தேசம் உருப்பட ஒரே வழி......!

பொது நலன் கருதியும், ஒரு குறிப்பிட்ட விஷயம் வாசகர்களுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டே ஆக வேண்டும் என்ற அடிப்படையிலும் பொறுப்புடன் எழுதப்படும் தினமணி நாளிதழின் தலையங்கங்களை இந்தப் பக்கங்களில் பலமுறை மீள் பிரசுரம் செய்திருக்கிறேன். இப்போதும் கூட அதே அடிப்படையில் தினமணி நாளிதழில் வெளியான ஒரு தலையங்கத்தை வாசகர்கள் சிந்தனைக்குக் கொண்டு வருகிறேன். 




"சாத்தான் வேதம் ஓதுகிறது" என்று பழமொழி கேட்டிருக்கிறோம். 

"திருடன் கையில் சாவி கொடுத்த கதை" என்றும் பழமொழி கேட்டிருக்கிறோம். இந்தப் பழமொழிகளை எல்லாம் நிஜமாகவே நடத்திக் காட்டி சாதனை புரியப் போகிறோம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்யும் இவர்களது வித்தகத்தின் விவேகம் இப்போதல்லவா புரிகிறது.

ஏற்கெனவே, கேரள மாநிலத்தின் உணவுத்துறைச் செயலராக இப்போதைய தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் இருந்தபோது நடந்த பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதால் இவர் மத்திய தகவல் தொலைத்தொடர்புத் துறையின் செயலராக நியமிக்கப்பட்டபோதே புருவங்கள் உயர்ந்தன.

தாமஸ் தகவல் தொலைத்தொடர்புத் துறையில் செயலராக இருக்கும்போதுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது. 2ஜி அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட எல்லா முறைகேடுகளும், அமைச்சர் ஆ. ராசாவின் ஒப்புதலுடன் இவரால்தான் அரங்கேற்றப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. 


அதையும் மீறி, இவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது, "தினமணி' உள்ளிட்ட பல நாளிதழ்கள் தலையங்கத்தில் அதை வன்மையாகக் கண்டித்தன. இந்திய சரித்திரத்திலேயே நடந்தேறியிருக்கும் மிகப்பெரிய முறைகேடுக்குத் துணைநின்றவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக, விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சட்டை செய்யாமல் மத்திய அரசு நியமித்ததே இந்த "மெகா' ஊழலை மறைக்கத்தானோ என்று அப்போதே கேள்விகள் எழுப்பப்பட்டன.

இப்படி அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் தலைமையில், திருடனே தீர்ப்பெழுதுவதுபோல 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விசாரணையை எப்படி நடத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, அந்த அதிகாரியின் தரப்பில் கூறப்பட்டிருக்கும் பதில் அதைவிட விசித்திரம். "இந்திய அரசுப் பணியின் உயர்ந்த பண்புகளைக் காப்பாற்றும் விதத்தில், 2ஜி அலைக்கற்றை சம்பந்தப்பட்ட விசாரணையில் இருந்து நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று பெரிய மனது பண்ணி பி.ஜே. தாமஸ் பதில் அளித்திருக்கிறார். 


அதாவது தான் பதவி விலகுவதாக இல்லை என்பதுதான் பதில்.

தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக இருக்கும் ஒருவரை, அவருக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகள் 2ஜி அலைக்கற்றை ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதால் விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்தாலும் அந்த விசாரணை முறையாக இருக்குமா? என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றம் ஏனோ எழுப்பாமல் விட்டுவிட்டிருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட்டால், தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் என்கிற அரசியல் சட்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை விசாரிக்கும் உரிமை அந்தக் குழுவுக்கு இருக்குமா என்பதும் நீதிமன்றம் தீர்த்து வைக்கவேண்டிய சட்டச் சிக்கல். தாமûஸ இந்தப் பதவியில் அமர்த்திவிட்டால், இதுபோன்ற பல அரசியல் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி 2ஜி அலைக்கற்றை முறைகேடுகளைப் பற்றிய விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எண்ணமாக இருந்ததோ என்னவோ!

தான் எந்தக் காரணத்துக்காகவும் பதவி விலகத் தேவையில்லை என்று பி.ஜே.தாமஸ் கூறியிருப்பதன் பொருள், யாரும் என்னை எதுவும் செய்துவிட முடியாது என்பதுதான். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப்போல, தலைமை ஊழல் தடுப்பு ஆணையரையும் பதவியிலிருந்து விலக்க வேண்டுமானால், நாடாளுமன்றம் கூடி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் (இம்பீச்மெண்ட்) நிறைவேற்றப் பட்டாக வேண்டும். இது அவருக்கும் தெரியும், அவரைப் பதவியில் நியமித்தவர்களுக்கும் தெரியும்.

இத்தனை குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும், பொறுப்பான பதவிகளை வகித்த இந்திய அரசுப் பணியைச் சேர்ந்த ஓர் அதிகாரி கொஞ்சமாவது மானம், ரோஷம் இருந்தால் அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பாரா? பதவிக்காக இந்திய அரசுத் துறை அதிகாரிகள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து விட்டிருக்கிறார்கள் என்பதற்கு பி.ஜே.தாமஸ் ஓர் உதாரணம்.

தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் இதைவிட ஒருபடி மேலே போய், சட்ட அமைச்சகத்தையும், பிரதமர் அலுவலகத்தையுமே கேலிக்குரியவையாக மாற்றியிருப்பது உச்ச நீதிமன்ற விசாரணையில் தெரிகிறது. முறையாக ஒதுக்கீடு நடத்தப்படாததால் இத்தனை கோடிகள் நாட்டுக்கு நஷ்டம் என்று உத்தேசக் கணக்கு கூறுகிறார்களே தவிர, நான் லஞ்சம் வாங்கினேன் என்றோ, அந்தப் பணம் எனக்குக் கிடைத்ததென்றோ யாரும் கூறவில்லை என்பது முன்னாள் அமைச்சர் ராசா தரப்பு வாதம். 45 நிமிட அவகாசத்தில் ரூ. 1,600 கோடிக்கான வங்கி உத்தரவாதத்துடன் எப்படி சில நிறுவனங்கள் ஒதுக்கீடு அனுமதிக்கு விண்ணப்பித்தன என்கிற கேள்விக்கும், பிரதமரின் ஆலோசனைகளைப் புறக்கணித்தது ஏன் என்கிற கேள்விக்கும் பதில் சொல்லாமல் பிரச்னையைத் திசை திருப்பத்தான் இப்போதும் முனைகிறார் அவர்.

இதெல்லாம் போகட்டும். இந்தியப் பிரதமர் என்கிற பதவி இருக்கிறதே, உலகிலேயே மிக அதிகமான அதிகாரத்தை உடைய பதவி அதுவாகத்தான் இருக்கும். இந்த அளவு அதிகாரம் அமெரிக்க அதிபருக்குக்கூடக் கிடையாது. அதிகாரம் மட்டுமா, மரியாதையும், கௌரவமும் உள்ள பதவியல்லவா அது? பண்டித ஜவாஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும், மொரார்ஜி தேசாயும், இந்திரா காந்தியும் அமர்ந்த நாற்காலி அது. அதில் அமர்ந்திருப்பவர் எப்படி இருக்க வேண்டும்?

தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தனது அறிவுரையைக் கேட்கவில்லை என்ற உடனேயே அவரைப் பதவி விலகச் சொல்லியிருக்க வேண்டாமா? "பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது' என்று சொன்னவுடன் ஒன்று மறுத்திருக்க வேண்டும், இல்லை தனது அமைச்சரவையிலிருந்து அவரை அகற்றியிருக்க வேண்டும். அரசியல் நிர்பந்தம் என்றால், தனது சுயமரியாதையைகூடக் காரணம் காட்டி, சந்திரசேகர் செய்ததுபோலத் துணிந்து பதவி விலகி இருக்க வேண்டும்.

என்ன சொல்லி என்ன பயன்? இவர்கள் எல்லாம்......!?

இவர்கள் தானாகத்திருந்த மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்! சுதந்திரம் அடைந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆரம்ப நாட்களில் இருந்தே காங்கிரஸ் கட்சி, உயர்ந்த நெறிகளைக் காற்றில் பறக்க விட்டிருக்கிறது. பதவிக்காக எதையும் செய்யத் துணிந்தவர்களால் மட்டுமே நிரம்பப்பெற்ற கட்சியாகவும் மாறிப் போன அவலத்தைக் காங்கிரஸ் ஒவ்வொரு தேர்தலிலும் அரங்கேற்றிய கூத்துக்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்ததாலேயே புரிந்து கொள்ள முடிகிற விஷயம் தான்!

இவர்களால் பொறுப்புடன், நேர்மையாக இந்த நாட்டை ஆள முடியாது,  வெளியில் இருந்தும் உள்ளேயிருந்தும் வரும் அச்சுறுத்தல்களைத் துணிவுடன் எதிர்த்துப் போராடும் வலிமையோ, முதுகெலும்போ கூடக்  கிடையாது என்பதும் கூடத் தெரிந்த விஷயம் தான்!

காங்கிரசை தூக்கி எறிந்து விட்டு, ஒரு மாற்றை உருவாக்குவது தான் இந்த தேசம் உருப்பட இருக்கும் ஒரே வழி!

என்ன செய்யப் போகிறோம்? எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? கொஞ்சம் சொல்லுங்களேன்!





6 comments:

  1. இவைகளும் மாறும். மாறவேண்டும். வேறு வழியே இல்லை. ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியவே இல்லை. நம்மவர்கள் பெரும்பாலும் தமிழ் நாட்டு அரசியல் நிலை மட்டுமே பேசவும், எழுதவும் செய்வதும், வடமாநிலங்கள்,ஒட்டுமொத்த இந்தியா என்ற எல்லை ஒன்றே இல்லை என்பதுபோலா காணாது இருப்பதும்.

    ReplyDelete
  2. வாருங்கள் மாணிக்கம்!

    காங்கிரஸ் கட்சி செய்திருக்கிற மிகப்பெரிய தீமைகளில்,1956 இல் வெறும் உணர்ச்சிகளை மட்டும் தூண்டிவிடுகிற மாதிரி எழுந்த மொழிவாரிமாகாணங்கள் என்பதும் ஒன்று. மகாத்மா காந்தியின் அரசியல் பிரவேசத்திற்குப் பின்னால், தேசம் முழுமையும் விடுதலை வேட்கையோடு ஒன்று பட்டு நின்ற தன்மையைத் தலைகீழாக மாற்றி நெல்லிக்காய் மூட்டை பிரிந்து சிதறி நாலாபுறமும் ஓடுவதைப் போல மாற்ற வழிவகுத்த மிகப் பெரிய தீமைக்கு வித்திட்டதே காங்கிரஸ் தான்.

    நான் தமிழன், நீ மலையாளி, அவன் தெலுங்கன் என்று ஒருபக்கம், நீ திருநெல்வேலி நான் கடலூர் என்றும் நீ இன்ன சாதி நான்....என்று பல விதங்களிலும் பிரிந்து நிற்க ஆதாரமாக அமைந்ததும் இதில் இருந்து தான்.

    மொழிவாரி மாகாணம் என்று ஆரம்பித்த எந்த ஒரு மாநிலமாவது முன்னேறியிருக்கிறதா, அந்த மொழி பேசும் மக்களுக்கோ, மொழிக்கோ பலன்,வளர்ச்சி இருந்திருக்கிறதா என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  3. e must teach them lesson in next year.

    ReplyDelete
  4. வாருங்கள் திரு.பாலு!

    அடுத்த வருடம் மட்டும் பாடம் புகட்டினால் போதுமா? புரையோடிப் போன ஒன்றை, இனி என்ன செய்தாலும் சரி செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்து விட்ட காங்கிரஸ் கட்சியை ரண சிகிச்சை செய்தாவது அகற்றியே ஆகவேண்டுமா இல்லையா?!

    ReplyDelete
  5. வருட கணக்காக எப்போதுமே இல்லாத அளவிற்கு ஊழல் விவகாரங்கள் பெரிய அளவிற்கு வெளி வர ஆரம்பித்திருக்கின்றன. ஆப்பசைத்த குரங்காய் ஒவ்வொரு நாளும் ஒவ்வருவர் முகத்திரை கிழிந்துகொண்டே வருகிறது. உண்மையாகவே நாட்டிற்கு நல்லது நடக்கும் போல் தோன்றுகிறது.

    ReplyDelete
  6. வாருங்கள் திரு.பந்து!

    இப்போது மட்டுமல்ல, எல்லாக் காலங்களிலுமே, ஊழலும் திறமையின்மையும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. 1960 களில் லஞ்சம் வாங்குவது சமூகத்தில் கொடும் பாதகச் செயலாகக் கருதப்பட்டது. பயந்து பயந்து மேசைக்கு அடியில் வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஜனங்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர வேறொன்றும் செய்யவில்லை. தவறு செய்பவர்களுக்குக் குளிர் விட்டுப் போய் நரசிம்ம ராவ் காலத்தில் ஒரு சூட்கேசில் ஒரு கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு கொடுக்கும் அளவுக்கு ஆனபோதும் ஜனங்கள் விழித்துக் கொள்ளவில்லை.

    அப்போது கூட ஒரு சூட் கேசில் எப்படி ஒரு கோடி ரூபாய் பணத்தை வைக்க முடியும் என்று பட்டிமன்றம் நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.ராஜீவ் காலத்தில் பீரங்கி பேரத்தில் கைமாறியதாகச் சொல்லப்படும் தொகை வெறும் அறுபத்து நாலு கோடி தான்!அப்போதும் ஜனங்கள் எங்கேயோ மழை பெய்கிறது என்ற தான் இருந்தார்கள்.

    இப்போது தப்புச் செய்கிறவனுக்குக் கொஞ்சம் கூட பயமே இல்லாத நிலையை ஜனங்களாகிய நாம் தான் உருவாக்கியிருக்கிறோம். தொகை ஒரு லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி என்று பெரிதாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. முலாயம் சிங் ஆட்சிக் காலத்தில் உத்தரப்ரதேசத்தில் நடந்த தானிய ஊழல் முப்பத்தைந்தாயிரம் கோடியில் இருந்து இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்று இப்போது மதிப்பிடுகிறார்கள்.

    இப்போதும் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால்.....?

    நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை. அதை நடத்திக் காட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனங்களாகிய நமக்குத் தான் இருக்கிறது.என்பதை அருள்கூர்ந்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆரம்பம் காங்கிரசைத் தூக்கி எறிவதில் தான் இருக்கிறது!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!