Ides of March - வரலாற்றில் இன்று !


வரலாற்றில் இன்று மார்ச் 15 - கி.மு.44

ரோமாபுரி சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசரை, அவனதுநண்பனும் நம்பிக்கைக்குரியவனுமாக இருந்த ப்ரூட்டஸ் படுகொலை செய்த நாள்.

"நீயுமா ப்ரூட்டஸ்?"

என்று நண்பனது துரோகத்தை நம்பமுடியாமல், கேட்டுக் கொண்டே இருக்கையில், செனேட் உறுப்பினர்கள் பலரும் சீசரைக் கத்தியால் குத்துவதை கவித்துவத்துடன் ஷேக்ஸ்பியர் வர்ணித்திருப்பதை, நம்மில் பலர் படித்திருக்கக் கூடும். ஷேக்ஸ்பியருடைய கவிதையில், ஒரு சர்வாதிகாரி கதாநாயகன் ஆனான். கல்லூரி நாட்களில்ஆங்கில விரிவுரையாளர்கள் உருகி உருகி ஷேக்ஸ்பியர் நாடகப் பாத்திரங்களின் வசனங்களைப் பாடம் நடத்தியது வாழ்க்கைக்கு எந்த விதத்தில் உதவியது என்று கேட்டால் ஒருவருக்கும் சொல்லத் தெரியாது.

போகட்டும்.

கண் போன போக்கிலே மனமும், மனம் போன போக்கில் கால்களும் போகும் போது, இப்படித்தான், நம்முடையது, நாம் மிகவும் நம்புவது என்றிருக்கிற புலன்கள் எல்லாம் ப்ரூடசாக மாறி நம்மைக் குத்திக் குதறுவதை, அதன் வலியை அனுபவிக்கும் போது கூட, நமக்கு புலன்வழி நுகர்வில் இருக்கிற சுகத்தை மறக்க முடிவதில்லை.

அடுத்தவன் வயலில் பச்சைப்புல்லை மேயப்போகிறமாடு--வயலுக்குச் சொந்தக்காரன் நீண்ட கழியால் மாட்டின் முகத்தில் ஓங்கி அடிக்கிறான். அடிவிழும் வேகத்திற்கு மாடு கொஞ்சம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். பச்சைப்புல்லின் வாசனை ஈர்க்க, அடிவிழுந்து வாய்க்கடையில் ரத்தம் வழிவதையும் மறந்து, மறுபடியும் புல்லை மேயப் போகும். பார்த்திருப்பீர்கள்தானே?

இது தான், நாம் நம்முடையது, நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிற புலன்கள், நம்மைப் பழக்கத்தின் அடிமையாகவே வைத்திருக்கச் செய்யும் துரோகம். ஆனால், நமக்கு அது தெரிவதே இல்லை.

தெரிந்தால் தானே, "நீயுமா ப்ரூட்டஸ்?" என்று அதிர்ச்சியோடு கேட்பதற்கு?!

சோதனைகள், கஷ்டங்கள், நோய்களென்று பல விதத்திலும் அடி விழுந்து கொண்டே தான் இருக்கிறது. மாட்டைத் துன்புறுத்தும் நோக்கத்தோடு, வயல்காரன் அதை அடிப்பதில்லை. அதுபோல, வரம்புமீறக் கூடாது என்பதைப் படிப்பிப்பதற்காகவே அந்த அனுபவம் நேரிடுகிறது.

தங்கத்தோடு சேருகிற அசுத்தத்தை, கலந்திருக்கிற அழுக்கை, மிகச் சிறிய அளவிலான நெருப்பிலேயே புடம் போட்டு எடுத்து விட முடியும். மிகக் குறைந்த சூட்டிலேயே அதை விரும்புகிறபடி ஆபரணமாகவோ, அழகுப் பொருளாகவோ மாற்றிவிட முடியும். அதுவே இரும்பாக இருந்தால், அதைத் தனியாகப் பிரித்தெடுப்பதற்கு எவ்வளவு கடுமையான வழிமுறைகள்? அதை ஒரு பொருளாக, தகடாகவோ, கம்பியாகவோ மாற்றுவதற்குப் பழுக்கக் காய்ச்சி, சம்மட்டியால் அடித்து நெளித்து, தண்ணீரில் முக்கி, மறுபடி காய்ச்சி, அடித்து....? எத்தனை வேலை?

தங்கமோ, இரும்போ, தனியாக அதன் இயல்பு நிலையில் இருக்கும் போது எந்த உபயோகமும் இல்லை. அதையே, உருக்கிச் செதுக்கி ஒரு பொருளாக மாற்றும் போது, அந்த வடிவத்திற்குமே ஒரு பயன் இருக்கிறது அல்லவா?

உயிரும் உணர்வுமற்ற ஜடப்பொருளே, ஒரு பயன் தரும் பொருளாக மாற முடியும் என்றால், பரிணாம வளர்ச்சியில், மனிதனாகப் பிறந்த நாமும் அப்படி மாற முடியும் அல்லவா?

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் அமுத வாக்கைக் கொஞ்சம் கவனிப்போமா?

The way is long and difficult for everybody; and to change the physical nature is a big job - but it has to be done. The only way to make it quicker is to keep an unshaken faith in the Divine and a great intensity in aspiration - the rest is done for you.”

  • The Mother

  • [p-167, White Roses, Sixth Edition, 1999]

Physical troubles always come as lessons to teach equality and to reveal what in us is pure and luminous enough to remain unaffected. It is in equality that one finds the remedy. An important point: equality does not mean indifference.”

  • The Mother

  • [CWMCE, 15:149]

எந்த நிலையில் இருந்தாலும்,

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிவகளைச் சரண் அடைகிறேன்.ஒவ்வொரு அனுபவத்திற்குள்ளும், நீயே என்னை வழிநடத்திச் செல்கிறாய்.நான், எனது என்று அறியாமையால், அகந்தையால் சொல்லப் பட்டாலும், நீயே இவனது உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்.

"எனது கேவலமான ஆசைகளின் படியல்ல- உனது தெய்வீகச் சித்தத்தின்படியே ஆகட்டும் "

இதுவே இவனுள் முழுமையாக வேண்டுகிற வரம். இன்றைய பிரார்த்தனையும் கூட.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!