சமுதாய வீதி! நா.பார்த்தசாரதி

புத்தகங்களை ஏன் படிக்கிறோம்? எதற்காகப் படிக்கிறோம்? 

அந்த நாட்களில் இந்தக் கேள்வியை எடுத்துக் கொண்டு "கூட்டாஞ்சோறு" ஆர்வி புத்தகங்களுக்கான தன்னுடைய தனி வலைப்பக்கங்களில்  ஒரு தொடர் பதிவாக எழுதியிருந்தார் 

இந்தக் கேள்வியே எனக்குக் கொஞ்சம் வினோதமாகத் தான் தெரிகிறது. என்னுடைய சிறுவயதில் இருந்தே என்னுடைய அண்ணன்மார்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை எனக்கும் தொற்றி விட்டதால் இந்தக் கேள்வி விநோதமாக இருக்கலாம். ஆனால் புத்தகம் படிப்பது மட்டும் இல்லை, எந்த ஒரு பழக்கத்திற்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களே முன்னோடிகளாக ஆரம்பித்துக் கொடுக்கிறார்கள், நாம் நமது சூழ்நிலை, ஆர்வத்திற்குத் தகுந்த மாதிரி இந்தப் பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறோம் அல்லது மறந்து விடுகிறோம் என்பது தான் சரியான பதிலாக இருக்கும் என்று தோன்றுகிறது.


இன்றைக்குத் தற்செயலாக Good Reads தளத்தில் 50 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த சமுதாய வீதி புதினத்துக்கு வாசகர் பரிந்துரையாக 2018 டிசம்பரில் 
இப்படி ஏழே வரிகளில்! 

Praveen
Aug 02, 2018rated it it was amazing  ·  review of another edition
1. Sahitya Academy winning book
2. Every character has been justified
3. Professional's has had the pride and temper which can't eradicate from their behavior
4. Though the book written in 1968, but many scenes depicts the present generation
5. I enjoyed the character of Gopal - who know how to do the branding in his domain
6. Author gave an insight of Artist's situation much early. He's a prophet i would say
7. Completed this book in 3 hours without a break ; hypnotized by every situation and dialouge


இதை பார்த்ததும் மனதுக்குள் ஏக மகிழ்ச்சி. ஒரு நல்ல எழுத்தாளன், தன்னுடைய காலத்துக்குப் பிறகும் , தன் படைப்புகளில் உயிர்வாழ்வதைப் பார்க்க முடிவதில் வருகிற மகிழ்ச்சி, சிலிர்ப்பு! "அச்சமே கீழ்களது ஆச்சாரம்"   இப்படி இந்தப் புதினத்தில் நாயகன் சொல்வதாக அமரர் நா.பார்த்தசாரதி எழுதிய வரிகளில் இருக்கும் அறச்சீற்றத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், புத்தகத்தைப் படித்துவிடுவது ஒன்று தான் சுலபமான, நல்லவழி! 

இது கலைஞர்களைப் பற்றிய கதை. ஒரு நல்ல கலைஞன் என்று ஆரம்பித்துச் சொல்லும்போதே இங்கே ஏய்ப்பதில் கலைஞன் என்றும்   உண்டில்லையா?

அப்படி நேரெதிரான குணாதிசயங்களைக் கொண்ட இருவரின் கதையாக, சமுதாய வீதி நாவலைச் சொல்லி விடலாமா? சொல்லலாம் தான்! அனால் இது அந்த இருவருடைய கதை என்பதையும் தாண்டி, இன்று கலைச்சேவை செய்வதற்காக சிங்கப்பூர் மலேசியா வளைகுடாநாடுகள் என்றெல்லாம் பயணிக்கிறார்கள் இல்லையா, அந்தக் கலைச்சேவை எப்படிப்பட்டது என்பதையும் கொஞ்சம் புட்டுவைத்திருப்பது, நா.பா ஒருவருக்கே கைவருகிற லாவகம் என்பதைவிட ஒருவித சத்திய ஆவேசம் என்றே கொள்ளலாம்.

நாடகசபாவில் வாத்தியாராக இருந்த முத்துக்குமரன், சென்னைக்கு வருகிறான்.நாடகசபாவில் இருந்து, இன்று சினிமாவில் நடிகர்திலகமுமாகிப்போன பழைய நண்பன் கோபாலிடம் சொல்லி தன்னுடைய பிழைப்புக்கும் ஏதாவது செய்து கொள்ளலாம் என்று வந்ததில் இருவருடைய குணவார்ப்பும் வெளிப்படுகிற வரிகள் இவை:       

 முத்துக்குமரன் பதில் சொல்லவில்லை. கோபாலின் டிரைவர் சிறிய கார் ஒன்றில் எழும்பூருக்குப் புறப்பட்டுப் போனான். அவனை அனுப்பி விட்டுத் திரும்பி வந்த கோபால் நண்பனை மிகவும் பிரியத்தோடு அணுகி, "ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே. நல்லாச் சேர்ந்து சாப்பிடணும். ராத்திரி என்ன சமையல் செய்யச் சொல்லட்டும்?... சங்கோசப்படாமே சொல்லு வாத்தியாரே?..."

     "பருப்புத் துவையல், வெந்தயக் குழம்பு, மாங்காய் ஊறுகாய்..."

     "சே! சே! அடுத்த பிறவி எடுத்தால் கூட நீ அந்த பாய்ஸ் கம்பெனியின் நிரந்தர 'மெனு'வை மறக்க மாட்டே போலிருக்கே... மனித குணங்களாகிய காதல், சோகம், வீரம் எதுவுமே நமக்கு உண்டாகி விடாதபடி பத்தியச் சாப்பாடா வில்லே போட்டுக்கிட்டிருந்தான் அந்த நாயுடு!"

     "அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டாலே உனக்கு 'நல்ல சாப்பாடு' போடுன்னு நாயுடுவை எதிர்த்துக் கேட்கச் சத்து இருக்காதே."

     "அதுக்காகத்தான் அப்படிச் சாப்பாடு போட்டானா பாவி மனுஷன்?"

     "பின்னே? வேறே எதுக்காக? சாப்பிடுகிற சாப்பாடு - நாயுடுவை எதிர்த்துப் புரட்சி செய்யிற எந்தக் கொழுப்பையும் உனக்குள்ளற உண்டாக்கிடப் பிடாதுங்கிறது தானே அவரு நோக்கம்?"


     "எப்படியோ அதையும் சாப்பிட்டுத்தானே காலங் கடத்தினோம். ஒரு நாளா ரெண்டு நாளா? ஒரு டஜன் வருசத்துக்கு மேலேயில்ல பருப்புத் துவையலும் வெந்தயக் குழம்பும் மாங்காய் ஊறுகாயும் வவுத்துக்குள்ளாறப் போயிருக்கு?"

     "அந்த ஒரு டஜன் வருசத்தை அப்படி அங்கே கழிச்சதிலே இருந்துதானே இன்னிக்கி இங்கே இப்படி முன்னுக்கு வந்திருக்கோம்."

     "அது சரிதான்! அதை நான் ஒண்ணும் மறந்துடலே; நல்லா நினைவிருக்கு..." - என்று கோபால் கூறியபோது அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தான் முத்துக்குமரன். அவன் இதைக் கூறும்போது அவனுடைய கண்கள் எந்த அளவுக்கு ஒளி நிறைந்து தெரிகின்றன என்பதைக் காண முத்துக்குமரன் விரும்பினான். நன்றியுடைமையையும், பழைய நினைவுகளையும் பற்றிய பேச்சு எழுந்த போது மேலே பேசுவதற்கு எதுவும் விஷயமில்லாமற் போனது போலச் சிறிது நேரம் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது.

     அந்த மௌனத்தின் தொடர்பாகக் கோபால் எழுந்து சென்று சமையற்காரனிடம் இரவுச் சமையலுக்கானவற்றைச் சொல்லிவிட்டு வந்து உட்கார்ந்தான்.

     ஹாலுக்கு அப்பாலுள்ள அறையில் யாரோ ரேடியோவைப் போட்டிருக்க வேண்டும். இனிய வாத்திய இசை ஒலிக்கு முன் பேரில்லாத அநாதி தத்துவத்தில் ஐக்கியமாகிவிட்டவர்களாகிய 'நிலைய வித்வான்களின்' - காரியம் இது என்று அறிவிக்கப்பட்டது.

     "உனக்குத் தெரியுமா வாத்தியாரே? பாய்ஸ் கம்பெனியிலே 'காயாத கானகம்' பாடி அப்ளாஸ் வாங்கிக்கிட்டிருந்த கிருஷ்ணப்ப பாகவதரு இப்ப ஏ.ஐ.ஆர்லே நிலைய வித்வான் ஆயிட்டாரு."

     "ஒரு காலத்திலே சமஸ்தானங்களையும், ஆதினங்களையும், நாடகக் கம்பெனிகளையும் நம்பிக்கிட்டிருந்த கலைஞர்களுக்கு இப்ப ரேடியோதான் கஷ்ட நிவாரண மடமாயிருக்கும் போலத் தெரியுது...?"

     "நான் கூட ஒரு நாடகக் கம்பெனி ஸ்டார்ட் பண்ணப் போறேன். நம்மை அண்டிக்கிட்டிருக்கிறவங்களுக்குச் சோறு துணி குடுக்க ஏதாவது செய்ய வேண்டியிருக்கு..."

     "இப்ப பண்ணின 'இண்டர்வ்யூ' எல்லாம் அதுக்குத்தானே!" 
..........
என்னதான் சுபாவமாகவும் சகஜமாகவும் பழகினாலும் கோடீஸ்வரனாகவும், நடிகர் திலகமாகவும் ஆகிவிட்ட தன்னை முத்துக்குமரன் 'அடாபிடா' போட்டுப் பேசுவதைக் கோபால் ரசிக்கவில்லை. ஒவ்வொரு 'டா'வும் முள்ளாகக் குத்தியது. ஆனால், அதே சமயத்தில் முத்துக்குமரனின் கவிதைச் செருக்கும், தன்மானமும், பிடிவாதமும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தவை. ஆகவே, முத்துக்குமரனுக்கு அவன் பயப்படவும் செய்தான். பதிலுக்குப் பழி வாங்குவது போல் தானும் அவனை 'அடா' போட்டுப் பேசலாமா என்று ஒரு கணம் குரோதமாகத் தோன்றினாலும் அப்படிச் செய்யத் தைரியம் வரவில்லை. நீ, நான் போன்ற ஒருமைச் சொற்களும், 'வாத்தியாரே' போன்ற பெயரும்தான் தைரியமாகக் கூற வந்தன. முத்துக்குமரன் என்ற தைரியசாலியோடு மேடையில் ஸ்திரீ பார்ட் போட்ட காலங்களில், 'நாதா! தங்கள் சித்தம் என் பாக்கியம்' என்று நாணிக் கோணிக்கொண்டு அன்று கூறிய நிலையே இன்னும் நீடித்தது. முத்துக்குமரனை மீறி நிற்க முடியாத மனநிலை இன்னும் அவனிடம் இருந்தது. அந்தப் பிரமையிலிருந்து அவனால் இன்னும் விடுபட முடியவில்லை. எதிரே வந்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு எடுத்தெறிந்தாற் போன்ற கர்வத்துடனும், ஒரு கவிஞனின் செருக்குடனும் பேசும் முத்துக்குமரனின் உரிமையையோ துணிவையோ, அந்தக் கோடீஸ்வர நடிகனால் நிராகரிக்க முடியாமலிருந்தது. லாட்ஜிலிருந்து காலி செய்து சாமான்களை எடுத்து வந்துவிட்டதாக டிரைவர் வந்து தெரிவித்தான்.

கெட்டும் பட்டினம் சேர் என்று பிழைப்பிற்காக சென்னைப் பட்டினத்துக்கு வருகிற நாடக ஆசிரியன் அறிமுகம் முதல் அத்தியாயத்தில்! இரண்டாவது அத்தியாயத்தின் துவக்கத்தில் ஒரு பெண் அவன்பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, தன் பெயர் மாதவி என்றும் அறிமுகம் செய்து கொள்கிறாள். அடுத்து நேற்றைய வருடங்களில் ஒரு நாடகசபாவில் வாத்தியாருடன் சிநேகிதமாக இருந்து, இன்றைக்கு சினிமாவில் கோடீஸ்வர நடிகர்திலகமுமாக மாறிப்போன கோபால் அறிமுகம். கதைக்களத்தில் காட்சிகள் விறுவிறுப்பாக மாறுவதில் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக அறிமுகமாகிக் கொண்டே வருவதில் கதை சுவாரசியமாக கண்முன்னே விரிகிறது.

கோபால் நாடகமன்றத்துக்காக முத்துக்குமரன் நாடகம் எழுத ஆரம்பிக்கிறான். மாதவி அவன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்கிறாள் என்று சொல்லிக் கொண்டே போனால் என்ன சுவாரசியம் வரும்?

கலைச்சேவை செய்வதற்காக முத்துக்குமரன், கோபால், மாதவி உள்ளிட்ட நாடகக்குழுவை book செய்வதற்காக வரும்  கலாரசிகர் cum கான்டராக்டர் பினாங்கு அப்துல்லா பத்தாவது அத்தியாயத்தில், நாடக அரங்கேற்றத்தில் அறிமுகம் ஆகிறார். ஆரம்பமே மோதலாக! 

"தமிழர்களின் பொற்காலத்தை இந்த நாடகம் நிரூபிப்பது போல் இதுவரை வேறெந்த நாடகமும் நிரூபிக்கவில்லை. இனியும் இப்படி ஒரு நாடகம் வரப்போவதில்லை. இது வீரமும் காதலும் நிறைந்த தமிழ்க் காவியம். இதைப் படைத்தவரைப் பாராட்டுகிறேன். நடித்தவர்களைக் கொண்டாடுகிறேன். பார்த்தவர்கள் பாக்கியசாலிகள். இனிமேல் பார்க்கப் போகிறவர்களும் பாக்கியசாலிகள்" - என்று மந்திரி புகழ்மாலை சூட்டினார். உடனே முத்துக்குமரன் தப்பாக நினைக்கக் கூடாதே என்று உள்ளூறப் பயந்த கோபால் கீழே முன் வரிசையில் நேர் எதிரே அமர்ந்திருந்த அவனை மேடைக்கு அழைத்துப் பினாங்கு அப்துல்லாவிடம் ஒரு மாலையைக் கொடுத்து அதை முத்துக்குமரனுக்கு அணிவிக்கும் படி வேண்டினான். முத்துக்குமரனும் மேடைக்கு வந்து அப்துல்லா அணிவித்த மாலையை பலத்த கரகோஷத்தினிடையே ஏற்றான். அதோடு அடுத்த காட்சிக்குப் போயிருந்தால் வம்பில்லாமல் முடிந்திருக்கும். "நீ இரண்டு வார்த்தை பேசேன் வாத்தியாரே" - என்று முத்துக்குமரனுக்கு முன்னால் மைக்கை நகர்த்தினான் கோபால். முத்துக்குமரனோ அப்போது நிகரற்ற அகங்காரத்தில் திளைத்திருந்தான். அவன் பேச்சு அதை முழுமையாகப் பிரதிபலித்து விட்டது. "இப்போது இந்த மாலையை எனக்குக் சூட்டினார்கள். எப்போதுமே மாலை சூட்டுவதை வெறுப்பவன் நான். ஏனென்றால் ஒரு மாலையை ஏற்பதற்காக அதை அணிவிப்பவருக்கு முன் நான் ஒரு விநாடி தலைகுனிய நேரிடுகிறது. என்னைத் தலைகுனிய வைத்து எனக்கு அளிக்கும் எந்த மரியாதையையும் நான் விரும்புவதில்லை. நான் தலை நிமிர்ந்து நிற்கவே ஆசைப்படுகிறேன். ஒரு மாலையை என் கழுத்தில் சூட்டுவதின் மூலம் சாதாரணமானவர்கள் கூட ஒரு விநாடி என்னைத் தங்களுக்கு முன் தலைகுனிய வைத்துவிட முடிகிறதே என்பதை நினைக்கும்போது வருத்தம்."- 

     பேச்சு முடிந்து விட்டது. பினாங்கு அப்துல்லாவுக்கு முகம் சிறுத்துப் போய்விட்டது. கோபால் பதறிப் போனான். முத்துக்குமரன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிங்கநடை நடந்து தன் இருக்கைக்காக கீழே இறங்கிப் போய்க் கொண்டிருந்தான்.   

இப்படி 10 வது அத்தியாயம் முடிந்து 11 ஆரம்பம்! 
 
முத்துக்குமரன் மேடையில் அப்படி நடந்து கொண்டதைக் கோபால் ஒரு சிறிதும் விரும்பவில்லை. பினாங்கு அப்துல்லாவின் மனம் புண்படும்படி நேர்வதனால் மலேயாப் பயணமும் நாடக ஏற்பாடுகளும் வீணாகி விடுமோ என்று அவன் பயந்தான். நாடகத்தின் இறுதிக் காட்சியில் நடிக்கிறபோதுகூட இந்த எண்ணமும் பயமுமே அவன் மனத்தில் இருந்தன. 

     நாடக முடிவுக் காட்சியில் கூட்டம் மெய்மறந்து உருகியது. திரை விழுந்த பின்பும் நெடுநேரம் கைதட்டல் ஓயவே இல்லை. மந்திரி போகும்போது முத்துக்குமரனிடமும் கோபாலிடமும் சொல்லிப் பாராட்டி விட்டுப்போனார். அப்துல்லாவும் பாராட்டிவிட்டுப் போனார். அப்படிப் போகும்போது அவரை மறுநாள் இரவு தன் வீட்டில் விருந்துக்கு அழைத்தான் கோபால். 


     மேடையில் போட்ட ரோஜாப் பூ மாலை உதிர்ந்தது போலக் கூட்டமும் சிறிது சிறிதாக உதிர்ந்து கொண்டிருந்தது. 

     நிகழ்ச்சி எல்லாம் முடிந்து தேடி வந்து பாராட்டிய ஒவ்வொருவருடைய பாராட்டுக்கும் முகம் மலர்ந்த பின் அண்ணாமலை மன்றத்திலிருந்து வீடு திரும்பும்போது காரில் மாதவியிடமும் முத்துக்குமரனிடமும் குறைபட்டுக் கொண்டான் கோபால். 

     "அடுத்தவங்க மனசு சங்கடப் படறாப்பிலே பேசறது எப்பவுமே நல்லதில்லை. அப்துல்லா கிட்ட ஒரு பெரிய காரியத்தை எதிர்பார்த்து நாம் அவரை இங்கே அழைச்சிருக்கோம். அவரு மனம் சங்கடப்பட்டா நம்ம காரியம் கெட்டுப் போயிடுமோன்னுதான் பயப்பட வேண்டியிருக்கு- " 

     இதற்கு மற்ற இருவருமே பதில் சொல்லவில்லை. மீண்டும் கோபாலே தொடர்ந்து பேசலானான்: 

     "மேடையிலே கொஞ்சம் பணிந்தோ பயந்தோ பேசறதிலே தப்பு ஒண்ணுமில்லே..." என்று கோபால் கூறியதும் அதுவரை பொறுமையாயிருந்த முத்துக்குமரன் பொறுமையிழந்து,

     "ஆம்! அச்சமே கீழ்களது ஆசாரம்" - என்று வெடுக்கென மறுமொழி கூறிவிட்டான். 

     கோபாலுக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. இரண்டு பேரில் யாருக்குப் பரிந்து பேசினாலும் மற்றொருவருடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி மாதவி மௌனமாயிருக்க வேண்டியதாயிற்று. கோபாலோ கார் நா பங்களாவை அடைகிறவரை கடுங்கோபத்தோடு வஞ்சகமானதொரு மௌனத்தைச் சாதித்தான். முத்துக்குமரனோ அதைப் பொருட்படுத்தவே இல்லை. 

பள்ளிப்பருவத்தில் அறிமுகம் ஆன நல்ல எழுத்து நா.பார்த்தசாரதியுடையது. லட்சியவேகத்துடன் எழுதிய, விரல்விட்டு எண்ணக்கூடிய எழுத்தாளர்களில் ஒருவரும் கூட! நாட்டுடமை ஆக்கப்பட்ட இவரது படைப்புக்கள் அனைத்தும் இணையத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளக் கூடியதாக, கிடைக்கின்றன.

படித்துப்பாருங்கள் என்று படித்தான் பரிந்துரையாக சமுதாய வீதி புதினத்தை மறுபடியும் இங்கே நினைவுபடுத்துகிறேன்.

   

    

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!