சீட்டுக் கட்டு ராஜா! ராஜா! சரிஞ்சு போனா லேசா லேசா?

2008 இல் வெளியே தெரிய வந்த அமெரிக்க வங்கித்துறை, நிதித்துறைச் சீரழிவு, இன்னும் எத்தனை நாட்டுப் பொருளாதாரங்களைச் சாய்த்துவிட்டு, ஓயப்போகிறதோ தெரியவில்லை. 
 
நீ முதலில் நுழை! நான் மிச்சத்தை முடிக்கிறேன்! அதுதான் இந்த நீ பாதி-நான் பாதியோ?
அமெரிக்க வங்கித்துறையின் பேராசை எப்படிப்பட்டது என்பதை முந்தைய பதிவுகளில் கொஞ்சம்  பார்த்திருக்கிறோம்.

சென்ற வருடக் கடைசியில் , துபாய் கடன் நெருக்கடியாக வெளிப்பட்டது.  துபாய் இன்னமும் நெருக்கடியிலிருந்து
மீளவில்லை.அந்த நேரத்திலேயே, கிரேக்க நாடு சந்தித்துக் கொண்டிருந்த பிரச்சினை ஓரளவு தெரிந்திருந்தாலும் முற்றி வெடிக்கிற சூழ்நிலைக்கு இப்போது வந்திருக்கிறது. 
கிரீஸ் நாட்டுடன் இந்தச் சீரழிவு நிற்கப் போவதில்லை. ஸ்பெயின், போர்ச்சுகல், ஐரிஷ் அரசுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிற சீக்காளிகளாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சீரழிவு இன்னும் எங்கெங்கெல்லாம் பரவுமோ என்பது தெளிவாகப் புரியவில்லை.

கிரீஸ், தற்போது சந்தித்து வரும் பிரச்சினைக்கு முக்கியமான காரணங்களாக  கோல்ட்மன் சாக்ஸ் என்ற அமெரிக்க வங்கி, கிரேக்க அரசியலில் நிலவும் ஊழல், திறமையற்ற அரசு நிர்வாகம், வரி ஏய்ப்பு செய்பவர்களைத் தொடக் கூட முடியாத பலவீனம்  என்று போய்க் கொண்டே இருக்கிறது.சென்ற  வாரம் கிரீஸ் நாட்டில் போராட்டம் வெடித்தது. ஐரோப்பிய  யூனியனில் உள்ள நாடுகள் உதவத் தயங்கின. இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலில் சிக்க வைத்த அமெரிக்க கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தின் மீது அமெரிக்க பெடரல் அமைப்பு விசாரணை மேற்கொண்டிருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. 


கிரீஸ் நாட்டின் கடன் பத்திரங்களை வைத்து வர்த்தகச் சூதாட்டம் நடத்திய அந்த நிறுவனம், கிரீஸ் அரசின் கடன் எவ்வளவு என்பதை மறைக்கவும் உடந்தையாக இருந்திருக்கிறது என்ற குற்றச் சாட்டு, மேம்போக்காக ஒரு செய்தியாகத் தெரியலாம். ஆனால், அமெரிக்க நிதித்துறையின் பேராசைக்கு, லட்சக்கணக்கான மக்கள் பலியாக வேண்டியிருக்கிறது, நடுத்தெருவுக்கு வர வேண்டியிருக்கிறது என்பதைக் கொஞ்சமாவது புரிந்துகொள்ள முடிந்தால், செய்திக்குப் பின்னால் உள்ள கோரம் தெரியும். 
 
இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க! 
மத்தவங்க செஞ்சாத்தான் தப்பு! அமெரிக்கா செஞ்சா..?

Goldman Sachs appears to be testing the limits of its special talent for avoiding all accountability following revelations of its role in exacerbating the Greek debt crisis.


கொஞ்சம் எங்கேயோ என்னமோ நடக்கிறது என்றில்லாமல், கவனித்துப் பார்த்தோமென்றால்  கிரீஸ் நாட்டில் உள்ளதை விடப் பெரிய ஊழல் நிறைந்த அரசியல், திறமையற்ற, செயல்பட முடியாத அரசு நிர்வாகம், வரி வசூலில் மெத்தனம்,. அல்லது ஏய்ப்பதற்கு மட்டுமே துணை நிற்கும் அரசு ஊழியர்கள் இதெல்லாம் இந்தியாவிலும் தீராத வியாதியாக இருக்கிறது. கிரீஸ் அளவில்  சிறிது தான் என்றாலும், அதன் கடன் சுமையும் இந்தியாவின் கடன் சுமையும் சற்றேறக் குறைய சமம் தான்! 12%

The European Union (EU) is shocked--shocked I tell you!--that Greece used financial engineering to qualify for admission. Exactly how did they think that weaker countries managed to meet the requirements? 

Now the EU is concerned that geeks used their knowledge of Greece's hidden debt (and bailout negotiations) to manipulate financial markets for their own profit.


A few years ago, Greece engaged in derivatives transactions which essentially gave it a disguised loan, a gift from geeks. 

Greece may or may not have had plans to invest the money to create national wealth instead of say, blowing it all on national bling. Either way, Greece used its national credit card in a futile attempt to keep up with the EU Joneses.

ஐரோப்பிய யூனியன் என்று ஆரம்பமானது பதினோரு வருடங்களிலேயே பரிதாபமான தோல்வியாகவும் ஆகிவிடுமோ!? தங்களுடைய பிரச்சினைக்கு முன்வந்து உதவவில்லை என்று, கிரேக்க அரசு ஜெர்மனி மீது பாய்ந்திருக்கிறது. கடைசியாக, ஜெர்மனி, பிரான்ஸ் முதலான நாடுகள் கிரேக்க அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என்ற தகவல்களும் வந்திருக்கிறது. துபாய் நெருக்கடியில், அபுதாபி தலையிட்டு உதவ முன்வந்த மாதிரி! இதுவுமே கூட தற்காலிகமான நிவாரணமே தவிர, பிரச்சினையை முழுக்கத் தீர்க்கப் போவதில்லை.  கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ள இங்கே.


டாட்டாக்கள், சீக்காளியாகிப் போன கோரஸ் ஸ்டீல் மில்லை வாங்கினார்கள். பொதுமக்களிடமிருந்து, வங்கிகளிடமிருந்து  எக்கச் சக்கமான கடனைப் பெற்று இந்த அக்விசிஷன் நடந்தது. ஆஹா! இந்திய நிறுவனங்களும் சர்வதேசச் சந்தையில் பங்காளிகளாகிப் போனோம் என்று பெருமிதப் படக் கூடிய விஷயமா அல்லது இன்னொரு படுகுழியில்  சிக்கிக் கொண்டதாக ஆகிப் போய் விடுமா
என்பதுமே இன்னமும் தெளிவாகவில்லை.

கிரீஸ், தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல், அயர்லாந்து என்று வரிசையாக சீட்டுக் கட்டு சரிவதைப் போல ஐரோப்பியப் பொருளாதாரங்கள் சரிந்து வரும் நிலையில் இந்தியா எந்த விதப் பாதிப்புமே இல்லாமல்,தனித்து நின்று விட முடியுமா? 


இந்திய அரசு வெளிப்படையாக எதையும் இதுவரை சொல்லவில்லை. சொன்னதும் இல்லை. முன்னெச்சரிக்கையாக ரிசர்வ் வங்கி எந்த நடவடிக்கையையும் மேற்கொண்ட மாதிரியும் தெரியவில்லை.

இந்த லட்சணத்தில் பட்ஜெட் அறிவிப்பில் இந்திய சந்தையை, திறந்து வைக்கப் போவதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஏற்கெனெவே திறந்து விட்டதெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்ற சிந்தனையே இல்லாத முடிவாகவே இருக்கிறது.


மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் தினமணியில் வெளியான தலையங்கம் ஒன்றை வைத்து ஒரு பயனுள்ள விவாத இழை ஓடிக் கொண்டிருக்கிறது. 

மரபணு மாற்றம் செய்யப் பட்ட விதைகளைக் குறித்தது என்றாலும் கூட, சுதந்திரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தை எழுப்பக் கூடியதாக இருக்கும் பிரச்சினை. அங்கே கூட, மிகவும் படித்தவர் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் வந்து சம்பந்தமே இல்லாத விஷயங்களைத் தொட்டு, குறுக்குச் சால் ஓட்டுவதையும் பாருங்கள். அது, இது, பட்ஜெட் எல்லாமே சம்பந்தமுள்ளவைதான்!

சுதந்திரமாகச் சிந்திக்க நமக்குத் தெரியுமா? என்ன செய்யப் போகிறோம்? எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? இந்த அடிப்படைக் கேள்விகளை முன்வைப்பவை தான்!

பட்ஜெட் பற்றிய முந்தைய பதிவில், உங்களுடைய கருத்துக்களைக் கேட்டிருந்தேனே! கருத்துக்கள், பதிவின் உள்ளடக்கத்தை ஒட்டினது மட்டும், வரவேற்கப் படுகின்றன.





வருடந்தோறும் அரசு செய்யும் வெட்டி வேலை! பட்ஜெட்!

முன்னாள் பொருளாதார வித்தகர்,சால்வை அழகர் பானா சீனா  முதன் முதலாக நிதியமைச்சரான போது, அறிவித்த பட்ஜெட் தேனொழுக இருந்தது! 


போதாக்குறைக்கு பக்ஜெட் உரையில் திருக்குறள் ஒன்றைச் சொல்லித் தமிழை பட்ஜெட் காகித அளவுக்கு உயர்த்திய பெருமையை நாடே அன்றைக்கு ஆவென்று வாய் பிளந்து அதிசயித்துப் பார்த்ததென்னவோ உண்மை!மிகச் சிறந்த பட்ஜெட் என்று சுற்றியிருந்த கூட்டாளிகள்  எல்லாம்  குலவை இட்டார்கள்! கொஞ்ச நாளிலேயே கழுதைக்கு வெள்ளி மூக்கு முளைத்து, உண்மையில் சரக்கு ஒன்றும் இல்லை  என்பது அம்பலமானது!

தற்சமய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லை! பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்து கொண்டிருக்கும்போதே இது சும்மாக் கண்துடைப்புத்தான் என்பது வெளிப்பட ஆரம்பித்தது! பிறக்கும் போதே வெள்ளி மூக்குடன்! என்ன செய்வது? பரிகாரமாக, இவரும்  ஏதோஒரு கலரில் சால்வை போர்த்திக் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்திருந்தால், சரியாகப் போயிருக்குமோ?

நடுத்தர மக்களிலேயே மேல்தட்டு நடுத்தர மக்களுக்கு, வருமான வரி விகிதங்களில் அறிவித்திருக்கிற சலுகை குறைந்த பட்சமாக இருபதாயிரமும் அதிக பட்சமாக ஐம்பதாயிரத்தை ஒட்டியும் இருக்கும் என்பது உண்மைதான்! ஆனால், அந்த அடுக்கில் எத்தனை ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே இந்த வரிச் சலுகை பயனுள்ளதாக இருக்கும் என்ற உண்மையான புள்ளி விவரத்தை அரசு தரவில்லை. ஆனாலும், இந்த வருமான வரி உச்சவரம்பில் உத்தேசித்திருக்கும் மாற்றம் இடைச் செருகலாக மட்டும் இருப்பது கொஞ்சம் எல்லோருக்குமே பயன் தரக்கூடியது என்ற மாயை நன்றாகத் தூவப் பட்டிருக்கிறது!

ஆனால், எரிபொருள் விலை உயர்வு விலைவாசியை இன்னும் அதிகமாக எகிறச் செய்யும் என்பது தெரிந்துமே பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகரிக்கப் பட்டிருக்கிறது. ஆம் ஆத்மி என்று மூச்சுக்கு மூச்சு முழங்குகிறார்களே, அந்த சாதாரண மனிதனின் வாழ்க்கையில் இன்னமும் அதிக சுமையை நிதியமைச்சர் ஏற்றி வைத்திருக்கிறார். பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. நிதி வேறெங்கோ ஒதுங்கிவிடுவதைத் தவிர, ஒதுக்கப் பட்ட நிதி குறிப்பிட்ட காரியத்திற்காகத் திறமையாகப் பயன்படுத்தப் பட்டது, இன்னின்ன வேலைகள் திட்டமிடப்பட்டு, இன்னின்ன கால வரையறைக்குள் முடிக்கப் பட்டது என்பது இந்த தேசத்தில் நடந்ததே இல்லை.

அப்புறம் எதற்காக வருடம் தவறாமல் இந்த வெட்டி வேலை ? பட்ஜெட் என்பதே பள்ளத்தை மேலும் படு பள்ளமாக ஆக்குவதற்காகத்  தானா? 



திட்டமிடுவதிலிருந்து, நிறைவேற்றி, அதைக் கண்காணித்து அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயார் செய்வதற்கு துப்பில்லாத இந்த நிதி நிலை அறிக்கை எதற்காக? யாருக்காக?


கொடுக்கிற மாதிரிக்கொடுத்து, இருப்பதையும் எடுத்துக் கொள்கிற பட்ஜெட்!    படத்துக்கு நன்றி பிசினஸ் லைன்

பட்ஜெட் குறித்த உங்களது கருத்தை இங்கே பதிவு செய்யுங்களேன்! 





 

வாத்தியாரே! வணக்கம்!

சுனந்தாவின் டைரி!



 “இந்த டைரியை படிப்பவர்கள் ஆயிரம் வருஷம் நரகத்தில் தலை கீழாக தொங்குவார்கள்” என்று ஆரம்பிக்கிறது.

இப்படிச் சொன்ன பிறகு யார்தான் அடுத்தவர் டைரியைப் படிக்காமல் இருக்க முடியும்?

சுனந்தா என்ற இளம்பெண், தன்னுடைய காதல் அனுபவங்களைச் சிறிது சிறிதாகப் பகிர்ந்து கொள்கிற மாதிரி, அவளுடைய டைரியில் இருந்து கொஞ்சம்.

கிருஷ்ணன் கொலை செய்யப் பட்டுக் கிடக்கிறான். சொந்தப் பகை காரணமாக இன்னார்  தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று அவசர அவசரமாகப் போலீஸ் தேவ் என்பவனைக் கைது செய்கிறது. தேவ், அவன் சகோதரி ஹரிணி இவர்களோடு, கொலை செய்யப்பட கிருஷ்ணனுக்குக் கொஞ்சம் பகைமை ஏற்படுகிற அளவுக்குக் காரணங்கள் இருக்கிறது குற்றம் சாட்டப் பட்ட தேவ் தரப்பில் ஆஜராகும் வக்கீல், பிராசிகியூஷன் தரப்பில் உள்ள ஓட்டைகளை வைத்து, தேவ் அந்தக் கொலையைச் செய்திருக்க முடியாது என்று நிரூபித்து, குற்றம் சாட்டப் பட்டவனை விடுவித்து விடுகிறார்.

ராமநாதன்,  இன்னும் பதினைந்தே நாட்களில் ஒய்வு பெறப்போகும் போலீஸ் அதிகாரி. இந்தக் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடித்தே தீருவது என்று களத்தில் இறங்குகிறார். கண்டு பிடித்தும்  விடுகிறார். அப்போது,தான் சுனந்தாவின் கதை வருகிறது! கிருஷ்ணன் எப்படிப் பட்ட பெண்பித்தன், சுனந்தா அவனிடம் தன்னை இழப்பதும், கருக்கலைப்பு, இப்படி அந்தக் கொலையின் அனாடமி வெளி வருகிறது. ராமநாதன் அடுத்து என்ன முடிவு செய்கிறார் என்பது இன்னொரு ட்விஸ்ட்!

பதினான்கு  வாரங்கள், குமுதம் வார இதழில் தொடராக வெளி வந்த போது,  யார் இந்த எழுத்தாளர் என்று படித்த அத்தனை பேருடைய புருவங்களையும் வியப்பில் உயர்த்த வைத்த அந்தக் கதை நைலான் கயிறு! சுஜாதா எழுதிய முதல் புதினம்! 



ஸ்ரீரங்கம்   எஸ் ஆர் என்றும் எஸ் ரங்க ராஜன் என்றும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தவர் நாவலாசிரியராக, ஏற்கெனெவே நிறைய ரங்கராஜன்கள் இருப்பதால், வேறு ஒரு புனைபெயரைத் தேடிக் கொள்ளும்படி  ரா கி ரங்கராஜன் சிபாரிசு செய்ய, சுஜாதா என்று தமிழ் எழுத்துலகுக்கு ஒரு புது ஞாயிறாகவே எழுந்த ஆரம்பத் தருணம் அது. 1968 ஆம் ஆண்டு! அதற்கடுத்த நாற்பதாண்டுகள், தமிழ் எழுத்தின் பிரமிக்க வைத்த ஆண்டுகளாகவே ஆக்கி வைத்தது என்று சொன்னால் மிகையோ, பொய்யோ இல்லை. அவருடைய சம காலத்திலோ, அல்லது அப்புறமோ எழுத வந்தவர்கள் அவர் எட்டிப் பிடித்த உயரங்களை, இன்னமும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் இருந்தார்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. வெறும் புதினங்கள் என்று குறுகிவிடாமல், விஞ்ஞானக் கதைகள், அறிவியல் கட்டுரைகள், சரித்திரக் கதைகள், திரைப்படத் துறை, இப்படிப் பலமுகங்களிலும் பட்டை தீட்டப் பட்ட வைரமாக  ஒளிர் விடுகிற எழுத்தாளராக இருந்ததாலேயோ என்னவோ, இங்கே வழக்கம் போல நிறையப் பேருடைய வெறுப்பு, அவதூறுக்கும் ஆளானதும் நடந்தது.

சுஜாதா என்ற ஸ்ரீரங்கம் எஸ் ரங்கராஜன், தனது உடலை நீத்து இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைகிற தருணத்தில், அவருடைய எழுத்துக்களில் மிளிரும் குறும்பும் நகைச்சுவையும் மரணத்தையும் வென்று நிற்பதாகவே, அவரது எழுத்துக்களை மீஎண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் எனக்குத் தோன்றுகிறது.

சித்திரமும் கைப்பழக்கம் என்றபடி எழுத எழுத மெருகேறிக் கொண்டே போன அவரது எழுத்து வன்மைக்கு, எழுத்தாளர் சாரு நிவேதிதா, சுஜாதா 1976 இல் எழுதியதில் ஒரே ஒரு பாராவை வைத்து ஒரு பதம் காட்டியிருக்கிறார்.


“ ஆர்.ஜி.பதி கம்பெனி பதிப்பித்துள்ள ரூ. 3.50 விலையுள்ள மாயாஜால மர்மங்கள் என்கிற நான்கு பாகங்கள் அடங்கிய புத்தகத்தில் யாவரும் பிரமிக்கத்தக்க பல ஜாலங்கள் , பல சித்துக்கள் , விளையாடும் மை வகைகள் , சிங்கி வித்தை , சொக்குப் பொடி சூக்ஷி அஷ்ட கர்ம கருமை , முனிவர்கள் , வாராகி , ஜாலாக்காள் , குட்டிச்சாத்தான் , யக்ஷணி , அனுமான் , மாடன் , பகவதி , இருளி , காட்டேரி வசியங்களும் கோகர்ண கஜகர்ண இந்திர மகேந்திர ஜாலங்களும் , குழந்தைகளின் சகல தோஷங்களுக்கும் விபூதி பிடித்தல் , வேப்பிலை அடித்தல் , பேய் பிசாசுகளை ஓட்டுதல் , பில்லி சூனியங்களை அகற்றல் , சதிபதிகள் பிரியாதிருத்தல் , ஈடு மருந்தை முறித்தல் , பாம்பு , தேள் , நாய் , பூனை , எலிக்கடி விஷங்களை ஒழித்தல் , ஜாலாக்களின் ஜெகஜ்ஜால வித்தைகள் , முள் மீது படுத்தல் , நெருப்பைக் கையில் அள்ளுதல் , மிதித்தல் , சட்டி ஏந்துதல் , மடியில் கட்டுதல் , ஜலத்தின் மீது படுத்தல் , உட்காருதல் , வயிற்றில் ஈட்டி பாய்ச்சுதல் போன்ற எண்ணற்றவைகளுடன் எல்லாவற்றிற்கும் சிகரமாக ஆட்டு மந்தையை மாட்டு மந்தையாக்குதல் வரை விவரங்கள் இதில் அடங்கியுள்ளது.

விலாசம் 4 வெங்கட்ராமய்யர் தெரு சென்னை- 1. 1976 ல் எல்லாரும் வைத்திருக்க வேண்டிய புஸ்தகம். ”

இன்னும் நிறையச் சொல்லிக் கொண்டே போக ஆசைதான்!  கொஞ்சம் பொறுங்கள் !

சுஜாதா எழுதிய நிர்வாண நகரம் புதினத்தில் கதாநாயகன் சிவராஜ்,  கணேஷிடம் தன தரப்பு வாதமாகச் சொல்வதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

"மிஸ்டர் கணேஷ்! நான் இந்த நகரத்தை நிர்வாணமாக்க முயன்றேன்! நிர்வாணம்னா எக்ஸ்போஷர்! எங்கோ ஒரு மூலையில் ஒரு பூச்சியா ஏறும்ப இருந்தவனை....ஒரு அனாமதேயத்தை இந்த நகரம் பேச, ஏன் கொண்டாடக் கூட ஆரம்பிச்சிடுச்சு பாருங்க. அவங்களுக்கு வேண்டியது சென்சேஷன். என்னைப் பத்தி அசெம்பிளியில் பேசினாங்க ..லாவணி பாடினாங்க, பெண்கள் டீ ஷர்டுல ஏத்துக்கறாங்க...பஸ் ஸ்டாண்டு , ரயில், செய்தித் தாள்கள் எங்கும் எங்கும் என்னைப் பத்தித் தான் சென்ற மூணு மாசமா பேசிக் கிட்டிருந்தாங்க, என்ன ஒரு கல்சுரல் அபெர்ரேஷன் பாருங்க! நகரத்தை நான் என்னுடைய முறையிலே பழி வாங்கறது, கேலி செய்யறது, திருப்பித் தர்றது குற்றமா சொல்லுங்க!"  


தமிழ் எழுத்துலகில் எத்தனையோ வாத்தியார்கள் இருந்திருக்கிறார்கள்!  சுஜாதா, கொஞ்சம் வித்தியாசமான தமிழ் வாத்தியார்!

"மிஸ் தமிழ்த் தாயே! நமஸ்காரம்!"


தைரியமும் நகைச்சுவையும், நல்ல ரசனையும் மிகுந்த நவீனத் தமிழ் வாத்தியார்!

வாத்தியார் சுஜாதாவுக்கு வணக்கங்கள், ஒரு வாசகனிடமிருந்து !



 

பதினாறு வயதினிலே!


டீன் ஏஜ் என்று சொல்லும் பதின்மூன்றிற்கும் பத்தொன்பதற்கும் இடைப்பட்ட வயசு! இது நிஜமாகவே ஒரு ரெண்டும் கெட்டான் பருவம், இந்தப் பருவத்தில் என்னென்ன நடந்தது, எதை நீங்கள் பகிர்ந்துகொள்வீர்கள் என்கிற மாதிரி ஒரு சங்கிலிப் பதிவில் கோர்த்து விடுகிற ஆட்டம் இங்கே இணையத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்டையில்  தான் கலந்து கொண்ட அதே வேகத்தில், பதிவர் கோவி கண்ணன் என்னையும் கோர்த்து விட்டு அழைப்பு விடுத்திருக்கிறார்.  
ன்னையின் பிறந்தநாள் தியானம், தோழர் வரதராஜனைப் பற்றி வந்து கொண்டே இருந்த சிந்தனைகளுக்கிடையிலுமே கூட, அவர் என்னையும் ஆட்டைக்கு வந்து கலந்து கொள்ளும்படி எழுதியிருந்ததை நினைவில் வைத்துக் கொண்டுதான் இருந்தேன்.
றியாத வயசு! எதையும் புரிந்துகொள்ளாத மனசு!

னால், எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவேண்டும், புரிந்துகொண்டுவிட வேண்டுமென்கிற தவிப்பு ஒன்று தான் இந்த பதின்மம் என்று தமிழ்ப்படுத்திச் சொல்கிற இந்தப் பருவத்தின் பொதுவான அம்சம். ரெண்டும் கெட்டான் தனம் தான் அதன் அழகு, அவலம், அசிங்கம் எல்லாமே! இப்படியும் இல்லாமல், அப்படியும் அல்லாமல் போன ஒரு பிராயத்தைப் பற்றி, இப்போது நினைத்துப் பார்த்து என்ன சொல்வது? எதைச் சொல்வது? அல்லது எதைச் சொல்லாமல் விடுவது? அதனால் யாருக்கு என்ன பயன்?
தின்ம வயதுகளில் எனக்குப் புத்தகங்களே எல்லாமாகவும் இருந்தன! விளையாட்டுக்களில் அவ்வளவு ஆர்வமிருந்ததில்லை. லியோ தோல்ஸ்தாய் மாதிரியான ஒரு நல்ல எழுத்தாளன், தன்னுடைய இளமைப் பிராயத்தை மட்டும் அல்லாமல், தன்னைச் சுற்றி இயங்கும் உலகத்தில் உள்ளவர்களுடைய இளமைப் பிராயத்தையுமே சேர்த்த ஒரு அனுபவமாக "இளமைப் பிராயத்திலே" (On Childhood) புதினத்தைத் திரும்பத் திரும்பப் படித்த , அதில் கதாநாயகனோடு ஏதோ ஒரு விதத்தில் ஈர்க்கப் பட்டதைச் சொல்லவா?

தாத்தாவும் பேரனும்-இது இன்னொரு உலகத்தில் இருந்து வந்த ஆங்கிலத்தில் இருந்து தமிழில் எனக்குப் படிக்கக் கிடைத்த புதினம். அமெரிக்க எழுத்து. முழுக்க முழுக்க, கதாநாயகன் தன் பாட்டனுடன் பல வகையான வேட்டைக்குப்போய் வரும் அனுபவங்களை ஆர்வத்தோடு சொல்கிற மாதிரியான கதை. வேட்டை, வேட்டையாடி உணவைச் சமைத்துச் சாப்பிடும் அனுபவம் என்று எனக்கு சம்பந்தமே இல்லாத ஒன்றைக் கதைக் களமாகச் சொல்லியிருந்ததையும், ஆர்வத்தோடு படித்த அந்தத் தருணத்தைச் சொல்லவா?

முடிவெட்டிக் கொள்வதற்காக மட்டும் சலூனுக்குப் போவது, அங்கே கடைக்காரர் மிகப் பிரயாசைப்பட்டு பைண்ட் செய்து வைத்திருந்த கன்னித்தீவு கதைகளைப் படிப்பதற்காக, அடிக்கடி போகிற இடமாகவும் ஆக்கிவைத்தது. கன்னித் தீவைப் படித்துக் கொண்டிருந்த சுவாரசியத்தில், அவர் அப்படியே, அண்ணா, திமுக, பெரியார் என்று பேசிப் பேசி, திராவிட இயக்கங்களின் அறிமுகம் கொஞ்சம் அதிகமாகவே ஆகிப்போனதாக, ஹிந்தி ஒழிக என்று கனவில் கூடத் தார் பூசிக் கொண்டு என்  பதின்ம வயது  தார் நிரம்பிய டின்னும், தென்னை மட்டைக் குச்சியுமாக ஆரம்பித்ததைச் சொல்லவா?

தின்மூன்று வயதில், எட்டாம் வகுப்பு! பொதுத் தேர்தலில், திமுகவிற்காக வாக்குக் கேட்டு ஓட்டுச் சாவடியில் பிரச்சாரம், கட்சி, அல்லது எவரது தூண்டுதலும் இல்லாமலேயே! ஆக, பதின்மவயதைப் புத்தகங்களும், அதற்கு அப்புறம் அரசியல் ஈடுபாடுமே பெரும்பகுதி ஆக்கிரமித்திருந்த காலம்!அதைச் சொல்லவா?
யில் வராத தண்டவாளத்தில் தலைவைத்துப் படுப்பது, பாம்புகள், பல்லிகள்  நடுவில் பாளையங்கோட்டை,  அது கூட வேண்டாம்! பக்கத்தில் உள்ள வாடிப்பட்டிக்குக் கூடப் போக முடியாமல் போனதால், மிகப் பெரிய அரசியல்வாதியாகவோ, அல்லது அப்படிப் பட்ட பெரிய அரசியல் வாதிக்குச் சரியான போட்டியாகவோ வர முடியவில்லை, அதனால் என்ன! ஒன்றும் குறைந்துபோய் விடவில்லை என்பதைச் சொல்லவா?.

தினைந்து, பதினாறு தாண்டினால் எல்லாப் பசங்களுக்கும் வருகிற வியாதி எனக்கும் வந்தது.ஒருதலைக் காதல்! ஒருதலையாகவே போய்க் கொண்டிருந்ததால், ஏதோ ஒரு இடத்தில் அது தானாகவே காணாமல் போனது கூட எனக்கு அப்போது தெரியவில்லை. அந்தத் தெரியாத் தனத்தைச் சொல்லவா?
மிழ் சினிமாப் படங்கள், வேறு எதைச் சொல்லிக் கொடுத்தனவோ இல்லையோ, இந்த மாதிரி அறியாத வயசுப் பசங்களின் மனதில், காதல் என்றால் என்ன என்பதைத் தப்புத் தப்பாகவே சொல்லிக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் நிஜம்!
புதிய பறவையில் சிவாஜி கடைசி சீனில் பேசுகிற வசனம்..காதலே நீ வாழ்க! பெண்மையே நீ வாழ்க! அன்றைக்குப் பார்க்கும்போது, உணர்ச்சிகரமாக இருந்தது, இப்போது திரும்பிப் பார்க்கும்போது மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது!

ஆக, டீன் ஏஜ் அல்லது பதின்மம் என்று குறிப்பிட்டுச் சொல்லும் இந்த ஏழு வருடங்கள், என்னைப் பொறுத்தவரை வேகமாகக் கடந்துபோன ஒரு நிழல் மாதிரித் தான் இப்போது தோன்றுகிறது. இந்தப் பருவத்தில், நல்ல நண்பர்கள், பெற்றோருடைய அரவணைப்பு, நல்ல புத்தக வாசிப்பு என்று இருந்ததைத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லத் தான் வேண்டும். இந்தப் பருவத்தில், வேறு விஷயங்களில் கவனத்தைச் சிதற விடாமல் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய திறமை இருக்கும் இளைஞன் வாழ்க்கையில் காலூன்றிக் கொள்கிறான். கவனத்தை வேறு எங்கெங்கோ சிதறவிடுகிறவன், நிறையக் கசப்பான அனுபவங்களை எதிர்கொள்கிறான் என்பதைத் தவிர, என்னுடைய டீன் ஏஜ் பற்றிய மிகப் பிரமாதமான பிரமிப்பு அல்லது அபிப்பிராயம் எதுவுமில்லை  என்பது மட்டுமே உண்மை. கருவிலே திருவுடையான் என்று சொல்கிற அளவுக்கு, டீன் ஏஜ் சம்பவங்களை வைத்து, இன்றைக்குப் பெரிய ஆளாக இருக்கும் நான் அன்றைக்கே அதற்கான அஸ்திவாரத்தைப் போட்டு வைத்து விட்டேன் என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு ஒன்றுமே இருந்ததில்லை.
புத்தகங்களைத் தேடிப் படிக்கும் பழக்கம், அண்ணன்மார்களிடமிருந்து மிகச் சிறு பருவத்தில் இருந்தே தொற்றிக் கொண்டது. அண்ணன்மார்கள் புத்தகத்தைப் படிப்பதில் தற்சமயம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், எனக்கோ குறைந்தது, இரண்டு, மூன்று செய்தித் தாட்கள், அப்புறம் என்ன தலைப்பில் இருந்தாலும் சரி, தினசரி முன்னூறு நானூறு பக்கங்களுக்குக் குறையாமல் படிக்கும் பழக்கம், இன்னமும் நீடிக்கிறது.
டுத்து, சிறுவயதில் தொற்றிக் கொண்ட அரசியல் ஈடுபாடு, நேரடி அரசியலில் இன்றைக்கு இல்லை என்றாலுமே கூட, இன்னமும் இருக்கத் தான் செய்கிறது. நாம் விட்டாலும், பாழாய்ப்போன அரசியல் நம்மைச் சும்மா இருக்க விடுவதில்லையே! இந்த வரிகளை  எழுதிக் கொண்டிருக்கிற தருணத்தில் கூட, பட்ஜெட் அறிவிப்புக்கள், அதன் பின்னால் உள்ள ஒட்டு அரசியல் பற்றிய சிந்தனை ஓடிக் கொண்டுதான் இருக்கிறது!
னக்கு ஒரு ஆச்சரியம்!


ன்ன எதிர்பார்த்து, கோவி கண்ணன் என்னை இந்த ஆட்டத்திற்கு அழைத்தார் ? என்னை  மாதிரி சுவாரசியமே இல்லாத டீன் ஏஜை  கடந்துவந்தவர்களும் கொஞ்சம் பேர் இருக்கிறோமே!

னால், இந்த டீன் ஏஜ் பருவத்தில் என் ஆர்வத்தைத் தூண்டிய, ஆதர்சமாக வளர்ந்த, நம்பிக்கையை விதைத்த, என்னுடைய திறமையில் எனக்கே நம்பிக்கையில்லாமல் துவண்டுபோய்க் கிடந்த தருணங்களில் என்னை எழுந்து நின்று போராடக் கற்றுக் கொடுத்தவர்கள் என்று நிறைய சுவாரசியமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களால் தான் இன்றைக்கு, ஒரு ஆளாகவும் நிற்கிறேன்! 




 

ஆண்டுக்கு ஆண்டு, பிப்ரவரி வந்தால்....அவஸ்தையும் கூட வருமோ?

 
இப்படியெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முன்னுரிமை கொடுத்து, திட்டமிட்டு வேலை செய்வார்கள் என்று இன்னமுமா நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்?


என்ன எழுதுகிறோம், எத்தனை பேருக்குப் பயன்படும் வகையில் எழுதுகிறோம், குறைந்தபட்சமாக, எழுதுகிற நமக்கே ஒரு தெளிவைத் தருவதாக எத்தனை பதிவுகளைச் சொல்ல முடியும் என்பதை அளவிட்டுப்  பார்த்தால், எழுதும்போது ஆரம்பிக்கிற உற்சாகம் எல்லாம் வைகையில் வெள்ளம் வந்த கதையாக உடனேயே வடிந்தும் போய்  விடும்.




"மலை மேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறிப் பாயும் முன்னே வந்த வெள்ளம் போனது ராஜா!"

என்று  சிறுகூடற்பட்டியில் பிறந்த எங்கள் கவிஞன் கண்ணதாசன்  அழகாகச் சொன்னாரே!
அந்த மாதிரி!

"
சேத்த பணத்தை சிக்கனமா,செலவு செய்ய பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு செல்லக்கண்ணு
அவங்க..ஆறை..நூறு..ஆக்குவாங்க ..சின்னக்கண்ணு
"

மருதகாசியின் இந்தப்பாடலை
ஒரு பதிவில் எடுத்துச் சொன்னது கூட, வால்பையன் நினைக்கிற மாதிரி இடைச்செருகல் இல்லை, பொருளாதாரத்தின் ஒரு அடிப்படை அம்சத்தைச் சொல்வதற்காகத் தான்!

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, உற்பத்தியும், சேமிப்புமே தீர்மானிப்பவைகளாக இருந்த ஆரம்பகாலப் பொருளாதாரம், எப்படிக் கடன், கடனை அடைக்க இன்னொரு  கடன், அதற்கு வட்டி கட்ட இன்னொரு கடன், இப்படியே போய்க் கடைசியில் தவணை கேட்பது, நாணயம் தவறுவது, திவாலாகி விட்டது என்பதைக் கூட ஒப்புக் கொள்ள முடியாமல், "துபாய் உலகத்தின் கடனுக்கு அரசு எந்தவிதத்திலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது, அது கடன் கொடுத்தவர்கள் பொறுப்பு!" என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்கிற அளவுக்கு மட்டுமே துபாய் கடன் நெருக்கடி இருக்கிறது!

இதைச் சொல்லும் போதே, இதைவிட விபரீதமான பயங்கரம் அமெரிக்கப் பொருளாதாரத்தில்  இருக்கிறது, எப்படி இதில் நாமும் விரும்பியோ விரும்பாமலோ சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவுகளில் சொல்லலாம் என்று இந்த முயற்சியை ஆரம்பித்தாயிற்று! புலி வாலைப் பிடித்த நாயர் கதைதான்!

வால்பையன் என்னதான் வந்து
, பின்னூட்டங்களில் தாளித்தாலும், புலி விடாது! அல்லது நான் விடப்போவதில்லை!

சற்றேறக் குறைய நூறே ஆண்டுகள்!

இந்த நூறே ஆண்டுகளில்
, பொருளாதாரம் என்பது வெறும் கருவியாக இருந்தது, கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் பேரழிவைத்தரும் ஆயுதமாகவும் மாறிப்போனது! வரலாறு முக்கியம்! கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு வரலாறு மாதிரி, சிறந்த ஆசிரியன் எவருமில்லை! ஆனால் வரலாறு என்றாலே வால்பையன்கள் முதல் புத்தக விமரிசனம் எழுதுகிற சில வாசகர்கள் வரைக்கும் கசக்கிறது. மானுடம் வெல்லும் கதையை சிலாகித்து  எழுத ஆரம்பித்த ஒருவர்  சாண்டில்யன் கதைகளில் சரித்திரம் இல்லை என்பதைக் கண்டு பிடிக்கிற அளவுக்கு இந்தக் கசப்பு பரவியிருக்கிறது.



இது பொருளாதாரம், வங்கித்துறை, நிதித்துறைகளில் உலகம் முழுவதும் பரவி வருகிற பொருளாதார விஷக் காய்ச்சலைப் பற்றி எழுத ஆரம்பித்த பதிவு ஒன்றின் ஒரு பகுதி, மீள்பதிவாக! 



இது பட்ஜெட் ஜுரம் வருகிற நேரம் அல்லவா? 
 
சால்வை அழகர் பானா சீனா இல்லை!பிரணாப் முகர்ஜி  கொஞ்சம் அனுபவசாலி! சொதப்புவதிலுமே கூட!
காங்கிரஸ்காரர்களால் வேறு என்ன பெரிதாக சாதித்து விட முடியும் என்று இன்னமும் நம்புகிறீர்கள்?


பட்ஜெட் அறிவிக்கிற அன்றைக்கும், அடுத்த ஒரு நாள் மட்டும் இந்தியாவின் நிதியமைச்சர் ஒரு பெட்டிக்குள் என்னத்தையோ கொண்டுவந்து, பாராளுமன்றத்தில் என்னத்தையோ சாதிக்கப் போவதாக அல்லது சோதிக்கப் போவதாகப் பேசிக் கொண்டு இருப்போம் இல்லையா? 


அதன் முன்னோட்டமாக, கொஞ்சம் ஹோம்வொர்க் செய்யவும்  வேண்டும் இல்லையா?



துபாய்! டுபாக்கூர்! பொருளாதாரம்!வட கொரியா!

உலகம் போகும் போக்கை முடிவு செய்யும் காரணங்கள்!

வாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்!

ஆசைக்கு அளவேதடா அறிவு கெட்ட அப்பா!

புள்ளிராசா வங்கிக்குப் புள்ளி வருமா ?ஒரு புத்தக விமரிசனம்!


இந்தப் பதிவுகளில் கொஞ்சம் அடிப்படைகள் சொல்லப் பட்டிருக்கின்றன! ஒரு எட்டு, படித்து விட்டு வந்தீர்கள் என்றால், நடுவில் வேறு பக்கம் கவனம் திரும்பிப் போனதில் இருந்து, மறுபடி கொஞ்சம் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

அப்புறம் ஒரு சிந்தனை, சின்னக் கேள்வியாக!

இது பட்ஜெட் நேரம்! தேவையே இல்லாத ஒரு சாங்கியம்! ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதான் தேர்தல் என்ற மாதிரி, இந்த சாங்கியத்தைக் கூட ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதான் என்று ஆக்கிவிட்டால், பட்ஜெட்டைக் காரணம் காட்டி விலையை ஏற்றுகிற கொடுமையில் இருந்து கொஞ்சமாவது தப்பிக்கலாமே?

பட்ஜெட்! ஆண்டுக்கொரு தரம் என்ற இந்த சாங்கியத்தால், இது வரை நாம் சாதித்தது என்ன?

கொஞ்சம் என்ன நினைக்கிறீர்கள், எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்  என்பதைப் பின்னூட்டமாக எழுதுங்களேன்!

நானும் தெரிந்துகொள்கிறேனே!



current update பிற்பகல் 12.40 நிலவரம்

வருமான வரியில் கொஞ்சம் சலுகைகளை அறிவித்து, மிக ஜனரஞ்சகமான பட்ஜெட் வேஷம் களை கட்டியிருக்கிறது. .அடுத்து வரும் தேர்தல்கள், பெருகி வரும் அதிருப்தியை இந்த மாதிரிச் சின்ன  சின்னக் காரட் கொடுத்து சமாளித்து விடலாம் என்ற போக்கு அப்படியே இருக்கிறது. அறிவிக்கப் பட்ட சலுகைகளால், இருபத்தாறாயிரம் கோடி ரூபாய்  வருவாய் குறையுமாம்!

ஊழலை ஒரு சரிபாதி குறைத்தாலே, வரி ஏய்ப்பைத் தடுத்தாலேயே  எந்தவிதமான புதிய வரிவிதிப்புக்குமே அவசியம் இருக்காதே!

வழக்கம் போல, பங்குவர்த்தகச் சந்தைச் சூதாட்டத்தில், நிதியமைச்சரின் தாராளமான பட்ஜெட்டுக்கு ஆதரவாக 350 புள்ளிகள் உயர்ந்து பெரிய  O போடப்பட்டிருக்கிறது.

பூஜ்யத்திற்குத் தான் எத்தனை மரியாதை!



தடுப்புச் சுவர்கள்! இது கவிதை நேரம்!

சில நேரங்களில், நல்ல எழுத்து, கவிதை மாதிரி ஒரு ஆறுதலான உற்ற துணை எதுவுமே இருக்க முடியாது! சோர்ந்து போன மனதுக்கு ஆறுதலாகவும், வாழ்க்கையின் நிதர்சனங்களைப் படம் பிடித்துக் காட்டுவதாகவும் நல்ல எழுத்து, கவிதைஅமைந்துவிடுவதுண்டு.

பரபரப்பான, அல்லது பதட்டமான மனநிலையில் இருந்து விடுபட்டுக் கொஞ்சம் ஆற அமர யோசித்து, வாழ்க்கையை உள்ளது உள்ளபடிக்கே புரிந்து கொள்ளவும், அனுபவிக்கவுமான தருணம் இது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு
தோழரின் காணாமல் போய், மரணமான  செய்தி,  அத்தனையையும் புரட்டிப் போட்டு விட்டது. மறந்து விட்டதாக அல்லது விலகி வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவை எல்லாம் நெஞ்சின் அலைகளாய், கடந்த ஒரு வாரமாகவே என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தது உண்மை. அலைக்கழிப்பில் இருந்து விடுபட, ஒரு நல்ல கவிதை, சில சிந்தனைகளையும் விதைத்துவிட்டுப் போனதாகவும் ஆனது.

ராபர்ட்  ஃப்ராஸ்ட்  ஒரு அமெரிக்கக் கவிஞன்! அவர் எழுதிய  Mending Wall  என்றொரு கவிதை!   ஃப்ராஸ்ட் இங்கிலாந்துக்குப் போயிருந்தபோது, க்ரஹாம் கிரீன் என்ற எழுத்தாளர் அவரிடம் கேட்டாராம்!

"சமீபகாலத்திய இலக்கியங்களில், நீங்கள் எழுதிய இந்தக் கவிதையில் " நல்ல வேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்குகின்றன"  என்று சொல்லியிருப்பதை மாதிரிப் புரிந்து கொள்ளக் கடினமான வேறு ஒன்று இல்லையே!"

ஃப்ராஸ்ட் சொன்ன பதில், " என்னுடைய உதவி இல்லாமலேயே அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்  என்று
தான் விரும்புகிறேன்."

கவிஞரும், எழுத்தாளரும் சிரித்தபடியே அந்த விவாதத்தை அப்படியே விட்டு விடுகிறார்கள். அமெரிக்க இலக்கியத்தில்  ஃப்ராஸ்டின் இந்தக் கவிதை மாதிரி அக்குவேறு ஆணிவேராக அலசப்பட்ட கவிதை எதுவும் கிடையாது என்று விமரிசகர்கள் சொல்கிறார்கள்.
நிறையவே தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதையும் இதுவாகத் தான் இருக்கும். தப்பாகப் புரிந்து கொள்ளப் பட்ட நிலையிலும் கூட, ஒரு அழகான கேள்வியை, இந்தக் கவிதை இன்னமும் தொடர்ந்து எழுப்பிக் கொண்டு தான்  இருக்கிறது!


Something there is that doesn't love a wall,
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun,
And makes gaps even two can pass abreast

என்று ஆரம்பிக்கிற இந்தக் கவிதை, இரண்டு பேர் ஒரு குறுக்குச் சுவரைப் பற்றி பேசுவதாக உருவகத்தை எடுத்துக் கொண்டு நாற்பத்தாறு வரிகளில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. வேலியை ஒட்டி  அனுபவத்தைச் சொல்பவனும், அண்டைவீட்டுக்காரனும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வேலி எதற்கு, என்னுடைய பக்கத்தில் இருப்பது, உன்பக்கம் வந்து என்ன செய்து விடும் என்று கேட்பதற்கு, அண்டைவீட்டுக் காரன் சொல்கிறான், நல்லவேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்கும்!  



Before I built a wall I'd ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offense.
Something there is that doesn't love a wall,
That wants it down.'

கவிஞருடைய  வாதம் எல்லாம் இது தான்! ஏதோ ஒன்று, குறுக்குச் சுவர் ஒன்று இருப்பதை விரும்புவதில்லை. வேலியைக் கீழே தள்ளவே அது விரும்புகிறது! கவிஞருடைய வாதங்களை எல்லாம் அண்டைவீட்டுக்காரன் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஆனால், கடைசியாக மறுபடியும்,
'Good fences make good neighbors' என்று சொல்வதோடு கவிதை முடிகிறது. 
கவிதையில் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை அவரவர் தங்களுடைய  அனுபவங்களுக்குத் தகுந்த மாதிரி அர்த்தம் செய்து கொள்ளவேண்டியது தான்! 

சுவர் எழுப்பினால் பக்கத்து வீட்டுக்காரன் நல்லவனாக அமைந்து விடுவானா? சீனாவின் மிகப் பெரிய நெடுஞ்சுவர், அதற்கு பக்கத்து நாடுகளைத் தேடித் தந்ததா? சுவரைத் தாண்டியும் ஆக்கிரமிக்கிற சீனர்களுடைய குணத்தை அது மாற்றி விட்டதா?

"சுவரைக் கட்டுகிறபோது, எதை அதற்குள்ளாக, எதை அதற்கு வெளியே கட்டுகிறேன் யாரை வெறுத்து  செய்வதற்காக என்று கேட்டுக் கொள்வேன். அதற்குள், சுவர் எழும்புவதை விரும்பாத ஏதோ ஒன்று இருக்கிறது. சுவர் விழுந்துவிடுவதையே அது விரும்புகிறது."
என்று கவிஞர் சொல்லும்போதே, அண்டைவீட்டுக்காரர்  சொல்கிறார், "நல்ல வேலிகள் நல்ல அண்டைவீட்டுக் காரர்களை உருவாக்குகின்றன."

மேற்கு, கிழக்கு என்று இரண்டாக பெர்லின் துண்டிக்கப் பட்டிருந்த நிலையில் அமெரிக்க அதிபர் கென்னெடி, மேற்கு பெர்லின் நகரில் இந்தக் கவிதை வரிகளைக் குறிப்பிட்டுச் சொன்னபோது, மேற்கு ஜெர்மனி ஆரவாரித்தது. பெர்லின் தடுப்புச் சுவர் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை, அது விழுந்துவிட வேண்டும் என்று விரும்பியதைக் காட்டிய அதே நேரம், கிழக்குப் பகுதியிலும் கூட இந்தக் கவிதை, Something there is that doesn't love a wall  என்று ஆரம்பிக்கும் முதல் வரியை மட்டும் நீக்கப்பட்டு  பிரசுரமாகிப் பிரபலமுமானது. அங்கே Good fences make good neighbors  என்ற வரி அன்றைய மனோநிலைக்குப் பொருத்தமாக இருப்பதாகக் கொண்டாடப்பட்டது.

இரண்டு எதிரெதிரான  மன நிலைகள் இங்கே உருவகிக்கப் படுவதைப் பார்க்கலாம்! அதைக் குறித்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி இந்த உருவகத்தில் தொக்கி நிற்கிறது.

என் மகன் சிறு பையனாக இருந்த நேரம், அனேகமாக யூகேஜி அல்லது முதல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தருணம் ஒன்று  நினைவுக்கு வருகிறது.

என்னுடைய மகனும், அவனுடைய பள்ளித் தோழனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ட்ரெயினைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், என் மகன் கொஞ்சம் உரக்கவே குரல் கொடுக்கிறான், "அது இல்லடா ட்ரெயினு..! எங்க மாமா ஜீவவாடா போனாங்களே அதாண்டா ட்ரெயினு!"

(அப்போது, அவனுடைய தாய் மாமன் விஜயவாடாவில், அமெரிக்கன் ரெமடீஸ் மருந்துக் கம்பனியில் வேலை செய்து கொண்டிருந்த தருணம், அவனை வழியனுப்ப மருமகன் ரயில்வே ஸ்டேஷனுக்குப்போய்ப் பார்த்த ட்ரெயின் மட்டும் தான் அய்யாவைப் பொறுத்தவரை ட்ரெய்ன்! மத்ததெல்லாம் இல்லை!) அறியாத வயசு, சின்னப் பசங்க தான் இப்படி என்று இல்லை!

இதே மாதிரித் தான் புதிய ஏற்பாட்டில், பிலாத்து மன்னனிடம், உண்மையைப் பற்றிப் பேசப் போக, அவன் பரிசேயர்களிடம் ஏளனமாகவே கேட்ட கேள்வி! "உண்மை! யாருடைய உண்மை? என்னுடையதா அல்லது உன்னுடையதா?"

இப்படித் தான் ஒவ்வொரு விஷயத்திலுமே ஒரு குறுக்குச் சுவர் அல்லது திரையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறோம்! இருள் மூடிக் கிடக்கும் மனம் வெளுப்பதெப்போது ? குறுக்கும் சுவர்கள் விழுந்து பட்டு, உலகம் உயர்வதும் எப்போது?

Mending Wall ! இந்த லிங்கில் முழுக் கவிதையையும் படிக்கலாம்!

இந்த யூட்யூப் வீடியோவில் அனிமேஷன் படமாகக் கவிஞரே தன் கவிதையைப் படிப்பது போலப் பார்க்கலாம், கேட்கலாம்.


கொஞ்சம் கவிதையோடு, யோசிக்கவும் செய்யலாம்!

கவிஞர் சொன்ன மாதிரி, கவிதையைப் பொழிப்புரைகள், கோனார் உரைகள் தேவையில்லாமல் புரிந்து கொள்ள முடிகிறதா?






 

வெட்கம் கெட்டவர்கள்!



வெட்கம் கெட்டவர்கள்! 

பழியைச் சுமத்தி வெளியே போ என
இப்படியும் சொல்வார்களாம்!
செத்துப் போனபின் முக்காடுபோட்டு
ஒப்பாரி வைக்கவும் வருவார்களாம்!
தோழருக்கு அஞ்சலி! மூன்று நாள் துக்கம்!
கொடிகள் அரைக் கம்பத்தில் இறக்கி வை!
வாழ்க்கை முழுவதும் செங் கொடிக்கே என
வாழ்ந்தது எல்லாம் வீண் தானோ?

உழைத்தது எல்லாம் வீண் தானோ? விழலுக்கிறைத்த நீர் தானோ?
உழைப்பவன் முகத்தில் மலர்ச்சியைக் கண்டிடச்
சங்கமும் வேண்டும், அரசியலுக்குச் செங்கொடி வேண்டும்
உழைப்பவர் கைகளில் ஆட்சியும் மாட்சியும் பெறுவதற்கே!
அதுவரை  ஓயுதல் செய்யோம் தளர்ந்து தலை சாயுதல் செய்யோமென
சொந்த நலன்களை  ஒதுக்கிவைத்து ஊருக்குழைக்க முன்வந்தால்........

பழியைச் சுமத்தி வெளியே போ என
இப்படியும் சொல்வார்களாம்!
செத்துப் போனபின் முக்காடுபோட்டு
ஒப்பாரி வைக்கவும் வருவார்களாம்!

கம்யூனிசத்தை தூக்கிப் பிடிக்க களையெடுப்பு, கட்சிக்குள் சீரமைப்பு!
கம்யூனிசமே செத்தாலும், அழித்தல் ஒழித்தல் நிற்காது! இதென்ன
இங்கே தலையெழுத்து? பழியைச் சுமத்திக் குழிக்குள் புதைத்து,
தவற்றைத் திருத்தக் குழியைத் தோண்டிப் பிணமாய்ப் போனபின்  புனிதர் பட்டம்!
உலகம் எங்கிலும்  பொதுவாய்க் காணும்
காம்ரேடுகளின்   திருத்தும் வாதம்! களையெடுப்பு!

யாருக்காக? இங்கே, இத்தனை கருவறுப்பும் எவருக்காக? எதற்காக?

சுதந்திர அடிமைகள் போர் தொடுத்தால் இதுதான்  வருமா? இன்னும் வருமா?
கதைக்குப் பின்னால் காரணங்கள்! அதுவும் மெல்ல வெளி வருமா?
கதையாய்ச்  சொல்லத் தேவையில்லை! சிலப்பதிகாரம் தெரிந்தது தான்!
கோவலன் செய்த தவறுக்கு கண்ணகிகள் அவனை  எரித்ததில்லை!
காவலனோ நீ என  ஊரை எரித்தவள் கதை  தெரியும்! சிலை தெரியும்!

வெட்கம் கெட்டவர்கள்!

சினிமாக் கூத்திலும் பெருங்கூத்தாய்,
ஊர்வலம் நடத்தும், கொடி தாழ்த்தும்!
அஞ்சலி செலுத்துகிறார்களாம்!!

என்னுடைய தோழனுக்கு..........
நான் அஞ்சலி செலுத்தப் போவதில்லை!

அஞ்சலி செலுத்தி அப்புறம் மறக்கப் போவதில்லை!
தோழமை என்பது நேசிப்பதில்.... புரிந்து கொள்வதில்!
விமரிசனம் என்பது திருத்துவதற்காகத் தான்!
ஆளையே  தீர்ப்பதாக ஆனதும்  இந்தக் கட்சியில் மட்டும் தான்!

இதையும் கொஞ்சம் பாருங்க!

பழியும் சொல்வார்கள்.....அப்புறம் இதையும் சொல்வார்கள்!




Many said the Varadarajan episode had showed that the rectification drive, which started towards the end of last year to root out ‘non-Communist’ trends that had crept into the party, should be undertaken with great care. 

“Rectification is becoming elimination. The idea is to point out errors and give comrades a chance to correct themselves. We should be helping them rather than washing our hands of the matter after having taking action,” said a Politburo member.




தோழர் உ.ரா..வரதராஜன்....!


தோழர்.உ ரா வரதராஜன் ! கட்சி வட்டாரங்களில் WRV என்று இனிஷியலை வைத்து மரியாதையோடும், அன்போடும் அழைக்கப்பட்ட  தோழர்!

ரிசர்வ் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த தருணங்களிலேயே, தன்னைத் தொழிற்சங்க, கட்சி வேலைகளுக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தோழராக, தன்னுடன் பணிபுரிந்த சரஸ்வதி என்ற தலித் விதவையை மறுமணம் செய்து கொண்ட நல்லெண்ணம் படைத்த மனிதராக, எனக்கும் இன்னும் பலநூறு தொழிற்சங்க  முன்னணி  ஊழியர்களுக்கு ஆசானாகவும்  இருந்தவர்!

இந்தியத் தொழிற் தகராறுகள் சட்டத்தின் படி, வேலை நிறுத்தம் செய்வது சட்டபூர்வமான உரிமையாக அறிவிக்கப் பட்டிருந்தாலும், அதே சட்டத்தின் பல்வேறு நடைமுறைகள், பிரிவின்படி எந்த ஒரு வேலைநிறுத்தமும் சட்டபூர்வமாகச் செய்ய முடியாது என்பதை அழகாக  விளக்குவதில் ஆகட்டும், தேசாய் அவார்ட்  முதல், வங்கி ஊழியர்கள் சங்கம் வைத்துப் போராடிய வரலாறு, ஊதிய ஒப்பந்தங்களின் வரலாறு, கணக்கு என்று சொல்லிக் கொடுத்ததில் ஆகட்டும், கட்சியைத் தனது உயிருக்கும் மேலாக நேசித்த விதத்திலாகட்டும், எல்லாவிதங்களிலும் எங்களுக்கு ஆசானாக இருந்த தோழர்!

கம்யூனிஸ்ட் இயக்கங்களில் உள்ள மிகப் பெரிய கோளாறு, ஒரு உறுப்பினரைக் காலி செய்வது என்று முடிவு செய்துவிட்டு அதற்கப்புறமாகக் காரணங்களை அடுக்குவது!


சந்தேகநிழலில், லெனினுடன் சேர்ந்து போராடிய ட்ராட்ஸ்கி முதலான பெரிய தலைகளேஉருண்டிருக்கின்றன! அப்போதெல்லாம் தத்துவார்த்த ரீதியில் பிற்போக்குவாத முத்திரை, கருங்காலி முத்திரை குத்தப்படும்!  

இந்தியச் சூழ்நிலைகளில், ஈ எம் எஸ் நம்பூதிரிபாடுக்குப் பிறகு தத்துவார்த்த அடிப்படையில் லேபில்கள் குத்துகிற போக்கு குறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்!தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில், வேறு பெண்களோடு தொடர்பு, வட்டித் தொழில் செய்கிறார், இப்படி சில்லறைக் காரணங்களிலேயே  கட்டம் கட்டிவிடுவது சாதாரணமாக நடப்பது தான்!

தனக்கும் அப்படி ஒரு நிலை ஒரு நாள் வரும் என்பதை தோழர் வரதராஜனோ, கட்சி உறுப்பினர்களோ கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க முடியாது! 



கட்சி முடிவைத் தாங்கிக் கொள்ள முடியாமலும், பல்வேறு போராட்டங்களைச் சந்திக்கத் தெரிந்தவருக்கு, வீட்டில் நடந்த போராட்டம் எவ்வளவு வலியையும்,  வேதனையையும் தந்திருக்கிறது என்பதையும் இரண்டு கடிதங்களில் தோழர் எழுதி வைத்திருக்கிறார் என்றும் தகவல்கள் சொல்கின்றன.

கட்டிய மனைவியே, கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, கட்சியின் மாநிலக் குழுவுக்குப் புகார் செய்கிறார். தொடர்பு வைத்திருந்ததாகச் சொல்லப் படும் பெண்ணும் கூட, தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கட்சியிடம் புகார் தெரிவித்திருக்கிறாராம்!

மாநிலக் குழு விசாரித்துப் பரிந்துரை செய்ததன் பேரில், கட்சி, தோழர் வரதராஜனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எல்லாப் பதவிகளிலும் நீக்கியிருக்கிறது. இதன் பின்னணியில் ஒரு பொலிட்பீரோ உறுப்பினரே இருந்திருக்கிறார் என்றும் செய்திகள் கசிகின்றன.

பதினோரு நாட்களாகக் கணவரைக் காணவில்லை என்று அவரது மனைவி காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். கட்சியும் சென்ற வியாழக் கிழமை, இதே மாதிரிப் புகாரைக் காவல்துறையிடம் கொடுத்திருக்கிறது. இன்றைக்குப் போரூர் ஏரியில் கிடந்த பிணத்தை, தன்னுடைய கணவருடையதுதான் என்று திருமதி சரஸ்வதி அடையாளம் காட்டினாராம். இருந்தாலும் மரபணு சோதனைக்குப் பிறகு, முடிவு
சொல்லவிருப்பதாகக் காவல் துறைசெய்திகள் சொல்கின்றன.

செய்தி ஒன்று! செய்தி இரண்டு! இவைகளில் எனக்கு ஆர்வமில்லை. இதைப் பற்றி எழுதவேண்டாமே என்று தான் இதுவரை இருந்தேன்.

ஆனாலும்,ஒரு நல்ல தோழனை, ஆசிரியனை, இலட்சியவாதியை இழந்து விட்ட சோகத்தில் என் கண்கள் கசிகின்றன.

ஒரு கம்யூனிஸ்டாக இருப்பது என்பது, மனித நேயம் மிகுந்தவனாக இருப்பது என்று தான் எனக்குப் பொதுவுடைமைத் தத்துவத்தைப் போதித்த நல்ல தோழர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.

இப்போதோ....?


Updated 22/02/2010


இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் செய்தி, மார்க்சிஸ்ட் கட்சிக்கோ, அதற்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தோழர் வரதராஜனுக்கோ எந்தவிதத்திலும் பெருமை சேர்ப்பதாக இல்லை.

தொடரும் மர்மம்... இதுதவிர, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸôரும், போரூர் போலீஸôரும் இணைந்து இந்த வழக்கு குறித்து குற்றவியல் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கட்டுக்கோப்பான கட்சியின் மாநில தலைமைப் பொறுப்பில் இருந்த வரதராஜன் திடீரென மாயமானதும், மர்மமான முறையில் அவரது சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதும் கட்சியினரிடையே தேசிய அளவில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலையா?சதியா? அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இந்தச் சம்பவத்தில் ஏதும் சதி உள்ளதா என்பது குறித்தும் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




ஸ்ரீ அரவிந்த அன்னையை அறிந்த விதம்!

 

முந்தைய பதிவில், திரு பாலு, அன்னையுடன் ஐக்கியமான  அனுபவத்தைப் பற்றிக் கேட்டிருந்தார். அவர் கேட்டிருந்த மாதிரியான உன்னத நிலை இன்னமும் கைவரப் பெறவில்லை என்பது கண்கூடு. ஆனாலும், ஸ்ரீ அரவிந்த அன்னையை நான் அறிந்து கொண்டேன் என்பதை விட, அவளே தன்னை எனக்கறிவித்துக் கொண்டாள் என்பது தான் உண்மை! என்ன விட்ட குறை, தொட்ட குறையோ தெரியாது, என்னைப் பெற்ற தாயின் வடிவில் ஸ்ரீ அரவிந்த அன்னையைக் காண முடிந்த ஒரு அனுபவம்  இங்கே, மீள்பதிவாக!

"There is only one thing of which I am absolutely sure, and that is who I am. Sri Aurobindo also knew it and declared it. Even the doubts of the whole of humanity would change nothing to this fact.

But another fact is not so certain - it is the usefulness of my being here in a body, doing the work I am doing. It is not out of any personal urge that I am doing it. Sri Aurobindo told me to do it and that is why I do it as a sacred duty in obedience to the dictates of the Supreme.

Time will reveal how far earth has benefited through it."


THE MOTHER

 
(24.5.1951)
(On Herself, Volume 13, Page 47)



அறியாமல் இருந்த பொழுதிலும், புரிந்து கொள்ள முடியாத நிலையிலும் கூட ஸ்ரீ அரவிந்த அன்னையே! நீ இவனிடத்தில் காட்டிய பேரருளை என்னவென்று சொல்வது அம்மா!

பத்து அல்லது பதினோரு வயதுச் சிறுவனாக இருந்த போது, இவனது உடன்பிறந்தவன் ஒரு கல்லூரிகளுக்கிடையிலேயான போட்டியில் கலந்து கொள்வதற்காக பாண்டிச்சேரி ஜிப்மெர் கல்லூரிக்குப் போய் விட்டு, அப்படியே ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கும் போய் விட்டு வருகிறான். வரும்போது, சில புத்தகங்களையும் வாங்கி வருகிறான். அதிலே ஒரு புத்தகம். ஸ்ரீ அன்னையின் உரையாடல்கள்-கரடு முரடான மொழிபெயர்ப்பு, தவிர இவனுக்கோ கையில் கிடைக்கிற எல்லாவற்றிலும் தூய தமிழில் தன் பெயரை எழுதிப் பார்ப்பது தவிர புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய சிந்தனை இல்லை.அந்தப் புத்தகத்திலும், இன்றைய அரசியல்வாதிகள் மாதிரி  தன் பெயரை முகப்பு, மற்றும் உள்ளே இரண்டு பக்கங்களில் பொறித்து அழகு பார்த்தாயிற்று!



அந்தப் புத்தகத்திலே உள்பக்கத்தில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் கருப்பு வெள்ளைப் புகைப்படம், அதைப் பார்க்கும் போதெல்லாம், "அட,.இவள் எங்க அம்மா போல இருக்கிறாளே" என்று தோன்றும். அடிக்கடி அந்தப் புத்தகத்தை எடுப்பதும், படத்தைப் பார்த்து, "இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே" என்று நினைப்பதும், ஒன்றிரண்டு பக்கங்களை சும்மா அப்படிப் புரட்டிப் பார்ப்பதும், இப்படியாக சில காலம்.

உண்மையில், இவனைப் பெற்ற அன்னையின் முக சாயலுக்கும், அந்தப் புகைப்படத்தில் இருந்த உருவத்திற்கும் முக ஒற்றுமையே இல்லை, தாய்மையைத் தவிர!

ஸ்ரீ அரவிந்த அன்னையே இவனது அன்னையின் சாயலில் அடிக்கடி தோன்றி இருக்கிறார் என்பது இவனுக்குப் புரிய நீண்ட நாட்கள் ஆயிற்று. நான் உன்னுடைய அன்னைதான் என்று சொல்லாமல் சொன்ன அந்த நிகழ்வைப் புரிந்து கொள்கிற விவேகமோ பக்குவமோ அப்போது இல்லை. அதற்கு அப்புறமும் கூட நீண்ட நாட்களுக்கு வரவில்லை.

இடையில், ஏகப்பட்ட சோதனைகள்.வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்து கொள்ளமுடியாமல், ஒரு சவலைப் பிள்ளையைப் போலத் தடுமாறி தடம் புரள இருந்த நேரத்தில் சத்குரு ஸ்ரீ சாதுராம் சுவாமிகளுடைய கருணைப்பார்வை இவன் மேல் விழ, அறுந்த பட்டம் போல இலக்கில்லாமல் காற்றடிக்கிற பக்கமெல்லாம் போய்க்கொண்டிருந்த நிலைமாறியது.

அதுவும் கொஞ்ச காலம் தான். மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிக் கொண்டு ஆட்டிப் படைக்க, ஊரைத்திருத்தப் புறப்பட்ட வெட்டிக்கூட்டத்தில் இணைந்து கொண்டு நாத்திகமும் பேச ஆரம்பித்தவனிடம் தொழிற்சங்கம், இடது சாரிச் சிந்தனைகள், நாத்திக வாதம், இப்படி ஏகப்பட்ட அடைசல்கள் குவிந்துபோயின.

சாதிக்க முடிந்தவன் சாதிக்கிறான்; முடியாதவன் போதிக்கிறான் என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள்.

உண்மைதான்!.

ஊரைத் திருத்தப் புறப்படுகிறவன், தன்னைத் திருத்திக் கொள்வதில்லையே!தன்னையே ஒரு ஒழுங்கு, கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கத் தெரியாதவன், ஊரைத் திருத்தப் போகிறேன், சீர் திருத்தம் கொண்டு வரப் போகிறேன், புரட்சி செய்யப் போகிறேன் என்று சொல்லித் திரிவதை விட ஒரு அயோக்கியத்தனம் இருக்க முடியாது.  இப்படி அயோக்கியர்களோடு, அயோக்கியனாக கொஞ்ச காலம் இருந்த பிறகு, மறுபடி ஸ்ரீ அன்னையை அறிந்து கொள்ளத் தவிக்கும் ஒரு நேரமும் வந்தது.

மாற்றத்திற்கான விதை உள்ளே விதைக்கப் பட்டிருப்பது ஒருவாறாக புரிய ஆரம்பித்தது.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்னைச் சரண் அடைகிறேன்.

எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளிலேயே சமர்ப்பிக்கிறேன். இவை அனைத்தும் இறைவனது சித்தத்தின்படி இயங்க வேண்டிய கருவிகள். அறியாமையினால் இவை என்னுடையது என்று மயங்கி இருந்தேன்.

மயக்கம் தெளிவித்து என்னை வழி நடத்துவாய் தாயே!

மறுபடி மறுபடி உன்னைச் சரண் அடைகிறேன்.

உன்னைச் சரணாக ஏற்க மறுக்கும் இருண்ட பகுதிகள் மாற்றத்திற்குள்ளாகும் வரை இவனது சிறு முயற்சி வேண்டியிருப்பதும், கவலை கொள்ளாதே உன்னுடைய சிறு முயற்சியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அபயமளிப்பதும் இப்படி எதுவானாலும் உன்னுடைய சித்தத்தின் படியே நடந்தேறட்டும்.

என் அன்னை என்னோடு இருக்கிறாள்! என்னுடைய செயலென்று தனித்து எதுவும் இல்லாத, அனைத்தும் அவள் அருளே என்றிருக்கும் நிலைக்கு உயர வரம் அருள்வாய்!