுமையை சுமந்து கொண்டு நிற்கிறேன்!"

பாதுஷாவுக்கும், வாரிசுகளுக்கும் முகத்தில் ஈயாடவில்லை! பீர்பாலைக் கழுதையாகப் பரிகாசம் செய்யப் போய்த் தாங்களே கழுதையான சோகம், பீர்பாலுக்கு சரியான பதில் பாடம் சொல்ல முடியாத சோகத்தை யமுனையில், இன்னொரு முழுக்குப் போட்டாலாவது தீர்த்துக் கொள்ள முடியுமா என்று மறுபடி முழுக்குப் போட ஆரம்பித்தார்கள்.

இந்தக் கதையைக் கொஞ்சம் சுய கழிவிரக்கத்துடனேயே சொல்லித் தேற்றிக் கொண்டாக வேண்டியிருக்கிறது! எப்படி என்கிறீர்களா?

ஐந்து வருடங்களுக்கு முன்னால், வீடியோகானில் விற்பனை மேலாளராக இருந்த நண்பர் ஒருவர் அறிமுகத்துடன், மதுரை டவுன் ஹால் ரோடில் உள்ள வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் கடையில் சான்சுயி டிவி வாங்க முடிவு செய்தேன். வெவ்வேறு கம்பனி மாடல்களைப் பார்த்தபோதிலும் கூட அந்த நேரத்துப் புது வரவாக வந்திருந்த 29 இன்ச் திரை டீவீ  PJ29 MULTIPLEX மாடலைப் பார்த்து, அதன் சவுண்ட் எபெக்டில் மயங்கி வாங்கினேன். பிக்சர் ட்யூபிற்கு ஏழு வருட உத்தரவாதம் என்பது அந்த நேரத்தில் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரியவே, இந்த டீவீ மாடலை வாங்குவதற்கு அதுவும் ஒரு காரணமாகிப் போனது.  

வீட்டுக்கு டெலிவரி கொடுக்க வந்தபோது தான், இந்த டீவீயில் உள்ள மிகப் பெரிய குறை தெரிய வந்தது. பத்துக் கழுதை சுமை எடை கொண்ட இந்த டீவீ செட்டைத் தூக்கி வைக்கக் கைலாகுவான வழி வகை எதுவுமே இல்லை! நான்கு பேர் சேர்ந்து ஒரு மாதிரியாக அதன் ஸ்டாண்டில் வைத்துவிட்டார்கள். இதை நகர்த்துவதென்றாலோ, செர்வீஸ் செய்வதென்றாலோ அந்த நாலுபேருக்கு நன்றி பாட்டுப் பாடித் தான் செய்ய முடியும் என்ற சிந்தனை அப்போதே வந்தாலும், அதுவரை இருபது இன்ச் திரையில் பார்த்த கண்றாவிகளை இன்னும் பெரிய திரையில் பார்க்க முடிந்த, சவுண்ட் எபெக்ட் தூள், கிளப்பிய த்ரில்லான அனுபவத்தில் மறந்தே போனது.

பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு முன்னால் டீவீயில் படம் கொஞ்சம் மக்கர் செய்து கொண்டே வந்தது. ரெயின்போ எபெக்ட் மாதிரி ஒரு கூம்பு வடிவத்தில், திரையில் படம் வெற்றிகள் ஹோல்ட் இல்லாமல் அலையலையாக வருகிற தலைவலி வந்தது. வீனஸ் எலெக்ட்ரானிக்சுக்குத் தகவல் சொல்லி செர்விஸ் செய்வதை அவர்கள் பொறுப்பில் எடுத்து செய்ய முடியுமா என்று கேட்டதில், அது எப்படி சார் நாங்கள் ரிஸ்க் எடுப்பது என்ற ஒரு கேள்வியுடன், அங்கீகரிக்கப் பட்ட செர்வீஸ் செண்டர் என்று ஒரு நம்பரைத் தந்தார்கள்

க்வாலிடி என்ஜினீயரிங் செர்விஸ் என்ற பெயரில் மதுரை ஷெனாய் நகரில் இருந்து ஒரு செர்விஸ் ஆசாமி வந்து பார்த்தார். இரண்டு சர்க்யூட் போர்டுகளை எடுத்துக் கொண்டு செண்டருக்குப் போய் சரி செய்து எடுத்து வருவதாகச் சொல்லி விட்டு எடுத்துக் கொண்டு போனார். மறுநாளே தொலைபேசியில் அழைத்து, போர்டை செர்விஸ் செய்த வகையில் ஆயிரத்து அறுநூற்றைம்பது ரூபாய் ஆகும் என்று தகவல் சொன்னார்.

சரி, கொண்டு வந்து மாட்டிக் கொடுத்து விட்டு செக் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். நாங்கள் செக் எல்லாம் வாங்கிக் கொள்வதே இல்லை, எல்லாம் ரொக்கம் தான் என்றார்கள். வாரண்டி காலத்துக்குள் செர்விசுக்கு அனுப்பியதற்கு எனக்கு ரெகார்ட் வேண்டும், அதனால் செர்வீஸ் செண்டர் பேரில் செக் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்ன பொது, கொஞ்சம் இறங்கி வந்து ஜே சத்தியன் என்ற பெயரில் செக் வாங்கிக் கொள்ள சம்மதம் சொன்னார்கள். நிறுவனத்தின் பெயரில் தான் செக் என்று நான் கொஞ்சம் பிடிவாதமாக இருக்கவே, மறுமுனையில் செர்விஸ் பெர்சனிடம், போய் பிரீயாகவே மாட்டிக் கொடுத்துவிட்டு வா  என்று இரையும் சத்தத்தோடு அந்த சம்பாஷணை முடிந்தது.
மாலை அந்த செர்விஸ் நபரும், சத்தியனுமே நேரில் வந்தார்கள். பிச்சர் ட்யூபைப் பார்த்து விட்டு, ட்யூப் தான் அடி வாங்கி இருக்கிறது, செர்விஸ் சென்டருக்கு செட்டை எடுத்துக் கொண்டு வந்து (செட் பத்துக் கழுதை அல்லது அதற்கும் கூடவே கனமான சுமை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! ) அங்கே வந்து பேசுங்கள் என்று சொல்லவும், இது ஆகிற கதையாக இல்லையே என்று சந்தேகப் பட ஆரம்பித்தேன்.
என்னுடைய நண்பருக்கு தொலைபேசியில் விஷயத்தை சொன்னேன். வீடியோகான் நிறுவனத்தை விட்டு எளியே வந்து விட்டாலும் அவர் தற்போது பணிபுரிபவர்களோடு நல்ல தொடர்பில் இருப்பதால், அவர்களிடம் பேசி விட்டு இப்போதெல்லாம் எந்த கம்பனியும் நேரடியாக செர்விஸ் செண்டர், அல்லது செர்விஸ் என்ஜினீயர்களை வைத்துப் பார்ப்பது இல்லை, இது போல ஒரு தனி நபர்கள் அல்லது நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கையைக் கழுவி விடுகிறார்கள். க்வாலிடி என்ஜினீயரிங் செர்விஸ் என்று மதுரை ஷெனாய் நகர், வைத்தியநாத ஐயர் தெருவில் இருப்பது கம்பனியால் அங்கீகரிக்கப் பட்ட செண்டர் தான் என்றும் தகவல் சொன்னார். செட்டை சரி செய்வதற்கு அங்கே அனுப்புங்கள், பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொன்னார்.
ஆறு  நாட்களுக்கு முன்னாள் அந்த செர்விஸ் சென்டரில் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. இப்போது ரேட் ரூ.2500/- ஆகிவிட்டது! ஏற்கெனெவே சொன்னதும் இப்போது சொல்வதும் வித்தியாசமாக இருக்கிறதே என்று கேட்டதற்கு, உங்கள் வீட்டில் இருந்து வண்டி வைத்து எடுத்துப் போய் செர்விஸ் செய்து திரும்பக் கொண்டு வைக்கிற வாடகை ஐநூறு ரூபாய் சேர்த்து என்று சொன்னார். முதலில் பேசிய ஆயிரத்து அறுநூற்றைம்பதும் ஐநூறும் கூட்டினால் எவ்வளவு வரும், வாய்ப்பாடு தப்பாக இருக்கிறதே என்று சொன்னதும் அந்தப் பக்கம் வாடி மாப்பிளே செர்விசுக்கு மட்டும்  செட் வரட்டும் வச்சுக்கறோம் என்று கறுவிக் கொண்டது அந்த நேரத்தில் எனக்குத் தெரியவில்லை.
மறுநாள் ராஜா என்கிற செர்விஸ் பெர்சன், ஆரம்பத்தில் இருந்தே இந்த நபர் தான் இங்கே வந்துபோய்க் கொண்டிருந்தவர், வந்து செட்டை ஒரு  ட்ரை சைக்கிள் வண்டியைப் பிடித்து  எடுத்துக் கொண்டு போனார். நான்கு  நாட்களுக்கு முன்னால் காலையில் வீட்டுக்கு வந்து செட் ரெடியாகி விட்டது, அட்வான்ஸ் எதுவும் தருகிறீர்களா என்று கேட்டார். பேசியபடி செட்டைக் கொண்டு வந்து வைத்து விட்டு சரியாக வேலை செய்கிறது என்பதைக் காண்பித்து பில் தொகை மொத்தத்தையும் வாங்கிக் கொண்டு போகும்படி சொன்னேன். சரியென்று தலையாட்டிவிட்டுப் போனவர் தான், அப்புறம் ஆளைக் காணவில்லை! நேற்று முதல் நாள் தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது தான் மேலூரில் இருப்பதாகவும், பணத்தை சென்டருக்குக் கொண்டுவந்து கொடுத்து விட்டு செட்டை எடுத்துக் கொண்டு போகும் படி கம்பனியில் சொல்வதாகச் சொன்னார்.
இந்த நிமிடம் வரை டிவி செட் வீடு வந்து சேரவில்லை, செர்விஸ் சென்டரில் இருந்து எந்தத் தகவலும் இல்லை. செட்டை எடுத்துப் போனதற்கு முறையான ரசீது எதுவும் இல்லை. கம்பனி விசிடிங் கார்ட் பின்புறம் மாடல் விவரம், எடுத்துப் போன செர்விஸ் பெர்சன் ராஜா செல் நம்பர் 97881 56285  என்பதைத் தவிர வேறு விவரம் எதுவும் இல்லை. விசாரித்தால், இது வாடிக்கையாக நடப்பது தான் என்று சொல்கிறார்கள்.
சர்க்யூட் போர்டில் இரண்டு ஐசிக்களை மாற்றி இருப்பதாக மட்டும் தெரிகிறது. வேறோர் இடத்தில் விசாரித்தபோது சாதாரணமாக நூறு முதல் நூற்றைம்பது ரூபாய் வரையே அதற்கு விலை இருக்கும் என்ற தகவலும் கிடைத்தது. அங்கீகரிக்கப்பட்ட செர்விஸ் சென்டரில், இப்படி ஒரு பகல் கொள்ளை! கம்பனி அங்கீகரித்த  செர்விஸ் சென்டரிலேயே செர்வீஸ் செய்து கொள்வது கூட செல்லூர் மீட்டர் ரன் வட்டிக் காரர்கள் நடத்துகிற கட்டைப் பஞ்சாயத்து மாதிரியே ஆகிப் போனது, மதுரையில் ஏற்பட்டிருக்கிற தொழில் வளர்ச்சியாகப் பார்க்கும்போது பகீரென்கிறது.
சான்சுயி நிறுவனத்தின் வலைப்பக்கங்களுக்குப் போனால், கஸ்டமர் கேர் பகுதியைக் க்ளிக் செய்தவுடனேயே இந்தப் பக்கத்துக்குப் போகிறது. அதோடு சரி! வேறு எந்தவிதமான உதவியோ, தொடர்போ, புகாரை ஏற்றுக் கொள்கிற வசதியோ இல்லாமல் பிளான்க் பேஜாக நின்றுவிடுகிறது. இந்த லட்சணத்துக்குப் பெயர் செர்வீஸ் டிலைட் டாட் காம்! இது தான் சான்சுயி, இந்தியாவில் அதன் வணிகத்தைக் கவனித்து வரும் வீடியோகான்  நிறுவனம் வாடிக்கையாளர் சேவையை மேற்கொள்கிற லட்சணம்!  
வீடியோகான் வலைத்தளத்துக்குப் போய்ப்பார்த்தாலும் கஸ்டமர் கேர், புகாரைப் பதிவு செய்யுமிடம் என்று பார்த்தால் இதே செர்வீஸ் டிலைட் டாட் காம் தான்! அதே வெற்றுப் பக்கம், வெட்டி வேலை தான்! வீடியோகான் வலைப்பக்கத்தில் போனால் போகிறதென்று ஒரு மின்னஞ்சல் விலாசம் இருப்பதை இப்போது தான் தேடிக் கண்டுபிடித்தேன்.
சில நாட்களுக்கு முன்னால் பிராண்ட் என்றால் என்ன, பிராண்ட் இமேஜ் இப்படி சிலவிஷயங்களை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம். இடது பக்கம் இருக்கும் கூகிள் தேடும் வசதியில் தமிழில் பிராண்ட் என்று கொடுத்துப் பாருங்கள், ஒரு ஐந்து பதிவாவது இந்த விஷயம் குறித்து இருக்கும்.
ஓடுகிற வரை ஒன்றுமில்லை! குதிரை படுத்துக் கொள்ளும் போது தான், குழியையும் சேர்த்தே தோண்டுகிற கதையாக ஆகிப் போனது! இந்தியச் சூழ்நிலையில் பிராண்ட், செர்வீஸ் உத்தரவாதம், தரம் எல்லாம் வெறும் பேச்சு, நடைமுறையில் ஒரு புண்ணாக்குமில்லை என்பதைத் தெரிந்து கொள்ள என்னுடைய டீவீயே ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

பயன் படுத்துபவர் பார்வையில் இருந்து ப்ராண்ட் என்பது, தன்னை நாணயமான முறையில் அறிமுகப் படுத்திக் கொள்வது என்பதில்  ஆரம்பித்து-------

இன்றைய நிலையில், ப்ராண்ட் என்பது, ஒரு பொருளின், அதன் தயாரிப்பாளரின், ஒரு ஸ்தாபனத்தின், அப்புறம் அதைப் பயன்படுத்துகிறவரின் அடிப்படைப் பண்பு எத்தகையது என்பதன் அளவீடாக இருக்கிறது. எங்கே இருந்தோம், எங்கே போகிறோம் என்பதன் வெளிப்பாடாகவும் மாறி வருகிறது.

ப்ராண்ட் என்பது ஏமாந்தவன் தொடையில் கயிறு திரிக்கிற விஷயமல்ல!
 
ப்ராண்ட் என்பது தரத்தின் வெளிப்பாடு! தொடர்ந்து உறுதிப் படுத்தும் அடையாளம்!
 
ப்ராண்ட் என்பது, தவறான சித்திரத்தையோ, பொய்யான வாக்குறுதியையோ அளிப்பதுமல்ல.
 
ப்ராண்ட் என்பது, பயன்படுத்துபவருடைய  நம்பிக்கை! அதைக் காப்பாற்றும் தயாரிப்பாளரின் உத்தரவாதம்!
 
ப்ராண்ட் என்பது நேற்றைய காலத்தின் அடையாளமாக நின்று விடுவது அல்ல! நாளை வரும் நாட்களிலும் நிலைத்து நிற்பது!

இப்படி எழுதியிருந்ததைத்  திரும்பப் படித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, இங்கே நடைமுறையில் பிராண்ட்,  பிராண்ட் இமேஜில் இருக்கும் உத்தரவாதம் என்பதெல்லாம் இந்தியச் சூழ்நிலையில் எவ்வளவு தரம் திரிந்து, பயன்படுத்துபவர்களை ஏமாளிகளாகவும்,மோசடி செய்வதாகவுமே இருக்கின்றன என்பதையும் சேர்த்துப் பார்க்கிற அனுபவம் ஒன்றை நுகர்வோர் விழிப்புணர்வு கருதி இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது.

பிரிடிஷ்காரர்களிடமிருந்து அரசியலைக்  காப்பியடித்து, அதை எவ்வளவு கேவலமாகச் சீரழிக்க முடியும் என்பதைக் காங்கிரஸ் தலைமையில் இங்கே ஐக்கியமாகக் கூட்டணி அமைத்து அனேகமாக எல்லா அரசியல் கட்சிகளுமே செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு இணையாக, தொழில் நடத்திப் புதுமையை அறிமுகம் செய்து வணிகம் பெருக்கி சம்பாதிப்பதை விட இங்கே அரசியல்வாதிகளோடு ஊழல் கூட்டணி அமைத்து சம்பாதிப்பதில் தான் இந்தியத் தொழில் அதிபர்களின் அசாத்தியத் திறமை வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் தயவு, பரிபூரணமான கடாட்சம் இருந்த தெனாவட்டில் அம்பாசடர் கார் தயாரிப்பு நிறுவனம் தொழில் போட்டியை சமாளிக்கக் கையாண்ட கதையை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்.

திருவிளையாடல் படத்தில் சேர்ந்தே இருப்பது எது என்ற நக்கீரன் கேள்விக்குப் பதிலாக புலமையும் வறுமையும் என்று வருகிறமாதிரி சேர்ந்தே இருப்பது தொழிலதிபர்களின் புரட்டும், அரசியல்வாதிகளின் கூட்டும் என்பதாகத் தான் இந்தியத் தொழில் துறை காசநோயால் பீடிக்கப் பட்டது மாதிரி இருக்கிறது.

போதாக்குறைக்கு அமெரிக்க மாடல் மார்கெடிங், செர்விஸ் உத்திகளைக் காப்பியடித்து நம்மூர் ஆசாமிகள் என்னென்ன செய்வார்கள் என்பதற்கு இந்த ஒரு சம்பவம் மட்டுமில்லை, இன்னும் நிறைய வாடிக்கையாளர் சேவைக் குறைபாடுகளைப் பற்றி, செர்விஸ் செய்கிறேனென்று எப்படியெல்லாம் வாடிக்கையாளர்களை இளிச்சவாயர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்ல முடியும்.

ஆளைப் பார்த்து மயங்காதே, ஊதுகாமாலை! என்று ஒரு சொலவடையைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதே மாதிரித் தான் பிராண்ட், பிராண்ட் இமேஜ் என்று இந்தியச் சூழ்நிலையில் மயங்காதே! ஏமாறாதே என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

தற்போதைய நிலவரம்..அப்டேட் @ 1730 hrs   IST 15/05/2010

நேற்று நள்ளிரவு தாண்டி இந்தப் பதிவை வலையேற்றம் செய்த பிறகு  இணையத்தில் கிடைத்த வீடியோகான் கஸ்டமர் கேர்  மின்னஞ்சல் முகவரிக்கும் ஒரு சிறு தகவலை அனுப்பிவிட்டு அதன் நகலை, என்னுடைய நண்பருக்கு அனுப்பினேன். இன்று காலை அதைப் பார்த்து விட்டு அவர், வீனஸ் எலெக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் திரு கதிரேசனுக்கு தகவல் அனுப்பியதோடு, வீடியோகானில் பணிபுரியும் தனது நண்பர்களுக்கும் எனது மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார்.

அதற்குப் பிறகு நடந்தவை கொஞ்சம் அதிரடி தான்! எனக்கு முழுவிவரமும் சொல்லப்படவில்லை.

பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ளும்படி க்வாலிடி என்ஜினீயரிங் செர்விசஸ் ஆசாமிகளுக்குக் கொஞ்சம் "அழுத்தமாகவே" ஆலோசனை சொல்லப் பட்டு, இன்றைக்கு  மாலை ஐந்தரை மணிக்கு டிவி வீட்டில் டெலிவரி செய்யப் பட்டு விட்டது. அதற்கு முன்னால், நாலைந்து தொலைபேசி அழைப்புக்கள், இதை இவ்வளவு பெரிதாக எடுத்துக் கொண்டு போயிருக்க வேண்டாம், இனிமேல் எதுவானாலும் எங்களிடமே சொல்லுங்கள் செய்து தருகிறோம் என்ற மாதிரித் தன்மையாகப் பேசி....!

ஒரு நெருக்கடியான நிலையில் உதவிய நண்பர் திரு எம் எஸ் முரளீதரன், வீடியோகான் க்ரூப் ஹெட் திரு கோவிந்தராஜன், மற்றும் அவரது குழுவினர், வீனஸ் எலெக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் திரு கதிரேசன் ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.



 

வெள்ளிக் கிழமை சந்தேகங்கள்! பீர் பால் கதை வரிசை -4


ஒருநாள், பாதுஷா அக்பருக்கு  திடீரென்று ஒரு சந்தேகம் வந்து விட்டது!

ராஜா, பாதுஷா என்றாலே இப்படித்தானே என்கிறீர்களா? அதுவும் உண்மைதான்! இந்த மாதிரியான ஆசாமிகளுக்கு  வருகிற சந்தேகங்களே  கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருக்கும். இங்கே மதுரையில் இப்படித் தான் ஒரு வேலைவெட்டி இல்லாத பாண்டியனுக்கு  திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது! பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டா இல்லையா என்று!  அப்புறம் என்ன  ஆயிற்றென்பது, ஏ பி நாகராஜன் 'சங்கறுப்பது எங்கள்  குலம் சங்கரனார்க்கேது குலம்' என்று வசனம் எழுதுகிற காலம் வரையும், அதையும் தாண்டியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறதென்பது தெரிந்ததுதானே!

ஆக ஒரு விஷயம் தெளிவு! இப்படி உருப்படாத விஷயங்களில் தான் நம்மூர் ராஜாக்கள், பாதுஷாக்கள், மனுநீதிச் சோழர்களுக்கு சந்தேகமே வரும்!

ஆமாம் சாமிகளா!

அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் பெருத்த சந்தேகம்!
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள்  என்று ஒரு பெரிய துதிபாடிக் கும்பலே இருக்கிறதே!  வேடிக்கை பார்க்க  மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி அவ்வப்போது நடத்தும் தர்பாரும் உண்டு! இது போதாதா?

தர்பாரில் அக்பர் தன்னுடைய சந்தேகத்தைக் கேட்கிறார் விக்கிரமாதித்தன் கதைகளில் வருவது மாதிரியே அக்பருக்கு திடீர் திடீரென சந்தேகம் வருவதும், புத்திசாலியான பீர்பால் விடை சொல்வதுமாகவே பீர்பால்-அக்பர் கதைகளை அறிந்திருக்கிறோம்! 

இப்படி ஒன்று, இரண்டு, மூன்று என்ற வரிசையில் இது நாலாவது!

போன பதிவில் காரணம் ஆயிரம் கார்த்திகேயன் மெனெக்கெட்டு ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

பீர்பால் என்று அழைக்கப் படுபவருடைய இயற்பெயர் மகேஷ் தாஸ். உத்தரப் பரதேசத்தை சேர்ந்தவர். ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர்.. தன்னுடைய புத்தி சாமர்த்தியத்தினால் டில்லி பாதுஷா அக்பருடைய அபிமானத்துக்கு உரியவராகி, அவரால் பீர் பால் என்று அழைக்கப் பட்டவர். இதை இரண்டாவது பீர்பால் கதையிலேயே சுருக்கமாக சொல்லி இருந்தாலும், இப்போது வரலாறு முக்கியங்க என்ற வசனத்துக்கு விசுவாசமாக, மறுபடியும் இங்கே சொல்லுவதில் தவறில்லையே!

அன்றும் சரி, இன்றும் சரி டில்லியில் பாதுஷாக்களின் சாமர்த்தியத்தினால் அரசு நிர்வாகம் நடந்ததில்லை. சொல்லப் போனால், பாதுஷாக்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும் என்ற நிலை தான் அன்றும்! அப்படித் தான், வேறு வேலை வெட்டி இல்லாத ஒரு வெள்ளிக் கிழமையன்று  டில்லி பாதுஷா அக்பருக்கு திடீர் சந்தேகம் ஒன்று வந்து விட்டது! பாதுஷாக்களுக்கு சந்தேகம் மட்டும் தான் வரும்! 


சந்தேகப் படுவதைத் தவிர வேறொன்றுமறியேன் வலைஞர்களே!

இப்போது  மந்திரிசபைக் கூட்டம், மன்றக் கூட்டம் என்று நடத்துகிறார்கள் அல்லவா, அதே மாதிரி அக்பர் தன்னுடைய தர்பாரைக் கூட்டினார். தர்பார் என்ற வார்த்தைக்கு, வெட்டிக் கூட்டம் அல்லது வெட்டி அரங்கம் என்பதுதான்  உண்மையான அர்த்தம் தெரியுமில்லையோ?!

தர்பார் கூட்டியவுடனேயே, அவையில் ஒரே பரபரப்பு. பாதுஷா என்ன கேட்கப்  போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள எல்லோருக்குமே கொஞ்சம் அலுப்புடன் கூடிய ஆவல்தான்!  அலுப்புக்குக் காரணம், இது தினசரி வாடிக்கையாகிப் போனது! ஆவலுக்குக் காரணம், பாதுஷாவைக் குளிர வைக்கிற மாதிரி ஏதாவது சொல்லி விட்டால் கிடைக்கும் ஆதாயம்! ஆயிரம் அலுப்பிருந்தாலும் ஆதாயத்தை விட முடியுமோ!

பாதுஷா தர்பாரில் இருந்த அத்தனை பேரையும்  இடப்பக்கத்தில் இருந்து வலப் பக்கம் வரை, வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கம் வரை இப்படிக் கழுத்து கொஞ்சம் வலிக்கிற வரை திரும்பிப்  பார்த்தார். அடிக்கடி தொண்டையைச் செருமிக் கொண்டார். எல்லோரும் கவனமாகக் கேட்கத் தயாராக இருப்பதைப் பார்த்தவுடனேயே குஷி  பிறந்து விட்டது.

"சபையோர்களே! டில்லி பாதுஷாவாக இருப்பவனுக்கு என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்கிறபோதே மலைப்பாக இருக்கிறது. என்ன, நான் சொல்வது சரிதானே!"

சபைக்கு வருவதே, படிகள், வேறு சில விஷயங்களை சாதித்துக் கொள்வதற்காகத் தான்! சரியில்லை என்று சொல்லி விட முடியுமா? எல்லோரும், ஆமாமென்று தலையாட்டினார்கள்.

"இந்த சாம்ராஜ்யத்தில் பாதுஷாவுக்குத் தெரியாமல் பிறப்பு இறப்பு உட்பட  எதுவுமே கிடையாது என்றுதான் இன்று காலை வரை நினைத்துக் கொண்டிருந்தேன்!" என்று சொல்லி நிறுத்தினார் அக்பர்.

தர்பார் வாலாக்களுக்கு அக்பர் எதற்காக இதைச் சொல்கிறார் என்று நிஜமாகவே புரியவில்லை! புரிந்து தான் என்ன ஆகப் போகிறது? தர்பாருக்கு வந்தோமா, நாலு காசைப் பார்க்கிற வழியைப் பார்த்தோமா என்பதுதானே முக்கியம்! இருந்தாலும், பாதுஷா சொல்லும்போது, கூடச் சேர்ந்து ஒத்துப் பாடவில்லைஎன்றால் எப்படி!

"இன்றைக்குக் காலையில் கண்விழித்து, கோட்டை மதிலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கே சில காக்கைகள் அமர்ந்திருப்பதைக் கண்டேன்!"  இப்படி மறுபடியும் சொல்லிவிட்டு அக்பர் நிறுத்தின போது தர்பாரில் வழக்கமாகத் தூங்கி வழியும் பிரகிருதிகளுக்குக் கூட சுரணை வந்து, ' என்னது, பாதுஷா காக்கைகளைப் பார்த்தாரா' என்று ஆச்சரியப் பட்டார்கள்.பாதுஷா கண்ணில் பட்ட  காக்கைகளைத் துதிபாட வேண்டுமா, அல்லது தூற்ற வேண்டுமா, என்ன செய்தால் பாதுஷாவுக்குப் பிடிக்கும் என்று கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தார்கள். வாழைப்பழச் சோம்பேறிகளாகவே  தர்பாரில் காலம் கழித்து விட்டபடியால், அதைக் கூட யாராவது ஆரம்பிக்கட்டுமே என்று காத்திருந்தார்கள்.

வேறு எவரும் பேசாமல் இருந்ததைப் பார்த்துவிட்டு அக்பர் மீண்டும் பேசினார்.

"காக்கைகளைப் பார்த்தபோது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இத்தனை காலமாக டில்லி பாதுஷாவாக இருக்கிறோம், டில்லியில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன என்பதை யாராவது பொறுப்பாக பாதுஷாவுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்களா என்று யோசித்துப் பார்த்தேன். எனக்கு எவரும் எத்தனை காக்கைகள் என்று எண்ணிச் சொன்னதாக நினைவில்லை! யாருக்காவது தெரியுமா?"

அதுவரை அமைதியாக இருந்த தர்பார், திடீரென ஆயிரம், லட்சம் காக்கைகள் ஒரே இடத்தில் கூடிக் கரைவதுபோல சத்தக் கடையாக ஆனது. ஒருவர்  கை விரலை விட்டு  எண்ணி ஒரு ஐந்து இருக்குமா என்றார். அடுத்தவர்   அவ்வளவு இருக்காது என்றார். பக்கத்தில் இருந்தவருக்கோ ஒன்றும் புரியவில்லை. வெறும் ஐந்து தானா, கூட இருக்கும் போலத் தோன்றுகிறதே என்றார். முதலிருவரும், அந்த நபரை விநோதமாகப் பார்த்து விட்டு நாங்கள் காக்கையை எண்ணவில்லை, சரியாகச் சொன்னால் கிடைக்கும் பெட்டியின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்றல்லவா பேசிக் கொண்டிருந்தோம் என்றார்கள். அவரும் புரிந்தது, புரிந்தது என்று தன் பங்குக்கு இன்னும் கொஞ்சம் விரலை விட்டு எண்ணிப் பார்க்க ஆரம்பித்தார்.

பாதுஷா அக்பர் பழையபடியே, இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம், வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கம் என்று தர்பாரில் இருந்தவர்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் விரல் விட்டு எண்ணி, வாய்க்குள்ளேயே வாய்ப்பாடு முனகிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், தானும் ஒன்று இரண்டு எண்ணக் கற்றுக் கொள்ளலாமா என்று யோசித்தார். அப்புறம்,அதெல்லாம் பாதுஷாக்களின் கவுரவத்திற்கு ஒத்து வராதென்று அந்த எண்ணத்தையே ஓரங்கட்டி வைத்து விட்டார். தர்பாரில் ஒருவரும் பதில் சொல்ல முன்வருவதாகத் தெரியவில்லை!

"உங்களில் யார்  இதைக் கண்டுசொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?" இப்படிக் கேட்கும்போதே அக்பர் பீர்பாலை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டுதான் கேட்டார். இப்போதெல்லாம், பீர்பால் தானாக எதுவும் சொல்வதில்லை. அழுத்திக் கேட்டால் தான் பதில் சொல்கிறான். மகா அழுத்தக்காரன். இருந்துவிட்டுப் போகட்டுமே! பீர்பால் இல்லையென்றால், இன்னொரு கீர்பால்! தங்க மோகராக்களுக்கு மயங்காதவன் எவனாவது இருக்க முடியுமா என்ன? கீர்பால் எவனாவது முன்வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்த அக்பர் பொறுமை இழந்தார்.

"என்ன? யாரும் பொறுப்பெடுத்துக் கொள்ளப்போவதில்லையா?" குரலில் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. காக்கைகள் எத்தனை என்று கூடத் தெரியாத ஒருவன் பாதுஷாவாக இருப்பதா? அவமானம் என்று மீசை துடிக்க ஆரம்பித்தது. பாதுஷாவாக இருந்தால் இப்படியெல்லாம் மீசை துடிக்கப் பல்லைக் கடிக்க வேண்டியிருக்கிறது!  இந்த பாதுஷா கிரீடம் சுமப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எவருக்காவது புரிகிறதா  என்று அக்பர் மனதுக்குள்ளேயே கருவிக் கொண்டிருந்தார்.

"ஹூசூர்! நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்! நாளைக் காலை உங்கள் அரண்மனையிலோ, தர்பாரிலோ சரியான எண்ணிக்கையைச் சொல்லி விடுகிறேன்!" பீர்பால் எழுந்து மிகவும் பணிவாகச் சொன்னார். பணிவாகச் சொன்ன விதமே, என்னவோ தன்னைக் கேலி செய்வதுபோல அக்பருக்குத் தோன்றியது. ச்சே, பீர்பால் அப்படியெல்லாம் லந்து பண்ண மாட்டான் என்று பாதுஷா தன் மனதைத் தானே தேற்றிக் கொண்டு, தர்பார் கலையட்டும் என்று உத்தரவு போட்டார்! இப்படி உத்தரவுக்கு மேல்  உத்தரவு போடுவது கூட எவ்வளவு  கஷ்டம்! எவருக்காவது புரிகிறதா என்று அக்பர் வருத்தப் பட்டுக் கொண்டே அரண்மனைக்குப் போனார். பீர்பால் சாமர்த்தியக் காரன்! மற்றவர்களெல்லாம், கைவிரலை விட்டு ஒன்று இரண்டு என்று என எண்ணிக் கொண்டிருக்கும் போதே கடினமான கணக்கையெல்லாம் போட்டு முடித்துவிடுகிற சாமர்த்தியக் காரன். அவனால் முடியவில்லை என்றால், வேறு எவராலுமே முடியாது! நாளைக் காலை, டில்லியில் இருக்கும் காக்கைகள் எத்தனை என்ற துல்லியமான புள்ளி விவரம் தெரிந்து விடும்! இதுகூடத் தெரியாமல் ஒரு பாதுஷா இருக்கலாமோ!  இப்படி யோசனைக்கு மேல் யோசனையாக  உழட்டிக் கொண்டே அன்றையப் பொழுதை பாதுஷா கழித்தார்.

மறுநாள் பொழுதுவிடிந்தது. அவசர அவசரமாக காலைக் கடன்களை முடித்துவிட்டு, அக்பர் தர்பாரைக் கூட்ட உத்தரவிட்டார். எப்போது தர்பார் கூடும் என்று காத்திருந்தது போல அத்தனைபேரும் தர்பாரில்  குழுமி விட்டார்கள். அவர்களுக்கும், டில்லியில் எத்தனை காக்கைகள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் வந்து விட்டது என்றில்லை! சந்து கிடைத்தால் சிந்து பாடிக் கொஞ்சம் பெட்டிகளைத் தேற்றிக் கொள்ளலாமே என்ற நப்பாசைதான்! வேறென்ன!

தர்பாரில் வழக்கமான துதிபாடுகளுக்குப் பின் அக்பர் அமர்ந்து கொண்டவுடனேயே பீர்பால் அவைக்கு வந்துவிட்டாரா என்று கேட்டார்.

"ஹூசூர்! இதோ  வந்து கொண்டே இருக்கிறேன்!" என்றபடி பீர்பால் அவைக்குள் நுழைந்தார்.

"ஏற்றுக் கொண்ட வேலையை சரியாக செய்து முடித்தீர்களா?"

"ஒரு தடவைக்கு இரு தடவையாக எண்ணிக்கையை சரி பார்த்துவிட்டேன் ஹூசூர்!"

"டில்லியில் உள்ள காக்கைகள் எத்தனை பீர்பால் ? "

"சரியாக அறுபதாயிரத்து ஐநூற்று ஐம்பத்திரண்டு காக்கைகள் டில்லியில் வசிக்கின்றன ஹூசூர்!"

சந்து கிடைத்தால் சிந்து பாடத் தயாராக இருந்த ஒருவர் எழுந்தார். "பீர்பால் ஐயா! நீங்கள் சரியாகத் தான் எண்ணியிருப்பீர்கள்! ஆனாலும், ஒரு பத்து நூறு காக்கைகள் கூட இருந்தால், அதற்கு என்ன சொல்கிறீர்கள்?"

"இது என்ன கேள்வி! நம் வீட்டுக்கு விருந்தினர்கள் வருவதே இல்லையா? அதே போல டில்லியில் உள்ள காக்கைகளின் உறவினர்கள் வந்திருப்பார்கள்!" என்று கொஞ்சம் கூடத் தயங்காமல் பீர்பால் சொன்னவுடன், சிந்துபாட வாய்ப்புத் தேடியவர் சந்திலேயே உட்கார்ந்து விட்டார்.

'ஆஹா! பீர்பால் எத்தனை புத்திசாலி! எவ்வளவு சரியாகச் சொன்னான்' என்று வியந்து கொண்டே அக்பர் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தானும் கேள்வி ஏதாவது கேட்கவேண்டுமே என்று கேட்டார். கேட்காவிட்டால், பாதுஷாவுக்கு கவுரவம் குறைந்துபோய் விடுமே!

"அதெல்லாம் சரி பீர்பால்! ஒருமுன்னூற்று அறுபது காக்கைகள் குறைகிற மாதிரித் தெரிந்தால்......?"

"ஹூசூர்! அந்த முன்னூற்று அறுபதும் தங்கள் உறவினர்களைப் பார்க்கப் போயிருக்கும்! நீங்களே வேண்டுமானால் சரி பார்த்துக் கொள்ளுங்கள்!"

யாராவது முன்வந்தால் தானே! அப்புறம் பாதுஷா மட்டும் எப்படி முந்துவதாம்! வேறு வழியில்லாமல், சரியான புள்ளி விவரத்தைத் திரட்டியதற்காக பீர்பாலுக்குப் பரிசும், பாராட்டும் அளித்து விட்டு அப்புறமாகத் தர்பார் கலைந்தது.


டிஸ்கி ஒன்று:

நடப்பு அரசியல் விவரங்களோடு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று தெளிவாகவே அறிவிக்கப் படுகிறது! நடப்பு நிலவரம், இதைவிட மிகவும் மோசம்! இதை விட மிகவும் கேவலம்!

டிஸ்கி இரண்டு :

சிந்து பாட வாய்ப்புத் தேடியவர், சந்திலேயே உட்கார்ந்து கொண்டு விட்டார் என்று ஒரு வரி வருகிறது. எந்தஊரில் எந்த சந்து என்றெல்லாம் விலாசம் விசாரிக்க வேண்டாம். உங்கள் தொகுதிப் பக்கத்திலேயே தேடிப் பார்த்துக் கொள்ளவும்! எனக்குத் தகவல் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை!


 "ஒவ்வொரு இருட்டுக்குப் பின்னாலும் பெரு வெளிச்சம் காத்திருக்கிறது !"

இந்த ஒரு நம்பிக்கைதான், இத்தனை கூத்துக்குப் பிறகும் இந்த தேசத்துக்கு விடிவு, விடுதலை வரும் என்ற ஆறுதலைத் தந்து கொண்டிருக்கிறது!



நான்கு முட்டாள்கள்! பீர்பால் கதைகள்!



தெனாலி ராமன், மரியாதை ராமன் கதைகள் மாதிரி, வடக்கே அக்பர்-பீர் பால் கதைகள் மிகவும் பிரசித்தம். இதில் பல கதைகள், கொஞ்சம் முட்டாள்தனமான காமெடியாகத் தோன்றினாலும் கூட, இந்தக் கதைகளிலும் சில வாழ்வியல் உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் செவிவழியாகவே பரவிய இந்தக் கதைகள் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன. தவிர, கதைப்பது, கதை கேட்பது என்பது படைப்பில், பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கே மட்டும் சொந்தமானது.

அந்தப் பரிணாம பலவீனத்தை நன்கு புரிந்து கொண்டிருப்பதால் தான், இந்திய அரசியல் வியாதிகள், ஜனங்களுடைய காதுகளில் அம்பாரம் அம்பாரமாகப் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்! நாமும் சந்தோஷமாக, கேப்பையில் நெய் வடிகிறது என்று அவர்கள் சொல்லும் போது, ஆமாம் ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டு, தேர்தலுக்குத் தேர்தல் அவர்களிடமே தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறோம்!

இல்லையா?!!

பீர்பால் கதைகள் வரிசையில், இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே  ஒன்று, இரண்டு என இரு  கதைகளை இன்றைய நடப்போடு தொடர்புபடுத்திப் பார்த்திருக்கிறோம்! அந்த வரிசையில் இது மூன்றாவது!



நான்கு முட்டாள்கள் !

 
என்னவோ தினசரி மிகப் பெரிய அறிவாளிகளையே சந்தித்துக் கொண்டிருந்தது போலவும், அப்படி சந்தித்து சந்தித்து மிகவும் அலுப்புத் தட்டி விட்டது போலவும், டில்லி பாதுஷா அக்பருக்கு இருப்பதிலேயே படு முட்டாள்களை சந்திக்க வேண்டும் என்ற விபரீத ஆசை ஒரு நாள் உண்டாகி விட்டது! டில்லி பாதுஷாக்கள் என்றாலே அன்றைக்கும்  சரி இன்றைக்கும் சரி கொஞ்சம் விபரீதமான, வித்தியாசமான, மறை கழன்ற கேசுகள் தான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை தானே!

முட்டாள்களை சந்திக்க வேண்டுமென்ற ஆசை வந்தது சரி, அவர்களை எப்படிக் கண்டு பிடிப்பது?

அக்பர் டில்லி பாதுஷா அல்லவா, உத்தரவு போட்டால் போயிற்று! அத்தனை முட்டாள்களும் வரிசையில் வந்து நிற்க மாட்டார்களா என்ன?! ஆனாலும் அதில் கடினமான  பகுதி என்னவென்றால், இருப்பதிலேயே வடிகட்டின முட்டாள்களாகப் பார்த்து அதில் நான்கு பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! அதற்கு புத்திசாலித்தனமும், சாதுர்யமும் உள்ள ஒருவர் வேண்டாமா!

"கூப்பிடு பீர் பாலை!" பாதுஷா அக்பர் காவலருக்கு உத்தரவிட்டார். பீர் பாலும் அரசவைக்கு வந்து சேர்ந்தார்.

"பீர்பால்! இருப்பதிலேயே வடிகட்டின முட்டாளிலும் வடிகட்டின முட்டாளாக ஒரு நான்கு பேரைப் பார்க்கவேண்டும்! கண்டு பிடித்து அரசவைக்கு அழைத்து வாரும்!"

"அப்படியே செய்கிறேன் பாதுஷா!" சொல்லி விட்டு பீர் பால் புறப்பட்டு விட்டார்.

போகிற வழியில் தென்படும் மனிதர்களைக் கவனித்துக் கொண்டே பீர்பால் அவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.முட்டாள்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம்,இருப்பதிலேயே அடிமுட்டாள்களாகப் பொறுக்கிஎடுக்க வேண்டாமா!

எதிரே ஒரு மனிதன், ஒரு திருமணத்திற்கு சீர்வரிசை கொண்டு போவது போல, பரிசுப் பொருட்களை ஊர்வலமாகக் கொண்டுபோவதைப் பார்த்தார். அந்த மனிதனுடைய நடவடிக்கைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கவே அவனை நிறுத்தி விசாரித்தார்.

"ஐயா! எனக்கும் சோனியா  என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது. திடீரென்று அந்தப் பெண் என்னுடன் நிச்சயத்தை முறித்துக் கொண்டு வேறொருவனுடன் திருமணம் செய்து கொண்டு விட்டாள். வம்பு வழக்கு,ஏகப்பட்ட ரகளை, பிரச்சினைக்குப் பிறகுதான் திருமணம் நடந்ததாம்.அவளுக்குத் தான் இந்த சீர் வரிசையெல்லாம் எடுத்துப் போகிறேன்." என்று விவரம் சொன்னான் அந்த மனிதன். அவன் யார், அந்த சானியா யார் என்பதையெல்லாம் விசாரித்துப் பார்த்துவிட்டு, பீர்பால் இவன் அடி முட்டாளிலும் வடிகட்டின முட்டாள் என்று முடிவு செய்தார்.

அடுத்து ஒரு மனிதன்,
தலைக்கு மேல் புல்கட்டுச் சுமையைச் சுமந்து கொண்டு சினையாயிருந்த எருமை மீது உட்கார்ந்து கொண்டு போய்க் கொண்டிருந்தான். அவனை நிறுத்தி பீர்பால், புல்கட்டை எருமை மீது வைத்துக் கொள்ளாமல் எதற்காகத் தன தலை மீது சுமந்து கொண்டு போகிறான் என்று விசாரித்தார்.

"ஐயா! என்னுடைய எருமை  சினையாயிருக்கிறது! அதன் மேல் புல்கட்டை வைத்துக் கொண்டு போனால், அதற்கு சுமையாக இருக்குமே என்று தான், நான் அதன் மேல் உட்கார்ந்து கொண்டு, என்தலைமேல் புல்கட்டைச் சுமந்துகொண்டு போய்க் கொண்டிருக்கிறேன். எருமைக்கு பாரம் குறையும் அல்லவா?" என்று பதில் சொன்னானாம். அக்பருக்குக் காட்ட இவனை விட அடிமுட்டாள் வேறு எவனும் கிடைக்க மாட்டான் என்று பீர்பால் முடிவு செய்தார்.

சோனியாவுக்கு சீர்வரிசை கொண்டுபோனவன், எருமைக்கு சுமையைக் குறைக்கிறேன் என்று அதன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, புல்கட்டை சுமந்து போனவன் ஆக இந்த இரண்டு பேர்வழிகளையும் அழைத்துக் கொண்டு பீர்பால் அக்பரிடம் போனார்.

இரண்டு பேர் கதையையும் கேட்ட அக்பர், பீர்பால் தேர்ந்தெடுத்தது சரிதான் என்று ஒப்புக் கொண்டார். கொஞ்ச நேரம் கழித்துத் தான், தான் சொன்னது நான்கு பேர், பார்த்தது இரண்டைத்தான் என்று அக்பருக்கு உறைத்தது. பாதுஷாக்களாக இருப்பதில் மிகப் பெரிய சிரமம், தாங்கள் என்ன உத்தரவு போட்டோம் என்பதை நினைவு வைத்துக் கொள்வது தான்.

"பீர்பால்! உம்மை நான்கு முட்டாள்களை அல்லவா கண்டு பிடித்துக் கொண்டு வரச் சொன்னேன். மீதி இரண்டு பேர் எங்கே?" என்று கேட்டார் அக்பர்.

"நான்கு முட்டாள்களும்  இங்கேயே இருக்கிறார்கள் பாதுஷா!" என்றார் பீர் பால். அக்பருக்குக் கோபம் வந்து விட்டது. பாதுஷாவாக இருப்பதனால் ஒன்று இரண்டுக்கு மேல் எண்ணத் தெரியாது என்று பீர்பால் நினைத்துவிட்ட்டானா என்ன?

"எங்கே அந்த மீதம் இரண்டு பேர்?"

"இதோ என்னைப் பாருங்கள் பாதுஷா! மூன்றாவதாக நான் இருக்கிறேன்! முட்டாள்களைத் தேடிக் கொண்டு போன என்னை விடப் பெரிய முட்டாள் வேறு எவராவது இருக்க முடியுமா? "

பீர்பால் இப்படித் தன்னையே முட்டாள் என்று சொல்லிக் கொண்டதில் அக்பருக்கு மிகவும் சந்தோஷம்! இத்தனை நாள் இவன் பெரிய புத்தி சாலி, பெரிய சாமர்த்தியக் காரன் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நானே கூட இவனைப் பாராட்டி நிறைய சன்மானம் அளித்துப் பாராட்டியிருக்கிறேன். ஆனால், அவனே தன்னை பெரிய முட்டாள் என்று சொல்லிக் கொள்வது கேட்பதற்கே எவ்வளவு சுகமாக இருக்கிறது! புத்தி சாலிகளுக்கு பாதுஷா ஒரு பொருட்டே அல்ல! முட்டாள்கள் இருந்தால் தான் பாதுஷாக்கள் பாதுஷாக்களாக இருக்க முடியும்!

பாதுஷாவின் சந்தோஷம் கொஞ்ச நேரம் நீடித்தது! அப்புறம் வழக்கமாக வருகிற சந்தேகம்வந்து விட்டது! பீர்பால்,கண்ணில் இரண்டைக் காட்டினான், தன்னையே மூன்றாவது முட்டாள் என்று சொல்லிக் கொண்டான். நாலாவது எங்கே?

"பீர்பால்! ஒன்று, இரண்டு, மூன்று! எங்கே அந்த நாலாவது முட்டாள்? இங்கேயே இருப்பதாக வேறு சொல்கிறாய்! என்னை ஏமாற்றுகிறாயா?" அக்பரின் கேள்வியில் கோபம் கொஞ்சம், குழப்பம் கொஞ்சம் கலப்படமாக வந்தது.

பீர்பால் மிகவும் பணிவோடு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை பாதுஷாவிடம் நீட்டி, "நான்காவது மிகப் பெரிய முட்டாளை இதிலேயே பார்க்கலாம், பாதுஷா!" என்றார்!

கண்ணாடியில் தன்னுடைய முகத்தையே பார்த்துக் கொண்ட பாதுஷாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை! மறுபடியும், பீர்பால் தன்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டிவிட்டதும், தான் தோற்றுவிட்டதும் புரிந்தது.

"உருப்படியான வேலைகளை விட்டு விட்டு, முட்டாள்களைத் தேடி அலைந்த நான் பெரிய முட்டாள் என்றால், அப்படி என்னைத் தேட அனுப்பித்தவர்  என்னைவிடப் பெரிய முட்டாளாகத் தான் இருக்க வேண்டும்! இல்லையா பாதுஷா?! ஆக, நான்கு முட்டாள்கள் இங்கேயே இருப்பதாகச் சொன்னது தவறில்லையே!"

அசடு வழிய, பீர்பால் சொல்வதற்குத் தலையாட்டி சிரித்து மழுப்புவதைத் தவிர டில்லி பாதுஷாவுக்கு வேறு வழி தெரியவில்லை! 

அக்பர் மனதுக்குள் கருவிக் கொண்டார். பீர்பால் நீ புத்திசாலிதான்! ஆனால், என்றைக்காவது ஒரு நாள், நீ என் முன்னால் மண்டியிட்டுக் கெஞ்சத் தான் போகிறாய்!  அப்படி ஒரு நாள் வராமலா போய்விடும்?

பீர்பால் அக்பரைப் பார்த்துச் சிரித்தது, தன்னுடைய  மனவோட்டத்தைப் புரிந்து கொண்டதால் தான் என்று அக்பருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் முளைத்தது. சந்தேகமெல்லாம், இப்போதே அதைக் கேட்கலாமா, வேண்டாமா என்பது தான்!

இப்போது, பாதுஷாவுக்கு அடுத்த குழப்பம் ஆரம்பித்து விட்டது.