Showing posts with label தேர்தல் வினோதங்கள். Show all posts
Showing posts with label தேர்தல் வினோதங்கள். Show all posts

ஆடாத ஆட்டமெல்லாம்.....? தேர்தல் வினோதங்கள் 2011!





ந்தர்ப்பக் கூட்டணி லட்சியக் கூட்டணியாக மலர்ந்ததில் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இருந்து சில முக்கியமான அம்சங்களைக் குமுதம் ரிப்போர்டரில் வெளிவருகிறதென்று நினைக்கிறேன், (குமுதம் வகையறாக்களைப் படிப்பதில்லை), பதிவர் நண்பர் உண்மைத் தமிழன்,  தன்னுடைய பதிவில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு வருகிறார். தாத்தாவிடம் கோபம் நிறையக் கொப்பளித்தாலும், ஆத்தாவுக்கு அப்படியே சப்போர்ட் என்று சொல்லிவிட முடியாதபடிக்கு, கொஞ்சம் அலுப்புடனே தான் எழுதுகிறார். மதிமுக வெளியேறிய போது, கெட்டது குடி என்று தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்த சென்னைப் பதிவர்களில் இவர் முதன்மையானவர்.

நீளமாக, பத்தி பத்தியாக எழுதுவதை விட, சில வலைப்பதிவர்கள் மிக நுணுக்கமாக இந்தத்தேர்தல் கூத்துக்களை, குரும்படங்கலாகத் தயாரித்து வெளியிட்டிருப்பதை இணையத்தில் பார்க்க முடிகிறது. ரியல்டுபுக்கு என்ற பெயரில் வலைப்பதிவர்நல்ல மெசேஜ் ஒன்றைத் தயாரித்து யூட்யூபில்  வலையேற்றம் செய்திருக்கிறார். பாருங்கள்!


"ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே
போன கதை உனக்குத்தெரியுமா?"

இந்தத் திரைப்படப்பாடல் வரிகளையே 2011 தேர்தல் கூத்தின் தத்துவமாக யுவசெந்தில்குமார் என்ற நண்பர் எடுத்து வைக்கிறார்!

எல்லாவற்றையும் விட குஜால்காரன் என்ற நண்பர் பழைய கவுண்டமணி ட்ராக் ஒன்றைத்தேடிஎடுத்து, ஓட்டு என்றால் என்ன என்று ஒரு ஓட்டு ஓட்டி விட்டு, "தேர்தலே வேண்டாம் பழையபடி மன்னராட்சி கொண்டு வந்து விடுவோம், நீ ராசா! நான் மந்திரி" என்று சொல்வதை வைத்து ஒரு போடு போட்டிருக்கிறார் பாருங்கள்!


கரடியாய்க் கத்துகிறேன், யாராவது காதில் வாங்கிக் கொள்கிறார்களா பாருங்கள் என்று சொல்வார்கள் இல்லையா? ஒரு கரடி கத்தினால் தானே கேட்கமாட்டார்கள், இரண்டாயிரம் கரடிகள் சேர்ந்து கத்தினால் கேட்காமல் போய்விடுமா என்று நினைத்தாரோ தெரியாது, கரடி 2000 என்ற பெயரில் ஒரு  நண்பர் தமிழருவி மணியனுடைய பேட்டியில் இருந்து ஒரு பகுதியை எடுத்துப் போட்டிருக்கிறார். இதில் நான் உடன் படுகிற ஒரு விஷயம், தேர்தல்களில் ஓட்டுப் போடுகிறவர்கள், இன்னார் வரவேண்டும் என்று ஓட்டுப் போடுவதை விட, இன்னார் வந்துவிடக் கூடாது என்று வாக்களிக்கிற ஒரு விசித்திரம்! தேர்தலை ஒரு வினோதமான கூத்தாகவும், இத்தனை கோளாறுகளுக்கு ஊற்றுக் கண்ணாகவும் இருப்பது இந்த நெகடிவ் மனப் பான்மைதான்!


நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கிற வாய்ப்பு, இப்போதிருக்கும் தேர்தல் முறைகளில் இல்லை! தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதுதான் இந்தப்பக்கங்களில் மிக அவசியத்தேவையாகப் பல முறை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. சீர்திருத்தங்களை செய்ய வேண்டியவர்கள், செய்ய மாட்டார்கள் என்பதனால், "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ், ஊழலுக்கு மிகப்பெரிய பரிமாணத்தைக் கண்டு பிடித்தவர்களைப் பதவியில் இருந்து இறக்குவது  முதல் வேலை!

சரியான மாற்று என்று எவருமே களத்தில் இல்லாத நிலையில் சற்றுக் குறைவான கெடுதல் என்ற அளவில்  இரண்டாவது சாய்ஸ் இருக்கிறது அல்லவா, அவர்களைப் பதவியில் அமர்த்துவது அடுத்தது!இப்படிப்பதவிக்கு வருகிறவர்கள் தவறு செய்ய விடாமல் விழிப்போடு கண்காணிப்பதில் தான் ஜனங்களுடைய உண்மையான ஜனநாயகக் கடமை ஆரம்பிக்கிறது.

ஓட்டுப்போடுவதோடு நம் கடமை முடிந்துவிட்டது என்றிருக்காமல், சரியாக செயல்படாத மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பப்பெறுகிற உரிமைக்காகக் குரல் கொடுப்பது, தேர்தலில் போட்டியிட அரசியல் சாசனம், சட்டங்களில் குறைந்த பட்ச ஞானம் இருப்பதை அடிப்படைத் தகுதியாக்குவது, பெரிய பதவிகளில் ஒரு நபரே  இரண்டுமுறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப் படுவதைத் தடை செய்வது, மற்றத் துறைகளில் ஓய்வு பெறும் வயது இருப்பதுபோல, அரசியல் வாதிகளுக்கும்  அறுபத்தைந்து வயதுக்குமேல் கட்டாய ஓய்வு கொடுப்பது என்று சீர்திருத்தங்களுக்கான இயக்கம் வலிமை பெற வேண்டும்!

என்ன சொல்கிறீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!



 

இப்ப என்ன செய்வீங்க..? இப்ப என்ன செய்வீங்க?

தினமணி தலையங்கம்:  நெருக்கடியான நிலைமைதான்!


கடந்த இரண்டு நாள்களாக முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் வெளிப்படுத்தும் கருத்துகள் திகைப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. பொறுப்பான பதவியில் இருப்பவர், அரை நூற்றாண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர், தமிழகத்தில் மிக அதிகமான காலம் முதல்வராக இருந்தவர், நிர்வாகம் நன்றாகத் தெரிந்தவர் பேசுகிற பேச்சாக அது இல்லை என்பதுதான் திகைப்புக்கும், அதிர்ச்சிக்கும் காரணம்.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போன்ற சூழல் நிலவுவதாகவும், தமிழகத்தை ஆட்சி செய்வது தனது தலைமையிலான தி.மு.க.தானா இல்லை வேறு யாராவதா என்று தெரியவில்லை என்றும் முதல்வர் பேசியிருப்பதுபோல வேறு யாராவது பேசி இருந்தால், "ஏன் இவர் இப்படியெல்லாம் உளறுகிறார்? இவருக்கு என்னவாயிற்று?' என்று கேட்கலாம். 


பேசியிருப்பவர் பல முறை முதல்வராக இருந்தவர். நிர்வாகம் தெரிந்தவர். ஆட்சியில் இருப்பவர்.ஒரு மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால், அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதும், தேர்தல் காலங்களில் ஆட்சியில் இருப்பது அதிகாரம் இல்லாத வெறும் காபந்து அரசுதான் என்பதும்கூட, ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவருக்குத் தெரியாமல் இருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை.

"தமிழ்நாட்டை என் தலைமையிலான தி.மு.க. ஆண்டு கொண்டிருக்கிறதா அல்லது தேர்தல் ஆணையம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது'' என்று கூறிவிட்டு, ""தேர்தல் ஆணையத்திடம் மோதிக் கொள்ள விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சட்டப்படி எல்லாம் நடக்க வேண்டும். இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை'' என்றும் கூறுகிறார். பிறகு, தேர்தல் ஆணையத்தின்மீது ஆத்திரத்தை உமிழ்வானேன்?முன்பெல்லாம் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்குக் கெடுபிடிகள் செய்யவில்லை என்றால், அந்த அளவுக்கு விதிமுறை மீறல்களும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும் நடக்காமல் இருந்ததுதான் காரணமே தவிர, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லாதது அல்ல காரணம்.

அரசியல் சட்டம் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாகவே இருக்கிறது. அரசியல் சட்டப்பிரிவு 324(1) தேர்தல் ஆணையத்துக்குத் தேர்தலை முறையாக நடத்துவதற்காக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்படுவது வரை பரவலான, முழுமையான அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அதைப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் உறுதிப் படுத்தி இருக்கிறது.முறையான தேர்தல் நடத்தப்பட முறையான அதிகாரிகள் தேவை. அன்றைய ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் முறையாகத் தேர்தல் நடைபெற உதவ மாட்டார்கள் என்று ஆணையம் கருதினால் அவர்களை மாற்றவும், தனது நம்பிக்கைக்குரியவர்களை நியமிக்கவும் ஆணையத்துக்கு அரசியல் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-ன் 13சிசி பிரிவுப்படி, தேர்தல் கால நடவடிக்கைகளுக்காகத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் அத்தனை அதிகாரிகளும், அரசு ஊழியர்களும், ஆணையத்துக்குத் தாற்காலிகமாக வழங்கப்பட்ட, ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட ஊழியர்கள்.போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் செல்வாக்கு ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ போட்டியிட வேண்டுமே தவிர, பொருளாதார ரீதியாகப் போட்டியிடுவதை எப்படி ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும். சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தினக்கூலித் தொழிலாளியும், கோடீஸ்வரப் பிரபுவும் போட்டியிட வாய்ப்புள்ள தேர்தல் முறையில், பணத்தை விநியோகித்து ஒருவர் வாக்குச் சேகரிப்பதை ஆணையம் எப்படி அனுமதிக்க முடியும்?

முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தேர்தல் ஆணையம் விடியோ படமெடுக்கிறது. அப்படிப் படமெடுப்பவரைத் தடுப்பதும், தாக்குவதும் விவரம் இல்லாதவர்களாக இருந்தால் பரவாயில்லை. முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில் அக்கறை காட்ட வேண்டிய மத்திய அமைச்சருடன் செல்பவர்கள் வட்டாட்சியரை மிரட்டுவதும், விடியோகிராபரைத் தாக்குவதுமாக இருந்தால், ஆணையம் கெடுபிடிகளை மேலும் அதிகரிப்பதில் என்ன தவறு?

மதுரை பாத்திமா கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் உ. சகாயம் நல்ல சில கருத்துகளை மாணவர்களுக்குக் கூறுகிறார்."நமது வாக்குகள் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி பெற்றவை. எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள். அதேசமயம், அன்பளிப்பு இல்லாத வாக்குப் பதிவு அவசியம். லஞ்சமில்லாத வாக்களிப்பு குறித்து மாணவ மாணவியர் தங்களது பெற்றோருக்கும், உற்றார் உறவினருக்கும் கைப்பேசி மூலம் "என்னுடைய வாக்கு விற்பனைக்கல்ல' எனும் வாசகத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்று பேசுகிறார்.

மாவட்ட ஆட்சியர் சகாயம் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார் தி.மு.க. அனுதாபி ஒருவர். வாகனங்களைச் சோதனையிடுகிறார்கள், எங்களது சுதந்திரம் தடைபடுகிறது என்று மற்றொருவர் வழக்குத் தொடுக்கிறார். மாவட்ட ஆட்சியர் என்னை மிரட்டுகிறார் என்கிறார் இன்னொருவர். மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்? என்று ஏன் யாரும் முதல்வரிடம் திருப்பிக் கேட்பதில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.காவல்துறை வாகனத்தில் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸில் பணம் கடத்தப்படுகிறது. இதையெல்லாம் ஆணையம் தட்டிக் கேட்டால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக முதல்வர் எரிச்சலடைகிறார். வாக்குகள் விலைபேசப்படாமல், வாக்காளர்கள் கவர்ச்சி வாக்குறுதிகளால் ஏமாற்றப்படாமல், முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில் அக்கறை காட்ட வேண்டிய முதல்வர்,

தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்படுவதை நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக வர்ணித்திருப்பது ஒருவகையில் நியாயம்தான். நெருக்கடியான நிலைமை ஏற்பட்டிருப்பது உண்மை.

அது யாருக்கு என்பதுதான் கேள்வி...!

இன்றைய தினமணி நாளிதழின் தலையங்கம் இது. இலவச இணைப்பாக இந்த இரண்டு செய்திகளையும் பார்த்துவிடுங்கள்!


அழகிரி ஆதரவாளர்கள் தாக்கவில்லை: தேர்தல் அதிகாரி மறுப்பு

மதுரை, ஏப்,4: தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அழகிரிக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய ஆதரவாளர்களால் தான் தாக்கப்படவில்லை என அந்த தேர்தல் அதிகாரி திடீரென மறுப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள ஃபேக்ஸ் செய்தியில், மேலூர் தொகுதி உதவி தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான எம்.காளிமுத்து, கோயிலில் நடந்ததற்கு மாறாக, உள்ளூர் போலீசார் கூறியபடியே அழகிரிக்கு எதிராக தான் புகார் அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, காளிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில், அரசு ஊழியரைத் தாக்கியதாக அழகிரி மற்றும் 52 திமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.கீழவளவில் அழகிரி கோயிலுக்கு செல்வதை தானும், ஒரு விடியோகிராஃபரும் பதிவுசெய்தபோது அழகிரி முன்னிலையில் தாங்கள் தாக்கப் பட்டதாகப் புகார் கூறியிருந்தார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும் அந்த அதிகாரி இதையே கூறினார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த வருவாய் அலுவலர்கள் சங்கம், தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தது.இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அழகிரி உள்ளிட்ட 4 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர்.

இந்த நிலையில் திடீர் மாற்றமாக, கோயிலுக்குள் காலணியுடன் வரக்கூடாது என்று மட்டுமே அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் கூறியதாக காளிமுத்து கூறினார்.அழகிரி யாருக்காவது பணம் ஏதாவது கொடுக்கிறாரா என்பதைப் பார்க்கவும், அவரது வருகையை படம்பிடிக்கவுமே தான் கோயிலுக்குள் சென்றதாக காளிமுத்து குறிப்பிட்டார். திமுக ஆதரவாளர்களால் தான் தாக்கப்பட்டதாக கீழவளவு போலீசார்தான் கூறினர் என அவர் தெரிவித்தார்.


அழகிரி மீது பொய்ப் புகார் எனக் கூறிய ஆர்டிஓ சுகுமாறன் சஸ்பெண்ட்

சென்னை: மதுரை கலெக்டர் சகாயத்தின் கட்டாயத்தின் பேரில்தான் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது பொய்ப் புகார் கூறியதாகவும், தன்னை சகாயம் கடுமையாக மிரட்டி வருவதாகவும், இப்படியே போனால் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் கூறிய மதுரை ஆர்டிஓ சுகுமாறன் இன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

நெஞ்சு வலிப்பதாக இவர் கூறியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
"இப்ப என்ன செய்வீங்க..? இப்ப என்ன செய்வீங்க?" என்று வினு சக்ரவர்த்தி டான்ஸ் ஆடிக் கொண்டு கேட்கிற மாதிரி ஒரு திரைப்படக் காட்சி நினைவுக்கு வருகிறதா?

இதே கேள்வியை ஜனங்களும் நம்முடைய மான்புமிகுக்களுக்குத் திருப்பிப் போடுகிற அருமையான சந்தர்ப்பம் ஏப்ரல் 13 அன்று வருகிறதே, நழுவ விடலாமா?
 


நாங்கள் தோற்றாலும் உங்களை மறக்க மாட்டோம் : முதல்வர் கருணாநிதி உருக்கம்

வேலூர் :"எங்களை தோற்கடியுங்கள்; நாங்கள் தோற்றாலும் உங்களை மறக்க மாட்டோம்,'' என, வேலூர் பிரசார கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உருக்கமாக பேசினார்.

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் ஏதோ காமெடி சீன் மட்டும் தானே என்று நினைக்கிறீர்களா?

இந்த ஜோக்கர்களின் கைகளில் மறுபடியும் சிக்கிக் கொள்ள வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இது! இவன் யோக்கியன் இல்லை தெரியும், ஆனால் அவனும் அப்படித்தானே என்று பிக்பாக்கெட்டுக்கும் கன்னம் வைத்துத்  திருடுகிற கொள்ளைக் கும்பலுக்கும் ஒரே தரம் என்று அலட்சியமாக இருந்துவிட முடியுமா?

இந்த தேசத்தின் சீரழிவு காங்கிரஸ் கட்சியால் ஆரம்பித்தது. தேசம் சீரழிவில் இருந்து விடுபட வேண்டுமானால், காங்கிரசையும் அதன் கூட்டாளிகளையும் தோற்கடிப்பதன் மூலமே சாதிக்க முடியும்! இதைச் செய்கிற அதே நேரம், பாமக, தேதிமுக. விசி, சாதிக்கட்சி என்று விஷக் காளான்களாக முளைத்துக் கொண்டிருப்பவைகளையும் முளையிலேயே கிள்ளி எறியவும் தயங்கவேண்டாம்!

என்ன சொல்கிறீர்கள்? என்ன சொல்லப் போகிறீர்கள்?



தேர்தல் வினோதங்கள்! தெளிவாக முடிவெடுங்கள்!


தேர்தல் வினோதங்கள்,தேர்தல் கூத்துக்கள் என்று தொடர்ச்சியாக இந்திய ஜனநாயகம் தொடர்ந்து முதிர்ச்சி அடையாமலேயே இருப்பதைக் குறித்தும்,. முதிர்ச்சியடைய விடாமல் தடுப்பதில் இந்திய அரசியல்கட்சிகளுடைய பங்கைப் பற்றியும் இந்தபக்கங்களில்  பேசிக் கொண்டு இருக்கிறோம்.

நேரு முதல் அடுத்து வந்த தலைவர்கள் எவரும்,ஜனநாயக நெறி முறைகளைக் கட்டிக் காப்பாற்றவோ, ஜனங்களைத் தயார் செய்யவோ முனைந்ததே இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.ஜனநாயகம் என்பது இங்கே ஒரு கேலிக் கூத்தாகவே ஆரம்பித்து,கேணத்தனத்தின் உச்ச கட்டமாகவே வளர்ந்து கொண்டிருப்பது அதைவிடப் பெரும் கொடுமை.

ந்த வாக்குச்  சீட்டு என்பது என்ன, அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் இன்றைக்கும் கூட ஜனங்களுக்கு ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதே இதற்கு சான்று.

து எங்கே கொண்டுபோய் விட்டிருக்கிறதென்றால், ஜனநாயகம் பற்றி வாய் கிழியப் பேசுகிற கட்சிகளுக்குள்ளேயே உட்கட்சி ஜனநாயகம் என்பதோ, கருத்துப் பரிமாற்றம், உறுப்பினர்களுடைய கருத்துக்கு  மதிப்புக் கொடுப்பது என்பதோ அறவே இல்லாமல் போனதுதான்! ஒரு தலைவரைப் பின் பற்றுகிறவர்கள் என்றால், அவருக்கும் அவருடைய வாரிசுகளுக்கும் அடிமைகள் என்ற அளவிலேயே மாற்றமடைந்து கொண்டிருப்பதுதான் இங்கே பெரும்பாலான அரசியல் கட்சிகளுடைய யோக்கியதை!

நம்பிக்கை, விசுவாசம் என்பதற்கும் அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம் இருப்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத அளவில் தான் இங்கே கட்சித்தலைவர்கள், தொண்டர்களுடைய யோக்கியதையும் இருக்கிறது.

இந்த வீடியோவைப்பாருங்கள்! இந்திய ஜனநாயகம், என்ன மாதிரித் தலைவர்களை உருவாக்குகிறது என்பதைப் பாருங்கள்!



சினிமாவில் கேப்டன் என்று அழைத்து விட்டார்களாம்! எவனோ போக்கத்த நாடி ஜோதிடன், உனக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருகிற யோகம் இருக்கிறது என்று விட்ட பீலாவை நம்பி இந்த நபரும் அரசியல் களத்தில் குதித்துவிட்டார்! தனிக்கட்சி ஆயிற்று! அப்படி ஒன்றும் தெளிவாகப் பேசுகிற ஆளும் இல்லை!தெளிவான கொள்கை, பார்வை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை! ஆனாலும், ஜனங்களுடைய பலவீனத்தை நாடி பிடித்துத் தெரிந்து வைத்திருப்பதில், ஒரு எம் எல் ஏ ஆகவும் ஆகிவிட்டார். இரண்டு கழகங்களையும் பிடிக்காதவர்கள், ஏதோ ஒரு வேகத்தில் இந்த ஆளுக்கு வாக்கு அளித்துவிட, நாற்பத்தொரு சீட் கிடைத்த போதை இன்னும் தெளியவே இல்லை போல இருக்கிறது.


தினமணி  தலையங்கம்:  தேர்வல்ல, திணிப்பு!

First Published : 30 Mar 2011 02:26:15 AM IST


மிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் சார்பில் அறிவிக்கப் பட்ட வேட்பாளர்கள் மீதான எதிர்ப்பு முன்னெப்போதும் இல்லாதவகையில் பல இடங்களில் பல விதமாக வெளிப்பட்டது. இது எப்போதும் எல்லா தேர்தல்களின்போதும் நடப்பதுதான் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அவ்வாறாக ஒதுக்கிவிடும் அளவுக்கு நீர்த்துப்போன எதிர்ப்புகளாக இவை இல்லை.

ழக்கமாக இத்தகைய எதிர்ப்புகள், வாய்ப்புக் கிடைக்காத ஒரு நபரின் தனிப்பட்ட கூக்குரலாக இருக்கும். அதுவும்கூட மெல்ல ஓய்ந்துபோகும். ஆனால், இந்தத் தேர்தலின்போது இத்தகைய எதிர்ப்புகள் போராட்டமாகவும், சில இடங்களில் வன்முறைக் களமாகவும் மாறியது. சில இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் மாறியது. தமிழ்நாட்டில் பரவலாக எல்லா தொகுதிகளிலும், எல்லா கட்சிகளிலும் இத்தகைய போக்கு காணப்படுகிறது.

.தி.மு.க.வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியானபோது, கூட்டணிக் கட்சிகள் தங்கள் தொகுதிகள் பறிபோனதற்காக ஆலோசனை நடத்த திண்டாடிக்கொண்டிருந்த வேளையில், தமிழ்நாடு முழுவதும் பல வேட்பாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. அ.தி.மு.க.வின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வந்தபோது, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நபர்களில் சிலரது பெயர்கள் எடுக்கப்பட்டிருந்தன. எதிர்ப்புக்குப் பலன் இருந்தது.

.தி.மு.க. பட்டியலில் தூத்துக்குடி தொகுதியைப் பொறுத்தவரை மூன்று முறை வேட்பாளர் பெயர் மாறியது. இது வெறும் கட்சித் தலைமைக்கு ஏற்பட்ட குழப்பம் மட்டுமே அல்ல. கட்சித் தொண்டர்களின் கொதிப்பைக் கருத்தில் கொண்டதால் ஏற்பட்ட மாற்றம் என்றும் கருத இடம் இருக்கிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலிலும் அதிருப்திகள் இருந்தன. ஆனால், பட்டியல் மாற்றப்படவில்லை. அக்கட்சித் தொண்டர்களும் சில இடங்களில் எதிர்ப்புத் தெரிவித்து, குரல் எழுப்பியது எதிர்க்கட்சியின் தொலைக்காட்சிகளோடு முடிந்துபோயின. வழக்கமாக இந்த விவகாரங்கள் தொலை பேசியிலேயே சரிக்கட்டப்படும். இப்போது போட்டி வேட்பாளர் மனுத் தாக்கல் செய்வது வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் இருந்ததால், தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளிப் படையாக வேண்டுகோள் விடுத்து, அறிக்கை வெளியிடும் நிலைமை ஏற்பட்டது.

ச்சபட்சமான களேபரம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலின்போதுதான் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரின் உருவ பொம்மையை எரிக்கும் அளவுக்கு வெறுப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. மாற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய முடியாத படிக்கு என்னவெல்லாமோ நடந்தது.

ம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட இதில் விதிவிலக்கு அல்ல. ஒரு தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் இப்போதைய எம்எல்ஏ களத்தில் இறங்கியதால் அவரைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்கள். இருப்பினும் அவர் போட்டி வேட்பாளராகக் களத்தில் இருக்கிறார்.

கேரள மாநிலத்தில், முதல்வர் அச்சுதானந்தன் பெயரே வேட்பாளர் பட்டியலில் இல்லை. அவரது ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் நடத்திய பிறகுதான் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது என்கிற நிலைமை.

ம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி கழகங்கள் வரையிலும் கட்சித் தலைமைகளால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அப்பகுதித் தொண்டர்களின் தேர்வாக இல்லை. கட்சித் தலைமை அல்லது குழுவின் தேர்வாக இருக்கிறது. தலைமை அறிவித்தால் அவருக்காக அந்தப் பகுதியில் உள்ள தொண்டர்கள் வரவேற்றுப் பணியாற்ற வேண்டும் என்கிற மனப்பான்மைக்கு எதிரான குரல்தான் எதிர்ப்பு மனோபாவமும், போட்டி வேட்பாளர்களும்!

ட்சியில் தீவிரமாகப் பணியாற்றாத ஒருவரை வேட்பாளராக வலிய அறிவித்தால் எதிர்க்கிறார்கள். உள்ளூர் நபராக இல்லை என்றால் எதிர்க்கிறார்கள். மிகை பலம் படைத்த கட்சித் தொகுதியை கூட்டணிக் கட்சிக்குக் கொடுத்தால், நாங்கள் என்ன இலவு காத்த கிளிதானா என்று கேட்டு எதிர்க்கிறார்கள். இவை ஒருவகையில் ஆரோக்கியமான அரசியலுக்கு ஒரு வெள்ளோட்டம் எனலாம்.

ரு தொகுதியில், குறிப்பிட்ட கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் முதலில் அந்தத் தொகுதியில் உள்ள கட்சிக்காரர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட வேண்டும். அத்தகைய உள்கட்சி ஜனநாயகம் ஏற்படுமேயானால், ஒரு கட்சித் தலைமை தனது மனைவி, மகன், மைத்துனர், மாப்பிள்ளை, பேரன் என்று நெருங்கிய உறவினர்களுக்குத் திடீரென ஓர்இரவில் வாய்ப்புகளை வழங்கிவிட முடியாது அல்லது தலைமைக்கு நெருக்கமானவர்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்து, பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்த்து விடவும் முடியாது. ஒருகட்சித் தலைமை தன்னிச்சையாக வேட்பாளரைத் தேர்வு செய்யும் போக்குக்குத் தடை ஏற்பட்டால் மட்டுமே, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

மெரிக்காவில் இத்தகைய உள்கட்சி ஜனநாயக முறை நடைமுறையில் இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்வில் ஒருவர் போட்டியிட்டால் முதலில் அவர் கட்சியின் வேட்பாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்றால்தான், அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். இதனால் அவர் தனக்கான செயல்திறன், சொந்தச் செல்வாக்கு இல்லாமல் பிறப்புரிமையால் பெறும் வாய்ப்பாக இருக்காது. அல்லது தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு என்பது அதிர்ஷ்டத்தால் அமையாது.

ந்திய அரசியல் கட்சிகளிலும் அத்தகைய உள்கட்சி ஜனநாயகம் உருவாகும் என்றால், உண்மையான அரசியல்வாதிகள் மட்டுமே களத்தில் எஞ்சி நிற்பார்கள். அவர்கள் கட்சிக்குள் பெருவாரியான தொண்டர்களின் ஆதரவைப் பெற்றவர்களாக இருப்பார்கள். உள்ளூர் கட்சித் தொண்டர்களுக்கே பிடிக்காத ஒரு நபரை மக்களிடம் திணிக்கும் ஜனநாயக வன்முறை நடக்காது.

ப்படித்தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் தலையங்கம் ஒரு யோசிக்கப்படவேண்டிய அம்சத்தை வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது. தேர்தல் முறையில் இருக்கும் குழப்பங்களை, அரசியல் கட்சிகளில் செய்யவேண்டிய களையெடுப்பை,படிப்படியாக ஜனங்களாகிய நாமே செய்ய முடியும்! வலியுறுத்த முடியும்!

இந்தப்பதிவில்
நண்பர் சிவா ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

\\
திமுக அதிமுகவை விட இந்தமாதிரி நேற்று முளைத்த காளான்களை அப்புறப்படுத்துவது எளிது, உடனே செய்யப்படவேண்டியதும் கூட! \\
எப்படி அப்புறப்படுத்துவது, கூப்பிட்டு 41 சீட்டு கொடுக்கறாங்க..சரி இது போன்ற காளான்களால் வரும் ஆபத்தை அப்புறம் பார்ப்போம்.
திமுக,அதிமுக என வளர்ந்த சுயநல அரசியல் பண்ணும் விஷ விருட்சங்களை எப்படித்தான் அழிப்பது அல்லது அடக்குவது?

அப்புறப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. நாட்டு மக்களுக்கு சேவைஆற்றும் உரிமை இவர்களுக்கு இல்லையா:))

அங்கே சொன்ன பதில் இது.

மிகவும் எளிது சிவா! ஸ்டெப் பை ஸ்டெப்பாகத் தான் இப்போதுள்ள தேர்தல் முறையில், இதை செய்ய முடியும்!

கொஞ்சம் பொறுமை, ஒரு தெளிவான பார்வை இருந்தால், இப்போதுள்ள தேர்தல் முறையிலேயே, இந்த விஷ விருட்சங்களை வேரோடு சாய்க்கலாம்.

Process of elimination! ஒரு மருத்துவர் கையாளுகிற மாதிரித் தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! ஒரு மனிதனுக்கு வியாதி! ஒரே நேரத்தில், மூன்று நான்கு கோளாறுகள். தேர்ந்த மருத்துவன் செய்வது ஒரே நேரத்தில் அத்தனை கோளாறுக்கும் மருந்து கொடுப்பதல்ல. இருப்பதிலேயே அதிகமான கோளாறுக்கு மருந்து, நோய் எதிர்ப்புச் சக்தி பெறக் கொஞ்சம் டானிக் மாதிரி வைத்தியம். பிரதானமான கோளாறை குணப்படுத்திவிட்டால், மிச்சமிருப்பதை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற மாதிரி மருத்துவம் இருக்கும்.

இப்போது அகற்றப்பட வேண்டிய பிரதானமான விஷ விருட்சம் எது என்று நினைக்கிறீர்கள்? என் பார்வையில், திமுக, அதிமுக இரண்டுமே இல்லை! அது காங்கிரஸ் தான்! இந்த நாட்டில், ஜனநாயக நெறிமுறைகளைக் குழிதோண்டிப் புதைத்து, ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது காங்கிரஸ் தான்.ஆக, முதலில் அகற்றப்பட வேண்டியது காங்கிரஸ் தான்!

காங்கிரஸ், இங்கே தமிழக சட்ட மன்றத் தேர்தல்களில் பிரதானம் இல்லையே என்கிறீர்களா? காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்! இப்போது ஒரு வழி கிடைப்பது தெரிகிறதா? இதை செய்கிற அதே நேரம், களையெடுக்கும் வேலையும் தொடங்குகிறது! பாமக, தேதிமுக, விசி, ஜாதிக்கொரு சங்கம் என்பதுபோய், அதிலும் ஏகப்பட்ட பிரிவுகள் இவை அத்தனையையும் ஆரம்ப நிலையிலேயே கில்லி எறிவது தான் அது! விஷ விருட்சமாக வளர்ந்துவிட்டதை முற்றிலும் வெட்ட நாளாகலாம்!ஆனால், விஷ விருட்சங்களை வெட்டவே விடாமல் அதைப் பாதுகாத்து நிற்கும் சந்தர்ப்பவாதக் காளான்களை அகற்றுவதில் என்ன தடை, தயக்கம் இருக்க முடியும்?

அடுத்து முக்கியமான உங்கள் சந்தேகம்....!

//
அப்புறப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. நாட்டு மக்களுக்கு சேவைஆற்றும் உரிமை இவர்களுக்கு இல்லையா:))//

ஸ்மைலி போட்டுக் கேட்டாலும், இல்லை என்பதுதான் என்னுடைய பதில். இவர்கள் இதுவரை என்ன சேவை செய்து கிழித்துவிட்டார்கள்?

வாக்களிப்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட!
வாக்களிப்பது எவருக்கு என்பதில் தெளிவாக இருங்கள்!
வாக்குகள் விற்பனைக்கல்ல! தன்மானத்தை ஒருபோதும் விற்கமாட்டோம்!

ஒரு நல்ல மாற்றம் வர வேண்டுமானால்.......!

காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களியுங்கள்!

விஜயகாந்த், விசி, பாமக, சாதிக்கு நாலாக முளைத்திருக்கிற சங்கங்கள், கட்சிகள்   போன்ற ஒட்டுண்ணிகள், காளான்களை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்!