கொஞ்சம் நிதானிக்கவும், இதுவரை என்ன செய்துகொண்டிருக்கிறோம், என்ன செய்ய எண்ணம் கொண்டிருக்கிறோம், எப்படிச் செய்யப் போகிறோம் என்பதை, கடந்த அனுபவங்களில் கற்றுக்கொண்டதில் இருந்து முடிவு செய்கிற தருணமாக ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு பிறக்கும் நாள் இருப்பது உண்டு!
நாட்கள், வாரங்கள், மதங்கள் எனவோடி, வருடமும் முடியப்போகிற தருணமும் விரைந்து நெருங்குகிறது. கடந்துபோன புத்தாண்டுப் பிறப்பில் என்னென்ன தீர்மானங்களை எடுத்துக் கொண்டோம், அதில் எத்தனை நிறைவேறியிருக்கிறது, எந்த அளவு நிறைவேறியிருக்கிறது என்பதை நினைவு படுத்திக் கொள்கிற தருணமாக, இந்த இரவுப்பொழுது இருக்கிறது.
"வருடம் முடியப் போகும் தருணத்தில், கடந்து வந்த பாதையை, நடத்த நினைத்து ஆனால் நடக்காமல் போன குறிக்கோள்களை, எங்கு செல்ல நினைத்து எங்கு வந்து நிற்கிறோம் என்கிற மாதிரியான சுய அலசல்கள், ஆராய்ச்சிகள், விமரிசனங்கள் எல்லாம், கிளம்புகிற தருணம் இது. ஆர்வக் கோளாறில் கிளம்புகிற இத்தகைய சுயவிமரிசனங்கள் எல்லாம், கிளம்பின வேகத்திலேயே அடங்கிப் போவது, நம்முடைய தேசியக் கலாச்சாரம், பின்னே இல்லையா!
ஒவ்வொருவரும் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கும் போது,எதையோ எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு பொதுவான நோக்கத்தில் தான் ஆரம்பிக்கிறோம்..
ஆனாலும், இந்த வலைப்பதிவுகளில் முக்கியமான விஷயம், நான் யார், இங்கு என்ன செய்கிறேன், நான் செய்ய வேண்டிய கடமை என்ன என்பது தான்! ஒரு சிறு வெளிச்சக் கீற்றாகவாவது, எவருக்கேனும் இது உதவக்கூடும் என்பது தான் என் நம்பிக்கை. தமிழில் எழுத வேண்டும் என்பது வலைப் பதிவு தொடங்கிய நாளிலிருந்தே எனக்குள்ளிருந்த தாகம். அதற்கும், இப்போது தான் நேரம் வந்திருக்கிறது..
என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதும், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதும் பயணத்தின் தவிர்க்க முடியாத இரு கேள்விகள்!
"இந்தப்பக்கங்கள் எவை குறித்தவையாக இருக்க வேண்டும் என்பதில் இன்னமும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவில்லை. காரணம், என்ன வகையிலான விருப்பத் தேர்வுகளுடன் இருப்பவர்கள் இந்தப்பக்கங்களைப் படிக்கிறார்கள் என்பதில் சரியான புரிதல் இன்னமும் கிடைக்கவில்லை.
இது ஒரு பெரிய காரணம் இல்லை.
என்ன மாதிரியான வாசகர்கள் எனக்கு வேண்டும் என்பதைக் குறி வைத்து நான் எழுத ஆரம்பிக்கவில்லை, என்பதே முக்கியமான காரணமாக எனக்குப் படுகிறது. அடுத்து, பதிவுகளின் நீளம்!உண்மைத் தமிழனோடு போட்டி போட்டுக் கொண்டு மிகவும் நீளமான பதிவுகளை எழுதுவதாக ஏற்கெனெவே வால் பையனும், டம்பி மேவீயும் பின்னூட்டப்பெட்டியையே புகார்ப் பெட்டியாகவும் மாற்றி விட்டார்கள்!
படிக்க வருகிறவர்கள், தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிற தருணங்களில் இது மாதிரியான குழப்பங்கள் ஏற்படுவதில்லை. ஃபாலொயெர்ஸ் என்று இங்கே ஒரு நட்பு வட்டம் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. அவர்களுடைய எண்ண ஓட்டங்களைக் கூட அறிந்து கொள்ள முடிவதில்லை. அவர்களுடைய பதிவுகளிலுமே கூட அதற்குச் சரியான க்ளூ கிடைக்கவில்லை! "
இதுவுமே கூட சில நாட்களுக்கு முன்னால் இந்த அடிப்படைக் கேள்விகளை முன்வைத்தே எழுதியது தான்! என்ன காரணத்தினாலோ, இங்கே படிக்க வரும் நண்பர்கள், தங்கள் மனதில் எழுந்த விமரிசனத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை.
இந்தப் பக்கங்களைக் குறித்த உங்களுடைய விமரிசனங்களை வரவேற்கிறேன்!


