இப்ப என்ன செய்வீங்க..? இப்ப என்ன செய்வீங்க?

தினமணி தலையங்கம்:  நெருக்கடியான நிலைமைதான்!


கடந்த இரண்டு நாள்களாக முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் வெளிப்படுத்தும் கருத்துகள் திகைப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. பொறுப்பான பதவியில் இருப்பவர், அரை நூற்றாண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர், தமிழகத்தில் மிக அதிகமான காலம் முதல்வராக இருந்தவர், நிர்வாகம் நன்றாகத் தெரிந்தவர் பேசுகிற பேச்சாக அது இல்லை என்பதுதான் திகைப்புக்கும், அதிர்ச்சிக்கும் காரணம்.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போன்ற சூழல் நிலவுவதாகவும், தமிழகத்தை ஆட்சி செய்வது தனது தலைமையிலான தி.மு.க.தானா இல்லை வேறு யாராவதா என்று தெரியவில்லை என்றும் முதல்வர் பேசியிருப்பதுபோல வேறு யாராவது பேசி இருந்தால், "ஏன் இவர் இப்படியெல்லாம் உளறுகிறார்? இவருக்கு என்னவாயிற்று?' என்று கேட்கலாம். 


பேசியிருப்பவர் பல முறை முதல்வராக இருந்தவர். நிர்வாகம் தெரிந்தவர். ஆட்சியில் இருப்பவர்.ஒரு மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால், அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதும், தேர்தல் காலங்களில் ஆட்சியில் இருப்பது அதிகாரம் இல்லாத வெறும் காபந்து அரசுதான் என்பதும்கூட, ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவருக்குத் தெரியாமல் இருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை.

"தமிழ்நாட்டை என் தலைமையிலான தி.மு.க. ஆண்டு கொண்டிருக்கிறதா அல்லது தேர்தல் ஆணையம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது'' என்று கூறிவிட்டு, ""தேர்தல் ஆணையத்திடம் மோதிக் கொள்ள விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சட்டப்படி எல்லாம் நடக்க வேண்டும். இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை'' என்றும் கூறுகிறார். பிறகு, தேர்தல் ஆணையத்தின்மீது ஆத்திரத்தை உமிழ்வானேன்?முன்பெல்லாம் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்குக் கெடுபிடிகள் செய்யவில்லை என்றால், அந்த அளவுக்கு விதிமுறை மீறல்களும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும் நடக்காமல் இருந்ததுதான் காரணமே தவிர, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லாதது அல்ல காரணம்.

அரசியல் சட்டம் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாகவே இருக்கிறது. அரசியல் சட்டப்பிரிவு 324(1) தேர்தல் ஆணையத்துக்குத் தேர்தலை முறையாக நடத்துவதற்காக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்படுவது வரை பரவலான, முழுமையான அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அதைப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் உறுதிப் படுத்தி இருக்கிறது.முறையான தேர்தல் நடத்தப்பட முறையான அதிகாரிகள் தேவை. அன்றைய ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் முறையாகத் தேர்தல் நடைபெற உதவ மாட்டார்கள் என்று ஆணையம் கருதினால் அவர்களை மாற்றவும், தனது நம்பிக்கைக்குரியவர்களை நியமிக்கவும் ஆணையத்துக்கு அரசியல் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-ன் 13சிசி பிரிவுப்படி, தேர்தல் கால நடவடிக்கைகளுக்காகத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் அத்தனை அதிகாரிகளும், அரசு ஊழியர்களும், ஆணையத்துக்குத் தாற்காலிகமாக வழங்கப்பட்ட, ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட ஊழியர்கள்.போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் செல்வாக்கு ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ போட்டியிட வேண்டுமே தவிர, பொருளாதார ரீதியாகப் போட்டியிடுவதை எப்படி ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும். சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தினக்கூலித் தொழிலாளியும், கோடீஸ்வரப் பிரபுவும் போட்டியிட வாய்ப்புள்ள தேர்தல் முறையில், பணத்தை விநியோகித்து ஒருவர் வாக்குச் சேகரிப்பதை ஆணையம் எப்படி அனுமதிக்க முடியும்?

முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தேர்தல் ஆணையம் விடியோ படமெடுக்கிறது. அப்படிப் படமெடுப்பவரைத் தடுப்பதும், தாக்குவதும் விவரம் இல்லாதவர்களாக இருந்தால் பரவாயில்லை. முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில் அக்கறை காட்ட வேண்டிய மத்திய அமைச்சருடன் செல்பவர்கள் வட்டாட்சியரை மிரட்டுவதும், விடியோகிராபரைத் தாக்குவதுமாக இருந்தால், ஆணையம் கெடுபிடிகளை மேலும் அதிகரிப்பதில் என்ன தவறு?

மதுரை பாத்திமா கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் உ. சகாயம் நல்ல சில கருத்துகளை மாணவர்களுக்குக் கூறுகிறார்."நமது வாக்குகள் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி பெற்றவை. எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள். அதேசமயம், அன்பளிப்பு இல்லாத வாக்குப் பதிவு அவசியம். லஞ்சமில்லாத வாக்களிப்பு குறித்து மாணவ மாணவியர் தங்களது பெற்றோருக்கும், உற்றார் உறவினருக்கும் கைப்பேசி மூலம் "என்னுடைய வாக்கு விற்பனைக்கல்ல' எனும் வாசகத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்று பேசுகிறார்.

மாவட்ட ஆட்சியர் சகாயம் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார் தி.மு.க. அனுதாபி ஒருவர். வாகனங்களைச் சோதனையிடுகிறார்கள், எங்களது சுதந்திரம் தடைபடுகிறது என்று மற்றொருவர் வழக்குத் தொடுக்கிறார். மாவட்ட ஆட்சியர் என்னை மிரட்டுகிறார் என்கிறார் இன்னொருவர். மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்? என்று ஏன் யாரும் முதல்வரிடம் திருப்பிக் கேட்பதில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.காவல்துறை வாகனத்தில் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸில் பணம் கடத்தப்படுகிறது. இதையெல்லாம் ஆணையம் தட்டிக் கேட்டால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக முதல்வர் எரிச்சலடைகிறார். வாக்குகள் விலைபேசப்படாமல், வாக்காளர்கள் கவர்ச்சி வாக்குறுதிகளால் ஏமாற்றப்படாமல், முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில் அக்கறை காட்ட வேண்டிய முதல்வர்,

தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்படுவதை நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக வர்ணித்திருப்பது ஒருவகையில் நியாயம்தான். நெருக்கடியான நிலைமை ஏற்பட்டிருப்பது உண்மை.

அது யாருக்கு என்பதுதான் கேள்வி...!

இன்றைய தினமணி நாளிதழின் தலையங்கம் இது. இலவச இணைப்பாக இந்த இரண்டு செய்திகளையும் பார்த்துவிடுங்கள்!


அழகிரி ஆதரவாளர்கள் தாக்கவில்லை: தேர்தல் அதிகாரி மறுப்பு

மதுரை, ஏப்,4: தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அழகிரிக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய ஆதரவாளர்களால் தான் தாக்கப்படவில்லை என அந்த தேர்தல் அதிகாரி திடீரென மறுப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள ஃபேக்ஸ் செய்தியில், மேலூர் தொகுதி உதவி தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான எம்.காளிமுத்து, கோயிலில் நடந்ததற்கு மாறாக, உள்ளூர் போலீசார் கூறியபடியே அழகிரிக்கு எதிராக தான் புகார் அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, காளிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில், அரசு ஊழியரைத் தாக்கியதாக அழகிரி மற்றும் 52 திமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.கீழவளவில் அழகிரி கோயிலுக்கு செல்வதை தானும், ஒரு விடியோகிராஃபரும் பதிவுசெய்தபோது அழகிரி முன்னிலையில் தாங்கள் தாக்கப் பட்டதாகப் புகார் கூறியிருந்தார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும் அந்த அதிகாரி இதையே கூறினார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த வருவாய் அலுவலர்கள் சங்கம், தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தது.இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அழகிரி உள்ளிட்ட 4 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர்.

இந்த நிலையில் திடீர் மாற்றமாக, கோயிலுக்குள் காலணியுடன் வரக்கூடாது என்று மட்டுமே அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் கூறியதாக காளிமுத்து கூறினார்.அழகிரி யாருக்காவது பணம் ஏதாவது கொடுக்கிறாரா என்பதைப் பார்க்கவும், அவரது வருகையை படம்பிடிக்கவுமே தான் கோயிலுக்குள் சென்றதாக காளிமுத்து குறிப்பிட்டார். திமுக ஆதரவாளர்களால் தான் தாக்கப்பட்டதாக கீழவளவு போலீசார்தான் கூறினர் என அவர் தெரிவித்தார்.


அழகிரி மீது பொய்ப் புகார் எனக் கூறிய ஆர்டிஓ சுகுமாறன் சஸ்பெண்ட்

சென்னை: மதுரை கலெக்டர் சகாயத்தின் கட்டாயத்தின் பேரில்தான் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது பொய்ப் புகார் கூறியதாகவும், தன்னை சகாயம் கடுமையாக மிரட்டி வருவதாகவும், இப்படியே போனால் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் கூறிய மதுரை ஆர்டிஓ சுகுமாறன் இன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

நெஞ்சு வலிப்பதாக இவர் கூறியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
"இப்ப என்ன செய்வீங்க..? இப்ப என்ன செய்வீங்க?" என்று வினு சக்ரவர்த்தி டான்ஸ் ஆடிக் கொண்டு கேட்கிற மாதிரி ஒரு திரைப்படக் காட்சி நினைவுக்கு வருகிறதா?

இதே கேள்வியை ஜனங்களும் நம்முடைய மான்புமிகுக்களுக்குத் திருப்பிப் போடுகிற அருமையான சந்தர்ப்பம் ஏப்ரல் 13 அன்று வருகிறதே, நழுவ விடலாமா?
 


நாங்கள் தோற்றாலும் உங்களை மறக்க மாட்டோம் : முதல்வர் கருணாநிதி உருக்கம்

வேலூர் :"எங்களை தோற்கடியுங்கள்; நாங்கள் தோற்றாலும் உங்களை மறக்க மாட்டோம்,'' என, வேலூர் பிரசார கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உருக்கமாக பேசினார்.

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் ஏதோ காமெடி சீன் மட்டும் தானே என்று நினைக்கிறீர்களா?

இந்த ஜோக்கர்களின் கைகளில் மறுபடியும் சிக்கிக் கொள்ள வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இது! இவன் யோக்கியன் இல்லை தெரியும், ஆனால் அவனும் அப்படித்தானே என்று பிக்பாக்கெட்டுக்கும் கன்னம் வைத்துத்  திருடுகிற கொள்ளைக் கும்பலுக்கும் ஒரே தரம் என்று அலட்சியமாக இருந்துவிட முடியுமா?

இந்த தேசத்தின் சீரழிவு காங்கிரஸ் கட்சியால் ஆரம்பித்தது. தேசம் சீரழிவில் இருந்து விடுபட வேண்டுமானால், காங்கிரசையும் அதன் கூட்டாளிகளையும் தோற்கடிப்பதன் மூலமே சாதிக்க முடியும்! இதைச் செய்கிற அதே நேரம், பாமக, தேதிமுக. விசி, சாதிக்கட்சி என்று விஷக் காளான்களாக முளைத்துக் கொண்டிருப்பவைகளையும் முளையிலேயே கிள்ளி எறியவும் தயங்கவேண்டாம்!

என்ன சொல்கிறீர்கள்? என்ன சொல்லப் போகிறீர்கள்?8 comments:

 1. //இந்த தேசத்தின் சீரழிவு காங்கிரஸ் கட்சியால் ஆரம்பித்தது. தேசம் சீரழிவில் இருந்து விடுபட வேண்டுமானால், காங்கிரசையும் அதன் கூட்டாளிகளையும் தோற்கடிப்பதன் மூலமே சாதிக்க முடியும்! இதைச் செய்கிற அதே நேரம், பாமக, தேதிமுக. விசி, சாதிக்கட்சி என்று விஷக் காளான்களாக முளைத்துக் கொண்டிருப்பவைகளையும் முளையிலேயே கிள்ளி எறியவும் தயங்கவேண்டாம்! //

  பெரிய பேய்களை துரத்துவதுடன் இந்தக் குட்டிச்சாததான்களையும் விரட்ட வேண்டும்.

  புதிய மாற்றங்கள் மட்டுமே தொலை நோக்கு நம்பிக்கை தரும்.

  ReplyDelete
 2. ராஜ நடராஜன் என்ற பெயரில் இப்படி ஒரு பின்னூட்டம் வந்திருக்கிறது.

  ////இந்த தேசத்தின் சீரழிவு காங்கிரஸ் கட்சியால் ஆரம்பித்தது. தேசம் சீரழிவில் இருந்து விடுபட வேண்டுமானால், காங்கிரசையும் அதன் கூட்டாளிகளையும் தோற்கடிப்பதன் மூலமே சாதிக்க முடியும்! இதைச் செய்கிற அதே நேரம், பாமக, தேதிமுக. விசி, சாதிக்கட்சி என்று விஷக் காளான்களாக முளைத்துக் கொண்டிருப்பவைகளையும் முளையிலேயே கிள்ளி எறியவும் தயங்கவேண்டாம்! //

  பெரிய பேய்களை துரத்துவதுடன் இந்தக் குட்டிச்சாததான்களையும் விரட்ட வேண்டும்.

  புதிய மாற்றங்கள் மட்டுமே தொலை நோக்கு நம்பிக்கை தரும்.//

  அவர் சொன்னதை வெளியிடும் அதே நேரம் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது..தங்களுடைய ப்ரோபைல் /அடையாளத்தை ஒரு சிறிதேனும் வெளிப்படுத்தத் தயங்குகிறவர்களை அனானிகளாகத் தான் கருத வேண்டியிருக்கிறது. தங்கள் கருத்தை, தைரியமாக, தங்களுடைய உண்மையான அடையாளத்தில் வெளியிடத் தயங்குபவர்களால், என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிட முடியும்?

  தங்கள் சுயவிவரத்தை ஒரு சிறு அளவுக்காவது வெளிப்படுத்தத் தயங்குபவர்கள் பின்னூட்டங்கள் ஏற்க முடியாதது என்பதை மறுபடி சொல்ல வேண்டி இருக்கிறது.

  ReplyDelete
 3. பிட்பாக்கெட்...பரவாயில்லைங்கோ..கன்னக்கோல் நாடு தாங்காது சாமி.

  ReplyDelete
 4. திரு.பழனிச்சாமி!

  முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  "தி.ஐானகி ராமனிலிருந்து பால குமாரன் வழியா சாருக்கிட்டவும் வந்தாச்சு" என்ற உங்கள் சுயவிவரத்தைக் கண்டு கொஞ்சம் அதிர்ந்து போனேன். குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பது ரிவர்ஸ் எவல்யூஷனாகி மறுபடியும் மனிதனில் இருந்து குரங்கு என்றாகிப் போகிறதே!

  ReplyDelete
 5. சரி, நீங்கள் உங்கள் ஊரில் போட்டியிடும் ஒரு சுயேட்சைக்கு வாக்களிப்பீர்களா?

  ReplyDelete
 6. ஆனால், “சி.பி.ஐ. என்ன வானத்தில் இருந்தா குதித்தார்கள்” என்று கேட்டால் அது மட்டும்? அஸ்கு புஸ்கு?

  ReplyDelete
 7. திரு து.வேலுமணி!

  பதிவை மேம்போக்காகப்பார்த்து விட்டுக் கொந்தளித்திருக்கிறீர்கள். சரி!

  முதலில் சுயேட்சைக்கு ஒட்டு! இது என்ன கேள்வி? தமிழ்நாட்டில் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும், சிலதொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது புதிதா என்ன?

  அதிருப்தி வேட்பாளர், அல்லது, திருநாவுக்கரசர் மாதிரித்தொகுதியில் தனிப்பட்ட அறிமுகம் செல்வாக்கு உள்ள வேட்பாளர்கள், கட்சி, சின்னமில்லாமலேயே ஜெயிக்கக் கூடியவர்கள்! நாவலர் மாதிரி உளறுவாயர்கள், கட்சி பலம் இருந்தபோதுமே கூட, எஸ்விசேகர் மாதிரிக் காமெடியன்கள் வாங்கிய ஒட்டைவிடக் கம்மியாக வாங்கிக் கேவலப்பட்ட கதையும் இங்கே உண்டு.

  என்னுடைய தொகுதியில் திமுக-தேதிமுக போட்டி! சுயேட்சைகள் எவரும், தங்கள் குடும்பத்து ஓட்டுக்களைத் தாண்டி மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடியவர்களாக இல்லை.அதனால் தெரியாத தேவதையை விடத் தெரிந்த பிசாசே மேல் என்றபடிக்கு, தேதிமுக வேட்பாளரைவிட திமுக வேட்பாளரைத்தான் தெரிவு செய்தாக வேண்டும். இது ஒரு சிந்தனை.

  அப்புறம் அந்தக் கேண....திட்டுவதென்றால் தைரியமாக நேரடியாகவே திட்டியிருக்கலாமே!அதிலும் ஏன் இப்படி அரைகுறையாக?!

  கடைசியாகக் கேட்ட "சிபிஐ என்ன வானத்தில் இருந்தா குதித்தார்கள்?" இந்தப்பதிவில் சிபிஐ எங்கிருந்து வந்தது? என்ன சம்பந்தம்?

  இப்படி ஈரெட்டாக் கேட்டாக்க அது என்னாங்கண்ணா அர்த்தம்?மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கறதுக்கு முன்னாடி நாமளும் மொதல்ல நிறைய ஹோம் ஒர்க் பண்ணனுங்கோவ்..!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!