"யோவ் சன்னாசம் எப்படி வாங்குறது சொல்லுய்யா "


முன்கதைச் சுருக்கம்:
"ஒரு விவாதத்தில் இன்று எனக்கேற்பட்ட ஒரு அனுபவத்தைத் தொடர்ந்து எழுந்த சிந்தனையில், இந்தக் கதை பொருந்திப் போகவே, மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறேன். கதையின் முடிவில் ஆங்கிலத்தில் கதையின் கருத்தாகச் சொன்னது அப்படியே வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கு, இதில் உடன்பாடு இல்லை.

விவாதக்களத்தை நிர்வகிப்பவர் வருத்தப்பட்டு, கைபேசியில் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, குறியீட்டுச் சொல்லும் [tag], இன்னும் ஒரு சொல்லும் 28/03/2009 இரவு 8.14 க்கு நீக்கப்பட்டது."


இப்படிப் போன பதிவில் எழுதி, அதை முன் கதைச் சுருக்கமாகப் போட்டது, கொஞ்சம் புரியவில்லையோ? அதனால் ஒன்றும் இல்லை. அலைச்சல் கொஞ்சம் மிச்சம்!

"மின்மடலாடல் என்பது ஒரு கலை. இங்கு தோன்றும் ஒவ்வொரு எழுத்தும் நம்மைநேரடியாக தாக்குபவை என்று கொண்டால் நிற்கவே முடியாது. அவைமினெழுத்துக்கள். மிக மெல்லியவை. அது போல உங்கள் இதயத்தையும் பஞ்சு போல் வைத்திருந்தால் தாக்கமே தெரியாது. ஈகோவை கல்லாக்கி வைத்திருப்பவர்களின் பதில்கள்தான் கல்லில் எறிந்த பந்து போல் வீரியமாக திரும்பிவரும். அதன்வேகத்திலிருந்து குணாதிசயம் புலப்படும். இதைக்கூட எதற்கு சொல்கிறேன் என்றால் இணையம் மனிதக் கண்ணாடி என்று காட்டத்தான். நீங்கள் கவிஞர் புரியும் என்று எண்ணுகிறேன்.”

.........................

“தி.வா, கண்ணன் நடராஜன் சொல்வதை நானும் வழிமொழிகிறேன். நாம் வீசும் சொல் எங்கு போய் எப்படித்திரும்பும் என்று சொல்லவே முடியாது. நாம் ஏதோ சத்தோரி அடைந்துவிட்டது போல் எழுதுவோம். ஒரு சின்ன :-) குறிகூட தோன்றாது. சும்மா எழுதின 'ஏதோ', பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும். புயல், டொர்னேடோ இவைகளை ஆராயும் விஞ்ஞானிகளும் இதைத்தான் சொல்கிறார்கள். ஏதோ சின்ன தூசு எங்கோ, ஒரு சூபர் நோவாவிற்குக் கருவாக இருக்கும்.”

முனைவர் நா.கண்ணன், சமீபத்தில், ஒரு விவாதக் களத்தில் வருத்தப்பட்ட ஒருவருக்கு எழுதிய பண்பட்ட வார்த்தைகள் இவை. காயத்திற்கு மருந்தாகவும், அதே சமயம் அனுபவத்தில் அறிந்ததைப் பகிர்ந்து கொள்வதாகவும் இருக்கும் இந்த வார்த்தைகள், அண்மையில் நான் படித்தவற்றுள், மிக நளினமானவை. நாகரீகமாகவும், பயன் படுவதாகவும் உள்ள எழுத்து.

அலைச்சல் என்றால் என்ன, பயணம் என்றால் என்ன, இதை ஆன்மீக அடிப்படையில் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் இப்படி ஒரு தலைப்பில் ஒரு விவாதக் களம். விவாதம் என்பது, பட்டிமண்டபமாகிப் போனது. பட்டி மன்றத்தை விட்டு விலகி, ஒரு மின்னிதழில் படித்த கதையைத் தமிழிலே மொழிபெயர்த்துப் பதிவிலும் இட்டு விட்டேன். கைபேசியில் அழைப்பு வந்தது

"என்ன இப்படி எழுதி விட்டீர்கள், நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்..............."

என்னுடைய தரப்பைக் காத்து கொடுத்துக் கேட்க அவர் தயாராகவே இல்லை. சொல்லப் பட்ட கதையோ, அதன் கருத்தோ அவருக்குப் பொருட்டில்லை. அதை அவர் படிக்கவும் இல்லை. ஆனால், அவர் நடத்துகிற களத்தின் பெயர், tag ஆக இருந்தது ஒன்று தான் அவரைக் காயப் படுத்திய விஷயமாம்.

"என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்? அந்த பதிவை நீக்கி விடவா? உடனே செய்து விடுகிறேன்."

அதற்கும் நேரடியான பதில் இல்லை. "நேத்துதான் நாப்பது நிமிஷம் பேசியிருக்கோம்......எனக்கு வேறு ஒரு கால் வருது." வைத்து விட்டார்.

பேசிக் கொண்டே tag இல் இருந்த ஒரு சொல்லையும், வலைக் குழுமம் என்கிற சொல்லையும் நீக்கி விட்டு, அவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி விட்டேன். இந்த உரையாடலில் ஒன்று தெளிவாகப் புரிந்தது. நான் எழுதிய எதையுமே அவர் முழுதுமாகப் படிக்கவில்லை, என்ன சொல்லப்பட்டது, அதில் தவறு என்ன, அதை எப்படி சரி செய்வது என்ற பிரக்ஞை இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொடர்ந்து இருந்தோமேயானால், "தடங்கலுக்கு வருந்துகிறோம்"னு, தொலைக்காட்சிகளில் வருமே அப்படி, தொடர்ந்து வருந்திக்கொண்டே அல்லது வருததிக்கோண்டே தான் காலம் போய்க்கொண்டிருக்குமே தவிர, வேறு உருப்படியான எதுவும் நடக்காது, என்று unsubscribe பட்டனை அமுக்கி, அப்பாடா என்று வெளியே வந்தாயிற்று.

கதவு திறந்திருந்தால் காற்று வரும், வெளிச்சமும் வரும். திறந்த மனதோடு பார்க்க முடிந்தால், மாறுபட்ட கருத்தையும் பக்குவமாக எதிர் கொள்ள முடியும் என்பது அந்த நண்பருக்கு ஏன் புரியவில்லை?

அப்புறம் தான் ராஜநாயகம் சார் நெத்தியடியா ஒரு பதிவு எழுதியிருந்ததைப் படிச்சேன். ஆஹா, உள்ளத விட்டுப்பிட்டு, ஒருகேள்வி 73 பின்னூட்டங்கள், விட்டா அனுமார் வால் மாதிரி இன்னமும் போய்க் கொண்டே இருந்திருக்கும்...கடைசியில, எங்க ஆரம்பிச்சோம் எங்க முடிச்சோம்னு யாருக்குமே தெரிஞ்சிருக்காது., இங்க பாத்தா ரெண்டே பத்தி தான், செம செம நெத்தியடி!

அலைச்சல்'னா என்ன, பயணம்'னா என்ன அப்படீங்கிறதை ராஜநாயகம் சார் எப்படிச் சொல்றாருன்னு தான் பாப்போமே!

ஓவர் டு ராஜநாயகம் சார்

'சித்தி ' என்று ஒரு கதை .

சின்னம்மா என நினைத்து விடக்கூடாது .

ஆத்மசித்தி ! புதுமைப்பித்தன் எழுதியது .


சந்நியாசம் பற்றிய கதை தான் . சந்நியாசத்திற்கான பக்குவம் இல்லாமல் தவிப்பது பற்றி .

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியவர் ஒருவர் தீப்பெட்டி ஆபிஸ் அதிபர் .ரொம்ப கீழே ஏழையாய் இருந்து பின் பெரிய பணக்காரர் ஆனவர் . வயது அப்போது பதினைந்து வருடம் முன் எண்பத்திஒன்று . ரொம்ப ஆன்மீக தேடல் . நிறைய சுவாமியார்களை தேடியவர் . ஒரு சாமியாரிடம் கடைசியில் ஐக்கியமாகி அவரே தெய்வம் என சம்சார,வியாபார வாழ்வு வாழ்ந்தார் . எப்போதும் என்னிடம் ' விரைவில் நான் சந்நியாசம் வாங்க வேண்டும் . இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி .முடித்தவுடன் கிளம்பி விடுவேன் . நீங்க சொல்லுங்க . .. நான் எப்ப சந்நியாசி ஆவேன் ' என பார்க்கும் போது எல்லாம் ' நான் சந்நியாசி ஆகணும் ' என்ற திரும்ப திரும்ப சொல்வார் .

அப்போது அவர் மனைவி இறந்து விட்டார் ! இவர் வடநாடு போயிருந்தார் . அவசரமாக திரும்பினார் . அவர் வந்த வுடன் காட்டுக்கு பிணம் கிளம்பியது . அறுபது வருடம் அந்த அம்மாவோடு வாழ்ந்தவர் . சுடுகாட்டில் பிணத்தை எரிப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் . அந்த நேரத்தில் இவர் காட்டில் தன் தீப்பெட்டி ஆபிஸ் கணக்கு பிள்ளை யை கூப்பிட்டு " சேட்டு சரக்குக்கு பணம் எவ்வளவு அனுப்பினான் " என்றார் . ' ஏப்பா மெழுகு வந்திடிச்சா " என்றார் . மகனை கூப்பிட்டார் " சேட்டு லேபிளை மாத்த சொன்னான் . நான் முடியாதுன்னுட்டேன் . " " தீப்பட்டி ஆபிஸ் வேன் நான்கும் ஆர் டி ஒ ஆப்பிஸ் எப்ப ரெனியூவல் " மெக்கானிக் ரிப்பேர் வேலை பார்த்தாச்சா .'" ஏப்பா !கொத்தனார் காசி என்ன ரொம்ப காசு கேட்கிறான்"

மனைவி பிணம் எரியூட்டப்படும் போது கூட பல வியாபார, வீட்டு விஷயங்களை அலசி கொண்டிருந்தார் .

.....

சில நாள் கழித்து பஜாரில் ஒரு கடையில் என்னை பார்த்தார் ." சொல்லுங்க ! நான் எப்ப சந்நியாசம் வாங்கணும் . இன்னும் தொழில் ,வீட்டு விஷயம் சில முடித்துவிட்டால் நான் கிளம்பிடுவேன் ." என்றார் .

எனக்கு தி ஜானகிராமன் "மலர் மஞ்சம்" நாவலில் சொன்ன சிரகாரி கதை ஞாபகம் வந்தது . அதை என் பாணியில் சொன்னேன் .

" சிரகாரி ,சிரகாரி ன்னு ஒருத்தன் . அவன் பெண்டாட்டி அவனை கோபம் வரும் போது அடி வெளுத்து விடுவாள் . புருஷன் பொஞ்சாதி சண்டையில் புருஷனை உரித்து விடுவாள் .

இவன் வீட்டில் அடி வாங்கி வெளியே வந்து விழுந்து (தலையில் முடியில் நான்கைந்து ஈர்க்குச்சி) எழுந்து பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து " யோவ் ! உம்மகிட்ட சன்னாசம் எப்படி வாங்குறது ன்னு நூறு தடவை கேட்டுட்டேன் . என்னை இந்த சண்டாளி கொலை செய்யுறதுக்கு முன்ன சொல்லி தொலையும் .இல்லேன்னா கொலை பழி உம்மேலே தான் . என் பாவம் உம்மை சும்மா விடாது "

பக்கத்து வீட்டுக்காரன் பதிலே சொல்லாமல் " வீட்டுக்குள்ள போ " என சமாதானமாக சொல்வான் . அடிக்கடி இப்படி அவன் அடி வாங்கும்போதெல்லாம் " யோவ் சன்னாசம் எப்படி வாங்குறது சொல்லு " என்று பக்கத்து வீட்டுக்காரனிடம் புலம்புவான் .

ஒரு நாள் வீட்டுக்குள்ளிருந்து விளக்குமாறு அடி வாங்கி வெளியே வந்து விழுந்தவுடன் "யோவ் சன்னாசம் எப்படி வாங்குறது சொல்லுய்யா " என்றான் .

பக்கத்து வீட்டுக்காரன் எழுந்தான் . தான் கட்டியிருந்த நாலு முழ வேட்டியை கிழித்து கோமணமாக கட்டினான் . " இப்படி தாண்டா ! " என சொல்லி விட்டு அவன் விறு விறு என நடந்து விட்டான் . அவன் சந்நியாசி ஆகி கிளம்பி போயே விட்டான் !

இந்த சிரகாரி அடுத்த தடவை பொண்டாட்டி இடம் அடி வாங்கியவுடன் எதிர்த்த வீட்டுக்காரனிடம் கேட்க ஆரம்பித்து விட்டான் " யோவ் சன்னாசம் எப்படி வாங்குறது சொல்லுயா "

இந்த கதையை சொன்னவுடன் அங்கிருந்தவர்கள் எல்லாம் தீப்பெட்டி தொழில் அதிபரை பார்த்து சிரித்து விட்டார்கள் ! அவரும் சிரித்து விட்டார் .

நான் சொன்னேன் " நீங்க சந்நியாசி ஆகவே மாட்டிங்க ! நிறைய பேரை இன்னும் நீங்கள் சாமியாரா ஆக்க வேண்டியிருக்கு !"

சம்சாரியாகவே,வியாபாரியாகவே தான் இறந்தார் !”

நன்றியோடு இங்கிருந்து பகிர்ந்து கொள்ளப் பட்டது:

சாதுக்கள், சந்யாசிகளிடமிருந்து கிடைக்காத ஞானம், வேறு வகையிலும் கூடக் கிடைத்து விடும்.என்ன, நமக்கு அது வேண்டும் என்கிற ஆர்வம் கொஞ்சம் கொழுந்து விட்டு எரிய வேண்டும், அவ்வளவு தான்! இங்கே இதைச் சொல்வது கூட, முனைவர் நா.கண்ணன் சொன்ன ஒரு வார்த்தையை, மறுபடி மறுபடி எனக்கு நினைவு படுத்திக் கொள்வதற்காகத் தான்.

"நாம் வீசும் சொல் எங்கு போய் எப்படித்திரும்பும் என்று சொல்லவே முடியாது. நாம் ஏதோ சத்தோரி அடைந்துவிட்டது போல் எழுதுவோம். ஒரு சின்ன :-) குறிகூட தோன்றாது. சும்மா எழுதின 'ஏதோ', பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும். புயல், டொர்னேடோ இவைகளை ஆராயும் விஞ்ஞானிகளும் இதைத்தான் சொல்கிறார்கள். ஏதோ சின்ன தூசு எங்கோ, ஒரு சூபர் நோவாவிற்குக் கருவாக இருக்கும்.”

Add to Technorati Favorites

5 comments:

 1. முதல் 1-2 பத்திகள் ஏதும் புரியல்லை...தொடர்பு எங்கோ இருக்கு, தெரியல்லை, பரவாயில்லை...

  சன்யாசம் வாங்கும் கதை அருமை....வேற வெர்ஷன் ஒன்று முன்பு கேட்டிருக்கிறேன்....:-))


  ஆமாம், "சத்தோரி" அப்படின்னா என்ன சார்?

  ReplyDelete
 2. துறப்பது என்ற மன நிலை எளிதில் வருவதில்லை.ஒன்று., பற்று அத்தனையும் தானாகவே விட்டு விடும்போதுதான் துறவறம் மேற்கொள்ளுவது பலருக்கு இயலும். உலகத்திலே இன்பம் எனும் நினைக்கும்
  யாவற்றிலும் ஒரு வகையில் திகட்டிப்போன நிலையிலும் இவை போதும் என நினைக்கும்போதும், சிலர்
  சரி, இனி சன்னியாசி ஆவோம் என நினைக்கிறார்கள். சன்னியாசி ஆகவேண்டும் என நினைப்பதுமே
  ஒரு வகை ஆசைதான். சன்னியாசிகளுக்கு சமூகத்தில் கிடைக்கும் ஒரு வித அங்கீகாரமும் இதற்கான‌
  காரணங்களாக இருந்தால், சன்னியாசம் மேற்கொண்டவன் அவ்வறத்தில் தொடர்ந்த இருக்க இயலாது.

  பற்றுக பற்றற்றான் பற்றினை என்பார் வள்ளுவர். இந்த மன நிலை வரின் சன்னியாசம் மேற்கொள்தல்
  முடியலாம். இதற்கும் ஒரு மன உறுதி தேவை. அந்த உறுதியிலும் ஒரு நிலைத்து நிற்பதும் தேவை.

  இவை அல்லாது துறவறம் மேற்கொள்ளவேண்டும் என நினைப்பவர்கள், சொல்பவர்கள் எல்லாம்
  உங்கள் கதையில் காணப்பெற்ற நபரைப் போல்தான் .

  மிக அழகாக, தெளிவாக ஒரு உண்மையைப் புலப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  நிற்க. எனது வலைப்பதிவுக்கு வருகை தந்தமைக்கும் உரிய தகவலைத் தந்தமைக்கும் நன்றி.
  தகவலை உரிய முறையிலே கூடிய விரைவில் இணைத்துவிடுகிறேன்.

  உங்களைப் பற்றிய தகவல் முகவுரை படித்தேன். 1961ல் மதுரையில் வாழ்க்கையைத் துவங்கிய பல எனது
  நண்பர்கள் உங்கள் மன நிலையில் தான் இருக்கின்றனர்.

  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 3. வணக்கம் மௌலி சார்.

  முன்கதைச் சுருக்கத்திலேயே அதன் தொடர்பு இருக்கிறது.
  அலைச்சல், பயணம் இந்த இரண்டையும் ஆன்மீகத்தில் விளக்க வேண்டும் என்று எழுந்த விவாதம், அதைத் தொடர்ந்து எழுந்த சிந்தனைகள் என்று, முந்தைய பதிவும், இதுவுமாகத் தொடர்ந்தது.பட்டி மன்றம் மாதிரி இழுத்துக் கொண்டுபோன ஒரு விவாதத்திற்கு, திரு R P ராஜநாயகம் சார் வலைப் பதிவில், நெத்தியடியாக, தி.ஜானகிராமன் கதையில் வரும் சிரகாரி பாத்திரத்தை வைத்து, சன்னாசி ஆவது எப்படி கேள்விக்குப் பளீரென்று "இப்படித்தான்" என்று சொல்லுகிற தருணம், மிகப் பொருத்தமாக இருக்கவே, அந்தப் பதிவை அப்படியே இங்கு எடுத்துக் கொண்டேன்.
  அந்த விவாதக் களத்திலிருந்து விலகிக் கொண்டேன் பாருங்கள், அதுதான் 'சன்னாசம்'.
  satori என்கிற வார்த்தைக்கு, sudden enlightenment திடீர் என்று கிடைக்கிற ஞானம் ஜென் பௌத்தத்தில் கையாளப் படும் பெயர்ச் சொல்.
  ஆன்மீகத்தை, பட்டிமன்றம் நடத்தித் தேட முடியாது என்பதை எனக்குப் புரியவைத்தார்களே, அது தான் சதோரி!

  ReplyDelete
 4. வணக்கம், சுப்பு ரத்தினம் சார்,
  எப்படிப் பாடினரோ என்ற கவி யோகியாரது, கீர்த்தனத்தை அப்படியே உல்டா அடித்து, சாப்பாட்டு ருசியாக ஜீவா வெங்கட்ராமன் சார் பதிவில் ஒரு பின்னூட்டமாக எழுதியிருந்தீர்களே! அப்போதே உங்களைத் தொடர்பு கொள்ள எண்ணியிருந்தேன். இப்போது தான் நேரம் வந்திருக்கிறது.

  http://maraboorjc.blogspot.com/2006/03/blog-post.html

  இந்தப் பக்கங்களில் தேடினால், அங்கே அவர் வருந்துவதும், நானும் அவரோடு வருந்துவதும் புரியும்.

  ReplyDelete
 5. //satori என்கிற வார்த்தைக்கு, sudden enlightenment திடீர் என்று கிடைக்கிற ஞானம் ஜென் பௌத்தத்தில் கையாளப் படும் பெயர்ச் சொல்.//

  விளக்கத்துக்கு நன்றி சார்...

  //ஆன்மீகத்தை, பட்டிமன்றம் நடத்தித் தேட முடியாது என்பதை எனக்குப் புரியவைத்தார்களே, //

  ஹிஹிஹி....உண்மைதான் :)

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!