சத்தியமாக, இதற்கு ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு எந்தவிதத்திலும் பொறுப்பு இல்லை!
இயற்கை வளங்களை அளவுக்கு மீறிச் சுரண்டுகிற நாடுகளின் பட்டியலை World Wildlife Fund என்ற அமைப்பு வெளியிட்டிருப்பதில், அதிகம் சுரண்டுகிற முதல் பத்தில் இந்தியா இல்லை!
இதற்காக சந்தோஷப்படுவதற்கு முன்னால், இது என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்து விட்டு, அப்புறமாக சந்தோஷப்படுவதா, இல்லை, இப்போதிருக்கிற நிலைமையை விட மோசமான நிலை இனி எப்போதுமே வராது என்ற நிலையில் இந்த ஒப்பீடு,எல்லாம் சும்மா உடான்ஸ் என்று வருத்தப்படுவதா என்று பார்க்கலாம்!
சுற்றுச் சூழல் அளவீடுகளின் படி, உலகில் இயற்கை வளங்களை ஒவ்வொரு தனிமனிதனும் எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்ற சராசரியை விட அனேகமாக எல்லா நாடுகளிலுமே ஒரு ஐம்பது சதவீதம் அதிகமாகத் தான் விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி விட்டு, அப்படி அதிக விரயம் செய்கிற டாப் டென் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது அந்த அமைப்பு. அதன்படி,
இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாக விரையம் செய்கிற நாடுகளில்
முதலிடத்தில், ஐக்கிய அரேபிய எமிரேட் நாடுகள்........சராசரியை விட ஆறு மடங்கு!
இரண்டாவது இடத்தில், கத்தார்.............................................சராசரியை விட, 5.9 மடங்கு!
மூன்றாவது இடத்தில், டென்மார்க்.......................................சராசரியை விட 4.6 மடங்கு!
நான்காவது இடத்தில் பெல்ஜியம்........................................ சராசரியை விட 4.5 மடங்கு!
ஐந்தாவது இடத்தில், அமெரிக்கா.......................................... சராசரியை விட 4.5 மடங்கு!
ஆறாவது இடத்தில் எஸ்தோனியா ....................................சராசரியை விட 4.4 மடங்கு!
ஏழாவது இடத்தில் கனடா .......................................................சராசரியை விட 3.9 மடங்கு!
ஒன்பதாவது இடத்தில், குவைத் ...........................................சராசரியை விட 3.5 மடங்கு!
பத்தாவது இடத்தில் அயர்லாந்து ...........................................சராசரியை விட 3.5 மடங்கு!
அதற்கடுத்த இடத்தில் வரும் பிரிட்டனில் சராசரி அளவை விட இரண்டே முக்கால் பங்கு அதிகமாக இயற்கைவளங்களைவிரையம் செய்கிறார்கள் என்று சொல்கிற இந்த அமைப்பு, சென்ற ஆண்டை விட பிரிட்டன் இந்தப்பட்டியலில் முதல் வரிசைக்கு வராததற்குக் காரணம், ஏதோ ஆங்கிலேயர்கள் எல்லோரும் இயற்கைச் சூழல் மீது அக்கறை கொண்டு விரையத்தைக் குறைத்துக் கொண்டுவிட்டதாக அர்த்தமில்லை, மற்றநாடுகள் இப்படி இயற்கைவளங்களை விரையம் செய்கிற அளவு அதிகரித்திருக்கிறது அவ்வளவு தான் என்பதையும் சொல்கிறது!
செய்தியின் மூல வடிவம் இங்கே!
மற்றப்பகுதிகளில், இப்படி இயற்கை வளங்களை தனிநபர் சராசரிக்கும் மிக அதிகமாக விரையம் செய்து கொண்டிருக்கும் அதே நேரம், இயற்கை வளங்களை விரையம் செய்கிற அளவு சராசரிக்கும் மிகக் கீழே உள்ள ஒரே பகுதி ஆப்பிரிக்கா தான்!
எதைவைத்து இந்த விரையத்தை மதிப்பிடுகிறார்களாம்?
கரியமில வாயு வெளியீடு, தண்ணீர் உபயோகம், மற்றும் இதர இயற்கை வளங்களை உபயோகிப்பதில் தனிநபர் சராசரி என்ற அளவை வைத்துக் கொண்டு இந்தப் புள்ளி விவரங்களைத் தொகுத்திருக்கிறார்கள். நம்மூரில் கலப்படப் பெட்ரோல், டீசல் உபயோகிப்பதால் மட்டும் தான் காற்றில் கரியமில வாயுவின் அளவு கூடுகிறது என்ற மாதிரி நினைக்கவேண்டாம்!
அசைவ உணவு உட்கொள்வதும் கூட, கரியமில வாயுவின் அளவைக் கூட்டுகிறது, சுற்றுச் சூழலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதையும் இந்தப் புள்ளிவிவரம் சொல்கிறது! அதற்கப்புறம் பால், தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி என்று வருகிற பண்ணைப் பொருட்களுமே கூடக் கரியமிலவாயு சுற்றுச்சூழலில் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறது.
கொஞ்சம் வினோதமான செய்தி தான்! யோசித்துச் செயல்பட வேண்டிய செய்தியும் கூட! புவிவெப்பமடைவதில், கோளாறைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தனிநபருக்கும் இருக்கிறதே!
மரக்கன்றுகள் நடுவதோடு நின்று விடாமல், அசைவத்தைத் தவிர்க்கும் ஒவ்வொரு வேளையும், கரியமிலவாயுவின் அளவு அதிகரிக்காமல் செய்கிறோம். பிளாஸ்டிக் பைகளைப் பயன் படுத்தாமல் இருக்கும் ஒவ்வொரு தரமும் சுற்றுச் சூழல் மாசு படுவதைக் கணிசமாகக் குறைக்கிறோம். தண்ணீரை விரையம் செய்யாமல் இருக்கும் ஒவ்வொரு தருணமும், வறண்ட பாலையாகிவிடாமல் நமது மண்ணைப் பாதுகாக்கிறோம்.
குண்டு பல்புகளைத் தவிர்த்துசி எப் எல் விளக்குகளை உபயோகிக்க ஆரம்பிப்பது கூட, புவிவெப்பமடைவதைக் குறைக்க உங்களால் ஆனா சிறு பங்கு என்பதை அறிவீர்களா?
இது இந்தப்பக்கங்களில், 400 வது பதிவு!








