சண்டேன்னா மூணு! சிவப்புச் சேலையைக் கண்டு மிரளும் காங்கிரஸ்!அப்புறம்....!
ஐ மு கூட்டணிக் கூட்டணிக் குழப்பங்களில், சாதனையாக எது இருந்ததோ இல்லையோ, கூட்டணிக் குழப்பத்தின் மெஜாரிட்டி பார்ட்னர் காங்கிரஸ் கட்சியை எவர் விரட்டுகிறார்கள், எப்படி மிரட்டுகிறார்கள் என்பதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போவதை நிச்சயமாகத் தொட்டுச் சொல்லலாம்! டம்மிப் பீஸ் பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய ஆட்சியின் சாதனைப் பட்டியலில் இதையும் சேர்த்துச் சொல்லாவிட்டாலும், அத்தனை பேருக்கும் தெரிந்த ரகசியமாகத் தான் இது இருக்கிறது!

காங்கிரசை இப்போது ஒரு சிவப்புச் சேலையும் சேர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது!

சிவப்புச் சேலை என்றதும் மம்தா, அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் வீரம் மிகுந்த பெண் என்று தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்! 


இந்த சிவப்புச் சேலை ஒரு புத்தகம்! சிவப்புச் சேலை:வாழ்க்கையே அதிகாரத்தின் விலை ( The Red Saree: When Life is The Price of Power)!

ஐ மு கூட்டணிக் குழப்பத்திற்குத் தலை தாங்குகிற சோனியா காந்தியின் கதையை ஜேவியர் மோரோ என்ற ஸ்பானிஷ் எழுத்தாளர், ஸ்பானிஷ் மொழியில் எழுதி இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்த பிறகு, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியாகத் தயாராக இருப்பது காங்கிரசின் ஒப்பற்ற தலைவிக்கு தர்ம சங்கடத்தைத் தோற்றுவித்திருக்கிறது.  ஏற்கெனெவே இந்தப் புத்தகம்  பிஞ்சு, இத்தாலிய, போர்த்துகீசிய மொழிகளிலும், பிரேசிலியன், கடலா மற்றும் டச்சு மொழிகளிலும் வெளியாகி விட்டதைப் புத்தக ஆசிரியரின் வலைப்பக்கங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. 


புத்தகத்தின் முகப்பிலேயே " dialogues, conversations and situations found therein are the product of the author's own interpretation and do not necessarily reflect authenticity." உரையாடல்கள், சம்பவங்கள் எல்லாம் ஆசிரியர் புரிந்துகொண்ட விதத்தில் இருந்து உருவாக்கப் பட்டவை; அப்படியே அச்சு அசலாக நடந்ததாகச் சொல்லவில்லை என்று சொல்லி விட்டு இந்த அறுநூறு ப்ளஸ் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில், மோதிலால் நேரு, ஜவஹர், ராஜீவ், சோனியா என்று மேற்கத்திய வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக நடப்பைத் தொகுத்திருப்பதாக ஆசிரியர் சொன்னதை, காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. சோனியாவின் புகழுக்குக் களங்கம் விளைவித்திருப்பதாக வழக்கறிஞர் நோடீஸ் அனுப்பப் பட்டிருக்கிருக்கிறது.

நோடீசை அனுப்பியிருப்பவர், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி! இந்தப் புள்ளி காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் மட்டுமல்ல  யூனியன் கார்பைடின் புதிய முக மூடியான டவ் கெமிகல்சின் வழக்கறிஞரும் கூட!  யூனியன் கார்பைடுக்கு வக்காலத்து வாங்குகிற காங்கிரசின் கோர முகங்களில் ஒருவர்.

காங்கிரஸ் கட்சி சிவப்புச் சேலையைக் கண்டு மிரள்கிற மாடு மாதிரி மிரளும்படிக்குப்  புத்தகத்தில் அப்படிஎன்னதான் சொல்லி
ருக்கிறாராம்?

1977 இல் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றவுடன் சோனியா,ராஜீவ் மற்றும் தன்  குழந்தைகளை  அழைத்துக் கொண்டு இத்தாலியில் குடியேற விரும்பினாராம்! அதே மாதிரி, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டவுடன் சோனியாவின் அம்மா போலோ மைனோவும், அக்கா அனுஷ்காவும் சோனியாவைக் குழந்தைகளோடு  இத்தாலியில் அவர்கள் சொந்த கிராமமான ஆர்பசானோவுக்கே குடிபெயர்ந்துவிடுமாறு வலியுறுத்தியதும் சொல்லப் பட்டிருக்கிறதாம்.

நேருவின் வீரப்பரம்பரை  வரலாற்றுக் கற்பிதத்துக்கு இப்படிச் சொல்லியிருப்பது, களங்கம் விளைவித்து விட்டதாம்! வீரத்தாய் இந்திரா பெற்ற வீரத் திருமகன் ராஜீவைத்  திருமணம் செய்து கொண்டதாலேயே வீராங்கனை ஆகிப் போன சோனியாவின் புகழுக்கு இந்தப் புத்தகம் குற்றம் கண்டுபிடித்துச் சொன்னதால், இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டுமாம்! மற்ற மொழிகளில் ஏற்கெனவே வெளிவந்த பதிப்புக்களுக்கு....?

அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை! ஓட்டை இருப்பது இந்தியாவுக்குள் மட்டும் தெரியக் கூடாது! அம்புட்டுத்தேன்!

ஜேவியர் மோரோ நன்றாகத் தான் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்! தன்னுடைய புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறவர்களிடம் அவர் முன்வைக்கும் கேள்வி இது தான்!

"ஏற்கெனெவே வெளியான புத்தகங்களில் இருப்பதைத் தான் நானும் சொல்லியிருக்கிறேன். பரம்பரை என்ற புத்தகத்தில் ஜாட் ஆடம்ஸ் சொல்லியிருப்பது, பப்புல் ஜெயகர் எழுதிய இந்திரா காந்தி: அணுக்கமான சரிதையில் சொன்னது, அப்புறம் கேதரைன் பிராங்க்ஸ் எழுதிய இந்திரா நேரு காந்தியின் வாழ்க்கை இவைகளில் சொல்லி
ருப்பதன் அடிப்படையில் தான் நானும் சொல்லி ருக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்கு எதிராக எவரும் எதுவும் பேசவில்லையே!"

சாதாரண  சர்டிபிகேட் கோர்ஸ் படித்ததையே பெரிய பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ராஜீவுடன் காதல் கொண்டதாக இங்கே பில்டப் கொடுத்து சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கிறவர்களிடம், அம்மா சும்மா ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சாதாரணமான மனுஷிதான்..கல்யாணம் பண்ணிக் கொண்டு வீட்டோடு மனைவியாக இருக்க விரும்பிய கதையை எல்லாம் எடுத்து விட்டால் தாங்குவார்களா?

காங்கிரஸ்காரர்கள் அடிக்கும் கூத்துக்களை, ஜேவியர் மோரோ தன் வலைப் பக்கங்களிலேயே சுட்டி கொடுத்துக் காண்பித்திருக்கிறார்! காங்கிரஸ் காமெடியைத் தாங்கிக் கொள்ள முடிகிறவர்கள் போய்ப் படித்துக் கொள்ளுங்கள்!


இன்னும் கொஞ்சம் பொறுமை அவகாசம் இருப்பவர்கள், நம்மூர் சுப்பிரமணியம் சுவாமி தன்னுடைய வலைப் பக்கங்களில் ஜேவியர் மோரோ சொன்னதை விடக் கொஞ்சம் அதிகமாகவே சொல்லிருக்கிறார், அதில்  மூன்று பொய்கள் என்ற பகுதியை  இங்கே பார்க்கலாம்!

******
  
கிட்டத் தட்ட இரண்டு மாதங்களாக, மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனியின் எண்ணெய்க் கிணறில் இருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெய் கடலில் கலந்து சுற்றுச் சூழலை  நாசப் படுத்திக் கொண்டிருக்கிறது. இது வரை பதினொருபேர் இறந்திருப்பதாக, கடல் வாழ் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நிரம்பச் சேதமாகியிருப்பதாகவும் அதை பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனி ஈடு செய்தே ஆகவேண்டும் என்று ஒரு வழியாக அமெரிக்க அதிபர் ஒபாமா உரக்கக் குரல் கொடுத்து விட்டார்! நாற்பத்தெட்டு மணி நேரக் கெடு வேறு விதித்தாயிற்று!

அமெரிக்க அதிபர் உரக்கக் குரல் கொடுக்கவில்லை என்று முந்தின வாரம் தான் அமெரிக்காவில் மனக்குறை பெரிதாக எழுந்தது. ரக்கக் கூவுவதால் மட்டுமே பிரச்சினை தீர்ந்து விடுமா என்று அதிபரும் கேட்டுப் பார்த்தார். எடுபடவில்லை. வேறு வழியில்லாமல் குரல் எழுப்பியுமாயிற்று!


சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்கும் நிகழ்வுகளுக்குப் பிறகாவது இப்போதிருக்கும் சட்டங்கள் மாற்றியமைக்கப் பட வேண்டும் என்று ஒபாமா பேசியிருக்கிறார். அங்கே அமெரிக்காவுக்கு  ஒன்று என்றால் எப்படிப் பேசுகிறார்கள்? இங்கே போபால் விஷவாயு விபத்து அப்புறம் அணு உலை விபத்து நட்ட ஈடு  மசோதா என்று வரும்போது எப்படிப் பேசுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

இந்திய அரசின் அமைச்சர்கள் நாட்டு மக்களுக்காகச் செயல்படுவதை விட இந்த மாதிரி பன்னாட்டுக் கொலைகாரர்களுக்குப் பரிந்து பேசுவதில் எவ்வளவு குறியாக இருக்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் சேர்த்துப் பாருங்கள்!
****** 

அமெரிக்க  ஒபாமா இருக்கட்டும், கண்டனூர்ப் பானா சீனா கிடக்கட்டும்! எவராக இருந்தால் தான் என்ன?

ஒரு சீரழிவு, தவறு என்று வருகிற பொழுது பன்னாட்டு நிறுவனங்கள் அதை எப்படிக் கையாள்கின்றன என்பதைக் கொஞ்சம்
அழுத்தமாக அதே நேரம் வேடிக்கையாகச் சொல்கிற இந்த வீடியோ இரண்டரை நிமிடங்கள் தான்!


உனக்கும் பெப்பே....உங்கப்பனுக்கும் பெப்பே! கொடுக்கிற பெட்டியை வாங்கிக் கொண்டு பேசாமல் போய்ச் சேர் என்கிற மாதிரி இல்லை?!

10 comments:

 1. அன்பு பதிவாளரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன். தயவு செய்து பார்த்து கமெண்ட் போடவும். நன்றி!

  ReplyDelete
 2. இதற்குப் பெயர் தான் கேட்டு வாங்குவதா?

  பின்னூட்டங்களுக்காக ஒவ்வொரு பதிவாகப் போய்க் கெஞ்சுவதை விட்டுவிட்டு, பதிவின் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துங்கள்! ஒரு பதிவில் குஜராத்-மகாராஷ்டிரா இரண்டு மாநில எல்லையில் டோல் கட்டண வசூலில் கணினிமயமாக்கி குஜராத் நூற்றைம்பது கோடி அதிக வசூல் காண்பித்ததைப் பேசியிருந்தது கொஞ்சம் உருப்படி!

  அரசு ஊழியர்கள் அரசுக்கு வருமானம் ஏற்படுத்தித் தருவதை விட, வருமான இழப்பிற்கு உடந்தையாக இருந்து தங்கள் சொந்தக் கல்லாவை நிரப்பிக் கொள்வது ஊரறிந்த விஷயம்!

  ReplyDelete
 3. விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு. நீங்களும் ஊதிக்கொண்டே இருக்கிறீர்கள். ஏதாவது நடந்தால் சரி!

  ReplyDelete
 4. படித்த, தெரிந்த செய்திகளைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்து விட முடியும் ரவி?

  இதற்குப் பெயர் ஊதுவது அல்ல! ஆதங்கம்! எப்படியெல்லாமோ இருந்திருக்க வேண்டிய ஒரு தேசம், இன்னமும் தன்னுடைய உண்மையான பலத்தை அறிந்துகொள்ளாமல் சோம்பிக் கிடக்கிறதே என்ற ஆதங்கம்! கலகத்தைத் தூண்டுவதோ, கிளர்ச்சி செய்வதோ என்னுடைய எழுத்துக்களின் நோக்கம் இல்லை. மாற்றத்திற்கான விதை, உந்துதல், செயல் எல்லாமே ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தே பிறக்க வேண்டும்! தனிமனிதர்களை, ஒரு வலுவான சமுதாயமாக ஒருங்கிணைக்க சுயநலம் இல்லாத ஒரு நல்ல தலைமை பிறக்க வேண்டும்.

  இது ஒன்றே எனது பிரார்த்தனை.

  ReplyDelete
 5. நல்ல பகிர்வு சார். சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியாவா? அவசியம் படிக்க வேண்டிய புக் தான்.பகிவுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 6. ’ரவி’ மாதிரி நல்லவர்களை லூஸ்லவிடுங்க. உங்கள் சேவை தொடரட்டும். நன்றி.

  ReplyDelete
 7. மயில்ராவணன்!

  ரொம்ப நாளைக்கு முன்னால்,சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா என்று ஒரு தமிழ்த் திரைப்படத்தில் பாட்டு வந்ததற்கே, இங்கே தமிழகக் காங்கிரஸ் குஞ்சுகள் தடை விதிக்க வேண்டும் என்று குதித்தன. ஒரு புண்ணாக்கும் ஆகவில்லை என்பது தனிக்கதை.

  இப்போது, இந்தப்புத்தகத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தவ்விக் கொண்டிருக்கிறது! இந்தப் புத்தகத்தில், செய்திகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இதற்கு முன்னால் தெரியாத எதையும் புதிதாகச் சொல்லி விடவில்லை.

  ஜனநாயக சோஷலிசக் காவலர்கள், தாங்கள் பெரீய்யய்ய்ய்ய பரம்பரை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா, அந்த பலூனைக் கொஞ்சம் பன்க்சர் செய்துவிடுமோ என்று, பரம்பரைப் பெருமையை ஊதிக் கொண்டிருப்பவர்கள் கவலைப் படுகிறார்கள்! அவர்கள் பிழைப்பே, பரம்பரையோடு ஒட்டிக் கொண்டிருப்பதில் தானே இருக்கிறது!

  அப்புறம், அந்த ரவி மாதிரி நல்லவர்களை லூஸ்ல விடறது......!

  இங்கே இணையத்தில் நிறைய நல்லவர்கள் இருக்கிறோம்! எவ்வளவு நல்லவர்கள் என்பது அவ்வப்போது, அடித்துக் கொண்டு நாறும்போது பின்னூட்டங்களில் வெளிப்படுகிற மாதிரி!

  :-))

  ReplyDelete
 8. Another Excellent Blog !

  நம்ம ஊருல ஓட்டு போடும் பல பேருக்கு அன்னை, இந்தியாவின் மருமகள் என்ற அடை மொழியை தவிர எதுவும் தெரியாது. இதை வைத்துக்கொண்டு காங்கிரஸ் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.
  என் நண்பர் ஒருவர் இத்தாலி சென்றபோது இந்தியன் என்பதற்காக அங்கே பல ஹோட்டல்களில் தங்க அனுமதி மறுக்கப்பட்டது. இங்கே தலையில் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

  ReplyDelete
 9. வாருங்கள் அமர்!

  முதலில் சோனியா என்ற பெயரே அவருடைய ஒரிஜினல் பெயர் இல்லை!எதிர்க்கட்சிகள் பெரிய பிரச்சினை ஆக்கிய பிறகே இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார் என்பதும், வாரிசுகளுக்கும் கூட இத்தாலியக் குடியுரிமை, இந்தியக் குடியுரிமையோடு இருக்கிறது என்பதும் அடுத்தடுத்தது.

  நேரு பரம்பரை, தியாகப் பரம்பரை என்ற மாதிரி இங்கே ஊதப் படுகிற எல்லாமே கற்பனையாக இருப்பதனால் தான் அடிக்கடி பன்க்சர் ஆகிறது!

  இத்தாலியில் இந்தியர்களுக்கு மரியாதை இருக்கட்டும், சொந்த ஜனங்களுக்கே மரியாதை இருக்கிறதா என்பதே பெரிய கேள்விக்குறி! இத்தாலி என்றால் இரண்டே இரண்டு மோசமான விஷயங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும்! ஒன்று வாடிகன்! இன்னொன்று மாஃபியா! இந்த இரண்டோடு ஒப்பிடும் போது சோனியா கொஞ்சம் அல்ல, நிறையவே கம்மிதான்!

  இது இந்தியாவுக்கு வந்த காக்கைப் பொன்!

  ReplyDelete
 10. நீங்க எழுதும் ஒவ்வொரு பதிவும் எனக்கு தனிப்பட்ட முறையில் பொக்கிஷம். காரணம் உங்கள் பதிவில் உள்ள விசயங்களை அடுத்தடுத்து நான் தேடிக் கொண்டேயிருப்பேன். பலவற்றை அறிந்துள்ளேன். இப்போது சோனியா குறித்து எழுதியதைப் பார்த்ததும் அவர் நூறு கோடி ரூபாய் நரசிம்மராவ் (நேரு அறக்கட்டளைக்காக) அப்போது மண்ணு மோகன் நிதி அமைச்சர். கேட்டு கொடுக்காமல் அதன் பிறகு லாவகமாக அதிகாரத்தை கைப்பற்றிய விதம் குறித்து எழுத எண்ணி உள்ளேன். (கேரள உதவியாளர் ஜார்ஜ் எப்படி விளையாடினார் என்பது தனிக்கதை.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!