Showing posts with label ஸ்ரீ அரவிந்தர் சொசைடி. Show all posts
Showing posts with label ஸ்ரீ அரவிந்தர் சொசைடி. Show all posts

முயற்சி செய்வது உன் வேலை! மலையை நகர்த்துவது என் வேலை!


ஒரு எளிய மனிதன். தேவைகளை அதிகம் வளர்த்துக் கொள்ளவில்லை, அதனால் எளிய, நிம்மதியான வாழ்க்கை. ஒரு கிராமத்தின் ஓரத்தில், சின்ன வீட்டில் வசித்து வந்தான்.

ஒரு நாள் இரவு-கனவு என்று தள்ளிவிட முடியாதபடி, அவனது வீடு முழுவதும் ஒளிவெள்ளம். இறைவன் அவனிடத்தில் நேரே பேசுவதற்காகவே வந்தமாதிரி இருந்தது.

"உனக்கு ஒரு வேலை, செய்கிறாயா?" கேட்கிறான் இறைவன்.

"நிச்சயம் செய்கிறேன், பிரபு!"

"உன் வீட்டின் எதிரே ஒரு கல்பாறை தெரிகிறதல்லவா? உன்னுடைய முழு வலிமையைக் கொண்டு, நீ அதை நகர்த்த வேண்டும். எவ்வளவு நாட்கள் ஆனாலும் சரி, பாறை நகர்கிற வரை அதுதான் உன் வேலை. புரிந்ததா?"

மறுநாள் பொழுது விடிந்தது முதல், அந்த மனிதனுக்கு அந்தப்பாறையை நகர்த்துவதே முழுநேர ஊழியமாயிற்று. நாட்கள், வாரங்கள், மாதங்கள் வருடங்கள் என்று கழிந்த பிறகும், பாறை கொஞ்சம் கூட நகர்ந்து கொடுக்கவில்லை.நாட்கள் இப்படியே ஓடிப்போனதில், அந்த மனதில் சிறு சலனம் உண்டாயிற்று.

'நாமும் இத்தனை காலமாக, அந்தப் பாறையை நகர்த்துவதற்காகப் படாத பாடு பட்டுக் கொண்டுதானிருக்கிறோம். அந்தப் பாறையோ, கொஞ்சம் கூட அசைந்து கொடுப்பதாக இல்லை. நம்முடைய உழைப்பு, நேரம் எல்லாம் இப்படியே விரயமாகிக் கொண்டிருக்கிறதோ?'

சலனத்திற்கு இடம் கொடுக்காதிருந்த வரை உள்ளே நுழைய முடியாத எதிர்மறையான எண்ணங்கள், அவனுள் புகுந்து குழப்ப ஆரம்பித்தாயிற்று.

"நீயும் எத்தனை நாள் தான் பாவம் இப்படியே கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பாய்? அந்தப் பாறை கொஞ்சம் கூட நகர்வதாயில்லை. அதை நகர்த்த முடியாது."
உள்ளே புகுந்த எதிர்மறையான சக்திகள், அவனுள் அவநம்பிக்கையை வளர்க்க சாமர்த்தியமாகக் காய் நகர்த்தின.

"முடியாத ஒன்றிற்காக, இவ்வளவு பாடு படுவானேன்? ஏதோ, ஒப்புக்கு நகர்த்த முயற்சிப்பது மாதிரி இருந்து விட்டுப் போக வேண்டியது தானே!" நல்லது சொல்கிற மாதிரி, அவனை அவநம்பிக்கைக்குள் தள்ள முயற்சி ஜோராகவே நடந்தது.

அலுப்பும் சலிப்பும் ஆதிகமாகவே, அந்த மனிதனும், கிட்டத்தட்ட அதே முடிவுக்குத்தான் வந்திருந்தான். ஆனால்,ஆசைகளின் அலைக்கழிப்புக்கு உள்ளாகாமலேயே வாழ்ந்து வந்த படியால், இறைவனிடம் பிரார்த்தனை செய்து என்ன செய்வது என்று கேட்டு விடுவது என்ற முடிவுக்கு வந்தான்.

"ஆண்டவனே! நீ எனக்களித்த பணியை இத்தனை நாட்களாக முழு முயற்சியுடன் தான் செய்து வருகிறேன். ஆனாலும், இந்தப் பாறை, கொஞ்சம் கூட அசைந்து கொடுப்பதாய் இல்லை. ஒரு இம்மியளவு கூட என்னால் நகர்த்த முடியவில்லை.

எங்கே தவறாகிப் போனது என்பது தெரியவில்லை. ஏன் இப்படித் தோற்றுப்போனேன் என்பதும் எனக்கு விளங்கவில்லை. என்ன செய்யக் கருதியிருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?"

இறைவன், கருணையோடு பதில் சொன்னான்:
"உனக்கு இந்த வேலையை செய்யும்படி சொன்னேன், முழு மனதோடு, முழு பலத்தோடு இந்த வேலையை செய் என்று தானே சொன்னேன்! நீயும், இத்தனை நாள் முழு நம்பிக்கையோடு இந்த வேலையைச் செய்தாய் அல்லவா! உன்னுடைய பலத்தால் இந்தப் பாறையை நகர்த்திவிட முடியும் என்று நான் சொல்லவில்லையே?

உனக்கிடப்பட்ட வேலை, பாறையை முழு முயற்சியோடு தள்ளுவது. நீயும் உன்னுடைய பலத்தை எல்லாம் இத்தனை நாள் செலவழித்து விட்டு, தோற்றுபோனதாக நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டு, என்னிடம் முறையிட வந்திருக்கிறாய். உண்மையில் நீ தோற்றுப் போனாயா, என்ன?

உனக்கிடப்பட்ட வேலையை முழுமனதோடு செய்து வந்திருக்கிறாய். எதிர்ப்புக்கள், உன்னுடைய சக்தி எல்லாவற்றையும் மீறி, எவ்வளவு வளர்ந்திருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை.

முழுநம்பிக்கையுடன், முழு மனதோடு செய்வது மட்டுமே உன்னுடைய வேலை. மலையை நகர்த்துவது என் வேலை."

இப்படித்தான், உள்ளுணர்வாக நம்முள் இறைவன் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுகிற தருணங்கள் வாழ்க்கையில் நிறையவே உண்டு. எதை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்வது மட்டுமே நம் வேலை. அவனது சித்தப்படியே ஆகட்டும் என்கிற உறுதியும், நம்பிக்கையும் மட்டுமே அவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது.

மலையை நகர்த்துவது அவன் வேலை.
நாம் அங்கே, சும்மா கருவிகள் மட்டுமே!



ஸ்ரீ அரவிந்த அன்னையின் அமுதமொழியை படித்தபோது, நினைவிற்கு வந்த கதை

“Faith is the movement of the soul whose knowledge is spontaneous and direct. Even if the whole world denies and brings forward a thousand proofs to the contrary, still it knows by an inner knowledge, a direct perception that can stand against everything, a perception by identity. The knowledge of the psychic is something which is concrete and tangible, a solid mass. You can also bring it into your mental, your vital and your physical; and then you have an integral faith - a faith which can really move mountains.”
- The Mother

"பொழுதும் விடியும், பூவும் மலரும்! பொறுத்திருப்பாய் கண்ணா!"


முக்குறுணிப் பிள்ளையாரப்பா! மதுரைக்கு நன்மையே தந்தருள்வாய்!

மதுரைக்கு அரசி நீயல்லவோ! காத்திட வேணும் எங்களையே!

ஒரு இளம் துறவி, அல்லது சாது.

அவருக்குத் தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் கொஞ்சம் குழப்பம், கடவுள் என்ன உத்தேசித்திருக்கிறாரோ, அதைத் தன்னால் சரிவரச் செய்ய முடியுமோ என்னவோ, இப்படியெல்லாம் தனக்கெழுந்த சந்தேகங்களை, இன்னொரு அனுபவம் நிறைந்த துறவியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இருவரும், பேசியபடியே, ஒரு தோட்டத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த ரோஜா செடிகளிடையே, முதிய துறவி நின்றார்.
"
அந்த ரோஜா மொட்டுக்கள் என்ன சொல்கின்றன, உனக்குப் புரிகிறதா?" என்றார்.

இளம் துறவிக்கோ, இன்னும் குழப்பம், தான் கேட்டது என்ன, இவர் என்னவென்றால், ரோஜா மொட்டுக்கள் என்ன சொல்கின்றன என்று சம்பந்தாசம்பந்தமில்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று தயக்கத்துடனேயே "புரியவில்லையே ஐயா!" என்று பதில் சொன்னார்.

முதிய துறவி ஒரு ரோஜா மொட்டைக் கிள்ளியெடுத்து இளம் துறவியின் கைகளில் கொடுத்தார். "எங்கே, இந்த ரோஜாவை மலர்த்துங்கள் பார்க்கலாம்! இதழ்கள் பிய்ந்து விடாமல் கவனமாக முயற்சி செய்யுங்கள்."

இளம் துறவிக்கோ மிகுந்த ஆச்சரியம், குழப்பம்.
'
நான் இவரிடத்தில், இறைவன் என்ன செய்யக் கருதியிருக்கிறான், நான் என்ன செய்ய வேண்டும், என்னால் அதை செய்ய முடியுமா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால், இவரோ ரோஜா மொட்டைக் கையில் கொடுத்து, சேதமில்லாமல், மலர்த்த முடியுமா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார், அனுபவமுள்ளவர், அறிந்தவர், என்ன சொன்னாலும், செய்து தான் பார்ப்போமே.' என்று நினைத்தபடியே, ரோஜா மொட்டை, மலர்த்த முனைந்தார்.

இதழ்கள் பிய்ந்து விடாமல், வெகு சிரமப்பட்டு ரோஜாவை மலர்த்த அவரும் ரொம்ப நேரம் பாடுபட்டார். ஆனாலும், அதை எப்படி செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த போது, முதிய துறவி பாட்டுப் பாட ஆரம்பித்தார்.

இறைவன் படைத்தான் அழகாக, சின்னஞ் சிறிய ரோஜா மொட்டு
இறைவன் படைத்தது என்னையும் தான் ஆயினும் எந்தன் கைகளினால்
இதழ்களை விரிக்கவும் மலர்த்தவும் முடியவில்லை ரகசியம் என்ன தெரியவில்லை
இறைவன் எளிதாய்ச் செய்கின்றான் மிகவும் அழகாய் மலர்த்துகிறான்.
இறைவன் படைத்தான் என்னையுமே, என் முயற்சியில்மலரும் உதிர்ந்ததுவே

சின்னஞ் சிறிய மலர் கூட மலர்த்துவதாகா தென் கையால் புரிந்தது அங்கே
என்விதி என்வழி என்பதெது? என்னறிவாலதை அறிவதேது?
சின்னஞ் சிறு மலர் சொல்லும் பாடமிது மலரச் செய்வது அவன் வேலை!
என்பதை உணர்ந்தால் அது வாழ்க்கை! ஒளியை நோக்கி உயர்வது மட்டும் என் வேலை!
அன்பாய் ஒளியாய் வழிநடத்த ஒருவன் உள்ளே இருக்கின்றான்!

ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு தினமும் அவனே என்னுள் எல்லாம் நடத்துகிறான்.
அவ்வகைப்பயணமும் எங்கே, எப்படி எதற்காக, நாதன் அவனே பார்த்துக் கொள்வான்
ரோஜா மலரச் செய்கிறவன், என்னை மலர்த்தவும் மறுப்பானோ?
ரோஜா மொட்டும் மலர்ந்து விடும், அதற்குரிய வேளையிலே
ரோஜா சொல்லும் பாடம் இது! மலர்வதற்காகக் காத்து இரு!”


ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியிடும் மின்னிதழ் Next Future ஏப்ரல் இதழில் வெளியாகியிருந்த இந்த குட்டிக் கதை என்னை மிகவும் கவர்ந்தது. நன்றி: ஸ்ரீ அரவிந்தர் சொசைடி

இந்தக் கதையைத் தமிழ்ப்படுத்தி முடித்தபோது, ரோஜா சொல்லும் பாடம் இது மலர்வதற்காகக் காத்து இரு என்று எழுதும் போதே, ஒரு திரைப்படப் பாடல் வரி நினைவுக்கு வந்தது:
"பொழுதும் விடியும், பூவும் மலரும்! பொறுத்திருப்பாய் கண்ணா!"

******

இங்கே மதுரையில் வருகிற ஏப்ரல் எட்டாம் தேதி மீனாக்ஷி அம்மன் கோவில் கும்பாபிஷேகம். உள்ளூர் கேபிள் டிவியில் காலையில் நடப்பதை மாலையில், மாலையில் நடப்பதை மறுநாள் காலையில் என்று ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒளிபரப்பானதில், மார்ச் 31 மாலையில், வைகையாற்றங்கரையில் இருந்து மண் எடுத்து வரும் ம்ருத் ஸந்க்ரஹநம் ஒளிபரப்பானதைப் பார்த்தேன். வீடியோ எடுப்பவர்கள் உரிமையாக, 'சாமி, கொஞ்சம் முன்னால வாங்க, நீங்க கொஞ்சம் அப்படி தள்ளி நில்லுங்க ......." என டைரக்ட் செய்ய, யாக தீட்சை பெற்றவர்களும், சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்தது, நடுநடுவே செல் போனில் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் தமாஷாகவே இருக்கிறது. இருந்தாலும், மதுரையை இன்னும் மீனாக்ஷி தான் அரசாட்சி செய்து கொண்டிருக்கிறாள் என்ற நம்பிக்கையோடு, சேவிக்க வந்தவர்களையும் பார்த்த போது மனதிற்கு இதமாக இருந்தது.

சித்திரைத் திருவிழாவில் ஒருதரம், அப்புறம் ஆவணி மாதம் ஒருதரமென்று, அம்மையும் அப்பனுமாக, செங்கோல் ஏந்தி மதுரையை ஆளுவதாக நாங்களெல்லாம் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.ஆனால், மதுரையை உண்மையிலேயே ஆள்வது யார் என்கிற கேள்வி அவ்வப்போது வந்து போகிறது. இந்த குடமுழுக்கு,பெருஞ் சாந்து சாத்துதல் [அதாங்க, அஷ்டபந்தனம்] நடந்த பிறகாவது, மீனாக்ஷி மதுரையை மறுபடி அரசாட்சி செய்யத் தொடங்கினால் சரி. அன்னை, திருவுள்ளம் உகந்தருள வேணும்!

எட்டு வயதிலேயே அன்னை மீனாக்ஷி பெயரில் கவி பாடத் தொடங்கிய கவியோகி சுத்தானந்த பாரதியாரது பாடல்கள் -மீனாக்ஷி மீதானவை, தினமும் ஒன்றாக எங்களுக்குப் படிக்கக் கொடுங்கள் என்று திரு. சந்திர சேகர் அவர்களிடம் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறேன், அவரும் மனம் வைக்க வேண்டும்.

ஆசை உடையோர்க்கெல்லாம், ஆரியர்காள் கூறுமென்று...!

மேலே படத்தில்,யூகலிப்டஸ் பூ, அகந்தையை ஒழித்தல்

ஒரு ஊரில் ஒரு பெரும் தனக்காரன்.

பிரமுகர்கள் யார் வந்தாலும், அவனது பண்ணை வீட்டில் தான் தங்குவார்கள். சாமியாரானாலும், பெரிய அதிகாரிகளானாலும் சரி, இப்படிப் பிரமுகர்களை வரவேற்பதிலும், அவர்களை தன்னுடைய பண்ணை வீட்டில் தங்க வைத்து உபசரிப்பதிலும், அந்தப் பெரும் தனக்காரனுக்கு ஆர்வம் அதிகம். இப்படித்தான் ஒரு யோகியும் பெரும் தனக்காரனுடைய பண்ணைவீட்டில் ஒரு சமயம் தங்கி, ஆன்மீக நாட்டம் கொண்ட சிலபேர்களுடைய சந்தேகங்களுக்குப் பொறுமையாக விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

" நீங்கள் எல்லோரும் உங்களுக்கென்று சில அடையாளங்களை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இந்த அடையாளங்கள்எல்லாம் உங்கள் மீது திணிக்கப் பட்டிருப்பது புரியும். முதலில், உங்கள்பெயர்-அதை நீங்களா தேர்ந்தெடுத்தீர்கள்? இல்லையே, உங்கள்பெற்றோர்களோ.அல்லது நெருங்கிய உறவினர்களோ தானே உங்களுடையபெயரை வைக்க, நீங்களும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? அதே மாதிரி, உங்களுடைய பெற்றோர்கள், அதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லையே! இப்படியே உங்களுக்கு இருக்கிற அடையாளங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே போனால், உங்களுடைய தேசம், மொழி, மத நம்பிக்கை, எதையுமேநீங்களாகச்சிந்தித்து, சுதந்திரமாகவோ, விழிப்புணர்வுடனோதேர்ந்தெடுக்கவில்லையே!"

"இப்படியே சிந்திக்க ஆரம்பித்தீர்களேயானால், அப்பொழுது நான் யார் என்கிற கேள்வி தானாகவே வரும். கேள்விக்கு ஒவ்வொரு பதிலாகக் கிடைக்க ஆரம்பிக்கும். நான் என்பது என் உடலா, என்னுடைய ஆசைகளா, எண்ணங்களா, பழக்கங்களா இப்படி வரிசையாக இதுவாக இருக்குமோ, இதுவாக இருக்குமோ என்று போய்க்கொண்டே இருக்கும். சலித்துப் போய் நின்று விடாமல், இன்னும் ஆழமாக இந்தக் கேள்விக்குள்ளேயே போய்க் கொண்டிருந்தீர்களென்றால், நிச்சயம் உண்மையான விடை கிடைக்கும். குறைந்தபட்சம், இந்த மாதிரிக் கேள்விக்கெல்லாம் விடை வெளியில் இருந்து இல்லை, உங்களுக்கு உள்ளேயே தான் இருக்கிறது என்பது புரியவாவது ஆரம்பிக்கும்."

கேட்டுக் கொண்டிருந்த சிலபேர், மிகக் கவனத்துடன் யோகி சொன்னதைக் கேட்டுக் கொண்டார்கள். தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை, சந்தித்த சில அனுபவங்களைப் பற்றியெல்லாம் அவரிடம் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

பெரும் தனக்காரனுடைய மனைவி, கதவருகே நின்று யோகியார் அளித்த விளக்கங்களை கேட்டுக் கொண்டிருந்தாள். வந்தவர்கள் எல்லாம் போன பிறகு, யோகியிடம் வந்தாள்." ஐயா, நாளைக்கு என் சினேகிதிகள் சில பேரை அழைத்திருக்கிறேன். எல்லோரும் பெரிய, வசதி படைத்த வீட்டுப் பெண்கள். அவர்களுக்கும் இந்த தத்துவ முத்துக்களை அளிக்க வேண்டும்." என்றாள்.

"அவர்களுக்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம், ஆர்வம் இருக்கிறதா என்ன என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார் யோகி.

"அவசியம் என்றெல்லாம் கிடையாது. சும்மா, செக்கு மாடு மாதிரி ஒரே மாதிரி வாழ்க்கை வாழ்வதிலிருந்து, ஒரு இடைவேளை, ஒரு மாற்றம் அவ்வளவு தான். ஒருத்தி ஒரு நீதிபதியின் மனைவி, ஒருத்தி இந்த ஊர்த் தலைவரின் மனைவி..இவர்கள் எல்லோருக்குமே சமூகத்தில் பெரிய அந்தஸ்து, மரியாதை இருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் அது இது என்று எதையாவது இழுத்துப் போட்டுக் கொண்டு அலைவதால், இப்படிப்பட்ட விஷயங்களுக்கெல்லாம் நேரமே கிடைப்பதில்லை, அது தான்."

மறுநாளைக்கு, அந்த சினேகிதிகள் எல்லோரும் வந்து விட்டார்கள். அவர்களுக்காக, வேறு யாரையும் யோகியைச் சந்திக்க விடவில்லை. வந்தவர்களும், யோகியை வணங்கி விட்டு, வரிசையாக அமர்ந்து கொண்டார்கள், கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.

"சாமி, கடவுள் ஏன் இந்த உலகத்தை படைத்தார்?" இது நீதிபதியின் மனைவி.

"சாமி, மரணத்துக்குப் பின்னாலும், ஆத்மா வாழ்கிறது என்கிறார்களே, உண்மையா?" இது ஊர்த்தலைவரின் மனைவியின் கேள்வி.

"மிக அருமையான கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள்." என்றார் யோகி. கேட்ட பெண்களின் முகத்தில் பூரிப்பு, அத்தனை சந்தோஷம்.

"இன்றைக்குக் கொஞ்சம் வெய்யில் அதிகமாக இருக்கிறது இல்லையா?"

என்று யோகி பொதுவாக வந்தவர்களிடம் ஒரே கேள்வியைத் தான் கேட்டார். அவ்வளவுதான், ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு, வெய்யில் நிலவரம், காடுகள் அழிந்து வருவது, ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருப்பது என்று ஆரம்பித்து, கொசு, எலித் தொல்லை, வீட்டில் பிள்ளைகள் அட்டகாசம் இப்படி நிறைய தகவல்களை ஆர்வத்தோடு சொன்னார்கள். சாப்பாட்டு நேரமும் வந்தது. வந்தவர்கள் எல்லாம், விருந்து சாப்பிட்டு விட்டு, கிளம்பும் நேரமும் வந்தது. ஒருத்திக்கு மட்டும், கேட்ட கேள்விக்கு, யோகி நேரடியான பதில் சொல்லவில்லையே என்கிற நினைப்பு வர, "நாங்க சில கேள்விகள் கேட்டோமே...." என்று ஆரம்பித்தாள்.

"பதில் தானே! கேள்வியைத் தொடர்ந்து உங்களுக்குள்ளேயே இடைவிடாது கேட்டுக் கொண்டிருங்கள். விடை நிச்சயமாகக் கிடைக்கும்." என்று சொன்னார் யோகி.

"எப்போது கிடைக்கும்?" என்றாள் ஒருத்தி.

"இன்றைக்கே கூடக் கிடைக்கலாம். அல்லது நாளைக்கு. கேள்வியை நீங்கள் விடாமல் கேட்டுக் கொண்டிருப்பது முக்கியம்." யோகியின் இந்த பதிலைக் கேட்டு, எல்லோரும் அவரவர் வீட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார்கள்.

பெரும் தனக்காரனுடைய மனைவி, அவர்கள் போன பிறகு, யோகியிடம் மெதுவாக,"ஐயா, தவறாக நினைக்கவில்லை என்றால், எனக்கு ஒரு சந்தேகம் கேட்கட்டுமா? எனக்கென்னமோ, நீங்கள் அவர்களுக்கு பதில் சொல்ல இஷ்டப்படாதது மாதிரி இருந்தது."

யோகி அமைதியாகச் சிரித்து விட்டு, அமைதியாக இருந்து விட்டார். அவளும், அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

மாலைப் பொழுதாயிற்று. யோகியைப் பார்க்க வருபவர்களை வரவேற்க, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய, பெரும் தனக்காரனின் மனைவி, பண்ணைவீட்டில் நின்று கொண்டிருந்தாள். ஊரிலேயே, மிகப் பெரிய பொய்யன், சூதாடி என்று பெயரெடுத்திருந்த ஒருவன் அவளிடம் வந்தான். கையெடுத்துக் கும்பிட்டான்.

"அம்மா, உன் கையில் அணிந்திருக்கிற சிவப்புக் கல் மோதிரத்தை, இன்றைக்கு ஒரு ராத்திரிக்கு மட்டும் இரவல் கொடு. நாளைப் பொழுது விடிந்தவுடன், பத்திரமாக உன்னிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்." மிகவும் பணிவாக வேண்டினான்.

அவளுக்குக் கோபம் வந்தது, "என்ன தைரியம்? இங்கேயிருந்து ஓடிப்போய் விடு..உனக்காவது.... மோதிரம் இரவல் கொடுப்பதாவது..." அவள் போட்ட சத்தத்தில், கேட்டவன் பயந்து ஓடிப்போய் விட்டான்.

அவன் ஓடிப்போன பிறகு, யோகி அவளிடத்தில் வந்தார்."அம்மா, உன் கழுத்தில் அணிந்திருக்கிறாயே, அந்த காசுமாலையை, இன்று ஒரு இரவு மட்டும் எனக்கு இரவல் கொடு " என்று கேட்டார்.

அவளும் கொஞ்சம் கூடத் தயங்காமல், கழுத்தில் அணிந்திருந்த காசுமாலையைக் கழற்றி, யோகியிடம் நீட்டினாள். "இது மட்டும் போதுமா, இல்லை இன்னும் நகைகள் வேண்டுமா?"

யோகி சிரித்துக் கொண்டே சொன்னார்: "நல்லது அம்மா! கேட்டதும் கழற்றிக் கொடுத்து விட்டாயே! எனக்கு நகைகள் வேண்டாம். ஆமாம், அப்போது வந்தவன், ஒரு சிறு மோதிரம் தானே கேட்டான், ஏனம்மா, கொடுக்க மறுத்தாய்?"

"அவனுக்கா? அந்த பித்தலாட்டகாரனுக்குக் கொடுப்பதும், பாழும் கிணற்றில் வீசி எறிவதுமொன்று தான்! அவன் பெரும் பொய்யன்!"

"இப்போது புரிகிறதா அம்மா, உன் சிநேகிதிகளுக்கு ஏன் நேரடியான பதில் சொல்லாமல் தவிர்த்தேனென்று? அவர்களுக்குச் சொல்லியிருந்தால், அது அவர்கள் காதுகளில் ஏறாது அம்மா. நீ சொன்னாயே, அது போல அக்கறை இல்லாதவர்களுக்குச் சொல்வது கூட, மதிப்புள்ள பொருளைப் பாழும் கிணற்றுக்குள் வீசி எறிவது போலத்தான். புரிகிறதா, அம்மா? உன்னிடத்தில் மோதிரம் கேட்டு வந்தானே, அவனை அப்படி கேட்கும்படி தூண்டியவன் நான் தான். உனக்குப் புரிய வைப்பதற்காகவே, இதைச் செய்தேன்."

யோகியின் வார்த்தைகள், அவள் மனதில் ஏதோ வெளிச்சக் கீற்றுக்களைக் காண்பிப்பது போல இருந்தது.

அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

ஒரு விவாதத்தில் இன்று எனக்கேற்பட்ட ஒரு அனுபவத்தைத் தொடர்ந்து எழுந்த சிந்தனையில், இந்தக் கதை பொருந்திப் போகவே, மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறேன். கதையின் முடிவில் ஆங்கிலத்தில் கதையின் கருத்தாகச் சொன்னது அப்படியே வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கு, இதில் உடன்பாடு இல்லை.

விவாதக்களத்தை நிர்வகிப்பவர் வருத்தப்பட்டு, கைபேசியில் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, குறியீட்டுச் சொல்லும் [tag], இன்னும் ஒரு சொல்லும் 28/03/2009 இரவு 8.14 க்கு நீக்கப்பட்டது.

(One must have the adhikara, or right, not only to speak on spiritual matters, but also to seek answers to profound questions. In the second case, the right is earned by a sustained thirst for knowledge. Short of that, no knowledge, even when received, has any effect).

உடன்பாடு ஏன் இல்லை என்றால்,

"ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் *
ஏரார் எதிராசர் இன்னருளால் * - பாருலகில்
ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் ! கூறும் என்று*
பேசி வரம்பு அறுத்தார் பின்."

உபதேச ரத்தின மாலையில், ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளியது.


காரேய் பெரும் கருணைஇராமானுசன், ஒளித்து வைப்பதற்கு ஏதுமில்லை.வேண்டும் என்று ஆசை கொண்டவர்க்கெல்லாம் மறைக்காமல், நுண் பொருளைச் சொல்லுங்கள் என்று வாரி வாரி, வந்தவர்க்கெல்லாம் ஆன்மீக ரகசியங்களைத் தந்தார்

எனும் மணவாள மாமுனிகள் வாக்கில் தெரிகிற சத்தியத்தினாலே!

மறைத்து வைக்கப் பட்டிருந்த ஆன்மீகப் பொக்கிஷங்களை, மிலேச்சரும் கூடத் தெரிந்து கொள்வது போல வெளிப்படையாகச் சொன்னார், ஞான சிம்மம் சுவாமி விவேகானந்தர்,அவருடைய வாக்கைப் படித்ததனாலே!

நன்றி.

Next Future, an e-zine published by Sri Aurobindo Society, Pondicherry India, March 2009 issue
http://nextfuture.sriaurobindosociety.org.in/mar09/nf_home.htm

ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியீடு மார்ச் 2009 இதழில் திரு மனோஜ் தாஸ் எழுதிய சிறுகதையின் தமிழாக்கம், சின்ன சின்ன மாறுதல்களோடு.

கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்!


இந்தச் சின்னப் பையன் என்ன என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டே போகிறானே, இத்தனை வயதாகியும் எனக்கு இதெல்லாம் ஒன்று கூடப் புரியவில்லையே என்று எண்ணிக் கொண்டே ஹரி மோகனுக்குக் கண்ணன் இன்னும் என்ன சொல்லப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது. கண்ணனையே ஆர்வம் ததும்பியவனாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"இதைப் புரிந்துகொள் ஹரி மோகன். எந்த ஒரு செயலையும் மேலோட்டமாகவே பார்த்தால் அதன் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது. நல்ல செயல்கள், நல்ல பழக்கங்கள் என்று செய்து வந்திருக்கிறாய், அதனால் புண்ணியம் கிட்டும் என்கிற நம்பிக்கை-ஆனால், அதை ஒரு வரட்டுத்தன்மையோடு கூடிய பழக்கமாகவே செய்து வந்ததால், உண்மையை விலக்கி விட்டு வெறும் சடங்கு என்ற அளவோடு நிறுத்திக் கொள்வதால் வரும் பின் விளைவு இது. உயிரில்லாத சடங்கு என்ன தரும்? உனக்கு மகிழ்ச்சி இல்லை. உன்னுடைய செயல்களினால் விளையும் உணர்ச்சிகளின் சக்தியைத் தடுக்க உன்னால் முடியவில்லை. உன்னுடைய இந்த சிறிய அகங்காரத்தைக் கூட உன்னால் வெற்றி கொள்ள முடியவில்லை."

"அதே மாதிரி இந்த செல்வரங்கமும் கூட எந்த தீய செய்கைகளால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று செய்தானோ, அவைகளாலும் சந்தோஷமடையவில்லை. மாறாக, பழக்கங்களின் அடிமையாகவே இருப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல், இந்த வாழ்க்கையிலேயே நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்"

"இது தான் நல்வினை, தீவினை என்கிற இருவிதமான தளைகள். அறியாமையோடு கூடிய எண்ணப் பதிவுகளே இப்படிப் பந்த பாசம் ஆகிய விலங்குகளாக ஒருவனைக் கட்டிப் போட்டு வைக்கிறது. வேதனைப் பட வைக்கிறது. ஆனால் இதுவும் வேண்டியதே. செல்வரங்கத்தைப் பார்.

இந்த பயங்கரமான வேதனை தான், எது உண்மையான உறவு, எது நிலையானது, உண்மையானது என்பதைத் தேடச் சொல்லிக் கொடுக்கும். இதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதையும் ஒரு நேரம் வரும் போது சொல்லிக் கொடுக்கும்."

ஹரிமோகன் ஒரு பெருமூச்சுடன் சொன்னான்: "கண்ணா, நீ அழகாகத்தான் பேசுகிறாய். கேட்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும், உன்னை நிஜமாக நம்ப முடியவில்லை. சுகமும் துக்கமும், மனதின் ஒருவிதமான நிலைதான் என்கிறாய். இருக்கலாம், ஆனால் வெளிச் சூழ்நிலைகள் தானே அதற்குக் காரணமாய் இருக்கிறது? பட்டினியோடு இருப்பவன் மனது எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? நோயாலும், வலியாலும் துடித்துக் கொண்டிருக்கும் ஒருவனால் எப்படி, அதை மறந்து, உன்னைத்தான் நினைக்க முடியுமா? "

"முடியும் ஹரிமோகன், முடியும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை உனக்குக் காட்டுவதற்காகத்தானே இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இங்கே பார்" என்றான் கண்ணன். ஹரிமோகனுடைய கண் முன்னால் காட்சி மாறியது. செல்வரங்கத்தின் வீட்டில் அவன் இப்போது இல்லை. ஒரு அடர்ந்த கானகத்தில் ஒரு யோகி ஆழ்ந்த நிஷ்டையில் இருப்பதைப் பார்த்தான். அவருடைய காலடியில், ஒரு பெரிய புலி அமைதியாகக் காவலுக்கிருப்பதைப் போல, காத்திருப்பதையும் பார்த்தவுடன், ஹரிமோகனுடைய உடல் நடுங்க ஆரம்பித்தது. புலியைப் பார்த்தவுடன், யோகியைப் பற்றியோ, பின்னணியில் தெரிந்த அழக்கான மலைச் சிகரம், சுகமான தென்றல் வீசும் இனிய சூழல் எதுவும் ஹரிமோகனுக்குப் புலப்படவில்லை. திரும்பி ஓடி விடலாம் என்று திமிறியவனை, கண்ணன் சிரித்துக் கொண்டே யோகியின் அருகாமையில் இழுத்துச் சென்றான்.

சின்னக் கண்ணனுக்கு இத்தனை பலமா?

சிறுவனின் பலத்தை வியந்து கொண்டே, அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்த ஹரிமோகனுக்கு சிலீரென்று ஒரு புதிய அனுபவம்..அந்த யோகியின் மனம் ஒரு புத்தகம் போலத் தன் முன் விரிவதைக் கண்டான். எங்கு பார்த்தாலும் கிருஷ்ணா, கோவிந்தா, ஹே மாதவா என்று நாம ஜபமாகவே இருக்கக் கண்டான். ஒரு பரபரப்புமில்லாமல், அன்புமயமான சூழலில் கண்ணனையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனுபவம், தனக்குள்ளும் ஊடுருவுவதைக் கண்டான். இத்தனைக்கும், அந்த யோகி பல நாட்களாகப் பட்டினி கிடப்பதாகத் தெரிந்தது. உடல் வெளுத்துச் சோர்வாகத் தென்பட்டாலும், யோகியின் மனதில் எந்த அலுப்பும் குறையும் இல்லாமல் இருப்பதையும் கண்டான்.

"கிருஷ்ணா, இது என்ன, இவர் சாப்பிட்டு பலநாட்கள் ஆகியிருக்கும் போலிருக்கிறதே. இவருக்கு யார் உணவளிப்பார்கள்? இவரோ அதைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப் படுவதாகவும் தெரியவில்லையே?"

"ஏன், நானில்லையா? பொறுப்பை என்னிடம் விட்டு விட்டான், அதுதான் கவலையில்லாமல் இருக்கிறான்."

"நன்றாயிருக்கிறது நீ பொறுப்புடன் கவனித்துக் கொள்ளும் விதம். புலிகள், மிருகங்கள் நடமாடும் காட்டில் குடிக்கத் தண்ணீரோ, பசிக்கு உணவோ இல்லாமல் இங்கே ஒருவன் தவித்துக் கொண்டிருக்கிறான். நீயோ சர்வ சாதாரணமாக அந்தப் பொறுப்பு என்னுடையது என்று சொல்கிறாய்..ஆனாலும் ஒன்றுமே செய்யாமலிருக்கிறாய். கிருஷ்ணா, நீ மிகவும் கொடியவன்."

ஹரிமோகன் உணர்ச்சி மேலிடப் பேசுவதைக் குறுஞ்சிரிப்புடன் கேட்ட கிருஷ்ணன், "ஹரிமோகன், இப்போது ஒரு வேடிக்கையைப் பார்க்கிறாயா?" என்றான். அவன் பதில் சொல்வதற்கு முன்னமே, யோகியின் காலடியில் சாதுவாக அமர்ந்திருந்த புலி திடீரென்று எழுந்து தன்னுடைய வாலைச் சுழற்றியதில், பக்கத்தில் இருந்த எறும்புப் புற்று உடைந்து, ஆயிரக்கணக்கில் எறும்புகள், யோகியின் உடல் மீது பரவின. புற்று உடைக்கப் பட்டதில் கிளர்ச்சியடைந்து, அவை யோகியைப் பல இடங்களிலும் கடிக்க ஆரம்பித்தன.

திடீரென்று ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஹரிமோகன் அதிர்ச்சியடைந்தான். ஆனால் அந்த யோகியோ, எறும்புகள் கடிப்பதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், நிஷ்டையில் இருந்தார். "ப்ரியமானவனே, நண்பா" என்று அவர் காதில் விழும் படி அந்த சிறுவன், மென்மையாக அழைத்தான். அந்தக் குரல், பிருந்தாவனத்தில் கோபிகைகளிடம், ராதையிடம் அன்பொழுகப் பேசுவது போலவே யோகியின் மனம் முழுதும் எதிரொலிப்பதை ஹரிமோகன் ஆச்சரியத்துடன் பார்க்க ஆரம்பித்தான். நிஷ்டை களைந்து, யோகி தன்னுணர்வு பெற்ற போதும் கூட, எறும்புகள் கடிப்பதைப் பற்றியோ, சுரீர் சுரீரென்று வலி உடலில் பரவுவதைப் பற்றியோ கவலைப்படாமல் இப்படி நினைப்பதை ஹரிமோகன் கண்டான்.

"இது என்ன புதிய அனுபவமாக இருக்கிறதே! என்னுடைய கிருஷ்ணன் ப்ரியமானவனே என்றழைப்பதைக் கேட்டேன்.எறும்பு கடித்தால் இப்படிக் கூட ஆனந்தமயமான அனுபவம் கிடைக்குமா என்ன!" யோகியின் நினைவு பரவசமாகி, உடல் ஆனந்த மிகுதியால் துள்ள, உடல் மேல் ஊர்ந்துகொண்டிருந்த எறும்புகள் தூரப் போய் விழுந்தன.

சில வினாடிகளில், அங்கே ஒரு எறும்பு கூட இல்லை. யோகியோ, ஏற்கெனெவே பட்ட ஒவ்வொரு கடியும், ஆனந்த பரவசத்தை ஏற்படுத்தக் கை கொட்டி ஆடுவதையும் சிரிப்பதையும் ஹரிமோகன் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"கிருஷ்ணா! என்ன மந்திரம் போட்டாய்? இது என்ன மாயம்?"

ச்யாமசுந்தரனான ஸ்ரீ கிருஷ்ணன் கை கொட்டி சிரித்துக் கொண்டேசொன்னான், "ஆமாம், இது மாயம் தான். என்னைவிடப் பெரிய மாயக் காரனோ, மந்திரவாதியோ எவருமில்லை.நானே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரே மந்திரவாதி. இது சொன்னால் உனக்குப் புரியாது. இது பரம ரகசியம். பார்த்தாயல்லவா, இந்த யோகியை எறும்புகள் கடித்த வேதனையை உடல் முழுவதும் அனுபவித்த நிலையில் கூட, எவ்வளவு சந்தோஷமாக இருந்தார்! ஏதேதோ சொன்னாயே, பசி, தாகம், களைப்பு என்று, அதையெல்லாம் அவர் கொஞ்சம் கூட சட்டை பண்ணவில்லை என்பதையும் நன்றாகப் பார்த்தாயா? இன்னமும் கவனித்துப் பார், என்ன நடக்கிறதென்று."

யோகி மறுபடியும் நிஷ்டையில் அமர்ந்து விட்டார். அவரது உடல், பசி தாகத்தினால் வாடியிருந்தாலும், அவரை அது ஒரு விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை ஹரிமோகன் கண்டான்.

"நண்பா, பிரியமானவனே, இதோ நான் வந்து விட்டேன்." இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஹரிமோகன் தனது பக்கத்தில் அந்த மாயக்காரச் சிறுவன் இருக்கிறானா என்று பார்த்துக் கொண்டான்.சிறுவன் அவனருகிலேயே இருப்பதைக் கண்டான். அவனைப்போலவே, அதே மோகனக் கண்ணன் எதிரே கையில் பெரிய தட்டு, குவளையுடன் வருவதைப் பார்த்தான். யோகியும் கண் விழித்துப் பார்த்து, முகமலர்ச்சியுடன் அவனை வரவேற்பதைக் கண்டான்.

"உன்னை ரொம்ப நேரம் பட்டினி போட்டு விட்டேனா? உனக்கு என மேல் கோபம் ஒன்றும் இல்லையே?'

"உன் மேல் கோபமா? எதற்கு? நீ வரும் போது, உன்னுடைய தரிசனமே எனக்கு உணவு. மற்ற நேரங்களில், உன்னை நினைத்துக் கொண்டிருப்பதே தாகம் தீர்க்கும் சாதனம். பசி தாகம் தீர்க்க நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை?"

"உனக்காக சில விசேஷமான பலகாரங்களைக் கொண்டு வர எண்ணினேன். அதனால் தான் நேரமாகி விட்டது. இங்கே வந்து பார், என்னென்ன கொண்டு வந்திருக்கிறேனென்று?"

"கண்ணா, வா, இருவரும் சேர்ந்தே உண்போம்."

மாயக் கண்ணனும், யோகியும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டனர். பரிகாசமாய்ப் பல கதைகள் பேசினர். ஹரிமோகன் இந்தக் கட்சியை மிகுந்த ஆச்சச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். உணவு உண்டு முடித்தவுடன், அந்த சிறுவன், மறைந்து விட்டான். தன் பக்கத்திலிருந்தவனிடம் ஏதோ கேட்க வாயெடுத்த ஹரிமோகன், பக்கத்தில் சிறுவன் இல்லாததையும், கானகம், மலை, யோகி, புலி எல்லாம் மறைந்து தான் மட்டும் வேறோர் இடத்தில், வேறோர் காலத்தில் இருப்பதையும் கண்டான்.

ஹரிமோகனுக்கு வியப்பு அடங்கக் கொஞ்ச நேரம் ஆயிற்று.

ஏனென்றால், அவன் தன்னுடைய வாழ்க்கையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன், அவனது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் நண்பர்களோடு இருந்ததைக் கண்டான். ஒரு இயந்திர கதியில், அவன் சாத்திரங்களில் சொன்னபடி, பூஜை புனஸ்காரங்களைச் செய்து கொண்டிருந்தான். தான தர்மங்கள், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியது, உறவினர்களுக்கு, நண்பர்களுக்குச் செய்ய வேண்டியது இப்படி எதிலும் குறைவில்லை. ஆனால், அதில் உண்மையான அன்பு இல்லாதிருப்பதையும், செய்யப் பட்டவை எல்லாமே ஒரு சடங்கு, சம்ப்ரதாயத்திற்காகத்தான் என்பதைப் பார்த்தபோது தன்னைப் பார்த்தே அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மிகவும் உயர்வான ஆன்மிகம் என்று நினைத்திருந்தது, வெறும் இயந்திரத்தனமான சடங்குகளாகக் குறுகிப் போனதையும், உண்மையிலிருந்து விலகி வெகு தூரத்தில் இருந்ததையும் பார்த்த போது ஹரிமோகனுக்கு துக்கம் மேலிட்டது. அந்த இடத்தை விட்டு விலகி இருந்தால் தேவலை என்று தோன்றியது. உடல் மட்டும் கீழே விழ, அவன் வேறு இடங்களில் அலைவதைப் பார்த்தான்.

மிகவும் தாகமெடுப்பது போலத் தோன்றியது. தண்ணீரைத்தேடி வெகுதூரம் அலைந்த பிறகும் தண்ணீர் கிடைத்தபாடில்லை. தண்ணீரை குடிப்பது போல, தாகமெடுக்கும் போதெல்லாம் புழுதியையே உண்டுவந்ததைப் பார்த்தான். தாகம் தீர்வதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டே போனதையும் பார்த்தான். எங்கு பார்த்தாலும், ஒரே புழுதி, புழுதிமயம். அட, ஆண்டவனே குடிக்கத் தண்ணீர் கூடத் தர மாட்டாயா?

அலுப்போடு, அவன் நகரத்தின் வேறொருஇடத்தில் இருப்பதைப் பார்த்தான். ஒரே வாழ்த்துமயமாக அந்த இடம் காட்சி அளித்தது. அட, அங்கே கம்பீரமாக அமர்ந்திருப்பது யார்? செல்வரங்கம், செல்வரங்கமே தான். அவனைச் சுற்றி ஒரு கூட்டமே காத்திருந்தது. ஒவ்வொருவருக்கும், கை நிறையப் பணம் அளிப்பதையும், அவர்கள் அவனை மனதார வாழ்த்திச் செல்வதையும் பார்த்த ஹரிமோகனுக்கு ஒரே வியப்பு! செல்வரங்கம் எப்போதிலிருந்து கொடை வள்ளல் ஆனான்? ஹரிமோகன் வாய் விட்டு, உரக்கச் சிரித்தான். அடக் கடவுளே!

பார்த்துக் கொண்டே இருக்கும் போதே, செல்வரங்கம் மனதில் இருந்த அத்தனையும் ஹரிமோகனுக்குத் தெரிந்தன. புகழுக்காக, நான்கு பேர் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காக, காசினாலே நிறையக் காரியம் கை கூடும் என்பதற்காகவே செல்வரங்கம் பணத்தை அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதும், அவன் மனதில் பேராசையும், வஞ்சகமும் மண்டிக் கிடப்பதையும் ஹரிமோகன் பார்த்தான். ஒவ்வொன்றும் அவனுள்ளே பேயாட்டம் ஆடி, இன்னும் கொடு, எங்களுக்கு திருப்தி இல்லை, எங்களைத் திருப்தி செய் என்று தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதையும் பார்த்தான். பார்த்துக் கொண்டே இருக்கும் போது காட்சி மாறுவதை ஹரி மோகன் உணர்ந்தான்.

வெவ்வேறு நம்பிக்கைகள், அதன் பின்னே செல்லும் மனிதக் கூட்டங்கள், அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தமாதிரி உருவாக்கி வைத்திருந்த நீதி நெறிகள், தண்டனை முறைகள், ஸ்வர்க்கம், நரகம் இப்படிப் பலவிதமாய்ச் சொல்லப் படுவதையும் ஹரி மோகன் பார்த்தான். யார் யாரோ, அவனை இந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றதையும், ஆனால் இந்த இடங்களைப் பற்றி முடிவாக எதுவும் சொல்லாமல் விட்டதையும் பார்த்துக் கொண்டே வந்த ஹரிமோகன் பழையபடி தன்னுடைய ஒட்டு வீட்டில், அதே அழுக்குப்பாய், தலையணையில் அமர்ந்திருப்பதை உணர்ந்தான். அப்போது, இதுவெல்லாம் உண்மையில்லையா, வெறும் கனவு தானா- இந்த சந்தேகம் பெரிய கேள்வியாக எழ, "சியாமசுந்தரா, நான் பார்த்ததெல்லாம் நிஜமா?" என்றான்.

ஷ்யாமசுந்தரன் கருணையோடு அவனைப் பார்த்துவிட்டுச் சொன்னான்,"இப்பொழுதே இரவு அதிக நேரம் ஆகிவிட்டது. இதற்கு மேலும் இங்கே என்னை நிறுத்திக் கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்தாயானால், அங்கே என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கோள் மூட்டி, என் அன்னையிடம் தண்டனை வாங்கிக் கொடுக்க ஒரு பெரிய பட்டாளமே காத்துக் கொண்டிருக்கிறது. அனுபவங்களில் தெளிவு தானாகத் தான் வர வேண்டும். இருந்தாலும், சில உண்மைகளைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். கேட்டுக் கொள்.

நீ பார்த்த ஸ்வர்க்கம், நரகம் எல்லாம் கனவுலகைச் சேர்ந்தவை. ஒரு அனுபவத்திற்கும் அடுத்ததற்கும்இடையில் ஒரு சின்ன இடைவேளை, குட்டித்தூக்கம் அல்லது கனவு மாதிரி.அதைத்தான் ஒரு மனிதன் இறந்தவுடன் ஸ்வர்கத்திற்கோ, அல்லது நரகத்திற்கோ சென்று தன்னுடைய கடந்த ஜன்மத்தின் பலன்களை அனுபவிக்கிறான் என்று சொல்கிறார்கள். உனையே எடுத்துக் கொள், உன்னுடைய முற்பிறவியில் சில அறநெறி உயர்வுகளைப் பெற்றிருந்தாய். ஆனால், உன்னுடைய இதயத்தில் அன்புக்கு இடமில்லாமல் போயிற்று. நீ கடவுளையோ, மனிதனையோ, நேசிக்கவில்லை. அதனால் தான், அந்தப் பிறவி முடிந்ததும், ஒரு இடைவேளை-அதில் உன் மனத்தின் உந்துதல்கள், அதன் விளைவுகளுக்கேற்றவாறு வசித்து வந்தாய். அதுவும் உனக்குப் பிடிக்கவில்லை-எனென்றால் உனது பிராணமய உணர்வு பொறுமையற்றுப் போயிற்று.அடிநாதமான அன்பு எனும் நீருக்காகத் தவித்தாய். புழுதிபடர்ந்த ஒரு நரகத்தில் வசிக்கப் போனாய்.

அதற்கப்புறம், உன்னுடைய புண்ணியங்களை அனுபவித்து முடிந்ததும் மறுபடி பிறந்தாய். அதிலும் கூட, ஒரு வரட்டுத்தனமான ஆசாரக் கோட்பாடுகளையும், கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்கிற சில தர்மங்களையும் செய்ததைத் தவிர, உதவி கேட்டு வந்த எவருக்கும் உள்ளன்போடு எதுவும் செய்யாமல் போனதன் காரணமாகத்தான், இந்தப் பிறவியில், உனக்கு இவ்வளவு தேவைகள், மனக்குறைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.இத்தனைக்குப் பிறகும், வழக்கமான புண்ணியங்களை தேடும் செயல்களையே தொடர்ந்து செய்ய விழைவாய் எனில், உன்னுடைய புண்ணிய பாவங்களாகிற இருபெரும் தளைகள், முன்னமே சொன்னேனே, அந்தக் கனவுலக அனுபவத்தால் இன்னமும் வேரோடு அற்றுப் போகவில்லை இன்னும் மீதமிருக்கிறது, மறுபடி மறுபடி கனவுக்கும் நிஜத்திற்கும் இடையில் அவஸ்தைப் பட்டேயாக வேண்டும். இந்த உலக வாழ்க்கையிலேயே, கனவுலகில் அல்ல, உன்னுடைய ஆசைகள், ஆர்வத்தின் பலனாலேயே அவை மறைய வேண்டும்.

செல்வரங்கத்தின் கதையைப் பார்- முந்தைய பிறவியில் பெரும் கொடையாளியாக இருந்ததால், ஏராளமானவர்களுடைய இதயபூர்வமான ஆசியினால், கோடிகளுக்கு அதிபதியாய்ப் பிறந்திருக்கிறான். ஆனாலும், அவனது மனம் இன்னும் பண் படுத்தப் படவில்லை. பூர்த்தி செய்யப் படாத கொடிய இயல்புகளைத் திருப்தி செய்யவே, கொடிய எண்ணங்களும், கொடிய செயல்களுடனும் பிறந்திருக்கிறான். மண்ணைக் கொத்தி, பக்குவப் படுத்துவது போல, இங்கே கொடுமையாகத் தெரிவது கூடப் பக்குவப் படுத்துகிற சாதனம் தான். மண் பக்குவமாய் இருந்தால் தான், விதை முளைக்கும்.அன்பாகிற தண்ணீர் விட்டு கவனமாகப் பார்த்துக் கொண்டால் தான், செடி வளரும், பூ பூக்கும்..

இப்போது கர்மவினையின் சட்டங்கள் கொஞ்சமாவது புரிகிறதா?

கர்மவினை என்பது-பரிசுகளோ, தண்டனையோ அல்ல.

அவரை விதைத்தால் அவரை தான் விளையும். துவரை விதைத்தால் துவரை தான் விளையும். இந்த இயற்கை விதி புரிகிறதல்லவா-அதைப் போலத்தான், நல்ல செயல்களில் இருந்து நன்மை-கொடிய செயல்களில் இருந்து கொடுமை. அது தான் புண்ணியம்-பாவம். இந்த எளிய ஏற்பாடு எதற்காக என்றால், மனமும் இதயமும் சுத்தமாவதற்கும், கொடிய மிருகத்தன்மை அழிவதற்காகவும் இருக்கிறது. பொய்மையிலிருந்து தான் உண்மையைக் கண்டாக வேண்டும்.. இருட்டில் இருப்பவன்தான் வெளிச்சத்தைத் தேடியாக வேண்டும்.. பார்த்தாயா ஹரிமோகன்! எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் இந்த பூமி, எனது படைப்பில் ஒரு சிறு பகுதிதான். ஆனாலும் நீங்கள் எல்லோரும் ஒரு உன்னதமான உண்மையைக் கண்டறிவதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறீர்கள். நன்மை-தீமை, புண்ணிய- பாவம், இப்படி எதிர்மறையான இரட்டைத்தன்மைகளின் பிடியிலிருந்து விடுபடும் போதுதான் கர்மவினை- -அதன் விளைவுகளில் இருந்தும் விடுபட முடியும்.

நீயும் கூட இந்த விடுதலையை நோக்கித்தான் உன்னை அறியாமலேயே நகர்ந்து கொண்டிருக்கிறாய். இந்த முயற்சியில், உனக்கு உறுதுணையாக தெய்வீகம் துணையிருக்கும். இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் தான், நீ என் தோழனாக ஆக முடியும். விளையாட்டிலிருந்து விலகிக் கொள்கிறேன், எனக்கு விடுதலை இப்பொழுதே கொடு என்றெல்லாம் கேட்கக் கூடாது.

என்ன, சம்மதமா?”

ஹரிமோகன் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். அவனுக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. எப்படிச் சொல்வது, என்ன சொல்வது என்கிற யோசனையில் கொஞ்ச நேரம் இருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணன்,அவனுடைய இனம்புரியாத யோசனையிலிருந்து எழுப்பினான்: "என்ன ஹரிமோகன், ஏதாவது புரிந்ததா?"

"புரியாமல் என்ன, கிருஷ்ணா? நீ ஏதேதோ பேசி என்னை நன்றாக மயக்கி விட்டாய். இப்போது எனக்கு, உன்னை மடியில் வைத்துக் கொஞ்ச வேண்டும், என்னிடத்திலும் அன்பிருக்கிறது, அது உனக்காகத்தான் அதை உனக்குக் காண்பிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொரு ஆசை இல்லை." இப்படிச் சொல்லிக் கொண்டே வந்தவன், திடீரென்று ஒரு யோசனை கிளம்ப, "அடப் பொல்லாத பயலே! மறுபடியும் நீ என்னை ஏமாற்றி விட்டாய். என்னென்னவெல்லாமோ சொன்னாயே, தீயதை ஏன் படைத்தாய் என்பதற்கு ஒரு காரணமும் சொல்லாமல் விட்டு விட்டாயே?" இப்படிக் கேட்டுக் கொண்டே சிறுவனின் கரங்களை கெட்டியாகப் பற்றிக் கொண்டான்.

சிறுவனோ வெகுலாவகமாகத் தன் கைகளை விடுவித்துக் கொண்டு, சற்றே எட்டி நின்று கொண்டான். ஒரு கள்ளச் சிரிப்புடன், "பார்த்தாயா? கொஞ்சம் இறங்கி வந்து உனக்குப் புரிய வைக்க வந்தால், ஒரே மணி நேரத்தில் அத்தனை ரகசியங்களையும் தெரிந்து கொண்டு விடலாம் என்று பார்க்கிறாயே! "

"அப்படி இல்லை கிருஷ்ணா......" ஹரிமோகன் சிறுவனை நோக்கி நகர்ந்து வந்தான்.

சிறுவனது முகத்தில் பொய்க்கோபம், அதையும் மீறிய சிரிப்புடன் சொன்னான்:

" நகர்ந்து போ ஹரி மோகன்! உன்னை எனக்குத் தெரியாதா? கொஞ்ச நேரம் முன்பு வரை, இந்தப் பயல் மட்டும் என் கையில் கிடைக்கட்டும், கட்டி வைத்து உதைக்கிறேன் என்று கருவிக் கொண்டிருந்தவன் தானே நீ! உனக்கே அது மறந்து போய் விட்டதா என்ன? அதற்கு பயந்து கொண்டுதானே, நான் உன்னிடத்திலிருந்து ஒரு நாலடி தள்ளியே நின்று கொண்டிருந்தேன்?"

ஹரிமோகன் இருட்டில் கைகளைத் துழாவியபடி, தேடி வந்துகொண்டிருந்தான். சிறுவனோ இன்னமும் தள்ளியே நின்று கொண்டு சொன்னான்:" இல்லை இல்லை. இந்த திருப்தி, விளையாட்டெல்லாம், உனக்கு அடுத்த பிறவியில் தான்."

இப்படிச்சொல்லிக் கொண்டே, நீண்ட இருட்டில் சிறுவன் ஓடி மறைந்து விட்டான்.

ஹரிமோகனுக்கு நடந்ததெல்லாம் கனவா, நிஜமா என்ற சந்தேகம் எழத் தனக்குத் தானே பேசிக் கொள்ளலானான்.

"அந்த வசீகரமான முகம், புன்சிரிப்பு, இது எதுவுமே கனவில்லை, நிஜம் தான் என்று தோன்றியது. சின்னப் பையனாக இருந்தாலும், என்ன அழகாகச் சொன்னான்? தன் முந்தின பிறவி, ஸ்வர்க்கம்-நரகம் இரட்டையைப் பார்த்தது இது எல்லாம் வெறும் கனவாக இருக்கவே முடியாது.

என்னுடைய ஷ்யாமசுந்தரன் என்னைத் தேடி வந்தான். என்னுடன் பேசினான்.ஐயோ, நான் தான் அவனிடத்தில் மரியாதை இல்லாமல் பேசினேன்...அவனைக் கட்டி வைக்கப் போகிறேன் என்றேன். அடிப்பேன் என்றேன். அவனைப் பொய்யன், பித்தலாட்டக்காரன் என்றெல்லாம் ஏசினேன். அது தெரிந்தும் என் பிரபு என்னைத் தேடி வந்தான், என்னோடு சமமாகப் பேசினான், சிரித்தான், பொய்க்கோபம் காட்டினான். கேள்விகளைக் கேட்டு முடிப்பதற்குள்ளேயே, என் பிரபு என் கேள்வியிலேயே பதிலாக வந்து விட்டான். கிருஷ்ணா! கிருஷ்ணா!"

ஹரிமோகனுடைய மொத்தமும் ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டுக் கொண்டிருந்தது

" கோவிந்தா! என் பிரபோ, உன்னை மறுபடி காண்பது எப்போது?"

ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியிடும் மாத இதழான அகில இந்திய இதழில், [ஏப்ரல் 2002]
ஒரு கனவு என்ற தலைப்பில் டாக்டர் மீரா ஷர்மா தமிழில் மொழிபெயர்த்து வெளியான ஒரு வங்க மொழிக் கதையைத் தழுவியது. ஆசிரியர் விவரம் தெரியவில்லை. எப்போதோ படித்தது..மறுபடி கிடைத்தது, இதில் வரும் ஹரிமோகன் நான் தானோ என்ற சந்தேகம் கூட வந்தது. நானாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கமே கதையை வாசித்து முடித்தபின் வந்தது.

கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்!


ஹரி மோகனுக்கு, நினைக்க நினைக்க ஆற்றமாட்டாமையும், கோபமும் ஒருசேர எழுந்தன. பின்னே, ஏழை என்ன தான் செய்ய முடியும்? ஒரு ஒட்டு வீட்டில், கிழிந்த பாய், தலையணையில், அமர்ந்து பொருமிக் கொண்டிருந்தான்.

"என்ன நியாயம் இது? நினைவு தெரிந்த நாள் முதல் ஒருவருக்கும் நான் தீங்கு செய்ததில்லை. பிறர் பொருளுக்கு ஆசைப் பட்டவனும் இல்லை. பரம சாதுவாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்-ஆனாலும், கஷ்டங்களுக்கு மேல் கஷ்டங்களையே அந்த கிருஷ்ணன் கொடுத்துக் கொண்டிருக்கிறான், கேட்டால், இது உன்னுடைய கர்ம வினை, முன் ஜென்மத்தில் நீ செய்த பாவங்களைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் என்று சொல்கிறார்கள். எனக்கென்னவோ கர்மவினை, புண்ணியம் பாவம் என்று சொல்வது எல்லாம், வெறும் பித்தலாட்டம் என்று தான் படுகிறது. அந்த விஷமக் காரக் கண்ணன், தன் மேல் எவரும் பழி சொல்லாமல் இருப்பதற்காகத் தான் கீதையில் இப்படி ஒரு பொய்யைச் சொல்லி வைத்திருக்கிறான்."

தூரத்தில் தெரிந்த கிருஷ்ணன் கோவிலை ஒரு முறை வெறித்துப் பார்த்து விட்டு மறுபடி தனக்குத் தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தான்:

"அவன் சொல்கிறபடி, முந்தைய பிறவியில் நான் பெரும் பாவங்களைச் செய்திருந்தால், என்னுடைய இன்றைய இழிநிலை அதனால் தான் என்றால், இப்போதும் கூட அந்தத் தீவினைகளின் நிழல், நினைவுகள் என் நெஞ்சில் எழுந்து கொண்டு தான் இருக்கும். அவ்வளவு பெரிய பாவச் சுமை, ஒரு பிறவியோடு போயிருக்காது, மனம் கூட இந்த அளவு களங்கமற்றதாக இருந்திருக்காது...கர்ம வினை, பாவம், புண்ணியம் என்பதெல்லாமே சுத்தப் பொய்."

ஊர்ப் பெரிய தனக்காரன் செல்வரங்கத்தையே எடுத்துக் கொள்ளலாமே..அவனுக்கு இன்றைக்கு இருக்கிற செல்வம், அந்தஸ்து, ஆள்பலம், செல்வாக்கு இதையெல்லாம் பார்த்தால், முந்தின பிறவியில் அவன் பெரிய ஞானியாகக் கூட இருந்திருக்க வேண்டும்.இப்போது அவனிடத்தில் அப்படி நல்ல விஷயங்கள் இருந்ததற்கான அடையாளம் எதுவுமே இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் அவனைவிட சுயநலக்காரனும், கிராதகனும் எவனுமே இல்லை."

"இந்த கர்மவினை, புண்ணியம் , பாவம் இதெல்லாம் இல்லவே இல்லை. அந்தப் பொல்லாத பயல் கிருஷ்ணனின் பசப்பு வேலை மட்டுமே. என்னை மாதிரி ஒன்றும் அறியாத அப்பாவிகளை மயக்க மட்டுமே ஏற்பட்டது."

"அடேய், பொல்லாத விஷமக்காரப் பயலே! கிருஷ்ணா! நீ பெரிய எத்தன். என் பக்கத்தில் வராத வரைக்கும் நீ பிழைத்தாய். நீ மட்டும் என் கையில் அகப்பட்டால், என்ன செய்வேன் தெரியுமா? உன்னைக் கட்டி வைத்து, என் ஆத்திரம் தீறகிற வரை உதைப்பேன். நீ எப்படிப்பட்ட பொய்யன் என்பதை இந்த ஊரே தெரிந்து கொள்கிற வரை உதைப்பேன், உன்னை விட மாட்டேன்."

"நீ மட்டும் என் கிட்ட வந்து பார்....உன்னை என்ன செய்கிறேன் என்று....."

இப்படி ஹரி மோகன் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்த சமயத்தில், அங்கே ஒரு ஒளிவட்டம் தோன்றியது.கருப்புத்தான், ஆனால் எவ்வளவு வசீகரம்! மயிற்பீலி அணிந்த ஒரு சிறுவன் ஹரி மோகன் அருகே நின்றான். இடையில் அவனது புல்லாங்குழல், கால்களை ஒய்யாரமாக வளைத்து நின்ற படியே, "இதோ வந்து விட்டேன்" என்றான்.

ஏனோ,ஹரி மோகனுக்குத் தன்னுடைய நினைப்பின் மீதே வெட்கம் ..இந்த அழகான குழந்தையையா கட்டிப் போட்டு உதைக்க வேண்டும் என்று எண்ணினோம்...தன் மோசமான நினைப்பின் மேல் எழுந்த பச்சாதாபம் ஒருபுறம், இந்த சிறுவன் முன்னால் காட்டிக் கொள்வதா என்கிற வெட்கம் ஒருபுறம்..சிறுவனிடம், "இங்கு எதற்காக வந்தாய்?" என்றான்.

"எதற்காகவா? நீ என்னைக் கூப்பிடவில்லை? என் கிட்ட வந்து பார் என்று நீ தானே கூப்பிட்டாய்..அதுதான் வந்து விட்டேன், நீ ஆசைப் பட்டபடி, கட்டி வைத்து உதைப்பாயோ, உதைத்தபிறகு கட்டிப் போடுவாயோ, செய்துகொள்."

கொஞ்சம் கூட தயக்கமில்லாமல், சிரித்துக் கொண்டே சிறுவன் சொன்ன வார்த்தையில் ஹரி மோகன் மயங்கி நின்றான். 'என்ன காரியம் செய்து விட்டேன், இந்த மோகனச் சிறுவனை அள்ளி அணைத்துக் கொஞ்ச வேண்டும் என்கிற நினைப்பில்லாமல், கட்டி வைத்து உதைக்க வேண்டும் என்று நினைத்தேனே, எவ்வளவு பெரிய தப்பைச் செய்ய இருந்தேன்' அடிமனது அரற்ற, ஹரி மோகன் தலை கவிழ்ந்து நின்றான்.

"இங்கே பார் ஹரி மோகன், நான் தான் ஏற்கெனெவே வாக்குக் கொடுத்திருக்கிறேனே..'யே யதா மாம் ப்ரபத்யந்தே..எவரெவர் எந்த முறையில் என்னை அணுக முயல்கிறார்களோ அதே முறையில் நான் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவேன்' அதுதான், கோபமேலீட்டால், என்னை அடிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டாய்.... உன் ஆசைப்படியே நானும் உன்னிடம் அடிபட வந்திருக்கிறேன்......ஆரம்பிக்க வேண்டியது தானே?"

"குட்டிப்பையா! எனக்கு ஒன்றுமே புரியவில்லை"

இதோ பார் ஹரி மோகன்! எதற்காகத் தலை குனிந்து நிற்கிறாய்? என்னைக் கண்டு பயப்படாதவர்களை எனக்குப் பிடிக்கும். என் மேல் தோழமை கொண்டு, என்னைத் திட்டவும் அடிக்கவும் என்னோடு விளையாடவும் வருகிறவர்களை ரொம்பப் பிடிக்கும்.இந்த உலகத்தை எதற்காகப் படைத்தேன் என்று நினைக்கிறாய்? ஒரு விளையாட்டிற்காகத்தான். என்னோடு விளையாடத் தயாராக இருக்கும் தோழர்களையே நான் எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் பார், அப்படிப்பட்ட தோழர்கள் அவ்வளவு சுலபமாகக் கிடைப்பதில்லை."

"எல்லோருக்கும் கோபம் வந்தால் அதை என்னிடத்தில் தான் கொட்டுகிறார்கள். அவர்கள் வேண்டுவதைஎல்லாம் நான் உடனே அவர்களுக்குக் கொடுத்து விட வேண்டும். செல்வம் வேண்டும், பதவி வேண்டும், நீண்ட ஆயுள் வேண்டும் இப்படி என்னிடத்தில் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சில பேருக்கு, உடனே மோட்சம் வேண்டும் இப்படி அவரவர்கள் வேண்டியதைக் கொடுக்கும் இயந்திரமாகவே என்னை நினைக்கிறார்கள். எனக்காகவே என்னை வேண்டுவார் ஒருவரும் இல்லை. எதையும் எதிர்பாராமல் என்னிடத்தில் அன்பு செலுத்துவார் எவரேனும் உண்டா என்று தேடிக் கொண்டே இருக்கிறேன்....சரி, அது கிடக்கட்டும், உனக்கும் எதோ என்னிடத்தில் வேண்டியிருக்கிறதல்லவா? கோபத்தில் என்னைக் கட்டி வைத்து அடிக்க ஆசைப் பட்டாய். இதோ நான் வந்து விட்டேன்."

ஹரிமோகன் கொஞ்ச நேரம் தயங்கிப் பிறகு சொன்னான்:" கிருஷ்ணா, மிகவும் அழகாகப் பேசுகிறாய். ஆனாலும், உன்னுடைய நடவடிக்கைகள் எதுவுமே எனக்குப் புரியவே இல்லை."

உனக்குப் புரியும்படி சொல்கிறேன், கேட்பாயா?"

"நீயே சிறுவன், முளைத்து மூன்று இலை கூட விடாத சின்னப்பயல் எதை எனக்குப் புரிய வைக்கப் போகிறாய்? என்ன கற்றுக் கொடுக்கப் போகிறாய்?"

"என்னால் என்ன முடிகிறதென்று பொறுத்திருந்து தான் பாரேன், ?" வசீகரிக்கும் புன்னகையுடன் அந்த சிறுவன் ஹரிமோகனுடைய உச்சந்தலையை லேசாகத் தொட்டான்.

ஹரி மோகனுடைய உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. மூலாதாரத்தில் உறங்கிக் கிடந்த குண்டலினி ஐந்து தலை வெள்ளை நாகம் படமெடுத்து உயர்வது போல, மூண்டெழு கனலாக உச்சிக்கு உயர்ந்தது. தேகமே நான் என்ற நிலை விடுத்துத் தன் இயல்பான சூக்கும சரீரத்தில் இருப்பதைக் கண்டான். பக்கத்திலேயே, கண்ணனும் இருந்தான். இருவரும், ஒரு பெரிய மாளிகைக்குள் இருப்பதை ஹரிமோகன் அறிந்தான்.

என்ன இது, இது ஊர்ப் பெரிய தனக்காரன் செல்வரங்கத்தின் வீடு அல்லவா?

ஒரு கவலையும் இல்லாமல் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகத் தான் நினைத்த அதே செல்வரங்கம், கிழடு தட்டி, விசனத்தோடு, கண்களில் நீர் வழிய வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த போது, ஆட்சி அதிகாரத்தோடு எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்த அதே செல்வரங்கம் தானா இது? ஏன், ஒரு கோழிக் குஞ்சைப்போல நடுங்கிக் கொண்டிருக்கிறான்?

இந்த நிலையிலும் ஹரிமோகனுடைய பயம் போகவில்லை. யாராவது வந்து பிடித்துக் காவலாளிகளிடம் ஒப்படைத்து நையப் புடைத்து விடுவார்களோ?

"கிருஷ்ணா, என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறாயா? செல்வரங்கத்தின் செல்வாக்கு உனக்குத் தெரியாதா? அவனுடைய வேலைக்காரர்கள் நம்மைப் பிடித்து நன்றாக உதைக்கப் போகிறார்கள் பார். நம்மைத் திருடர்கள் என்று சொல்லப் போகிறார்கள்."

சிறுவன் கலகலவென்று சிரித்தான்," சொல்லிவிட்டுப் போகட்டுமே. திருட்டுப் பட்டம் எனக்குப் புதிதா என்ன? அட, நீயேன் இப்படி நடுங்குகிறாய்? காவல்காரர்கள் வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போது நீ செல்வரங்கத்தின் மனத்திற்குள் என்ன ஓடுகிறது, ஏன் அவன் இப்படி இருக்கிறான் என்பதைப் பார்."

"அது எப்படி இன்னொருவர் மனதிற்குள்....." ஹரிமோகன் சந்தேகத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னாலேயே கிருஷ்ணன் விடையைச் சொல்லி விட்டான். "உனக்கு செல்வரங்கத்தின் செல்வாக்கு, ஆள்பலம் இவைதானே தெரியும், கொஞ்சம் என்னுடையதையும் பாரேன்."

செல்வரங்கத்தின் மனதை ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போல, உள்ளிருக்கும் அனைத்தையும் பார்க்க முடிவதை ஹரி மோகன் உணர்ந்தான். செல்வரங்கத்தின் மனதில், பலவிதமான ஆசைகள், கோபங்கள் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். எவ்வளவு பணம் இருந்த போதிலும் போதாது, போதாது என்று கூக்குரலிடும் பேராசை அவனை ஆட்டிப் படைப்பதையும், அவன் பணத்திலேயே குறியாக இருக்கும் உறவு, நட்பு சுற்றத்தாரையும், அவர்களால் கிலேசத்துடனும், ஆங்காரத்துடனும் செல்வரங்கம் தளர்ந்து போய் இருப்பதையும், அவனது ஆசை மகள் நடத்தை தவறி, ஊர்ப்பழிக்கு அஞ்சி அவளை வீட்டை விட்டு விரட்டி விட்டு, அந்த சோகத்திலேயே அழுதுகுமுறிக் கொண்டிருந்த செல்வரங்கத்தப் பார்த்த பொது, ஹரிமோகனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தவறுகளை உணரவோ, அதற்கு வருத்தப் படவோ அவன் தயாராக இல்லை. நான் நான் என்ற மமதை, அவனை இறைவனை அழைப்பதைத் தடுத்துக் கொண்டிருந்தது. இடை இடையே, யம தூதர்கள், செல்வரங்கத்தை வந்து வந்து மிரட்டி விட்டுப் போவதையும், இத்தனைக்குப் பின்னாலும், உயிர் மேல் ஆசையால், செல்வரங்கம் ஒரு கோழிக் குஞ்சு துடிப்பதைப் போல பயத்தில் துடிப்பதையும் பார்த்தான்.

"கண்ணா, இவன் ரொம்ப சந்தோஷமாக, கவலையே இல்லாமல் இருக்கிறான் என்றல்லவா எண்ணி இருந்தேன்? என்ன ஆயிற்று இவனுக்கு?"

கண்ணன் சொன்னான், "என்னவோ செல்வரங்கத்துடைய செல்வாக்கு, ஆள் பலத்தைப் பற்றிப் பேசினாயே, இப்பொழுது என்ன சொல்கிறாய்? இவனுக்கு இருப்பதை விட செல்வாக்கும், பலமும் எனக்கிருப்பதை மறந்து விட்டாயா? நானும் ராஜாவாக, நீதிபதியாக, தண்டிக்கும் காவலனாக இருக்க முடியும். இந்த விளையாட்டு உனக்குப் புரிகிறதா?"

ஹரிமோகன் உரத்துக் கூவினான்," அடக் கடவுளே, இது எனக்குப் பிடிக்கவில்லை. மிகவும் கொடூரமாக அல்லவோ இது இருக்கிறது, இதை ஒரு விளையாட்டு என்று லேசாக உன்னால் எப்படிச் சொல்ல முடிகிறது?"

ஷ்யாமசுந்தரன் உல்லாசமாகச் சிரித்துக் கொண்டே சொன்னான்: "எனக்கு எல்லாவிதமான விளையாட்டும் பிடிக்கும். அடிக்கவும் பிடிக்கும், அடிபடவும் பிடிக்கும். உன்னைப் போல, செல்வரங்கத்தைப் போல எல்லோருமே, எதையும் மேலோட்டமாகவே பார்க்கப் பழகி இருக்கிறீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் அதன் உண்மையான தன்மையில் பார்க்கத் தெரிவதே இல்லை. எதனுள்ளும் இருக்கும் உண்மையை அறியக் கூடிய நுட்பமான பார்வை இல்லை. அதனால் தான், நீ ஒருவன் தான் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகி இருப்பது போலவும், செல்வரங்கம் போன்றவர்கள் கொஞ்சம் கூடக் கவலையே இல்லாமல், சந்தோஷமாக இருப்பதாகவும் தோன்றுகிறது. ஆண்டவன் கல்நெஞ்சுக்காரன், இரக்கமே இல்லாமல், உயிர்களை இப்படி வதைத்துக் கொண்டிருக்கிறான் என்று கோபப் பட்டு, என்னை அடிப்பதற்காகவே இங்கு அழைத்திருக்கிறாய் இல்லையா?"

"இதோ பார் ஹரி மோகன், நீ கஷ்டப் படுவதாகவும், செல்வரங்கம் சந்தோஷமாக இருப்பதாகவும் நினைத்தாய் அல்லவா? இப்போது செல்வரங்கம் மனதில் எத்தனை வேதனையை தேக்கி வைத்திருக்கிறான் என்பதையும் பார்த்தாய் அல்லவா? உண்மையில், ஆனந்தம், சந்தோஷம் என்பது மனதின் ஒரு நிலைதான். அதே மாதிரித் தான் வேதனை, துயரம் எல்லாம். மனதின் உரு மாற்றங்கள் தான் இந்த மகிழ்ச்சியும், வருத்தமும்.

உண்மை என்னவென்றால், ஒன்றுமே இல்லாத ஒருவன், துர்வினையே முதலாகக் கொண்ட ஒருவன் கூட, இடைஞ்சல்கள், ஆபத்துகள் மத்தியில், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

உன்னையே எடுத்துக் கொள், வரட்டுத் தனமான நல்வினைகளைச் சேர்ப்பதிலேயே நாட்களைச் செலவழித்து, கஷ்டங்களை நினைத்து வருத்தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறாய். உன்னை மாதிரியே செல்வரங்கமும், வரட்டுத் தீவினைகளையே செய்து, மகிழ்ச்சியற்றிருப்பதையும் பார். அதனால் தான் நல்வினைகளால் நிலையற்ற கணப்பொழுதில் மறையும் சுகமும், தீவினைகளால் நிலையற்ற எளிதில் மறையும் துக்கமும், இன்னும் சில நல்வினகளால் நிலையற்ற துக்கமும், தீவினைகளால் நிலையற்ற சுகமும் கூட மாறி மாறி வருகின்றன. இப்படிப் பட்ட போராட்டத்தினால், நிலையான, உண்மையான ஆனந்தம் என்பதே கிடையாது, கிடைக்காது.

ஆனந்தமயமான இருப்பு என்னிடத்தில் இருக்கிறது. என்னிடம் வந்து, என் மேல் காதலால் உருகிக் கசிந்து, என்னைத் தேடி, என்னிடம் அன்பு கொண்டு நெருக்கி, என்னை வாட்டவும் துணியும் ஒருவனே என்னிடமிருந்து எல்லையற்ற மகிழ்ச்சியையும் பலவந்தமாகப் பறித்துக் கொள்கிறான். நானும் அவனிடத்தில் சந்தோஷமாகத் தோற்றுப் போகவும் தயாராக இருக்கிறேன்.

ஹரிமோகனுக்குத் தன்னிடத்தில் இருக்கும் குறை இன்னதென்று இன்னமும் புரியவில்லை. ஆனாலும், ஆர்வத்தோடு கண்ணன் இன்னும் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கேட்க ஆவலாகக் காத்திருந்தான்.

பதிவு கொஞ்சம் நீ....ண்டு விட்டது, நாமும் கண்ணன் பெயரைச் சொல்லிக் கொண்டே கொஞ்சம் காத்திருப்போமா?


கண்ணன் வந்தான்-மாயக் கண்ணன் வந்தான்
ஏழை கண்ணீரைக் கணடதும் கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்!

நெடுநாட்களுக்கு முன்னால், புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியீடான All India Magazine இல் வெளியான ஒரு வங்க மொழிக் கதை. ஆசிரியர் பெயர் தெரியாது. இதன் தமிழ்ப் பதிப்பு 'அகில இந்திய இதழ்' என்ற பெயரில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 2002 இதழில் டாக்டர் மீரா ஷர்மா தமிழில் மொழிபெயர்த்து வெளிவந்ததன் தழுவல்.