இன்றைய செய்திகளில் கொஞ்சம் அரசியல்!

மஹாராஷ்டிரா அரசியலில், அரசு அமைப்பதில் ஆறப்போட்டே சிவசேனாவை ஒருவழி செய்து விடலாமென்று சரத் பவார் முடிவு செய்து விட்டார் போல இருக்கிறது. காங்கிரசுக்கும் வேறுவழி இல்லை. சரத் பவாருடன் ஒட்டிக் கொண்டிருந்தால் மகாராஷ்டிராவில் கொஞ்சநஞ்ச சீட்டாவது கிடைக்கும். சொந்தக்காலில் நிற்கிற தெம்பும் தைரியமும் இந்திரா காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, இப்போது அடியோடு இல்லாமலேயே போய்விட்டது. மஹாராஷ்டிராவில் என்ன மாதிரி அரசியல் செய்வது என்பதில் காங்கிரஸ் திக்குதிசை தெரியாமல் தடுமாறி நிற்கிறது. அந்த நாட்களில் பர்கா தத் காங்கிரசுக்கு இலவச அரசியல் ஆலோசனை அள்ளித் தந்த  மாதிரி, ஹிந்துஸ்தான் டைம்ஸில் இன்றைக்கு ஒரு பெண்மணி கடவுளாகக் கொடுத்திருக்கிற வாய்ப்பைத் தவறவிட்டால், காங்கிரசை அந்தக் கடவுளாலும் கூடக் காப்பாற்றமுடியாது என்று எழுதியிருக்கிறார்!!


நம்பக்கூடாதவர்களை நம்பி சவுண்டு விட்டதில்  சிவசேனா இருப்பதையும் கோட்டை விடப்போகிறது என்பது பிஜேபியின் தேசியப் பொதுச் செயலாளர் ராம் மாதவ் இனிமேல் சிவசேனா பிஜேபி கூட்டணிக்குத் திரும்புவது சாத்தியமே இல்லை என்று சென்ற வியாழனன்று ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொன்னபோதே வெட்டவெளிச்சமாகி விட்டது. ஆனால் இன்றைக்கும் கூட சிவசேனா வீம்பைக் கைவிடாமல் பழைய நினைப்பிலேயே பேசி வருவது கேலிக்கிடமாகி வருவது ஒரு பக்கம்! அதன் MLAக்களே உத்தவ் தாக்கரேவை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கும் நிலைமை இன்னொரு பக்கம்! ஆக ஒரு இயக்கமாக அல்லது அரசியல் சக்தியாக இருப்பதையும் சிவசேனா கோட்டை விடப் போகிறது! ஒரு மாநிலக் கட்சியாக, உதிரியாக இருந்துகொண்டே அகில இந்திய அரசியலையும் ஆட்டிப்படைக்கலாம் என்று கனவு காண்பது, இப்படி அஸ்திவாரமே கலகலத்து போய்விடுவதில் தான் முடியும் என்பதற்கு சந்திரபாபு நாயுடு முதல் ஏகப்பட்ட உதாரணங்கள் இங்கேயே உண்டு!


உள்துறை அமைச்சகத்தின் தீவீர பரிசீலனைக்குப் பிறகு  சோனியா மற்றும் வாரிசுகளுக்கு SPG பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. Z+ பாதுகாப்பை CRPF கமாண்டோக்கள் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.  நாடாளு மன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இந்தவாரம் திங்கள் முதல் தொடங்கியதில், அரசியல் செய்வதற்கு வேறு விஷயங்களே இல்லாத காங்கிரசும் திமுக முதலான கூட்டாளிகளும் இரு அவைகளிலும் ரகளை செய்துவிட்டு வெளி நடப்பு செய்திருக்கின்றன. என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள், முடிவெடுத்தது எடுத்ததுதான் என்று மத்திய அரசு இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்தில் எந்தவிதமான வாக்கு வாத அக்கப்போர்களிலும் சிக்கிக் கொள்ளாமல் அமைதியாக இருப்பது இன்றைய செய்தி விசேஷம்.


மேற்கு வங்கத்தில்   சுமார் 90 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிவாய்ப்பைத்  தீர்மானிக்கிற 31% முஸ்லீம் வாக்குவங்கி சிந்தாமல் சிதறாமல் தனக்கே கிடைக்க வேண்டும் என்று மம்தா பானெர்ஜி / திரிணாமுல் காங்கிரஸ் ஏகபோக உரிமை கொண்டாடுவதில் பெரிய ஓட்டை விழுகிற மாதிரி அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சி மேற்கு வங்கத்திலும் களம் இறங்கியிருப்பதில் சிறுபான்மை தீவிரவாதம் பிஜேபியிடம் பணம் பெறுகிறது  என்று மம்தா பானெர்ஜி பேசியிருப்பது கடுமையான சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தகப்பன் நேரு கொஞ்சம் பூசி மெழுகினாற்போல செகுலரிஸம் பேசியதை 1980களில் இந்திராவும் அடுத்து ராஜீவ் காண்டியும் அப்பட்டமாக சிறுபான்மையினரைக் குளிர்விப்பது மட்டும் தான் லட்சியம் என்று முஸ்லிம் வாக்குவங்கியைக் குறிவைத்த சீரழிவின் அடுத்த கட்ட நகர்வு இது. #FirstPost தளத்தில் இன்று ஸ்ரீமாய் தாலுக்தார் எழுதியிருக்கிற செய்திக்கட்டுரை மேற்கு வங்க அரசியல் களேபரங்களின் நடப்பு நிலவரத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. Without naming him and the AIMIM, Mamata said in Cooch Behar on Monday: "A political party…. like in some Hindus, there is extremism, there are some people who have emerged even among minorities who are extremists. They take money from the BJP, keep in mind. They take money from the BJP, there is such a party, their home is in Hyderabad, not here." என்கிறது டெலிகிராப் நாளிதழ். 

மீண்டும் சந்திப்போம். 

இன்றைக்கென்ன விசேஷம்? அட, செய்திகளில் தான்!

நவம்பர் 19 இந்த நாளுடைய விசேஷம் என்னவென்று தெரியுமா? இப்படிக்கு கேட்டுக் கொண்டே வந்தார் அண்ணாச்சி! அண்ணாச்சி வங்கி வேலையில் இருந்த நாட்களில் எனக்கு சீனியர், விவரம் தெரிந்தவர். பதிவு எழுதவந்த ஆரம்பநாட்களில் எனக்கு ஒருவிதத்தில்  உந்துசக்தியாகக்கூட இருந்திருக்கிறார்! "இன்னைக்கு யாருக்காச்சும் பொறந்த இல்லே  இறந்த நாளா? சரியா ஞாபகம் வரலியே அண்ணாச்சி." அதான் எனக்குத் தெரியுமே என்று முந்திரிக்கொட்டை மாதிரிப் பதில் சொல்லாமல் அண்ணாச்சியைப் பேச விட்டுவிட வேண்டும்! இல்லையென்றால் என்பாடு திண்டாட்டமாகி விடும் என்பது அனுபவ பாடம்!


"இன்னைக்கு உலகக்  கழிப்பறைகள் தினம்! ஐக்கிய நாடுகள் சபை இப்படி அறிவிச்சுப் பத்தொம்பது வருஷம் ஆகிப் போச்சே! நீகூட இதைப்பத்தி ஒரு பதிவு எழுதியிருந்தியே! அதுவுமா மறந்து போச்சு?" அண்ணாச்சி கொஞ்சம் சூடான மாதிரித் தெரிந்தது. ஆமாம்! உலகக் கழிப்பறை தினம்! கழிப்பறைகள் சுத்தமாக இல்லாவிட்டால் என்னென்ன கேடுகள் வரும் என்ற விழிப்புணர்வைப் பரப்புகிற நாளாக இந்த நாளை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறது. லிங்கைச் சொடுக்கிப் பாருங்கள்    என்று 2011 இல் எழுதியிருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. கழிவறைகள் இல்லாத வீடுகள் ஏராளமாக இருந்த இந்த நாட்டில் சமீபகாலமாகத்தான் மத்திய அரசின் பெரும் முயற்சியால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பது வரவேற்கப்பட வேண்டிய செய்தி.


சதீஷ் ஆசார்யா வரைந்திருக்கிற இந்த கார்டூன் சில விஷயங்களைப் புட்டுவைத்திருக்கிறது என்று கருத்தை சொன்னார் அண்ணாச்சி. எனக்கென்னவோ சதீஷ் ஆசார்யா செய்திகளின் நடப்புநிலவரத்தைத் தெரிந்து கொள்ளாமலேயே மூன்று கட்சிகளுமே அந்தரத்தில் தொங்குகிற மாதிரி நினைத்து வரைந்தமாதிரித்தான் தெரிகிறது. தன்னுடைய மனக்கோட்டை நிறைவேறாத கடுப்போடு சிவசேனா மட்டும்தான் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாகப்படுகிறது. பிஜேபியைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் இன்றைய சாம்னா நாளிதழ் (சிவசேனாவின் தம்பட்டம்)  பலமுறை தோற்றபிறகும் கூட பிரித்விராஜ் சவுஹானால் உயிர்பிழைத்த மொகமது கோரி கடைசியில் ஒரு போரில் ஜெயித்தவுடன் ப்ரித்விராஜைக் கொன்ற கதையைச் சொல்லிக் காட்டியிருக்கிறது. மஹாராஷ்டிராவிலும் கோரி செய்ததுபோல் பலமுறை முயற்சித்துத் தோற்றவர்கள் இப்போது சிவசேனாவின் முதுகில் குத்த முயற்சிக்கிறார்கள் என்று கதைக்கிறது சாம்னா!   கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதையாக, பிஜேபியை உதறிவிட்டு வா என்று சரத் பவார் சொன்னபடி செய்வார்களாம்! அதைவைத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனாவுக்கு இடம் கொடுத்ததை, யாரைக் கேட்டு முடிவு செய்தீர்கள் என்று கேள்வியும் கேட்பார்களாம்! இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் டில்லிப் பல்கலைக்கழக ஆசிரியர் அபூர்வானந்த்.A betrayal in the offing: Why Congress should give a second thought to allying with Shiv Sena  காங்கிரசுக்கு சிவசேனாவுடன் கூட்டு வேண்டாம் என்று எச்சரிக்கிற ஒருசெய்திக் கட்டுரையைக் கொஞ்சம் வாசித்துப் பாருங்களேன்!


தேவே கவிதாவின் மதசாரபற்ற ஜனதாதளம் (JDS) கட்சியின் சின்னம் புல்கட்டு சுமக்கிற பெண் என்பதை வைத்துப் பகடி செய்ய முயற்சிக்கிறார் சதீஷ் ஆசார்யா! நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு என்ற வழக்குச் சொல் அரசியல்வாதிகளுக்குப் பொருந்தாது என்பது அவருக்குத்தெரியாது போலிருக்கிறது!


சீனாதானா ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீது நாளை புதன்கிழமை  உச்சநீதிமன்றத்தில் விசாரணை 

மீண்டும் சந்திப்போம்.