"பொழுதும் விடியும், பூவும் மலரும்! பொறுத்திருப்பாய் கண்ணா!"


முக்குறுணிப் பிள்ளையாரப்பா! மதுரைக்கு நன்மையே தந்தருள்வாய்!

மதுரைக்கு அரசி நீயல்லவோ! காத்திட வேணும் எங்களையே!

ஒரு இளம் துறவி, அல்லது சாது.

அவருக்குத் தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் கொஞ்சம் குழப்பம், கடவுள் என்ன உத்தேசித்திருக்கிறாரோ, அதைத் தன்னால் சரிவரச் செய்ய முடியுமோ என்னவோ, இப்படியெல்லாம் தனக்கெழுந்த சந்தேகங்களை, இன்னொரு அனுபவம் நிறைந்த துறவியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இருவரும், பேசியபடியே, ஒரு தோட்டத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த ரோஜா செடிகளிடையே, முதிய துறவி நின்றார்.
"
அந்த ரோஜா மொட்டுக்கள் என்ன சொல்கின்றன, உனக்குப் புரிகிறதா?" என்றார்.

இளம் துறவிக்கோ, இன்னும் குழப்பம், தான் கேட்டது என்ன, இவர் என்னவென்றால், ரோஜா மொட்டுக்கள் என்ன சொல்கின்றன என்று சம்பந்தாசம்பந்தமில்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று தயக்கத்துடனேயே "புரியவில்லையே ஐயா!" என்று பதில் சொன்னார்.

முதிய துறவி ஒரு ரோஜா மொட்டைக் கிள்ளியெடுத்து இளம் துறவியின் கைகளில் கொடுத்தார். "எங்கே, இந்த ரோஜாவை மலர்த்துங்கள் பார்க்கலாம்! இதழ்கள் பிய்ந்து விடாமல் கவனமாக முயற்சி செய்யுங்கள்."

இளம் துறவிக்கோ மிகுந்த ஆச்சரியம், குழப்பம்.
'
நான் இவரிடத்தில், இறைவன் என்ன செய்யக் கருதியிருக்கிறான், நான் என்ன செய்ய வேண்டும், என்னால் அதை செய்ய முடியுமா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால், இவரோ ரோஜா மொட்டைக் கையில் கொடுத்து, சேதமில்லாமல், மலர்த்த முடியுமா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார், அனுபவமுள்ளவர், அறிந்தவர், என்ன சொன்னாலும், செய்து தான் பார்ப்போமே.' என்று நினைத்தபடியே, ரோஜா மொட்டை, மலர்த்த முனைந்தார்.

இதழ்கள் பிய்ந்து விடாமல், வெகு சிரமப்பட்டு ரோஜாவை மலர்த்த அவரும் ரொம்ப நேரம் பாடுபட்டார். ஆனாலும், அதை எப்படி செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த போது, முதிய துறவி பாட்டுப் பாட ஆரம்பித்தார்.

இறைவன் படைத்தான் அழகாக, சின்னஞ் சிறிய ரோஜா மொட்டு
இறைவன் படைத்தது என்னையும் தான் ஆயினும் எந்தன் கைகளினால்
இதழ்களை விரிக்கவும் மலர்த்தவும் முடியவில்லை ரகசியம் என்ன தெரியவில்லை
இறைவன் எளிதாய்ச் செய்கின்றான் மிகவும் அழகாய் மலர்த்துகிறான்.
இறைவன் படைத்தான் என்னையுமே, என் முயற்சியில்மலரும் உதிர்ந்ததுவே

சின்னஞ் சிறிய மலர் கூட மலர்த்துவதாகா தென் கையால் புரிந்தது அங்கே
என்விதி என்வழி என்பதெது? என்னறிவாலதை அறிவதேது?
சின்னஞ் சிறு மலர் சொல்லும் பாடமிது மலரச் செய்வது அவன் வேலை!
என்பதை உணர்ந்தால் அது வாழ்க்கை! ஒளியை நோக்கி உயர்வது மட்டும் என் வேலை!
அன்பாய் ஒளியாய் வழிநடத்த ஒருவன் உள்ளே இருக்கின்றான்!

ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு தினமும் அவனே என்னுள் எல்லாம் நடத்துகிறான்.
அவ்வகைப்பயணமும் எங்கே, எப்படி எதற்காக, நாதன் அவனே பார்த்துக் கொள்வான்
ரோஜா மலரச் செய்கிறவன், என்னை மலர்த்தவும் மறுப்பானோ?
ரோஜா மொட்டும் மலர்ந்து விடும், அதற்குரிய வேளையிலே
ரோஜா சொல்லும் பாடம் இது! மலர்வதற்காகக் காத்து இரு!”


ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியிடும் மின்னிதழ் Next Future ஏப்ரல் இதழில் வெளியாகியிருந்த இந்த குட்டிக் கதை என்னை மிகவும் கவர்ந்தது. நன்றி: ஸ்ரீ அரவிந்தர் சொசைடி

இந்தக் கதையைத் தமிழ்ப்படுத்தி முடித்தபோது, ரோஜா சொல்லும் பாடம் இது மலர்வதற்காகக் காத்து இரு என்று எழுதும் போதே, ஒரு திரைப்படப் பாடல் வரி நினைவுக்கு வந்தது:
"பொழுதும் விடியும், பூவும் மலரும்! பொறுத்திருப்பாய் கண்ணா!"

******

இங்கே மதுரையில் வருகிற ஏப்ரல் எட்டாம் தேதி மீனாக்ஷி அம்மன் கோவில் கும்பாபிஷேகம். உள்ளூர் கேபிள் டிவியில் காலையில் நடப்பதை மாலையில், மாலையில் நடப்பதை மறுநாள் காலையில் என்று ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒளிபரப்பானதில், மார்ச் 31 மாலையில், வைகையாற்றங்கரையில் இருந்து மண் எடுத்து வரும் ம்ருத் ஸந்க்ரஹநம் ஒளிபரப்பானதைப் பார்த்தேன். வீடியோ எடுப்பவர்கள் உரிமையாக, 'சாமி, கொஞ்சம் முன்னால வாங்க, நீங்க கொஞ்சம் அப்படி தள்ளி நில்லுங்க ......." என டைரக்ட் செய்ய, யாக தீட்சை பெற்றவர்களும், சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்தது, நடுநடுவே செல் போனில் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் தமாஷாகவே இருக்கிறது. இருந்தாலும், மதுரையை இன்னும் மீனாக்ஷி தான் அரசாட்சி செய்து கொண்டிருக்கிறாள் என்ற நம்பிக்கையோடு, சேவிக்க வந்தவர்களையும் பார்த்த போது மனதிற்கு இதமாக இருந்தது.

சித்திரைத் திருவிழாவில் ஒருதரம், அப்புறம் ஆவணி மாதம் ஒருதரமென்று, அம்மையும் அப்பனுமாக, செங்கோல் ஏந்தி மதுரையை ஆளுவதாக நாங்களெல்லாம் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.ஆனால், மதுரையை உண்மையிலேயே ஆள்வது யார் என்கிற கேள்வி அவ்வப்போது வந்து போகிறது. இந்த குடமுழுக்கு,பெருஞ் சாந்து சாத்துதல் [அதாங்க, அஷ்டபந்தனம்] நடந்த பிறகாவது, மீனாக்ஷி மதுரையை மறுபடி அரசாட்சி செய்யத் தொடங்கினால் சரி. அன்னை, திருவுள்ளம் உகந்தருள வேணும்!

எட்டு வயதிலேயே அன்னை மீனாக்ஷி பெயரில் கவி பாடத் தொடங்கிய கவியோகி சுத்தானந்த பாரதியாரது பாடல்கள் -மீனாக்ஷி மீதானவை, தினமும் ஒன்றாக எங்களுக்குப் படிக்கக் கொடுங்கள் என்று திரு. சந்திர சேகர் அவர்களிடம் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறேன், அவரும் மனம் வைக்க வேண்டும்.

2 comments:

  1. //கவியோகி சுத்தானந்த பாரதியாரது பாடல்கள் -மீனாக்ஷி மீதானவை//

    அப்படியா?....அருமை, அருமை...

    உரல் / லின்க் தாருங்கள் கிருஷ்ணமூர்த்தி சார்... .

    ReplyDelete
  2. கவியாகியாரது அண்ணன் மகள் வயிற்றுப் பெயரன் திரு சந்திர சேகரனிடத்தில் அதையெல்லாம் திரட்டித் தரும்படி விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளலாம்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!