Showing posts with label வால்பையன். Show all posts
Showing posts with label வால்பையன். Show all posts

வால் பையன் என்கிற பதிவர் அருண் ராஜ்!

இந்தப் பக்கங்களில் வால் பையன் என்று கொஞ்சம் தேடினீர்களானால் ஏகப்பட்ட பதிவுகள், அவரைத் தொட்டு அல்லது அவருடைய பதிவுகளுக்கு பதில் சொல்கிற மாதிரியானவை அல்லது அவருடைய சரவெடி மாதிரி அடுத்தடுத்த பின்னூட்டங்கள் என்றிருந்த  பழைய நாட்களின்   நினைவுகள் இருக்கும். அந்தநாட்களில் மதுரை வலைப்பதிவர்கள் சந்திப்பு நடந்த போது வால் பையனைச் சந்திப்பதற்காகவே ஒரு கூட்டத்துக்குப் போனேன் என்று சொல்வதில்  இந்த இளைஞன் எப்படியோ என்னுடைய அபிமானத்துக்கு உரியவராக மாறிப்போன அதிசயம் இருக்கிறது. இத்தனைக்கும் அவருடைய வாழ்க்கைமுறை, அனுபவம், கருத்துக்கள் இப்படி எல்லாவற்றிலும் என்னிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால், தமிழ்ப் பதிவுலகத்தின் செல்லப் பிள்ளையாகவும் இருந்தவர்!


நேற்றிரவு காலமானார் என்பதை முகநூலில் இன்று காலை பார்த்தபோது என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படி ஒரு தவிப்பு! பதிவர் உண்மைத் தமிழன் முகநூலில் இப்படி உருகி அஞ்சலிப்பதிவு எழுதி இருக்கிறார்.

ன்புத் தம்பி.. வால் பையன் என்னும் வாலு..
இந்தப் பூலோகத்தில் சூரியனுக்கு கீழே இருக்கும் அனைத்தும் விமர்சனத்துக்குட்பட்டதுதான் என்று சொல்லி அத்தனை சப்ஜெக்ட்டுகளையும் பேசுவான்.
நாத்திகம், ஆத்திகத்தில் இருந்து கேலக்ஸிவரையிலும் தம்பி தொடாத விஷயமே கிடையாது. அனைத்தும் மேம்போக்காக இல்லை.. முழுவதும் படித்துவிட்டுத்தான் எடுத்து இயம்பியிருக்கிறான்.
நான் வலைத்தளம் புகுந்த சமயத்தில் அசுரனின் வலைப்பூ பக்கத்தில் நாத்திகம், ஆத்திகம், திராவிடம், ஈழம் பற்றி விலாவாரியாக கமெண்ட்டுகள் மூலம் பரிமாறிக் கொண்ட விஷயமெல்லாம் இன்றைக்கு எத்தனை நூலகங்களுக்கு படையெடுத்து புத்தகங்களைத் தேடியெடுத்து படித்தால்கூட கிடைக்காது. அப்படியொரு அறிவுத் தேடலைக் கொடுத்தது..
அத்தனையையும் பேசிவிட்டு தன்னுடைய உடல் நலனில் அக்கறையில்லாமல் வழக்கம்போல மது என்னும் அரக்கனின் துணை கொண்டு போதையுலகத்தில் வாழ்ந்த தம்பி..
அந்தச் சனியனையும் விட்ட தருணத்தில் குடும்பப் பிரச்சினை தலை தூக்கி தம்பியை முடக்கிப் போட.. அதையும் எதிர் நீச்சல் அடித்து எழுந்து வந்து "அண்ணே வந்துட்டண்ணே,,," என்ற குரலைக் கேட்டபோது மனதுக்கு அப்படியொரு சந்தோஷத்தைக் கொடுத்தது.
அவனது குழந்தைகள் பற்றி தினமும் அவன் போடும் அப்டேட்டுகள் அவனது சந்தோஷ வாழ்க்கையைச் சொல்லிக் கொண்டேயிருந்தது. அதுவும் பொறுக்கவில்லை அவன் நம்பிய இயற்கைக்கு..
இரண்டு நாட்களுக்கு முன்பாக "மீண்டும் பேச்சு வந்துவிட்டது.. இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக வந்துவிடும்" என்றவனை இன்றைக்கு மாரடைப்பு என்ற எமன் வந்து அழைத்துச் சென்றுவிட்டானாம்..
இதற்குத்தான் அதிசயமாக இன்று காலை சீக்கிரமாக எழ வேண்டிய கட்டாயமா எனக்கு.. முகநூலைத் திறந்தவுடன் முதல் செய்தியே இந்தக் கொடுமைதான்..!
"இறந்தவர்களெல்லாம் பாக்கியவான்கள்" என்று பல முறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அது நடக்கும்போது மனம் கேட்க மறுக்கிறது. அவனது பிள்ளைகளை நினைக்கும்போது இயற்கையை ஏசத்தான் நினைக்கிறது மனம்.
தமிழ் வலையுலகம் மிகச் சிறப்பான ஒரு வலைப் பதிவரை இன்று இழந்திருக்கிறது. நாத்திக உலகம் மிகச் சிறப்பான ஒரு பரப்புரையாளரை இழந்துவிட்டது.. அறிவுத் தேடலில் ஒரு விரிவான விரிவுரையாளரை என் போன்ற மக்குகளும் இழந்துவிட்டோம்.
போய் வாடா தம்பி.. மீண்டும் உன் வீட்டில் நீயே வந்து பிறப்பாய்.. இப்போதைக்கு இளைப்பாறு..!
#ArunRaj #VaalPaiyan #Vaalu

என் செல்லப்பிள்ளையாகவும்  இருந்த இந்த இளைஞனுக்கு என்ன சொல்லி வழியனுப்புவது?
...................................... 
      

மொட்டைத்தலைக்கும் வால்பையனுக்கும் என்ன முடிச்சு?

ஒரு திரைப்படம் காங்கிரஸ் கட்சியை என்ன பாடு படுத்தி இருக்கிறது என்பதை இந்த ட்ரெயிலர் பார்த்த பிறகுதான் புரிந்தது. இந்திராவைப் பற்றிப் படம் எடுத்தாலும் மிரள்கிறார்கள். நரேந்திரமோடி குறித்து படமெடுத்தாலும் பொருமித் தடை கேட்கிறார்கள்! படிப்பு வாசனையற்ற சோனியா G பிரதாபங்களைப் பற்றி முன்னே இந்தப் பக்கங்களில் எழுதியது இது!   காங்கிரசை இப்போது ஒரு சிவப்புச் சேலையும் சேர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது!   நட்வர் சிங் சுயசரிதை எழுதப்போகிறார் என்றவுடனே, அவரை சமாதானம் செய்ய சோனியாவும் பிரியங்காவும் அவரது வீட்டுக்கே போய் சமாதானம் பேசிய கதையும் இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே பேசப்பட்ட விஷயம்தான்!


இந்த ட்ரெய்லரிலோ அல்லது முழுப்படத்திலோ அப்படி காங்கிரஸ் அஞ்சுகிற அளவுக்கு என்ன இருக்கிறது? இதே கேள்வியைத்தான் அடுத்தவீடு! கேரளா தெலங்கானா ஆந்திரா! பதிவிலும் கூட லட்சுமியின் NTR திரைப்படத்தை ஆந்திராவில் திரையிட விடாமல் உள்ளடி வேலைகள் செய்ததைத் தொட்டு நேற்று எழுதி இருந்தேன்! இந்தப் புள்ளிகள்தான் நேற்றைய நாட்களில் கருத்துசுதந்திரம் பறிபோச்சு,  விருதுகளைத் திருப்பிக்  கொடுப்பது என்றெல்லாம் முழங்கினார்கள் என்பதும் ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

லயோலான்னு தானே சொன்னான்! லோலாயி ஆக்கிப்புட்டாங்களே! இப்படிப் பதிவெழுதிய நேரமோ? லயோலா கல்லூரி கருத்துக் கணிப்புக்கும் கல்லூரிக்கும் தொடர்பில்லை என்று மறுப்பறிக்கை வெளியிட்டிருக்கிறது. மாட்டிக்கொண்டால் மறுப்பு வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிற லயோலா மெய்யாலுமே லோலாயி தான்!

     


இப்போதெல்லாம் ஒரு இருபது வருடம் பிராக்டிஸ் செய்யும் எந்த டாக்டரும் (அதுவும் கணவன் மனைவி இருவருமே டாக்டர்களாக..) குறைந்தது நான்கு கார், மூன்று வீடுகள், பெரும் பந்தா இல்லாமல் பார்க்க முடியுமா..?
ஆனால், டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், மிகச் சாதாரணமாக வாழ்பவர் என்றும், எல்லோருடனும் சகஜமாக பழுகுவதாகவும், யார் வேண்டுமானாலும் அவர் வீடடிற்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் பார்த்துப் பேசலாம் எனும் அளவிற்கு சிம்பிளானவர் என்றும் கேள்விப்பட்டேன்.
நியூஸில் ஒரு வீடியோ பார்த்தேன் :
தூத்துக்குடியின் ஒரு மார்க்கெட்டில், டாக்டர் தமிழிசை எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் காய்கறிகள் வாங்கி, கவனமாக தான் சுருட்டி வைத்திருந்த 100 ரூபாய் நோட்டைத் தருகிறார்..!
ஏனோ அந்தக் காட்சி, நான் டாக்டர் தமிழிசையைப் பற்றிக் கேள்விப்பட்டது உண்மைதான் என்று நினைக்க வைத்தது..!
^^^^^
நிற்க,
மேல் சொன்ன அந்த வீடியோவை ஒளிபரப்பி, சன் டிவி செய்தி சொன்னது என்ன தெரியுமா..? 
"தூத்துக்குடி மார்க்கெட் ஏரியாவில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த டாக்டர்.தமிழிசை, அங்கே கட்சிக் காரர்களே யாரும் வரவில்லை என்பதால், மனம் நொந்து போய், மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கி, பொழுதைப் போக்கினார்!"
30000 கோடி மதிப்பான சன் டிவி கார்ப்பரேட் ஓனர் தயாநிதி மாறனை கட்சிக்காரனே சுலபத்தில் பார்த்து விட முடியாது.! ஆகாய பந்தா..! தமிழ்நாட்டை உருப்படாமல் அடித்ததில் முக்கால்வாசி சன் டிவி செய்தது.

திமுக, ஏழைகளுக்கான கட்சி என்று நம்புபவன், ஏழையல்ல, முட்டாள்! என்று முகநூலில் ஆணித்தரமாகச் சொல்கிறார் சங்கர் ராஜரத்தினம். 


சற்றுமுன் இந்த வீடியோவைப் பார்த்தேன்! ஒன்றிணைந்த Bank of  Baroda  ஸ்டேட் வங்கி, HDFC வங்கி இவைகளுக்கு அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக உருவெடுத்திருக்கிறது.    

 


பேங்க் ஆப் பரோடாவுடன் விஜயா வங்கியும் தேனா வங்கியும் ஏப்ரல் முதல் தேதிமுதல்  இணைந்து ஒரே வங்கியாக, Bank of  Baroda என்றபெயரில் இயங்க ஆரம்பித்திருப்பதை வங்கி ஊழியர்கள் கூட, கடமைக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பிவிட்டு ஓய்ந்து விட்டார்கள். ஆனால் வால்பையன் அருண் மட்டும் இதை  என்னவோ 2014 இன் பொருளாதார சீரழிவுக்கு முன்னோட்டம் என்று, சம்பந்தமே இல்லாத BSNL layoff proposal உடன் முடிச்சுப்போட்டு எழுதிக் கொண்டிருக்கிறார். யாராவது அவரிடம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதன் ஊழியர்களாலேயே, தொழிற்சங்கத்தினராலேயே சீரழிக்கப்பட்ட கதையைச் சொல்லி, அதே கதை தொடர வேண்டுமென்கிறாரா என்று கேளுங்களேன்!


       

நான் பேச நினைப்பதெல்லாம்........!


வால்பையனோட படம்! கருத்து தளத்துல இருந்து சுட்டது!

தேடுபொறிகள், வாசகர்களைக் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டுவந்து உங்களுடைய பக்கங்களுக்குக் கொண்டுவர வேண்டுமானால்,


காமம், காதல், கடவுள், நாத்திகம், பெரியார்,நம்புகிறவன் முட்டாள், கவிதை, கவுஜை, எதிர் கவுஜ, கானா பாட்டு, ஈழம், பொழுதுபோக்கு நாத்திகம், நமீதா, நயன்தாரா, பிரபுதேவா, ரஜினிகாந்த்,குஷ்பூ, சீமான், போலி டோண்டு, பிரபலப் பதிவர், நடேசன் பூங்கா, பதிவர் வட்டம்,மொக்கை, மொட்டைமாடி, மொட்டை மாடிக் கூட்டம், கிழக்கு, இம்சை, பா.ராகவன், சாரு நிவேதிதா, ஜெய மோகன், லக்கிலூக்,செக்ஸ் சாமியார், புதுசு கண்ணா புதுசு, குச்சிக்காரி..........................



மேலே குறிப்பிட்ட வார்த்தைகளில் எது ஒன்றை எடுத்துக் கொண்டு பதிவு எழுதினாலும், ஹிட்ஸ் குவிவது நிச்சயம்!நீங்கள் எழுதியதற்காக இல்லை! அப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளாதீர்கள்! பின்னூட்டத்தில் கும்முவதற்காகவே, இங்கே என்னை மாதிரி நிறையப்பேர் இருக்கிறோம்! ஒரு எல்லைக்கு மேல் படிப்பவர்கள் ரத்தக் கொதிப்பு அளவு எகிறுவதும் சர்வ நிச்சயம்!


இந்த வார்த்தைகள் பட்டியலில் இன்னும் ஒன்றைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்!

வால்பையன்!


நம்ம வால்ஸ் சிறுகதைப் பட்டறைக்குப் போன ஞாயிற்றுக்கிழமை சென்னைக்குப் போய்விட்டு வந்தார். யுத்தம் சரணம் கச்சாமி, சுகம் ப்ரம்மாஸ்மி இப்படி என்னவோ அந்த நேரத்தில் தோன்றுகிற வார்த்தைகளை வைத்துக் கொண்டே, பதிவுகள், புத்தகங்கள் எழுதிக் குவிக்கிற பா.ராகவன் கூட இவருடைய வம்புத்தனமான பின்னூட்டங்களைப் பார்த்துக் கொஞ்ச அதிகமாகவே மிரண்டு போனார் போல இருக்கிறது!

பால் வடியும் முகத்தோட படத்துல பச்சப்புள்ள மாதிரி இருக்கற இவரா வால்ஸ்?
நம்ப முடியலையே என்று நினைப்பவர்களுக்காக, மேலே ஆரம்பத்தில் கருத்து தளத்தில் இருந்து சுட்ட படம்.  

சிறுகதை எழுதுவது எப்படி என்பதை, அதைப் பத்திரிகைகளில் படித்துப்பார்க்கிற உதவி ஆசிரியரின் கண்ணோட்டத்தில் இருந்துபேசிவிட்டு வந்த அனுபவத்தைத் தன் பதிவில் எழுதும் போது, வம்புப்பின்னூட்டங்களில் மிரண்டு போய், இவரிடம் தான் எவ்வளவு விஷயம் இருக்கிறது அன்று ஆச்சரியப்பட்டுப்போய் [அல்லது அரண்டுபோய்?] எழுதி இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!


சரி, வால்ஸ் சிறுகதைப் பட்டறைக்குப் போய் வந்தார், ஏதோ ஒரு சிறுகதை அல்லது வெறும் கதையாவது எழுவார் என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள் வெறும் பச்சைப்புள்ளை, ரத்தம் கொப்பளிக்கிற யுத்த பூமியாக இருக்கும் சூடான தமிழ் வலைப்பதிவுகள் பக்கம் வந்தறியாதவர் என்றும், அப்படியே அபீட்டாயிக்கறது தான் நல்லதுன்னும் அர்த்தம்!


அதையும் மீறி வந்தவர்கள் என்றால், என்னை மாதிரி வால்பையன் ரசிகர் மன்றம், அல்லது வால்பையன் நற்பணி இயக்கத்து ஆளாகத் தான் இருக்க வேண்டும்! அட, மெய்யாலுமேங்க!

நற்பணி மன்றத்துக்காரங்க எல்லாரும் கூடி, சீக்கிரமே ஒரு நற்பணி ஆரம்பிக்கப் போறோங்க!




ஐம்பத்தைந்தே வரி, எட்டுப்பத்தியாகப் பிரித்து, நடுவில் சும்மா உள உளாக்காட்டிக்கு இரண்டு படம். தலைப்பு வைப்பதிலும் திறமையான தில்லாலங்கடி வேலையைக் காட்டி இருக்கிறார்! சென்ற பதினாறாம் தேதி போட்ட பதிவு. எப்பவும் போல, பட்டாசுச் சரத்தைக் கொளுத்திப் போட்டுவிட்டு, ஓரத்தில நின்னு வேடிக்கை பார்க்கிற வால்பையன், ஒன்னு ரெண்டு பின்னூட்டங்களில் கொஞ்சம் வீராவேசமாகப் பதில் எழுதியிருக்கிறார்.


பார்பனீயத்தின் புதிய தில்லாலங்கடி ! இது தான் தலைப்பு. இது வரைக்கும் நானூற்றுச் சொச்சம் பின்னூட்டங்கள்! ஏற்கெனெவே வால்பையனுடைய ஒரு பதிவில் டம்பி மேவீ ஏதோ பின்னூட்டமிடப்போக, ஈஸ்வரி ஆத்தா 'போடா லூசு' என்று அருள் வாக்குச் சொன்னதில், மனிதர் ரொம்பவுமே எச்சரிக்கையாக, "என் கருத்தை சொல்லி மீண்டும் ஒரு முறை "போடா லூசு" என்று பட்டம் வாங்க நான் தயாராக இல்லை........" என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.


அவர் பதிவு போட்டார். பின்னூட்டக் கும்மிகள் குவிந்தன, சரி இங்கே என்ன சொல்ல வருகிறாய் என்று தானேகேட்கிறீர்கள்?


இங்கே தான், எந்த ஒரு விஷயத்துக்கும் நேரெதிரான இரட்டைத் தன்மை இருக்கிறது என்று, இந்தப்பக்கங்களின் அடிநாதமாக இருக்கும் கருத்தை, மறுபடி உண்மையென நிரூபிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.


"கடளையே நம்பளையாமாம், வேதத்தை என்னாத்துக்கு நம்புறோம்!,

ஏன் எல்லா கடவுளுக்கு ரூல்ஸ் & ரெகுலேஷன் இருக்கு?

அது இல்லாம இருந்தா அது கடவுள் இல்லையா?

என்ன கொடும சார் இது!? “



பின்னூட்டத்திலும் வந்து நம்ம வால்ஸ் கொளுத்திப்போட்ட சரவெடி இது!


கொஞ்சம் கூட அசராமல், அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் வார்த்தைகளை உருவி எடுத்து. பின்னூட்டச் சரவெடிகளாக வால்பையன்வெடிப்பதைப் பார்த்து நம்ம ஜெய் ஹிந்துபுரத்துக்காரர் பீர், தனியாகவே ஒரு பதிவு போட்டார் "யானைக்கு மதம் பிடிக்கும், வாலுக்கு?" ரொம்பப் பொறுமையாக, இஸ்லாம் மார்கத்தை வால்பையனுக்கு எப்படியாவது புரியும்படி சொல்லியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதினமாதிரி இருந்தது. ஜெய்ஹிந்துபுரத்துக்காரருக்குச் சொன்னேன்:


'வாலுக்கு'பிரத்யேகமான பதிவு என்றாலும், சில விஷயங்கள் பொதுவாகச் சொல்லவேண்டித்தான் இருக்கிறது!


யானைக்கு மதம் பிடிக்கும்! ரொம்ப சரி, அதை விட மனிதனுக்கு 'மதம்' பிடித்துப்போய் விடும் நிலை இருக்கிறதே, அது அதைவிட மோசமானது!


அதைக் கண்டிக்கிறோம் என்று உண்மையிலேயே சீர்திருத்தங்களில் ஆர்வம் இருந்த சில பேர் வந்தார்கள்!அப்புறம் அது நிறையப் பேருக்குப் பொழுதுபோக்காகி விட்டது!


இங்கே பலரும் பேசுகிற நாத்திகம், பொழுதுபோக்கும் நாத்திகம் தான்!அவர்களுக்கு, விடைகளில், ஏன் எப்படி எதனால் என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ளும் பொறுமையும் இல்லை!


அதனால், யானைக்கு மதம் பிடிக்கும்! அப்புறம் வாலுக்கு என்ன பிடிக்கும் என்றால், 'லொள்ளு' தான்! அதுதான் சரியான விடையாகவும் இருக்கும்:-)).


ஒரு படத்தில் வடிவேலு, உளறிக் கொட்டி விட்டு,"அப்ப நானாத்தான் உளறி மாட்டிக்கிட்டனா?" என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொள்வது போல, பொழுதுபோக்கு நாத்திகம் பேசுகிறவர்களுக்கு, 'அவல்' எங்கிருந்து கிடைக்கிறதாம்?


மதங்களை உயர்த்திப் பிடிக்கிறேனென்று தாங்கிப்பிடிப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் வார்த்தையில் இருந்தே தான் கிடைக்கிறது!


ஆமாம், எனக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது!



"The defenders of the truth are often worse than the enemies of the truth."



இந்தப்பதிவிலும் பின்னூட்டங்கள் ஒரு சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலு, விவாதம் முடிந்த பாடில்லை, யாரும் புதிதாக எதையும் தெரிந்துகொண்டதாகவும் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், இப்படிப்பட்ட விவாதங்கள் ஒருபோதும் முடிவுக்கு வருவது இல்லை.


சீசன் ஒண்ணு, சீசன் ரெண்டு, சீசன் மூணுன்னு வளந்துகிட்டேபோகும்!


இது ஒருபக்கம் நடந்துட்டேயிருக்கும் அதே சமயம், இன்னொரு பக்கத்துல, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்துல கொஞ்சம் சுவாரசியமான விவாதம், ஏற்கெனெவே ரெண்டு மூணு வாட்டி சொல்லியிருக்கேன், "எது பக்தி" இந்தக் கேள்விக்கு விடைதேடும் விதமாக, ஒரு இழையில் விவாதம் நடந்துட்டிருக்கு!



அங்கே எல்லாமே சைவம் தான்! ரத்தம் சிந்துற, குடிக்குற வேலையெல்லாம் கெடையாது!


ரெகா என்கிற திரு கார்த்திகேசு, ஒரு மலேசியத் தமிழ் எழுத்தாளர், போனமாசம் கலைமகள் மாத இதழில் கூட இவரோட நேர்காணல் வந்திருக்கு, அப்புறம் மோகனத் தமிழ் பேசும் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ரெண்டுபேரும் இழையில்  விவாதத்தை இப்படி நடத்துகிறார்கள்-வால்பையன் ரவுசு கட்டுற நாத்திகத்துலேயோ, நம்ம பீர், அவரோட நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கிறதுலேயோ காண முடியாத ஒரு விஷயம், கிட்டத்தட்ட, இதுதான் விஷயம்னு பிடிபடற அளவுக்கு இங்கே நடக்குது! படிச்சுப் பாருங்க!


"அரங்கனாரே!


நானும் ரவுசு (இதன் மூலம் செங்கிருதமா?) பிடித்தவன்தான்!தெரிந்த விஷயம்தானே!


பக்தி பற்றிப் பேசும் உங்கள் திறந்த மனப்பன்மை எனக்குப் பிடிக்கிறது. பக்தி என்பதை விரல் சுட்டிச் சொல்லிவிட முடியாது என்பது போல்தான் தொனிக்கிறீர்கள். அதுதான் யதார்த்தம் எனப்படுகிறது.


ஆனால் இப்படியே பேசிக்கொண்டே போய், ஒரு கட்டத்தில்,இப்ப்டியெல்லாம் பேசுவதில் பிரயோஜனமில்லை. "பகவத்கீதையில் கண்ணன் ஏற்கனவே சொல்லியிருக்கிறான்"


அல்லது "ஆழ்வார்கள் அப்போதே சொல்லிவிட்டார்கள்" என்று சிவப்பு நாடா கட்டி இந்தக் கோப்பை மூடிவிடுவீர்கள் என்றஅச்சம் எனக்கு இருக்கிறது.


ஏற்கனவே நமது ஆன்மீகப் பாரம்பரியத்துக்குள் எல்லாம் சொல்லப்பட்டுவிட்டது; வேறு இடத்தில் தேடுவானேன் என வாய் அடைக்கப் பட்டிருக்கிறேன்.


எனினும் இந்த விசாரணைப் பாட்டை, அதில் காணுகின்ற தத்துவ நுணுக்கங்கள், மேற்கோள்கள், மனம், மூளை (அந்தர், பஹிர்-உள்ளே, வெளியே) பற்றிய அலசல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கின்றன. நீங்கள் சொல்லும் விதம் மிக அழகு. ஆகவேதான் விடாமல் படிக்கிறேன்.


நான் பயணி.பயணத்தின் இறுதி அடைவு பற்றி எனக்கு அவ்வளவாக அக்கறையில்லை (நம்பிக்கையும் இல்லை). ஆனால் உங்களோடு பயணம் செய்வது சுகானுபவம்,. அறிவைக் கிளறும் அனுபவமும் கூட.


என்னுடைய இரண்டு தம்பிடி ரவுசு இதோடு முடிகிறது.


ரெ.கா.


"வாருங்கள் திரு ரெ கா! இந்த அச்சமே உங்களுக்குத் தேவையில்லை.ஏனெனில் நான் எழுதுவது ஓர் இலக்கிய உத்தி என்ற முறையில் இல்லை. அதுவுமின்றி என்றுமே வெறும் நம்பிக்கையின் கட்சியை எள்ளளவும் மதிக்காதவன் நான்.


இனியும் மதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் எனக்குப் படவில்லை. எனக்கு உள்ளூற மயக்கம் என்பது அரிஸ்டாட்டிலின் கருத்துலகத்தில். பக்தி என்பதும், கடவுள் என்பதும் மிக ஆழமான கருத்து,அனுபவ உலகம் என்பது விடாமல் தோன்றிக் கொண்டிருக்கும் ஐயம்.



பக்தி என்பது எப்படிப் பெரும் அறிவுக்கான உழைப்பை உள்வாங்கத் தக்கதாய் இருக்கிறது எனப்படுகிறதோ அதைப்போலவேதான் அறிவின் பாற்பட்ட மூட நம்பிக்கைகளும் அறிவு போன்ற தோற்றம் கொண்டு சென்றவை வேஷம் கலைகின்றன.


எது எப்பொழுது நடக்கிறது என்பதுதான் நிச்சயம் இல்லாமல் இருக்கிறது.


மற்றபடி எப்படி முடிப்பது, அல்லது எங்கு கொண்டுபோவது, அல்லது முடிவு என்று ஒன்று இயலுமா, அல்லது இப்படி விசாரத்திலேயே இருப்பதுதான் என்தலைவிதியா? எதுவும் எனக்குப் புரிபடவில்லை. 'அறிதொறும் அறியாமை கண்டு, அற்று, ஆல்!' என்ற அர்த்தம் மட்டும் நன்கு புரிகிறது.



வர வர எழுத்தைக்கண்டே பயமாய் இருக்கிறது. மிகவும் தெரிந்துதான் ஒன்றை எழுதுகிறோம். ஜாக்கிரதையாக நன்கு கவனித்துத்தான் ஒரு கருத்தைக் கூறுகிறோம். ஆனால் எழுதி முடித்து அச்சாகி வந்து ஓர் உலா போனபின்பு அதே விஷயத்தில் புதிதாக ஒரு கதவு திறக்கிறது.


அப்பொழுது எழுதியது தவறா? இல்லை, பின் இந்தக் கதவு தெரியாமல் அதை எப்படி எழுதியது முழுமையாகும்? பின் தெரிந்து எழுதாமல், தெரியாமலேயே எழுதித் தொலைத்தோமா?



ஒரு நிலையில் நாம்தான் எழுதுகிறோமா அல்லது அவைதான் நம்மை வைத்து எழுதிக் கொள்கின்றனவா? இந்தப் புதிர் நிலத்தில் கால் வைத்தபடிதான் நான்
எதையுமே சிந்திக்கவோ எழுதவோ வேண்டியிருக்கிறது.


இதைவிட சுத்த அறியாமை நிலை சுகமாக இருந்தது."



--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


இருக்கிறது என்று சொல்பவரும், ஒரு எல்லைக்கு உட்படுத்தித் தான் சொல்ல வருகிறார்.

இல்லை என்று மறுப்பவரும் அந்த எல்லையை மறுப்பதில் மட்டுமே தனிக்கவனம் செலுத்துகிறார். ஆக, கடவுள் உண்டா, இல்லையா என்ற கேள்வி இங்கே ஒருவருக்கு ஒருவர் செய்துகொள்ளும் வரையறைகளை நிராகரிப்பது, மாற்றியமைப்பது என்ற அளவில் மட்டுமே நடந்து கொண்டிருப்பது தெளிவாகப் புலனாகிறது, இல்லையா?


விஷயம் என்னதென்று விளங்கிக்கொள்ளாமலேயே விவாதம் மட்டும் நடத்திக் கொண்டிருக்கிறோம்!


அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது!



இது சித்தர்கள் ஞான மரபு. இதே மாதிரி, இன்னொருத்தரும் கிட்டத்தட்ட இதே மாதிரி உருவகத்தில் சொன்னது நினைவு வருகிறதா?



But do not think that the drop alone becomes the ocean.


The ocean, too, becomes the drop.

சிறுதுளி மட்டுமே கடலாக ஆகிவிடும் என்றெண்ணாதே!
பெருங்கடலும் சிறுதுளியாய் ஆவதைப் பார்!



-ரூமி



கடவுளுக்கு ஏன் இத்தனை விரோதிகள்?


பட உதவி-ஆஸ்திரேலியாவில் இருந்து திருமதி மைகென் ஜான்சன், யாகூ! 360 இலிருந்து தொடரும் சொந்தம்!தமிழ் தெரியாது என்றாலும், தொடர்பு விட்டுப் போகக் கூடாதே என்று பின்தொடர்ந்து வரும் நல்ல உள்ளத்துக்கு நன்றியுடன்.

நம்ம
வால்ஸ் தொடர்ந்து ஆன்மீகப் பயணம், ஆன்மீகப் பயணத்தோட எதிர்வினை பாகம் ஒண்ணு -ரெண்டுன்னு ரொம்பவுமே தொடர்வெடியாகச் சரவெடி ரவுசு கட்டிட்டிருக்காருன்றது தமிழ்ப் பதிவுலகத்துல லேட்டஸ்ட் நியூசு.

Blogger வால்பையன் said...

//நீங்க கடவுள் இல்லைனு எப்படி முடிவுக்கு வந்தீங்கன்னு தெரிஞ்சா, நானும் ரெண்டு கேள்விகள் கேட்டு ஜோதியில் ஐக்கியம் ஆகிக்குவேன்.//

எதற்கு கடவுள், ஏன் நான் கடவுளை கும்பிடனும் என்ற கேள்விக்கு இதுவரை யாரும் சரியான பதில் சொல்லாததாலும், இதுவரை நடந்த உலக நிகழ்வுகளுக்கு எள்லலவும் கடவுளின் தேவையோ, பங்கோ இல்லாததாலும் கடவுள் இல்லை என்ற மனநிலைக்கு நான் வருகிறேன்!

August 19, 2009 7:21 PM

வழக்கம் போலவே தனக்கு சௌகரியமான சில கேள்விகளை மட்டும் எடுத்துப் போட்டு,கலக்கிக்கிட்டே இருக்காரு! சரி இன்னம் ஒரு நூறு பதிவு கூட எழுதிக் கலக்குவாருன்னு பாத்தாக் கொஞ்சம் சுருதி கொறைஞ்ச மாதிரித் தெரிஞ்சது.

என்ன காரணம்னு நமக்குத் தெரிஞ்சதை வச்சுத் தானே தேடியாகணும்? நானும் அப்படித் தான், நேத்து சாயந்திரம், ஸ்ரீ அன்னை உரையாடல் என்ற சிறு புத்தகத்தை படிச்சிட்டிருந்தப்போ, நம்ம வால்பையனுக்காகவே பேசி வச்ச மாதிரி ஒரு உரையாடல் இருந்தது! நாமும் கொஞ்சம் தெரிஞ்சுப்போமேன்னு படிச்சேன், அது உங்களுக்காகவும்....!
** ** ** ** ** **

"கடவுளைப் பகைத்துக் கொண்டேயிருப்பது, நிந்திப்பது, விரோதம் பாராட்டுவது எதனால்?எதன்பொருட்டு, கடவுளுக்கு ஏன் இத்தனை விரோதிகள்?"
இப்படி ஒரு கேள்வியை அடியவர் ஒருவர் ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் மிகுந்த இங்க கேட்டார். அன்னை பதில் சொல்கிறார்:

"உன்னுடைய கேள்வியை விட எனக்கு இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!என்ன காரணத்தினால், பெரும்பாலான மக்கள் அறியாமையிலேயே இருந்து விடுகின்றனர்? நீ சொல்கிற குறை, அறியாமையின் வெகு இயல்பான விளைவு. அறியாமையிலேயே, இருட்டிலேயே இருந்துவிடுகிறோம் என்று இருந்துவிடுவதே கடவுளை விரோதித்துக் கொள்கிற செயலாகும்."

"அன்னையே! கடவுளின் விரோதி என்றால் என்ன? எதை விரோதிப்பது?"

"இது அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது. கடவுள் என்று எதை நமக்குள் உருவகப் படுத்துகிறோமோ, அதனுடன் எப்படிப் பட்ட உறவை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பதே நாம் பக்தனா அல்லது பகைவனா என்பதைக் காட்டும்.

அதனால் தான் கடவுளை வெறுப்பவர்களைக் கூட நாம் பரம பக்தர்களாகக் கருதி வந்திருக்கிறோம். மனதின் ஆழத்தில் கடவுள் உண்டு என்ற நிச்சயம் இருப்பதாலேயே, இப்படிப்பட்டவர்கள், கடவுளை இல்லவே இல்லையென்றோ, வெறுத்துப் பகைமை பாராட்டவோ முடிகிறது.......இவர்களால் வேறென்ன செய்ய முடியும்?!

இந்தியாவில், புராணக் கதைகளிலும், சரித்திரக் கதைகளிலும் கடவுளின் அண்மையில் செல்வதற்கு, கடவுளுக்கு விரோதியாய் இருக்கும் பாதையையே நாடித் தவம் இருந்தனர் என்றும் பார்க்கிறோம். பக்தி செய்து கடவுளை அடைவதை விட, சண்டை போட்டு விரோதியாய் இருப்பதே, கடவுளிடம் வெகு விரைவில் கொண்டு சேர்க்கும் என்பது இவர்கள் நம்பிக்கை. கடவுள் உண்டா, இல்லையா என்பதைப் பற்றிக் கொஞ்சமும் நினைக்காமல் இருப்பவனை விட, கடவுளை மறுப்பதோ அல்லது வெறுக்கவோ செய்கிற ஒருவன் கடவுளுக்கு எவ்வளவோ பக்கத்தில் இருக்கிறான்!

கடவுள் இல்லை, இல்லவே இல்லை, இதெல்லாம் மனிதனுடைய கற்பனை மட்டுமே என்று ஒருவன் உரக்கச் சொல்லிக் கொண்டே இருக்கிறான். இதன் பொருள் என்ன? இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பவன் இதைப் பற்றி எத்தனையோ தடவை யோசித்திருக்கிறான். மனதின் அடிஆழத்தில் ஏதோ ஒன்று இதைப்பற்றியே விட்டுவிடாமல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. ஆகக் கடவுளை விரோதிப்பவன், கடவுள் என்றொரு மாயை என வெளியே சொல்லிக் கொண்டிருந்தாலும், மாயையோடு, அதாவது இல்லாத ஒன்றோடு சண்டைபோடுபவன் அல்ல என்பதும் மறுக்க முடியாத உண்மை..

கடைசியாகப் பார்க்கப்போனால், கடவுளை ஒரு விரோதியாகப் பார்ப்பதில் கூட ஒரு உண்மை இருப்பதாகவே தெரிகிறது. இஷ்ட சத்ரு என்று, என்னுடைய பிரியமான எதிரியே என்றெல்லாம் அழைப்பதில்லையா? இப்படிக் கூப்பிடுவதில் ஒரேயடியாக உண்மையே இல்லை என்று சொல்ல முடியாது. பிரியமாக இருப்பதை விட, ஒருவேளை வெறுப்போடு இருப்பது அன்யோன்யமாக, நீ இல்லாமல் நானில்லை என்று கூட ஆகலாம்!

இல்லாத, நமக்குத் தெரியாத ஒன்றோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால், நாம் எதை வெறுக்கிறோமோ, சண்டைக்குக் கூப்பிடுகிறோமோ, அதனுடன் நமக்கு நெருங்கிய தொடர்பு நம்முடைய விரோதத்திலேயே, வெறுப்பதிலேயே உண்டாகி விடுகிறது! இப்படிச் சொல்வதால், நான் வன்மத்தை, வெறுப்பை, நல்லதென்று சொல்வதாக நினைக்க வேண்டாம்.வன்மம், வெறுப்பால் மந்தமாகிப் போனவனுடைய பார்வையில் நேசத்தைக் காண்பது மிகவும் அரிது.

கோபத்தினாலும், விரோதம் பாராட்டுவதாலும் கனல் போலத் தகிக்கும் ஒருவன் பார்வையில் கூட, பலதரம் அன்பைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.அங்கே அன்பு பின்னப்பட்டுப் போயிருக்கிறது, விகாரப்பட்டுப்போயிருக்கிறது என்று எத்தனையோ விதமாகச் சொல்லிக்கொண்டே போனாலும், அந்தக் கொடிய, உக்கிரமான பார்வையிலும் கூட ஏதோ ஒன்று சுடர்விட்டு எரிகிறதல்லவா?

உயிரில்லாதவற்றிலும், உயிர் இருந்து அறிவற்றதாக இருக்கும் முழு மந்தத் தன்மையிலும், ஏன் ஒரு கருங்கல்லிலும் கண்ணைக் கவரும் பேரொளியைக் முடியும்-அதுவே கடவுளின் இருப்பு! எங்கும், காணக் கூடியது! பல்வேறு விதத்தில், வடிவங்களில், தருணங்களில் இப்படி, இனிமையாக,

கடவுளை எங்கும், எதிலும் காண முடிகிறபோது,

இல்லை என்பது இல்லாமலேயே போய்விடுகிறது!"


ஸ்ரீ அன்னை உரையாடல் என்ற தலைப்பில் தமிழில் ஸ்ரீ அரவிந்த ஆசிரம வெளியீடாக வந்த சிறுபுத்தகம், ஏப்ரல், 1988 இரண்டாவது பதிப்பில் இருந்து-பக்கம் 101-104, நன்றியுடன் எடுக்கப் பட்டது.


இங்கே ஏற்கெனெவே பார்த்தது தான்! வால்ஸ் மாதிரி சரவெடி வெடிப்பவர்களுக்கும், சரவெடி வெடித்ததில் மயங்கிப் போயிருக்கும் என்னைப் போல உள்ளவர்களுக்கும் கொஞ்சம் உதவும்! வேறென்ன, கொஞ்சம் ஆசுவாசம் தான்!