Showing posts with label நா.பார்த்தசாரதி. Show all posts
Showing posts with label நா.பார்த்தசாரதி. Show all posts

வாசிப்பது என்பது மேலோட்டமாக மேய்ந்துவிட்டுப் போவதா?

ஐந்துநாட்களுக்கு முன்னால் நா.பார்த்தசாரதி எழுதிய மணிபல்லவம் புத்தகத்துக்கு ஒரு அறிமுகக் குறிப்பாக அவரே எழுதிய எழுதியவன் கதை முன்னோட்டத்தைக் மட்டும் கொடுத்திருந்தது நினைவிருக்கிறதா? அந்தப் புத்தகத்தை வாசித்த ஒருவர் என்ன இது, தத்துவ மூட்டையாக இருக்கிறதே! வரலாற்றுத் தரவுகளே இல்லாமல் ஒரு வரலாற்றுக் கதையா என்று புலம்பி இருந்ததை ஒரு குழுமத்தில் பார்த்தேன். கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. சுவாசிக்கப்போறேங்க தளத்தில் இதுமாதிரி வேடிக்கைக்காகவே சாண்டில்யன் எழுதிய கோழைச்சோழன், மூங்கில் கோட்டை இரண்டு கதைகளுக்கான வரலாற்றுத்தரவு ஒன்றிரண்டு பழந்தமிழ் இலக்கியப்பாடல்களே என்பதையும், அப்படிக் குறைவான தரவுகளையும் வைத்துக்  கதை பின்னத் தெரிந்தவனே ஒரு திறமையான எழுத்தாளன் என்பதான என்னுடைய கருத்தையும் பதிவு செய்து இருக்கிறேன். இப்படியாகத் தமிழில் சரித்திரக்கதை எழுதி வாசகனையும் திருப்தி செய்வது மெத்தக்கடினம் என்பதாலோ என்னவோ பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் வரலாற்றின் பக்கமே எட்டிப் பார்ப்பது இல்லை!


நா.பா. என்கிற தீபம் நா.பார்த்தசாரதியின் அழகான தமிழ் எழுத்துநடைக்காகவே பள்ளிநாட்களில் அவரது தீவீர வாசகனானவன் நான்! களப்பிரர் காலத்து தமிழகத்தைப் பற்றி சாண்டில்யன் எழுதிய நீலரதியைப் பற்றி இந்தப்பக்கங்களில் எழுதிய பிறகு. நா.பா.வின் நித்திலவல்லி கூட களப்பிரர் காலத்து தமிழகத்தைத் தொட்டு எழுதப்பட்டதுதானே என்று மறுவாசிப்புக்காக எடுத்துக் கொண்டு ஒரேமூச்சில் படித்து முடித்தேன். 504 பக்கங்கள் என்பது ஒரு பெரிய விஷயமாகவே தோன்றவில்லை என்னும் படியான ஒரு எழுத்து நடை. ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்த சூட்டிலேயே புத்தகமாகவும் வந்துவிட்டது.

நீலரதிக்கு அறிமுகக்குறிப்பாக எழுதியிருந்ததைப் போலவே தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் என்பது இருண்டகாலம் என்றே அழைக்கப்படுகிறது. யாரிந்தக் களப்பிரர் என்ற கேள்விக்கு தெளிவான வரலாற்றுத் தரவுகள் இல்லை. வடுக கருநாடகர் என்றே பழைய பாடல்களில் காணக்கிடைக்கிறது. நீலரதி கிபி முதல் நூற்றாண்டில் மூவேந்தர்களையும் வென்று தமிழகத்தை ஆட்சிசெய்த அச்சுத விக்கண்டன் எனும் வரலாற்றுப்பாத்திரத்தை வைத்து எழுதப்பட்ட கதை என்றால், நித்திலவல்லி களப்பிரர் காலம் முடிகிற தருணத்தில் புனையப்பட்ட கதை. கிபி ஆறாம் நூற்றாண்டு வரை களப்பிரர் காலம் என்பதாக வரையறை செய்து இருக்கிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். களப்பிரர்கள் என்றால் எங்கிருந்தோ வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்லர். பாலி மொழி பேசிய பவுத்தர்களை ஆதரித்தார்கள், நாத்திக மதமான சமயத்தையும் ஆதரித்தார்கள் என்பது ஒரு புறம். அவர்கள் வெளியிட்ட காசுகளில் ப்ராக்ருதமும் தமிழும் இடம் பெற்றிருந்தது. அவர்கள் தமிழை வெறுக்கவோ ஆதரிக்கவோ முயலவே இல்லை. ஒருசில களப்பிரர் நாணயங்களில் தமிழும் முருகனும் இடம்பெற்றிருந்தார்கள் என்பதும் தற்சமயம் ஆய்வுகளில் கிடைத்திருக்கும் முடிவுகள்.        

இந்தப் புதினம் உட்பட நா.பார்த்தசாரதியின் படைப்புக்கள்  முழுவதுமே தமிழ் இணைய நூலகத்திலேயே இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளக் கிடைக்கிறது என்பதால் கதையை விவரித்துச் சொல்லவோ, முழுநீள விமரிசனமாகவோ எழுதப்போவதில்லை. ஆனாலும் புத்தகத்துக்கு முன்னுரையாக நா.பார்த்தசாரதி எழுதியிருக்கிற சில விஷயங்கள் இதுவரை இந்தப்புதினத்தை வாசிக்காமல் இருப்பவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும். முன்னமே வாசித்தவர்களுக்கும் கூட புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளத் தூண்டுதலாகவும் இருக்கும் என்றே நம்புவதால் அந்த முன்னுரையை இங்கே சற்றே சுருக்கித் தந்திருக்கிறேன்.

முன்னுரை   
தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. புறத்தே நிலவும் ஒளியின்மையை மட்டும் இங்கு அப்பதம் குறிக்கவில்லை. கலை, மொழி, நாகரிகம், பண்பாடு எல்லாவற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததையே 'இருண்ட காலம்' என்ற தொடர் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். களப்பிரர் காலத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு ஒரு நாவல் புனைவதிலுள்ள சிரமங்களை நண்பர்கள் சிலர் சுட்டிக் காட்டியும் அந்தக் காலப் பின்னணியில் கதை எழுத வேண்டும் என்றே நான் விரும்பினேன்.

சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால் பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின் களப்பிரர்களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும். ஆகவே இப்படிப் பார்ப்பது கூட பார்க்கும் கோணத்திற்குத் தகுந்தாற் போல் மாறி விடுகிறது. நீண்ட நாட்களுக்கு முன்பு களப்பிரர் காலத்தைப் பற்றி எழுத எண்ணித் திட்டமிட்டு அதன் பின் வரலாற்று நாவல்கள் எழுதுவதை நான் நிறுத்தியிருந்த சமயத்தில் விகடன் காரியலத்தார் 1970 ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினமலரிலிருந்து விகடனில் வெளியிட ஒரு சரித்திர நாவல் எழுதுமாறு வேண்டினார்கள். என் பழைய எண்ணமும் இந்த அவசியமும் இணைந்த வேளையில்தான் நான் 'நித்திலவல்லி' நாவலை மேற்கொண்டு எழுத நேர்ந்தது. ஒரு மங்கலான காலப் பகுதியைப் பற்றி அதிக ஆராய்ச்சிகளையும், சான்றுகளையும் தேடித் தேடி இதை எழுத வேண்டியிருந்தது. இந்த ஆராய்ச்சிக்குப் பல பழைய, புதிய நூல்களை ஆழ்ந்து கருத்தூன்றிக் குறிப்புகளைச் சேகரிக்க நேர்ந்தது.

 கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க முதல் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்ததாகத் தெரிகிறது. (டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டிய வரலாறு - பக்கங்கள் - 33, 34, 35, 36, 37) இது தொடர்பான வேள்விக் குடிச் செப்பேட்டுப் பகுதி வருமாறு:-

     "களபரனெனும் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடல் முளைத்த பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதிர் அவிரொளி விலகவீற்றிருந்து

     வேலை சூழ்ந்த வியலிடத்துக்
     கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச்
     செங்கோல் ஓச்சி வெண்குடை நிழற்
     றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப்
     பிறர்பால் உரிமை திறவிதின் நீக்கித்
     தன்பால் உரிமை நன்கனம் அமைத்த
     மானம் போர்த்த தானை வேந்தன்
     ஓடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த
     கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னவன்."
..........

.............ஆதாரங்கள் கிடைத்தன. இந்த ஆதாரங்களே முழுமையான கதையாகிவிட முடியாது என்றாலும், முழுமையான கதைக்கு இந்த ஆதாரங்களும் இருக்க வேண்டியதாகிய அவசியம் உண்டு. கதை நிகழ்ந்த காலத்து மதுரை அடிமைப்பட்டுக் கிடந்த மதுரை. ஆகவே கதையின் பெரும் பகுதியில் மதுரையின் கோலாகலங்களை அதிகமாகச் சித்தரிக்க முடியாமல் போயிற்று. பாண்டியன் கடுங்கோனின் பெயர்க் காரணம் பற்றி இக்கதையில் வரும் நயமான கற்பனை இணைப்பைப் பல தமிழாசிரியர் நண்பர்கள் பாராட்டினார்கள். இந்தக் கதையில் வரும் மதுராபதி வித்தகர் பாத்திரப் படைப்பை வாசகர்கள் பலர் அவ்வப்போது வியந்து எழுதினார்கள். வேறு சில வாசகர்கள் செல்வப் பூங்கோதை தான் மறக்க முடியாத கதாபாத்திரம் என்றார்கள். இன்னும் சிலர் இரத்தினமாலை தான் நினைத்து நினைத்து மகிழ ஏற்ற பாத்திரம் என்றார்கள். இளையநம்பிதான் கதாபாத்திரங்களில் முதன்மையானவன் என்கிறார்கள் மற்றும் பலர். அழகன் பெருமாள், மல்லன், கொல்லன், யானைப்பாகன் அந்துவன், காராளர் போன்ற துணைக் கதாபாத்திரங்களே சிறந்தவர்கள் என்பதும் சிலருடைய கருத்தாகும். ஆனால் எழுதியவனுடைய நோக்கத்தில் எல்லார் மேலும் சமமான அக்கறையுமே காட்டப்பட்டுள்ளன என்பதை மட்டும் இங்கு அடக்கமாகத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன். இந்த வரலாற்று நாவலைப் படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை: சமீப காலத்து நூற்றாண்டுகளில் நாட்டைப் பிறரிடமிருந்து மீட்கும் பல சுதந்திர போராட்ட வரலாறுகளைப் பல நாடுகளில் பார்த்திருக்கிறீர்கள். அதுபோல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பாண்டிய நாட்டில் நிகழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வரலாற்று நாவல் என்ற எண்ணத்தோடு இதை அணுக வேண்டுகிறேன். இதற்கு மேல் இந்த முன்னுரையில் நான் சொல்வதற்குச் சிறப்பாக எதுவும் இல்லை.

இந்த நாவலைத் தொடர் கதையாக வேண்டி வெளியிட்ட விகடன் காரியாலயத்தாருக்கும், புத்தகத்தைப் படிக்க ஆவலோடு காத்திருக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும் என் மனங்கனிந்த அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
நா. பார்த்தசாரதி

இன்னும் ஐந்துமாதங்களில் நித்திலவல்லி தொடராக வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவுபெறப் போகிறது என்பது ஒரு கூடுதல் தகவல். 
ப்போது பதிவின் தலைப்புக்கும்,  இங்கே குறிப்பிடப் பட்ட  மூன்று புத்தகங்களுக்கும் என்ன சம்பந்தம்.? வாசிப்பு என்பதை என்னவாக நாம் புரிந்து கொண்டு இருக்கிறோம்? மேம்போக்காக, சும்மா பொழுதுபோக்க வாசிக்கிறோமா? வாசித்ததில் உள்வாங்கிக் கொள்ளக் கூடிய விஷயம் ஏதேனும் இருந்ததா இல்லையா என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்கிறோமா?

பனுவல் வாசிப்பு என்கிறார்களே, அதைப்பற்றி நமக்கு ஏதாவது பரிச்சயம் இருக்கிறதா?  தேர்ந்தெடுத்து வாசிப்பது நமக்குக் கைவந்திருக்கிறதா?

வாசிப்பதென்பது லேசான விஷயம் இல்லை. வாசிப்பு அனுபவம் என்பது ரசனை சார்ந்த விஷயம். வாசிப்பது, வாசிப்பு அனுபவம் குறித்த உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.         

                    
       

கொஞ்சம் சிரிக்க! கொஞ்சம் கொறிக்க! கொஞ்சம் படிக்க!

விஜய் டிவி அந்தநாட்களில் இருந்தே தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சினிமா சார்ந்ததாகவே நடத்தி வந்தாலும் லொள்ளுசபா மாதிரி ஒரு நிகழ்ச்சியைப் போல பார்த்திருக்க முடியுமா என்பது சந்தேகமே! அதே போல சேனலை  எவ்வளவு லந்தடித்தாலும் அதையும் வெட்கமில்லாமல் ஒளிபரப்புகிற விசாலமான மனசு படைத்த வெட்கம் கெட்ட சேனல் அது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை!

14 நிமிட நான் ஸ்டாப் காமெடி 
யாரை லந்தடிக்கிறார்கள் என்பது 
புரிகிறதா இல்லையா? 

மருத்துவ வசதிகளில் மிகச்சிறப்பான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இத்தாலியில் வைரஸ் இறப்புகள் 9% என்பதாக இருக்கும் நிலையில்...
மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சீனாவில் ...இத்தனை மாதங்களில்... 3720 பேர் மட்டுமே என்று அந்நாடு கூறுவது..உலக நாடுகளிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பி இருந்தது.
சீனா ...அனைத்து செயல்பாடுகளையும் digitize செய்துவிட்ட நிலையில்...மிக அதிக மக்கள்.. மொபைல் மூலமே தங்கள் தேவைகள், கல்வி, இன்ன பிற செயல்பாடுகள் அனைத்தையும் செய்து கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான்..
சீனாவின் மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையிலும், லேண்ட்லைன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையிலும் பெரும் வீழ்ச்சியை ...China Mobile, China Telecom உட்பட சீனாவின் 3 மொபைல் service providers நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகளும் & சீன லேண்ட்லைன் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையும் வெளிப்படுத்துவது... உலக நாடுகளின் கவனத்தை பெற்றிருக்கிறது.
இதன் படி...பயன்பாட்டில் இருந்த 2 கோடியே 10 லட்சம் மொபைல் எண்கள் .. ஜனவரி,பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்களுக்குள்ளாக ..திடீரென்று...பயன்பாட்டில் இல்லாத எண்களாக மாறி இருக்கிறது.
சீனாவில்...ஒவ்வொருவரும்... 5 மொபைல் எண்கள் வரை பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் என்பது உட்பட அனைத்தையும் கருத்தில் கொண்டு..2 கோடியே 10 லட்சம் பயன்பாட்டிலிருந்து விலகிய எண்களில்... உரிய காரணம் உள்ளவற்றை தவிர்த்துவிட்ட பின்னரும் கூட .. பயன்பாட்டிலிருந்து விலகிய அல்லது காணாமல் போன 6 லட்சம் எண்களுக்கு உரிய விளக்கம் இல்லை.
சீனாவில் சீன வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் இருக்கலாம் என்பது உறுதியாகி இருக்கிறது...என்கிறார்கள்.
இது குறித்து ..இந்தியா உட்பட ...உலக நாடுகளின் பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன.

 

நா. பார்த்தசாரதி எழுதிய சரித்திரக்கதைகளில் மணிபல்லவம் மிகவும் பெரியது. 2014 இல் திருமகள் நிலையம் வெளியிட்ட இரண்டாவது பதிப்பு 768 பக்கங்கள். 2000ஆம் ஆண்டுவரை தமிழ் புத்தகாலயம் ஏழு பதிப்புக்களை வெளியிட்டிருக்கிறது 956 பக்கங்களில் என்பது கூடுதல் தகவல். மீள்வாசிப்புக்காக இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்திருக்கிறேன். புத்தகத்துக்கு முன்னோட்டமாக எழுதியவன் கதை என்ற தலைப்பில் சில அடிப்படை விஷயங்களை நா. பார்த்தசாரதி கறாராகச் சொல்லி விடுகிறார். வரலாற்று ஆதாரங்கள் என்று நாம் நினைப்பதற்கும் மேலான வரலாற்று விழுமியங்கள் தான் கதைக்கு அடிப்படை என்பதைச் சொல்லியே ஆரம்பிக்கிறார். கொஞ்சம் பார்க்கலாமா?


மணிபல்லவம்

எழுதியவன் கதை

இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக் கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது.  

நமது இலக்கியங்களில் வரலாற்றுக் காலத்துப் பூம்புகார் நகரம் கம்பீரமான வருணனைகளால் போற்றிப் புகழப்பட்டிருப்பதைப் பலமுறை படித்திருக்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரத்தைக் காட்டிலும் நகர்ப் பரப்பினாலும் பிற பெருமைகளாலும் பூம்புகார் நகரம் சிறப்புற்றிருந்ததாகச் சொல்லுகிறார்கள். இலக்கியங்களிலும் காவியங்களிலும் படித்துப் படித்து மனக்கண்ணால் கண்டிருந்த பூம்புகார் நகரம் என்னை ஏற்கெனவே மயக்கியிருந்ததென்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதையை எழுதியதனால் அந்த மயக்கம் இன்னும் வளர்ந்ததே ஒழியக் குறையவில்லை.

போர்க்களங்களில் வில்லும் வேலும் வாளும் கேடயமும் ஏந்திச் செய்கிற போரைப் போலவே வரலாற்றுக் காலத்துப் பூம்புகாரின் சந்திகளிலும் சதுக்கங்களிலும் பல்வேறு சமயவாதிகள் அறிவுப் போர் நடத்திக் கொண்டிருந்ததாக நூல்களில் படித்திருக்கிறோம். புகழும் பெருமையும் மிக்க அந்த அறிவுப் போரில் இந்தக் கதாநாயகனும் ஈடுபடுகிறான். வெற்றி பெறுகிறான்.

இந்தக் கதாநாயகனின் வாழ்க்கை ஓர் அழகிய தத்துவம். சுரமஞ்சரியிலிருந்து முகுந்தபட்டர் வரை எல்லாரும் கதாநாயகனாகிய இளங்குமரனுக்குத் தோற்றுப் போவதாக அவனிடமே சொல்கிறார்கள். அவனோ யாரையுமே வென்றதாக ஒப்புக் கொள்ள மாட்டேனென்கிறான். இறுதிவரை பிடிவாதமாக அன்பு செய்து அவனை வென்றவளாகிய சுரமஞ்சரியும் கூட தான் வெற்றி பெற்றதை மறந்து அவனுக்குத் தோற்றதாகவே அவனிடம் சொல்கிறாள். உடம்பினாலும் தோற்றத்தாலும் மட்டுமல்லாமல் குணங்களாலும் மிக அழகியவன் இந்தக் கதாநாயகன். குணங்களாலும் அழகுடையவர்கள் காதலிக்கத் தகுந்தவர்கள். இந்தக் கதையில் எல்லாக் கதாபத்திரங்களுமே இளங்குமரனுடைய குண அழகை ஏதோ ஒரு வகையில் ரசிக்கிறார்கள். வீரத்தையே ஒரு தவமாகச் செய்யும் நீலநாகர், பிடிவாதமாக அன்பு செய்து தளரும் முல்லை, தீமைகளின் எல்லையில் போய் நிற்கும் பெருநிதிச் செல்வர் நகைவேழம்பர், இளங்குமரனுடைய முழு வாழ்க்கையையுமே தன்னையறியாமல் தற்செயலாக வரைந்து முடித்து விடுகிற ஓவியன் மணிமார்பன், நல்லவற்றுக்குப் பாதுகாப்பு அளிப்பதே ஒரு தவம் என்று எண்ணும் அருட்செல்வர் எல்லாரும் இதில் உயிர்க்களையோடு நன்கு உரம்பெற்று நடமாடுகிறார்கள்.

ஆனாலும் இந்தக் கதையில் படிப்பவர்கள் எல்லாரையும் ஒருங்கே கவர்கிற கதாபாத்திரம் சுரமஞ்சரியாகத்தான் இருப்பாள். இளங்குமரனுக்காக ஏங்கி ஏங்கி உருகி அவள் எல்லாவற்றையும் இழந்து விட்டுக் கடைசியாக அவனைப் பற்றிய விருப்பத்தை மட்டும் இழக்க இயலாமல் அவன் பாதங்களில் வீழ்ந்து கண்ணீர் பெருக்கி - "இந்தப் பாதங்களைத் தொழுவதைத் தவிர எனக்கு வேறு செல்வங்கள் வேண்டியதில்லை" - என்று அவனோடு கீழிறங்கி நடக்கும் இடம் மெய்சிலிர்க்கச் செய்வது இந்தக் கதைக்கும் கதாநாயகனுக்கும் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரம் இத்தனை முழுமையாகக் கனிந்த நிலையில் கிடைத்ததற்காக வாசகர்களும், எழுதியவனும் நிச்சயமாகப் பெருமைப்பட முடியும். அவளுடைய பரிசுத்தமான மனச்சாட்சியை மதிப்பதற்கு மண்ணுலகத்து மதிப்பீடுகள் போதாதென்றாலும் முடிந்தவரை மதித்தாக வேண்டிய கடமை நமக்கு உண்டு. "பிறருக்காக நம்மை இழந்து விடுவதில் ஒரு சுகம் இருக்கிறது" என்று இளங்குமரன் தன் கல்வி, தவம் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது சுரமஞ்சரிக்குத் தன்னைக் கொடுக்கிறான். இவ்வளவு நல்ல கதாபாத்திரமாக வாய்த்ததற்காக இந்தக் கதாசிரியனும் அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்றி செலுத்தியாக வேண்டும். இந்த நாவலை அந்த அழகிய கதாபாத்திரத்திற்குச் சமர்ப்பணம் செய்வதைத் தவிர வேறெந்த வகையிலும் அந்த நன்றியைச் செலுத்த முடியாது என்பதால் இந்த நாவலைச் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரமே அடைவதாகப் பாவித்துக் கொள்கிறேன். கல்கியில் படிக்கும்போது, பல்லாயிரக்கணக்கான வாசகர்களும் இதையே வரவேற்றார்கள். புத்தகமாகப் படிக்கும் பேறு பெற்றவர்களும் இப்படியே வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்; நம்புகிறேன்.

இதைத் தொடர்கதையாக வெளியிடுவதில் பலவிதத்திலும் அன்புடன் ஒத்துழைத்த கல்கி அதிபர். திரு. சதாசிவம் அவர்களுக்கும், காரியாலயப் பெருமக்களுக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். கடைசியாக ஒரு வார்த்தை. இந்த நாவல் பொழுது போக்கிற்கு மட்டுமன்று, சிந்தனைக்கும் சேர்த்துத்தான். இதில் அழகு எவ்வளவு உண்டோ அவ்வளவிற்கு ஆழமும் உண்டு. படிப்பவர்கள் அந்த நோக்குடன் இதைப் படிக்க வேண்டும்.

அன்புடன்
நா. பார்த்தசாரதி
சென்னை
1-6-1970

நாட்டுடைமையாக்கப் பட்ட நூல்வரிசையில் இந்தப் புத்தகமும் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளக் கிடைக்கிறது. கணினியில் படிப்பதற்கு சிரமமே இல்லாத PDF வடிவம் என்பதால் தரவிறக்கம் செய்யவோ படிப்பதோ தயக்கம் வேண்டியதே இல்லை.

நீண்டவருடங்களுக்குப் பிறகு மீள்வாசிப்புக்காக இதை எடுத்துக் கொண்டிருப்பதில், புதிதாக வாசிக்க எடுத்துக் கொண்டது போலவே உணர்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்.   

சமுதாய வீதி! நா.பார்த்தசாரதி

புத்தகங்களை ஏன் படிக்கிறோம்? எதற்காகப் படிக்கிறோம்? 

அந்த நாட்களில் இந்தக் கேள்வியை எடுத்துக் கொண்டு "கூட்டாஞ்சோறு" ஆர்வி புத்தகங்களுக்கான தன்னுடைய தனி வலைப்பக்கங்களில்  ஒரு தொடர் பதிவாக எழுதியிருந்தார் 

இந்தக் கேள்வியே எனக்குக் கொஞ்சம் வினோதமாகத் தான் தெரிகிறது. என்னுடைய சிறுவயதில் இருந்தே என்னுடைய அண்ணன்மார்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை எனக்கும் தொற்றி விட்டதால் இந்தக் கேள்வி விநோதமாக இருக்கலாம். ஆனால் புத்தகம் படிப்பது மட்டும் இல்லை, எந்த ஒரு பழக்கத்திற்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களே முன்னோடிகளாக ஆரம்பித்துக் கொடுக்கிறார்கள், நாம் நமது சூழ்நிலை, ஆர்வத்திற்குத் தகுந்த மாதிரி இந்தப் பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறோம் அல்லது மறந்து விடுகிறோம் என்பது தான் சரியான பதிலாக இருக்கும் என்று தோன்றுகிறது.


இன்றைக்குத் தற்செயலாக Good Reads தளத்தில் 50 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த சமுதாய வீதி புதினத்துக்கு வாசகர் பரிந்துரையாக 2018 டிசம்பரில் 
இப்படி ஏழே வரிகளில்! 

Praveen
Aug 02, 2018rated it it was amazing  ·  review of another edition
1. Sahitya Academy winning book
2. Every character has been justified
3. Professional's has had the pride and temper which can't eradicate from their behavior
4. Though the book written in 1968, but many scenes depicts the present generation
5. I enjoyed the character of Gopal - who know how to do the branding in his domain
6. Author gave an insight of Artist's situation much early. He's a prophet i would say
7. Completed this book in 3 hours without a break ; hypnotized by every situation and dialouge


இதை பார்த்ததும் மனதுக்குள் ஏக மகிழ்ச்சி. ஒரு நல்ல எழுத்தாளன், தன்னுடைய காலத்துக்குப் பிறகும் , தன் படைப்புகளில் உயிர்வாழ்வதைப் பார்க்க முடிவதில் வருகிற மகிழ்ச்சி, சிலிர்ப்பு! "அச்சமே கீழ்களது ஆச்சாரம்"   இப்படி இந்தப் புதினத்தில் நாயகன் சொல்வதாக அமரர் நா.பார்த்தசாரதி எழுதிய வரிகளில் இருக்கும் அறச்சீற்றத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், புத்தகத்தைப் படித்துவிடுவது ஒன்று தான் சுலபமான, நல்லவழி! 

இது கலைஞர்களைப் பற்றிய கதை. ஒரு நல்ல கலைஞன் என்று ஆரம்பித்துச் சொல்லும்போதே இங்கே ஏய்ப்பதில் கலைஞன் என்றும்   உண்டில்லையா?

அப்படி நேரெதிரான குணாதிசயங்களைக் கொண்ட இருவரின் கதையாக, சமுதாய வீதி நாவலைச் சொல்லி விடலாமா? சொல்லலாம் தான்! அனால் இது அந்த இருவருடைய கதை என்பதையும் தாண்டி, இன்று கலைச்சேவை செய்வதற்காக சிங்கப்பூர் மலேசியா வளைகுடாநாடுகள் என்றெல்லாம் பயணிக்கிறார்கள் இல்லையா, அந்தக் கலைச்சேவை எப்படிப்பட்டது என்பதையும் கொஞ்சம் புட்டுவைத்திருப்பது, நா.பா ஒருவருக்கே கைவருகிற லாவகம் என்பதைவிட ஒருவித சத்திய ஆவேசம் என்றே கொள்ளலாம்.

நாடகசபாவில் வாத்தியாராக இருந்த முத்துக்குமரன், சென்னைக்கு வருகிறான்.நாடகசபாவில் இருந்து, இன்று சினிமாவில் நடிகர்திலகமுமாகிப்போன பழைய நண்பன் கோபாலிடம் சொல்லி தன்னுடைய பிழைப்புக்கும் ஏதாவது செய்து கொள்ளலாம் என்று வந்ததில் இருவருடைய குணவார்ப்பும் வெளிப்படுகிற வரிகள் இவை:       

 முத்துக்குமரன் பதில் சொல்லவில்லை. கோபாலின் டிரைவர் சிறிய கார் ஒன்றில் எழும்பூருக்குப் புறப்பட்டுப் போனான். அவனை அனுப்பி விட்டுத் திரும்பி வந்த கோபால் நண்பனை மிகவும் பிரியத்தோடு அணுகி, "ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே. நல்லாச் சேர்ந்து சாப்பிடணும். ராத்திரி என்ன சமையல் செய்யச் சொல்லட்டும்?... சங்கோசப்படாமே சொல்லு வாத்தியாரே?..."

     "பருப்புத் துவையல், வெந்தயக் குழம்பு, மாங்காய் ஊறுகாய்..."

     "சே! சே! அடுத்த பிறவி எடுத்தால் கூட நீ அந்த பாய்ஸ் கம்பெனியின் நிரந்தர 'மெனு'வை மறக்க மாட்டே போலிருக்கே... மனித குணங்களாகிய காதல், சோகம், வீரம் எதுவுமே நமக்கு உண்டாகி விடாதபடி பத்தியச் சாப்பாடா வில்லே போட்டுக்கிட்டிருந்தான் அந்த நாயுடு!"

     "அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டாலே உனக்கு 'நல்ல சாப்பாடு' போடுன்னு நாயுடுவை எதிர்த்துக் கேட்கச் சத்து இருக்காதே."

     "அதுக்காகத்தான் அப்படிச் சாப்பாடு போட்டானா பாவி மனுஷன்?"

     "பின்னே? வேறே எதுக்காக? சாப்பிடுகிற சாப்பாடு - நாயுடுவை எதிர்த்துப் புரட்சி செய்யிற எந்தக் கொழுப்பையும் உனக்குள்ளற உண்டாக்கிடப் பிடாதுங்கிறது தானே அவரு நோக்கம்?"


     "எப்படியோ அதையும் சாப்பிட்டுத்தானே காலங் கடத்தினோம். ஒரு நாளா ரெண்டு நாளா? ஒரு டஜன் வருசத்துக்கு மேலேயில்ல பருப்புத் துவையலும் வெந்தயக் குழம்பும் மாங்காய் ஊறுகாயும் வவுத்துக்குள்ளாறப் போயிருக்கு?"

     "அந்த ஒரு டஜன் வருசத்தை அப்படி அங்கே கழிச்சதிலே இருந்துதானே இன்னிக்கி இங்கே இப்படி முன்னுக்கு வந்திருக்கோம்."

     "அது சரிதான்! அதை நான் ஒண்ணும் மறந்துடலே; நல்லா நினைவிருக்கு..." - என்று கோபால் கூறியபோது அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தான் முத்துக்குமரன். அவன் இதைக் கூறும்போது அவனுடைய கண்கள் எந்த அளவுக்கு ஒளி நிறைந்து தெரிகின்றன என்பதைக் காண முத்துக்குமரன் விரும்பினான். நன்றியுடைமையையும், பழைய நினைவுகளையும் பற்றிய பேச்சு எழுந்த போது மேலே பேசுவதற்கு எதுவும் விஷயமில்லாமற் போனது போலச் சிறிது நேரம் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது.

     அந்த மௌனத்தின் தொடர்பாகக் கோபால் எழுந்து சென்று சமையற்காரனிடம் இரவுச் சமையலுக்கானவற்றைச் சொல்லிவிட்டு வந்து உட்கார்ந்தான்.

     ஹாலுக்கு அப்பாலுள்ள அறையில் யாரோ ரேடியோவைப் போட்டிருக்க வேண்டும். இனிய வாத்திய இசை ஒலிக்கு முன் பேரில்லாத அநாதி தத்துவத்தில் ஐக்கியமாகிவிட்டவர்களாகிய 'நிலைய வித்வான்களின்' - காரியம் இது என்று அறிவிக்கப்பட்டது.

     "உனக்குத் தெரியுமா வாத்தியாரே? பாய்ஸ் கம்பெனியிலே 'காயாத கானகம்' பாடி அப்ளாஸ் வாங்கிக்கிட்டிருந்த கிருஷ்ணப்ப பாகவதரு இப்ப ஏ.ஐ.ஆர்லே நிலைய வித்வான் ஆயிட்டாரு."

     "ஒரு காலத்திலே சமஸ்தானங்களையும், ஆதினங்களையும், நாடகக் கம்பெனிகளையும் நம்பிக்கிட்டிருந்த கலைஞர்களுக்கு இப்ப ரேடியோதான் கஷ்ட நிவாரண மடமாயிருக்கும் போலத் தெரியுது...?"

     "நான் கூட ஒரு நாடகக் கம்பெனி ஸ்டார்ட் பண்ணப் போறேன். நம்மை அண்டிக்கிட்டிருக்கிறவங்களுக்குச் சோறு துணி குடுக்க ஏதாவது செய்ய வேண்டியிருக்கு..."

     "இப்ப பண்ணின 'இண்டர்வ்யூ' எல்லாம் அதுக்குத்தானே!" 
..........
என்னதான் சுபாவமாகவும் சகஜமாகவும் பழகினாலும் கோடீஸ்வரனாகவும், நடிகர் திலகமாகவும் ஆகிவிட்ட தன்னை முத்துக்குமரன் 'அடாபிடா' போட்டுப் பேசுவதைக் கோபால் ரசிக்கவில்லை. ஒவ்வொரு 'டா'வும் முள்ளாகக் குத்தியது. ஆனால், அதே சமயத்தில் முத்துக்குமரனின் கவிதைச் செருக்கும், தன்மானமும், பிடிவாதமும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தவை. ஆகவே, முத்துக்குமரனுக்கு அவன் பயப்படவும் செய்தான். பதிலுக்குப் பழி வாங்குவது போல் தானும் அவனை 'அடா' போட்டுப் பேசலாமா என்று ஒரு கணம் குரோதமாகத் தோன்றினாலும் அப்படிச் செய்யத் தைரியம் வரவில்லை. நீ, நான் போன்ற ஒருமைச் சொற்களும், 'வாத்தியாரே' போன்ற பெயரும்தான் தைரியமாகக் கூற வந்தன. முத்துக்குமரன் என்ற தைரியசாலியோடு மேடையில் ஸ்திரீ பார்ட் போட்ட காலங்களில், 'நாதா! தங்கள் சித்தம் என் பாக்கியம்' என்று நாணிக் கோணிக்கொண்டு அன்று கூறிய நிலையே இன்னும் நீடித்தது. முத்துக்குமரனை மீறி நிற்க முடியாத மனநிலை இன்னும் அவனிடம் இருந்தது. அந்தப் பிரமையிலிருந்து அவனால் இன்னும் விடுபட முடியவில்லை. எதிரே வந்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு எடுத்தெறிந்தாற் போன்ற கர்வத்துடனும், ஒரு கவிஞனின் செருக்குடனும் பேசும் முத்துக்குமரனின் உரிமையையோ துணிவையோ, அந்தக் கோடீஸ்வர நடிகனால் நிராகரிக்க முடியாமலிருந்தது. லாட்ஜிலிருந்து காலி செய்து சாமான்களை எடுத்து வந்துவிட்டதாக டிரைவர் வந்து தெரிவித்தான்.

கெட்டும் பட்டினம் சேர் என்று பிழைப்பிற்காக சென்னைப் பட்டினத்துக்கு வருகிற நாடக ஆசிரியன் அறிமுகம் முதல் அத்தியாயத்தில்! இரண்டாவது அத்தியாயத்தின் துவக்கத்தில் ஒரு பெண் அவன்பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, தன் பெயர் மாதவி என்றும் அறிமுகம் செய்து கொள்கிறாள். அடுத்து நேற்றைய வருடங்களில் ஒரு நாடகசபாவில் வாத்தியாருடன் சிநேகிதமாக இருந்து, இன்றைக்கு சினிமாவில் கோடீஸ்வர நடிகர்திலகமுமாக மாறிப்போன கோபால் அறிமுகம். கதைக்களத்தில் காட்சிகள் விறுவிறுப்பாக மாறுவதில் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக அறிமுகமாகிக் கொண்டே வருவதில் கதை சுவாரசியமாக கண்முன்னே விரிகிறது.

கோபால் நாடகமன்றத்துக்காக முத்துக்குமரன் நாடகம் எழுத ஆரம்பிக்கிறான். மாதவி அவன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்கிறாள் என்று சொல்லிக் கொண்டே போனால் என்ன சுவாரசியம் வரும்?

கலைச்சேவை செய்வதற்காக முத்துக்குமரன், கோபால், மாதவி உள்ளிட்ட நாடகக்குழுவை book செய்வதற்காக வரும்  கலாரசிகர் cum கான்டராக்டர் பினாங்கு அப்துல்லா பத்தாவது அத்தியாயத்தில், நாடக அரங்கேற்றத்தில் அறிமுகம் ஆகிறார். ஆரம்பமே மோதலாக! 

"தமிழர்களின் பொற்காலத்தை இந்த நாடகம் நிரூபிப்பது போல் இதுவரை வேறெந்த நாடகமும் நிரூபிக்கவில்லை. இனியும் இப்படி ஒரு நாடகம் வரப்போவதில்லை. இது வீரமும் காதலும் நிறைந்த தமிழ்க் காவியம். இதைப் படைத்தவரைப் பாராட்டுகிறேன். நடித்தவர்களைக் கொண்டாடுகிறேன். பார்த்தவர்கள் பாக்கியசாலிகள். இனிமேல் பார்க்கப் போகிறவர்களும் பாக்கியசாலிகள்" - என்று மந்திரி புகழ்மாலை சூட்டினார். உடனே முத்துக்குமரன் தப்பாக நினைக்கக் கூடாதே என்று உள்ளூறப் பயந்த கோபால் கீழே முன் வரிசையில் நேர் எதிரே அமர்ந்திருந்த அவனை மேடைக்கு அழைத்துப் பினாங்கு அப்துல்லாவிடம் ஒரு மாலையைக் கொடுத்து அதை முத்துக்குமரனுக்கு அணிவிக்கும் படி வேண்டினான். முத்துக்குமரனும் மேடைக்கு வந்து அப்துல்லா அணிவித்த மாலையை பலத்த கரகோஷத்தினிடையே ஏற்றான். அதோடு அடுத்த காட்சிக்குப் போயிருந்தால் வம்பில்லாமல் முடிந்திருக்கும். "நீ இரண்டு வார்த்தை பேசேன் வாத்தியாரே" - என்று முத்துக்குமரனுக்கு முன்னால் மைக்கை நகர்த்தினான் கோபால். முத்துக்குமரனோ அப்போது நிகரற்ற அகங்காரத்தில் திளைத்திருந்தான். அவன் பேச்சு அதை முழுமையாகப் பிரதிபலித்து விட்டது. "இப்போது இந்த மாலையை எனக்குக் சூட்டினார்கள். எப்போதுமே மாலை சூட்டுவதை வெறுப்பவன் நான். ஏனென்றால் ஒரு மாலையை ஏற்பதற்காக அதை அணிவிப்பவருக்கு முன் நான் ஒரு விநாடி தலைகுனிய நேரிடுகிறது. என்னைத் தலைகுனிய வைத்து எனக்கு அளிக்கும் எந்த மரியாதையையும் நான் விரும்புவதில்லை. நான் தலை நிமிர்ந்து நிற்கவே ஆசைப்படுகிறேன். ஒரு மாலையை என் கழுத்தில் சூட்டுவதின் மூலம் சாதாரணமானவர்கள் கூட ஒரு விநாடி என்னைத் தங்களுக்கு முன் தலைகுனிய வைத்துவிட முடிகிறதே என்பதை நினைக்கும்போது வருத்தம்."- 

     பேச்சு முடிந்து விட்டது. பினாங்கு அப்துல்லாவுக்கு முகம் சிறுத்துப் போய்விட்டது. கோபால் பதறிப் போனான். முத்துக்குமரன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிங்கநடை நடந்து தன் இருக்கைக்காக கீழே இறங்கிப் போய்க் கொண்டிருந்தான்.   

இப்படி 10 வது அத்தியாயம் முடிந்து 11 ஆரம்பம்! 
 
முத்துக்குமரன் மேடையில் அப்படி நடந்து கொண்டதைக் கோபால் ஒரு சிறிதும் விரும்பவில்லை. பினாங்கு அப்துல்லாவின் மனம் புண்படும்படி நேர்வதனால் மலேயாப் பயணமும் நாடக ஏற்பாடுகளும் வீணாகி விடுமோ என்று அவன் பயந்தான். நாடகத்தின் இறுதிக் காட்சியில் நடிக்கிறபோதுகூட இந்த எண்ணமும் பயமுமே அவன் மனத்தில் இருந்தன. 

     நாடக முடிவுக் காட்சியில் கூட்டம் மெய்மறந்து உருகியது. திரை விழுந்த பின்பும் நெடுநேரம் கைதட்டல் ஓயவே இல்லை. மந்திரி போகும்போது முத்துக்குமரனிடமும் கோபாலிடமும் சொல்லிப் பாராட்டி விட்டுப்போனார். அப்துல்லாவும் பாராட்டிவிட்டுப் போனார். அப்படிப் போகும்போது அவரை மறுநாள் இரவு தன் வீட்டில் விருந்துக்கு அழைத்தான் கோபால். 


     மேடையில் போட்ட ரோஜாப் பூ மாலை உதிர்ந்தது போலக் கூட்டமும் சிறிது சிறிதாக உதிர்ந்து கொண்டிருந்தது. 

     நிகழ்ச்சி எல்லாம் முடிந்து தேடி வந்து பாராட்டிய ஒவ்வொருவருடைய பாராட்டுக்கும் முகம் மலர்ந்த பின் அண்ணாமலை மன்றத்திலிருந்து வீடு திரும்பும்போது காரில் மாதவியிடமும் முத்துக்குமரனிடமும் குறைபட்டுக் கொண்டான் கோபால். 

     "அடுத்தவங்க மனசு சங்கடப் படறாப்பிலே பேசறது எப்பவுமே நல்லதில்லை. அப்துல்லா கிட்ட ஒரு பெரிய காரியத்தை எதிர்பார்த்து நாம் அவரை இங்கே அழைச்சிருக்கோம். அவரு மனம் சங்கடப்பட்டா நம்ம காரியம் கெட்டுப் போயிடுமோன்னுதான் பயப்பட வேண்டியிருக்கு- " 

     இதற்கு மற்ற இருவருமே பதில் சொல்லவில்லை. மீண்டும் கோபாலே தொடர்ந்து பேசலானான்: 

     "மேடையிலே கொஞ்சம் பணிந்தோ பயந்தோ பேசறதிலே தப்பு ஒண்ணுமில்லே..." என்று கோபால் கூறியதும் அதுவரை பொறுமையாயிருந்த முத்துக்குமரன் பொறுமையிழந்து,

     "ஆம்! அச்சமே கீழ்களது ஆசாரம்" - என்று வெடுக்கென மறுமொழி கூறிவிட்டான். 

     கோபாலுக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. இரண்டு பேரில் யாருக்குப் பரிந்து பேசினாலும் மற்றொருவருடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி மாதவி மௌனமாயிருக்க வேண்டியதாயிற்று. கோபாலோ கார் நா பங்களாவை அடைகிறவரை கடுங்கோபத்தோடு வஞ்சகமானதொரு மௌனத்தைச் சாதித்தான். முத்துக்குமரனோ அதைப் பொருட்படுத்தவே இல்லை. 

பள்ளிப்பருவத்தில் அறிமுகம் ஆன நல்ல எழுத்து நா.பார்த்தசாரதியுடையது. லட்சியவேகத்துடன் எழுதிய, விரல்விட்டு எண்ணக்கூடிய எழுத்தாளர்களில் ஒருவரும் கூட! நாட்டுடமை ஆக்கப்பட்ட இவரது படைப்புக்கள் அனைத்தும் இணையத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளக் கூடியதாக, கிடைக்கின்றன.

படித்துப்பாருங்கள் என்று படித்தான் பரிந்துரையாக சமுதாய வீதி புதினத்தை மறுபடியும் இங்கே நினைவுபடுத்துகிறேன்.