வாத்தியாரே! வணக்கம்!

சுனந்தாவின் டைரி!



 “இந்த டைரியை படிப்பவர்கள் ஆயிரம் வருஷம் நரகத்தில் தலை கீழாக தொங்குவார்கள்” என்று ஆரம்பிக்கிறது.

இப்படிச் சொன்ன பிறகு யார்தான் அடுத்தவர் டைரியைப் படிக்காமல் இருக்க முடியும்?

சுனந்தா என்ற இளம்பெண், தன்னுடைய காதல் அனுபவங்களைச் சிறிது சிறிதாகப் பகிர்ந்து கொள்கிற மாதிரி, அவளுடைய டைரியில் இருந்து கொஞ்சம்.

கிருஷ்ணன் கொலை செய்யப் பட்டுக் கிடக்கிறான். சொந்தப் பகை காரணமாக இன்னார்  தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று அவசர அவசரமாகப் போலீஸ் தேவ் என்பவனைக் கைது செய்கிறது. தேவ், அவன் சகோதரி ஹரிணி இவர்களோடு, கொலை செய்யப்பட கிருஷ்ணனுக்குக் கொஞ்சம் பகைமை ஏற்படுகிற அளவுக்குக் காரணங்கள் இருக்கிறது குற்றம் சாட்டப் பட்ட தேவ் தரப்பில் ஆஜராகும் வக்கீல், பிராசிகியூஷன் தரப்பில் உள்ள ஓட்டைகளை வைத்து, தேவ் அந்தக் கொலையைச் செய்திருக்க முடியாது என்று நிரூபித்து, குற்றம் சாட்டப் பட்டவனை விடுவித்து விடுகிறார்.

ராமநாதன்,  இன்னும் பதினைந்தே நாட்களில் ஒய்வு பெறப்போகும் போலீஸ் அதிகாரி. இந்தக் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடித்தே தீருவது என்று களத்தில் இறங்குகிறார். கண்டு பிடித்தும்  விடுகிறார். அப்போது,தான் சுனந்தாவின் கதை வருகிறது! கிருஷ்ணன் எப்படிப் பட்ட பெண்பித்தன், சுனந்தா அவனிடம் தன்னை இழப்பதும், கருக்கலைப்பு, இப்படி அந்தக் கொலையின் அனாடமி வெளி வருகிறது. ராமநாதன் அடுத்து என்ன முடிவு செய்கிறார் என்பது இன்னொரு ட்விஸ்ட்!

பதினான்கு  வாரங்கள், குமுதம் வார இதழில் தொடராக வெளி வந்த போது,  யார் இந்த எழுத்தாளர் என்று படித்த அத்தனை பேருடைய புருவங்களையும் வியப்பில் உயர்த்த வைத்த அந்தக் கதை நைலான் கயிறு! சுஜாதா எழுதிய முதல் புதினம்! 



ஸ்ரீரங்கம்   எஸ் ஆர் என்றும் எஸ் ரங்க ராஜன் என்றும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தவர் நாவலாசிரியராக, ஏற்கெனெவே நிறைய ரங்கராஜன்கள் இருப்பதால், வேறு ஒரு புனைபெயரைத் தேடிக் கொள்ளும்படி  ரா கி ரங்கராஜன் சிபாரிசு செய்ய, சுஜாதா என்று தமிழ் எழுத்துலகுக்கு ஒரு புது ஞாயிறாகவே எழுந்த ஆரம்பத் தருணம் அது. 1968 ஆம் ஆண்டு! அதற்கடுத்த நாற்பதாண்டுகள், தமிழ் எழுத்தின் பிரமிக்க வைத்த ஆண்டுகளாகவே ஆக்கி வைத்தது என்று சொன்னால் மிகையோ, பொய்யோ இல்லை. அவருடைய சம காலத்திலோ, அல்லது அப்புறமோ எழுத வந்தவர்கள் அவர் எட்டிப் பிடித்த உயரங்களை, இன்னமும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் இருந்தார்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. வெறும் புதினங்கள் என்று குறுகிவிடாமல், விஞ்ஞானக் கதைகள், அறிவியல் கட்டுரைகள், சரித்திரக் கதைகள், திரைப்படத் துறை, இப்படிப் பலமுகங்களிலும் பட்டை தீட்டப் பட்ட வைரமாக  ஒளிர் விடுகிற எழுத்தாளராக இருந்ததாலேயோ என்னவோ, இங்கே வழக்கம் போல நிறையப் பேருடைய வெறுப்பு, அவதூறுக்கும் ஆளானதும் நடந்தது.

சுஜாதா என்ற ஸ்ரீரங்கம் எஸ் ரங்கராஜன், தனது உடலை நீத்து இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைகிற தருணத்தில், அவருடைய எழுத்துக்களில் மிளிரும் குறும்பும் நகைச்சுவையும் மரணத்தையும் வென்று நிற்பதாகவே, அவரது எழுத்துக்களை மீஎண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் எனக்குத் தோன்றுகிறது.

சித்திரமும் கைப்பழக்கம் என்றபடி எழுத எழுத மெருகேறிக் கொண்டே போன அவரது எழுத்து வன்மைக்கு, எழுத்தாளர் சாரு நிவேதிதா, சுஜாதா 1976 இல் எழுதியதில் ஒரே ஒரு பாராவை வைத்து ஒரு பதம் காட்டியிருக்கிறார்.


“ ஆர்.ஜி.பதி கம்பெனி பதிப்பித்துள்ள ரூ. 3.50 விலையுள்ள மாயாஜால மர்மங்கள் என்கிற நான்கு பாகங்கள் அடங்கிய புத்தகத்தில் யாவரும் பிரமிக்கத்தக்க பல ஜாலங்கள் , பல சித்துக்கள் , விளையாடும் மை வகைகள் , சிங்கி வித்தை , சொக்குப் பொடி சூக்ஷி அஷ்ட கர்ம கருமை , முனிவர்கள் , வாராகி , ஜாலாக்காள் , குட்டிச்சாத்தான் , யக்ஷணி , அனுமான் , மாடன் , பகவதி , இருளி , காட்டேரி வசியங்களும் கோகர்ண கஜகர்ண இந்திர மகேந்திர ஜாலங்களும் , குழந்தைகளின் சகல தோஷங்களுக்கும் விபூதி பிடித்தல் , வேப்பிலை அடித்தல் , பேய் பிசாசுகளை ஓட்டுதல் , பில்லி சூனியங்களை அகற்றல் , சதிபதிகள் பிரியாதிருத்தல் , ஈடு மருந்தை முறித்தல் , பாம்பு , தேள் , நாய் , பூனை , எலிக்கடி விஷங்களை ஒழித்தல் , ஜாலாக்களின் ஜெகஜ்ஜால வித்தைகள் , முள் மீது படுத்தல் , நெருப்பைக் கையில் அள்ளுதல் , மிதித்தல் , சட்டி ஏந்துதல் , மடியில் கட்டுதல் , ஜலத்தின் மீது படுத்தல் , உட்காருதல் , வயிற்றில் ஈட்டி பாய்ச்சுதல் போன்ற எண்ணற்றவைகளுடன் எல்லாவற்றிற்கும் சிகரமாக ஆட்டு மந்தையை மாட்டு மந்தையாக்குதல் வரை விவரங்கள் இதில் அடங்கியுள்ளது.

விலாசம் 4 வெங்கட்ராமய்யர் தெரு சென்னை- 1. 1976 ல் எல்லாரும் வைத்திருக்க வேண்டிய புஸ்தகம். ”

இன்னும் நிறையச் சொல்லிக் கொண்டே போக ஆசைதான்!  கொஞ்சம் பொறுங்கள் !

சுஜாதா எழுதிய நிர்வாண நகரம் புதினத்தில் கதாநாயகன் சிவராஜ்,  கணேஷிடம் தன தரப்பு வாதமாகச் சொல்வதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

"மிஸ்டர் கணேஷ்! நான் இந்த நகரத்தை நிர்வாணமாக்க முயன்றேன்! நிர்வாணம்னா எக்ஸ்போஷர்! எங்கோ ஒரு மூலையில் ஒரு பூச்சியா ஏறும்ப இருந்தவனை....ஒரு அனாமதேயத்தை இந்த நகரம் பேச, ஏன் கொண்டாடக் கூட ஆரம்பிச்சிடுச்சு பாருங்க. அவங்களுக்கு வேண்டியது சென்சேஷன். என்னைப் பத்தி அசெம்பிளியில் பேசினாங்க ..லாவணி பாடினாங்க, பெண்கள் டீ ஷர்டுல ஏத்துக்கறாங்க...பஸ் ஸ்டாண்டு , ரயில், செய்தித் தாள்கள் எங்கும் எங்கும் என்னைப் பத்தித் தான் சென்ற மூணு மாசமா பேசிக் கிட்டிருந்தாங்க, என்ன ஒரு கல்சுரல் அபெர்ரேஷன் பாருங்க! நகரத்தை நான் என்னுடைய முறையிலே பழி வாங்கறது, கேலி செய்யறது, திருப்பித் தர்றது குற்றமா சொல்லுங்க!"  


தமிழ் எழுத்துலகில் எத்தனையோ வாத்தியார்கள் இருந்திருக்கிறார்கள்!  சுஜாதா, கொஞ்சம் வித்தியாசமான தமிழ் வாத்தியார்!

"மிஸ் தமிழ்த் தாயே! நமஸ்காரம்!"


தைரியமும் நகைச்சுவையும், நல்ல ரசனையும் மிகுந்த நவீனத் தமிழ் வாத்தியார்!

வாத்தியார் சுஜாதாவுக்கு வணக்கங்கள், ஒரு வாசகனிடமிருந்து !



 

17 comments:

  1. அவர் தொடாத எல்லை இல்லை...கதை முதல், கவிதை வரை, புதுக் கவிதை, மரபுக் கவிதை, ஹைக்கூ, ...மற்றும் நாடகம், விஞ்ஞானத் தொடர்கள், கேள்வி பதில்கள், பெற்ற அனுபவக் கட்டுரைகள்...எவ்வளவு சொன்னாலும் இன்னும் சொல்லவே ஆரம்பிக்காத நிலை போல மனதில் ஒரு குறை...இளமை மாறாத மனது/எழுத்துக்கு சொந்தக் காரர். அவர் இழப்பு எழுத்துலகின் ஈடு செய்ய முடியாத இழப்பு. நேரில் பார்க்காத அவரை உயிரற்ற உடலாக பார்க்க கிளம்பி விட்டு போகாமல் நின்று விட்டோம்.இப்பொழுதாவது போகலாம் என்றும், வேண்டாம் எழுத்துகளாக அவர் என்றும் நம்மோடு இருப்பார் என்றும் இரண்டு எண்ணங்களில் போகவில்லை. வாசகனை புதிய விஷயங்களுக்கும், புதிய பாணிக்கும், தயார் செய்து எடுத்து சென்று கொண்டே இருந்தவர்.

    ReplyDelete
  2. வாத்தியார் சுஜாதாவுக்கு வணக்கங்கள், ஒரு வாசகனிடமிருந்து !


    நல்ல பதிவு

    ReplyDelete
  3. வாருங்கள் ஸ்ரீராம்!

    ஒரு நல்ல எழுத்தாளனாக இருப்பவன் முதலில் நல்ல ரசனைக் காரனாக இருக்க வேண்டும்! சுஜாதாவிடம் அது இருந்தது! இன்னும் கொஞ்சம் ஆழ்ந்த ரசனையாக அவரிடமிருந்து எழுத்தாக வெளிவந்தது.

    பாலாஜி!

    இப்படி ஒரு வாத்தியார் கிடைத்தால் யார் தான் கொண்டாட மாட்டார்கள்....!

    ReplyDelete
  4. He is the reason for our blogs too. Today if we are able to write like this, all the credit goes to Sujatha only

    ReplyDelete
  5. யாகூ ராம்ஜி!

    என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது தெளிவாகப் புரியவில்லை. சுஜாதாவைப் பார்த்து அல்லது சுஜாதா பாணியில் தான் இங்கே எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்ல வருகிறீர்களா?

    அல்லது அவரைப் பற்றி ஏதோ ஒன்றை எழுதி பதிவுலகக் கடமையை நிறைவேற்றிவிட்டோம் என்கிறீர்களா?

    அல்லது, வெறும் வாயையே மெல்லத் தெரிந்த பதிவர்களுக்கு சுஜாதா மாதிரி அவல் கிடைத்து விட்டது, ஜன்மம் சாபல்யமாகி விட்டது என்கிறீர்களா?

    ReplyDelete
  6. // "மிஸ் தமிழ்த் தாயே! நமஸ்காரம்!" // இந்த சிறு வாக்கியத்திலேயே ஒரு கதை மறைந்து இருக்கும் ..... வாத்தியாரோட முதல் புதினத்தை போட்டு அமர்க்களப்படுத்தி வீட்டிர்கள் -- நன்றியும் வாழ்த்தும்...

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி.

    உங்கள் இந்த பதிவை
    இங்கேஇணைத்துள்ளேன்.

    நன்றியுடன் ஒரு சுஜாதாரசிகன்

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி திரு பத்மநாபன்!

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு சங்கர்.

    ReplyDelete
  9. ஒவ்வொரு விஷயத்தையும் ஆழமாகவும் எது வரை சொன்னால் சுவாரஸ்யமாக
    இருக்குமோ அதுவரை சொல்வதில் அவர் சமர்த்தர். நிறைய விஷயத்தை கற்றுக்கொள்ள ஆர்வத்தை தூண்டியவர். அவருக்கு என் நமஸ்காரங்கள்.

    ReplyDelete
  10. வாருங்கள் ரவி!

    இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால்,எதுவரை சொல்வது என்பதில் சுஜாதா எப்போதுமே எல்லை கட்டிக் கொண்டதில்லை.

    தமிழ் எழுத்தில் அது வரை கேள்விப்படாமல் இருந்த மெக்சிகோ சலவைக் காரி ஜோக்காகட்டும், ஹோலோக்ராம் மாதிரி சிக்கலான விஷயங்களை வைத்துக் கதை பின்னுவதிலாகட்டும், சுஜாதாவின் டெக்னிக் என்பது, தனக்குத் தெரிந்ததை, வாசிக்க வருபவர்களுக்கும் புரிகிற மாதிரி, அப்படிப் புரிந்துகொள்ளும்போதே கொஞ்சம் மெல்லிய நகைச்சுவையுடன், வெட்டி வர்ணனைகள், வார்த்தைச் சிலம்பம் என்று இல்லாமல், நேரடியாகவே விஷயத்தைத் தொட்டு எழுதியது தான்!

    இன்றைக்கும் கூட, எழுதும் நிறையப் பேருக்குக் கைவராத ஒன்றாகத் தான் சுஜாதா பாணி எழுத்து இருக்கிறது!

    ReplyDelete
  11. 12 வயதுகளில் இருந்து சுஜாதாவை வாசித்தவன் என்கிற முறையில்
    உங்கள் பதிவைப் படித்ததும் பழைய நினைவுகளில் மூழ்கினேன்.

    நன்றியுடன்
    டெக்‌ஷங்கர்

    ReplyDelete
  12. அந்த வாத்தியாரை நினைத்து கண்கள் கலங்குகின்றன.

    அந்த வாத்தியார் இல்லாத வகுப்பறைகள் அவர் நினைவைச் சொல்லி வெறிச்சோடிக் கிடக்கின்றன.

    'இப்படிப் பாடம் நடத்தினால் தான் மாணவர்களுக்குப் பிடிக்கும்' என்பது போன்ற பல்வேறு நிர்பந்தங்களுக்கு நடுவே அவரது நிஜத்திறமையின் பரப்பு கொஞ்சம் குறுக்கிவிட்டது போன்றே தோன்றுகிறது.

    இருந்தும் இத்தனைக்கும் நடுவே அவர் தனியாக சோபித்தார் என்பது தான் அவரது தனிச்சிறப்பு.

    இன்னும் பல்வேறு சப்ஜெக்ட்டுகளை திறம்பட எடுக்கக் கூடிய திறமை பெற்றவருக்கு எத்தனையோ திசைதிருப்பல்கள்.

    எல்லாக் குறுக்கீடுகளையும் புறந்தள்ளி அவர் தனக்காக, தனது மனசுக்குப் பிடித்தமாதிரி பாடம் நடத்த யத்தனிக்கையில் அவர் சர்வீஸும் முடிந்து போனது தான் மிகப் பெரும் சோகம்.

    பள்ளிக்கூடம் வகுப்பறை என்று இருந்தால் எத்தனையோ வாத்தியார்கள் வருவார்கள் போவார்கள்; இருந்தும் இந்த வாத்தியாரை அவர் மாணவர்கள் அடிக்கடி நினைத்துக் கொள்வார்கள்.

    ReplyDelete
  13. வாருங்கள் ஜீவி சார்!

    அவருக்கு வெளியில் இருந்து வந்த நிர்பந்தங்கள், கண்டனக் கணைகளை எல்லாம் அவர் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அதனால் அடுத்தவருக்கு சங்கடம் ஏற்படவேண்டாமே என்று ஒதுங்கிப் போனவர் அவர்.

    கற்றதும் பெற்றதும் ரொம்பவே!

    அவரும் சரி, அவர் எழுத்துக்களைப் படித்தவர்களும் சரி!

    ReplyDelete
  14. சுஜாதாவை நான் நேரில் பார்த்ததில்லை. இருந்தாலும்
    அவர் மறைந்த தினத்தில்
    மனதுக்குள் ஒரு சோகம் இருந்தது.

    அதுதான் சுஜாதாவின்
    எழுத்துக்கு கிடைத்த வெற்றி.

    நிறைய பேர்களின் வாழ்க்கையின் ஒவ்வோரு முக்கிய
    கால கட்டத்திலும் , சுஜாதாவின் எழுத்து, இளையராவின்
    இசை, ..இப்படி பல விசயங்கள்
    தவிர்க்கமுடியாதது.

    ReplyDelete
  15. //'இப்படிப் பாடம் நடத்தினால் தான் மாணவர்களுக்குப் பிடிக்கும்' என்பது போன்ற பல்வேறு நிர்பந்தங்களுக்கு நடுவே..//

    'உங்களிடமிருந்து ஒரு துப்பறியும் தொடர் கதையை, திகில் கதையை எதிர்பார்க்கிறோம்' 'அதைத்தான் எங்கள் வாசகர்கள் விரும்புவர்'
    'இந்த இதழ் அச்சுக்குப் போகும் முன்,அரைமணி நேரத்தில் தலைப்புச் சொல்லி விடுங்கள்..விளம்பரப் படுத்த வேண்டும்' 'அடுத்தமாதம் பொங்கல் இதழிலிருந்து துவங்குவதாக ஒரு மர்மக்கதை வேண்டும்' போன்ற--

    பத்திரிகை ஆசிரியர்கள் எழுதுவோரிடம் சில கோரிக்கைகளை தங்கள் விருப்பம் போல் சொல்வதான தொழில்முறை எதிர்பார்ப்புகளைத்தான், நிர்பந்தமாக நினைத்துக் குறிப்பிட்டேன்.

    ReplyDelete
  16. இது சுஜாதா என்றில்லை, வர்த்தக ரீதியாக எல்லா எழுத்தாளர்கள் மீதுமே சமீபகாலமாக வளர்ந்து வரும் நிர்பந்தம்.

    சாண்டில்யன் விரும்பியிருந்தால் கூட குமுதம் ஆசிரியர்'கள், அல்லது குமுதத்திற்குப் பிறகு அவரது கதையை வேண்டிப் போட்ட இரண்டு பத்திரிகைகளுமே கூட சிருங்கார ரசத்தை, வர்ணனையைக் குறைத்து எழுத விட்டிருக்க மாட்டார்கள்.

    அவர்களைப் பொறுத்தவரை, எழுத்தாளன், சர்குலேஷனை அதிகப் படுத்த உதவுகிற கருவி, அவ்வளவுதான்!

    சாணான் என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக சுஜாதா எழுத ஆரம்பித்த ஒரு தொடர்கதையை எதிர்த்து நாடார் அமைப்புக்கள் போராட்டம் நடத்தியது, குமுதம் பண்டில்களுக்குத் தீ வைத்துக் கொளுத்தியது என்று ஆரம்பித்தவுடன் வியாபாரி எஸ் ஏ பி அண்ணாமலை பின்வாங்கிவிட்டார்!

    எஸ் ஏ பி இறந்த பிறகு குமுதத்திற்கு ஆசிரியராகவும் சுஜாதா கொஞ்ச காலம் இருந்தார். சுஜாதா என்று இல்லை, நிறைய ஆசிரியர்கள் கொஞ்ச காலத்துக்கு மட்டுமே குமுதத்தின் ஆசிரியராக இருக்க முடிந்தது. அது வியாபாரம்!

    நீங்கள் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாமல் விட்டதற்கும் சேர்த்துத் தான்

    /அடுத்தவருக்கு சங்கடம் ஏற்படவேண்டாமே என்று ஒதுங்கிப் போனவர் அவர்.

    கற்றதும் பெற்றதும் ரொம்பவே!/

    என்று சொல்லியிருந்தேன் ஜீவி சார்!

    சுஜாதாவுக்கு இப்படி நிறுவனப்படுத்தப் பட்ட எதிர்ப்புக் கிளம்பியது போலவே தி.ஜானகிராமனுக்கும் நடந்தது!மணியன் என்ற இலக்கிய வியாபாரி, சங்கர மடத்தின் ஏகப் பிரதிநிதி போல, ஜானகிராமனை எவ்வளவு மட்டமாக விமரிசித்து எழுதினார் என்பதுகூட எனக்கு நினைவு வருகிறது!

    ReplyDelete
  17. சுஜாதாவின் நடையில் ஈர்க்கப்பட்டு, அவருடைய
    படைப்புகளில் ஏறக்குறைய 80% படித்திருக்கிறேன். அவருடைய விஞ்ஞானப் புதினங்கள் மிக
    வியக்கத்தக்கன. ஏறக்குறைய தீர்க்கதரிசனமாக‌ இருந்தன சில கருத்துகள் அதை கால‌ம் சென்றுதனே உணரமுடிந்தது? அவருடைய "திமலா" என்ற கதை, இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது. இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்
    அவர் எழுத்தைப் பற்றி

    நான் ஒருமுறை சின்னச்சின்ன கைப்பொருட்கள் விற்க்கப் படும் ஒரு கடையில் பார்த்த வாசகம்: " ஆம் உங்களாலும் இது போல‌ செய்ய முடியும். அனால்... செய்வீர்களா.?" எவ்வளவு உண்மையான‌ வாசகம். அது போலத்தான் சுஜாதாவின் எழுத்தும் !! ஏனென்றால் அவரின் எழுத்துகள் எளிமையான அதே சமயம் வியகக்க‌தக்க வார்த்தைப் ப்ர‌யோகங்க‌ள் நிறைந்தவை. "அட இது போல நாமும் எழுதியிருக்க்லாமே" என்று பல‌
    எழுத்தாளர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அவர் முந்திக்கொண்டார். அவர் நம்மைவிட்டு நீங்கியது ஒரு பேரிழ‌ப்புதான். இனி வரும் விஞ்ஞானப் புதினம் எல்லாம், "சுஜாதாவிக்குப் பின்" என்று தான் கணிக்கப் படும்

    அவரை தமிழ் எழுத்துலகமும் அரசாங்கமும் தகுந்த முறையில் பட்டமளித்து மரியாதை செலுத்தவில்லை என்பது என் மனக்குறை.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!