அறுபது வினாடிகளில் அமெரிக்கா ..! இந்திய நிலவரம் தெரியுமா?



ஒரு நிமிடம்! அறுபது வினாடிகள்!

மிகக் குறைவான நேரம் தானே என்று தோன்றுகிறதா? இந்தக் குறைவான நேரத்துக்குள்ளேயே என்னென்ன நடந்து முடிந்து விடுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தால், நிம்மதியாக இருக்கவும் முடியுமா என்ன!

இந்த ஒரு நிமிடத்திற்குள் என்னென்னவெல்லாம் நடந்து விடுகின்றன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இந்த உலகம், வாழ்க்கை இதைப் பற்றியெல்லாம் வினோதமான செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிவதோடு, நாம் எப்படிக் கிணற்றுத்தவளை மனோபாவத்திலேயே தேங்கிப்போய் விடுகிறோம் என்பதை நினைத்துக் கொஞ்சம் வெட்கப்படவும் வேண்டியிருக்கும் இல்லையா!

இணையத்தில் உலா வந்து கொண்டிருந்த தருணம், இந்த படத்தில், ஒரு நிமிடத்தில் நடக்கும் இருபது விஷயங்களைச் சொல்லும்போது, அங்கே தெரிவது வெறும் புள்ளிவிவரம் மட்டும் இல்லை, வாழ்க்கையின் யதார்த்தங்கள் என்பது உறைக்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியாகக் கூட இருக்கிறது.

நம்மை விட அமெரிக்கர்களுக்குக் கணக்குப் பாடம் கொஞ்சம் வீக்! பத்தில், நான்கு  பேருக்குக் கணக்கு என்றாலே நிலவேம்பாகக் கசக்கிறதாம்!

இதை, மிரட்டுகிற புள்ளிவிவரங்களாக, வெறும்  எண்களை வைத்து வித்தைகாட்டுவது போல இல்லாமல், அவை சொல்ல வரும் உண்மையைப் பொட்டில் அறைகிற மாதிரிச் சொல்லியிருப்பதைப் பாருங்கள்! இதை ஒரு அமெரிக்க வலைத்தளத்தில் பிடித்தது என்பதால், சொல்ல வரும் விஷயங்களுமே அமெரிக்கர்களைப் பற்றித் தான் இருக்கும் என்றாலும், சில யதார்த்தங்கள் சுடுகின்றன!

அறுபது வினாடிகளில், அமெரிக்காவில்............

இருநூற்றைம்பது குழந்தைகள் பிறப்பதில், 113 ஏழ்மையில் பிறக்கின்றன.  15 குழந்தைகள் பிறவிக் கோளாறுகளுடன் பிறக்கின்றன 

ஒரு சராசரி அமெரிக்கக் குடும்பம், நாற்பத்து நான்கு ரூபாய் வருமானமாக ஈட்டுகிறது. ஒபரா வின் ஃபிரே அதே நேரம் 24058  ரூபாய் சம்பாதிக்கிறார்! உலக அளவில் சராசரியாக அதுவே ஆறு ரூபாய்  தான்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்யும் ஒரு அமெரிக்கர் ஆறு ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் அதே நேரம், ஒரு இந்தியர் பதினொன்றரை ரூபாய் சம்பாதிக்கிறார்.

வியட் நாமில் நிகி தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளி சராசரியாக ஆறரை ரூபாய் மட்டுமே கூலி பெரும் பொது, அதே நிறுவனம் அமெரிக்காவில் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்து முன்னூறு ரூபாய் ஈட்டுகிறது.


இதை ரூபாய்- டாலர் கன்வர்ஷன் பண்ணிச் சொல்வதற்காக இல்லை! அமெரிக்க டாலரை, சராசரி 46 என்று எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, இன்னும் கொஞ்சம் விவரமாக இருக்குமே என்பதற்காகத் தான்.

கடைசியில் சொல்லப் படும் அந்தக் கொடுமை! பட்டினியால் ஒவ்வொரு நிமிடமும் பதினெட்டு சாவுகள்! கொஞ்சம் மேலே பார்த்தீர்களானால், அறுபதாயிரம் கிலோ  உணவு  வீசி எறியப்படுவதாக!

சமூகப் பாதுகாப்பு என்று அரசின் உதவி கிடைக்கும் முன்னேறிய நாட்டிலேயே இப்படி என்றால், இந்தியா மாதிரி இன்னமும் அடிப்படை வசதிகளைக் கூட பெறமுடியாத, கல்வி, மருத்துவம், சாலை வசதிகளைப் பெற முடியாத மக்களுடைய நிலை என்ன?

ஏழைப்பங்காளன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு  அதிலும் புகுந்து சம்பாதிக்கத் தெரிந்த அரசியல் வாதிகளின் பிடியில் சிக்கிய இந்த தேசத்தின் உள்ளது உள்ளபடி நிலவரம் எப்படி இருக்கும்?

எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?


திஸ்கி:
திரு பாலா தன்னுடைய பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல இந்த கிராபிக் படத்தில் ஐ டி   துறையில் ஒரு அமெரிக்கர் ஒரு நிமிடத்திற்கு சுமார் ஆறு ரூபாய்  சம்பாதிக்க முடிகிறபோது, ஒரு இந்தியர் அதில் ஐந்தில் ஒரு பங்கே பெறுகிறார் என்று தான் இருக்கிறது. அந்த வகையில் சீத்தலைச் சாத்தனார் மாதிரி, தவறைத் திருத்த அவர் புறப்பட்டது சரி தான்!

ஆனால், பதிவின் முக்கியமான கருத்தே, அந்த வித்தியாசங்களில் இல்லை. புள்ளிவிவரங்களில் கொஞ்சம் நேர்மை, கொஞ்சம் சமூகப் பாதுகாப்பு இப்படிக் குறைந்தபட்ச உத்தரவாதம் உள்ள ஒரு முன்னேறிய நாட்டிலேயே நிலைமை இப்படி என்றால், இந்தியா மாதிரி, புள்ளிவிவரம் சொல்வதிலும் கூடக் காசுபார்க்கத் தெரிந்த புள்ளிராசாக்கள் (அரசியல்வாதிகள்)நிறைந்த நாட்டின் உண்மையான நிலவரம் எப்படியிருக்கும் என்று யோசித்ததுதான்!







4 comments:

  1. ஒரு படத்தில் வடிவேலு ஸ்கூல் ப்ரின்சிபலா இருப்பார். ஒரு நிமிடம் மணி அடிக்க தாமதமானதால் பியூனை வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்வார். அவர் ஒரு நிமிடம்தானே இதற்காகவா இவ்வளவு பெரிய தண்டனை என்று கேட்க்கும்போது, பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோருடைய ஒரு நிமிடம் அனைத்தையும் கணக்கெடுத்தால் கிட்டதட்ட இரண்டு நாள் ஆகிறது என்பார். அது ஒரு நகைச்சுவை காட்சியாக காண்பிக்கப்பட்டாலும் ரொம்ப நல்ல விஷயம் சொல்லியிருப்பார்.

    நல்ல பகிர்வு சார்.

    ////கடைசியில் சொல்லப் படும் அந்தக் கொடுமை! பட்டினியால் ஒவ்வொரு நிமிடமும் பதினெட்டு சாவுகள்! கொஞ்சம் மேலே பார்த்தீர்களானால், அறுபதாயிரம் கிலோ உணவு வீசி எறியப்படுவதாக!////

    உணவின்றி வறுமையால் பட்டினியால் ஏற்படும் சாவைக்காட்டிலும் கொடுமை வேறெதுவும் இல்லை.

    இ‌ந்‌தியா‌வி‌ல் (2009-ல்) ஒரு ‌நி‌மிட‌த்‌தி‌ல் 34 குழ‌ந்தைக‌ள் ‌பிற‌ப்பதாகவு‌ம், 10 பே‌ர் உ‌யி‌ரிழ‌ப்பதாகவு‌ம் ‌பிற‌ப்பு இற‌ப்பு ப‌திவு‌த் துறை மூல‌ம் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது. இது 100% சரியானதில்லையென்றாலும் ஓரளவு உண்மை.

    ReplyDelete
  2. your salary calculations are wrong...!

    ReplyDelete
  3. பாலா!

    கருத்துச் சொல்வதற்கு வெளியே வந்து விட்டீர்கள், அப்புறம் முக்காடு எதற்கு? உங்களைப் பற்றி எந்த விவரமும் இல்லை!

    ஒரு அனானி என்பதற்குப் பதிலாக பாலா! முக்காடு இல்லாமல் வருபவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்!

    இங்கே நான் எந்தப் புல்ளிவிவரத்தையுமே தனியாகத் தரவில்லை. ஒரு சுட்டியைக் கொடுத்து அதில் இருந்த கிராபிக் படத்தில் இருந்த விவரங்களை வைத்து மட்டுமே, யோசிப்பதற்காக!

    சம்பள விகிதங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அது எப்போதுமே ஒரு இடத்தில் பாதாளத்திலும், இன்னொரு இடத்தில் மலை உச்சியிலும் என்று இருப்பதனால் தான், அமெரிக்கப் பொது மக்கள், வங்கி, நிதித்துரைகளில், கொழுத்த போனஸ் அறிவிப்பைக் கண்டு கொதித்துப் போனார்கள்! ஒபாமாவின் மீது நம்பிக்கை குறைந்து வருகிற நிலையுமாகிப் போனது.

    இருபத்தைந்து பில்லியன் பவுண்டுகள் லாபத்தை எப்படி வெளியே அறிவிப்பது என்பதில் பிரிட்டிஷ் வங்கிகள், தயங்கிய செய்தி கூட என்னுடைய முந்தைய பதிவில் சொல்லப் பட்டிருக்கிறது.

    அப்புறம், என்ன தவறு, என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமானால்,அது எழுதிய எனக்கும் படிக்கிற உங்களுக்கும், ஒரு சிந்தனையைப் பகிர்ந்துகொள்கிற அதே தருணம், தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் உதவியாகவும் இருக்கும்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!