Showing posts with label மார்கெடிங். Show all posts
Showing posts with label மார்கெடிங். Show all posts

சண்டேன்னா மூணு! மூணில் இது ஒண்ணு !

பிராண்ட், பிராண்ட் இமேஜ், இதெல்லாம் தெரிந்த பெயர்கள் தான்! ஆனால் ஒரு பிராண்ட் என்பது என்ன?   

இந்த பிராண்ட், பிராண்ட் இமேஜைப்பற்றி முன்னம் கொஞ்சம் பேசியிருக்கிறோம்! இப்போது மறுபடியும்....!

ஒரு பிராண்ட் என்பது நேற்றைக்கு அறியப்பட்ட விதத்தில் இருந்து ரொம்பவுமே வித்தியாசப்பட்டு,  பிராண்ட் என்பது ஒருதயாரிப்பாளர் அல்லது சேவையை  வழங்குகிறவர் கொடுக்கும் உத்தரவாதம், அதை நம்புகிற வாடிக்கையாளர் என்று தெளிவாக வரையறை செய்து கொண்டு வளர்ந்துகொண்டிருக்கிறது.

பிராண்ட் இமேஜ் என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து இந்தப்பதிவில் தேடுங்கள்! இதற்கு முன்னால் இந்த சப்ஜெக்டை எடுத்துப் பேசிய பதிவுகள் கிடைக்கும். அதற்கு முன்னோட்டமாக......

ஒரு பிராண்ட் எப்படி இருக்கக் கூடாது என்பதை ஒரு சின்னப் படமாக......
 
இங்கே பிராண்டுகள் வளரும் லட்சணம் எப்படி என்பதை இடதுபக்கம் இருக்கும் எச் சி எல் கம்ப்யூட்டரும், சர்வீஸ் படுத்தல்களும் என்ற பத்தியில் கொஞ்சம், லிங்கில் விரிவாகவும் பார்க்கலாம்.

கொஞ்சம் யோசித்துவிட்டு எனக்கும் சொல்லுங்கள்! பேசுவோம்!





 

ஒரு பிராண்ட் உருவாகும் விதம்........!


ஒரு புது விஷயத்தைப் பார்க்கிறோம். அது ஒரு பிராண்டாக மாறுவதற்கு என்னென்ன அவசியம்?

எல்லோருக்கும் அது ஏற்கத் தகுந்ததாக அல்லது ஒத்து வரக்கூடியதாக எடுத்த எடுப்பிலேயே அமைவது மிகவும் அபூர்வம். உண்மையைச் சொல்லப் போனால் அது  அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எந்த ஒரு புதுமையையும் மிகக் குறைந்த சதவீத மக்கள் மட்டுமே உடனடியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஒரு பிராண்ட் அல்லது சேவையை அறிமுகப் படுத்தும் போதே அது அத்தனை பேராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் கூட ஒரு விதமான தவறான கண்ணோட்டம் அல்லது அடிப்படை உண்மையை.புரிந்துகொள்ளத் தவறுவதால் தான். உண்மையில் அப்படி நிகழ்வதே இல்லை!

அப்படியானால், பெரும்பான்மையான ஜனங்களைக் குறிவைத்து எந்த பிராண்டும் செயல்படுவது இல்லையா? பெரும்பான்மையான ஜனங்களின் ஆதரவு இருந்தால் அல்லவா ஒரு பிராண்ட் நீடித்து நிற்க முடியும் என்று கேட்கிறீர்களா? ஒரு பிராண்டாக உரு மாறுவது என்பது, பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப் படுவதில் தான் போய் முடிகிறது.

உண்மையைச் சொல்வதென்றால், ஒரு வெற்றிகரமான புது பிராண்டை சந்தைப் படுத்துகிறவர்கள், விளம்பரம் செய்பவர்கள் பெரும்பான்மையினர் கவனத்தை ஈர்ப்பதற்கு உடனடியாக எந்த முயற்சியையும் செய்வதில்லை. புதுமையை விரும்புகிற, ஏற்றுக் கொள்கிற ஒரு சிறு சதவீத மக்களை மட்டுமே குறி வைக்கிறார்கள். அவர்களிடம் தங்களுடைய ப்ராண்டைக் கொண்டு சேர்ப்பதில் தனிக் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள்.

அப்படியானால், அந்த பெரும்பான்மை...?

அவர்கள் தானாகவே தேடி வருவார்கள்!

அதை விட்டு விட்டு, எல்லோரையும் ஒரே நேரத்தில் குறிவைத்து செய்யப் படுகிற முயற்சி, நம்மூர் சோஷலிசம் மாதிரி நீர்த்துப் போனதாக அல்லது நீர் மேல் எழுதி வைத்த எழுத்துப் போலத் தான் இருக்கும்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!



தலைமைப் பண்பு....தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் !


Sunanda was in core team that brought in money for IPL bid
நீங்கள் இதைப் படிக்கிற நேரம், அனேகமாக காங்கிரஸ் சசிதரூரைக் கழற்றி விட்டு, தங்கள் கை கறை படியாத பரிசுத்தவான்கள் கை என்ற மாதிரி ஒரு நாடகம் அரங்கேற்றமாக ஆரம்பித்திருக்கும்! கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலேயே முடிவு என்பதைப் போல டிவிட்டுக் குருவியின் துணையோடு பிரபலமான சசிதரூர், இன்னொருத்தரும்   (லலித்  மோடி) டிவிட்டியதாலேயே முடிவைச்  சந்திக்கிற பரிதாபமும், குடித்த பாலைக் கக்க வைப்பது போல, காங்கிரஸ் கட்சியினர்  தங்களைப் பரிசுத்தவான்களாகக் காட்டிக் கொள்ள, சுனந்தா புஷ்கர், தன்னுடைய  "சொந்த சாமர்த்தியத்தாலேயே" ரெண்டேவூ ஸ்போர்ட்ஸ் ஒர்ல்டின் பங்குகளைச் சம்பாதித்ததை, திரும்ப விட்டுக் கொடுத்ததுமான பரிதாபமான காமெடி ஏற்கெனெவே நடந்து முடிந்து விட்டது!

Sunanda was in core team that brought in money for IPL bid

சசி தரூர்  விவகாரம், உண்மையிலேயே மிகவும் சிறியது தான்! வெளியே  தெரிய வந்ததனால் மட்டும் பெரிதாக, பூதாகாரமாகக் காட்டப் பட்டது என்பது தான் உண்மை! இப்போது சசி தரூர் மீது எடுக்கப் படும் முடிவு கூட, நியாய தர்மங்களின் அடிப்படையில் அல்ல!  வெளியே தெரியாத, அமுங்கிக் கிடக்கும் பனி மலை போல, கிரிக்கெட் சூதாட்டத்தில் சரத் பவாரின் மிகப் பெரிய பங்கைத் தட்டிக் கேட்கிற தைரியமோ, நேர்மையோ காங்கிரசில் உள்ள எவருக்குமே கிடையாது! கூட்டணிக் கட்சிகளில் ஆ! ராசா என்று வாய் பிளக்க வைத்த ஊழலைக்  காங்கிரஸ் எப்படிக் கையாண்டது என்பது எல்லோருக்குமே தெரியும்.

இது தலைமைப் பண்பு என்றால் என்னவென்றே அறியாத ஒரு கட்சியின் கந்தலான கதை! எப்படியாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கவேண்டும் என்று சமரசம் செய்துகொல்கிறவர்களிடம் எந்தவிதமான தலைமைப் பண்பையும் காண முடியாது!


தலைமைப் பண்பு, தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்ற தலைப்பில், ஸ்ட்ராடெஜி அண்ட் பிசினெஸ் தளத்தில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில், இன்னும் பத்தாண்டுகளுக்காவது நீடித்து  நிற்கக் கூடியதான மிகச் சிறந்த கருத்துக்கள் என்று ஒரு பத்துக் கருத்துக்களின் பட்டியலில், இந்த முதல் ஐந்தை முந்தைய பதிவில் பார்த்திருக்கிறோம்!

1. Execution

2. The Learning Organization
3. Corporate Values
4. Customer Relationship Management.
5. Disruptive Technology


இந்த ஐந்தாவதான டிஸ்ரப்டிவ் டெக்னாலஜி --- Disruptive Innovation! இந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கிய பேராசிரியர் கிளேடன் க்றிஸ்டென்சென் வலைத்தளத்துக்கு லிங்க் இருந்ததைப் பார்த்து, அவர் சொன்னதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலாண்மை இயலின் குரு என்று  அழைக்கப்படும்  C K பிரஹலாத்  மறைவை ஒட்டி அஞ்சலிப்பதிவில், இங்கே கடலூரில் வெல்வெட் ஷாம்பூ அனுபவம், அதையே மேலாண்மை இயலில், பிரமிடின் அடித்தளத்தில் குவிந்து கிடக்கும் வளங்கள் என்று பிரஹலாத் சொன்னதைக் குறிப்பிட்டிருந்ததை, நினைவு படுத்திக் கொள்ள முடியுமானால், பேராசிரியர் கிளேடன் க்றிஸ்டென்சென் சொல்வதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது.

வெல்வெட் ஷாம்பூ அனுபவம் என்ன?


சாஷேக்களில் ஒரு ரூபாய் விலைக்கு, அது வரை அப்பர் மிடில் கிளாஸ், அல்லது உயர் ரக வருமானமுள்ளவர்கள் மட்டுமே தெரிந்து உபயோகித்துக் கொண்டிருந்த தலைக்குத் தேய்த்துக் குளிக்கும் ஷாம்பூ, நூறு எம்எல் அளவு பாட்டிலில் தான் வரும் என்பதை மாற்றி, பாமர மக்கள் அல்லது அடித்தள மக்களும் பயன் படுத்துகிற மாதிரி சந்தைக்குக் கொண்டு வந்த போது, நல்ல வரவேற்பு, விற்பனை இருந்தது! ஒரு எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர் உருவாக்கிய இந்த முறை, முழுக்க முழுக்க, பாண்டிச்சேரியில் சிறு தொழில்களுக்கான வரிவிலக்குச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்ட  ஐடியா!


பிராண்ட் ஒன்று தான், ஆனால் அதை உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள், நூற்றுக் கணக்கில் பாண்டிச்சேரியில் முளைத்தன.


ஒரு குறிப்பிட்ட டர்ன் ஓவர் வந்த உடன் அந்த நிறுவனம் தூங்கப் போய் விடும்! அடுத்தது ஆரம்பிக்க, அதுவும் குறிப்பிட்ட டர்ன் ஓவர் வந்தவுடன், தூங்கப்போக என்று வரிச் சலுகைகளை சாமர்த்தியமாகப்  பயன் படுத்திய விதம்! அடுத்து, அதை சந்தைப் படுத்திய விதம்! பெரிய கம்பனிகளின் தயாரிப்புக்கள் குறைந்தது நூறு எம் எல் பாட்டில்களில், நூறு ரூபாய் என்ற விலையில்  பெரிய கடைகளில் மட்டுமே ஷோ கேசில் அலங்காரமாக வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப் பட்டு, வசதி உள்ளவர்கள் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த நிலைக்கு மாறாக, ஒரு முறை, அல்லது இரு முறை உபயோகிக்கக் கூடிய சிறிய சாஷேக்களாக, சாதாரணமாகப் பெட்டி கடைகளிலும், டீக்கடைகளிலும் கிடைக்கிற மாதிரிப் பரவலான விநியோக முறை, சந்தையில் ஒரு புரட்சியையே தோற்றுவித்தது.


இதைத்தான் பேராசிரியர் க்றிஸ்டென்சென் டிஸ்ரப்டிவ் இன்னவேஷன் என்கிறார்! புரட்டிப் போட்டுவிடும் புதுமை! ஒரு சின்ன யோசனை தான்! மாற்றி யோசித்ததன் விளைவு தான்! சிறு தீப்பொறியாக வெளிப்படும் இந்தப் புது முறை, சந்தையை அப்படியே ஒரு உலுக்கு உலுக்கி விடுகிற வேகத்தில், ஏற்கெனெவே அசைக்க முடியாதவர்களாக எண்ணிக் கொண்டு சந்தையைப் பிடித்து வைத்திருந்த போட்டியாளர்களை காணாமல் போக வைத்து விடும் என்கிறார்.


வாஷிங் பௌடர் நிர்மா....! நிர்மா...!


இப்போதெல்லாம் இந்த விளம்பரத்தை டீவீக்களில் அதிகமாகப் பார்க்க முடிவதில்லை என்றாலும் கூட, நாற்பது வருடங்களுக்கு முன்னால் இந்தப் பெயர் டிடர்ஜன்ட் பௌடர் வணிகத்தில் ஏகபோகமாக, கொள்ளை விலைக்கு விற்றுக் கொண்டிருந்த ஹிந்துஸ்தான் லீவரைப் பாடாய்ப் படுத்தியதென்னவோ உண்மை! 1969 ஆம் ஆண்டு, அகமதாபாத் நகரில், கர்சன்பாய் படேல் என்ற தனிமனிதன், வெறும் நூறே சதுர அடிப் பரப்புள்ள இடத்தில் இருந்து கொண்டு மஞ்சள் நிறத்தில் எளிய மக்கள் உபயோகிக்கிற விலையில் ஒரு சோப் பௌடர், கிலோ வெறும் மூன்றரை ரூபாய் தான்! விற்றுக் கொண்டிருந்ததை, சோப், டிடர்ஜென்ட் மார்கெட்டில் வலுவாகக் காலை ஊன்றியிருந்த ஹிந்துஸ்தான் லீவர் சட்டை செய்யவே இல்லை! ஹிந்துஸ்தான் லீவரின் தயாரிப்பு ஐந்து மடங்கு விலை! சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்று அந்த அந்த நேரத்துப்  பிரபலமான நடிகைகளின் படத்தைப் போட்டு  வியாபாரம் செய்கிற உளுத்துப் போன வியாபார  உத்தியை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்! தயாரிப்பின் தரம், பெறுமதியை விட விளம்பரத்தில் மூளைச் சலவை செய்தே விற்பனையை பெருக்குகிற சாதாரணமான வியாபார உத்தி! இதைத் தான், புதிதாக வரும் ஒரு எளிமையான முயற்சி, ஏற்கெனெவே காலூன்றியிருப்பவர்களை அப்படியே புரட்டிப் போட்டுவிடுவதாக ஆகி விடும் என்கிறார் க்றிஸ்டென்சென்! அவர் சொல்லும் தியரி, அவர் அதை எழுதுவதற்கு வெகு காலத்துக்கு முன்னாலேயே இந்தியாவில் நடந்து முடிந்ததை அறிந்திருப்பாரா என்பது எனக்குத் தெரியவில்லை!

சிறிய அளவில் ஆரம்பித்த முயற்சிதான்! ஆனால், அது ஏற்படுத்திய தாக்கம் பெரிது! ஜனங்களிடம் வரவேற்பு பெருகிக் கொண்டிருந்ததை, ஹிந்துஸ்தான் லீவர்  புரிந்து கொள்ளவே நீண்ட காலமாயிற்று! விரைவிலேயே, நிர்மா ஒரு வலிமையான பிராண்டாக உருவானது. 2000 ஆம் ஆண்டுக் கணக்குகளின் படி சோப் இனத்தில் பதினைந்து சதவீதம், டிடர்ஜன்ட் பௌடர் இனத்தில் முப்பது சதவீதச் சந்தையை நிர்மா பிடித்திருந்தது என்ற ஒன்றே க்றிஸ்டென்சென் என்ன சொல்ல வருகிறார் என்பதை மிக  எளிமையாக விளக்கி விடும்! சந்தை வெகு வேகமாக கைவிட்டுப் போனதைக் கூட வெகு காலம் கழித்தே அறிந்து கொண்ட ஹிந்துஸ்தான் லீவர் போட்டியைச் சமாளிக்க விலை குறைப்பைச் செய்ய வேண்டி வந்ததும், விளம்பரங்களில் அள்ளியிறைக்க வேண்டி வந்ததும், இந்தியச் சந்தைப் பொருளாதாரத்தில் அரங்கேறிய சுவாரசியமான வரலாறு படைத்த  நிகழ்வுகள்!

நிர்மா இப்போது எங்கிருக்கிறது என்று கேட்கிறீர்களா? வெறும் சோப், டிடர்ஜென்ட் என்று மட்டுமே இருந்த நிர்மா, இன்றைக்குப் பல துறைகளிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறது. தெற்கே, அவ்வளவாக, சந்தையில் காண முடிவதில்லை! ஆனாலும் அதன் வீச்சு வட இந்தியாவில் இன்னமும் அப்படியே தான் இருக்கிறது! உலகத்துக்கே நாங்கள் தான் மேலாண்மை முதல் மூக்குச் சிந்துவது வரை எல்லாவற்றையும் கற்றுக்  கொடுப்பவர்கள் என்ற மமதையோடு செயல்படும் மல்டிநேஷனல் நிறுவனங்களுக்குச்  சரியான பாடத்தைக் கற்றுக் கொடுத்த இந்திய அனுபவமுமாக ஆகிப் போனது! அடித்தட்டு மக்களிடம் கூட  சந்தையை விரிவு படுத்த முடியும் என்பதை வெல்வெட் ஷாம்பூ அனுபவம் காட்டிக் கொடுத்தது. இன்றைக்கு, அந்த மார்கெடிங் உரிமையை காட்ரெஜ் நிறுவனம் விலைக்கு வாங்கி நடத்திக் கொண்டிருக்கிறது. ஹிந்துஸ்தான் லீவர் போலப் பெரிய  நிறுவனங்களும், மண்டியிட்டுக் கீழே இறங்கி வந்தாக வேண்டிய நிலையை உருவாக்கியது என்று கூடச் சொல்ல முடியும்!

ஒரு நல்ல கருத்து! நோக்கம், அல்லது செயல் திட்டம்!தலைமைப் பண்பு அதில் இருந்து தான் உருவாகிறது! எப்படி செயல் படுத்தப் படுகிறது, செயல் படுத்துபவர்களை ஒரு குழுவாக எப்படி ஒருங்கிணைக்கிறது என்பதில் தான்  நல்ல தலைவர்கள் உருவாவதும், வெற்றி பெறுவதும் ஒரு சேர நிகழ்கிறது!

இந்த விஷயங்களை மறுபடி படித்துவிட்டுக் கொஞ்சம் யோசியுங்கள்!  உங்களுக்கு என்ன தோன்றுகிறது, என்ன சந்தேகம் என்பதைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்! அப்புறம் அடுத்த ஐந்தை பார்த்து விடலாம்!








C K பிரஹலாத் அவர்களுக்கு அஞ்சலி!


தலைமைப் பண்பு என்றால் என்னவென்று கற்றுக் கொடுத்த மேலாண்மைச் சிந்தனையாளர், குரு (கோயம்புத்தூர் கிருஷ்ணா ராவ்) C K  பிரஹலாத் அவர்களுக்கு அஞ்சலி! நேரடியாகக் கற்றுக் கொண்ட மாணவன் இல்லை,ஆனாலும் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததை நானும் கொஞ்சம் கேட்டிருக்கிறேன், நிறைய யோசித்திருக்கிறேன்! 

சுயமாக யோசிக்கச் செய்து, செயல்பட ஊக்கம் தருபவனல்லவா நல்ல தலைவன்! கற்றுக் கொடுக்கும் குரு!




C K பிரஹலாத்! 1941--2010!

ஒரு மேலாண்மைப் பள்ளியில், தன்னுடைய கோட்பாட்டை பிரஹலாத் விளக்கும் வீடியோவில் முதலாவது!  சுமார் பத்து நிமிடம்! இது ஆறு பகுதிகளைக் கொண்டது. மீதமுள்ள ஐந்துக்கும் இதிலேயே கீழே லிங்க் கிடைக்கும்.

இங்கே நாம் பார்க்கும் பிரமிட் அடுக்கில் மிகப் பெரும்பாலானோரைக் கீழே தள்ளி, அவர்கள் மீது அரியாசனத்தில் வீற்றிருக்கும் ஒரு சிலர் என்பதான அமைப்பில், பிரமிடின் அடித்தளத்தில் கூடக் குவிந்து கிடக்கும் வாய்ப்புக்களை ஒரு புதிய சிந்தனையாகத் தந்தவர்!

அடித்தளத்தில் இருக்கும் மக்களை பொருளாதார ரீதியாகத் தீண்டத் தகாதவர்களாக, பெரிய நிறுவனங்கள் விலக்கி வைத்திருந்த நிலையை, மறு பரிசீலனை செய்ய வைத்த வணிக உத்தியாக, பாடமாக அவர் எழுதி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த The Fortune at the Bottom of the Pyramid: Eradicating Poverty through Profits இருந்தது.

இது இங்கே கடலூரில் ஒரு மருத்துவர் வெல்வெட் ஷாம்பூ என்று சிறு அளவில் பாண்டிச்சேரியில் சிறுதொழில்களுக்கு அளித்து வந்த வரிச்சலுகையை பயன்படுத்தி, எளிய மக்கள் கூட சிறு அளவில் சாஷேக்களாக ஒரு ரூபாய்க்கு ஷாம்பூ வாங்கி உபயோகிக்க வைத்த உத்தி தான்! இது ஒரு சிறு எல்லைக்குட்பட்டதாக மட்டுமே இருந்ததை, ஒரு சக்சஸ் ஃபார்முலாவாக, ஆக்கிக் காட்டியவர் பிரஹலாத்! 

அதுவரை, அப்பர் மிடில் கிளாஸ், அதற்கு மேற்பட்ட நிலையில் இருந்தவர்களுக்கே எட்டும்படியாக பொருட்களை உற்பத்தி செய்து விநியோகித்த பெரிய நிறுவனங்கள் கூட, அடித்தட்டு மக்களும் கூட தரமான பொருட்களை உபயோகிக்கும் நுகர்வோர்களாக இருப்பதைக் கண்டுகொள்ள பிரஹலாத் எழுதிய இந்தக் கோட்பாடு இன்னும் அதிகமாக உதவியது என்றும் வைத்துக் கொள்ளலாம்!

இரண்டு
ரூபாய், மூன்று ரூபாய் சாஷேக்களில், ஷாம்பூ மட்டுமல்ல, ப்ரூ காப்பி, டீ, இப்படி  இன்னும் பலபொருட்களை அடித்தள மக்களுக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பும், சந்தையும், ஆதாயமும் இருப்பதைப் பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட பெரும் நிறுவனங்கள் கண்டுகொண்டன, நுகர்வோர் சந்தை மென்மேலும் விரிந்து பெருகவும், தரமான பொருட்களுக்கு எந்த நிலையிலும் வரவேற்பு இருப்பதைக் காட்டியதாகவும், பிரஹலாத் சொன்னது இருந்தது!

இன்றைக்கு நீங்கள் பார்க்கிற மூன்று ரூபாய்க்கு ஐந்து கோப்பை ப்ரூ காப்பி விளம்பரம் உட்படப் பல நிலைகளிலும் அதன் உண்மையைப் பார்க்கலாம்!

மேல்விவரங்களுடன் செய்தி இங்கே.

வித்தியாசமாகச் சிந்திப்பதே வெற்றியாக, முன்னேற்றத்தின் படிக்கட்டுக்களாக இருப்பதை  பார்க்க முடிகிறதா?!





 

அலெர்ட் ஆறுமுகமாக அமெரிக்கா! நக்கலுக்கு டொயோடாவா....?


டொயோடா கார் தயாரிப்பு நிறுவனத்தின் உற்பத்தி முறை, உலகப் பிரசித்தமாக இருந்தது ஒரு காலம். கண்ணை மூடிக் கொண்டு ஜப்பானிய மேலாண்மை முறைகளை ஆதரித்தவர்கள் எல்லாம், இன்று கண்ணை மூடிக் கொண்டு கல்லெறிகிற காலமுமாகிப் போனது.



வாடிக்கையாளருடைய முழுத் திருப்தியையே முதன்மையான லட்சியமாகக் கொண்ட தயாரிப்பு முறையில், தர உத்தரவாதமும், நம்பகத் தன்மையும், உற்பத்தி நிலையின் ஒவ்வொரு கட்டத்திலும் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது. ஊழியர்களுடைய யோசனைகளை, கருத்துக்களை, ஒவ்வொரு நிலையிலும் கேட்டுப் பரிசீலித்து, அதை நடைமுறைக்குக் கொண்டு வந்ததிலும், உற்பத்திக்கான மூலப் பொருட்களை வீணாக்காமல், தேவைக்கு அதிகமாக ஸ்டாக் வைத்துக் கொள்ளாமல், தேவைப் படுகிற நேரத்தில் மட்டுமே வைத்துக் கொள்கிற முறையிலும், உற்பத்தியின் ஏதோ ஒரு நிலையில், குறைபாடு கண்டுபிடிக்கப் பட்டால், உற்பத்தி வரிசையை அப்படியே நிறுத்தி விட்டு, கோளாறைச் சரி செய்வதற்கு முக்கியத்துவமும் கொடுத்து, தயாரிப்பு கலையை, ஒரு சிகரத்துக்கு எடுத்துச் சென்ற மேலாண்மை முறையாக டொயோடா தயாரிப்பு முறை கொண்டாடப் பட்டது.  

உற்பத்தி என்பது எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப் படுகிற அமெரிக்க அசெம்ப்ளி லைன் நிர்வாக முறைக்கு, நேர் மாறாக ஜப்பானிய தயாரிப்பு முறை தர நிர்ணயம், வாடிக்கையாளரை முதன்மையாகக் கொண்ட உற்பத்தி முறைக்கும் அடிப்படையில் இருந்தே நிறைய வேறுபாடுகள் இருந்தன.
மேலே உள்ள இரண்டு படங்களும், அமெரிக்கக் கார் தயாரிப்பு நகரமான டெட்ராய்ட்டில் இருந்து வரும் freep.com தளத்தில் வெளியாகி இருக்கும் நக்கல் படங்கள்!  தன்னுடையதே மொத்தமாகக் காற்றில் பறந்து கொண்டிருக்கும்போது, அடுத்தவன் துண்டு பறப்பதைக் குத்திக் காட்டிச் சிரிக்கும் நக்கலுக்கும் இதற்கும் அதிகவித்தியாசமில்லை !
கார் தயாரிப்பு நகரமான டெட்ராய்ட் இன்றைக்குக் குழப்பம் நிறைந்த நகரமாக நகரமாக இருக்கிறது. டைம் பத்திரிகையில்,மே18, 1942 இரண்டாம் உலகப் போர்த் தருணங்களில், டெட்ராய்ட் நகரைப் பற்றிய கொஞ்சம் துணுக்குச் செய்திகளைப் படிக்க இங்கே

(அமெரிக்காவின் முன்னுரிமைகள் எவைகளில் இருந்தது என்பதை இந்த ஒரு துணுக்குச் செய்தியே சொல்லும்!) 

உலகிலேயே நம்பர் ஒன் கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்த ஜெனரல் மோட்டார்ஸ் 2008 இல் அந்த முதன்மை அந்தஸ்தை இழந்தது. அதற்கு நெடுங்காலத்துக்கு முன்னாலேயே, ஜப்பானியத் தரத்தோடு போட்டி போட முடியாமல் அமெரிக்கக் கார் தயாரிப்பு நிறுவனங்கள், தொடர்ந்து பலவீனப் பட்டுக் கொண்டே வந்தன. அமெரிக்கக் கனவுகள் எப்போதுமே யதார்த்தத்தை விட்டு விலகி ரொம்ப உயரத்தில் தான் இருக்கும்.அதே நேரம்  நடைமுறையில் கழுகு எப்போதுமே கீழே செத்துக் கிடக்கும் எலி முதற்கொண்டு லாபம் ஒன்ற ஒரு இரையை மட்டுமே தேடுவதாகக்  கீழே அதலபாதாளத்தில் கொண்டுவந்து தான்  சேர்க்கும் என்பதில், அமெரிக்கக் கார் தயாரிப்பு நிறுவனங்கள், அமெரிக்க வங்கித்துறை, நிதித்துறை இவைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை.
முந்தைய பதிவுகளில், டொயோடா நிறுவனம் தற்சமயம் சந்தித்து வரும் பிரச்சினைகளைப் பேசியிருக்கிறோம். டொயோடா சந்தித்து வரும் பிரச்சினைகள் அமெரிக்கர்களுக்கு இப்போது கேலிக்குரியதாகப் போய் விட்டது! தங்களுடைய நிறுவன முறைகளில் காணப் படும் பேராசையே, தங்களுடைய பொருளாதாரச் சரிவுக்குப் பெருங்காரணமாக இருக்கிறது என்பதை அமெரிக்கர்களுடைய நாந்தேன் மதுரை  ஹீரோ மனோபாவம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது. 


பிரச்சினை என்று வந்தவுடன், அதுவரை போற்றிக் கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு கோட்பாட்டை அப்படியே மறுதலிக்கிற மனோபாவம், பிரச்சினைக்கு உண்மையான தீர்வை எப்போதுமே சொல்லப் போவது இல்லை. ஆனால், டொயோடாவின் தற்போதைய பிரச்சினைகள்,  இந்திய நிறுவனங்களுக்கும், மேலாண்மை, நிர்வாகவியல், சந்தை உத்திகள், தர நிர்ணயம், சந்தைப் பொருளாதாரம்  போன்ற துறையில் இருப்பவர்களுக்கு, மிக அருமையான பாடத்தைச் சொல்லிக் கொடுப்பவையாக இருப்பதனால், கூர்ந்து கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகவே தொடர்ந்து இந்தப் பக்கங்களில், சொல்லிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் ஆர்வமுள்ளவர்களுக்காக ஒரு செய்தி இங்கே.


டொயோடா தயாரிப்பு முறையின் முக்கியமான அம்சங்களை முந்தைய பதிவுகளில் படங்களாகப் பார்த்திருக்கிறோம். நினைவு படுத்திக் கொள்வதற்காக மீண்டும் கீழே!

ஒரு தயாரிப்பு, அதற்குத் தேவைப்படும் பொருட்களைத் தேவையான நேரத்தில் மட்டும் எடுத்துக் கொள்கிற இன்வெண்டரி மேனேஜ்மேண்டில் இருந்து ஆரம்பித்து, ஊழியர்களுடைய மனப்பூர்வமான ஒத்துழைப்பையும், உழைப்பையும் பெறுவது என்பது உற்பத்தியின் மிக முக்கியமான பங்காக இருக்கிறது;  தயாரிப்பு முறைகள் சோதித்து உத்தரவாதப்  படுத்தப்பட்டவைகளாக, தவறு, குறைகள் கண்டுபிடிக்கப் படுவதிலும் ஒரு தீர்மானமான அளவீடுகளைக் கொண்ட முறைகளாக, தவறுகள் கண்டுபிடிக்கப் படுகிற நிலையில், உற்பத்தி நிறுத்தப் பட்டு அங்கே தவற்றை சரி செய்வதில் முழுக் கவனம், தவறு மறுபடி நிகழாது என்ற உறுதியான நிலையில் மட்டுமே தயாரிப்பைத் தொடர்வது, வாடிக்கையாளருக்கு, தயாரிப்பின் மீதான நம்பிக்கைக்கு முழு உத்தரவாதம்  இவைகளெல்லாம் தான் டொயோடா தயாரிப்பு முறையின் அடிப்படைத் தூண்கள்! 

மூலப் பொருட்கள், உழைப்பை வீணாக்குவது, காலதாமதத்தால் வரும் அனர்த்தங்கள் எல்லாம்  இந்த முறையில் அனேகமாக முழுமையாகத் தவிர்க்கப் படுவதே  இதன் மிகச் சிறந்த அம்சம்! போட்டியாளரை விட விலை குறைவாக, நுகர்வோருக்கு வாங்கும் மதிப்பை அதிகம் தருவதாக, தரத்தில் சிறந்ததாக ஜப்பானியத் தயாரிப்புக்கள் சர்வதேசச் சந்தையில்  கடந்த ஐம்பதாண்டுகளில் முதலிடம் பிடித்ததில், டொயோடா தயாரிப்பு முறை ஒரு தர அளவீடாகவே இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது!  


கைஜென் என்று சொல்லப் படும் தொடர்ந்து நிகழும் முன்னேற்றம் என்பதே அதன் ஜீவனாக இருக்கிறது. அமெரிக்க முறைகளைப் போல, விளம்பரங்கள், தம்பட்டங்கள், விரையங்கள், கொழுத்த லாபம் என்ற அம்சங்களை மட்டுமே பிரதானமாகக் கொண்டது அல்ல. அமெரிக்க கார்தயாரிப்பு நிறுவனமான போர்ட் கம்பனி கூட, டொயோடா தயாரிப்பு முறையில் உள்ள நல்ல அம்சங்களைத் தன்னுடைய தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்த முன்வந்ததே,டொயோடா  முறையில் உள்ள நிறைவைக் காட்டும்.


அப்புறம் பிரச்சினை எதனால் வந்தது? தான் உருவாக்கிய நடைமுறைகளைத் தானே பின்பற்ற டொயோடா நிறுவனம் தவறி விட்டது என்பது தான்! 


ஐரோப்பாவில் ஒன்றரை வருடங்களுக்கு முன்னாலேயே கண்டறியப் பட்ட இந்தக் குறைபாடுகளைக் களைய, நிர்வாக மட்டத்தில் தவறியதே பிரச்சினை முற்றுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. தொடர்ந்த விரிவாக்கம், உற்பத்தியைக் கூட்டித் தரவேண்டிய சந்தை நிர்பந்தம் இவற்றில் கவனம் செலுத்தியபோது, தவிர்க்கமுடியாத பக்கவிளைவுகளாகத் தரக் குறைவும்சேர்ந்துவிட்டதாக,  தற்சமயம், இந்தத் துறையில் உள்ளவர்களால் கண்டு சொல்ல முடிகிற காரணங்கள். டொயோடா தயாரிப்பு முறையை விட மேலான உற்பத்தி முறை வேறெதுவும் இல்லை. பிரச்சினைக்குத் தீர்வு, அதை பின்பற்றுவதில் தான் இருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள்.


இங்கே டொயோடா பிரச்சினையைப் பேசும்போது, இந்தியாவில் கார்தயாரிப்பு நிறுவனங்களின் யோக்கியதை என்னவாக, எப்படிப்பட்டதாக இருந்தது என்பதையும் கொஞ்சம்  வரலாற்றுக் குறிப்புக்களோடு  தொடர்ந்து பேசுவோம்!









ஈயம், பித்தாளைக்குப் பேரீச்சம்பழம்! பிராண்ட், இமேஜ் என்றால் என்னாங்க?


ஒரு பொருள் அல்லது தயாரிப்பு, தேவையின் நிமித்தம் தொழில் தெரிந்த எவராலோ உருவாகிறது. ஆரம்ப நிலையில், எந்த விதமான நகாசு, ஜிகினா வேலையும் இல்லாமல், எளிமையாகத் தான் அந்தப் பொருள், அல்லது தயாரிப்பு இருக்கிறது.

அடுத்து, கொஞ்சம் விவரமான ஒருவரிடம், அதே பொருள் வந்து சேரும்போது, நகாசு, ஜிகினா வேலைகள் எல்லாம் சேர்ந்து கொள்கிறது.

அப்புறம் கலை தெரிந்தவர்களிடம், சுருக்கமாகக் கலைஞர்களிடம், அந்தப் பொருள் வந்து சேருகிறது.

அவர்களிடம் இருந்து, எம்பிஏ  மாதிரி மேலாண்மையைப் பாடமாகப் படிப்பவர்கள் கையில் அகப்பட்டுக் கொள்கிறது.

அப்புறம் ஒரு அரசு,  நிர்வாகம் அல்லது ஒரு நிர்வாகியிடம் சிக்கிக் கொண்டு, படாத பாடுபட்டு, ஒன்றுக்குமே ஆகாததாகப் போய் விடுகிறது.

ஊடகங்கள் பற்றிய இந்தப் பரிமாணத் தேய்மானத்தை, சேத் கோடின் தன்னுடைய பதிவில் மெல்லிய நகைச் சுவையோடு எழுதியிருக்கிறார். தொலைக் காட்சி  எப்படி, காமெராவைக் கையாள, ஒளிபரப்பத் தெரிந்தவர்களிடமிருந்து, 

எர்னி கோவாக் மாதிரி காமெடியன்கள், ராட்  ஸ்டெர்லிங் மாதிரி நிகழ்ச்சிகளை எழுதித் தயாரிப்பவர்கள் கைக்குப் போய், அப்புறம் சீரியல்களாக எடுத்துக்காசுபார்க்கும்  ஆசாமிகளிடம் போய்க் கடைசியில், இதுவும் ஒரு பிழைப்பு என்ற அளவுக்கு வந்து நிற்கிறது என்று சேத் கோடின் சொல்வதை உள்ளூர் நிலவரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மெகா சீரியல்களாக அழுது ஒப்பாரி வைப்பதையே பிழைப்பாகக் கொண்டு இங்கே சானல்களும், அதை எபிசோட் தவறாமல் பார்த்து மூக்கைச் சிந்தும் தாய்க் குலங்களுமாக...!

....ம்ம்மம்ஹூம்! சிரிக்க முடியவில்லை! நம்மூர் தொலைக்காட்சிகள், நிகழ்ச்சிகளைப் பற்றி ஒன்று அல்லது இரண்டு  வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் "மொக்கை"  "மரண மொக்கை"  ரகம் தான்! பார்ப்பவர்கள் எல்லோருமே அடி முட்டாள்கள் என்ற நினைப்பில் தான் நிகழ்ச்சிகளையே தயாரிக்கிறார்கள்! அவர்களுடைய நம்பிக்கையைப் பார்ப்பவர்களுமே, தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்!

என்ன செய்ய?!

ஒரே வார்த்தை சொல்லுங்கள்! ஓகோவென்று வாழுங்கள் என்று இதற்கு ஒரே  வரியில் தீர்வு சொல்ல வேண்டுமென்றால்..நோ டிவி! நோ மெகா சீரியல் என்று இருந்துவிடுவதுதான்!

ஒரு ப்ராண்ட் என்பது என்ன என்பதை இங்கே கொஞ்சம் பார்த்திருக்கிறோம்!

ஒரே மாதிரியான தயாரிப்புக்கள் தான்! தங்களை வித்தியாசப் படுத்திக் கொள்வதற்காக, ஒரு முத்திரையை தாங்கி வருவதே ப்ராண்ட் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிடலாம்!

ஆனால் ப்ராண்ட் என்பது, அந்த மாதிரியான, பொத்தாம் பொது ஸ்டேஜை எல்லாம் தாண்டி, ஒரு வலிமையான சக்தி, செய்தி, வாக்குறுதியைத் தருவதாக உருமாற்றம் பெற்று நீண்ட நாட்களாகி விட்டது. MBA பட்டம் பெற்று, மார்கெடிங் துறையில் இருக்கும் ஒரு பதிவர், ப்ராண்ட் பற்றிப் பதிவுகள் எழுதிக் கொண்டிருந்ததைப் படித்த போது, இந்த தலைப்பில் பேச வேண்டியது இன்னமும் இருக்கிறது என்று தோன்றுகிறது!

கூகுளில் define: brand என்று தேடிப்பாருங்கள்! எத்தனை எத்தனை தேடல் முடிவுகள்!

ஆரம்ப நாட்களில், தன்னுடைய பொருளைப் பற்றி, அதன் தயாரிப்பாளர் அளந்து விடுவது தான் ப்ராண்ட் என்று இருந்தது உண்மை! தன்னுடைய தயாரிப்பை, வாடிக்கையாளர் எப்படிபார்க்க  வேண்டும் என்று தூண்டுகிற மாதிரி மறைமுகமாக மூளைச் சலவை செய்கிற மாதிரி?) சொல்வது மிகப் பழைய  முறை! ஒரு காலத்தில், ஒரு சோப் விளம்பரம், சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்றே அறிமுகப் படுத்தப் பட்டது.

தன்னுடைய குரல்வளத்தால் தமிழ்நாட்டு ரசிகர்களை, அந்த நாட்களில் கட்டிப் போட்டிருந்த  எம் கே தியாகராஜா பாகவதர், வாசனைத்திரவியங்களுக்காகச் செலவழித்த தொகை, தன்னுடைய ப்ராண்டாகக் குரலை விட, வாசனையையே நம்பியிருந்ததாகச் சொல்லக் கேள்வி! இமேஜ்! ப்ராண்ட்! என்ன பாடு படுத்துகிறது?!

இப்போது கூட, ஒரு வாசனை ஸ்ப்ரே விளம்பரம், அதை உபயோகித்தால், வாசனையில் மயங்கி அத்தனை பெண்களும் மேலே விழுந்து மொய்ப்பார்கள் என்ற முட்டாள்தனமான கற்பனையை விதைப்பதாக ...!

முத்தாலிக் மாதிரிக் கலாசாரக் காவலர்களுக்கு பிங்க் கலர் ஜட்டியை அனுப்பிய ரசிகர்களும், பெண்ணீயம் பேசுபவர்களும் சும்மாத்தானே இருக்கிறார்கள்?

ஆக ஒரு ப்ராண்ட், தன்னிடமில்லாத ஒன்றை  இருப்பதுபோல பாவலா காட்டுவது நீண்ட நாட்கள் எடுபடாது என்பதை, சந்தையில் உருவான போட்டிகளே தீர்மானித்தன. போட்டியில் ஏற்பட்ட அடுத்த நல்ல விஷயம், ப்ராண்ட் என்பது தரத்தைச் சொல்வதாகவும் இருக்க வேண்டும் என்றாகிப் போனது!

தரமே இல்லாமல், வெறும் விளம்பரங்களிலேயே ஓட்டிவிடலாம் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை, நிறையவே சமீபகால சந்தைப் பொருளாதாரம்காட்டிவருகிறது.


பயன் படுத்துபவர் பார்வையில் இருந்து ப்ராண்ட் என்பது, தன்னை நாணயமான முறையில் அறிமுகப் படுத்திக் கொள்வது என்பதில்  ஆரம்பித்து-------


இன்றைய நிலையில், ப்ராண்ட் என்பது, ஒரு பொருளின், அதன் தயாரிப்பாளரின், ஒரு ஸ்தாபனத்தின், அப்புறம் அதைப் பயன்படுத்துகிறவரின் அடிப்படைப் பண்பு எத்தகையது என்பதன் அளவீடாக இருக்கிறது. எங்கே இருந்தோம், எங்கே போகிறோம் என்பதன் வெளிப்பாடாகவும் மாறி வருகிறது.

ப்ராண்ட் என்பது ஏமாந்தவன் தொடையில் கயிறு திரிக்கிற விஷயமல்ல!
 
ப்ராண்ட் என்பது தரத்தின் வெளிப்பாடு! தொடர்ந்து உறுதிப் படுத்தும் அடையாளம்!
 
ப்ராண்ட் என்பது, தவறான சித்திரத்தையோ, பொய்யான வாக்குறுதியையோ அளிப்பதுமல்ல.
 
ப்ராண்ட் என்பது, பயன்படுத்துபவருடைய  நம்பிக்கை! அதைக் காப்பாற்றும் தயாரிப்பாளரின் உத்தரவாதம்!
 
ப்ராண்ட் என்பது நேற்றைய காலத்தின் அடையாளமாக நின்று விடுவது அல்ல! நாளை வரும் நாட்களிலும் நிலைத்து நிற்பது!