Showing posts with label பாசிடிவ் பதிவுகள். Show all posts
Showing posts with label பாசிடிவ் பதிவுகள். Show all posts

கீதை மீது திடீர்க் காதல்!



மூன்று நாட்களுக்கு முன்னால் மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் மேலாண்மைப் பாடத்தில் பகவத் கீதையைச் சேர்க்கலாமா என்ற விவாத இழையைப் பார்த்தேன். ஏற்கெனெவே மேலாண்மைத் துறை நிபுணர்கள் பலரும் கீதை சொல்லும் கருத்துக்கள், வெறும் புராணக் கதை, மத நம்பிக்கை என்பதற்கும் மேலாக வாழ்வியல் உண்மைகளைப் பிரதிபலிக்கும் சிந்தனையாகவும், சிக்கல்களில் இருந்து விடுபட உதவும் பாடங்களாகவும் இருப்பதைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முடியும் என்பதால் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலுமே, கீதை சொல்லும் படிப்பினைகளை வைத்து, மேலாண்மையைச் சொல்லிக் கொடுப்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது என்பது முன்பே தெரிந்த விஷயமாக இருந்ததால், அதைப்பற்றி அப்போது அதிகமாக  யோசிக்கவில்லை. தவிர அந்த விவாத இழையுமே கூட, தினமலரில் வந்த ஒரு செய்தியை வைத்து ஆரம்பித்து, "மதம் சார்ந்த புத்தகங்களிலிருக்கும் கருத்துக்களை பாடத்தில் சேர்த்தால் பிரச்சனைகள் வருமே ?" என்று திரு காமேஷ் என்பவர் கவலைப் பட்டிருக்கிறார்.


கீதை சொல்லும் மிக முக்கியமான கருத்து, அதன் பதினெட்டாம் அத்தியாயத்தில் அறுபத்தாறாவது ஸ்லோகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது!
மா சுச:  கவலைப் படாதே! நம்மூரு செக்குலரிசம் என்ன என்னவெல்லாம் செய்யும் என்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டு அப்போதைக்குப் பேசாமல் இருந்து விட்டேன். இன்றைக்கு, சேலத்தில் இருந்து நண்பர் என். இளங்கோ ஒரு ஃபார்வர்ட்  மெயிலில் வந்த தகவலை எனக்கும் அனுப்பியிருந்தார். சில நாட்களாகவே, Guest Post என்று சில நண்பர்களை, குறிப்பிட்ட விஷயத்தைத் தொட்டுச் சொல்லும் பதிவுகளாக எழுதச் சொன்னால் என்ன என்ற யோசனை இருந்து கொண்டே இருந்த நேரத்தில், மிகப் பொருத்தமான ஒரு விஷயம், அந்த ஃபார்வர்ட்  மெயிலில் இருந்ததால் முதல் Guest Post தயார்!

நல்லதை நானும் கேட்பேன், என்னுடைய நண்பர்களும் கேட்பார்கள், இந்த நாடுமே கேட்கும் என்ற நிலையை உருவாக்கக் கூடிய நல்ல எண்ணங்களாக, நல்ல செயல்களாக ஆரம்பித்து வைப்பது நம்மிடம் இருந்தே தொடங்குகிறது!

கீதையை காதலிக்கும் அமெரிக்கா

வணிக மேலாண்மையில் மிகப்பிரபலமான ஆசிய புத்தகமாக சன் ட்சூவின் "ஆர்ட் ஆப் வார்"  இருந்து வந்தது."ஆர்ட் ஆப் வார்" தொன்மையான நூல் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பகவத் கீதை ஆர்ட் ஆப் வாரின் இடத்தை பிடிக்கப் போகிறது
என பிஸினஸ் வீக் பத்திரிக்கை தெரிவிக்கிறது.


அமெரிக்க கம்பனிகள் கீதையின் மேல் காதல் கொள்ள துவங்கியிருப்பதாக தெரிவிக்கும் பிஸினஸ் வீக் அதை பற்றி ஒரு சிறப்பு கட்டுரை எழுதியுள்ளது. கீதையில் உள்ள நிர்வாக மற்றும் சுயமுன்னேற்ற கோட்பாடுகள் அமெரிக்க கம்பனிகளை பெரிதும் கவர்வதாக பிஸினஸ் வீக்  குறிப்பிட்டுள்ளது.

ஸ்வாமி பார்த்தசாரதி எனும் வேதாந்த உபன்யாசகர் உலகின் மிகப்புகழ் பெற்ற பிஸினஸ் பல்கலைக்கழகமான வார்ட்டனில் கீதையை பயன்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பது எப்படி என மாணவர்களுக்கு வகுப்பெடுத்தாராம். அமெரிக்காவின் நிதி மற்றும் முதலீட்டு வணிகர்கள் (வென்சர் காபிடலிஸ்ட்ஸ்) நிரந்தரமாக மன அழுத்தத்தில் சிக்கியிருப்பவர்கள்.

அவர்களுக்கு ரை, நியூயார்க்கில் ஸ்வாமி பார்த்தசாரதி நடத்திய வகுப்பில் பொருளை தேடி உள்மன அமைதியை தொலைப்பதை பற்றி கீதை சொல்லியிருப்பதை குறிப்பிட்டு பேசினார் என்கிறது பிஸினஸ் வீக்.
லீமன் பிரதர்ஸ் எனும் கம்பனியில் பார்த்தசாரதியிடம் ஒரு இன்வஸ்ட்மண்ட் பாங்கர் தனது சகபணியாளர்கள் உருவாக்கும் அவஸ்தையை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதற்கு பார்த்தசாரதி "அவர்களை உன் மனதிலிருந்து அகற்றிவிடு" "உன் வாழ்வை நீ தான் உருவாக்குகிறாய்" என்று பதில் சொன்னதை குறிப்பிட்டு சிலாகிக்கிறது பிஸினஸ் வீக்.

ஸ்வாமி பார்த்தசாரதியின் உரைகள் ஒரு சாம்பிள் தான் என்கிறது பிஸினஸ் வீக். அமெரிக்க கம்பனிகள் இந்திய தத்துவத்திலும் நூல்களாலும் கவரப்படுகின்றன என்கிறது பிஸினஸ் வீக். அமெரிக்க கம்பனிகள் இந்திய தத்துவத்தை தழுவுகின்றன (American firms embrace Indian philosophy) என்றே சொல்லி சிலாகிக்கிறது பிஸினஸ் வீக்.

பகவத் கீதை என்றில்லை, பல இந்திய தொன்மையான நூல்கள் அமெரிக்க கார்ப்பரேட்களாலும் கன்சல்டன்ட்களாலும் பயன்படுத்தப்படுகின்றனவாம். அமெரிக்காவின் மிகப் பிரபலமான பிஸினஸ் பல்கலைகழகங்கள் மாணவர்களுக்கு "தன்னை அறிதல்" மற்றும் "உள்மன அமைதி" ஆகிய இந்திய தத்துவங்களை போதித்து மானேஜர்களுக்கு தலைமை தாங்கும் பண்புகளை கற்பிக்கின்றன என்கிறது பிஸினஸ் வீக்.

இந்திய நூல்கள் போதாது என்று இந்தியர்கள் புகழ் பெற்ற மானேஜ்மன்ட் குருக்களாகவும் புகழ் பெறுகின்றனராம். சி.கே பிரஹலாத், ராம்சரண், விஜய் கோவிந்தராஜன் போன்ற கன்சல்டன்ட்கள் உலகின் புகழ் பெற்ர பிஸினஸ் குருக்களாக இருக்கின்றனர் என்கிறது பிஸினஸ் வீக்.

"
கெல்லாக், வார்ட்டன், ஹார்வர்ட், டார்மவுத் ஆகிய புகழ் பெற்ற ஐவி லீக் பிஸினஸ் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் இந்திய கலாச்சாரத்தையும், அதன் சிறப்பியல்புகளையும் அறிந்து கொள்கின்றனர்" என கெல்லாக் பிஸினஸ் ஸ்கூலின் டீனான தீபக் ஜெயின் தெரிவிக்கிறார்.

வணிகம் என்பது லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொள்ளக்கூடாது எனும் இந்திய கொள்கை வெகுவாக வரவேற்பு பெறுவதாக சொல்கிறது பிஸினஸ் வீக். வணிகம் சமூக நலனை தான் முக்கியமாக கருதவேண்டும் எனும் இந்திய கலாச்சார கோட்பாடு வணிக நிர்வாக உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தும் என்றும் பிஸினஸ் வீக் கணிக்கிறது.

கீதை வழி நிர்வாகத்தை "இன்க்ளூசிவ் கேபிடலிசம்(Inclusive capitalism)" என்கிறார் சி.கே பிரஹலாத். சமூகநலனையும், லாபத்தையும் கம்பனிகள் ஒருங்கே உருவாக்க வேண்டும் என்பதே இக்கோட்பாட்டின் அடிப்படை.

கீதை வழி நிர்வாகத்தை "கர்மா கேபிடலிஸம்" என்றே அழைக்கிறது பிஸினஸ் வீக். என்ரான், டெக்னாலஜி பப்பிள் என வெறுத்து போயிருக்கும் அமெரிக்கர்கள் கீதையை மனதார காதலிக்கின்றனராம்.. அமெரிக்காவின் தற்போதைய புகழ் பெற்ற கிழக்கின் மானேஜ்மெண்ட் நூல் கீதைதான் என சொல்லுகிறது பிஸினஸ் வீக்.. ஸ்ப்ரிண்ட் நெக்ஸ்டெல் கார்ப்பரேஷனின் மானேஜர் ஒருவர் எழுதிய "Bhagavad Gita on Effective Leadership"
 என்ற நூல் விற்பனையில் சக்கைபோடு போட்டதாம்.

ஜெனெரல் எலக்ட்ரிக்கின் தலைமை நிர்வாகி ஜெஃப்ரி எம்மெல்டுக்கு பயிற்சி அளிக்கும் ராம்சரண்  "கடமையை, சுயநலத்தை விட பெரிதாக வலியுறுத்தும் கீதை கார்ப்பர்ரெட் நிர்வாகத்துக்கு அளப்பரிய பொருத்தம் வாய்ந்தது" என்கிறார்.

இந்திய தத்துவமரபு அமெரிக்க கம்பனிகளுக்குக்கு மிகப் பொருத்தமானது என புகழாரம் சூட்டுகிறது பிஸினஸ் வீக். சந்தையியல் துறைக்கும் கீதை பொருத்தமானது, சிறப்பு வாய்ந்தது என சொல்கிறது பிஸினஸ் வீக்.

"எவன் என்னை பிறப்பற்றவன் என்றும் அநாதியானவன் என்றும் உலகங்களுக்கெல்லாம் தலைவன் என்றும் அறிகிறானோ அவனே தன்னை அறிந்தவன். என்னை நன்றாக அறிந்த மனிதனே தன்னை நன்றாக அறிந்தவனாகிறான்.அவனே மனச்சாந்தி அடைகிறான்"

- கீதையில் கண்ணன்.

எப்போது ஆரம்பித்தது என்ற விவரம் இல்லை! இந்த ஃபார்வர்ட் இணையத்தில் மெயில் சுற்றிக் கொண்டுவந்து இந்த  நேரம் பார்த்து என்னிடம் வந்துசேர்ந்திருக்கிறது. இதை சங்கிலியாக .ஆரம்பித்துவைத்தவர் திரு குமார ராஜா! அபு தாபியில் ஒரு பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

Mr.Kumara Raja.
Senior Sustainability Engineer,
Masdar Development Project 1,

ETA M&E Division,
Abu Dhabi.
Mobile:+971-50-2218843 என்ற விவரம் மட்டும் கிடைக்கிறது. பிசினெஸ் வீக் பத்திரிகையின் முதல் லிங்க் மூன்று வருடத்துக்கு முந்தைய செய்தி. இரண்டாவது ஒரு வருடத்துக்கு முந்தையது. லெமன் பிரதர்ஸ் சரிவைச் சந்திக்க ஆரம்பித்தபோது., வரிசையாக அமெரிக்க வங்கிகள், நிதித்துறை நிறுவனங்கள் கவிழ ஆரம்பித்த தருணத்தைஒட்டியது.

 நிகிதா மீரா!
இதை எனக்கு ஃபார்வர்ட் செய்த நண்பர் திரு இளங்கோ, சேலத்தில் ஒரு பொறியியல்  கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு  எனது நன்றி!
மகள் நிகிதா மீரா மற்றும் வீட்டில் அனைவரும் நலம் தானே இளங்கோ!
******
போன பதிவில் புது வருடத் தீர்மானங்களைப் பற்றிச் சொல்லியிருந்தேன்! பத்த வச்சுட்டியே பரட்டை என்று ஒரு தொடர் சங்கிலி இடுகைக்கு என்னை விதூஷ் என்கிற வித்யா அழைத்திருக்கிறார்! பத்துப் புதுவருடத் தீர்மானங்கள் பற்றி எழுத வேண்டுமாம்! பரட்டைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு, பத்தவைப்பது எப்படி என்பது கூட மறந்து போய்..... {வெண்குழல் வேந்தராக இருந்த காலம் ஒன்று உண்டு! மூன்றரை வருடத்திற்கு முன்னால், பைபாஸ் சர்ஜரி பண்ணிக் கொள்ள நேரிட்ட போது,  சிகரெட்டைப் பத்தவைக்கிற, ஊதுகிற பழக்கமும் போயே போயிந்தி!)

விதூஷுக்கு  ரெசொல்யூஷன் என்றால் என்ன தெரியாதாம்! இந்தப் படங்களைக் கொஞ்சம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்! எதுவுமே தெரியாதென்றால், சரியான விடை கடைசியில் இருக்கிறது! 



அதே மாதிரி எனக்கும், பரட்டை, பத்தவைப்பது ரெண்டுமே தெரியாது!
இந்த சங்கிலித் தொடர் ஆட்டம் எத்தனை மாதங்கள் நீடிக்கும், இன்னும் எத்தனை பேரைப் பீடிக்கும்  என்று ஒருத்தர் அங்கே கிலியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்! அந்த மாதிரி பயந்த சுபாவம் உள்ள, மென்மையான மக்களுடைய நலம் கருதி, இந்தத் தொடர் ஆட்டத்தையும், தொடர் கதை மாதிரி, அடுத்து வரும் ஒவ்வொரு பதிவிலும், இரண்டு அல்லது மூன்று தீர்மானங்களாகக் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதலாம் என்று ஒரு ஆறுதலான செய்தியைச் சொல்லி விட்டு............


புது வருடத் தீர்மானம் நம்பர் ஒன்று!

பிறக்கிற புது வருஷத்திலாவது, இப்படி எழுதிக் குவிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்ற யோசனையைக் கூட, புத்தாண்டுத் தீர்மானமாக அறிவித்துவிடலாமா என்று தோன்றுகிறது!

எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு தடுமாற வேண்டாம்! நேத்தைக்கு எழுதினது தான் இது!

புது வருடத் தீர்மானம் நம்பர் ரெண்டு!

எத்தனையோ புத்தகங்கள், செய்திகளைப் படிக்கிறோம்! ஆனால், தமிழில் படித்ததைப் பற்றி, தங்களுடைய விமரிசனமாக, கருத்துக்களாக எழுதும் பதிவுகள் மிஞ்சிப் போனால் ஒரு ஏழு அல்லது எட்டு இருக்குமா? இந்தப் பக்கங்களில், பெரும்பாலானவை, படித்ததில்  என்னைத் தொட்ட விஷயங்களைப் பற்றிக் கொஞ்சம் மேலோட்டமாகச் சொல்லிக் கொண்டு போனாலும், படித்த புத்தகங்களில் ஒவ்வொன்றாக ஒரு முழுமையான விமரிசனமாக அல்லது எனக்குள் ஏற்படுத்திய தாக்கமாக, வாரம் ஒரு பதிவாவது எழுத வேண்டும். இந்தப்பக்கங்களில் எனக்குள் இருக்கும் வாசகனும் வெளிப்பட வேண்டும்இல்லையா! 

புது வருடத் தீர்மானம் நம்பர் மூன்று!

வருகிற புது வருடத்திலாவது, இப்படித் தொடரும், சங்கிலிப் பதிவுகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது! இந்த வருடத்தில் இது மூன்றாவது சங்கிலித் தொடர்! முதலில் கோவி கண்ணன் அழைத்தார்! அப்புறம் வால் பையன்! இப்போது விதூஷ்! என்னால் முடிந்த நல்ல காரியம், எவரையும் குறிப்பிட்டு, தொடர் ஆட்டத்திற்கு  வாருங்கள் என்று வம்பில் சிக்க வைப்பது இல்லை!

ஏன் இந்த மாதிரி ஆட்டத்தில் அப்புறம் சிக்கிக் கொண்டேன் என்கிறீர்களா?  




ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லை!



 "நான் அப்படியே சாப்பிடுவேன்" "ஐ யாம் எ காம்ப்ளான் பாய்"

இந்த மாதிரிக் குழந்தைகளை மையமாக வைத்து விளம்பரப்படங்கள் நிறைய வளர்ந்திருக்கின்றன.குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப் பட்டவை என்றாலும், டார்கெட் ஆடியன்ஸ் நாம் எல்லோருமே தான். அதுவும் தவிர மார்க்கெட்டிங் துறையில், ஒரு குறிப்பிடத் தகுந்த ஆராய்ச்சி முடிவு, குழந்தைகள் எதை வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் முக்கியமான பங்காற்றுவதாகத் தெரிவிக்கிறது. இந்த வலிமையான செக்மெண்டை கவர்வதற்காகவே இன்றைய விளம்பரங்களில் மிகப் பெரும்பாலானவை, வெற்றி பெற்றவைகளாகவுமே இருப்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

நம்முடைய முடிவுகளை, தீர்மானங்களை, எண்ணங்களை, வேறு யாரோ தான் எப்போதுமே தீர்மானிக்கிறார்கள்! கொஞ்சம் நாசூக்காகச் சொல்வதானால், influences, influences all the way! இவைகள் இல்லாமல் நம்மால் சுதந்திரமாக முடிவெடுக்கவே முடியாதா? அப்படி என்ன முடிவை நாம் சமீபத்தில் எடுத்திருக்கிறோம் என்று நமக்குள்ளேயே கேட்டுக் கொண்டு விடை தேடினோமேயானால், எப்போதுமே நாம் நமது முடிவுகளை அடுத்தவரைச் சார்ந்தே எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வரும்.

இந்த அடிப்படை உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க முனைந்து விட்டீர்கள் என்றால், முதலில் ஒரு சபாஷ்!

இந்தப் பதிவு உங்களுக்காகத் தான்! அடுத்தது என்ன என்பதைக் கொஞ்சம் பேசுவதற்காகத் தான்!



சரி! அப்படி எடுக்கப் படும் முடிவுகள் எல்லாமே, சிறந்தவை தானா? அல்லது, 'ஏதோ பத்துக்கு ஒண்ணு பழுதாகாம இருந்தாலே போதும்' ரகம் தானா?

இந்தக் கேள்விக்குச் சரியான விடையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், முதலில்,

யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?

அல்லது, இதையே வேறு விதமாகச் சொல்வதானால்,

யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?


இந்த இரண்டு கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டு பிடிப்பதில் கூட அவ்வளவு சிரமம் இல்லை! அதில் இருந்து சரியான பாடங்களைக் கற்றுக் கொண்டு, செயல்பட ஆரம்பித்து விட்டீர்களேயானால், உங்களை வெல்ல யாருமே இல்லை!

'கர்நாடக'மான ஒரு பொதுத்துறை வங்கியை எடுத்துக் கொள்வோம். அதனுடைய தலைமை நிர்வாகியாக இருந்தவர், house magazine என்று ஊழியர்களோடு தொடர்பில் இருப்பதற்காக ஒரு பத்திரிக்கை வருமல்லவா, அதில், வெளிப்படையாகவே புலம்பினார். 'நம்முடைய வங்கியில் கடனுக்கு வட்டி மற்றவர்களோடு ஒப்பிடுகையில் குறைவு, சேவைக் கட்டணங்கள் மிகக் குறைவு,இப்படி எல்லா வகையிலும் மிகக் குறைவான விகிதத்திலேயே கட்டணங்கள் இருந்த போதிலுமே கூட, வாடிக்கையாளர்களோ , வருமானமோ அதிகரிக்கவே இல்லை. ஏனென்று தெரியவில்லை என்று முதல் பக்கத்திலேயே, தலைமை நிர்வாகியின் செய்தி, உடன் பணியாற்றுகிறவர்களையும் சிந்திக்க வைப்பது, செயல்பட வைப்பது, என்பதற்குப் பதிலாகத் தோற்றுப்போனவன் புலம்பலாகவேஇருந்தது.

அவரால் புலம்ப மட்டுமே முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், புலம்பல்கள் கேள்விகளாகவும், விடைகள் கண்ணெதிரிலேயே நிதரிசனமாகவும் இருந்தன.மாற்றத்தைச் சாதிக்க அவரால் முடியவில்லை, அவரைச் சுற்றியிருந்தவர்கள் விடவில்லை.அவர்கயை சரி செய்வதற்குக் கூடத் தலைமை நிர்வாகிக்கு தெரியவுமில்லை, திறமையுமில்லை!


இதில் என்ன புதிதாக இருக்கிறது? பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் இப்படித் தானே இருக்கின்றன என்று ஒதுக்கிவிடாதீர்கள். ஒரு தலைமை நிர்வாகி எப்படி இருக்கக் கூடாது என்பதை இந்த வங்கியின் தலைமை நிர்வாகிகள் பலர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.  
இதே வங்கியின் இன்னொரு தலைமை நிர்வாகி! வழக்கம் போலவே அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப் பட்டு, ஸ்டேட் வங்கியில் இருந்து, இந்த கொங்கணி வங்கியின்  தலைவராக வந்தவர். ஸ்டேட் வங்கியின் பலம்  Professional Approach!. இவர் அங்கே வளர்ந்த சூழ்நிலையே வேறு. இங்கே இந்த கொங்கணி வங்கியில் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்சாக இருப்பது மட்டுமே பெரிய தகுதியாக இன்றைக்கும் கூட இருக்கிறது.. இங்கே இருந்த சூழ்நிலையே வேறு! தலைமை பொறுப்பேற்க வந்து, பொருந்தாமலேயே ஆகிப்போன சந்தர்ப்பங்கள் இந்த வங்கியில் சர்வசாதாரணம்! ஸ்டேட் வங்கியில் இருந்த, தொழில் தெரிந்த நிர்வாகத்தைப் பார்த்துப் பழகினவருக்கு, இந்த வங்கியில் இருந்த நடைமுறைகள்  பொருந்தாமல் போனது. தலைமைப் பொறுப்பு வெறும் பதவியில் மட்டும் தான்! உருப்படியான மாற்றம், அதற்கான வழி வகை என்ன என்பதைப் பற்றிய சிந்தனையோ, செயல் திட்டமோ இல்லாத தலைமை நிர்வாகிகளில், அவரும் ஒருவர். பெயரளவுக்கு மட்டுமே சேர்மன் அண்ட் மேனேஜிங் டைரக்டராக இருந்த இந்த மனிதர்  தென்தமிழ்நாட்டின் தலை என்று சொல்லக் கூடிய ஒரு நகரக் கிளைக்கு விஜயம் செய்தார். சுத்தம் செய்யப்படாமலேயே மேலும் மேலும் கழிவுகளைக் கூட்டிக் கொண்டிருக்கும் பொதுக் கழிப்பறை போல இருந்த அந்த வங்கிக் கிளையைப் பார்த்து அருவருப்பு அடைந்து கமென்ட் எழுதினதோடுசரி!. கிளையின் விருந்தினர் பதிவேட்டில் இப்படி எழுதி வைத்தார். "இந்தக் கிளையைப் பேசாமல் இழுத்து மூடி விடலாம்!" இந்த விமரிசனத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முக்கியமான செய்திகள் இருப்பது கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். அதைவிட, அந்தக் கிளையை சரி செய்யவோ, பரிந்துரைத்தபடி இழுத்து மூடிவிடவோ கூட அவரால் முடியவில்லை என்பது தான் மிகப் பெரிய நகைமுரண்!

இந்த நிகழ்ச்சி விவரணத்தில் நாம் உடனடியாகப் புரிந்துகொள்ளக் கூடியதில், முதலாவதாக, விமரிசனம் எழுதியவர் தலைமை நிர்வாகியாகவே இருக்க லாயக்கற்றவர்.

இரண்டாவதாக, அவர் விரும்பிய மாற்றம் என்ன என்பதைத் தானும் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல், உடன் பணியாற்றுபவர்களுக்கும் புரிய வைக்க உருப்படியான முயற்சி எதையுமே செய்யாமல், இப்படி மாற்றத்திற்காக உழைக்காமலேயே, 'மாற்றம் வேண்டும்' 'மாற்றம் வேண்டும்' என்று அரசியல் வாதிகள் மாதிரியே வெறும் உத்தரவுகள் மட்டுமே போடத் தெரிந்த வெத்துவேட்டு. இந்த மாதிரியான வெத்துவேட்டுக்கள், தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தையுமே பொட்டல் காடாக்க மட்டுமே தெரிந்தவர்கள்.

மூன்றாவதாக, இந்தப் பொதுத்துறை வங்கி, தலைமைப் பண்பு என்றால் என்னவென்றே அறியாத ஒரு முட்டாள்களின் சுவர்க்கம். தலைமை தாங்குவதில் வெற்றிடம் ஏற்படும்போது, அடுத்தடுத்துப் பொறுப்புக்களைச் சுமக்க முன்வரத் தயாராக இல்லாத தண்டங்களை மட்டுமே கொண்டது.

இன்னும் நிறைய அடுக்கிக் கொண்டே போக முடியும். அனால், இந்தப் பதிவு, புள்ளிராசா வங்கியைப் பற்றியது அல்ல என்பதால், இங்கேயே நிறுத்திக் கொள்வோம். நாம் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்களேவேறு!

யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
சந்தையில் பொருட்களை வாங்குவதில், பெரியவர்களை விட குழந்தைகள் எடுக்கும் முடிவே அதிகமாக இருக்கிறது என்பதை சர்வே எடுத்துத் தெரிந்து கொண்ட விளம்பர நிறுவனங்கள், தங்களுடைய பொருட்களை, குழந்தைகளை, இளம் வயதினரை மையமாகக் குறிவைத்தே விளம்பரம் செய்யப் பழகிக் கொண்டு விட்டன. இதை, உங்களுடைய வீட்டில், பல தருணங்களில், சொந்த அனுபவமாகவுமே பார்த்திருக்கலாம்!

இப்படியே, இந்தக் கேள்வியை இன்னமும் விரிவுபடுத்திப் பாருங்கள்! நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், யாராலேயோ தீர்மானிக்கப் படுகிறது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதை உணர்வதே இல்லை, ஆனாலும் பழக்கப் பட்டுப் போய்விட்டது! கொஞ்சம் வேடிக்கையாக இல்லை?

ஆனால் அது தான் உண்மை! பிறர் சொல்வதை கேட்க வேண்டாம் என்பதற்காக இல்லை, அதை ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறோம் பாருங்கள், அதைச் சொல்வதற்காகத் தான் இது! மந்தைத்  தனம் என்பது இது தான்! ஆறாவது அறிவு, பகுத்தறிவு என்பதெல்லாம் பெயருக்குத் தான்! வறுமையே வெளியேறு! சிங்காரச் சென்னை மாதிரிவெற்று வார்த்தைகள் தான்!

ஆறாவது அறிவு, பகுத்து அறிவது என்பதெல்லாம், கொஞ்சம் சுயசிந்தனை, சுய முயற்சியோடு, எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கி, கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றறியேன் என்ற அளவோடு நின்று விடாமல், விடைகளையும் தேட முயற்சிப்பவர்களுக்கு மட்டும்தான்!


அடுத்து, யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? இந்த கேள்வியோடு சேர்த்துப் பார்க்கும் போது தான் நம்முடைய உழைப்பு, முயற்சிகள் எந்த அளவுக்கு கடலில் கரைத்த பெருங்காயம் போல வீணாகிக்  கொண்டிருக்கிறது என்பதையே புரிந்து கொள்ள முடியும். மறுபடியும், புள்ளிராசா வங்கியையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்! அங்கே எல்லோரையும் திருப்திப் படுத்தக் கடுமையாக செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள். ரிசல்ட், வேலை செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று எவரையுமே திருப்திப் படுத்த முடியாமல், ஒரு தலைமை நிர்வாகி புலம்பினாரே, "எல்லாமே இங்கே கம்மி தான்! ஆனாலும் வாங்க யாருமே வர மாட்டேன் என்கிறார்களே" அந்தக் கதைதான்!

எல்லோருக்கும் எல்லாமும்! சோஷலிசம்! கேட்பதற்கும், பேசுவதற்கும் மிகவுமே நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் நடைமுறையில்....? கேட்பவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் நெய் ஒழுகுமாம்! இது அனுபவத்தில் கண்டு சொன்னவர்கள் சொலவடை! கேள்வி கேட்காமல், ஆராய்ந்து பார்க்காமல், எவரோ எதற்காகவோ சொன்னதை அப்படியே நம்பிவிடுவதும் அப்படித்தான்



ப்ரீத்திக்கு நான் காரண்டீ என்று அழகாகச் சிரித்துக் கொண்டு ஒரு பெண் சொல்வதை கேள்வி கேட்காமல் பார்ப்பவர் ஏற்றுக் கொண்டு விட வேண்டும் என்கிற மாதிரித் தான் இங்கே எல்லாமும் இருக்கும். விளம்பரம் என்ற அளவில் சரிதான்! பார்ப்பவர் அளவில்...?  
சொல்லப் பட்ட மாதிரியே இருந்துதானாக வேண்டும் என்பதில்லையே!
சொல்லோ, பொருளோ,அரசியலோ, பதிவுகளில் படிக்கும் விஷயங்களோ எதுவானாலும் சோதித்துப் பாருங்கள்!
யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
இந்தக் கேள்விகளோடு, இன்னொரு கேள்வியையும் சேர்த்துக் கேட்டுக் கொள்ளுங்கள்!
இவையெல்லாம் உண்மை தானா? நம்புகிறமாதிரிச் சொல்லப்படுபவை எல்லாமே நம்பத் தகுதியானவைதானா?
ஏன், எப்படி, எதற்கு, எதனால், எதற்காக இப்படிக் கேள்வி கேட்காதவர்களுக்கு வாழ்க்கை இல்லை! வாழ்க்கையில் வெற்றியும் இல்லை!

உங்களுக்குக் கிடைக்கிற யோசனைகள் கூட சமயங்களில்
யாரோ ஏதோ உள்நோக்கத்தோடு எதற்காகவோ போடுகிற 'இலவசங்கள்' தான்! இங்கே சிருஷ்டியில் எதுவுமே இலவசம் இல்லை! இலவசமாக வருவதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன்! வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா அல்லது இந்த இலவசங்களே போதுமா? 

உங்களுக்கு என்ன வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அல்லது என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?



மனமது செம்மையாக....ஐந்து வழிகள்!






மனமென்னும் கருவியைக் கூர்மையாக வைத்துக் கொள்ள.....சில குறிப்புக்கள்!

எண்ணங்கள், அதாவது எண்ணுவது அல்லது நினைப்பது மிகவும் எளிது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  


உண்மையில் அப்படித்தானா?


'நினைப்புத் தானே பிழைப்பைக் கெடுக்குது' என்று அனுபவசாலிகள் பட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். எதையோ காமாசோமா என்று குழப்பமாக நினைத்துக் கொண்டிருப்பது ஒரு ரகம். தெளிவாக, விவரமாக நினைக்கப் பழகுவது என்பது வேறு ரகம். நினைப்பில் ஓடுவதை ஆராய்ந்து, அதைத் தெளிவாகவும் சொல்லவேண்டும் என்றால், பரீட்சைக்குத் தயாராகிற ஒருவன் பென்சிலைக் கூர்மையாக வைத்திருப்பது போல, மனத்தையுமே கூர்மையாக வைத்திருக்கப் பழக்க வேண்டும். கொஞ்சம் கடினமானது மாதிரித் தெரிந்தாலுமே, பழகப் பழகச் சித்திரம் வரைவது கைவருவது போலவே, மனத்தைக் கூர்மையாக வைத்திருக்க உதவும் கருவி! பயிற்சி என்பது, யானையை அடக்கி வைக்க உதவுகிற அங்குசம் போலமிகவும் சிறிது! உபயோகமோ பெரிது. இப்படி மனத்தை ஆராய்கிற பயிற்சிகள், பழக்கங்கள் எல்லாம், மனத்தைப் போலவே  பரந்து விரிகிறதாகத் தான்  இருக்க வேண்டும் என்பதில்லை, சின்னச் சின்னப் பயிற்சிகள் தான்! தொடர்ந்து ஈடுபாட்டுடன் செய்வது என்பது  இந்த சின்ன அங்குசமே. அடங்க மறுக்கும் மனத்தை அடக்கியாளும் வலிமையான கருவி 


Consistency! Continuity! Concentration!

முதலில், ஒரு விஷயத்தை உண்மை என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?


முதலில், உண்மை என்பது ஆரம்ப நிலைகளில், உணர்ச்சிகளால் தேடப்படுவது. உணர்ச்சிபூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும்பொது, திரித்துச் சொல்வதும் ஆரம்பமாகிவிடுகிறது. திரித்துத் திரித்துக் கடைசியில் உண்மையை நேரெதிரான திசையில் பார்க்க முயல்கிறோம்.என்பதைவிட உண்மையைத் தவறவிட்டு விடுகிறோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில், அடிக்கடி நமக்கு "தெரிந்த" விஷயங்களைக் கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டு அதில் எந்த அளவு ஆதாரத்தோடு இருக்கிறது, உணர்ச்சிகள் எந்த அளவுக்கு புகை மூட்டம் போட்டிருக்கிறது என்பதைப் பார்க்கப் பழக வேண்டும்.



அடுத்ததாக, நாம் ஏன் சில விஷயங்களை உண்மையென்று அப்படியே நம்பிவிடுகிறோம்


முதல் பாராவில் சொன்னது போல, நம்முடைய அபிப்பிராயங்கள் பெரும்பாலும் அப்படியே ஸ்வீகரிக்கப்படுவது, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படாதது.மனத்தைக் கூர்மையானதாக்க, நம்முடைய அபிப்பிராயங்களையும், இது இப்படித்தான் என்று ஆராயாமலேயே முடிவு கட்டிவிடுகிறோமே, அதையும் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்குங்கள்!


மூன்றாவதாக, எந்த ஒரு விஷயத்தையுமே, எவ்வளவு சாமர்த்தியமான வாதத்திறமையினால் சொல்லப் பட்டிருந்தபோதிலுமே கூட,அப்படியே  உண்மை என்று எடுத்துக் கொண்டு நம்பி விட வேண்டாம்.வாதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கிற காரணங்கள், உள்நோக்கம்  என்ன என்று தேட முயலுங்கள்உன்னதமான வாதத் திறமையினால், மட்டமான கருத்துக்களைக் கூட உண்மையாக்கிவிட முயற்சி நடக்கிறதா என்பதைப் பாருங்கள்


நான்காவதாக, எங்கே வித்தியாசம் நூலிழை மாதிரி ஆரம்பித்துப் பெரிதாகிறது, எப்படி உண்மையல்லாததும், பொய்களும்  உண்மை போலச் சித்தரிக்கப்படுகிறது என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தவறானசெய்திகள், பிழையான செய்திகள், பொய்யான செய்திகள் என்பதில் இந்தப் பொய்யான செய்தி இருக்கிறதே, இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, திரித்துச் சொல்லப்படுபவை. ஆரம்பத்திலேயே இனம் கண்டு பிரித்து வைக்கத் தெரியாவிட்டால், தடம் பிறழ்ந்து உண்மையை விட்டு வெகுதூரம் விலகி விடுவோம்.இந்த தேசத்தின் வரலாறு, இப்படித் தான் கொஞ்ச கொஞ்சமாகத் திரிக்கப்பட்டு, உண்மையல்லாததெல்லாம் உண்மைகளாகச் சொல்லப் பட்டு வருகிற பரிதாபம் போல ஆகி விடும்.


ஐந்தாவதாக, எந்த ஒரு கருத்தின் தாக்கத்தைப் பற்றியும் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் நல்லது. சில விஷயங்கள் மேலோட்டமாக சுவாரசியமாக இருக்கும், ஆனால் சிறிதுகூடப் பயன்படாது. வேறு சில விஷயங்களோ, மிகச் சாதாரணமாக இருக்கும், ஆனால் மிகப் பெரிய உயரத்துக்கு நம்மை இட்டுச் செல்வதாகக் கூட அமைந்துவிடும்



தலைமைப் பண்பு, சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்களை, பதிவுகளைத் தேடித் படிக்கிற பழக்கம் எனக்குண்டு என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் நண்பர் ஒருவர் மார்க் சன்போர்ன் என்பவர் எழுதிய சுய முன்னேற்றக் குறிப்புக்கள், பதிவுகளில் இருந்து இந்தப் பகுதியை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். சுவாரசியமாக இருந்தது. உபயோகமாகவும் இருந்தது என்பதால் இங்கே, கொஞ்சம் விரிவான மொழிபெயர்ப்பாக, எல்லோருக்கும் பயன் படட்டும்என்பதற்காக!

மனமது செம்மையானால்
, மந்திரம் செபிக்க வேண்டா என்று மனம் தன்னுடைய முழு ஆற்றலையும் நல்லவிதம் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த நிலைக்குமுன்னோட்டமாக  இந்த ஐந்து வழிகளைக் கொஞ்சம் கடைப்பிடிக்க முடிகிறதா, உபயோகமாக இருக்கிறதா என்று சொல்லுங்களேன்