அந்த நாளும் வந்திடாதோ....!


ஜான் பிட் ஜெரால்ட் கென்னெடி! ஒரு சகாப்தம் என்று சொல்லிக் கொள்ளலாம்! ஆனால் அந்த சகாப்தத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு என்ன பலன் இருந்தது என்பதை மட்டுமே அடிப் படையாக வைத்துப் பார்த்தால், இந்த மாதிரி சகாப்தங்கள் என்று சொல்லப்பட்டவர்கள் ஒரு சாபமாகவே இருந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு சொல்லும். அமெரிக்க அரசியலில், ஜனநாயகக் கட்சியின் வரலாற்றில் ஏறத்தாழ ஐம்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த கென்னெடி குடும்பத்தில் இருந்து, வருகிற 2011 ஆம் ஆண்டில் எவருமே இருக்க மாட்டார்களாம்!இதை ஒரு சகாப்தத்தின் முடிவு என்று  வைத்துக் கொண்டாலும் சரி! ஒரு சாபத்தின் முடிவு என்று வைத்துக் கொண்டாலும் சரி!இந்த யூட்யூப் வீடியோவைப் பார்த்த போது முதலில் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது! அப்புறமாக, "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்று
நன்னூல் சூத்திரம் மாற்றங்களைக் குறித்துச் சொல்வது எவ்வளவு பொருத்தமானது என்பதும் யோசித்துப் பார்க்கையில் தெளிவாகப் புரிந்தது!  


கடைசிப் பாராவைக் கொஞ்சம் கவனியுங்கள்! நேருவின் அமெரிக்க விஜயம் கென்னடியைப் பொறுத்தவரை மிகக் கசப்பானதாகவே இருந்ததாம்.. நேருவின் பார்வை, கரங்கள் தன் மனைவியின் மீது படுவதை சகித்துக் கொள்ள முடியாத எரிச்சல் கென்னடிக்கு இருந்ததையும்  இந்தப் பாரா சொல்கிறது. பெண்கள் என்றாலே நேருவுக்கு ஒரு "கிறக்கம்" இருந்ததையும் சொல்கிறது.இங்கேயும், நேரு குடும்பத்து வாரிசுகள் எவருமே அரசியலில் இல்லாமல் போகிற ஒரு காலம், இந்த தேசத்தைப் பிடித்த சாபத்தில் இருந்து விடுதலை என்ற திருநாளும் வாராதோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா!

மாற்றங்கள் வரும்! புதிய மொந்தையில் பழைய கள்ளை மட்டுமே பரிமாறத் தெரிந்த, ஊழல் முடை நாற்றம் பிடித்த காங்கிரஸ் கட்சியின் பிடியில் இருந்து இந்த தேசம் விடுதலை பெறும் திருநாளும் வரும்!

நம்பிக்கையாகவும், பிரார்த்தனையாகவும்!


*******
தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றால் என்ன?

பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னால், குறிப்பாக, நரசிம்ம ராவ் காலத்தில் அறிமுகமான பொருளாதார சீர்திருத்தங்கள் சமயத்தில் இந்த வார்த்தைகளை விளக்குவது, விளங்கிக் கொள்வது கடினமாகவே இருந்தது.இணையத்தில் சில வருடங்களுக்கு முன்னால், பிரிட்டிஷ் இளவரசி டயானா தன்னுடைய காதலர் டோடி பேயட் உடன் கார் விபத்தில் பரிதாபமான முறையில் இறந்துபோன சம்பவத்தைத் தொட்டு, குரூரமாக இருந்தாலும் கூட அதிலும் கூட கொஞ்சம் நகைச்சுவை கலந்து ஒரு வியாக்கியானம் உலாவந்து கொண்டிருந்தது, இன்றைக்கு மறுபடி கண்ணில் பட்டது.

ஒருவர் கேட்கிறார்: தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றால் என்ன?

அதற்குப் பதில் வருகிறது பாருங்கள்!! "இளவரசி டயானாதான்!"

எப்படி என்று மேலும் விளக்கம் கேட்பதற்கு முன்னாலேயே வருகிறது.

"ஒரு பழமைவாதப் பெருமை பேசும் ஆங்கிலேய அரச குடும்பத்துப் பெண், இளவரசி தன்னுடைய எகிப்துக் காதலனோடு, பிரெஞ்சு  சுரங்கப்பாதையில் டச்சு எஞ்சின் பொருத்திய ஜெர்மன் காரை
, பெல்ஜியத்தை சேர்ந்த டிரைவர் ஸ்காட்ச் விஸ்கியைக் குடித்துவிட்டு ஓட்ட, இத்தாலியப் பத்திரிகையாளர் துரத்த எங்கேயோ எப்படியோ இடிபட்டு விபத்தாகிக் காயப்பட்டு,  அமெரிக்க டாக்டர் பிரேசிலிய மருந்தைக் கொடுத்து சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் இறந்து போனாரே அது தான்!"

தாராளமயம், உலகமயம் என்பதை இதை விட சுருக்கமாக, பொருத்தமாக சொல்லிவிட முடியாது என்று தான் தோன்றுகிறது.

உங்களுக்கு எப்படியோ...?!

 

5 comments:

 1. முதலில் தலைப்பையும் வீடியோவையும் பார்த்து சற்ற குழம்பினேன். இறுதியில் மிக அழகாக அதனை இந்த நாட்டு காங்கிரஸ் பாரம்பரிய சாபத்தோடு ஒட்டி எழுதிய குறும்பும், யதார்த்தமும் ரசிக வைத்தது. நன்றி.
  அந்த நாளும் வந்திட வேண்டும். வரும்.

  ReplyDelete
 2. ஒன்று புரிகிறது. என்.டி .திவாரி போன்றவர்களின் திறமைக்கு முன் உதாரணமாக காங்கிரஸ் தலைவர் நேருவும் உதாரண புருஷனாக இருந்த வரலாறு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியதே.

  ReplyDelete
 3. வாருங்கள் மாணிக்கம்!

  காங்கிரஸ்காரர்களைப் பற்றிப் பேசிப் பேசி எனக்கே சலித்து விட்டது! ஒழிந்து தொலைகிறவரை, தொட்டுப் பேசாமலும் இருக்க முடியாதென்ற நிலையில் இப்படி சுருங்கக் கூறி விளங்க வைக்கிற வேலை தான்! வேறென்ன!!

  பிரிட்டிஷ் பிரதமர் ப்ரோஃ ப்யுமோ கிறிஸ்டினா கீலர் என்ற விபசாரியிடம் மயங்கிக் கிடந்த கதை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தது. ஒரு விலைமாதிடம் பிரதமர் போய்வந்தது அவருடைய சொந்த விவகாரம், ஆனால் அவள் ஒரு அந்நிய நாட்டின் உளவாளி என்பது கூடத் தெரியாமல், பிரதமர் வெள்ளந்தியாக இருந்திருக்கிறாரே என்ற ரீதியில் தான் விமரிசனங்கள் இருந்தன. பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் தனிநபர் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது மேல்நாடுகளில் இன்றைக்கும் காண முடிகிற நடைமுறை.

  ஆனால் இங்கோ....?

  நேருவின் பெண்மோகம் உள்ளிட்ட அவருடைய பலவீனங்கள் எதுவும் வெளியே தெரிந்து விடாமல் இந்திய அரசு இயந்திரம் பாதுகாக்கிற வேகம் இருக்கிறதே....! இந்த தேசத்தின் ராணுவ ரகசியங்கள் வெளியே போவதைப் பற்றிக் கூட இங்குள்ள காங்கிரஸ் அரசு அலட்டிக் கொண்டதில்லை,. நேரு குடும்பத்தின் சீரழிந்த போக்கு எதுவும் அம்பலமாகிவிடக் கூடாது, அம்புட்டுத்தேன்! .

  அந்தோனியோ மைனோ என்ற இயற்கையான பெயர் கூட வெளியில் வந்து விடக் கூடாது. ரால் விஞ்சி, பியங்கா விஞ்சி என்று இத்தாலியப் பெயர்களோடு குடியுரிமையும் இந்தக் குடும்பத்திற்கு இருப்பது வெளியே அம்பலமாகிவிடக் கூடாது.

  போய்த் தொலையட்டும்! தேர்தலில் மறுபடி தலைதூக்க முடியாதபடிக்குக் காங்கிரசைத் தூக்கி எறிய ஜனங்கள் தயாராக வேண்டுமே!

  ReplyDelete
 4. காஷ்மீரின் இந்த‌ நிலைக்கு கார‌ண‌மே நம்ம‌ மாமா நேருவின் சில்ல‌றை புத்தியால் தானே.
  சுதந்திர‌ம் கொடுத்துட்டு!! போக‌ வேண்டிய‌ மௌண்ட் பேட்ட‌னை, க‌வ‌ர்ன‌ர் ஜென‌ர‌லாக்கி
  காஷ்மீர் ச‌ண்டை(1947 48)யின் ராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை தன் வ‌ச‌மிருந்து நேரு இழ‌ந்த‌தும் ஒரு முக்கிய‌ கார‌ண‌ம். இந்தியாவின் சாப‌ம் நேரு குடும்ப‌த்தின் ஆட்சிக‌ள் தான். விமோச்ச‌னம் ?

  ReplyDelete
 5. வாருங்கள் திரு வாசன்!

  விமோசனம்?! அது நம்மிடம் தான் இருக்கிறது! வெளியே இருந்து எவரோ தருவார்கள் என்ற மாயையில் இருந்து விடுபடவேண்டும் என்ற ஒரே நம்பிக்கையில் தான் இந்தப்பதிவுகளை எழுதுகிறேன்.

  மௌன்ட் பேட்டனை நியமித்தது ஆங்கிலேயே அரசு தான்! இன்னாரைத் தான் நியமிக்கவேண்டும் என்று கேட்டு வாங்குகிற அளவுக்கு, நேருவுக்கு அன்றைய காலத்தில் நினைப்புமில்லை, சாமர்த்தியமுமில்லை! அவரால் முடிந்ததெல்லாம் அழகிய பெண்களைக் கண்டால் வழிவது ஒன்று தான்! இதை நான் சொல்லவில்லை, மேலே ஜேபிஜி வடிவில் இருக்கும் புத்தகத்தில் இருப்பது தான்

  காஷ்மீர் பிரச்சினை? அதற்கு நேருவுக்குத் தன்னை சமாதானாப் புறாவாக, நோபல் பரிசுக்கு ஆசை பட்டது ஒரு காரணம் என்றால், காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து கொடுத்துப் பிரச்சினையைத் தீர்த்து விடலாம் என்ற அசட்டுத் தனமான நம்பிக்கை இன்னொரு காரணம்..அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு, காஷ்மீர் பிரச்சினையை இன்னமும் சிக்கலாக்கி வைத்தது தான் மிச்சம்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!