Showing posts with label நேரு. Show all posts
Showing posts with label நேரு. Show all posts

ஒபாமா விஜயம் இங்கே இப்போ எதுக்காக?

அமெரிக்க அதிபரின் மூன்றுநாள் இந்தியவிஜயம் வெளியுறவுக் கொள்கையில் மாறிவரும் சூழ்நிலைகள்,முன்னுரிமைகள், பிராந்திய பிரச்சினைகள் இவற்றில் இதுவரை இந்திய அரசும் அரசியல்வாதிகளும் கடைப்பிடித்து வந்த தெளிவற்ற நிலைபாட்டில் இருந்து ஒரு புதிய மாற்றத்தை சுட்டுவதாக  இந்தச்செய்தி சொல்கிறது. முக்கியமாக நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் சீனாவின் அடாவடித்தனம் குறித்த, ஒரு தெளிவான பார்வயுடனான .மாற்றம். இந்திய அமெரிக்க வணிக உறவுகள்  வலுப்படுவதில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மூன்றுமே தனித்தனிக் காரணங்களுக்காகக் கவலைப்படுகிற சூழ்நிலை உருவாகி இருக்கிறது 



அமெரிக்கசதிக்கு வீழ்ந்துவிடாதீர்-அறிவுரை என்று தலைப்பிட்டு தி இந்து நாளிதழ் வெளியிட்டிருக்கும் இந்தச் செய்தி, அதற்கு வாசகர் ஒருவரின் கமென்ட் இது " சீன அரசு எச்சரிப்பதைப் போல தலைப்பை இட்டிருப்பது அபத்தம். உள்ளே விரிவாக சீன பத்திரிகைகள் எச்சரிக்கை செய்கின்றதாக இட்டிருக்கிறீர். இந்தியா எச்சரிக்கை செய்வதற்கும் இந்து பத்திரிகை எச்சரிக்கை செய்வதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்..." இது ஒன்றே வெளியுறவுக் கொள்கை குறித்தான பார்வையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தைச் சொல்வதாக இருக்கிறது.



 ஒபாமா விஜயம் இங்கே இப்போ எதுக்காக?#மார்க்சிஸ்டுகள் கேட்கிறார்கள். #திஇந்துகூடச்சேர்ந்துகேட்கிறது!  
வரலாறு ,வரலாற்றைப் பேசுதல் என்றாலேயே இங்கே நிறையப்பேருக்கு அலர்ஜி! அதனால்தானோ என்னவோ வரலாற்றைத்திரித்துப் பேசுவதும், வரலாறு என்பதே புனைவுகளால் ஆனது என்றும், இன்னும் கூடக் கொச்சையாக வரலாறு என்பது ஜெயித்தவர்களால் எழுதப்படுவது என்றும் ஒதுக்கி வைக்கப்படுகிற  ஒன்றாக  வரலாறு இருக்கிறது.இந்தப் பக்கங்களில் வரலாற்றைப்பேசுதல்  என்று நாடு விடுதலையான தருணங்களில் இருந்து சில விஷயங்களைத் தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம். 

இந்திய வெளியுறவுக் கொள்கை எப்படி எவரால் உருவாக்கப் பட்டது  என்பதை அந்தப்பதிவில் கொஞ்சம் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். சாதாரணமாக வெளியுறவுக் கொள்கை என்பது உள்நாட்டுக் கொள்கைகளின் நீட்சியாகவே ஒவ்வொரு நாட்டின் பொருளாதார, பிரதேச நலன்களை முன்னிட்டே இருக்கும். இங்கே நேரு என்கிற கற்பனாவாதியின் கைகளில் சிக்கிக் கொண்டு கொள்கை எப்படிப் படாதபாடு பட்டது என்பதையும்  அங்கேயே கொஞ்சம் பார்த்திருக்கிறோம். 


நாடு விடுதலை அடைந்த தருணம், சுதந்திர இந்தியாவின் அயலுறவுக் கொள்கையைத் தீர்மானித்தது நேருவும்,அவருடைய ஆல்டர் ஈகோ என்று கூட சொல்லலாம், வி கே கிருஷ்ண மேனனும் தான்! ஆங்கிலேய அரசின் அடிச்சுவட்டை ஒட்டிப் பணி செய்ய மட்டுமே தெரிந்த ஐ சி எஸ் அதிகாரிகளுக்கு, போக வேண்டிய திசை எது என்பதை இந்த இரண்டு அதி மேதாவிக‌ள் தான் தீர்மானித்துக் கொடுத்தார்கள். 
நேருவுக்கு உலக சரித்திரம் அத்துப்படி! சிறையில் இருந்த நாட்களில் மகளுக்கு உலக சரித்திரத்தைக் கடிதங்க‌ளிலேயே எழுதி சொல்லிக் கொடுத்தவர்! அந்த ஒரு தகுதி போதாதா? புத்தகங்களில் சரித்திரத்தைக் கரைத்துக் குடித்து, தன்னுடைய மகளுக்கும் கடிதங்களில் சொல்லிக் கொடுக்க முனைந்தவருடைய வாரிசுகள் புத்தகம், படிப்பின் வாசனை என்றாலேயே காததூரம் ஓடுகிற அளவுக்கு இருந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தின் கதை  யை  முன்னமே கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.

சீனாவுடைய சாய்ஸ் எதுவாக இருக்கும்?இந்தியா அல்லது பாகிஸ்தான்?  
இப்படி ஒரு கட்டுரை சென்ற செப்டம்பரில் எழுதப்பட்டதை இப்போது படித்துப் பார்த்தால் கொடுமையான காமெடியாகவே படுகிறது. தெற்காசிய பிராந்தியத்தில் சீனா தன்னுடைய வஸ்தாத் உதார்களுடன் எவராலும் நம்பகமான கூட்டாளியாகப் பார்க்கப்படவில்லை என்பது சீனர்களுக்கும் புரிந்தே இருக்கிறது.

சீனப் பொருளாதாரம் கொஞ்சம் தேக்கநிலையை நோக்கிப்  கொண்டிருப்பதும், அமெரிக்கப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதிலும் அமெரிக்கர்கள் மிக ஊக்கத்துடன் சீனத்துப் பூனைக்கு மணிகட்டுவதில் மும்முரமாக இறங்கியிருப்பதாகவே தற்போதைய நிலவரம் இருக்கிறது. அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் சுமார் 4 லட்சம் கோடி டாலர்களை சீனா முதலீடு செய்திருப்பதில் 2014 இன் கடைசியில் சுமார் 153  பில்லியன் டாலர்கள் குறைந்திருப்பது, அமெரிக்கர்களை பயமுறுத்துகிற ஆயுதமாக நாலைந்து ஆண்டுகளுக்கு முன் மிரட்டிப் பார்த்தது போல இல்லை என்கிறது இந்தச்செய்தி  ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபர் தன் நாட்டு மக்களுக்கு நாட்டின் நிலையை எடுத்துச் சொல்லும் ஸ்டேட் ஆப் தி யூனியன் உரையில் கூட சீனா குறித்த அமெரிக்க நிலை மிகத் தெளிவாக இருந்தது.

ஒபாமா விஜயம் இங்கே இப்போ எதுக்காக என்று மார்க்சிஸ்டுகள் வேண்டுமானால் கேள்வி எழுப்பலாம். ஆனால், நேரு காலத்தில்  இருந்து தொடரும் அசமந்தத் தனத்திலிருந்து இந்த தேசம்  விடுபடுவதை, மாற்றங்களைத் தடுக்க முடியாது. இது குறித்து வரும் நாட்களில்  தொடர்ந்து பேசுவோம். நீங்கள்  தயார்தானே?



என்ன தோன்றுகிறது என்பதைப் பின்னூட்டங்களாகச் சொல்ல முடிகிற நண்பர்கள்  அவசியம் தேவை. அப்படி இருந்தால் தான் குறைகளைத் திருத்திக் கொள்ள முடியும். பயனுள்ள பதிவாக  உங்களுடைய வாசிப்புப் பட்டியலில் இடம் பெறத் தகுதி உள்ளதாக  இந்தப்பக்கங்களில் தொடர்ந்து எழுத மாற்றங்கள் செய்ய உதவியாக இருக்கும். கொஞ்சம் சொல்லுங்களேன்! 

அந்த நாளும் வந்திடாதோ....!


ஜான் பிட் ஜெரால்ட் கென்னெடி! ஒரு சகாப்தம் என்று சொல்லிக் கொள்ளலாம்! ஆனால் அந்த சகாப்தத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு என்ன பலன் இருந்தது என்பதை மட்டுமே அடிப் படையாக வைத்துப் பார்த்தால், இந்த மாதிரி சகாப்தங்கள் என்று சொல்லப்பட்டவர்கள் ஒரு சாபமாகவே இருந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு சொல்லும். அமெரிக்க அரசியலில், ஜனநாயகக் கட்சியின் வரலாற்றில் ஏறத்தாழ ஐம்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த கென்னெடி குடும்பத்தில் இருந்து, வருகிற 2011 ஆம் ஆண்டில் எவருமே இருக்க மாட்டார்களாம்!இதை ஒரு சகாப்தத்தின் முடிவு என்று  வைத்துக் கொண்டாலும் சரி! ஒரு சாபத்தின் முடிவு என்று வைத்துக் கொண்டாலும் சரி!



இந்த யூட்யூப் வீடியோவைப் பார்த்த போது முதலில் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது! அப்புறமாக, "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்று
நன்னூல் சூத்திரம் மாற்றங்களைக் குறித்துச் சொல்வது எவ்வளவு பொருத்தமானது என்பதும் யோசித்துப் பார்க்கையில் தெளிவாகப் புரிந்தது!  


கடைசிப் பாராவைக் கொஞ்சம் கவனியுங்கள்! நேருவின் அமெரிக்க விஜயம் கென்னடியைப் பொறுத்தவரை மிகக் கசப்பானதாகவே இருந்ததாம்.. நேருவின் பார்வை, கரங்கள் தன் மனைவியின் மீது படுவதை சகித்துக் கொள்ள முடியாத எரிச்சல் கென்னடிக்கு இருந்ததையும்  இந்தப் பாரா சொல்கிறது. பெண்கள் என்றாலே நேருவுக்கு ஒரு "கிறக்கம்" இருந்ததையும் சொல்கிறது.



இங்கேயும், நேரு குடும்பத்து வாரிசுகள் எவருமே அரசியலில் இல்லாமல் போகிற ஒரு காலம், இந்த தேசத்தைப் பிடித்த சாபத்தில் இருந்து விடுதலை என்ற திருநாளும் வாராதோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா!

மாற்றங்கள் வரும்! புதிய மொந்தையில் பழைய கள்ளை மட்டுமே பரிமாறத் தெரிந்த, ஊழல் முடை நாற்றம் பிடித்த காங்கிரஸ் கட்சியின் பிடியில் இருந்து இந்த தேசம் விடுதலை பெறும் திருநாளும் வரும்!

நம்பிக்கையாகவும், பிரார்த்தனையாகவும்!


*******
தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றால் என்ன?

பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னால், குறிப்பாக, நரசிம்ம ராவ் காலத்தில் அறிமுகமான பொருளாதார சீர்திருத்தங்கள் சமயத்தில் இந்த வார்த்தைகளை விளக்குவது, விளங்கிக் கொள்வது கடினமாகவே இருந்தது.இணையத்தில் சில வருடங்களுக்கு முன்னால், பிரிட்டிஷ் இளவரசி டயானா தன்னுடைய காதலர் டோடி பேயட் உடன் கார் விபத்தில் பரிதாபமான முறையில் இறந்துபோன சம்பவத்தைத் தொட்டு, குரூரமாக இருந்தாலும் கூட அதிலும் கூட கொஞ்சம் நகைச்சுவை கலந்து ஒரு வியாக்கியானம் உலாவந்து கொண்டிருந்தது, இன்றைக்கு மறுபடி கண்ணில் பட்டது.

ஒருவர் கேட்கிறார்: தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றால் என்ன?

அதற்குப் பதில் வருகிறது பாருங்கள்!! "இளவரசி டயானாதான்!"

எப்படி என்று மேலும் விளக்கம் கேட்பதற்கு முன்னாலேயே வருகிறது.

"ஒரு பழமைவாதப் பெருமை பேசும் ஆங்கிலேய அரச குடும்பத்துப் பெண், இளவரசி தன்னுடைய எகிப்துக் காதலனோடு, பிரெஞ்சு  சுரங்கப்பாதையில் டச்சு எஞ்சின் பொருத்திய ஜெர்மன் காரை
, பெல்ஜியத்தை சேர்ந்த டிரைவர் ஸ்காட்ச் விஸ்கியைக் குடித்துவிட்டு ஓட்ட, இத்தாலியப் பத்திரிகையாளர் துரத்த எங்கேயோ எப்படியோ இடிபட்டு விபத்தாகிக் காயப்பட்டு,  அமெரிக்க டாக்டர் பிரேசிலிய மருந்தைக் கொடுத்து சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் இறந்து போனாரே அது தான்!"

தாராளமயம், உலகமயம் என்பதை இதை விட சுருக்கமாக, பொருத்தமாக சொல்லிவிட முடியாது என்று தான் தோன்றுகிறது.

உங்களுக்கு எப்படியோ...?!

 

நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்ட ஒரு தலைவன் தேவை!



இன்று காந்தி ஜெயந்தி! மகாத்மா காந்தியின்  141 ஆவது பிறந்த நாள்! அரசு விடுமுறை, பேரளவுக்கு தில்லியிலும் வேறு சில இடங்களிலும் தலைவர்கள் காந்தி படத்துக்கு மாலை சூட்டுவார்கள். தூர் தர்ஷனில் சில வயதான பெரியவர்கள் ராட்டையில் நூல் நூற்பதைக் காட்டுவார்கள்,தேசத்தந்தை என்றழைக்கப்படுகிறவருக்கு அஞ்சலி செய்கிற கடமை முடிந்தது!

இந்த நாள் காந்தி பிறந்த நாள் மட்டுமில்லை, அவருக்கு முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின் பிறகு பிறந்த இன்னொரு மகத்தான மனிதரின் பிறந்த நாளும் கூட!

இந்திய வரைபடத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால், சுற்றிலும் இந்தியாவைத் தங்கள் எதிரியாகவே கருதும் நாடுகளால் சூழப் பட்டிருப்பதைக் காண முடியும். 

பாகிஸ்தான்
, வங்காள தேசம், பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர், ஆப்கானிஸ்தான்,மியான்மார் என்று தற்போது அழைக்கப் படும் பர்மா, இலங்கை,நேபாளம், இந்த நாடுகள் அனைத்துமே தோற்றுப் போன அரசு அமைப்புக்கள், அல்லது ரவுடிஅரசுகளாக  (Rogue States) இருப்பதைப் பார்க்க முடியும். ரவுடிகள் சுற்றியிருந்தால் நிம்மதி ஏது? முன்னேற்றம் தானேது?

இயல்பாகவே இந்தியாவோடு விரோதம் பாராட்டி வரும் இந்த நாடுகளில்
, திட்டமிட்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான சதிகளை, பாகிஸ்தானும்,சீனாவும் தூண்டிவிட்டுக் கொண்டு இருப்பதை, செய்தித் தாட்களை வழக்கமாகப் படிக்கும் ஒரு சிறுவன் கூட சொல்லிவிட முடியும். இந்த விரோதத்திற்கு வெளிப்படையான காரணங்களை விட இந்தியா வளர்வதும் வலிமையாக இருப்பதும் தங்களுக்கு ஆபத்து என்ற ஒரே காரணம் தான் முக்கியமானது.

ஆனால், ஒரு சிறுவனுக்குத் தெரிகிற அளவு கூட நமது அரசியல் வாதிகளுக்கு இவை புரிவதில்லை. அவர்களுக்குத் தங்கள் சொந்தக் கல்லாவைப் பெருக்கிக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது.
வெளியில் இருந்து வருகிற இந்த விரோதிகளை விட, உள்ளிருந்தே அரிக்கும் வியாதிகளாக இங்கே உள்ள அரசியல் முறை, ஊழல் நிர்வாகம் இருக்கிறது. நேரு காலத்தில் முந்த்ரா ஊழல் என்று தொடங்கி இன்றைக்கு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் எழுபதாயிரம் கோடி செலவு செய்வதில் பெரும் ஊழல் என்ற அளவுக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.



அதிகாரிகளுக்கோ, அமைச்சர்களுக்குக் காசுபார்த்துக் கொடுக்கும் சாக்கில், தங்களுடைய பைகளையும் நிரப்பிக் கொள்ளவே நேரம் போதவில்லை. இந்தியக் குடிமகனுக்கோ, எதை எடுத்தாலும் அரசு அல்லது ஒரு தலைவன் தான் வந்து செய்ய வேண்டும்! தானே தனக்காகச் செய்து கொள்கிற சாமர்த்தியம் இன்னமும் வராத நிலையில் தான் சராசரி இந்தியக் குடிமகன் இருக்கிறான் என்றுதான் தோன்றுகிறது.

அற்பப்புழு மீதுள்ள ஆசையால் தூண்டிலில் சிக்கிக் கொள்கிற மீன் மாதிரி, இலவசங்களைக் காட்டி ஏமாற்றுகிற தலைவர்களை
இந்தியக் குடிமகன்கள் நம்புகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது, ஆனால் அந்த மோசடிக் காரர்களை யாரோ ஒரு ஹீரோ அல்லது வேறொரு தலைவர் வந்து தான் தட்டிக் கேட்கவேண்டும், தாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற மாதிரி, பொழுது தவறாமல் மானாட, மயிலாட, சினிமாக் காரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டு மிச்சமிருப்பதையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

அறுபது வருடங்களுக்கு முன்னால்
, விடுதலை பெற்ற இந்த நாடுகள், பிரதேச ஆதிக்கப் போட்டியில் எவ்வளவு மோசமான எதிரிகளாக மாறிப் போயின என்பதையும், ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது தான், எவ்வளவு ஆபத்தான சூழலில் நாம் இருக்கிறோம் என்பது புரியும். 

பிரிட்டன் தனது காலனி ஆதிக்கத்தை விட வேண்டிய நிர்பந்தம் வந்தபோது, ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு குட்டையைக் குழப்ப முடியுமோ அந்த அளவுக்குக் குழப்பி விட்டு, 
இருக்கிறவர்கள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்று குள்ளநரித் தனமாக வெளியேறியது என்பதையும், 

இரண்டு உலகப் போர்கள்
,அதன் பின்னால், ஆங்கிலேயர்களுடைய மவுசு காலிப் பெருங்காய டப்பா என்ற அளவுக்கே சுருங்கிப்போன நிலையில், புதிய வில்லனாக அமெரிக்கா சர்வ தேச நிகழ்வு ஒவ்வொன்றிலும் நாட்டாமை செய்ய ஆரம்பித்த கதையையும் சேர்த்துப் பார்க்கத் தெரிந்தால், நம்முடைய நாடு எதிர்கொள்ள வேண்டி இருக்கிற சவால்களைப் புரிந்து கொள்ள முடியும்.

எதிரிகள் என்று சொல்லும் போது
, வெளியே இருக்கும் எதிரிகள், நமக்குள்ளேயே இருந்து கொண்டு அற்பத்தனமான காரணங்களுக்காக தேசத்தைத் துண்டாட நினைக்கும் எதிரிகள் என்று பிரித்துப் பார்க்க வேண்டும். 

இங்கே எழும் கலகக் குரல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு வெளி எதிரியின் தூண்டுதல், பங்கு,பயிற்சி, பண உதவி இப்படி நிறைய இருக்கிறது. 
 

ஒரு அரசை நடத்துகிற அடிப்படைத் தகுதி கொஞ்சமும் இல்லாத நபர்களைத் தேர்ந்தெடுத்த ஒரே பாவம்
, பொறுப்பு இல்லாத நிர்வாக இயந்திரம் என்று பிரச்சினைகளை இன்னமும் பூதாகாரமாக்கிக் கொண்டிருக்கும் அவலத்தைத் தொட்டுச் சொல்கிற முகமாகத் தான், சீனப் பெருமிதம் வயது அறுபது என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதினேன்.

மகாத்மா காந்தியை, இங்கே ஒருவர் தீவீரமாக வெறுத்தாலும் சரி, ஆதரித்தாலும் சரி, காந்திஜி தவிர்க்க முடியாத ஆளுமையாக இந்த தேசத்தின் சமீப கால வரலாறோடு பின்னிப் பிணைந்திருக்கிறார். 

காந்தியின் ஆளுமையின் மீது சவாரி செய்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜவஹர்லால் நேரு, அடிப்படையில் நல்ல எண்ணம் உள்ளவராக இருந்தபோதிலும், ஜனநாயகத்தை மதித்து நடந்த போதிலும், அவருடைய சில பலவீனங்கள், தேசத்திற்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தின.இன்னமும் சேதங்கள் தொடர்கின்றன.

இது தான் சுதந்திர இந்தியாவின் நவீன சிற்பி நேருவின் பதினேழு ஆண்டு கால சாதனை! 

நேருவிடம் இருந்த தனிநபர் ஆளுமை
, பிறரது எண்ணங்களை வெளிப் படையாகச் சொல்ல முடியாத சூழ்நிலையைக் காங்கிரஸ் கட்சிக்குள்ளும்,ஆட்சியிலும் ஏற்படுத்தியது. காந்திஜியின் மீது இருந்த அபிமானத்தால் நேருவோடு முரண் பட்டவர்கள், காந்திஜி மனம் புண் பட்டுவிடக் கூடாதே என்று ஒதுங்கிப் போன தருணங்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில்,மாறாத வடுக்களாக இன்றைக்கும் இருக்கின்றன. 

நல்லதை நினைத்தவர்கள் ஒதுங்கிப்போனார்கள். சம்சா அடித்தே, ஆளுபவரை, அதிகார மையத்தில் இருப்பவரைச் சுற்றியே கும்மி அடிக்கும் பேர்வழிகள் காங்கிரசுக்குள் அதிகமாகப் புகுந்து கொண்டார்கள் இன்றைக்குக் காங்கிரஸ்காரன் என்று தன்னைச் சொல்லிக் கொள்கிறவர்களில் பெரும்பகுதி அல்லது அத்தனை பேருமே நேரு பரம்பரைக்கு மட்டுமே மொத்த விசுவாசிகளாகத் தன்னைக் காட்டிக் கொண்டு, அப்படிக் காட்டிக் கொள்வதால் பதவி ஏதாவது கிடைக்குமா என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தான். இவர்களுக்கு தேசீயம், நாட்டுப் பற்று என்பதும்,மதச் சார்பின்மை, ஜன நாயக சோஷலிசம் (இப்படி ஒன்றைக் காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருந்தது இன்றைய காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியவே தெரியாது!) இவையெல்லாம் வெற்றுக் கோஷங்கள் மட்டுமே.

இன்றைய காங்கிரஸ் தான் இந்த தேசத்தின் முதல் எதிரி, உள்ளிருந்தே கெடுக்கும் எதிரி என்பதை எமெர்ஜென்சி காலம் தொடங்கி தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் நிருபித்துக் கொண்டே வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் வரலாறே, ஆளுபவரோடு இசைந்து போய்க் கொஞ்சம் சலுகைகளைக் கூட்டிக் கொடுக்க முடியுமா என்று பவ்யமாகப் பணிந்து கேட்கும் மிதவாதத்தினரால் நிரப்ப பட்டது தான்!

1937 களில் இந்தப் போக்கிற்கு நேருவின் தந்தை மோதிலால் நேருவே முன்னணியில் இருந்து நடத்தியதும், காந்தி சிறையில் இருக்கும்போதே இவர் தன்போக்கிற்குப் பதவியைத் தேடி ஓடியதும் இங்கே நிறையப் பேருக்குத் தெரியாத தியாக வரலாறு! 

காங்கிரசில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே, சுதந்திரத்தைப் பற்றிப் பேசினார்கள், அப்படிப்பட்ட சிலருமே,கண்முன்னால் இருந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், வெவ்வேறு வழிகளில் பயணப்பட்டுக் காணாமலும் போனார்கள். 

காங்கிரசின் பழைய வரலாறு, முரண்பாடுகளின் மொத்த உருவம். அத்தனை கோளாறுகளையும் மீறி, காந்தி என்றொரு ஆளுமை, ஜனங்கள் அவர் சொன்னதை அப்படியே கேட்டு நடந்த விந்தை தான், காங்கிரசை இன்றைக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சியாகச் சொல்லிப் பெருமிதப் பட்டுக் கொள்ள முடிகிறது. ஆனால், சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வழிநடத்தும் தலைவர்கள் கிடைத்தார்களா என்று பார்த்தால், காந்தியை மறந்த காங்கிரஸ் ஜீரோவாகி நிற்கிறது.

நேருவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்து, இன்று வரை தீர்வு காணப் படாமல், பெரும் அச்சுறுத்தலாகக் கூட மாறிக் கொண்டு வரும் பிரச்சினைகள், இன்றைய ஆட்சியாளர்களுடைய திறமைக் குறைவு, அலட்சியத்தால் தேசத்திற்கு ஏற்படக் கூடிய சேதம் இவைகளைத் தொட்டும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சென்ற அக்டோபரில் மூன்று பதிவுகளுமே ஒரு அச்சாரமாக ஆரம்பித்தன.


காந்தி பிறந்த அதே நாளில் தான், முப்பத்தைந்து வருடம் கழித்து 1904 ஆம் வருடம்  அக்டோபர் இரண்டாம் தேதி, லால் பஹதூர் சாஸ்திரியும் பிறந்தார். நேருவின் மறைவுக்குப் பின்னால், அடுத்த பிரதமராகப் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர். பதவியில் இருந்த காலம் சிறிதே என்றாலும் கூட, நேருவின் காலத்தில் இருந்த தரித்திர இமேஜை உடைத்து, இந்தியா அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாத ஒரு நாடு, வருங்காலத்தில் வலிமையான நாடாக வளரக்கூடிய நாடு என்பதைச் செயலில் காட்டிய மிக உயர்ந்த மனிதர்! 

ஜெய் ஜவான்! ஜெய் கிசான்! என்ற கோஷம் அவருக்குப் பின் கொஞ்ச காலம் வரை நினைவு இருந்தது. 

நல்லவர்களைத் தான் நாம் சீக்கிரம் மறந்து விடுவோமே!

நேருவைப்போல மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறக்கவில்லை. ஏழ்மையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர் சாஸ்திரி. அரசியலில் கூட, நேருவுக்குக் கிட்டத்தட்ட, முடிசூடா இளவரசர் அந்தஸ்தை காந்தி வழங்கியிருந்ததுபோல, சாஸ்திரிக்கு எவரும் காட்பாதர் ஆக இருந்ததில்லை. ஆனாலும், நேர்மையான செயல்பாடுகள், திறமை மதிக்கப்பட்ட காலம் அது என்பதனால், விடுதலைப்போராட்டத்தில் மிகவும் கவனிக்கப் பட்ட தலைவராக வளர்வதில் லால் பஹதூர் சாஸ்திரிக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை.

இன்றைய நவீன இந்தியாவின் சிற்பியாக நேருவை மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துகிறதே தவிர,லால் பஹதூர் சாஸ்திரி மாதிரித் திறமையான நபர்களின் பங்களிப்பை, அவர்கள் இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஆற்றியிருக்கும் பணிகளை வாய் விட்டுக் கூட நாலு வார்த்தை சொல்வதில்லை.






ஆகஸ்ட் 31, 1965-நூறு டாங்குகளுடன் பாகிஸ்தான் காஷ்மீரின் சம்ப் பகுதிக்குள் ஊடுருவி விட்டதாகத் தகவல் வருகிறது. குறைந்த நேரத்திற்குள்ளாகவே, இந்தியாவிலிருந்து காஷ்மீரைத் துண்டித்து விட முடிகிற நோக்கத்தோடு பாகிஸ்தான் படைகள் தயாராக, திட்டமிட்டு நடத்திய தாக்குதல் அது. 

நேருவின் மறைவுக்குப் பின்னால், லால் பஹதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு முழுதாக அப்போது மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை!

குள்ளமான மனிதர் தான். இமயமலையை விட உயர்ந்து நின்ற உறுதியோடு கூடிய பிரதமர் அவர் என்பது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல இந்தியாவிலேயே நிறையப்பேருக்குத் தெரியாமல் தான் இருந்தது. புதிய தாக்குதல் முனை ஒன்றை ஆயத்தம் செய்ய உத்தரவிட்டார். லாகூர் மீது தாக்குதல் நடத்துவது என்று முடிவெடுக்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆனது.

1965 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தம் ஒருவிதமான முடிவுக்கு வந்தபோது, மேற்கத்திய நாட்டின் தூதர் ஒருவர் இப்படிச் சொன்னதாக, அமெரிக்க டைம் பத்திரிக்கை, அக்டோபர் முதல் தேதியிட்ட இந்த செய்தியில் எழுதுகிறது:

”It used to be you could feed the word 'India' into the machine and it would spit out 'Maharajahs, snakes, too many babies, too many cows, spindly-legged Hindus.' Now it's apparent to everybody that India is going to emerge as an Asian power in its own right."

ரயில்வே ஸ்டேஷனில் எடைகாட்டும் மெஷினில் காசைப் போட்ட உடன் அட்டையைத் துப்புவது போல,இந்தியா என்று சொன்ன உடனேயே,  மகா ராஜாக்கள், பாம்பாட்டிகள், எக்கச் சக்கமாகக் குழந்தைகள், ஏகப்பட்ட பசு மாடுகள், தொடைகள் வலுவில்லாத கால்களோடு கூடின இந்துக்கள் என்று தான் நினைப்பு வரும். தன்னளவிலேயே ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவாகப் போகிறது என்பது எல்லோருக்குமே இப்போது புரிகிறது.

காந்தியைப் பற்றி
, அவர் நடத்திய சத்தியாக்கிரகப்போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் மரியாதையுடனேயே மேற்கத்திய நாட்டவர் பேசினாலும் கூட, இந்தியா என்றால் பாம்பாட்டிகள், சாமியார்கள், மகாராஜாக்கள்,பிச்சைக்காரர்கள், கசகசவென்று எங்கு பார்த்தாலும் சனத்தொகைக் கூட்டம், நாகரீகமற்றவர்கள் என்ற எண்ணம் தான் இருந்தது.

போதாக்குறைக்கு 1948 இல் பாகிஸ்தானுடனான காஷ்மீர் ஆக்கிரமிப்பு, அதில் சமாதானத் தூதுவராகக் காட்டிக் கொள்ள நேரு செய்த அசட்டுத்தனம் அப்புறம்,1962 சீனாவுடன் எல்லைத் தகராறு இதெல்லாம் சேர்ந்து இந்தியர்கள் என்றாலே தொடை நடுங்கிகள்  (ஸ்பின்ட்லி லெக்ட் என்ற வார்த்தைப் பிரயோகம் )அப்படித்தான் பொருள் தருகிறது.) நேருவின் பலவீனங்களை வைத்தே அப்படி எடைபோட்டார்கள் என்றும் சொல்லலாம். 

அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்!

வீரர்கள் பரம்பரையாகத் தங்களை எண்ணிக் கொண்டதும், இந்தியர்கள் கோழைகள் என்று கருதியதுமே நடந்து முடிந்த யுத்தத்தின் படிப்பினைகள் என்று புலம்புகிறது பாகிஸ்தானிய டிஃபென்ஸ்  ஜார்னல் கட்டுரை ஒன்று!



கோழைத்தனமான தலைமை மாறினதும் அதே இந்தியாவைப் பற்றிய கண்ணோட்டமே தலைகீழாக மாறிப்போனது என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன்.


உள்ளது உள்ளபடி, அறிந்துகொள்வதற்கான ஒரு படிக்கட்டு மட்டுமே! சாஸ்திரி எனும் அற்புதமான மனிதரை இன்னமும் அறிந்துகொள்ள வேண்டும்! இன்றைக்கு சோனியாகிப் போன அல்லது சோனியா குடும்பக் கட்சி என்றாகிப் போன காங்கிரசில் இப்படிப்பட்ட மகத்தான மனிதர்களும் ஒருகாலத்தில் இருந்தார்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டாமா!

தொடர்ந்து பேசுவோம்!

**சென்ற வருடம் அக்டோபரில் எழுதியதன் மீள்பதிவு இது.  மிகச் சமீப காலத்திய வரலாற்றையே எவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் அல்லது எதுவுமே தெரியாமல் இருக்கிறோம் என்பதற்காக, கொஞ்சம் தேவையான திருத்தங்களுடன்!



வரலாற்றைப் பேசுதல்....! சுதந்திர தினச் சிந்தனைகளாக........

சுதந்திர தினச் சிந்தனைகளாக, நாடு விடுதலை அடைந்த தருணங்களில் இருந்து, பிரிவினை, பிரிவினை ஏற்படுத்திய ஆறாத ரணம், பிரிந்துபோன பிறகும் கூடத் தொடரும் விபரீதமான தொந்தரவுகள் என்று கொஞ்சம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

சென்ற வருடக் கடைசியில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் மகன் வாங்கி வந்திருந்த புத்தகங்களில் "இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு" என்ற புத்தகமும் ஒன்று. கிழக்கு வெளியீடு.

படிக்க ஆரம்பித்த தருணங்களில் முப்பது நாற்பது பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாத சலிப்பூட்டும் மொழிநடை, திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருப்பது போல இருந்தது என்பதால், அந்த நேரத்தில் வெறுத்துப் போய் தூக்கி எறிந்து விட்டேன். இந்த நான்கு நாட்களில் பிரிவினை பற்றிக் கொஞ்சம் பேசலாமே என்று எழுத ஆரம்பித்த நேரத்தில் மறுபடி அதைத் தேடி எடுத்து படித்து முடித்தேன். இப்படி ஒரு அபத்தமான புத்தகத்தை இதுவரை படித்ததே இல்லை!  


ஆசிரியர் என்னதான் சொல்ல வருகிறார் என்பதே குழப்பமாக, தெளிவில்லாமல் அப்படி ஒரு அபத்தம்!
 

புத்தகத்தில் பிரிவினைக்கான காரணமாக, "இது வெறும் அரசியல் வரலாறல்ல, மதவெறி என்னும் பேயால் சுழற்றியடிக்கப் பட்ட இரு தேசத்து மக்களின் சரித்திரமும் கூட!" என்று பின் அட்டையில் போட்டிருக்கிற ஒன்று, அந்த மதவெறி என்ற பேயாவது விரிவாக, தெளிவாகப் பேசப் பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.  

சகட்டுமேனிக்கு காந்தி, நேரு, ஜின்னா,படேல், காங்கிரஸ், முஸ்லிம் லீக், ஆர் எஸ் எஸ், இப்படி எல்லோரையும் ஒட்டு மொத்தமாகக் குற்றம் சொல்கிற இந்தப் புத்தகத்தில் ஒரே ஒரு நபர் மட்டும் கொஞ்சம் நல்லெண்ணம் படைத்தவராக, ஏதோ அவர் மட்டும் இந்த இரத்தக் களறியைத் தடுக்க முயன்றும் முடியாமல்  போனவராகச் சித்தரிக்கப் படுகிறார். 

அவர், இந்திய வைசிராயாக இருந்த லார்ட் மவுண்ட் பேட்டன்! 

இந்திய வரலாற்றை, ப்ரிடிஷ்காரர்களைவிடத் திரித்துப் பாடப் புத்தகங்களாகவும் ஆக்கி வைத்தார்கள் என்று இடதுசாரிகளைப் பற்றிக் குற்றம் சொல்வது உண்டு! அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகிற மாதிரி, இந்தப் புத்தகம் இருக்கிறது.இந்தப்புத்தகத்தில் ஆசிரியர் மருதன், பரபரப்புக்காக, shock value கூட்டி வாசகங்களை எடிட் செய்து சூடாக இன்றைய மனநிலைக்குத் தகுந்தபடி  ஆறிக் குளிர்ந்து போன நிலையில் கூட சூடான மிளகாய் பஜ்ஜி என்று கூவி விற்கிற மாதிரித் தான் இந்தப் புத்தகமும் இருக்கிறது.நேர விரையம், விலை கொடுத்து வாங்கின காசும் விரையம் என்பதைத் தவிர இந்தப் புத்தகத்தைப் பற்றி அதிகம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

184 பக்கங்களில் குழப்பிக் கொண்டே போகும் இந்தப் புத்தகத்தை விட, நீடூர் ஆன்லைன் காம் என்ற இந்த வலைப் பதிவின் ஒரே பக்கம் இன்னமும் அழுத்தமாக, பிரிவினை யாரால் தூண்டப்பட்டது என்பதைத் தெளிவாகவே சொல்கிறது!
 

"இந்து-முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்….

கி-பி எட்டாம் நூற்றாண்டு முதல் கிபி 18ம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலை சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டலும் அந்த 10 நூற்றாண்டுகளில் இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் எந்த பகுதிலும் காண இயலாது.ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19-ம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து-முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம்.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் -முஸ்லிம்களும் இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத் திட்டமிட்டனர் வெள்ளையர்.அதற்கு இரு வழியினைக் கடைப் பிடித்தனர்.

1)இந்துக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பான எண்ணத்தை ஏற்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்ச்சிகளை திரித்துக் கூறல்.

2)பொருளாதார ரீதியில் இரண்டு இனங்களுக்குமிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவதின் மூலம் இருவருக்கிடையே போட்டியையும். பொறாமையையும், குரோதத்தையும் ஏற்படுத்துதல்.

பிரிட்டிஷ் சதி

ஒரிஸாவின் முன்னாள் ஆளுனரும் முன்னால் ராஜ்யசபை உறுப்பினருமான பி.என்.பாண்டே அவர்கள் சரித்திரங்கள் எப்படி திருத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடும்பொழுது தன் கருத்துக்கு ஆதரவாகக் கீழ்கண்டவாறு எழுதுகிறார்:     “பிரிட்டிஷ் தஸ்தாவேஜுகளைப் பார்த்தால் பிரித்தாலும் கொள்கை எப்படி உருவெடுத்தது என்பது புலப்படும்.எல்கின் பிரபுவுக்கு பிரிட்டிஷ் அரசின் செயலாளார் ‘வுட்’எழுதியுள்ள கடிதத்தில்,  ”ஒரு பகுதிக்கு எதிராக அடுத்ததைத் தூண்டிவிடும் யுக்தி மூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளோம்.இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்படவிடாமல் இருக்க உங்களால் இயன்றது அனைத்தையும் செய்யுங்கள்”எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கவர்னர் ஜெனரல் டfபரினுக்கு கிராஸ் எழுதிய கடிதத்தில்,   “மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பொருத்த சாதகமாக உள்ளன. இந்தியாவுக்கான கல்விமுறைப் பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக்குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்படுத்தித் தரும் என்று எதிர் பார்க்கிறேன்”என எழுதியுள்ளார்.

கர்ஸன் பிரபுக்கு ஜார்ஜ் பிரான்சிஸ் ஹாமில்டன் பின் கண்டவாறு எழுதியுள்ளார்:   “படித்த இந்தியர்களை வெவ்வேறு கருத்துகளை இரு கூறுகளாகப் பிரித்தால் பரவிவரும் கல்வியறிவு காரணமாக நமது அரசுமீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.எனவே.இனத்துக்கு இனம் பிளவை அதிகப் படுத்துகிற வகையில் பாடப் புத்தகங்கள் இருக்கும்படி நாம் திட்டமிட வேண்டும்”

(இஸ்லாமும்,இந்தியக்கலாச்சாரமும்.by P.N.பாண்டே.நீரோட்டம் பதிப்பகம்,சென்னை) 

 


கே நட்வர் சிங், இந்திய வெளியுறவுத் துறைப் பணியில், முப்பத்தோரு வருட காலம் பணி புரிந்து விட்டு, ஒய்வு பெற்றபிறகு காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர். 1956-1958 கால கட்டங்களில் சீனாவில் இந்திய தூதரகப் பணியில் இருந்தவர், பிறகுஅமெரிக்கா, யுனிஸெஃப் என்று பல இடங்களில் பணியாற்றிய பிறகு, கடைசியாக 1984 இல் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர்.


இங்கே சாகும் தருவாயில் காசி நகரில் கங்கைக்கு அருகில் ஒண்டினால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியில் ஒண்டிக் கொள்வது எதற்காக, காங்கிரஸ் கட்சிக்கும் அவர்கள் தேவைப்படுவது எதற்காக என்பதை நான் விலாவாரியாகச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை அல்லவா!


இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், நேருவின் காலத்தில் நட்வர் சிங் வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்திருக்கிறார், சீனாவிலும் பணியாற்றியிருக்கிறார், அந்த நேரத்து அதிகாரபூர்வமான நிலையை, நிலவரத்தை அறிந்தவர் என்பது தான். மற்ற அரசியல் வியாதிகளைப் போல ஒரு தகுதியுமில்லாமலேயே, வாய்க்கு வந்ததைப் பேசி அதுவே இலக்கியம், மொழிக்கு இலக்கணம் என்றெல்லாம் பிலாக்கணம் பாடுகிற கூட்டத்தோடு சேர்த்து விட முடியாது.


சீனா டயரி என்று நட்வர் சிங் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.ரூபா அண்ட் கோ வெளியீடாக வந்திருக்கும் இந்தப் புத்தகத்தின் மீதான விவாதங்களில் பேசும்போது இந்திய சீன யுத்தத்தைப் பற்றிய சில கருத்துக்களை முன்வைத்தார். அது கீழே உள்ள சுட்டியில்!



Former External Affairs Minister K Natwar Singh on Tuesday regretted that India has not yet comprehensively analysed the reasons behind the 1962 war with China, saying such an exercise was "really necessary."

Speaking at a discussion on his recent book 'My China Years -- 1956-88, he touched upon various phases of Sino-India relationship in the last 60 years and felt things would have been different had Rajiv Gandhi won the 1989 elections.

"Why 1962 happened. No serious analysis of it took place on our side," Singh said indirectly criticising Government's secretive policy in revealing details of the war.

About the war with China, he said "Mao-Tse Tung decided to teach India a lesson after they felt that we were encroaching on their land."

India missed an opportunity to resolve the issues with China in 1960 as the country "did not understand the power game", the former minister said, without elaborating on his observation.

On the border dispute, he said Tawang did not figure in the map of India in 1953.

திரு நட்வர் சிங் சில அடிப்படையான கேள்விகளை முன்வைக்கிறார். 1962 யுத்தம் ஏன் நிகழ்ந்தது? நம்முடைய தரப்பில் பிரச்சினையை ஒரு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தத் தவறியது ஏன்?

அடுத்து நட்வர் சிங் எழுப்பும் ஒரு முக்கியமான பிரச்சினை 1960 இல் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை அன்று நிலவிய பலப்பரீட்சையை புரிந்து கொள்ளாமல் இந்தியா தவற விட்டு விட்டது என்பது தான்.இதைப் பற்றி மறந்து கூட இந்திய அரசோ, காங்கிரஸ் கட்சியோ இன்றுவரை எதுவும் பேசுவது இல்லை. நட்வர் சிங்கும் இதைப் பற்றி விலாவாரியாக எதுவும் கூறாமல் வாய்ப்பை நழுவ விட்டு விட்டோம் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்
படத்தின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கி படிக்கலாம்
 
இந்திய சீன உறவில், திபெத்திய பிரச்சினை பெரும் விரிசலை ஏற்படுத்தியது போக. பிரிடிஷ்காரர்கள், இந்திய சீன எல்லைகளை நிர்ணயிப்பதில் மாற்றி மாற்றிக் குழப்பிக் கொண்டிருந்ததும் அடுத்த பிரச்சினைக்கான விதையாக வீரியத்தோடு கிளம்பியது.

1960 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்த சீனப்பிரதமர் சூ என் லாய் பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, அதாவது அக்சாய் சின் பகுதியை இந்தியா விட்டுக் கொடுப்பது, பதிலுக்கு சீனா அருணாச்சல பிரதேசம் என்று தற்போது அழைக்கப் படும் பகுதி மீது உரிமை கொண்டாடாமல் இருப்பது என்ற மாதிரி எல்லைப் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்தபோது, நேரு அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அப்படிச் செய்தால், நான் இங்கே பிரதமராக இருக்க முடியாது என்று சொன்னதாகவும் ஒரு குறிப்பு உண்டு. நேருவின் அணுகுமுறை, தங்களை அவமதிப்பதாக சீனா கருதியதும், நேருவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே யுத்தம் தொடங்கப் பட்டதாகவும் தகவல்கள் மெல்ல மெல்லக் கசிய ஆரம்பித்தன.  

இதைத் தான், நட்வர்  சிங், என்னவென்று விவரித்துக் கூறாமல் 1960 வாக்கிலேயே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு வந்ததைத் தவற விட்டு விட்டது என்று மட்டும் சொல்கிறார்.


(இதே மாதிரி 1948 இல் பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்த நேரம், அன்றைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், நேருவிடம் பரஸ்பரம் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளலாம் என்று வேண்டிய போது,  "joint defence..! against whom?" என்று நக்கலாக நேரு நிராகரித்ததாகவுமே கூட ஒரு செய்தி உண்டு. அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே, பாகிஸ்தான் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. அன்று முதல், இன்று வரை ராணுவம் நேரடியாகவோ, அல்லது தங்களது பொம்மை அரசை வைத்தோ தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது)


நாற்பத்தேழு ஆண்டுகள் ஆனபின்னாலும் கூட இந்திய சீன எல்லைப் பிரச்சினை ஒரு போரில் முடிந்தது ஏன் என்பதைப் பற்றியோ, அரசு இயந்திரம் மரத்துப்போன ஜடமாக, அரசியல், ராணுவ ரீதியாக, ராஜதந்திர ரீதியாக தயாராக இல்லாமல் இருந்த கேவலத்தைப் பற்றியோ இன்றைக்கும் கூட ஒரு சரியான விமரிசன அணுகுமுறை இல்லை. இந்திய அரசும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு மூடு மந்திரமாக வைத்திருக்க முடியுமோ, அந்த அளவு மூடி வைக்கவே விரும்புவது வெளிப்படை.


எவரோ செய்த முட்டாள்தனத்துக்கு எவரையோ பலிகடா ஆக்கி விடுவது காங்கிரஸ் கட்சி அன்றையிலிருந்து இன்றைக்கும் செய்து கொண்டிருக்கும் உத்தி. சீனாவிடம் கேவலமாக அடிவாங்கியதில் மக்களிடம் எழுந்த கோபத்திற்கு பலிகடாவாக வி கே கிருஷ்ண மேனன் ஆக்கப் பட்டு, அவரும் பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.


நேருவுடைய பிரம்மாண்டமான சமாதானப் புறா இமேஜ் வெறும் காற்றடைத்த பலூன் தான் என்பதை ஒரு சின்ன ஊசிக் குத்திலேயே சீனா நிரூபித்த பரிதாபத்தை எடுத்துச் சொல்ல, நேருவுக்குப் பக்கத்தில் எவருமே இல்லை.


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானுங் கெடும்


தவறு செய்யும் பொது அதை இடித்துரைத்து, சரியான பாதையைக் காட்டுபவரைத் துணைக் கொள்ளாத அரசன், கெடுப்பதற்கென்று எவருமில்லாமலேயே கெடுவான் என்ற வள்ளுவர் கூறும் வாழ்வியல் உண்மைக்கு நேருவுடைய அன்றைய கையைப் பிசைந்து கொண்டு நின்ற நிலையே சரியான சமீப காலத்து உதாரணம்.  

அதைவிடக் கேவலம், சீனப்போர் முடிந்து ஒரு வருடம் ஆன பின்னாலும் கூட, அவர் சரியாகப் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு "The efficacy of nonviolence is not entirely convincing" என்று ஒரு பேட்டியில் சொன்னதே சரியான நிரூபணம்.


ஆயுத பலமோ, எதிரியை இனம் கண்டுகொள்ளும் பக்குவமோ இல்லாத பாமர மக்களை, சுதந்திர வேட்கை கொள்ளச் செய்வதற்கும், அந்நியர் ஆட்சியை எதிர்த்து உறுதியாக நிற்பதற்கும், அப்பாவி ஜனங்களை ஆயுத பலம் கொண்ட மிருகத்தனமான அரசு இயந்திரத்தை செயலற்றுப்போகச் செய்ய, மகாத்மா காந்தி சாமர்த்தியமாகக் கையிலெடுத்த ஆயுதம் சாத்வீக மறுப்பு எனும் சத்தியாக்கிரகம். தடியால் அடித்து மண்டையை பிளந்து ரத்தம் கொட்டிய போதிலும், எந்த எதிர்ப்பும் இல்லாமல் போராட்டத்தைத் தொடர்ந்த சத்தியாகிரகிகளைக் கண்டு தடியெடுத்தவன் பயந்தான். அந்த சூழ்நிலையே வேறு!


வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் பார்த்த நினைவு வருகிறதா? பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு முன்னால் பீரங்கிகளோடு முற்றுகை இட்ட வெள்ளையர் படையை எதிர்த்து வெற்றிவேல்! வீர வேல் என்று உணர்ச்சி கொப்பளிக்க போர் புரிய வந்த படை,நவீன ஆயுத பலம், பழக்கமில்லாத போர்முறைக்கு முன்னால்   பீரங்கி குண்டுகள் முழங்கவுமே காணாமல் போகும் காட்சி நினைவுக்கு வருகிறதா?


ஒரு அரசைத் தலைமை ஏற்று நடத்துபவன், அதே மாதிரி நின்றால், இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு போய்ச் சமாதானம் பேசும்போது தியாகு காறித் துப்புவது போலத் தான் நடக்கும். அப்படித்தான் நடந்தது!


ஆக காந்தியோடு நீண்ட காலம் இருந்தும் நேருவுக்கு காந்தியின் மிக எளிமையான, நேர்மையான உத்திகளும், காந்தீயமோ அகிம்சைப் போராட்டம் என்றால் என்ன என்பதோ புரியவில்லை. ஐரோப்பிய நாகரீகத்தில் மிகவும் ரசிகராக இருந்து, வெள்ளையர்களோடு உறவாடினபோதிலும், அவர்களிடமிருந்து தந்திரத்தையும் நவீன உத்திகளையும் கற்றுக் கொள்ளவும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில், உலக சரித்திரத்தை வெறும் ஏட்டளவில் கரைத்துக் குடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, அதைத் தன் மகளுக்கும் கடிதங்களில் கற்றுக் கொடுக்க முனைந்த விசித்திரத்தை என்னவென்று சொல்வது?


இதே மாதிரி லண்டனிலேயே பெரும்பகுதி வாழ்க்கையைக் கழித்து, ஆங்கிலம் பேசும் மக்களிடம் உணர்ச்சி பொங்க இந்திய விடுதலைக்காக ஆதரவுப் பிரசங்கங்கள் மட்டுமே நிகழ்த்துவதில் வல்லவராக இருந்த வி. கே கிருஷ்ண மேனன். இன்னொரு ஆங்கிலேய நாகரிக ரசிகர். நேருவுக்கு ஏற்றார்போல, சரியான ஜாடிக்கேற்ற மூடியாக வந்து அமைந்ததை என்னவென்று சொல்வது?


இந்த இரண்டு நபர்கள், தங்களுடைய ஐரோப்பிய ஞானத்தைக் கொண்டு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானித்தார்கள். ஆங்கிலேயர்கள் விட்டுப்போன ஐசிஎஸ் எச்சங்களுடைய உதவியுடன், இந்தியாவைச் சுற்றியிருந்த சூழ் நிலைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலேயே கொள்கைகளை வகுத்தார்கள். முதல் சோதனை 1948 இல் பாகிஸ்தானிய காஷ்மீர் ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்தது.


அங்கிருந்தாவது சரிசெய்துகொள்ளும் போக்கு தொடங்கியிருந்தால், நேரு என்ற ஷோக்குப்பேர்வழி, காந்தியின் அபிமானத்துக்குப் பாத்திரமாகி அரசியல் வாதியும் ஆன மாதிரி, ஒரு ராஜதந்திரியாக உயர்ந்த நிலையாகவும் மாறியிருக்கும்!


1951 இல் திபெத்தை சீன ராணுவம் கைப்பற்றிய நிலையில் இரண்டாவது அக்கினிப் பரீட்சைக்கு, நேருவின் அயலுறவுக் கொள்கைஉள்ளானது. தலாய் லாமா தன்னுடைய ஆதரவாளர்களோடு இந்தியாவுக்கு ஓடி வருகிறார். ஒரு மதத் தலைவர் என்ற முறையில், மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்திருப்பதாக முடிவெடுத்திருந்தால் அது, சோதனையாக இல்லாமல், சாதனையாகவும் மாறியிருக்கும்!திபெத் சீனாவின் ஒரு பகுதிதான் என்று வெளிப்படையாக இந்திய அரசு ஒப்புக் கொள்வதற்கே அடுத்து பதினேழு வருடங்கள் தேவைப்பட்டன. அப்போது கூட, இரட்டை நாக்குடனேயே திபெத் பிரச்சினை அணுகப்பட்டது.


நேருவின் கண்களை அந்த கால கட்டத்தில், கண்முன்னால் தெரிந்த யதார்த்த உலகைப் பார்க்க விடாமலும், புரிந்துகொள்ள விடாமலும், வெறும் கற்பனாவாதியாகவே இருக்கச் செய்தது எது என்று இன்னமும் எனக்குப் புரியவே இல்லை.  

சோஷலிசக் கனவுகளைத் தேக்கி வைத்துக் கொண்டு கனவு காண ஆரம்பித்த நேரு, விழித்துக் கொள்ளவே இல்லையோ என்றுகூட சமயங்களில் அவரைப் பற்றி அங்கேயும் இங்கேயும் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புக்களைப் படிக்கையில் எனக்குத் தோன்றுவதுண்டு.


தன்னுடைய பகல் கனவு குரூரமாக க் கலைக்கப்பட்டு, சமாதானப் புறா இமேஜும் பறிபோய், மனமுடைந்த நிலையில் நேருவின் மரணம் நேர்ந்தது.


தயிர்வடையை விரும்பி சாப்பிட்டுக் கொண்டே தோழர் வரதராஜன் அடிக்கடி சொல்லும் வார்த்தை, "நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுக்கள் மீதேறி நரகத்துக்குக் கூடப் போகலாம்!" இந்த வார்த்தை நினைவுக்கு வரும் போதெல்லாம், நேருவின் கதை சொல்லும் பாடம் தான் எனக்கு நினைவுக்கு வரும்.


அப்புறமாவது காங்கிரஸ் கட்சியும், இந்திய அரசும் சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டார்களா என்று பார்த்தால், இன்று வரை அதற்கான அறிகுறி ஒன்றுமே புலப்படவில்லை!. 


இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை எந்த அர்த்தமுமில்லாமல் போனதைப் பற்றிய ஒரு கட்டுரையை இங்கே படிக்கலாம். சுப்ரமணிய சாமி என்றாலே ஒரு கோமாளி, ரீல் மன்னன், முட்டையடி வாங்குவதற்கே பிறந்தவர் என்றமாதிரி நக்கலான எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை!  

ஆனாலும், சீனப் பிரச்சினையில், இங்குள்ள அரசியல்வாதிகள் எவரையும் விட அதிகம் அறிந்தவர் என்ற முறையில் அவர் எழுதிய கட்டுரைகள் இங்கே மற்றும் இங்கே.


பிரச்சினையை இன்னமும் விரிவாகப் புரிந்துகொள்ள அவை உதவும்.

திரு.நட்வர் சிங், அவருடைய புத்தகம் குறித்து எழுதிய  இந்தப் பகுதிகள் ஏற்கெனெவே எழுதியதன் மீள் பதிவு தான்! கேள்விகள் அப்படியே இருக்கின்றன என்பதால்!