ஸ்ரீ அரவிந்த அன்னையை அறிந்த விதம்!

 

முந்தைய பதிவில், திரு பாலு, அன்னையுடன் ஐக்கியமான  அனுபவத்தைப் பற்றிக் கேட்டிருந்தார். அவர் கேட்டிருந்த மாதிரியான உன்னத நிலை இன்னமும் கைவரப் பெறவில்லை என்பது கண்கூடு. ஆனாலும், ஸ்ரீ அரவிந்த அன்னையை நான் அறிந்து கொண்டேன் என்பதை விட, அவளே தன்னை எனக்கறிவித்துக் கொண்டாள் என்பது தான் உண்மை! என்ன விட்ட குறை, தொட்ட குறையோ தெரியாது, என்னைப் பெற்ற தாயின் வடிவில் ஸ்ரீ அரவிந்த அன்னையைக் காண முடிந்த ஒரு அனுபவம்  இங்கே, மீள்பதிவாக!

"There is only one thing of which I am absolutely sure, and that is who I am. Sri Aurobindo also knew it and declared it. Even the doubts of the whole of humanity would change nothing to this fact.

But another fact is not so certain - it is the usefulness of my being here in a body, doing the work I am doing. It is not out of any personal urge that I am doing it. Sri Aurobindo told me to do it and that is why I do it as a sacred duty in obedience to the dictates of the Supreme.

Time will reveal how far earth has benefited through it."


THE MOTHER

 
(24.5.1951)
(On Herself, Volume 13, Page 47)



அறியாமல் இருந்த பொழுதிலும், புரிந்து கொள்ள முடியாத நிலையிலும் கூட ஸ்ரீ அரவிந்த அன்னையே! நீ இவனிடத்தில் காட்டிய பேரருளை என்னவென்று சொல்வது அம்மா!

பத்து அல்லது பதினோரு வயதுச் சிறுவனாக இருந்த போது, இவனது உடன்பிறந்தவன் ஒரு கல்லூரிகளுக்கிடையிலேயான போட்டியில் கலந்து கொள்வதற்காக பாண்டிச்சேரி ஜிப்மெர் கல்லூரிக்குப் போய் விட்டு, அப்படியே ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கும் போய் விட்டு வருகிறான். வரும்போது, சில புத்தகங்களையும் வாங்கி வருகிறான். அதிலே ஒரு புத்தகம். ஸ்ரீ அன்னையின் உரையாடல்கள்-கரடு முரடான மொழிபெயர்ப்பு, தவிர இவனுக்கோ கையில் கிடைக்கிற எல்லாவற்றிலும் தூய தமிழில் தன் பெயரை எழுதிப் பார்ப்பது தவிர புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய சிந்தனை இல்லை.அந்தப் புத்தகத்திலும், இன்றைய அரசியல்வாதிகள் மாதிரி  தன் பெயரை முகப்பு, மற்றும் உள்ளே இரண்டு பக்கங்களில் பொறித்து அழகு பார்த்தாயிற்று!



அந்தப் புத்தகத்திலே உள்பக்கத்தில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் கருப்பு வெள்ளைப் புகைப்படம், அதைப் பார்க்கும் போதெல்லாம், "அட,.இவள் எங்க அம்மா போல இருக்கிறாளே" என்று தோன்றும். அடிக்கடி அந்தப் புத்தகத்தை எடுப்பதும், படத்தைப் பார்த்து, "இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே" என்று நினைப்பதும், ஒன்றிரண்டு பக்கங்களை சும்மா அப்படிப் புரட்டிப் பார்ப்பதும், இப்படியாக சில காலம்.

உண்மையில், இவனைப் பெற்ற அன்னையின் முக சாயலுக்கும், அந்தப் புகைப்படத்தில் இருந்த உருவத்திற்கும் முக ஒற்றுமையே இல்லை, தாய்மையைத் தவிர!

ஸ்ரீ அரவிந்த அன்னையே இவனது அன்னையின் சாயலில் அடிக்கடி தோன்றி இருக்கிறார் என்பது இவனுக்குப் புரிய நீண்ட நாட்கள் ஆயிற்று. நான் உன்னுடைய அன்னைதான் என்று சொல்லாமல் சொன்ன அந்த நிகழ்வைப் புரிந்து கொள்கிற விவேகமோ பக்குவமோ அப்போது இல்லை. அதற்கு அப்புறமும் கூட நீண்ட நாட்களுக்கு வரவில்லை.

இடையில், ஏகப்பட்ட சோதனைகள்.வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்து கொள்ளமுடியாமல், ஒரு சவலைப் பிள்ளையைப் போலத் தடுமாறி தடம் புரள இருந்த நேரத்தில் சத்குரு ஸ்ரீ சாதுராம் சுவாமிகளுடைய கருணைப்பார்வை இவன் மேல் விழ, அறுந்த பட்டம் போல இலக்கில்லாமல் காற்றடிக்கிற பக்கமெல்லாம் போய்க்கொண்டிருந்த நிலைமாறியது.

அதுவும் கொஞ்ச காலம் தான். மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிக் கொண்டு ஆட்டிப் படைக்க, ஊரைத்திருத்தப் புறப்பட்ட வெட்டிக்கூட்டத்தில் இணைந்து கொண்டு நாத்திகமும் பேச ஆரம்பித்தவனிடம் தொழிற்சங்கம், இடது சாரிச் சிந்தனைகள், நாத்திக வாதம், இப்படி ஏகப்பட்ட அடைசல்கள் குவிந்துபோயின.

சாதிக்க முடிந்தவன் சாதிக்கிறான்; முடியாதவன் போதிக்கிறான் என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள்.

உண்மைதான்!.

ஊரைத் திருத்தப் புறப்படுகிறவன், தன்னைத் திருத்திக் கொள்வதில்லையே!தன்னையே ஒரு ஒழுங்கு, கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கத் தெரியாதவன், ஊரைத் திருத்தப் போகிறேன், சீர் திருத்தம் கொண்டு வரப் போகிறேன், புரட்சி செய்யப் போகிறேன் என்று சொல்லித் திரிவதை விட ஒரு அயோக்கியத்தனம் இருக்க முடியாது.  இப்படி அயோக்கியர்களோடு, அயோக்கியனாக கொஞ்ச காலம் இருந்த பிறகு, மறுபடி ஸ்ரீ அன்னையை அறிந்து கொள்ளத் தவிக்கும் ஒரு நேரமும் வந்தது.

மாற்றத்திற்கான விதை உள்ளே விதைக்கப் பட்டிருப்பது ஒருவாறாக புரிய ஆரம்பித்தது.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்னைச் சரண் அடைகிறேன்.

எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளிலேயே சமர்ப்பிக்கிறேன். இவை அனைத்தும் இறைவனது சித்தத்தின்படி இயங்க வேண்டிய கருவிகள். அறியாமையினால் இவை என்னுடையது என்று மயங்கி இருந்தேன்.

மயக்கம் தெளிவித்து என்னை வழி நடத்துவாய் தாயே!

மறுபடி மறுபடி உன்னைச் சரண் அடைகிறேன்.

உன்னைச் சரணாக ஏற்க மறுக்கும் இருண்ட பகுதிகள் மாற்றத்திற்குள்ளாகும் வரை இவனது சிறு முயற்சி வேண்டியிருப்பதும், கவலை கொள்ளாதே உன்னுடைய சிறு முயற்சியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அபயமளிப்பதும் இப்படி எதுவானாலும் உன்னுடைய சித்தத்தின் படியே நடந்தேறட்டும்.

என் அன்னை என்னோடு இருக்கிறாள்! என்னுடைய செயலென்று தனித்து எதுவும் இல்லாத, அனைத்தும் அவள் அருளே என்றிருக்கும் நிலைக்கு உயர வரம் அருள்வாய்!



6 comments:

  1. அன்னையை பற்றி மிக அழகாக சொன்னீர்கள் ஐயா.

    உங்களுடைய அனுபவமும் அருமை.

    மனதில் அன்னை நிறைந்தாள். சொற்களில் உள்ள உண்மை மனதை நிறைக்கிறது.

    ReplyDelete
  2. கண்ணதாசன் வரிகளில் அனுபவமே நான் தான் என்று ஆண்டவன் நம்மிடம் வரும்போது, அருமையான அனுபவமென்றோ, அல்லாததென்றோ பிரித்துப் பார்ப்பதே பேதைமை என்பதைத் தான் பட்டுத் தெரிந்து கொண்டேன்!

    அவரவர்க்கு வேண்டியதை, வேண்டும் தருணத்தில் வேண்டும் அளவுக்கு இறைநிலை எப்போதும் அருளிக் கொண்டிருக்கிறது!

    ReplyDelete
  3. thanks for sharing.

    1. your words are so experienced and powerfull. its should came from long writers or somuch thinked person.
    maybe this also god gifted to you.

    2.you readed only annai teachings or any others?

    3. again proved - guru kirupa or mahimai

    ReplyDelete
  4. திரு.பாலு,

    திரு.திவாஜியின் பதிவுகளில் இருந்தே சொல்லி வருகிறேன், தமிழிலேயே கருத்துக்களைச் சொல்ல முயற்சிக்கலாமே! கூகிள் இண்டிக்ம என் எச் எம், ஹைகோபிடாட்காமில் தகடூர், இப்படி ஏகப்பட்ட நிரலிகள் தமிழிலேயே எழுத, இலவசமாய்க் கிடைக்கின்றன, கொஞ்சம் முயற்சித்துப் பார்க்கலாமே!

    என்னுடைய வார்த்தைகளின் சக்தி..?

    நான் எவ்வளவு பெரிய அசடாக இருந்தேன் என்பதை அல்லவா, எவ்வளவு சுருக்கிச் சொல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கிச் சொல்ல அல்லவா முயற்சித்துக் கொண்டிருந்தேன்?

    நிறையப் படித்ததுண்டு! நேரெதிரான கருத்துக்களைத் தேடிப்படித்து, யோசித்ததுண்டு. ஸ்ரீ அன்னையைத் துணையாகக் கொள்ளும் நிலைக்கு வருவதற்கு, ரமண வழி உதவியிருக்கிறது. வல்லிமளைத் திருப்புகழ் சுவாமிகளுடைய சீடர், அருட்கவி சாதுராம் சுவாமிகள், இவன்மீது இரக்கம் கொண்டு அனுக்ரகித்த நிறைய விஷயங்களும் உண்டு.

    குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை! உண்மைதான்!

    எல்லொருக்கு௮ம் அது தாயை வணங்கும்போது, தாயாக வழிபடும்போது, தானாகவே வந்து சேர்ந்துவிடுகிறது!

    தாயில்லாமல் நானில்லை! தானே எவரும் பிறந்ததில்லை!

    ReplyDelete
  5. இன்றுதான் இடுகைகள் படிக்க முடிந்தது சார்...அனுபவத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்....

    ReplyDelete
  6. / கண்ணதாசன் வரிகளில் அனுபவமே நான் தான் என்று ஆண்டவன் நம்மிடம் வரும்போது, அருமையான அனுபவமென்றோ, அல்லாததென்றோ பிரித்துப் பார்ப்பதே பேதைமை என்பதைத் தான் பட்டுத் தெரிந்து கொண்டேன்! /

    நல்லது ஐயா!

    என்னை பொறுத்தவரை அது அருமையான அனுபவம்.

    எனக்கு அருமை, அல்லாதது என்ற பேதம் இருக்கிறது ஐயா. :)

    உங்களுடையது அருமையாக தெரிந்ததால் தானே ஆனந்தத்துடன் பின்னூட்டமிட்டேன்.

    கண்ணதாசன் வரிகள் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு இதுதான் கடவுள் என்பது தெரியாது. ஏதோ ஒன்று என் மீது அன்பாக இருக்கிறது. அவ்வளவுதான் தெரியும். எனக்கு அதுதான் புரிகிறது.

    உங்கள் அன்னையின் பக்கங்கள் அருமையாக இருக்கின்றன. எனக்கு அது போதும்.

    தொடர்ந்து அன்னையின் பக்கங்களை படிக்கிறேன்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!